யோக்காய்

அந்தக் கால இந்தியாவில் மாஸ்காட் (Mascot) என்றழைக்கப்படும் அடையாளச் சின்னங்கள், குறிப்பாக ஆளுயரத்தில் அதிகமாக இருந்து பார்த்ததில்லை.  ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மட்டும் ஏர் இந்தியா மகாராஜா என்று ஒரு சின்னம் உண்டு. சிறிய பெரிய ஏர் இந்தியா மகாராஜா பொம்மைகளை அங்கே இங்கே பார்த்திருக்கிறேனே தவிர அந்த சின்னம் மாதிரி டிரஸ் பண்ணிக்கொண்டு நிஜ மனிதர்கள் யாரும் பயணிகளை ஏர்போர்ட்டில் வரவேற்று கொண்டிருந்தது போல் எல்லாம் ஏதும் ஞாபகமில்லை. IPL கிரிக்கெட் குழுக்கள் சிலவற்றுக்கு இப்போது மாஸ்காட் உருவகங்கள் வந்திருப்பது தெரிகிறது என்றாலும், இவை இந்தியாவில் அவ்வளவு தூரம் பிரபலம் என்று தோன்றவில்லை.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பாஸ்கெட்பால், புட்பால், பேஸ்பால் போன்ற விளையாட்டு குழுக்களுக்கு மாஸ்காட் வடிவங்கள் நிச்சயம் இருக்கும். குட்டி பொம்மைகளாய் அவை விற்கப்படுவதுடன், விளையாட்டு பந்தயங்கள் நடக்கும்போது அந்த மாஸ்காட் போன்று உடை தரித்த ஓரிருவர் அந்தக் குழுவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி குதூகலிக்கவைப்பதற்காக ஓடிக் குதித்து குட்டிகரணம் அடித்துக் கொண்டிருப்பதை சாதாரணமாகப் பார்க்கலாம். அருகிலிருக்கும் படத்திலிருப்பவை எங்கள் ஊர் மைனர் லீக் பேஸ்பால் Iron Pigs விளையாட்டுக்குழுவின் பெரெஸ்/ஃப்பே (Ferrous/Fefe) உருவகங்கள். முன்னாட்களில் இங்கெல்லாம் நிறைய இரும்பு ஆலைகளும் அது சம்பந்தப்பட்ட தொழில்களும் செழித்திருந்தன. Fe, Ferrous, Pig Iron என்பதெல்லாம் அந்தத் தொடர்பை நினைவூட்டும் இரும்பு சம்பந்தப்பட்ட குறியீடு/சொற்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். விளையாட்டு குழுக்களைத் தாண்டி வெளியே பார்த்தோமானால் டிஸ்னி போன்ற நிறுவனங்களின் கார்ட்டூன் கேரக்டர்களுக்கு நிஜ வடிவம் கொடுத்து முழு மனித அளவில் டிரஸ் செய்து கொண்டு டிஸ்னி வேர்ல்ட் போன்ற இடங்களில் மிக்கி மௌஸ், டொனல்ட் டக் வடிவங்கள் இங்குமங்கும் நடப்பது ரொம்பவும் சகஜம். நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் நாள்முழுதும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், வொண்டர் வுமன், எல்மோ போன்றவை மாதிரி டிரஸ் செய்துகொண்டு, வரும் சுற்றுலா பயணிகளை தங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அழைத்துவிட்டு பின்னால் காசு கொடுக்கும்படி வற்புறுத்தி பிழைப்பவர்கள் உண்டு. 

அதையெல்லாம் தாண்டி இந்த ஆளுயர மாஸ்காட் கலாச்சாரத்தை ஒரு அதீத எல்லைக்கு கொண்டு போயிருப்பது ஜப்பான்தான். அங்கு எதற்கெடுத்தாலும் ஒரு மாஸ்காட் வடிவமைத்து விடுவது பல்லாண்டுகாலமாய் இருந்து வரும் ஒரு வழக்கம்.  எனவே விளையாட்டு குழுக்கள், பெரிய நிறுவனங்கள், பிரசித்திபெற்ற கார்ட்டூன் கேரக்டர்கள் மட்டுமின்றி, ஜப்பானிலுள்ள ஒவ்வொரு ஊருக்கும், மளிகை கடைக்கும், பல் வைத்தியருக்கும், ரயில்வே ஸ்டேஷனுக்கும், அணு மின் நிலையங்களுக்கும், ஏன் சிறைசாலைகளுக்கும் கூட மாஸ்காட் வடிவமைப்புகள் இருப்பது வேடிக்கையாகவும் சற்று விநோதமாகவும் இருக்கிறது. 

குமாமொன்

குமாமொன் என்ற கரடி போன்ற அருகிலிருக்கும் உருவம் குமாமோடோ மாவட்டத்திற்கான மாஸ்காட்.  சுற்றுலாவை வளர்க்கும் விளம்பரங்களுக்கு பயன்படும் இது போன்ற உருவங்களை சுலபமாக புரிந்து கொள்ளாம்.

மாட்டாஜி நோ மொமிஜி

மெத்துமெத்தென்று ஸாப்டாக பார்க்க க்யூட்டாக இருக்கும் குமாமொனில் அதிகம் வினோதம் ஒன்றுமில்லை என்றால், அருகிலிருக்கும் மாட்டாஜி நோ மொமிஜி என்ற இந்த கடுப்பில் இருக்கும் பிங்க் நிற  மான் உருவத்தை கவனியுங்கள்.  வேட்டைக்காரர்களை வேட்டையாட இந்த மான் ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறதாம்! அடுத்து இருப்பது கான்-சேன் என்ற கொஞ்சம் பெங்குவின் போலிருக்கும் இந்த மாஸ்காட் ஒரு  எனிமா மருந்து நிறுவனத்தினுடையது!

கான்-சேன்

ம்..ம், கொஞ்சம் விநோதமாய்த்தான் இருக்கிறது என்று நாம் நினைக்க ஆரம்பிக்கும்போது ஹொக்கைடோ என்ற பிரதேசத்திலிருந்து தலை நீட்டும் மெலன் குமா நம்மை பயமுறுத்துகிறது! இந்த பிரதேசம் ஜப்பானில் கரடிகளுக்கும், பப்பாளி பழத்துக்கும் பெயர்போனது. எனவே ஒரு இந்த மாஸ்காட் இரண்டையும் கலந்து ஒரு கரடி தன் தலையாக ஒரு பப்பாளிப் பழத்தைக் கொண்டிருப்பதைப்போல் உருவகிக்கப்பட்டிருக்கிறது!

மெலன் குமா

இந்த மாஸ்காட்களிடையே மிகவும் அழகானது எது, கொடூரமானது எது என்றெல்லாம் போட்டி வைத்து, ஓட்டெடுப்பு நடத்தி, வருடாந்திர பரிசுகள் வழங்கப் படுவதால், அங்கே இது பெரிய பிசினஸ்! இப்படி பக்கம் பக்கமாக அறிமுகப்படுத்த ஆயிரக்கணக்கில் உருவங்கள் பல இருப்பதால், போக்கிமான் கோ என்ற வீடியோ விளையாட்டை விளையாடுவதுபோல, இந்த ஜந்துக்களை நீங்களாகவே வலையில் தேடி பிடித்துப் பார்த்து தலையைச் சொரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு வேறு ஒரு பக்கம் பயணிப்போம். 

ஷின்ஜோகுன்

இந்த ஷின்ஜோகுன் மாஸ்காட் சுசாகி என்ற நகரத்தினுடையது. முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் நதிகளில் இருந்து ஆனால் இப்போது முற்றிலும் அழிந்து போய்விட்ட  ஒருவகை ஆட்டர் (Otter) இன பிராணியை குறிக்கும் இந்த மாஸ்காட் தலையில் ஏனோ நூடுல்சை தொப்பியாக போட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை சரிதான். ஆனால் இதோடு விடாமல், சுசாகி நகரம் செல்லப்பிராணி ஆட்டர் (pet Otter) ஒன்றையும் சீய்டான் (Chiitan) என்று பெயர் சூட்டி நகரத்தின் கௌரவ சுற்றுலா தூதராக நியமித்தது. இந்த (மாஸ்காட் அல்லாத) ஆட்டருக்கென்று ட்விட்டர் அக்கௌன்ட், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எல்லாம் இருக்கவே, ஏற்கனவே இருந்த ஷின்ஜோகுன் மாஸ்காட் போதாதென்று, சீய்டான் என்று வேறு ஒரு மாஸ்காட்டை சுசாகி நகர சுற்றுலாத்துறை உருவாக்க,  வந்தது வினை!

ஷின்ஜோகுன்

ஏற்கனவே இருந்த ஷின்ஜோகுன் மாஸ்காட் ஆட்டரைக் போல் வடிவமைக்கப் பட்டிருந்தாதால், சீய்டானை சற்று வேறுபடுத்திக் காட்ட அது ஒரு குழந்தை தேவதை போல உருவமைக்கப்பட்டு, தலையில் ஒரு ஆமையை தொப்பியாக போட்டுக் கொண்டிருந்தது! பார்க்க மஞ்சளாய், க்யூட்டாய் இருந்தாலும், இந்த மாஸ்காட்டிற்கான ட்விட்டர் அக்கௌண்டில் இதற்கு பைத்தியமும் வெறியும் பிடித்தாற்போல யாரோ இஷ்டத்திற்கு வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார்கள்! வலையில் தேடினீர்களானால், பாக்கி மாஸ்காட்களை அடித்து உதைத்தும், ரோட்டில் நிற்கும் கார்களை உருட்டி விட்டும் இந்த மாஸ்காட் அட்டகாசம் செய்துகொண்டு திரிவதைப் பார்க்கலாம். சுசாகி நகரத்து வயோதிகர்கள்  சீய்டானை ஷின்ஜோகுன் என்று நினைத்து குழப்பிக்கொண்டு, வலையில் வெளிவரும் வீடியோக்களால் நகரின் மானமே போவதாக நூற்றுக்கணக்கில் மேயருக்கு கடிதம் எழுத ஆரம்பித்து விட்டார்கள்! இது ஏதடா தலைவலி என்று நகரின் மேலாளர்கள் பிரஸ் கான்பரன்ஸ்  ஒன்றைக்கூட்டி, சீய்டான் மாஸ்காட் ஓய்வு பெற்றதாகவும், அதைப்பற்றிய படங்களையோ, வீடியோக்களையோ யாராவது பிரசுரித்தால் அது குற்றம் என்றும் அறிவித்தார்கள்! 2018 வாக்கில் மிகவும் பிரபலமாகி வந்த சீய்டான்னும் அதன் ட்விட்டர் அக்கௌன்ட்டும் மேயரால் முடக்கப்பட, 2019 சீய்டான்னுக்கு மோசமான வருடமாகப் போய்விட்டது. இருந்தாலும் அதன் ரசிகர்கள், சீய்டானை அப்படி முடக்க மேயருக்கு அதிகாரமில்லை என்று கோர்ட்டில் கேஸ் போட்டு வென்று விட்டதால் இந்த ரவுடி பேபி திரும்பவும் பட்டையை கிளப்ப ஆரம்பித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை! கொஞ்சம் தலை சுற்றுகிறதா?

இந்த அளவுக்கு ஏன் ஜப்பானியர்கள் மாஸ்காட் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்று யோசித்து நோண்டித் தோண்டித் தேடினால், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் யோக்காய் கலாச்சாரம் தெரியவருகிறது. சாதாரண மனிதர்கள் போன்று இல்லாத பலவிதமான நல்ல/கெட்ட பேய், பூதம், பிசாசு, ஆவி எல்லாவற்றையும் குறிக்கும் ஒரு சொல்லாக யோக்காய் அங்கே இருந்து வருகிறது. ஒரு யோக்காய் எதாவது பழைய ஜப்பானிய பாட்டி கதைகளிளிருந்து வந்த கதாபாத்திரமாகவோ, அல்லது முற்றிலும் புதிய கற்பனையால் உருவகிக்கப்பட்ட, பொதுவாக எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு ஜந்துவாகவோ இருக்கலாம். இவற்றைப்பற்றி ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியிருப்பவர்கள், இவைகளை மூடநம்பிக்கைகளின் அமானுஷ்ய ஆளுமைகள் அல்லது இயற்கையாக நடக்கும் அல்லது நாமாக நினைத்துக் கொள்ளும் நமக்கு சரிவர புரியாத நிகழ்வுகளுக்கு ஜப்பானிய சமூகம் கொடுத்து வைத்திருக்கும் பாத்திர அமைப்புகள் என்றெல்லாம் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.  

ட்டெங்கு

உதாரணமாக ட்டெங்கு என்று சொல்லப்படும் ஒரு யோக்காய் பிரகாசமான சிவப்பு தோலும், பெரிய மூக்கும், இறக்கைகளும் கொண்ட ஒரு அரைகுறை கடவுள் போன்ற ஒன்று. கராத்தே போன்ற தற்காப்பு கலைகளில் தேர்ந்த ட்டெங்கு, விரும்பினால் தன்  இறக்கைகளை அடித்து பெரிய சூறாவளியையே உருவாக்க வல்லது! பொதுவாக சாமியார் போல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடும் ட்டெங்கு,  தன்னை கடுப்பேற்றும் உருப்படாத ஆத்மாக்களை வெகுதூரத்தில் போய் விழும்படி தூக்கி எறிந்து விடுமாம்! இது போன்ற பல நூறு யோக்காய்கள் ஜப்பானிய நம்பிக்கைகளுக்கிடையே பல நூறு வருடங்களாய் உலவி வருகின்றன. இவை சுமாராக மனித உருவில் இருக்க வேண்டும் என்றெல்லாம் கூட சட்டம் எதுவும் கிடையாது. தன் உருவையே அடிக்கடி மாற்றிக்கொள்பவை, அசுரத்தன்மை கொண்டவை, பூனைக்குட்டிபோல் க்யூட்டாக நமக்கு கம்பெனி கொடுப்பவை எல்லாம் உண்டு.

பத்து பன்னிரண்டு நூற்றாண்டுகளாக உலகில் உள்ள எல்லா விஷயங்களுக்கும், (அது மரமோ, வானமோ, ஆண்டிராய்டு கை பேசியோ,) ஒரு சக்தி, ஆவி உருவம் போன்றவற்றை கொடுத்துவிடுவது ஜப்பானிய கலாச்சார வழக்கம். ஆயிரம் வருடங்களுக்கு முன்பெல்லாம் ஆளாளுக்கு தோன்றியபடி யோக்காய்களை விவரித்துக்கொண்டிருந்தார்கள். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் டொரியாமா செகியென் என்றொருவர் அப்போது வழக்கிலிருந்த யோக்காய்கள் எல்லாவற்றையும் துரத்திப்பிடித்து, கலர் கலராக படம் வரைந்து பாகங்களைக் குறித்து அட்டவணைப் படுத்தி ஒரு புத்தகமாக வெளியிட, அது பெரிய ஹிட்டாகி பலநூறு  யோக்காய்களுக்கு நிரந்தர லுக் அண்ட் பீல் கொடுத்திருக்கிறது!

இநோயு என்ரியோ

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இநோயு என்ரியோ என்ற ஒரு விஞ்ஞானி இந்த தத்துபித்து விஷயங்களில் இருந்து வெளிவந்தால்தான் ஜப்பான் ஐரோப்பிய நாடுகளைப் போல விஞ்ஞான வளர்ச்சியடைய முடியும் என்று முடிவு செய்து, ஒவ்வொரு  பழங்கதையாய் உடைத்து நொறுக்கி, நிறைய சொற்பொழிவுகள் நிகழ்த்தி, கட்டுரைகள் எழுதி ஜப்பானிய சமூகத்தை யோக்காய்களின் பிடியில் இருந்து விடுவித்தார். அறிவியல் அறிவு வளர வளர, முன்பு நமக்கு புரியாதிருந்த பல விஷயங்கள் எளிதாக புரிந்து விட்டதால், யோக்காய்களின் தேவைகள் குறைந்து போனது. இருந்தாலும், அவை முழுதுமாய் ஒளிந்து மறைந்து போய்விட சமூகம் விடவில்லை. ஆங்காங்கே சில நிகழ்வுகளை விளக்கவும், தெரிந்த பிடித்த யோகாய்களை மறந்துவிட மனமில்லாத சமூகத்தில் இருக்கும் செல்வாக்காலும், இன்றும் பற்பல யோக்காய்கள் அங்கே சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

அமாபி

அமாபி என்பது அப்படிப்பட்ட ஒரு யோக்காய். பறவை போன்ற அலகும், நீண்ட தலைமுடியும், மூன்று கால்களும், செதிள்களும் கொண்ட அமாபி ஒரு மீன்கன்னி (Mermaid) வகையைச் சேர்ந்ததென்று சொல்லலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பலவருடங்கள் ஜப்பான் காலரா வியாதியால் அவதிப்பட்டது. திரும்பத்திரும்ப ஜப்பானிய மக்களை அப்போது காலரா கொன்று குவித்துக்கொண்டிருக்க, 1846ல் ஒருநாள் கடலிலிருந்து அமாபி வெளியே வந்து ஜப்பானிய மக்களை காப்பற்றியதாம். அப்போதைய காலராவைப்போல் ஜப்பானில் ஏதாவது பெரிய வியாதி வந்து மக்களை துன்புறுத்தினால், தன் படத்தை ஜப்பானிய மக்களனைவருக்கும் காட்டும்படியும், காட்டினால் பார்த்த அத்தனை பேரையும் எத்தகைய தொற்றுநோயிலிருந்தும் தான் காப்பாற்றுவதாகவும் வாக்குறுதியளித்துவிட்டு திரும்பவும் அந்த அமாபி கடலுக்குள்ளேயே சென்று விட்டதாம். அந்தக்கால செய்தித்தாள்களில் கூட பதிவு செய்துகிடக்கும் இந்த நம்பிக்கை, அமாபியை இன்றும் ஜப்பானின் தொற்றுநோய்களை எதிர்த்து பாதுகாப்பளிக்கும் தேவதையாக நிலை நிறுத்தியிருக்கிறது! இந்த வருடம் உலகெங்கிலும் பரவி ஆட்டிப்படைக்கும் கொரோனாவை எப்படி சமாளிப்பது என்று பல நாடுகளும் முழித்துக் கொண்டிருக்கையில், யாரோ ஒருவர் அமாபியை மக்களுக்கு நினைவுறுத்த, திரும்பவும் அதற்கு மௌசு ஏறிவிட்டது! படங்களாக வரைந்தும், கேக், பிஸ்கட் வடிவிலெல்லாமும் கூட அமாபியை மக்கள் உருவாக்கிவிட,  ராசியான தாயத்து போல் அது ஜப்பான் எங்கிலும் இப்போது வலம் வந்து கொண்டிருப்பதில் அதிகம் ஆச்சரியமில்லை.  

இந்த அமாபி யோக்காய் நம்பிக்கையை ஜப்பானிய மாஸ்காட்களும் சமீபத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்திருப்பதுதான் ஜப்பானுக்கே உரித்தான ஒரு கவிதை கலந்த  ஆச்சரியமும், அழகும்! நாம் ஆரம்பத்தில் பார்த்த குமாமொன் என்ற கரடி போன்ற மாஸ்காட், இங்கே அமாபி போல் நீல நிற தலைமயிரைக் கொண்ட விக் (Wig) அணிந்துகொண்டு, மீனுக்கிருக்கும் செதிள்கள் போலிருக்கும் உடையை அணிந்து கையில் அமாபி படத்துடன் போஸ் கொடுத்து  நிற்கும் வேடிக்கையை என்னவென்று சொல்வது!? 

பஞ்சிலும், பிளாஸ்டிக்கிலும் செய்த ஒரு காஸ்ட்யூமை ஒரு மனிதர் அணிந்துகொண்டு நடமாடுவது என்ற மாஸ்காட் கலாசாரத்திலிருந்து ஒரு படி மேலே போய், அந்த காஸ்ட்யூமுக்கு இன்னொரு காஸ்ட்யூம் அணிவித்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது ஜப்பானின் இந்த பழசும் புதுசும் கலந்த வினோத கலாச்சாரம்! 

சில சமயங்களில் உலக நிலைமை நமது கட்டுக்குள் இல்லாமல் எங்கோ போய்க்கொண்டிருக்க, எப்படி பிரச்சினைகளை சமாளித்து வாழ்வைத் திரும்ப நமக்குப் பரிச்சயமான சகஜ நிலைக்கு கொண்டு வருவோம் என்பது சரியாகப் புரியாதபோது, அடிமனதில் பயங்கள் பல படருவது மனித இயல்பு. அதிலும் கொரோனா போன்ற கண்ணுக்கே தெரியாத வில்லனை எப்படி வீழ்த்தப்போகிறோம் என்று மனது கிடந்து உழலும் போது, அந்தப் புரிபடாத பயங்களுக்கும், கவலைகளுக்கும் பதில் சொல்லி, அவற்றை எதிர்த்து நின்று சண்டையிட்டு நம்மைக் காப்பாற்ற, நமக்கு முழுதும் புரியாத இன்னொரு அமானுஷ்ய சக்தி இருக்கிறதென்று நம்ப முடிந்தால், மனித மனங்களுக்கு, இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கூட அத்தகைய நம்பிக்கை இதமாக இருப்பதாகத்தான் தெரிகிறது. அந்த மானிட இயல்புகளும், பாதுகாப்பைத் தேடும் பழக்கங்களும் வழங்கிலிருக்கும்வரை அமாபி போன்ற யோகாய்களும், அதன் நவநாகரீக மாடல்களான பல்வேறு மாஸ்காட்களும் இவ்வுலகில் நீடூழி வாழும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை!

6 Replies to “யோக்காய்”

 1. தற்போதெல்லாம் இங்கு கல்யாண மண்டபங்களில், பெரிய ஜவுளிக் கடை போன்றவற்றில் வரும் குழந்தைகளை மகிழ்விக்க நிறுத்தப்படும் கார்ட்டூன் பொம்மை வேடமணிந்த (மனித) பொம்மை சார்ந்து, யோக்காய் என இத்தனை செய்திகளா. சிறப்பாய் உள்ளது. வியப்புடன் வாழ்த்துக்கள்.

 2. மிகவும் மெனக்கெட்டு தகவல்களை திரட்டி எழுதப்பட்ட கட்டுரை. கடைசி பத்தி அருமையான விளக்கத்தையும் (எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான விளக்கம்) அளிக்கிறது.
  அருமை.

 3. நவீன யோகாய் மிகவும் லாபகரமானது.
  “போக்கேமொன்” உரிமையின் மதிப்பு எவ்வளவு? ~பில்லியன் டாலர் !
  கம்ப்யூட்டர் விளையாட்டு பிற தொழில்நுட்பங்களில் உள்ள மின்னணுவியல் கனக்‌ஷனில் பல பில்லியன் டாலர்கள்.
  எனக்கு பிடித்த யோகாய் கப்பா (kappa). இது sake-குடிபோதையில் தந்திரங்களை விளையாடும் பச்சை நிற தவளை போன்ற உயிரினம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.