பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’ – அழியாத வெண்பாத சுவடுகள்

பாண்டவர்கள் தாங்கள் சந்தித்த அனைத்து இடர்களிலும் தர்மம் பிறளாமல் இருந்ததை மகாபாரதம் நம் மனக்கண்கள் வரை விரிந்து அதன் ஆழத்தை வியாபித்து விடுகின்றது. வாழ்நாளில் தர்மத்தை முழுமையாக ஸ்தாபிக்க இயலாத காரணங்களை மனதைப் பட்டிமன்றமாக்கி, அதில் வரிசையாகத் தயார்படுத்திக் கொள்ளும் மனித மனங்களுக்கு எதிரொலியாகச் சிறந்தொரு எடுத்துக்காட்டாய்ப் பாண்டவர்கள்.  தர்மத்தின் காந்தமாய் கிருஷ்ணரின் அன்பு அவர்களுக்கு எல்லையற்றுக் கிடைத்தது. பார்த்தனுக்குப் போரில் சாரதியாக இருக்க வைத்ததும் இத்தர்மமே ஆகும். எது தர்மம் என ஆயிரம் கேள்விகள் தொக்கி நின்றிருக்க வாழ்க்கையே தர்மத்துள் நனைந்திருக்க வேண்டும் என்ற பெரிய விஷயத்தை எளிய தினசரி வாழ்க்கையினூடே எழுத்தாளர் பாவண்ணன் தனது கிருஷ்ண ஜெயந்தி என்ற கதையில் சிறுவனின் மூலம் அழகாய் வெளிப்படுத்துகின்றார். சொல்வனத்தில் இடம்பெற்ற கதை இது.

மாங்காய் திருட வரும் நான்கு சிறுவர்களில் ஒருவன் மாமியிடம் மாட்டிக் கொள்ள, மாமி அன்பாய்க் கடிந்து கொள்கின்றார். இனி திருடக்கூடாதென அறிவுரை கூறி முறுக்கு, சீடை உண்ணத் தருகின்றார். மாமி செய்யும் அப்பள வியாபாரத்திற்கு உளுந்து அரிசி அரைத்துக் கொடுப்பவர் அவனது அம்மா. அதை மாமியிடம் சேர்க்கும் பொறுப்பு இச்சிறுவனுடையது. அதனால் அவனுக்குப் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. மாமி கிருஷ்ணர் பாடல்களைப் பாடிக்கொண்டே கோலம் பாடுவதை ரசித்துப் பார்க்கின்றான். மாமியின் வீட்டில் போடப்பட்டிருந்த பாதச் சுவடுகளைக் கண்டவன், மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி என்றபோது தெரியாமல் விழிக்கின்றான். கிருஷ்ணர், கண்ணன் என எதுவுமே அவன் அறிந்திருக்கவில்லை. மாலையில் மறுபடியும் அரைத்த மாவைச் சேர்ப்பிக்க வரும்போது மாமி தலையில் அடிப்பட்டிருப்பதைப் பார்த்து மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றான். தையல் போடப்பட்டதும் காப்பி வாங்கித் தருகின்றான். “தையல் போட்ட மயக்கத்துல உக்காந்திருக்கச்சே ஓடிப் போயி ஒரு காப்பி வாங்கியாந்து கொடுத்தான் பாருங்கோ. அந்த நேரத்துல அது அமுதம். எப்பிடிடா கண்ணா நோக்கு அது தோணித்து?”

“கண்ணனும் தெரியலைங்கறான், கிருஷ்ணனும் தெரியலைங்கறான். இதுமட்டும் எப்படித் தோணித்தோ?” என மாமி இறுதியில் கூறும் வரிகள் ஆழ்ந்த அர்த்தங்கள் உடையவை. 

கதைகளின் விந்தையான உலகம், இவ்வுலகத்தின் பிரதிபிம்பமாய் நம் எதிரே நடத்திக்காட்டும் காட்சிகள் பல வேளைகளில் நம்மிடையே வந்து பயணிக்கும். அல்லது நம்மைச் சுற்றி இருக்கும் கதாபாத்திரங்களை அடையாளப்படுத்திவிடும். 

மாங்காய் திருடும் சிறுவர்கள் தவறென உணர்ந்து அக்கணமே தங்களைத் திருத்திக் கொள்கின்றனர். அதற்கான தளத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும் மாமியின் செயலும் குணமும் எடுத்துக்காட்டாக கொள்ளக்கூடியவை. இளவயது அனுபவக்குறைவால் சிறுவர்களின் பல தவறுகள் அறியாமையினால் ஏற்படுபவை. போர்க்களத்தில் நிற்கும் அர்ஜுனனும் அறியாமையினால் மனம் தளரந்தபோது, கிருஷ்ணர் கீதையை உரைக்கின்றார். அதனால் அர்ஜுனனின் அறியாமை அகன்று நமக்கும் கீதையின் மூலம் அறியாமை அகலும் உபாயத்தைத் தந்தருளிவிட்டார்.

இங்கே தனக்குரிய தர்மத்தைச் செவ்வனே செய்த சிறுவனின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. தர்மத்தைக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதற்குக் கர்ணன் கிருஷ்ணரிடம் உரையாடும் பகுதி முக்கியமானது. கர்ணன் ஒருமுறை, “என் அம்மா நான் பிறந்ததுமே என்னை விட்டு பிரிந்தார். என்னுடைய இந்தத் துயர்மிகுந்த வாழ்க்கைக்கு நான் எப்படி காரணமாவேன் என் விதி வாழ்க்கையில் பெரும் துயரத்தை எனக்களித்தது. நான் செய்த காரியங்கள் அதர்மமென்றால் அதற்கு நான் காரணமல்ல. என் சூழ்நிலை” என கிருஷ்ணரிடம் புலம்புகிறான். “கர்ணா, நான் சிறையில் பிறந்தேன். பிறக்கும் முன்னரே எனக்கான மரணம் காத்துக் கொண்டிருந்தது. என் விதியைப் பார்த்தாயா? வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான சுழ்நிலைகளை உருவாக்கி அதை எதிர்க்கொள்ளும் சக்தியை உருவாக்குகின்றது. அதர்மங்களை அச்சமின்றி செய்துவிட்டு சுழ்நிலையைக் காரணம் காட்டி நியாயப்படுத்த கூடாது” என கிருஷ்ணர் அறிவுறுத்துகின்றார். கர்ணன் பற்றி அறிய வேண்டுமெனில், ‘கர்ணன்’ திரைப்படம் சிறந்த தேர்வல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய தவறான தேர்வுகளே தர்மம் உள்பட சரியான கற்பிதங்களைத் திசை திருப்பி விட்டு விடுகின்றன. தர்மம் என்னும் பெயரில் அதர்மம் போலி வேஷம் கொண்டு திரிவதை உலகம் பாராட்டுவதால் தர்மம் என்ற பொருள் திரிந்து விடுவதில்லை.  

தலையில் காயத்துடன் மாமியைப் பார்த்ததுமே துரிதமாய் வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வேண்டுமென கிஞ்சிற்றும் நேரம் தாழ்த்தாது முடிவெடுக்கின்றான். தையல் போட்டு களைத்திருக்கும் மாமிக்குச் சூடாக காப்பி வாங்கி தருகின்றான் சிறுவன். எல்லா உயிர்களிடத்திலும் இயல்பாய் சுரப்பதே அன்பு. அதை அழகாய் தன் செயல்களில் காட்டி நம் மனதிலும் இடம்பிடித்து விடுகின்றான். சிறுவர்களின் செயல்கள் அபரிமிதமானவை; அற்புதமானவை. பல சமயங்களில் வாழ்வியல் அடுக்குகளை நமக்கு எளிதாக கற்பித்து விடுபவை. பிரகலாதன் தன் தந்தை இரண்யகசிபூவின் பலவித இடையூறுகளுக்கு உள்ளானாலும் நாராயணனனே அனைத்தும் என்ற கொள்கையிலிருந்து எள்ளளவும் நகராமல் நரசிம்ம அவதாரத்தை வெளிக் கொணர செய்தார். பாலகனின் பக்தி நவவித பக்திகளில் ஒன்றான விஷ்ணு ஸ்மரணம் என்ற முறைக்கும் முன்னோடியாக திகழ்கின்றது.

இங்கே ஆண்டாளும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சின்னஞ்சிறுப்பெண். தன் தந்தையான பெரியாழ்வார் கட்டிய மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்துப் பெருமாளுக்குச் சூட்ட, அதைச் சூட்டிப் பெருமாள் அழகுப் பார்த்து ஆனந்தமடைந்தார். திருப்பாவையைப் பாடிய ஆண்டாளுக்கு ஏறக்குறைய ஐந்து வயதிருக்கும். முப்பது பாசுரங்களில் அடக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் பக்தி, அறிவியல், அன்பு என அனைத்தையும் விஞ்சி நிற்பவை. பக்தர்களிடையே பெருமை மிக்க இடத்தைப் பெற்றிருக்கும் திருப்பாவையை அறியாதவர்கள் ஒரே ஒரு முறையாவது கூகளில் தட்டி பார்க்கலாம். பாசுர வரிகளின் ஒவ்வொரு வார்த்தையும் பல அர்த்தங்களைத் தன்னுள் புதைத்திருக்கும் சுரங்கமென புரியும். அதற்குச் சான்றாக திருப்பாவையின் நான்காம் பாசுரம்,

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.             

ஆண்டாள் திருப்பாவை

கடல் மழை கண்ணா! ஆழமான கடலில் புகுந்து, நீரை முகர்ந்து கொண்டு இடி இடித்து விண்ணில் ஏறி, திருமாலின் திருமேனியைப் போலக் கறுத்து விண்ணை மறைத்து நின்று, நீண்ட அழகான தோள்கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து, சங்கு போல அதிர்ந்து இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டும் கொடுக்கும் அவனுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல் மழை பெய்து உலகம் வாழ வேண்டும். நாங்களும் மகிழ்ந்து மார்கழி நோன்பு நீராடுவோம் என ஆண்டாள் பூரிக்கின்றார். இங்கே ‘water cycle’ எனும் மழை அறிவியலைச் சின்னப் பெண் ஆண்டாள் நுட்பமாகத் தேன் தமிழ் வார்த்தைகளால் கோர்த்துக் கூறுவதைக் கவனிக்க வேண்டும். தனக்குத் தெரிந்த அறிவைக் கொண்டு பாடிச் சென்றுவிட்டாலும் இன்றளவிலும் ஆண்டாளின் ஞானம் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. 

நன்றி: natgeokids.com

குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற ஞானத்தின் வளர்ச்சி அவர்களின் உடல் வளர்ச்சியோடு விரிவாக்கமடைந்து திருக்கோளூர் பெண்பிள்ளை போலத் திகழச் செய்துவிடும். திருக்கோளூரை விட்டுச் செல்ல எத்தனிக்கும் இச்சிறுபெண் சுவாமி ஶ்ரீராமானுஜரை வழியில் காணும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஶ்ரீராமானுஜர் அவள் ஊரைவிட்டு வெளியேறும் காரணத்தை வினவ, உடனே தன் 81 காரணங்களைப் படபடவென அடுக்கிக் கூறுகின்றாள். அவள் கூறிய 81 காரணங்களும் இன்றளவும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. எத்தகைய தகவல் தொலைத்தொடர்பு இல்லாத அக்காலக்கட்டத்தில் இராமாயணம், மகாபாரதம், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் என சின்னப் பெண்ணான திருக்கோளூர் பெண்பிள்ளையின் ஞானம் வியக்கச் செய்துவிடும். தகவல் தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் கணினி சார்ந்த கருவிகள் மட்டுமே குழந்தைகளின் அறிவில் முக்கிய பங்களிக்கின்றன என்ற கருத்துகள் காதுகளைவிட்டு இக்கணம் மெல்ல விலகுகின்றன.

தர்மம் இருக்குமிடத்தில் கிருஷ்ணர் இருப்பார்; அவரைப் பற்றி அறியாவிட்டாலும் தர்மம் அவரை அழைத்து வந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.