மற்றவர்களின் வாழ்வுகள்

கற்பனை எப்போது அத்து மீறிய கவர்தலாகிறது?

ரிச்சர்ட்  ரூஸோ

(தமிழ்ச் சுருக்கம்: மைத்ரேயன்)

என் தோழி ஜென்னி பாய்லனும் நானும் மாலை விருந்துகளில் கதை அளப்பதில் மிக்க தேர்ச்சி பெற்றவர்கள். எங்களுடைய வீணாக்கப்பட்ட இளம்பருவத்தையும், கிறுக்குகள் நிறைந்த குடும்பங்களையும் பற்றிய கதைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் மகிழ்விப்போம். நாங்கள் இருவருமே எழுத்தாளர்கள் என்பதால், இந்தக் கதைகளில் சிறந்தவை திருடப்படும் ஆபத்து எப்போதுமே உள்ளது, அதனாலேயே பேசுபவரின் குரல் கொஞ்சம் ஓய்ந்தவுடனேயே, கேட்டுக் கொண்டிருப்பவர் ஒரு எச்சரிக்கை விடுப்பார்: இதைப் பயன்படுத்த உனக்கு ஒரு வருஷம்தான் கெடு. இப்படி நாங்கள் எச்சரிக்கை விடக் காரணம், அதற்குப் பிறகு அந்தக் கதை வேட்டைக்கு இலக்காகி விடும். இவை இலக்கியம் என்ற கணக்கில் கதைகள் ஆக இராது, ஆனால் மதுவினால் ஏற்பட்ட கிளர்ச்சியில் பேசப்படும் சம்பவங்கள்தான். அனேக நேரம் முழுக் கதையைக் கூட நாங்கள் சொல்லி இருக்க மாட்டோம், அது நேர்ந்த இடம் அல்லது சூழல் பற்றிச் சொல்லத் துவங்கி இருப்போம், ஒருக்கால் சக்தி மிக்க ஒரு பிம்பத்தை மட்டுமே வர்ணித்திருப்போம்.  ஜென்னி ஒரு தடவை தவறிப் போய் என்னிடம் அவ்வப்போது வந்து நீண்ட நாட்கள் தங்கி விட்டுச் செல்லும் தன் உறவினர் ஒருவரைப் பற்றிச் சொல்லி இருந்தாள். அவர் வரும்போதெல்லாம் அவர் வருவதற்குப் பல தினங்கள் முன்னரே, சில சமயம் பல வாரங்கள் முன்னதாகக் கூட, ஒரு பிரும்மாண்டமான பெட்டி வந்து இறங்கி விடுமாம்; இந்த விஷயம் எனக்கு அத்தனை உற்சாகம் கொடுத்ததால், அதை நான் எழுதிய ஒரு திரைக்கதைக்கு அடிப்படையாக ஆக்கி விட்டேன், அதுதான் பிறகு ‘கீப்பிங் மம்’ என்ற திரைப்படமாக வெளி வந்தது. (ஊஹூம், அதில் கிட்டிய பணத்தை நான் பகிர்ந்து கொடுக்கவில்லை.) எங்களுடைய இந்த பேசப்படாத ஒப்பந்தத்தில் அடிப்படை எண்ணம் என்னவென்றால், கதைகள் எழுத உதவும் கச்சாப் பொருளுக்கு யாரும் சொந்தக்காரரில்லை என்பதுதான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதும் ஓரளவு இதில் பங்கு வகிக்கிறது. நாங்கள் எங்களுடைய சிறப்பான விஷயங்களைப் பகிர, பரஸ்பரம் நம்பிக்கை உண்டு என்பதோடு, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருக்கிறோம் என்பதும் காரணங்கள்.

ஜென்னி தன் பாலடையாளத்தை மாற்ற முடிவு செய்தபோது அவள் இதைப் பகிர்ந்து கொண்ட வெகு சிலரில் நானும் ஒருவன். அவள் பால் மாற்றம் செய்யும் அறுவை சிகிச்சையைச் செய்து கொண்ட போது நான் அவளுடன் இருந்தேன். இதனால், கடந்த பத்தாண்டுகளில் பால்மாற்றம் அடையும் பெண்களின் வாழ்வைக் கவனிக்க அனேக ஒன்றிய பாலடையாளம் கொண்ட ஆண்களை விட மேலான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இருந்தபோதும் என் புனைவுகளில் எதிலும் நான் ஒரு பால்மாற்றம் பெற்ற பாத்திரத்தை கொணர்ந்ததில்லை. இதை நான் எப்படி அறிகிறேன் என்றால், நானே எனக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டிருக்கிறேன் என்றுதான். அதாவது எதைக் கடன் வாங்குவது என்பதிலும், எதைக் கற்பனை செய்ய எனக்கு முடியும் என்பதிலும் நான் இப்படிக் கட்டுப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த இரண்டையும் செய்ய எனக்கு உரிமை இல்லை என்று நான் வாதிட மாட்டேன், என் நட்பைக் கருதி நான் இப்படி சுயமாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்வேன்.

ஆனால் இப்படியே நான் எப்போதும் இருப்பதில்லை, அன்புள்ள உறவுகள் சம்பந்தப்படிருந்தாலும் கூட. நான் என் வாழ்வை நினைவு கூர்ந்து எழுதிய புத்தகமான ‘எல்ஸ்வேர்’ என்பதின் ஒவ்வொரு வார்த்தையையும் என் அம்மா வெறுத்திருப்பார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி நான் எழுத மாட்டேன் என்று நான் ஒருபோதும் உறுதி கொடுத்ததில்லை என்றாலும்- என் துவக்க கால நாவல்களில் இதை நான் ஏற்கனவே ஒருவாறாகச் செய்து விட்டிருந்தேன் – அவர் என் ‘எல்ஸ்வேர்’ புத்தகத்தை அவருக்கு நான் செய்த மோசமான நம்பிக்கைத் துரோகமாகத்தான் கருதி இருப்பார். அந்தப் புத்தகத்தை அவர் இறக்கும்வரை நான் எழுதவில்லை என்பதை அவர் ஒரு பொருட்டாகக் கருதி இருக்க மாட்டார், ஏனெனில் அவரை நேசித்த பலர் இன்னும் உயிரோடு இருந்தனர், அவர் அதனால் மிக்க துன்பமடைந்திருந்தார் என்ற போதும், aந்த ஒரு ரகசியத்தைத் தன் வாழ்நாள் முழுதும் அவர்களிடமிருந்தும் பாதுகாத்திருந்தார்: இதனால் அவர் அவ்வப்போது முழுதும் செயலிழக்கச் செய்யும் கவலைக்கு ஆளாவார், மேலும் எந்த சிகிச்சையும் பெறாததால், செயலறச் செய்யும் பீதித் தாக்குதலுக்கு ஆளாகி அவதிப்பட்டிருந்தார்.

நான் ‘எல்ஸ்வேர்’ புத்தகத்தை எழுதியதால், அவர் தான் எப்படி மற்றவர்களால் நினைவில் கொள்ளப்படவேண்டும் என்று எதிர்பார்த்தாரோ, அப்படி அவருடைய நண்பர்களோ, உறவினர்களோ அவரை நினைவு கொள்ள முடிந்திராது. இப்படி யார் செய்வார் என்று நீங்கள் கேட்கக் கூடும். என்ன சொல்ல, எழுத்தாளர்கள்தான் இப்படி எல்லாம் செய்வார்கள், அனேகமாக காகிதத்தில் பேனாவைப் பதிக்கும் ஒவ்வொரு தடவையும் அவர்கள் இப்படிச் செய்யக் கூடியவர்கள். தச்சர்கள் மரத்தையும், பசையையும், ஆணிகளையும் பயன்படுத்துவது போலவே, ஓவியர்களும், ஒளிப்படக் கலைஞர்களும், திரைப்படமெடுப்பவர்களும், இசைஞர்களும் போலவே கைவசம் என்னவெல்லாம் கிட்டுகின்றனவோ அவற்றை எல்லாம் பயன்படுத்தித்தான் புனைவுகளை எழுதுகிறோம். இந்த விஷயங்கள் இல்லாமல் நாங்கள் எதையும் செய்ய முடியாது. எதுவும் படைக்கப்படாது. ஃப்ளானரி ஓ’கானர் ஒரு முறை வாதிட்டார், எழுத்தாளர்கள் பயன்படுத்தும் விஷயங்கள் மிக எளிமையானவை- உலகில் எதெல்லாம் இருக்கிறதோ, எதை எல்லாம் புலன்களால் உணர முடிகிறதோ- அதாவது பாறைகள், மரங்கள், ஏரிகள், மற்றும், ஆமாம், மனிதர்கள் ஆகியவை. இதை மறுபடி சொல்வது பலனளிக்கலாம்: எழுத்தாளர்கள் மனிதர்களைப் பயன்படுத்துகிறார்கள். அது தவிர்க்கப்பட முடியாதது, தப்பிக்க வழியில்லாதது. எது முக்கியம் என்றால் எப்படிப் பயன்படுத்துகிறோம், என்ன நோக்கத்தோடு என்பனதான் முக்கியம்.

உதாரணமாக, இந்தப் பத்திரிகையில் 1998 இல் பிரசுரமான, ‘த ஹோர்ஸ் சைல்ட்’ என்ற என்னுடைய கதையின் நாயகியான, தன் 80களில் இருக்கிற மாடப் பெண் துறவியை எடுத்துக் கொள்வோம். இதில், ஸிஸ்டர் உர்சுலா, ஒரு படைப்பு எழுத்து பற்றிய வகுப்பில், அந்த வகுப்புக் காலமான சில மாதங்களூடே பிற மாணவர்களுக்குத் தன் வாழ்க்கைக் கதையைச் சொல்கிறார்: ஒரு விலைமாதுவின் மகளான தான் சிறுமியாக இருக்கையில் எப்படி ஒரு கன்னிமாடத்துக்கு அழைத்துப் போகப்பட்டு அங்கேயே விடப்பட்டு விட்டார்; அங்கே மற்ற குழந்தைகளால் மட்டுமல்ல, மாறாக அங்கிருந்த பெண் துறவிகளாலும் எப்படி விடாமல் கேலி செய்யப்பட்டார்; தான் மிக நேசித்த அப்பா, தான் வேலை ஒன்றைத் தேடி அடைந்ததும் வந்து அழைத்துப் போவதாக உறுதி கொடுத்திருந்த அப்பா வந்து தன்னைக் காப்பாற்ற வேண்டுமென எப்படிப் பொறுமையாகக் காத்திருந்தார் என்று விவரிக்கிறார். அது ஒரு கொடுமையான கதை, அது மேலும் தீவிரமான கொடுமையாக ஆனதற்குக் காரணம், ஸிஸ்டர் உர்சுலாவின் வேலைப்பட்டறையில் இறுதி நாளன்று, இன்னொரு மாணவர் அந்த மூதாட்டியான துறவி எதைச் சிறிதும் சந்தேகிக்கவில்லையோ அதை ஊகித்துத் தெரிந்து கொண்டு விடுகிறார்: அவருடைய அப்பா, தன்னைக் காப்பாற்ற வருவாரென அவர் எதிர்பார்த்திருந்த அந்த மனிதன், உண்மையில் அவருடைய அம்மாவுடைய தரகன், வேலை தேடப் போவதாக அவன் சொன்னது ஒரு பெரிய பொய். ஸிஸ்டர் உர்சுலாவின் மொத்த வாழ்விலும் அவர் தன் வாழ்வின் துன்பங்களுக்குத் தன் அம்மாவையே குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார், ஆனால் அவை இன்னொருவரின் பிழை.  அவர் எந்த அப்பாவைப் பெரிதும் நம்பிக் கொண்டிருந்தாரோ அந்த அப்பாவுக்கு அவர் எப்போதுமே கழித்துக் கட்டப்பட வேண்டிய ஒரு பொருள்.

என் முதல் சிறுகதைத் தொகுப்பு, அதன் தலைப்பும், ‘த ஹோர்ஸ் சைல்ட்’ தான்,  வெளியான பிறகு அதற்கான விளம்பரச் சுற்றுப்பயணத்தில் நான் இருந்த போது, அந்தக் கதை எத்தனை வலுவான தாக்கம் கொண்டிருந்தது என்று அறிந்து நான் வியப்பும், கிளர்ச்சியும் பெற்றேன். ஸிஸ்டர் உர்சுலா வாசகர்களின் மனதைப் பிளந்திருந்தார், என் மனதையும்தான். ஆனால் அந்தக் கதையின் இன்னொரு மையப் பாத்திரமான, நடுவயதுக்காரப் பேராசிரியர், அந்தப் படைப்பிலக்கியம் எழுதுவதைப் போதித்தவரின் பாத்திரத்துக்கு அத்தனை தாக்கமில்லை. அந்தப் பாத்திரத்தின் திருமண வாழ்க்கை சிதைந்து கொண்டிருந்தது, காரணம் அவர் வெளியில் பலரோடு பாலுறவு கொண்டிருந்ததுதான், அவருடைய தொழிலிலும் அவர் தேங்கிப் போயிருந்தார். அப்போது, நானும் நடுவயது நாவலாசிரியன், நானும் படைப்பிலக்கியம் எழுதுவது எப்படி என்று வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தேன், அதனால் வாசகர்கள் என்னிடம் நான் தான் அந்த எழுத்தாளரான பாத்திரமா என்று கேட்டபோது அது எனக்கு வியப்புத் தரவில்லை. நான் விவாகரத்து பெறப் போகிறேனா? என் எழுத்துத் தொழிலில் நான் தேங்கிப் போயிருக்கிறதாக நினைக்கிறேனா? இந்த மாதிரிக் கேள்விகளுக்கு நான் தளுக்காக நழுவுகிற பதில்கள் சொல்லி இருந்தேன், அந்தப் பதில்கள் பாதியாவது தீவிரமானவை. அவர்கள் ஏன் நான் தான் அந்தப் பெண் துறவியா என்று கேட்பதில்லை என்று கேட்டேன். ஏனெனில் நான் ஸிஸ்டர் உர்சுலா என்ற பாத்திரப் படைப்பு பற்றித்தான் மிகப் பெருமிதம் கொண்டிருந்தேன். அந்தப் பாத்திரத்தோடு ஆழ்ந்த உறவொன்றை மனதளவில் கொண்டிருந்தேன், இத்தனைக்கும் நான் ஒரு போதும் 80 வயது பெல்ஜியப் பெண் துறவியாக இருக்கப் போவதில்லைதான். ஆனாலும் அவருடைய கதையை நான் சொன்ன விதத்தில் பல வாசகர்களை அந்தப் பாத்திரத்தின் எதார்த்தத்தை நம்ப வைப்பதில் நான் வெற்றி பெற்றிருந்தேன். சரிதான், எனக்குத் தெரிந்து, அவர்கள் யாருமே 80 வயது பெல்ஜியப் பெண் துறவியாகப் போவதில்லை என்பது உண்மைதான். அதனால் அந்த கன்னிமாடத்தின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களில் நான் ஏதும் தவறிழைத்திருந்தால், நான் இன்னும் பாதுகாப்பான நிலையில்தான் இருந்தேன். சிஸ்டர் உர்சுலா விரிவாக, ஆழமாகத் தீட்டப்பட்ட பாத்திரங்களுக்கு உரிய வினோதமான எதார்த்தத்தில்தான் நிஜமாகத் தெரிந்திருந்தார். வாசகர்களுக்கு இந்தப் பாத்திரங்கள் கற்பனையின் ஒரு துண்டு என்பது நன்கு தெரியும், ஆனாலும் அவர்கள் இந்தப் பாத்திரங்கள் தம் நண்பர்கள் போலவோ, உறவினர்கள் போலவோ அவற்றைப் பற்றி அக்கறை செலுத்தினார்கள். ஸிஸ்டர் உர்சுலா அந்தக் கதையின் முதல் பகுதியில் தன் ரத்தம் வடியும் பாதத்தோடு நொண்டி நடக்கிறார், அந்தக் கன்னி மாடத்தில் அவர் நுழைகிற போது அவருடைய பாதங்களை விட இரு அளவுகள் குறைவான காலணிகளே அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன என்பது காரணம். அவருடைய கஷ்டம் பாத்திரத்தைப் படைத்த என்னையும், வாசகர்களையும் துன்பத்துக்குள்ளாக்கியது. அவர்களில் அனேகரும், தம் கால் அளவை விட இரு அளவுகள் குறைவான காலணியை அணிந்த துன்பத்தை ஒருபோதும் பட்டிருக்க வாய்ப்பில்லை, பெல்ஜிய கன்னி மாடத்தில் கைவிடப்பட்ட நிலையையும் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை. இப்படி ஸிஸ்டர் உர்சுலாவின் மீது திணிக்கப்பட்ட எதார்த்தத்தால் நாங்கள் எல்லாம் அவருடைய கற்பனையான கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தோம். ஆனால் எப்படி இதெல்லாம் நடக்கிறது? மாறாக, ஏராளமாகப் பகிர்ந்து கொடுக்கப்படும் எதார்த்தத்தால் அப்படி ஒரு பொங்கும் பரிவு எழும் என்று ஏன்  உறுதி தர முடிவதில்லை? இன்னும் சொன்னால், நிஜத்தில் கூடதிகமாகப் பகிரப்படும் அனுபவம் உணர்ச்சி பூர்வமான தொடர்பு உருவாவதற்குத் தடையாகக் கூட அமையலாம். உதாரணமாக, ‘த ஹோர்ஸ் சைல்ட்’ கதையை பெல்ஜியன் கன்னிமாடத்தில் உள்ள முதியோரான பெண் துறவிகள்தான் படித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம், இந்தக் கதைக்குக் கிட்டும் வரவேற்பு என்னவாக இருந்திருக்கும்? ஸிஸ்டர் உர்சுலா அவர்களுக்கு நிஜமானவராகத் தெரிந்திருப்பாரா? அல்லது அந்த மாடத்திலிருந்து அந்தப் பாத்திரத்தை நகைத்துத் தூக்கி எறிந்திருப்பார்களா, அப்படியே என்னையும் அங்கிருந்து வாரி எறிந்திருப்பார்களா? ஏனெனில், காரணம் உங்களுக்குத் தெரியாதா என்ன? மாடத்து வாழ்விலோ, ஒரு பெண் துறவியின் உடையிலோ அல்லது பெல்ஜியத்திலோ ஒரு நிமிடம் கூட கழித்திராத நபர், யார் இந்த நடுவயதான அமெரிக்க எழுத்தாளன்? நம்முடைய வாழ்வில் இத்தனை ஆணவத்தோடு நுழைந்து உலாவ அவருக்கு எங்கிருந்து எந்த உரிமையும் கிட்டியது? ஸிஸ்டர் உர்சுலாவின் கதை அவரால் சொல்லப்பட எந்த நியாயமும் இல்லை என்பதை அவர் ஏன் புரிந்து கொள்ளவில்லை?

இப்படி இந்தக் கதையைச் சொல்ல யார் உனக்கு உரிமை கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு, காலம் காலமாகக் கொடுக்கப்படும் ஒரு பதில் இது: படைப்பூக்கமுள்ள கற்பனை, அதுதான் ஒரு எழுத்தாளனின் தசை வலுவுள்ள கனிவுணர்வு. சரிதான், நான் நீங்கள் இல்லை என்பது தெரிந்ததுதான், என்று அந்தத் தர்க்கம் ஓடுகிறது, ஆனால் உங்களை அவதானிக்க நான் போதுமான அவகாசம் எடுத்துக் கொண்டிருந்தால், நீங்கள் உலகில் எப்படிப் புழங்குகிறீர்கள் என்பதை நான் படித்திருந்தால், நீங்கள் பேசுவதை நான் கவனமாகக் கேட்டிருந்தால், அப்புறம் காலப் போக்கில் என்னால் நீங்களாக இருப்பது எப்படி என்று கற்பனை செய்ய ஆரம்பிக்க முடியும்.  இந்த இடத்தில் “ஆரம்பிக்க” என்பதுதான் தெளிவாகவே ஒரு முக்கியமான சொல். ஏனெனில் படைப்பூக்கம் உள்ள கற்பனையைப் பயன்படுத்துவது என்பது, உங்கள் கற்பனையை அதன் போக்கில் திரிந்தலைய விடுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்றோ- அப்படி கட்டற்று கற்பனை செய்வது உங்கள் கடமை என்றோ- அடித்துப் பேசுவதைப் போல எளியது அல்ல. உங்களுடைய சொந்த அல்லது கேள்வியாகப் பெற்ற அனுபவங்களிலிருந்து (இது எனக்கோ அல்லது தெரிந்தவருக்கோ நடந்தது என்பனவற்றிலிருந்து), எத்தனை தூரம் ஒரு கதை விலகிப் போகிறதோ அத்தனைக்கு உங்களுடைய அறியாமையால் இப்படி எழும் இடைவெளியை இட்டு நிரப்ப முயற்சி செய்ய வேண்டியது மேலும் பெரிய கடமையாகிறது. விவரங்கள் எத்தனை சரியாக ஆக்கப்பட முடியுமோ அத்தனை தூரம் அவற்றை நேராக ஆக்குவது அவசியமாகிறது. இப்படி ஒரு பாடம் கற்க வேண்டி இருப்பதே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை போல இருப்பது கவனிக்கத் தக்கது: இப்படிப் பாடம் கற்க வேண்டி இராத அளவுக்கு அறியாமையின் கனம் அதிகமாக இல்லாத வேறு எழுத்தாளர்கள் வெளி உலகில் இருப்பார்கள், அவர்களின் சொந்த அனுபவங்களே இந்த கருப்பொருளை ஒட்டியதாக இருக்கும் என்பன நாம் ஊகிக்கக் கூடியனவாக இருக்கும்.

இங்கு ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஆராய்ச்சிகளோடு கூட, ஓர் எழுத்தாளருக்கு வேறு சில தொழில் உத்திகள் இருக்கின்றன, அவை இந்த நம்பகத்தன்மைப் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைக்க உதவும். உதாரணமாக, உங்களுடைய பாத்திரத்தின் கண்ணோட்டத்தில் கதை விரிவதாக நடத்தாமல், வெளியில் விலகி நின்று அந்தப் பாத்திரத்தைக் கவனிப்பதான கண்ணோட்டம் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அல்லது, உங்களைப் போன்ற ஒரு இடைநிலை பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவர் மையப்பாத்திரத்தை விளக்குவதாகக் கதையை உருவாக்கலாம். இப்படித்தான் கான்ராட் பயன்படுத்திய சார்ல்ஸ் மார்லோ, ஃபிட்ஸ்ஜெரால்ட் பயன்படுத்திய நிக் கார்ரவே, ராத் பயன்படுத்திய நேதன் ஜுக்கர்மான் ஆகிய பாத்திரங்கள் இருந்தன. அந்த நாள் ஒன்று வந்தால், நான் ஒரு பால்மாற்றம் பெற்ற ஒரு பாத்திரத்தை வைத்துக் கதை ஒன்றை எழுத விரும்புகிறேன், அப்போது இப்படி ஒரு உத்தியைத்தான் பயன்படுத்துவேன். ஜென்னியுடன் எனக்கிருக்கும் நட்பு அப்படி ஒரு பாத்திரத்தின் வழியே நான் கதையை நடத்த முடியும் என்று நினைக்கக் கூட என்னை அனுமதிக்காது (அப்படி ஒரு பாத்திரமாக நான் இருக்க நினைப்பதுமே கூடச் சாத்தியமாக இராது).

உங்கள் கதையின் மையப் பாத்திரத்துக்கும் உங்களுடைய சொந்த அனுபவத்திற்கும் அப்படி – வயது, இனம், பாலடையாளம், தேச அடையாளம், அல்லது தொழில் ஆகிய விதங்களில்- ஒரு பெரும் இடைவெளி இருக்கிறது என்றால் அதை நீங்கள் வெற்றிகரமாகக் கடந்திருக்கிறீர்கள் என்று எப்படி உறுதி செய்து கொள்வீர்கள்? அப்படிச் செய்யப் புறப்படக் கூட உங்களால் முடியுமா? இன்னும் எத்தனை கூடுதலான ஆராய்ச்சியை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும்? மேலே கண்ட மாதிரி உத்திகள், பிற கதைகளை எழுதிய உங்கள் அனுபவத்தோடு இணைந்து, உங்களைக் காப்பாற்றுமா? இதை நிச்சயமாகத் தெரிந்து கொள்வது மிகக் கடினம், ஆனால் ஸிஸ்டர் உர்சுலாவை மறுபடி நோக்குங்கள். அந்தப் பாத்திரம், 80களில் எழுதும் கலை பற்றி நான் போதித்த ஒரு வகுப்பில் பங்கெடுத்த ஒரு பெண் துறவியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை அறிந்தால் வாசகர்கள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். என்னுடைய கதாபாத்திரமான பெண் துறவியைப் போலவே இவரும் உள்ளூர் கதோலிக்க திருச்சபையின் நிர்வாகத்தால், நகரத்தில் ஆபத்து நிறைந்த ஒரு பகுதியில் மோசமான ஒரு பழைய வீட்டில் இருக்க வைத்திருந்த, அப்போது மூடப்படும் நிலைக்கு வந்து கொண்டிருந்த ஒரு பெண் துறவிகளின் அமைப்பில் அவர் இருந்தார். அவரே ஒரு முதியவர் என்றாலும், பெரும் உருவும், வலுவான உடலமைப்பும் கொண்ட அவர்தான் அந்தப் பெண் துறவிகளின் கூட்டத்தில் வேறு எவரையும் விட வயது குறைந்தவர். அங்கு தேக நிலை மோசமாக இருந்தவர்களைப் பராமரிக்கும் வேலை அவருடையதாக இருந்தது. ஸிஸ்டர் உர்சுலாவைப் போல அவரும் தான் தன் வாழ்க்கையை வெறுத்ததைச் சற்றும் மறைக்கவில்லை, தன் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் சேர்த்தே வெறுத்தார். அவர் இத்தனை வெறுத்த ஒரு அமைப்பில், தனக்கு வாழ்க்கை வேறெந்த வாய்ப்புகளையும் தராது என்ற முடிவுக்கு வந்த பின்னரே அவர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு கால் அளவில் இரண்டு அளவுகள் குறைந்த காலணிகள் கொடுக்கப்பட்டு அவற்றை அணியும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டாரா? ஸிஸ்டர் உர்சுலா செய்தது போல அவர் தன் காலணியில் ரத்தம் சிந்தினாரா? வயதான பிறகு அவர் நொண்டி நடக்க ஆரம்பித்தாரா? அவர் வெறுத்த அந்த மாடத்தை எரியூட்டி அழிக்க வேண்டுமென அவர் விரும்பினாரா? அவர் கொடுத்த எந்தத் தகவல்களை நான் கவர்ந்து கொண்டேன், எவை நானாகக் கற்பனை செய்தவை என்பதெல்லாம் இப்போது எனக்கு நினைவில்லை. (இனி ஒரு பொருட்டில்லாத தகவல்களை மறக்கும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு, அவர்கள் அதைச் செய்யவும் செய்கிறார்கள். நான் எழுதிய ஒரு கதையைப் பற்றி என்னை ரப்பர் குழாய்களால் அடித்துத் துவைத்து எனக்கு என்ன தெரிந்திருந்தது, எப்போது என்றெல்லாம் கண்டு பிடிக்கலாம், ஆனால் நேற்று எனக்கு எதெல்லாம் மிக முக்கியமானவையாகத் தெரிந்தனவோ, அவற்றை இன்று நான் மிக மகிழ்வோடு மறந்திருப்பேன்.) என்னால் நிச்சயமாகச் சொல்லக் கூடியதெல்லாம், அந்தக் காலணிகள் பிரபலமான எந்த தொலைக்காட்சி காமெடியனிடமிருந்தும் நான் திருடவில்லை.

(மொழி பெயர்ப்பாளர் குறிப்பு: பீ வீ ஹெர்மன் என்ற பாத்திரத்தை ரூஸோ சொல்கிறார். )

நான் சொல்ல வருவது இதுதான், ஸிஸ்டர் உர்சுலா என்னோடு ஒப்பிட்டால் எத்தனை வித்தியாசமானவராக இருந்தாலும், அவரைப் பற்றிய எல்லா விவரணைகளையும் நான் இட்டுக் கட்டத் தேவை இருக்கவில்லை. அந்தப் பாத்திரம் எந்த நிஜ வாழ்வு மனிதரை அடிப்படையாகக் கொண்டதோ, அந்த நபரைக் கவனமாக அறிய எனக்கு வாய்ப்பு கிட்டியது. அவருடைய விளக்கத்தை நான் கவனமாகப் படித்திருந்தேன், ஒவ்வொரு தவணைக்கும் பிறகு, அவரும் நானும் சந்தித்து அந்த எழுத்துப் பிரதியையும் மற்ற மாணவர்கள் வகுப்பில் அதைப் பற்றி என்ன சொன்னார்கள் என்பதையும் பற்றி உரையாடினோம்.  என் கதையில் விவரிப்பவர் செய்தது போலவே, நானும் அவரிடம் என் எழுதுவது பற்றிய வகுப்பில், பல விஷயங்களை நாம் கதையாகக் கட்டலாம்- பொய் கூடச் சொல்லலாம் (ஐயோ!), அந்தப் பொய் ஒரு மேலான உண்மைக்கு உதவியது என்றால்- என்று சொன்னேன் என்பது என் நினைவில் இருக்கிறது. அந்த ஆலோசனையை ஏற்க அந்த அபலை மனுஷிக்குத் தயக்கமாக இருந்தது என்பதை நான் கவனித்தேன்.  அந்த அரையாண்டில், வெளிஉலகில் அவர் எப்படி புகுந்து புறப்பட்டார் என்பதையும், மற்ற மாணவர்களின் கதைகளை அவர் எப்படிக் கடமையுணர்வோடு படித்து வந்தார் என்பதையும், அவற்றைப் படித்தபோது அவர் எப்படி குழம்பினார், மிகத் துன்பப்பட்டார் என்பதையும் நான் கவனித்தேன். அவர் எழுதிய வினோதமானதும் சில சமயம் உள்ளக் கிடக்கையை வெளிக்காட்டுவதுமான எழுத்து நடை கூட என் கதையில் புகுந்திருந்தது. வேறு விதமாகச் சொன்னால், அந்தப் பெண்ணை நான் கவனித்த விதத்தால் எனக்கும் அந்த புனைவிலிருந்த பெண் துறவிக்கும் நடுவில் இருந்த இடைவெளி ஓரளவு நிரப்பப் பட்டிருந்தது. ஸிஸ்டர் உர்சுலாவுக்கு எண்பத்தி ஐந்து வயது, எனக்கு நாற்பத்தி ஐந்து. அவர் ஒரு பெண் துறவி, நான்  இங்கிலிஷ் போதித்த ஒரு பேராசிரியர். அவர் யூரோப்பியர், நான் அமெரிக்கன்; அவர் ஏழை, நான் வசதியான நடுத் தர வாழ்வினன். இந்த வேறுபாடுகள் அத்தனை பொருட்டாக இல்லை. அதனால் நான் இலக்கை, தொல்லை ஏதும் இல்லாமல் அடைந்து விட்டேன் எனலாமா? அப்படிச் சொல்லி விட முடியாது.

நான் இதுவரை விவாதித்தது ஒரு கதையை எழுத எப்படி ஓரளவு தன்னைக் கடந்த நிலை வேண்டும் என்பது: உங்களுக்குத் தெரிந்ததற்கும், தெரியாததற்கும் நடுவெ உள்ள இடைவெளியைக் கடக்க எப்படி ஓர் பாலம் அமைப்பது, அல்லது சில நேரம் அது முடியாமல் போகும் என்பது. ஆனால் இறுதியில் இதை ஏன் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமானதாகிறது. இப்படி ஒரு கதையை ஏன் சொல்ல வேண்டும்? அந்தப் பெண் துறவி என் வகுப்பில் மாணவியாகப் பங்கெடுத்த போது அவருடைய கதையை நான் என்றாவது பயன்படுத்துவேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனக்குத் தெரிந்திருந்தது என்னவென்றால், எழுத்தாளர்கள் இதை அனேகமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள், அவர் என் ஈடுபாட்டைத் தூண்டினார் என்பதுதான். அனேக எழுத்தாளர்களைப் போல நான் எல்லாவற்றையும் இரண்டு பிரிவுகளில் பொருத்திக் கொள்கிறேன். இது கூச்சப்பட வேண்டிய பழக்கம், சுயநலத்தின் உச்சம், ஆனால் இது ஒரு விதமான வரிசைப்படுத்தல் முறை, ஏனெனில் எல்லாவற்றுக்கும் நாம் ஒரே மாதிரி கவனம் செலுத்த முடியாது, அப்படிச் செய்தால் நாம் கலைஞர்களாக இருக்கவும் முடியாது. காலப் போக்கில் நீங்கள், எது முக்கியம் என்பதை விட எது உங்களுக்கு முக்கியம் என்பதைக் கற்பீர்கள்.  எது கனியாகும், எது ஆகாது என்று அறிவீர்கள். அந்த வகுப்பை நான் நடத்திப் பத்தாண்டுகள் கழிந்த பின்னர்தான் நான் அந்தப் புனைகதையை எழுத முற்பட்டேன். நான் கவனித்துப் பார்த்த அந்த முதிய பெண் துறவி, என் புத்தியின் பின் பகுதியிலிருந்து தடுமாறி முதல் நிலைக்கு வந்தது ஏன் என்பது எனக்குத் தெரியாமலேயே அந்தக் கதையில் நுழையுமுன் பத்தாண்டுகள் கடந்து விட்டிருந்தன.

அவர் ஏன் அப்படிச் செய்தார்? வேறு யாருடைய கதையையோ எழுதாமல் நான் ஏன் அவருடைய கதையை எழுதினேன்? அவரைப் பற்றி அத்தனை விஷயங்களை நான் நினைவில் வைத்திருந்தேன் என்பதாலா? நான் தெரிந்து கொண்டிருந்த விவரங்கள் அப்படித் துவங்குவதற்கான சுயநம்பிக்கையை எனக்குக் கொடுத்தனவா? இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது எனலாம். ஆனால் கஷ்டமான ஒரு வேலையைத் துவங்கும்போது கொஞ்சம் மனதிடத்தை உணராதவர்கள் யார் இருப்பார்? ஆனால் எழுத்தாளர்கள்- அதிலும் குறிப்பாக நல்ல எழுத்தாளர்கள்- பதில்களை விடக் கேள்விகளாலேயே அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். எழுதுவதற்குத் தேவை விவரச் சேமிப்பும், அதில் கிட்டும் அறிவும்தான் என்றால் கலைஞர்களின் எல்லாச் சங்கடங்களும் மேன்மேலும் ஆராய்வு செய்தால் தீர்ந்து விடும்; கற்பனை என்பது கணக்கிலேயே வராது. எழுதுவதற்கு ஒரு எழுத்தாளரை உந்துவது எது என்றால், அது தன் விவர ஞானம் குறித்த அவரது தன்னம்பிக்கை இல்லை. மாறாக, அவர் தனக்கும் பாத்திரங்களாகப் போகிற நபருக்கும் (அல்லது நபர்களுக்கும்) இடையே சக்தி வாய்ந்த ஒரு பிணைப்பை உணர்கிறார், அந்தப் பிணைப்பு இடர்கள் நிறைந்த அந்தப் பயணம் மேற்கொள்வதைப் பயனுள்ளதாக்குகிறது.

என் மூளையின் பின்புறத்திருந்து முன்புறத்துக்கு அந்த முதிய பெண் துறவி ஏன் நகர்ந்தார் என்று நான் கேட்கையில், நான் உண்மையில் கேட்பது இதுதான்: அரியதான என் வாழ்க்கையில் தொண்ணூறு சதவீதம் முதல் கை அனுபவங்கள் சிறிதும் யோசனை இன்றியே குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்படுகிற போது, அவர் மட்டும் என் நினைவில் இருக்கும் அளவு முக்கியமானவராக ஏன் இருந்தார்? என் குணங்களும் நானுமே அவரிடமிருந்து மிகவும் வேறுபட்டிருந்த போதிலும், இந்தப் பெண்மணியின் கதை எப்படியோ என் வாழ்வில் குறுக்கிட்டது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதியில் தன் அப்பா தனக்காகத் திரும்பி வரக் காத்திருந்தார் என்பதும், நானும் என் பெற்றோர்கள் பிரிந்து விட்ட பின் இப்படியே காத்திருந்தேன் என்பதும் ஒரு காரணமா?  அவர் மற்ற சிறுவர் சிறுமியரால் கேலி செய்யப்பட்டாரென்பதும், நானும் அது போலவே தொல்லைப்பட்டேன் (எட்டாம் வகுப்பில் இப்படி இடரைச் சந்தித்துத் தாண்டிய, சராசரியான வேறெவரையும் போலத்தான் என் நிலையும் இருந்தது) என்பதும் காரணங்களா? வாழ்நாள் பூராவும் கதோலிக்கத்தைப் பொருத்தவரை விருப்பு- வெறுப்பு இழுபறி நிலையிலேயே இருவரும் இருந்தோம், அதை விட்டு விட இருவருக்கும் இயலவில்லை என்பதும் காரணங்களா? கொடுமை உலகில் இருக்கிறது, ஏனெனில் அதுவே தனி மகிழ்ச்சி தருகிறது, எந்த சமூக அமைப்பு இந்தக் கொடுமைகளைத் தடுக்க வேண்டுமோ, அதுவே அந்தக் கொடுமையை அனேக நேரம் ஊக்குவிக்கிறது என்ற சோகமான உண்மையை நாங்கள் இருவரும் அறிந்திருந்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருந்தோம் என்பதா? அல்லது நான் ஸிஸ்டர் உர்சுலாவின் கதையைச் சொல்ல முனைந்ததற்குக் காரணம், நான் அவர்பால் அன்பு செலுத்தத் துவங்கக் கூடும் என்று நான் சந்தேகிக்க ஆரம்பித்திருந்தேனா? வாசகர்களும் அப்படியே செய்யக் கூடும் என்று நான் நினைத்ததாலா? அவருடைய கதை ஒரே நேரம் மனதை ஈர்ப்பதோடு, அறிவு புகட்டவும் கூடும் என்று நினைத்ததாலா? உலகில் ஸிஸ்டர் உர்சுலா அளவுக்குத்  தாம் தனிமைப்பட்டு விடவில்லை என்று அவர்களை உணர வைக்கலாம் என்பதாலா?

வாசகர்கள் ஸிஸ்டர் உர்சுலா என்ற பாத்திரத்தைப் படைக்க எனக்கு உந்துதல் கொடுத்த பெண்மணியைப் பொறுத்து எனக்கு என்ன சமூகப் பொறுப்பு இருப்பதாக நான் உணர்ந்தேன் என்று கேட்கக் கூடும். அவர் கதையைப் பயன்படுத்த நான் அனுமதி கேட்டேனா? இல்லை, நான் கேட்டிருக்கவில்லை. ஒரு விஷயம், நான் ஆயிரத்து ஐநூறு மைல்கள் தள்ளி இடம் பெயர்ந்திருந்தேன், அவர் இன்னும் உயிரோடு இருப்பார் என்று கருத எனக்கு ஒரு முகாந்தரமும் இல்லை. ஆனால் உண்மையைச் சொன்னால் அது ஒரு பொருட்டே அல்ல. அந்த நிஜ பெண் துறவி, நான் மிக்க பாசத்துடன் நினைவு கூரும் அந்த மனுஷி, எனக்கு உத்வேகம் தந்தாரே தவிர அவர் ஸிஸ்டர் உர்சுலா இல்லை. சரி கவனியுங்கள், மறுபடி சொல்கிறேன் – எழுத்தாளர்கள் மனிதர்களைப் பயன்படுத்துவார்கள்.

(இது பாகம்-1. இறுதிப் பாகம் இங்கே கிடைக்கும்)

நன்றி: ஹார்பர்ஸ் மாகஸீன் / ரிச்சர்ட் ரூஸோ

[இந்தக் கட்டுரையின் இங்கிலிஷ் மூலம் ஹார்பர்ஸ் மாகஸீன் பத்திரிகையின் ஜூன் 2020, இதழில் பிரசுரமாகியது. மூலக்கட்டுரையின் தலைப்பு: ‘த லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்’]

Series Navigationமற்றவர்கள் வாழ்வுகள்- 2 >>

One Reply to “மற்றவர்களின் வாழ்வுகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.