லீலாவதி

எஸ்.எம்.ஏ.ராம்

“ஹே, அழகான கண்களை உடைய லீலாவதியே, இந்தக் கேள்விக்கு விடை சொல். ஒரு மலர் வனத்துக்குள் வண்டுகள் கூட்டமாகப் பிரவேசித்தன. அவற்றில் ஐந்தில் ஒரு பங்கு கடம்ப மலர் ஒன்றின் மீதும், மூன்றில் ஒரு பங்கு குடஜ மலரின் மேலும் போய் அமர்ந்தன. இந்த இரண்டு எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போல் மூன்று மடங்கு வண்டுகள் ஒரு தாமரை மலரை நாடிச் சென்றன. இன்னமும் காற்றில் தனியே அலைந்து கொண்டிருந்த  எஞ்சிய ஒரே ஒரு வண்டு அப்போதுதான் மெல்ல மலர்ந்து கொண்டிருந்த ஒரு மல்லிகை மலரின் வாசத்தால் ஈர்க்கப்பட்டு அந்த திசையை நோக்கிச் சென்றது. ஆக மொத்தம் எத்தனை வண்டுகள் அந்த இடத்தில் மொய்த்துக் கொண்டிருந்தன?” பாஸ்கராச்சாரியார் லீலாவதியை நோக்கிக் கேட்டார். 

பாஸ்கரரின் முன்னால் தரையில் உட்கார்ந்திருந்த அத்தனை சிஷ்யப் பிள்ளைகளின் நடுவில் தன்னை மட்டும் தனியே பிரித்துத் தன்னை நோக்கி அந்தக் கேள்வி தொடுக்கப்பட்டதில்  அவளுக்குச் சின்னதாய் வெட்கம் வந்தது.  சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த சுனந்தனை ஓரக் கண்ணால் பார்த்தாள். அவன் சிரத்தையோடு குருநாதர் கேட்ட கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிற மும்முரத்தில் கண்களை மூடிக் கை விரல்களை மடக்கியும் நீட்டியவாறும் இருந்தான். 

இப்போது அவன் இந்தக் கேள்விக்கு விடை சொல்வதற்கு முன்னரேயே தான் அவனை முந்திக்கொண்டுவிட வேண்டும் என்று அவளுள் ஒரு வேகம் வந்தது. பெண்கள் ஆண்களை முந்த முடியாது என்று யார் சொன்னது?  அவள் மனசுக்குள்ளேயே அந்தக் கணித சுலோகத்தைத் தியானித்தாள். மனத் திரையில் வண்ண வண்ண மலர்களால் நிறைந்த ஒரு பூந்தோட்டம் வந்து தோன்றியது. அதில் நிறையக் கருவண்டுகள் ரீங்காரம் இட்டபடி  வெவ்வேறு மலர்களை நாடிப் பறந்து கொண்டிருந்தன. அந்த ரீங்காரம்  பாஸ்கரர் சற்று முன் சொன்ன சுலோகம்போல் அவளுக்குக் கேட்டது. லீலாவதி உரத்த குரலில் “பதினைந்து’ என்றாள். எல்லார் பார்வையும் இப்போது அவள் குரல் வந்த திசையில்  திரும்பியது.

சுனந்தனும் இப்போது அவள் இருந்த திசையில் திரும்பிப் பார்த்தான். அவன் விரல்களை மடக்கிக் கூட்டுவதை நிறுத்தி இருந்தான். அவனும் வண்டுகளைக் கணக்கிட்டுவிட்டான். ஒரு வினாடி வித்தியாசத்தில் லீலாவதி அவனை முந்திக்கொண்டு விட்டாள். 

பாஸ்கரர் புன்னைகத்தார். ஒவ்வொரு முறை சபையில் அவரது மகளின் ஞானம் வெளிப்படுகிறபோதும் அவர் முகத்தில் சந்தோஷ ரேகைகள் ஓடும். கணித சாஸ்திரம், வான சாஸ்திரம் என்று தான் தேடிக் குவித்த அனைத்து அறிவுச் செல்வங்களையும் தன் வாழ் நாள்களுக்குள் இவளிடம் சேர்த்துவிட வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். 

பாஸ்கரர் தொண்டையைக் கனைத்தார். “என்ன சுனந்தா, லீலாவதி சொன்ன விடை சரி தானே?” என்று அவன் பக்கம் நோக்கிக் கேட்டார். சுனந்தன் சட்டென்று தன் பார்வையை லீலாவதியின் திசையிலிருந்து விலக்கிக் கொண்டான்.. “சரி தான் குருதேவா, நான் வகுத்துக் கூட்டிச் சொல்வதற்குள் லீலா முந்திக் கொண்டு விட்டாள்.. அது மட்டுமில்லாமல் நீங்கள் லீலாவதியின் பெயரைச் சொல்லி இந்தக் கேள்வியைக் கேட்டதால், இது  அவளுக்கான பிரத்தியேகக் கேள்வி என்று எண்ணிக் கொண்டேன்..” 

ஒரு பெண் உள்ளே வந்து ஓரமாய் இருந்த குத்து விளைக்கில் எண்ணெய் விட்டுத் திரியைத் தூண்டி அதை ஏற்றினாள். பாஸ்கரர் இப்போது எழுந்து, “குழந்தைகளே, சந்தியா காலம்  வந்து விட்டது. இனி நாளைக்குக் காலையில் தான் மறுபடியும் பாடம். இப்போது நீங்கள் கலைந்து அவரவர் இடங்களுக்குப் போகலாம்”  என்றார்.

பாஸ்கரர் உஜ்ஜயினிக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டன. அதற்கு முன் சஹ்யாத்ரி மலைப் பிரதேசத்தில், கிருஷ்ணை நதியின் பிரவாக ஓசை சதா கேட்டுக் கொண்டிருக்கும் தூரத்தில் அவரும்   அவர் தந்தை மகேஸ்வரரும் வசித்தனர். லீலாவதியின் குழந்தைப் பருவம் முழுதும் சஹ்யாத்ரியின் அடிவாரத்து மலர்வனங்களில் தான் கழிந்தது. அடுக்கு அடுக்காய் மிருதுவான சிவந்த இதழ்களோடு கூடிய குவளை மலர்களைப் பறித்து வந்து குழந்தை லீலாவதி தாத்தாவிடமும் தந்தையிடமும் ஆசையாய்க் காட்டுவாள். அவளைத் தன் மடிமீது உட்கார்த்தி வைத்துக் கொண்டு, அந்த மலரின் இதழ்களை  ஒவ்வொன்றாய் மென்மையாய்ப் பிரித்து,  அவற்றை அவளுக்கு விரல் விட்டு எண்ணச் சொல்லிக் கொடுப்பார் மகேஸ்வரர். இப்படி இயற்கையின் அழகான சிருஷ்டிகளை வைத்துக் கொண்டே மகேஸ்வரரும் பாஸ்கரரும் அவளுக்குக் கணித ஞானத்தை ஊட்டி வளர்த்தனர்.  

மகேஸ்வரரின் மறைவிற்குப் பின்னர், பாஸ்கரர் உஜ்ஜயினிக்குக் குடியேறினார். மகேஸ்வரரிடமிருந்து சேகரித்துக் கொண்ட கணித, வேத ஞானங்களோடு கூட சுயமாய் சம்பாதித்த பூகோள, வான சாஸ்திர ஞானங்களும் துணை செய்ய, உஜ்ஜயினியின் பழமையானதும், புகழ் பெற்றதுமான வான சாஸ்திர ஆராய்ச்சிக் கூடத்தின் பிரதானப் பண்டிதர்களில் அவரும் ஒருவராய் இணைந்து கொண்டார். ஏற்கெனவே அவருக்கு நானூறு வருஷங்களுக்கு முன்னால் மகா பண்டிதர்களாகிய வராகமிகிரரும் பிரும்ம குப்தரும் அலங்கரித்த கூடம் அது. பிரும்ம குப்தரின் சிக்கலான கணித சூத்திரங்களை மேலும் தன் அறிவால் எளிமைப் படுத்தி மெருகேற்றிப் பிற பண்டிதர்களையும் விஞ்சியவராய்த் தனித்துப் பிரகாசித்தார் பாஸ்கரர். உஜ்ஜயினியின் அரசவைப் புலவர்கள் முதல், ஷிப்ரா நதிக் கரையில் திரியும்  அரை நிர்வாணத் துறவிகள் வரை பல தரப்பட்ட மனிதர்களும் மரியாதை செலுத்தும் அந்தஸ்து அவரைத் தானாய்த் தேடி வந்தது. 

அப்பாவை நினைத்து எப்போதும் பெருமையும் பூரிப்பும் கொண்டிருந்தாள் லீலாவதி. இருந்தும், தான் எப்பேர்ப்பட்ட அறிஞரின் மகள் என்கிற நினைப்பின் கர்வம் சக மனிதர்களோடு பழகுகிற போது சற்றும் தன்னை ஆட்கொண்டு விடாமல் அவள் மிகவும் நிதானமாய் நடந்து கொண்டாள். ஒரு முறை சுனந்தனே அதை அவளிடம் சொல்லி ஆச்சரியப் பட்டிருக்கிறான். அவன் சமயம் கிடைக்கிற போதெல்லாம் அவளைப் புகழத் தவறுவதில்லை. “நீ சராசரிப் பெண்ணில்லை, லீலா. உன்னுடைய ஆற்றலை உன் தந்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். இல்லையென்றால், அவர் எழுதும் கணித நூலுக்கு உன் பெயரையே வைத்திருப்பாரா? இந்தப் பெருமை யாருக்கு வாய்க்கும்? இதற்கு முன்னால் எத்தனையோ பண்டிதர்கள்  வந்து போயிருக்கிறார்கள். யாருடைய பெண்ணின் பெயராவது உலகத்துக்குத் தெரியுமா? எதிர்காலத்தில் உன் தந்தையைக் காட்டிலும் நீ அறிவிலும் புகழிலும் விஞ்சி நிற்கப் போகிறாய்..” 

அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் மிகவும் கூச்சம் கொள்வதோடு மட்டுமன்றி அவனை மென்மையாய்க் கடிந்தும் கொள்வாள்:. “போதும் உன் புகழ்ச்சி சுனந்தா. ஆச்சாரியாரை மிஞ்சுகிற தகுதி எல்லாம் எனக்கு இல்லை. என் மீது உள்ள அன்பில் சில சமயம் நீ அபத்தத்தின் எல்லைக்கே சென்று விடுகிறாய்.” 

ஆனால் சுனந்தன் தன் அபிப்பிரயாயங்களை மாற்றிக் கொள்ள மாட்டான். பாஸ்கரரிடமிருந்து பிரவாகமாய்க் கிளம்பி வரும் கணித சுலோகங்களின் ஊற்றுக்கண் அவர் மகளின் இந்தச் சுடர் விடும் விழிகளில் தான் இருக்க வேண்டும் என்று அவன் திடமாக நம்பினான். லீலாவதியின் மீதான அவனது பிரியம் எல்லை கடந்திருந்தது. 

சுனந்தன் சாந்திபனி ஆஸ்ரமத்திற்கு அருகில் ஒரு சின்னக் குடிலில் வசித்து வந்தான். அவன் தந்தை ஒரு வேத பண்டிதர். உஜ்ஜயினியின் வான சாஸ்திரக் கூடத்திலுள்ள பாஸ்கரர் உட்பட்ட எல்லாப் பண்டிதர்களோடும் அவருக்கு இருந்த நெருக்கமான தொடர்பின் காரணமாய், அவர் அவனை ஆச்சாரியாரிடம் கணிதம் பயில அனுப்பினார். ஷிப்ரா நதியின் நீரலைகள் தழுவும் அண்மையில் சாந்திபனி ஆஸ்ரமம் இருந்தது. சுற்றிலும் வெளிறிய மஞ்சள் மலர்கள் பூத்துக் குலுங்கும் கடம்ப மரங்கள் நிறைந்த சூழலில் அவன் வளர்ந்தான். பாஸ்கரரின் குருகுலத்தில் அவன் முதன்முதலாய் லீலாவதியைப் பார்த்த போது, அவனுக்குள் விசித்திரமான உணர்வுகள் தோன்றி வளர்ந்தன. 

ரு வைகாசிப் பௌர்ணமி நாளின் அந்தி வேளையில்,  ஷிப்ராவின் கரைகளில் மகா ஆரத்தி நடக்கிற தருணம், அவன் லீலாவதியைத் தனியாக சந்தித்தான். அவள் தன் சினேகிதிகளோடு சேர்ந்து, சின்னச் சின்ன தீபங்களை ஷிப்ராவின் நீர்ப்பரப்பின் மீது மகிழ்ச்சியோடு மிதக்க விட்டுக் கொண்டிருந்தாள். பாஸ்கரரின் சிஷ்யப் பிள்ளைகள் யாருக்கும் தங்கள் குரு புத்திரியிடம் தனியாக வந்து பேசும் தைரியம் இருந்ததில்லை. சுனந்தன் அதற்கு விதிவிலக்காய் அவளிடம் நெருங்கி வந்து பேசியது அவளுக்கு விநோதமாயும் துடுக்காயும் தெரிந்தது. 

அதற்கப்புறம் அவன் அவளிடம் வந்து பேசும் சந்தர்ப்பங்கள் அவ்வப்போது  நிகழ்ந்தன. ஒரு முறை மகா காலேஸ்வரர் ஆலயத்து வாசலில் அவள் சுவாமி தரிசனம் முடிந்துக் கை நிறையத் தாமரை மலர்களோடு வெளியே வந்த போது அவன் எதிர்ப்பட்டான். தாமரை மலர்களை வைத்துக் கொண்டு ஆச்சாரியார் ஒரு நாள் தொடுத்த கணக்கொன்றை அவன் அவளிடம் அப்போது சொன்ன போது  அவள் சந்தோஷம் கொண்டாள். 

சுனந்தன் கோயில் பக்கம் வருவதெல்லாம் வெறும் தற்செயலான நிகழ்வா, அல்லது அவளைப் பார்க்க வேண்டியே அவன் ஏற்படுத்திக் கொண்டவையா  என்கிற மாதிரி அவள் சிலசமயம் யோசித்ததுண்டு.  . அவனுக்குக் கடவுள் நம்பிக்கை என்று பெரிதாய் எதுவும் இல்லை என்று அவள் அறிவாள். அவனுக்கு எப்படியோ பௌத்தத் துறவிகள் சிலரின் கூட்டுறவால், பௌத்தக் கொள்கைகள் மீது நிறைய ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. கொஞ்சம் சார்வாக சகவாசமும் அவ்வப்போது எட்டிப் பார்த்தது. இதை எல்லாம் அவனது தந்தையோ பாஸ்கரரோ சற்றும் விரும்பவோ அனுமதிக்கவோ மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும். இருந்தும் அவனுடைய சிநேகம் ஏனோ அவளுக்குப் பிடித்திருந்து. அவனோடு தர்க்கங்களில் ஈடுபடுவதில் அவளுக்கு ஒரு சுகம் இருந்தது.  

ஒரு முறை அவன் அவளிடம் சொன்னான்.  “உனக்கு இப்போது ஒரு புதுக் கணக்கு சொல்கிறேன்..கேட்டுக் கொள். ஓர் அழகான இளம் பெண்ணும் அவள் காதலனும் காதல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த முத்து மாலை அறுந்து போனது. அதிலிருந்து மூன்றில் ஒரு பங்கு முத்துக்கள் தரையில் விழுந்தன. ஐந்தில் ஒரு பங்கு மஞ்சத்தில் விழுந்தது. அந்த யுவதி ஆறில் ஒரு பங்கைப் பிடித்து வைத்துக் கொண்டாள். பத்தில் ஒரு பங்கு அவள் காதலன் கையில் சேர்ந்தது. மிச்சம் ஆறு முத்துக்கள் மாலையிலேயே தங்கி விட்டன. ஹே, அழகிய கண்களை உடைய லீலாவதியே! யோசித்து பதில் சொல் மாலையில் ஆரம்பத்தில் இருந்தவை எத்தனை முத்துக்கள்?” 

லீலாவதி சிரித்தாள். “நீ உண்மையிலேயே பொல்லாத பையன். இந்த மாதிரி இடக்கான கணக்குகளை குரு புத்திரியிடமே வந்து கேட்க ஆனாலும் உனக்கு ரொம்பத் தைரியம் தான். சரி இந்தக் கணக்கை எங்கே பிடித்தாய்? ஆச்சாரியார் வகுப்பில் சொன்ன மாதிரித் தோன்றவில்லையே? உன் மூளையில் உதித்ததா? கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாக இருந்தாலும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது.”. 

அவன் முகத்தில் குறும்பு குமிழ அவளுக்கு பதில் சொன்னான்: “இந்த மாதிரி சிருங்கார ரசம் கலந்து சுலோகம் சொன்னால் இன்னும் இளைஞர்கள் கணிதத்தை மூளையில் நன்றாகவே பதிய வைத்துக் கொள்வார்கள். ஆனால் யாரும் செய்ய மாட்டேன் என்கிறார்கள், என்ன செய்வது? எத்தனை நாட்கள் தான் இப்படி வண்டுகளையும் தாமரை மலர்களையும் வைத்தே கவி பண்ணிக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.” 

லீலாவதி உடனே முகத்தைக் கொஞ்சம் கோபப்படுகிறவள் மாதிரி வைத்துக்கொண்டாள்: “சுவாரஸ்யம் வேண்டி இப்படியெல்லாம் கணக்குச் சொன்னால், சிஷ்யர்களின் கவனம் சிதறி விடாதா? ஆச்சாரியாரின் கற்பனைத் திறனைக் குறைவாக மதிப்பிடுகிறாயா, சுனந்தா?”

“நான் அப்படிச் செய்வேனா? வெறுமனே விளையாட்டுக்குச் சொன்னேன். அவரிடம் நான் மிகுந்த பக்தி வைத்திருக்கிறேன். அவர் மகா மேதை. கணிதசாஸ்திரத்தை விடு. வான சாஸ்திரத்தில், அவர் இது வரை யாருக்கும் தெரியாத நிறையப் புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார். ஆனால், சாதாரண ஜனங்களுக்கு அதெல்லாம் போய்ச் சேரவில்லை…” 

“நானும் விளையாட்டுக்குத் தான் கோபப்பட்டேன். ஆச்சாரியாரின் மகளாக இருப்பதில் எனக்கு எத்தனைப் பெருமை தெரியுமா?”

“அதெல்லாம் சரி. நீ இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை.”

லீலாவதி கொஞ்சம் யோசிக்கிற மாதிரி கண்களை இடுக்கிக் கொண்டாள். “எனக்கு இதற்கு பதில் தெரியும். ஆனால் இப்போது சொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்போது என் கழுத்தில் இருக்கும் முத்து மாலையை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது தான் முக்கியம் என்று தோன்றுகிறது” என்று சொல்லிச் சிரித்தவள், தன் கழுத்தைக் கைகளால் முடிக்  கொண்டே அந்த இடத்திலிருந்து நழுவி விட்டாள். 

இது போன்ற சின்ன சின்ன சம்பவங்களைத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து அசைபோடுகிற போது, அவள் மனசுக்கு ரம்மியமாகவே இருந்தது. சுனந்தனுக்கு அவள் மீது ஓர் ஈர்ப்பு இருப்பதை அவள் சூசகமாய் அறிந்திருந்தாள். அது காதலாய்ப் பெரிதாகி வளர்வதை அவள் விரும்பவில்லை. அதே சமயம் அதை அவனிடமே எப்படி நேரிடையாகச்  சொல்வது என்பதில் அவளுக்கு சங்கடம் இருந்தது. ஆனாலும் அவன் மீதான தனக்குள்ள ஈர்ப்பு எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து அவள் குழப்பம் அடைந்தாள்.

ன்றைக்குக் கிருஷ்ணனின் ஜன்மாஷ்டமி. சுனந்தன் பாஸ்கரரின் அனுமதி பெற்று லீலாவதியையும் மற்ற சிஷ்யப் பிள்ளைகளையும் சாந்திபனி ஆஸ்ரமத்துக்குக் கூட்டிச் சென்றான். சாந்திபனி ஆஸ்ரமத்தில்தான் கிருஷ்ணனும் குசேலனும் பால்ய காலத்தில் கல்வி பயின்றதாய் ஒரு நம்பிக்கை இருந்தது. 

ஆஸ்ரமத்தைச் சுற்றி அடர்த்தியாய் மரங்கள் நிறைந்திருந்தன. சற்றுத் தள்ளி ஷிப்ரா சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. ஆஸ்ரம வளாகத்தில் அங்கும் இங்கும் சில துறவிகள் தென்பட்டனர். சுனந்தன் தனக்கு அந்த இடம் மிகவும் பழக்கப் பட்டதைப் போல் ஆஸ்ரம வளாகத்தை அவர்களுக்குச் சுற்றிக் காட்டினான். அங்கிருந்த மரங்களின் பெயர்கள் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தன. 

இது கடம்ப மரம்..” என்று ஒரு மரத்தின் அருகில் வந்தவுடன் அவளிடம் சொன்னான். “இது புஷ்பிக்கும்  பருவத்தில் இதைப் பார்க்க வேண்டும். மரக் கிளைகள் எங்கும் சின்னச் சின்ன மஞ்சள் சூரியன்களைக் கட்டித் தொங்க விட்ட மாதிரி ஜோதி மயமாய் இருக்கும்..”

“தெரியும். என்னுடைய குழந்தைப் பருவத்தில், நாங்கள் சஹ்யாத்ரியில் இருந்தோம். அங்கேயும் நிறையக் கடம்ப மரங்கள் உண்டு.  அதன் பூக்கள் மஞ்சள் வண்ணத்தில் பந்து போல் உருண்டு திரண்டிருக்கும், அவற்றைப் பறித்து நாங்கள் விசிறி எறிந்து பிடித்து விளையாடுவோம்,,”

அவன் சொன்னான்: “இந்த மரத்துக்கு இன்னுமொரு விசேஷம் உண்டு. குறிப்பாய்க் காதலோடு இதற்கு நிறையத் தொடர்பு இருக்கிறது. இந்த மரத்தடியில் தான் பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் கோபிகளோடு ராசலீலைகள் செய்து மகிழ்ந்தானாம்…”

அவள் முகம் லேசாகச் சிவந்தது. “கிருஷ்ணன் படித்த பாடசாலையில் நின்று கொண்டு, கிருஷ்ணன் காதல் செய்த பிருந்தாவனத்தின் நினைவாகவே இருக்கிறாயே? உனக்கு நிறையத் தத்துவ ஞானம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீ எப்போதும் சிருங்காரத்தைப் பற்றியே பேசுகிறாய்.”

“சரி, உனக்குப் பிடிக்கவில்லை என்றால் பேசவில்லை. ஆனால் தீவிரமான தத்துவ விசாரத்தில், வாழ்க்கையின் சந்தோஷங்களைத் தவற விட்டு விடக் கூடாது..”: என்றான் சுனந்தன். 

லீலாவதி பேச்சை மாற்ற விரும்பினாள். “இங்கே பக்கத்தில் தானே இருக்கிறது காளிதாசன் பூசித்த காளி கோவில்? அப்பாவுடன் ஒரு தடவை போயிருக்கிறேன்.”

“ஆமாம். காளிதாசன் அற்புதமான கவி. அவரின் மேகதூதத்தில் உஜ்ஜயினியின் அழகை மனசைக் கொள்ளை கொள்கிற மாதிரி  சுலோகங்களில் வடித்திருக்கிறார்.”

லீலாவதி தனக்குள் நினைவுகளில் மூழ்கினாள். “நானும் வாசித்திருக்கிறேன். அதில் அவர் பேசும்  சாதக பட்சிகளைப் பற்றி ஏனோ அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அவற்றிற்கு அதிசயமான குணம் ஒன்று உண்டு.”

சுனந்தன் சொன்னான்: “ஆமாம். அவற்றுக்குத் தாகம் எடுத்தால் பூமியில் உள்ள சாதாரண நீரைக் குடிக்காதாம். ஆகாயத்திலிருந்து நேரடியாக விழும் சுத்தமான மழைத் துளிகளை மட்டும் தான் அப்படியே நேரடியாகப் பருகுமாம். கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அப்படித் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் பட்சிகளை நான் இதுவரை எங்கேயும் கண்டதில்லை. இதெல்லாம் கவிகள் கட்டிவிட்ட கட்டுக் கதை..”

இப்படிச் சொல்லிவிட்டு அவன் லீலாவதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவள் எந்த சலனமும் இன்றிக் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தாள். பின் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு, “நான் அந்தப் பறவையைப் போல் தான் இருக்க விரும்புகிறேன்..” என்று தணிந்த குரலில் சொன்னாள்.

சுனந்தனின் முகத்தில் குழப்பம் கவிந்தது. “இதற்கு என்ன அர்த்தம்?” என்று அவன் அவளைப் பார்த்துக் கேட்டான். 

“எனக்குத் தெரியாது. கவி காளிதாசனிடம் தான் கேட்க வேண்டும்..” என்று சொல்லிச் சிரித்து விட்டு லீலாவதி நடக்கத் தொடங்கினாள்.

“லீலா..”என்று அழைத்துக் கொண்டே சுனந்தன் அவள் பின்னால் நடந்தான். லீலாவதி அவன் பக்கம் திரும்பாமலேயே ஷிப்ரா ஓடும் திசையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அதனால், அவள் முகபாவங்கள் எதையும் அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. 

றுநாள் மாலையில் பாடம் முடிந்து சிஷ்யர்கள் எல்லோரும் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள். பாஸ்கரர் மணையில் உட்கார்ந்த படியே சுவடிகளைத் திரும்பவும் அடுக்கி நூலால் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தார். சுனந்தன் மட்டும் வெளியே போகாமல், ஆச்சாரியாரிடம் ஏதோ கேட்க விரும்புகிறவன் மாதிரிக் கூடத்திலேயே தூணருகே நின்று கொண்டிருந்தான். லீலாவதி அங்கே இருப்பதை ஏனோ தவிர்க்க விரும்பி அங்கிருந்து எழுந்து வாசல் பக்கமாய்ப் போனாள்.

சுனந்தன் ஆச்சாரியாரின் முன்னால் போய் நின்றான். தன் மீது நிழல் ஒன்று கவிவதை  உணர்ந்து, பாஸ்கரர் நிமிர்ந்து பார்த்தார். சுனந்தன் இன்னும் போகாமல் அங்கேயே நிற்பதைப் பார்த்து ஆச்சரியப் பட்டவராய், “என்ன, பாடத்தில் ஏதாவது சந்தேகமா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார். 

சுனந்தனுக்கு வாய் உலர்ந்து போய் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு விட்டது போல் தோன்றியது. அவன் தன்னை தைரியப் படுத்திக் கொண்டான்.

“ஆச்சாரியாரே, நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். லீலாவதி விஷயமாய்..”

பாஸ்கரர் புருவம் நெரிய அவனைப் பார்த்தார். அவரது பார்வையை நேருக்கு நேர் சந்திக்கும் சக்தியின்றி அவன் தலையைக் குனிந்து கொண்டே பேசினான்.

“ஆச்சாரியாரே, நான்  லீலாவதியை விவாகம் பண்ணிக் கொள்ள விரும்புகிறேன்… நான் கேட்பதில் ஏதாவது தவறு இருந்தால் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்..”

அவன் தான் சொல்ல வந்ததைத் தைரியமாய்ச் சொல்லியே விட்டான்.  ஆச்சாரியாரின் எதிர்வினை எதுவாய் இருந்தாலும் அதை எதிர்கொள்வது என்று அவன் ஏற்கெனவே தீர்மானம் பண்ணிக் கொண்டிருந்தான்.

சற்று நேரம்  தான் அஞ்சிய மாதிரி எதுவுமே நேராமல் இருக்கவே, அவன் மெள்ளத் தலையை உயர்த்தி குருநாதரைப் பார்த்தான். அவர் அவனையே பார்த்தபடி மௌனமாக இருந்தார். அவர் முகத்தில் கோபம் இருந்ததாய்த் தோன்றவில்லை. மாறாக அது சட்டென்று பிரகாசம் இழந்து இருண்டு போய் இருந்தது. 

“நான் ஏதாவது தப்பாய்ப் பேசி இருந்தால்…” 

பாஸ்கரர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். “என்னோடு வா..” என்று ஆணையிடுகிற குரலில் அவனிடம் சொல்லிவிட்டு. பதிலை எதிர்பார்க்காமல் கூடத்தை ஒட்டி இருந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்..

அவர் இது வரைக்கும் மிக அந்தரங்கமானவர்களைத் தவிர்த்து வேறு யாரையும்  அந்த அறைக்குள் பிரவேசிக்க அனுமதித்ததில்லை. இன்றைக்கு முதன் முதலாய் சுனந்தனை அவர் அங்கே கூட்டிப் போகிறார். ஆச்சாரியாரின் எண்ணம் என்னவாய் இருக்கும் என்று குழம்பிய படியே சுனந்தன் அவரைத் தொடர்ந்தான். 

அறைக்குள் வரிசையாய் விசித்திரமான கருவிகள் இருந்தன.  அஸ்தமன வேளையானதால் அறைக்குள் லேசான இருட்டு கவியத் தொடங்கி இருந்தது, அந்த மங்கலான வெளிச்சத்தில் அந்தக் கருவிகள் சரியாய் அடையாளம் புலப்படவில்லை. பாஸ்கரர் போய் அறைக்குள் இருந்த சாளரத்தின் கதவுகளைக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்துத் திறந்தார். வெளியே இருந்து அஸ்தமன சூரியனின் வெளிறிய கிரணங்கள் உள்ளே பிரவேசித்துத் 

தரையெங்கும் பாளம் பாளமாய்ச் சிதறி விழுந்தன. அந்த வெளிச்சத்தில் அந்தக் கருவிகள் இப்போது நன்றாய்க் கண்ணுக்குத் தெரிந்தன.

அவையெல்லாம் பாஸ்கரர் சுயமாக ஆராய்ந்து உருவாக்கிய யந்திரங்களின் மாதிரி வடிவங்கள். அவற்றைப் பற்றி அவன் ஏற்கெனெவே கேள்விப் பட்டிருக்கிறான். அவற்றில் சில, வான சாஸ்திர மையத்தில் உபயோகத்தில் இருந்ததையும் அவன் அறிவான். பாஸ்கரரின் விஞ்ஞான மேதைமைகளைப் பறை சாற்றும் அவை பற்றி நிறையத் தெரிந்து கொள்ள அவன் பல சமயங்களில் ஆசைப் பட்டதுண்டு. ஆனால் இப்போது அவன் மனம் முழுதும் லீலாவதியே வியாபித்திருந்ததால் அவன் வேறு எதிலும் நாட்டமின்றி இருந்தான். இந்த சந்தர்ப்பத்தில் ஏன் ஆச்சாரியார் இவற்றை எல்லாம் என்னிடம் காட்டுகிறார்? நான் கேட்டதற்கும் இவற்றுக்கும் என்ன சம்பந்தம்? 

பாஸ்கரர் ஒவ்வவொரு கருவியாய் அவனுக்குக் காட்டியபடி பேசினார். “சுனந்தா, இவை எல்லாம் நான் சிரமப்பட்டுக் கண்டுபிடித்து உருவாக்கிய  யந்திரங்களின் மாதிரிகள், இவற்றை வைத்து வானத்திலும் பூமியிலும் உள்ள பொருள்களின் பரிமாணங்களைத் துல்லியமாகக் கண்டு சொல்லலாம். இது யஷ்டி யந்திரம்; இது சாப யந்திரம்; இது கோல யந்திரம்; இது சக்ர யந்திரம்..” என்று ஒவ்வொன்றாய்ச் சொல்லிக் கொண்டு வந்தவர், ஒரு கருவியின் முன் வந்தவுடன் தளர்வோடு நின்றார். 

அவர் குரல் சட்டென்று இறுகியது. “இது ஜல கடிகை. இதை வைத்து ஒரு நாளின் எந்த முகூர்த்தத்தையும் நாழிகையையும் சுத்தமாக அளவிடலாம்… சுனந்தா, இது வெறும் அளவை யந்திரம் மட்டும் இல்லை. இதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. லீலாவின் சோகக் கதை.. நீ கேட்டதற்கான பதிலும் கூட..”

அவன் ஒன்றும் விளங்காமல் அந்தக் கருவியைப் பார்த்தான். மிகவும் எளிமையாகவும் அதேசமயம் புத்தி சாலித் தனத்தோடும் வடிவமைக்கப் பட்டிருந்தது அது. ஓர் அகன்ற பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர். நீரின் மேற்பரப்பில் தட்டையான அடிப்பக்கம் கொண்ட ஒரு சின்ன நீள்-உருளை வடிவம் கொண்ட ஒரு குடுவை மிதந்து கொண்டிருந்தது. அதன் அடியில் இருந்த ஒரு சின்னத் துளை வழியே தண்ணீர் துளித் துளியாக மேலே குடுவைக்குள் நுழைய, குடுவைக்குள் நீர் மட்டம் மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. குடுவையில் நீர் ஏற ஏற அதன் எடையால் குடுவை கொஞ்சம் கொஞ்சமாய்க் கீழே உள்ள தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. குடுவையின் பக்கவாட்டில் அளவீட்டுக் கோடுகள் வரையப் பட்டிருந்தன.

அவன் ஆச்சரியமாய் அதைப் பார்த்தான். புத்திசாலியான சுனந்தனுக்கு அந்தக் கருவியின் சூட்சுமம் விளங்க வெகுநேரம் பிடிக்கவில்லை.

ஆச்சாரியார் அவனிடம் பேசினார்:  “சுனந்தா, அந்தக் கருவியைப் பார்த்தாய் அல்லவா? அதன் சித்தாந்தம் உனக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதை நான் சஹ்யாத்ரிப் பிரதேசத்தில் இருந்த போது, லீலாவதிக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கினேன். அவளுக்கு அப்போது பனிரெண்டு வயதிருக்கும், அதே ஊரில் இருந்த ஒரு பிள்ளையோடு அவளுக்குத் திருமணம் நிச்சயித்தோம். லீலாவதியின் ஜாதகத்தில் ஒரு பெரிய இக்கட்டான விஷயம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட முகூர்த்த வேளையில் மட்டுமே அவளுக்கு விவாகம் நடக்க வேண்டும். அந்த வேளை தவறி வேறு எந்த முகூர்த்தத்தில் அவளுக்கு விவாகம் நிகழ்ந்தாலும் அவள் கணவனை இழந்து விதவையாகி விடுவாள் என்று அவளது கிரக நிலைகளை வைத்து நான் தெரிந்து கொண்டேன். அதனால் இந்தக் குடுவையில் நீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட கோட்டுக்கு நேர் வருகிற போது அவளது விவாகச் சடங்குகளை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கல்யாண ஏற்பாடுகளைச் செய்தோம். ஆனால் எனக்கும் தெரியாமல், விளயாட்டுப் பெண்ணான லீலா இந்தக் கருவியின் அருகில் போய் ஆர்வமாய் உள்ளே குனிந்து பார்த்திருக்கிறாள். அப்போது அவள் மூக்குத்தியில் இருந்த முத்து ஒன்று நழுவிக் குடுவையில் விழுந்து அந்தத் துளையை அடைத்து விட்டது. லீலா பயந்து போய் இதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டாள். துளை மூடியதால் குடுவைக்குள் நீர் நுழைய முடியாமல், நீர் மட்டம் அப்படியே ஒரே இடத்தில் நின்று விட்டது. முகூர்த்த நேரம் தப்பி விட்டது. அதனால் அவளது விவாக ஏற்பாடுகள் அப்படியே நின்று விட்டன. இனி அவளுக்குத் திருமண பாக்கியம் கிடையாது. தன் மகள் விதவையாவதை எந்தத் தகப்பன் விரும்புவான்? அந்த துக்கம் தெரியாமல் இருக்கத் தான் அவளின் கவனம் முழுவதையும் கணித சாஸ்திரத்தின் பக்கம் திருப்பினேன். எனது கிரந்தத்திற்கும் அவள் பெயரையே சூட்டினேன்…”

ஆச்சாரியார் கைகளைப் பின்புறமாய்க் கட்டியபடி அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு நின்றிருந்தார். அவருடைய முகத்தில் என்ன உணர்ச்சிகள் அப்போது ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை அந்த மங்கிய வெளிச்சத்தில் அவனால் அனுமானிக்க இயலவில்லை. 

அவன் ஆச்சாரியாரிடம் பேசுகிறோம் என்பதையும் மறந்து  கோபம் நிறைந்த குரலில் அவரிடம் பேசினான். “ஆச்சாரியாரே, இது என்ன அசட்டுத்தனம்? தங்களைப் போன்ற அறிஞர்கள் இந்தக் கற்பனைகளை நம்பலாமா? கால காலமாய்க் கிரகணத்தின் போது சந்திரனைப் பாம்பு விழுங்குவதாய்ப் பிற பண்டிதர்கள் மக்கள் மத்தியில் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கும் போது, பிரும்ம குப்தரும், வராகமிகிரரும் நீங்களும் அது வெறும் பூமியின் நிழல் தான் என்று கண்டறிந்து சொல்லவில்லையா? அப்புறம் எப்படி இந்த மூட நம்பிக்கைகளைப் போற்றிப் பாதுகாத்து வருகிறீர்கள்? சாதாரண மக்கள் செய்யலாம். ஆனால் தங்களைப் போன்ற மகா பண்டிதர்கள் செய்யலாமா?”

அந்த நிலையிலும், அவன் பக்கம் திரும்பாமலேயே ஆச்சாரியார் அவனுக்கு பதில் சொன்னார். அவர் குரலில் இருந்தது கோபமா துக்கமா என்று அவனுக்கு விளங்கவில்லை: “சுனந்தா,. உன்னை விட என் பெண் மேல் எனக்கு அக்கறை இருக்கிறது. அவள் விதவையாவதையோ இன்னொரு பிள்ளை அவள் பொருட்டு அகால மரணம் அடைவதையோ நான் விரும்பவில்லை. கிரக பலன்கள் உண்மையா இல்லையா என்பதை என்  மகளை வைத்து என்னால் பரிக்ஷை பண்ணிப் பார்க்க முடியாது. ஜோதிஷ சாஸ்திரத்தில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. சாஸ்திர  விரோதமான காரியங்களை நான் எந்தக் காலத்திலும் செய்ய மாட்டேன்.. என்னோடு வீணாக வாதாடாதே அவளை மறந்து விடு. இதற்கு மேலும், உன் மனசில் சஞ்சலங்கள் இருக்குமானால், நாளயிலிருந்து என் பாடசாலைக்கு வராதே..”

அவர் சாளரத்தின் வெளியே பார்த்துக்கொடிருந்தார். வெளியே அந்தி சாய்ந்து இருட்டத் தொடங்கி இருந்தது. தூரத்தில் ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்த சாயங்காலத்து பட்சி ஒன்று அவர்களையே பரிகாசத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது போல் சுனந்தனுக்குத் தோன்றியது. 

அவன்  அந்த இடத்தில் அதற்கு மேலும் நிற்க விரும்பாமல், ஆச்சாரியாரின் அருகில் போனான். அவரது முகத்தைப் பார்க்காமலேயே, குனிந்து சம்பிரதாயமாய் அவரது கால்களைத் தொட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்து வெளியே கூடத்துக்கு வந்தான்.  அவன் மனம் கனத்திருந்தது.

கூடத்தில் ஒரு மூலையில் குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதற்கு முன்னால் தரையில் சப்பணமிட்டு அமர்ந்து லீலாவதி ஓலைச் சுவடியில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். அவள் அவர்கள் பேச ஆரம்பித்த சமயத்திலேயே அங்கே வந்திருக்க வேண்டும். அவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டிருக்க வேண்டும். அதுவும் நல்லதிற்குத் தான். அவளைப் பார்த்தவுடன்  அவனுள் உணர்ச்சிகள் பிரவாகித்தன. அவன் அவள் அருகே போய் நின்று, “லீலாவதி..” என்று அழைத்து அவள் தோள்களை மென்மையாய்த் தீண்டினான். 

லீலாவதி எந்த சலனமும் இன்றி, திரும்பிப் பார்த்து அவன் கைகளை விலக்கி விட்டாள்.  தான் எழுதிக் கொண்டிருந்த ஓலைச் சுவடியினை அவன் முன் நீட்டினாள். அவள் விழிகளை அவன் ஏறிட்டான். அவை இரண்டும் அந்த தீபஒளியில் இரண்டு நெருப்புக் கங்குகளைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தன. அவன் அந்த விழிகளை அதற்கு மேலும் பார்க்க சக்தி இன்றி, அந்த ஓலைச் சுவடியில் அவள் எழுதியிருந்ததை வாசித்தான்.

அவள் அதில் ஒரு கவிதையைப் போல் இப்படி எழுதி இருந்தாள். ‘ஹே, அழகிய கண்களையுடைய லீலாவதியே! நீ ஒரு சராசரிப் பெண்ணாய்த் திருமணம் கொண்டு, குழந்தை பெற்று, குடும்பம் சுமந்து மடியப் பிறந்தவள் இல்லை. நீ ஒரு சாதகப் பறவையைப் போன்றவள். சொர்க்கத்திலிருந்து நேரடியாய்க் கீழே இறங்கும் அமிர்தத் துளிகளை மட்டுமே அருந்தித் தாகம் தணிப்பவள்….”

சுனந்தனின் விழியோரங்களில் நீர் கோர்த்தது. அவன் அந்த ஓலைச் சுவடியை அவள் கைகளிலேயே நழுவ விட்டான். எதுவும் பேசாமல் வாசலை நோக்கி நடந்தான். அவனது நடை வழக்கமான உற்சாகம் இன்றித் தளர்ந்து 

போயிருந்தது. அவன் வாசற்புறத்து வேலியின் மூங்கில் கதவுகளைத் திறந்து கொண்டு சாலையில் இறங்கி நடந்து போகிற போது, அவன் போவதையே முகத்தில் எந்த சலனமும் இன்றி பார்த்துக் கொண்டு அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தாள் லீலாவதி. சுனந்தனின் உருவம் கண் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறிதாகிக் கடைசியில் தூரத்தில் ஒரு புள்ளியாய்க் கரைந்து போகிற வரை அவள் அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(பாஸ்கரர்-லீலாவதி பற்றிய ஒரு கர்ணபரம்பரைக் கதையை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டது. சுனந்தன் ஒரு கற்பனைப் பாத்திரம்.)

******

5 Replies to “லீலாவதி”

  1. ௮ன்புள்ள ஆசிரியருக்கு,
    ௭ன் சிறுகதையைப் பிரசுரித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் என் பெயர் தவறுதலாக ‘௭ம்.௭ஸ்.ஏ.ராம்’ ௭ன்று ௮ச்சாகி இருக்கிறது. ‘௭ஸ்.௭ம்.ஏ.ராம்’ ௭ன்று இருக்க வேண்டும். ௮தைத் தயவு செய்து தி௫த்தி ௮மைக்குமாறு ௮ன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    தங்கள்,
    ௭ஸ்.௭ம்.ஏ.ராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.