மொழி

நாகரத்னத்திற்கு அவன் கண்களைப் பார்த்தபொழுது பயமாக இருந்தது. ‘என்னானு என்னைப் பாக்காறான்னு புரியலியே. சாப்பிட வாறீயான்னுதானே கேட்டேன்.’ சோஃபாவில் உட்கார்ந்திருந்த அவனைப் பார்த்து கேட்டாள்,

“டி வி ல என்னப்பா பாக்கறே? பாட்டிக்கு சொல்லுப்பா! இது என்னாது? மிருகமா இல்லை மெசினா? பயங்கரமா இருக்கு பாக்க”  இந்த முறை அவன் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. பொதுவாக அவள் பேசும்போது அவன் அவள் பக்கம் பார்ப்பதில்லை.

திடீரென்று  முகத்தை கோணலாக்கி ஏதோ சத்தமாக கத்தினான். ‘புரியலையே என்னா சொல்றான்?’ கையை வேகமாக அசைத்து அவளை தள்ளிப்போகுமாறு சைகை செய்தான்.

“ஓ! டி வியை மறைக்கறனா?”

மாடியில் துணி துவைக்கும் இயந்திரத்தில் துணியை மாற்றிவிட்டு வந்த ராமனாதன், ”என்னம்மா நாகரத்னம்! என்ன பாட்டியும் , பேரனும் வம்பு வளக்கறீங்களா?” எனக்கேட்டார். 

“என்னத்தை வம்பு வளக்கறது போங்க! அவன்தான் என்னோட பேசவே மாட்டேன்றானே!”

“இல்லம்மா ! அவனுக்கு நாம பேசறது புரியலயில்லை! அதான்!”

“ஏங்க ஒரு குழந்தைக்கு தாய் பாசை கூடவா தெரியாம போகும்? என்னத்தைச் சொல்ல? சரி நீங்க இங்கிலீஸ்ல சொல்லுங்க, சாப்பிட வரச்சொல்லி…”

“அப்பிடி பாத்தா நா பேசற இங்கிலீஸ் கூட அவனுக்கு அவ்வளவா புரியலமா”

“இங்கிலீஸ் உலகம் பூரா ஒண்ணுதானுங்க! அது ஏன் புரியாது?”

“நம்ம தமிழையே எடுத்துக்க , மதுரையில ஒரு மாதிரி, திர்னவேலியில ஒரு மாதிரி, மெட்றாஸ்ல வேற மாதிரி இருக்கில்ல !  அது மாதிரி தான் இங்கிலீஸும்! நா பேசறது இந்த ஊர்ல பேசற மாதிரி இல்லயில்லை?”

“ஆமா!  இவங்க எல்லாம்  பல்லு விளக்காத மாரி கொள கொளன்னு பேசறாங்க!   என்ன பாசையோ? இந்த பிள்ளையை பேரு சொல்லிக் கூப்பிடக் கூட முடியலையே !  இந்த கொடுமையை எங்க போய்ச் சொல்ல? வாயில நுளைய மாட்டெங்குது  அப்படி ஒரு பேரு வைச்சுருங்காங்க!

எனக்கெல்லாம் பாருங்க , அந்த காலத்துல பெரியார்  வந்து பேர் வச்சாரு. அவர் வந்து வைக்கணும்னு எனக்கு எட்டு மாசம் வரைக்கும் பேரே வக்கல! பாப்பா, கண்ணு அப்படி கூப்பிட்டுக்குவாங்க. எங்க ஊர்ல ஒரு மீட்டிங்குன்னு பெரியார் வந்தாரு! எங்க அப்பா ஊர்ல, கச்சியில முக்கியமான ஆளு! அவரு  பெரியாரு கையில என்னையைக் குடுத்து பேர் வையுங்கனு  சொல்லிக் கும்பிட்டாரு! அவருதான் எனக்கு நாகரத்தினம்னு பேர் வச்சது. அருமையான பேரு! போட்டோ கூட ஊர்ல இருக்குது பாருங்க!”

“ஏம்மா! எங்கிட்டயே இதை எத்தனை தரம் சொல்லுவ!”

“அவன்கிட்ட இதையெல்லா சொல்லணும்ட்டு  ஆசை. . “

“இப்பதானே ஆறு வயசாவுது.  என்ன புரியப் போவுது? பெரிய பய ஆன அப்புறம் சொல்லிக்கலாம்.  இப்ப சாப்பிடக் கூப்பிடறேன்! சரியா?”

அவர் சிரித்துக் கொண்டே போய் அவன் அருகில் அமர்ந்து ஏதோ சொன்னார். அவன் டி வி யிலிருந்து கண்ணை எடுக்காமல் தலையை இல்லை என்பதுபோல் ஆட்டினான். கெஞ்சுவதுபோல மறுபடி சொன்னார். அவன் நீளமாக பதிலளித்தான்.

“என்னாவாம்?”

“சாப்பிட வரானாம்! டி வி பாத்துக்கிட்டேதான் சாப்பிடுவானாம்!”

“ஐயோ! அவங்க அம்மா திட்டுவாளே சோஃபாவில உக்காந்து சாப்பிட்டா”

“இல்ல! இல்ல! டேபிள்ல உக்காருவான், ஆனா டிவியை பாத்துக்கிட்டு”

“பரவாயில்ல! சாப்பிட்டா சரி!”

‘எனக்கும் இங்கிலீஸ்  கொஞ்சம் கொஞ்சம் தெரியத்தான் செய்யுது,  என்ன, நிறைய  இங்கிலீஸ் வார்த்தங்க பேசையில மறந்திடுது, பேசிட்டு அவங்க போன பிறகு இப்படி சொல்லியிருக்கலாம் இல்லன்னு தோணுது.  எனக்கு நாலாப்புலயே இங்கிலீஸ் சொல்லிக் கொடுத்தாங்களே! ஏ, பி , சி , டி எல்லாம் நல்லா எழுதுவேனே! செல்லம் டீச்சருக்குக் கூட என்னைய ரொம்ப பிடிக்கும்! 

அம்புட்டு பிள்ளைக இருக்கற வகுப்பில ,வாரத்தில ரண்டு நாளு காய் வாங்கிட்டுப் போகையில எல்லாம் என்னைத்தானே அவங்க வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போவாங்க. அவங்க பக்கத்தில காய் பையை தூக்கிட்டு நடக்கையில என்கூட படிக்கற பிள்ளைக யாரும் பாக்கறாங்களான்னு பாத்துகிட்டே போவேன். யாரும் பாக்கறங்கான்னா டீச்சர் கிட்ட அவங்க சேலையை தொட்டுகிட்டு சத்தமா பேசிகிட்டே போவேன். ம்…. அதெல்லாம் ஒரு காலம்!

ஒரு நா அவங்க என்னை வகுப்புக்கு முன்னாடி வந்து நிக்க சொல்லிக் கூப்பிட்டாங்க! ! ரொம்ப பெருமையா இருந்திச்சு! எல்லாரையும் திரும்பி திரும்பி பாத்துக்கிட்டே முன்னாடி போய் நின்னேன். வகுப்புக்கு முதுகை காட்டி நில்லுன்னாங்க. ஒண்ணும் புரியல. சரின்னு நின்னேன். அவங்க கையிலிருந்த பிரம்பால என் தலையைத் தொட்டுக்காட்டி” திஸ் இஸ் ப்ளவர்” என்றார்கள். எங்க அம்மா அன்னைக்கு தலை நிறைய மல்லிகைப்பூவை வச்சு அனுப்பிச்சுருந்தாங்க!

எனக்கு பெருமையாவும் , ரொம்ப சிரிப்பு சிரிப்பாவும் இருந்திச்சு!

வீட்டுல வந்து எங்க அம்மாகிட்ட “அம்மா இங்கிலீஸ் பேசறேன் கேளுங்க”ன்னுட்டு

“திஸ் இஸ் ப்ளவர் ,திஸ் இஸ் டேபிள், திஸ் இஸ் பென், திஸ் இஸ் புக்” வரிசையா சொன்னேன் . அம்மாவுக்கு  சிரிப்பு தாங்கலை “என்னடி நாகு! இம்புட்டு அளகா இங்கிலீஸ்  பேசற! இம்புட்டு நிறைய பேசற? ஏ அப்பா!” அன்னைக்கு சாயங்காலம் அவளுக்கு திருஸ்டி சுத்திப் போட்டுச்சு! பாவம் அம்மா!

இப்பவும் அம்மா இருக்காங்க,பெரியண்ணன் வீட்டுல இருக்காங்க! பேச்சே குறஞ்சு போச்சு!சும்மா உக்காந்துகிட்டு எங்கயோ வெறிச்சு பாத்துகிட்டு இருப்பாங்க. ஊருக்குப் போய் அம்மாவை ப் பாக்கையைல  கேக்கணும், இதெல்லா நினைப்பிருக்கான்னுட்டு. இந்த ஊர்ல பாத்த கதையும் , இங்க பட்ட கதையும் சொல்லணும்! பேசறதைக் கேட்டுக்கிடுவாங்க. அருமையா சட்னு  ஏதாவது ஒரு வார்த்தை கரெக்டா சொல்லிப் போடுவாங்க.

இங்க வந்து நம்மளை ஒண்ணும் தெரியாதவனு நினைக்கறாங்க! எனக்கு தெரிஞ்ச எம்புட்டோ விஷயம் இவங்களுக்குத் தெரியாதில்லை!’ 

நாகரத்னம் வெயிலுக்காக வீட்டுப் பின்புறம் இருந்த மர மேடையில் அமர்ந்துகொண்டு தனக்குள்ளாகவே பேசிக்கொண்டாள்.

மரப்பலகை வேலியிலிருந்து அணில் ஒன்று குதித்து, உட்கார்ந்த வாக்கில் எதையோ தின்றது.அங்கும் இங்கும் மணி கண்களை உருட்டிப் பார்த்தது.

“என்னா பாக்கறே? இந்த ஊர்க்காரங்க மாரியே நீயும் நல்லா ஓங்கு தாங்காதான் இருக்கே! எங்க ஊர் அணிலுக்கு மூணு மடங்கு சைசு இருக்க!!  என்ன எங்க ஊர் அணிலுக்கு  ராமர் கையால தடவின தடம் மூணு கோடு இருக்கும், இங்க அவரு வல்லை போல, அதான் உம் முதுகில கோட்ட காணும்! உனக்கு நா பேசற தமிளு புரியுதா?” 

அணில் சரசரவென மர வேலியில் ஏறி மரத்தில் மறைந்தது. ‘நம்ம ஊரு அணில் இங்க வந்தா அது பேசையில இந்த ஊரு அணிலுக்கு புரியுமா? அணிலுங்க எல்லா இடத்திலயும் ஒண்ணு போல தானே ‘சுவிங்க் சுவிங்க்..’ங்குது! புரியும்தான் நினைக்கேன்! கதிரு கிட்ட கேக்கணும்! ‘

பக்கத்து வீட்டு சீனாக்கார அம்மா அரை டவுசர் போட்டுக்கொண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். இவளைப் பார்த்து கைகளை உயர்த்தி “ஹை” என்றாள். இவளும் கைகளை உயர்த்தி “அய்” என்றாள்.அவர்களை மாதிரி தனக்கும் பண்ணத்தெரிந்தது பற்றி சிரித்துக்கொண்டாள்.

“சாப்பிட்டீங்களா” என்று கேட்கலாம் என நினைத்தாள்.

சாப்பாடுக்கு ஃபுட் எனத்தெரிந்தது. அதை எப்படி வார்த்தையாக சொல்வது என யோசித்தாள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து தன் கையைக் குவித்து  வாய்க்கு அருகில் இரண்டு , மூன்று முறை  கொண்டுபோய் ஆயிற்றா என்ற பாவனையில் தலையை ஆட்டினாள்.

அவள் “வாட்”என்பது போல ஏதொ சொல்லிவிட்டு பட படவென்று  கோபமாக ஏதோ சொல்வது போல இருந்தது. முகம் சிவக்க உள்ளே தட் தட் என்று சத்தம் எழ சென்றாள். நாகரத்னத்திற்கு கொஞ்சம் பயமாக இருந்தது.

என்ன ஊர்டா இது?  சாப்பிட்டுட்டியான்னு   கேட்டா காச் மூச்னு கத்தறாங்க. அவளும் உள்ளே போய் கதவைச் சாற்றிக்கொண்டாள். கொஞ்சம் பதட்டமாக இருந்தது.

சாயங்காலம் கதிர் ஆஃபீஸிலிருந்து வந்தவுடன்  அவனுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு , ”கதிரு, இன்னிக்கு  ஒண்ணு நடந்திச்சுப்பா. மனசுக்கு கொஞ்சம் பதட்டமா இருக்குடா தம்பி! பயமாக் கூட இருக்கு!” என்றாள்.

கதிர் சாப்பிடுவதை நிறுத்தி “என்னம்மா! பதட்டப்படாம சொல்லுங்க. எதுக்கும்மா பயப்படறீங்க?” என்றான்.

அவள் எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

“உங்களுக்கு அடி, கிடி எதும் படலையே?”

“இல்லப்பா! இங்க பக்கத்து வீட்டு சீனாக்கார அம்மா இருக்கில்லை. அது தோட்டத்துல வேலை செஞ்சிட்டிருந்திச்சு.  என்னைப் பாத்து கையைக் காட்டிச்சு. நானும் காட்டினேன். அப்பறம் சாப்பிட்டியான்னு கேட்டேம்பா, கோவமா பாத்துட்டு என்னவோ கத்திட்டு உள்ளே வேகமா போயிடுச்சு”

கதிர் கையைக் கழுவிக்கொண்டே “ சாப்பிட்டயான்னு கேட்டதுக்கு கோவிச்சுக்கிட்டாங்களா? ஏன்?” என்றான்.

“அதாம்பா, தெரியல!”

“என்னான்னு கேட்டீங்க?”

“சாப்பிட்டீங்களாந்தாம்பா கேட்டேன்”

“இல்ல! என்ன வார்த்தை சொல்லி..?”

“சாப்ட்டீங்களான்னு எப்பிடி இங்க்லீஸ்ல கேக்கணும்னு மறந்திடுச்சு. இந்தா இப்பிடி சைகையில கேட்டேன்.”

“ஓ…”

“என்னா?”

“இல்லம்மா, நம்ம ஊர்ல சில சைகைக்கு  சில மாதிரி அர்த்தம் இருக்கு! இவங்களுக்கு  , சீனாக்காரங்களுக்கு அது எதுனா தப்பான அர்த்தமா இருக்குமோ என்னவோ? தெரியலயே!. “

“சாப்பாட்டு சைகையில என்னா அர்த்தம் இருக்கப் போவுது?”

“என்னம்மா நீங்க? அவங்க மொழி வேற , பழக்க வழக்கம் வேற! கலாசாரம் வேற!.  அவங்க ஊர்ல அதுக்கு என்ன அர்த்தமோ? யாரு கண்டா? விடுங்க! நா  அந்த அம்மா கிட்ட பேசிக்கறேன் ! பாத்துக்கறேன்!  விடுங்க! “

நாகரத்னத்திற்கு அவன் முகத்தைப் பார்த்தால்  அந்த சைகைக்கு அவனுக்கு அர்த்தம் தெரியும்போல என்று தோன்றியது.

கதிர் அவர்களை பார்க்கில் விட்டுவிட்டு  மளிகை சாமான்கள் வாங்க கடைக்குப் போனான். நாகரத்னத்திற்கு அந்த சித்திரைத் திருவிழா பொருட்காட்சி மைதானம்  மாதிரி இருந்த பெரிய கடையில் நடக்க கஷ்டமாக இருந்ததால்   அவள் அங்கு போக விரும்பமாட்டாள். தவிர இந்த பார்க்கில் அவளை மாதிரியே அமெரிக்கா வந்திருக்கிற நிறைய அப்பா அம்மாக்கள் நடப்பதற்கு வருவார்கள்  என்பது அவளை சாயங்காலங்களை  எதிர்பார்க்கவைத்தது. சும்மா பெஞ்சில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாலே பொழுது போய்விடும். சமயங்களில் யாராவது பேசவும் கிடைத்துவிடுவார்கள் என்பது அன்றைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

வழக்கமாக பார்க்கிற கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுகிற தெலுங்கு அம்மா, தமிழ் நன்றக பேசுகிற கன்னடத்துப் பெண் யாரையும் காணோம் . 

சேலையை தலையைச் சுற்றி வருகிற மாதிரி கட்டிக் கொண்டிருந்த இந்திக்கார அம்மா அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அவளைப் பார்த்து சிரித்தாள். அவளும் சிரித்தாள்.

நன்றாக இருக்கிறீர்களா என்பது மாதிரி அவளின்  பருமனான வெண்ணிற கைகளை அசைத்துக் கேட்டாள்.

“ ஆமா அம்மா , நீங்க எப்படி இருங்கீங்க?”

அவள் எதோ சொன்னாள், அதில் மதராசி என்ற வார்த்தையைக் கேட்டு “இல்லம்மா! நாங்க  இப்ப மதுரையில இருக்கம்!  மதராஸ் போயிருக்கோம் மூணு , நாலு வாட்டி .எங்க சொந்தக்காரங்க வீட்டு விசேசங்களுக்குப் போயிருக்கோம் .  அங்கே பெரிய கடலு இருக்கு பாத்துருக்கீங்களா, எத்தினி சனம் அங்க வந்து பொழுதன்னிக்கும் உக்காருது” என்றாள்.

இந்திக்கார அம்மா தலையை ஆட்டினாள். 

பின்னர் ஏதோ கேட்டாள். இவள் என்ன சொல்வது என யோசித்தாள்.

அதற்குள் அங்கு நடந்து கொண்டிருந்த தன் பெண்ணிடம் அந்த பெண்மணி ஏதோ இந்தியில் கேட்டாள். அவள் நடந்துகொண்டே” டாட்டர்”  என்று கத்தி சொன்னாள்.

இவளிடம் “டாட்டர்” என்று கேட்டு கைகளை வீடு மாதிரி சைகை செய்து கேட்டாள். 

போன வாரம் கதிர் சினேகிதகாரங்க வீட்டுல பிறந்த நாள் விழாக்குப் போனபொழுது ஒரு டாக்டர் பொண்ணு வந்திருந்தது. இவளிடம் ஆன்டி, ஆன்டி என்று அன்பாக பேசியது. “ டாக்டரா இருந்துகிட்டு இவ்வளொ நல்லா தமிழ் பேசறியேப்பா” என்று இவள் கேட்டபோது சிரித்துக்கொண்டே “டாக்டரா இருந்தா என்ன ஆன்டி , நாங்க தமிழ்க்காரங்கதானே? தமிழ்தானே பேசணும்” என்றது. இவளுக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடித்துப் போய்விட்டது. யாரிடமோ தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையைக் காண்பித்து “என் டாட்டர்” என்றது அந்த டாக்டர் பொண்ணு. டாக்டர், டாட்டர் என்று இவள் மாற்றி மாற்றி சொல்லிப் பார்த்துக் கொண்டாள். அது இப்போது கை கொடுத்தது.

டாட்டர் என்றால் பெண் என்று புரிந்துவிட்டது என்று சந்தோஷமாக இருந்தது. பெண் வீட்டுக்கு வந்திருக்கியா என்று கேட்கிறார்கள் .

இவள் தலையை இல்லை என்று அசைத்தாள்.  பையனுக்கு இங்கிலீசில் என்ன சொல்வது என்று சட்டென்று மறந்து விட்டது. யோசித்துப் பார்த்ததில் ஆம்பிளைப் பயல பாய்னு சொல்லுவாங்க என நினைவு வந்தது.  அது பரவாயில்லை என்று முடிவெடுத்து “பையன்…..பாய், பாய் ( ப வை கொஞ்சம் அழுத்தினற்போல் சொன்னாள்) வீட்டுக்கு வந்திருக்கோம்! எங்க வீட்டுக்காரர் வாக் “ என்று அவரைக் காட்டினாள். அந்த அம்மா” பாய்?” என்று கொஞ்சம் குழப்பமாக பார்த்துக்கொண்டே கேட்டார்.

இவள் “ம்” என்று தலையை ஆட்டி நாம சரியா உச்சரிக்கலையோ என்ற சந்தேகத்தில் “ ம்.. பி ஓ ஒய் , பாய்! பாய்” என்றாள். இம்புட்டு வருஷம் போயும் மறக்கலை பாரு நானு என்று நினைக்கையில் முகத்தில் பெருமை கலந்த சிரிப்பு வந்தது. 

அந்த அம்மா தலையை ஆட்டி அச்சா! என்றாள். பின் பெஞ்ச் உயரத்திற்கு கையை கிடை மட்டமாக காண்பித்து ,  பின்னர் இருக்கிறதா என்பது மாதிரி கையை சாடை செய்தாள். குழந்தை இருக்கிறதா என்று கேட்கிறாள் என்றுபட்டது.   தூரத்தில்  விளையாடிக்கொண்டிருந்த பேரனைக் காண்பித்து “பையனோட பையன்… பாயோட பாய்” என்று  சொன்னாள். 

பின்னர் ஏதோ நினைத்துக்கொண்டவளாக, 

“ பேசவே மாட்டான் ம்மா! நோ டாகிங்க்!” சொல்லும் போதே அழுகை வந்தது.

கையால் உதடுகளைத் தொட்டு  இரு கைகளை விரித்து இல்லை என்பதாக சொன்னாள். சொல்ல சொல்ல கண்ணில் நீர் வந்தது.

இந்திக்கார அம்மா அவளை இரக்கம் ததும்பப் பார்த்து   அவள் தோளின் மேல் கையை வைத்து நிறைய பேசினாள், நடுவில் பகவான் என்று வார்த்தை காதில் விழுந்தது.  கையை வேறு மேல் பக்கம் காண்பித்தாள்.  மதுரையில் அவர்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் அய்யர் வீட்டு அம்மா அடிக்கடி சொல்லுவது “பகவான் இருக்கார்டி நாகரத்னம்! உன் நல்ல மனசுக்கு ஒரு கொறையும் வராது” . அது ஞாபகம் வந்தது.

“ஆமாம்மா! நம்ம எல்லாரையும் அந்த கடவுள்தாம்மா காப்பாத்தணும், நம்ம கையில என்ன இருக்கு? நம்ம பேரபிள்ளை நம்ம கிட்ட பேசி பளக மாட்டேங்கிதேன்னுதான் கஸ்டமா இருக்கும்மா! என் பையன் நல்ல பையன்! அம்மா அம்மான்னு அவ்வளவு ஆசைம்மா என் கிட்ட.  அவங்க அப்பான்னாலும் உயிரும்மா! 

என்ன செய்ய இந்த பய ஒரு வார்த்தை பேச மாட்டேங்கு! அன்னைக்கு அத்தை  போட்டொ பாருடான்னு போன்ல காட்டறேன் . என் மக , திருச்சியில கட்டிக் கொடுத்திருக்கோம். நல்லா இருக்கா. மருமகன் நல்ல வேலை பாக்காரு. பாங்கில இருக்காரு. போனை வீட்டுல விட்டுட்டு வந்திட்டேன். இல்லைன்னா உங்களுக்குக் கூட காட்டியிருப்பேன். என்ன சொல்ல வந்தேன்? ஆங்க்……..  இந்த பய கிட்ட அத்தை போட்டோ காட்டறேன், இந்த பயலுக்கு அத்தைன்னா யாருன்னே தெரியல ! இப்படி ஒரு கொடுமை உண்டுமா?’ கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

விளையாடிக்கொண்டிருந்த பையன்களின் பந்து இவர்கள் காலடியில் விழுந்தது. பையன்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு சப்தமாக பேசிக்கொண்டே இவர்கள் இருக்குமிடம் வந்தார்கள். இவள் பேரனும் இருந்தான். அவன்தான் இருப்பதற்குள் உரக்கப் பேசி சண்டையிட்டான்.

நாகரத்னம் “ இதுதான் என் பேரன்” என்று கை காட்டினாள்.

இந்திக்கார அம்மா  ஆச்சர்யத்துடன் அவனைக் காண்பித்து  “ டாகிங்க்?” என்றாள்.

நாகரத்னத்தை செல்லம் டீச்சர் எப்பவுமே கெட்டிக்காரி என்பாள். அதில் நாகரத்னத்திற்கும் நல்ல உடன் பாடுதான் . இல்லையா பின்னே? உடனே புரிந்துகொண்டாள்.

தலையை வேகமாக ஆட்டி “இல்லை ! இல்லை!” என்று சொல்லிவிட்டு, “டாகிங்க், டாகிங்க். எஸ்.. எஸ்…. “என்று சொல்லி தலையை ஆமாம் என்பது போல் ஆட்டினாள்.

 அவனையும் தன்னையும் மாறி மாறிக் காண்பித்து அதன் பின்னர்“ நோ  டாகிங்க் “என்று தன்னை  நோக்கி கை காண்பித்தாள்.

அந்த அம்மாள்” ஓ! அச்சா! அச்சா!  “நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காண்பித்து புரிந்தது என்பது போல சொன்னாள் .

 பின்னர் நீளமாக பேசினார் அந்த அம்மா. இடையில் அவள் கைகளப் பிடித்துக்கொண்டாள். ‘இந்தம்மா என்னா நல்லா சொல்றாங்க, என்னிடம் ரொம்ப பிரியமா பேசறாங்க’

 அந்த அம்மாவின் முக பாவத்தையும், கைகள் அசைவையும் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்திக்கார அம்மா சொல்லிமுடித்துவிட்டு ஆறுதலாக  சிரித்தாள்.

“ஆமாம்மா! நீங்க சொல்றது சரிதான்.  இப்ப சின்னப்பையன் தானே! அதன் இப்ப பேசலை , பெரியவனா ஆனா அப்புறம் பேசுவான்.  இதுக்கு கஸ்டப்படக்கூடாது. நீங்க சொல்றது கரெக்ட்டுதான் .என்னா இடைக்கு இடைக்கு ஒரு மாதிரி இருக்கு. நீங்க சொல்ற மாதிரி சரியாயிடும்“ என்றாள் நாகரத்னம். அந்த அம்மாள் தலையை ஆட்டினார். 

நாகரத்னம் அந்த அம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு “ரொம்ப டாங்க்ஸ்! ரொம்ப டாங்க்ஸ்!” என்று சொல்லும் போது மறுபடி கண்ணீர் வந்தது. அதற்குள்  ராமனாதன் நடையை முடித்துக்கொண்டு இவளிடம் வந்தார்.  இந்திக்கார அம்மாவைப் பார்த்து வணக்கம் வைத்தார். அந்த அம்மாள் ஏதோ கேட்க  சிரித்துக் கொண்டே என்னவோ சொன்னார். அந்த அம்மாவும் சிரித்தார்கள். 

இவள்” என்ன ?” என்றாள். 

“இல்லை! இந்தியில பேச ஆரம்பிச்சாங்க! எனக்கு இந்தி தெரியாதுன்னு இந்தியில சொன்னேன். அதான் சிரிக்கறாங்க” என்றார்.

“நீ என்ன இம்புட்டு நேரம் பேசின, இவங்ககிட்ட? எதாச்சும் புரிஞ்சிச்சா? அவங்களுக்கும் நீ பேசறது எதும் புரிஞ்சிருக்காது” என்றார்.

“இல்லயே! நா சொன்னது எல்லாம் அவங்களுக்கு புரிஞ்சுச்சு. அவங்க சொன்னது எனக்கு அருமையா புரிஞ்சிச்சு! அம்புட்டு அளகா ஆறுதலா பேசினாங்க! மனசுக்கு நல்லா இருந்திச்சு” என்று சொல்லிவிட்டு அந்த அம்மாவைப் பார்த்து “இல்லீங்களா?”என்று கேட்டாள்.

அந்த அம்மா சிரித்துக்கொண்டே ஆமாம் என்பதுபோல் தலையை ஆட்டி அவள் கையைப் பிடித்து அழுத்தி விடை கொடுத்தார்.

மருமகள்  ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்திருப்பாள், அவளுக்கு இரவு சமையலுக்கு உதவ வேண்டும் என் நினைத்துக்கொண்டே தூரத்தில் வந்து கொண்டிருந்த கதிரைப் பார்த்து நடக்கத்தொடங்கினாள்.

மருமக நல்ல பொண்ணு.  அவங்க அம்மா அப்பாவுக்கு காரைக்குடி பக்கம்தான் சொந்த ஊரு. அருமையா தமிள் பேசுவா.  எப்பவும் இவளிடம் தமிளில்தான் பேசுவாள். ஆனாலும்  வெகு சில சமயங்களில் அவள் பேசுவது நாகரத்னத்திற்கு புரிவதில்லைதான்.

11 Replies to “மொழி”

 1. Poignant story, well told. Though there are language barriers in the both the relationships in question, in the case of the grandmother and the child, the real reason for the lack of communication is not one of language, but the empathy / cultural / generational gap …whereas even when conversing in completely different languages, Nagaratnam and the north Indian lady share a connection in meaning that is beyond words.

  1. Hats off to this wonderful story teller !
   Her stories have a unique native flavour, which anyone can easily relate to. This story is no exception.
   The beauty of a well narrated story lies in the visuals, your mind creates as you read the story. She excels in this.
   The struggle of the lady in the story to express herself to the other lady becomes your own struggle as she tries recollecting the appropriate words to convey her ideas.
   In such a short story, she conveys the travails of the elders, who are for brief periods displaced from their secure regions to alien lands.
   I loved the last part which delivers the essence of the story ; that love and fellow-feeling transcends the language barrier.
   Love is the ultimate language….
   My best wishes to her.
   I love her stories and would like to read all of them.

 2. Hats off to this wonderful story teller !
  Her stories have a unique native flavour, which anyone can easily relate to. This story is no exception.
  The beauty of a well narrated story lies in the visuals, your mind creates as you read the story. She excels in this.
  The struggle of the lady in the story to express herself to the other lady becomes your own struggle as she tries recollecting the appropriate words to convey her ideas.
  In such a short story, she conveys the travails of the elders, who are for brief periods displaced from their secure regions to alien lands.
  I loved the last part which delivers the essence of the story ; that love and fellow-feeling transcends the language barrier.
  Love is the ultimate language….
  I loved reading this story and look forward to reading other such entertaining stories by the author !

 3. My heartfelt thanks to everyone of you for your lovely comments !
  படித்ததோடு மட்டுமல்லாமல் நேரம் செலவழித்து இதற்கான எதிர்வினை ஆற்றியிருப்பது பெரிய விஷயம் !
  மேலும் எழுதவதற்கான சமிக்ஞை கிடைத்ததாகவே உணர்கிறேன்.

  மீண்டும்நன்றி

  மாலதி சிவா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.