
ரதபாணி காட்டுக்குள் நுழைந்த பின் ஓடை நீர் செல்லும் கற்கள் நிறைந்த பாதையை கண்டுகொண்டேன். மழைகாலத்தில் நீர் சுளித்து ஓடக் காத்திருக்கும் பாதை. இப்போது நீரற்று இருந்தது. அதன் மேல் நடந்து அடர்த்தியான காட்டை வேகமாக அடைந்தேன். ஒரு பெண் குரல் எங்கிருந்தோ ஒலித்தது. ஒலி வந்த திசை நோக்கித் திரும்பியபோது மழைப் பச்சை நிரம்பிய காட்டுக்குள் மஞ்சள் நிற உருவம் அசைவது தெரிந்தது. தேவதையாகவோ யட்சியாகவோ இருக்கலாம். பயமில்லை. புலி இருக்கும் காடு என்றார்கள். வாய்ப்பில்லை. மெதுவாக பாதத்தை எடுத்து வைத்து அதை நோக்கிச் சென்றேன். உண்மையான உருவம்தான். மாயை அன்று. ஆனால் இப்போது அசைவில்லை. அருகில் செல்லச் செல்ல தெளிவடைந்தது. மஞ்சள் நிறத்தில் பாதிக்கும் குறைவான மரத்தின் தண்டு. யாராலும் வெட்டப்பட்ட மரமன்று. அப்படிப்பட்ட காடும் இல்லை அது.
பின், காட்டில் அலைந்து திரிந்தேன். எச்சரிக்கை உணர்வுக்கு இடமே இல்லை. அசட்டு தைரியம் மட்டும்தான். பல நிலப்பரப்புகள். அடர்ந்த காடு, அடர்த்தி குறைந்த காடு, மாடுகள் மேயும் புல்வெளி, மலைக்காடு. மழையும் சொட்டிக்கொண்டிருந்தது. திருப்தியான நடை. மேலும் நடக்க நடக்க முயற்சியின்மை (effortlessness) கைகூடியது. மன அமைதி வளர்ந்துகொண்டிருந்தது. காட்டில் அலைவதும் பின் தொலைவதும் நடப்பதுதான். தொலைந்தேன்.
திரும்பி நடந்து சாலையை அடைந்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். முடியவில்லை. இயற்கை எல்லையின்மையைக் காண்பித்தது. பதற்றம் வளர்ந்தது. நடையில் இப்போது நம்பிக்கையில்லை. அமைதியும் இல்லை. உணவு எடுத்துவரவில்லை. வேகமாக அங்குமிங்கும் நடந்து ஓடைப்பாதையை அடைந்தேன். பயமாக இருந்தது. ஓடைப்பாதை கருங்கற்கள் பெரிதாகி இருந்தன. நடக்க நடக்க கற்கள் சிறிதாகி சாலை சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன். கற்கள் பெரிதாகிக்கொண்டே சென்றன. கற்களும் அமைதி இழந்த மனமும் நடையைக் கடினமாக்கின. போராடித் திசைமாறிக் காம்பசைக் கொண்டு வேறொரு சாலையை அடைந்தேன். என் வாகனம் வேறு சாலையில் நிற்கிறது. பதற்றம் நீங்கிவிட்டது. சாலையோர மரத்தின் கீழ் இளைப்பாறினேன். உணவு உண்டேன்.
போஜ்புரி சிவன் கோயிலுக்குச் செல்லும்முன் போஜ்புரி துறை (ghat)ல் இறங்கி நீராடினேன்.வெயில் வந்திருந்தது. தண்ணீர் மேலே சூடாகவும் கீழே குளிர்ச்சியாகவும் இருந்தது. ஒரு கணத்தில் என்னருகில் நீரின் நிறம் மாறியது. கையை வைத்து துழாவியபோது மஞ்சள் நிற துணி அகப்பட்டது. கைகளில் சாயம் ஒட்டியது. வண்டியில் கட்டிக்கொண்டேன். கோவிலில் ஒரு பெண் சிலைமுன் நின்றேன். மற்ற சிலைகளுக்கு மத்தியில் நேர்த்தியான அச்சிலையின் முகமும் கண்களும் தனித்துத் தெரிந்தன. கால்களும் ஒரு கையும் உடைந்திருந்தன. சிதைந்த பாதங்களுக்குக்கீழ் நீளமான வெள்ளை இறகு ஒன்று கிடந்தது. எடுத்து மஞ்சள் துணிக்குள் வைத்து இறுக்கிக்கொண்டேன்.

கோயிலிருந்து திரும்பும் வழியில் ஓரிடத்தில் நாலைந்து சாலையோரக் குடிசை வீடுகள். இரண்டாம் குடிசையின் முன் சிறுமி ஒருத்தியும் அவள் அப்பாவும் அமர்ந்து விளக்குமாறு பின்னிக்கொண்டிருந்தனர். சிறுமி மஞ்சள் நக்ச் சட்டையும் பாவாடையும் உடுத்தியிருந்தாள். தூரத்திலேயே வண்டியை நிறுத்தி இறங்கிவிட்டேன். மரத்தின்கீழ் அமர்ந்து அவர்களைப் பார்த்தேன். அவளது கவனம் குச்சியைச் சேர்த்துக் கோர்ப்பதில் குவிந்திருந்தது. ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அடங்கின. இரக்கமோ கோபமோ அன்று. அது அவர்களைப் பற்றியதே இல்லை. வேலையில் கவனம் சிதறியபோது இரண்டு மூன்று தடவை தூரத்தில் அமர்ந்திருந்த என்னை அவளது அப்பா பார்த்தார். நான் தூங்குவதுபோல் பாவனை செய்தேன். கண்களை மூடிக்கொண்டு எண்ணங்களைத் துழாவிக்கொண்டிருந்தேன். சுழன்று கொண்டே இருந்த எண்ணங்கள் கனவு நிலையை அடைந்தன. வெவ்வேறு மனிதர்கள் தோன்றி மறைந்தார்கள். காலில்லாத பையனைத் துரத்தி ஓடும் அம்மா, முட்டுவரை உள்ள கைகளை வைத்து வீணை கற்கும் குழந்தை, நீரில்லாத நீச்சல் குளத்தில் ஓடிவந்து குதிக்கும் சிறுவன், பரீட்சை அறையில் வெள்ளைக் காகிதத்தின்மேல் தலைவைத்து உறங்கும் பெண். காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சம்மந்தமே இல்லாமல் வந்தன. விழிக்க முயன்றேன். காட்சிகளில் ஒன்றை நினைவுபடுத்தி ஆராய முயன்றேன். அதிகாரத்துடன் சிரிக்கும் நடுவயதுப் பெண்ணின் முகம் தெரிந்தது. அது பெண்ணில்லை. ஆண். சரியாகத் தெரியவில்லை. ஆனால், கோரமான சிரிப்பு.
கண்களைத் திறந்தபோது வானம் தெரிந்தது. வாகனங்களின் எண்ணிக்கையும் ஒலியும் அதிகரித்திருந்தன. தன்னிலையை உணர்ந்து இடது பக்கம் திரும்பினேன். ஒரு கால் மடக்கியும் ஒரு கால் தொங்கப்போட்டும் திண்ணையில் அமர்ந்திருந்தவளின் கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தன. கூர்மையான நிலைகொண்ட பார்வை. நான் திடுக்கிட்டேன். நான் பார்ப்பது அவளுக்குத் தெரியவில்லையா? கண்களைத் திறந்தே கனவு காண்கிறாளா? திண்ணையின்கீழ் வரிசையாகப் பத்துப் பதினைந்து விளக்குமாறுகள் அடுக்கியிருந்தன. வலது பக்கம் திரும்பிக்கொண்டேன்.
போன வாரம்தான் புது விளக்குமாறு வாங்கியிருந்தேன். அறுபது ருபாய். யோசித்துவிட்டு எழுந்தேன். குடிசையை நோக்கி நடந்தேன். சிறுமியைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். குரல் கொடுத்தேன். உள்ளிருந்து வந்தவரிடம் விலை விசாரித்தேன். நூறு ருபாய். ஒன்று வாங்கிக்கொண்டேன். எனது பார்வையின் ஓரத்தில் சிறுமி ஓடி வருவது தெரிந்தது. பின்வாங்கினேன். குதித்துக்கொண்டே “தூங்கிட்டாருப்பா இவரு.. ஹாஹாஹா” என்றாள். அவள் அப்பாவும் சிரித்தார். நானும் சிரித்தேன். சிவப்பு நிற முகத்தின் பற்கள் தெரிய சிரிக்கும் அவளையும் அவரையும் பார்த்தேன். விசாரிப்புகளுக்குப்பின் விடைபெற்றேன்.
இரண்டு நாள்களுக்கு முன் சுத்தம் செய்யப்பட்ட என் அறையை நினைத்துப் பார்த்தேன். வண்டியைத் திருப்பிக் காட்டை நோக்கிச் செலுத்தினேன். இது மனித நடமாட்டமில்லாத காடு. சுத்தம் செய்வதற்கு இங்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் காட்டுக்குள் விளக்குமாறுடன் நடந்து ஓரிடத்தில் நின்றேன். இலைகளைக் கூட்ட ஆரம்பித்தேன். தள்ளித் தள்ளி ஒன்றாகச் சேர்த்து குவியலாக்கிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் என் கையிலிருந்த விளக்குமாறு மறைய ஆரம்பித்தது. முதலில் கீழுள்ள பாகம் மறைந்தது. மேல் பாகத்தை வைத்து காற்றைத் தள்ளிக் கொண்டிருந்தேன். மேல் பாகமும் மறைந்தது. நான் பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரித்தேன். அந்த மஞ்சள் நிற மரத்தைத் தேடினேன். காணவில்லை. சாலைக்கு வந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
வீடு நெருங்க நெருங்க மனம் மேலும் கனத்தை இழந்து லேசாக ஆகிக்கொண்டிருந்தது. நகரத்து மக்களைப் பார்த்து எரிச்சல் வரவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், ஏன் கடந்த வருடம்கூட என் மனநிலை வேறு மாதிரி இருந்தது. மனிதர்கள்மீது பெரிய கசப்பு இருந்தது. உணர்ச்சிக் கொந்தளப்பில் ஹெல்மெட்டுக்குள் கெட்ட வார்த்தைகளை உரக்கக் கத்தியிருக்கிறேன். கழிவிரக்கத்தில் இறங்கி நாள்கள் கணக்காக நீந்தியிருக்கிறேன்.ஆண்களும் பெண்களும் பளிச்சென்று சிவப்பு பச்சை நீல நிற உடைகளை அணிந்து வாக்கிங் சென்றார்கள். கதைத்துச் சிரித்தார்கள். என் உடைகளில் அழுக்கேறி இருந்தது. ஹெல்மெட்டுக்குள் நானும் சிரித்துக் கொண்டேன். வானத்தில் நீல வெள்ளைகளுக்கு மத்தியில் புதிய நிறம் தோன்றியது. அந்த நிறத்தைப் பார்த்துக்கொண்டே வீடு வந்தேன். வண்டியில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து விரித்தேன். உள்ளிருந்த இறகு மஞ்சளாகியிருந்தது.