படுகளம்

லோகேஷ் வளர்ந்துவிட்டான். தெருமுனையில் இருக்கும் நண்பர்கள் வீட்டைத் தேடி அவனாகவே போய்விடுகிறான். மகன் அங்கே பிள்ளைகளோடு விளையாடுவதை மது கண் கொட்டாமல் பார்த்தான். சிறுவர்கள் கத்துவதும் ஓடுவதும் விழுவதும் எழுவதும் அவனையறியாமல் அவன் இதழ் ஓரத்தில் புன்னகையைத் தவழவிட்டது. மகனை அழைத்து அவன் தலையைக் கோதிவிட வேண்டும் என்றும் அவனுக்கு ஒரு முத்தம் தர வேண்டும் என்றும் தோன்றியது. 

இங்கிருந்தே குரல் கொடுத்தான், “லோகு ஏ.. லோகு…”

லோகு திரும்பிப் பார்த்துவிட்டு அவன் நண்பர்களிடம் அவசர அவசரமாக ஏதோ சொல்லிவிட்டு, ஏம்பா என்றபடியே ஓடி வந்தான். மூச்சிரைக்கக் கண்களில் ஆர்வம் பறக்க அவன் அருகில் வந்து நின்றான். 

“கொஞ்சம் உக்கார். தண்ணி குடி… பார் எவ்வளவு களைச்சிப் போயிருக்க?”

பையன் சலிப்புற்றவனாய், “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா” என்றபடி திரும்ப ஓடிவிட்டான். 

மதுவுக்குத்தான் அவனைப்போல இருந்த நாள்கள் நினைவுக்கு வந்தன. அப்பா சவுக்கால் வெளுக்கும் அந்தச் சத்தம் இன்னும் காதுக்குள் கூர்மையாக ஒலிக்கிறது. அந்த வலியை நினைக்கும்போது இப்போதும் மூச்சடைக்கிறது. மது மெல்ல உள்ளே திரும்பிப் பார்த்தான். அப்பா சோபாவில் சின்னக் குழந்தைபோல் தூங்கிக் கொண்டிருந்தார். 

வேலைக்குப் போய்விட்டு வந்தது களைப்பாய் இருந்தது. போய்ப் படுத்துக்கொண்டான். 

அப்பாவை அம்மாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது. தாத்தாவும், பாட்டியும் அவளை இரண்டு நாள்கள் வீட்டில் கட்டி வைத்து உதைத்து அப்பாவுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். 

அதனால் அப்பாவுக்கு எப்போதுமே அம்மாமேல் சந்தேகம். மது தனக்குப் பிறந்தவனில்லை என உறுதியாக நம்பினார். அவனைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு அருவருக்கத்தக்க பொருளைப் பார்ப்பது போல்தான் பார்ப்பார். அம்மாவுக்கும் அவன் மேல் எந்தப் பிரியமும் இல்லை. கொஞ்சம்கூட மனதுக்குப் பிடிக்காத மனிதனுக்குப் பிறந்தவன். 

இப்படித்தான் இருந்தது அவன் பால்யம். அவன் அம்மா அப்பா என்றால் வெறுப்பவர்கள், அடிப்பவர்கள் என்றுதான் வெகு காலம் நினைத்திருந்தான். பிறகு பள்ளிக்கூடம் போகும்போது மற்ற மாணவர்களின் பெற்றோர் அன்பாகத் தங்கள் மகனிடம் பேசுவதைக் கேட்டு வியந்திருக்கிறான். 

விவரம் தெரியாத அந்த வயதிலேயே அவன் முடிவு செய்திருந்தான். அப்பாவைப்போல தானும் வளர்ந்து தனக்கும் ஒரு மகன் பிறந்தால் அவனை அவ்வளவு அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். 

அவன் மனதில் எப்போதும் இந்தக் கற்பனைதான். அவனுக்கு ஒரு சின்னஞ்சிறு மகன். அவனை அவன் எப்போதுமே அடிக்கப் போவதில்லை. எப்போதும் அவனிடம் அன்பாக இருப்பான். கேட்டதெல்லாம் வாங்கித் தருவான். தன் மகனை மடியில் உட்கார வைத்துக்கொண்டு தோளில் அவன் தலையைச் சாய்த்துக் கொள்வதுபோல அவன் கற்பனை செய்துகொள்வான். அந்தக் காட்சி அவன் கண்களைக் கலங்கவிடும், அது ஏன் என்று அப்போது அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அது அவனுக்குப் பிடித்திருந்தது. தினமும் இரவு தூங்கும்போது அதே காட்சியை மேலும் மேலும் துல்லியமாகக் கற்பனை செய்வான். கண் கலங்குவான். தூங்குவான்.

***

சியாமளா வரும்போது மது, லோகேஷ் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வாசலில் சேரைப் போட்டு உட்கார்ந்திருந்த மாமா, “என்னம்மா இவ்வளவு நேரம்?” என்றார். 

“ஸ்கூல் டைம் மாமா, யூனிபார்ம் எல்லாம் எக்கச்சக்கமா வந்திருக்குது. மொதலாளி இன்னும் ஒரு மணி நேரம் இருந்து தெக்கச் சொன்னார். நான் போய்தான் சமைக்கணும் மொதலாளின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.” சொல்லிக்கொண்டே சமையல் வேலையைத் துவங்கிவிட்டாள். 

மது லாரிப் பட்டறைக்கு வேலைக்குப் போகிறான். இரும்புப் பொருட்களுடனான வேலையில் அவன் எவ்வளவு களைத்துப் போயிருப்பான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே சமைத்து முடித்துவிட்டு அவனை எழுப்பிக்கொள்ளலாம் என விட்டுவிட்டாள். 

வேணுகோபால் மதுவின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்தான். அவனால் மூச்சுவிட முடியவில்லை. கண்கள் இருண்டுகொண்டு வந்தன. சியாமளா வந்தாள். அவள் கையில் வாரியல் போல இரும்பாலான கடினமான எதோ ஒரு பொருள் இருந்தது. அவன் யோசிப்பதற்குள் அவள் அவன் தலையில் அந்தக் கனமான பொருளால் அடித்தாள். அவன் தலை உடைந்து நொறுங்கும் சத்தம் கேட்டது. மது திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். 

சியாமளா, ஏங்க ஏங்க என குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள். மது சுதாகரித்துக்கொண்டு, “ஏன் சியாமளா எந்திரிச்சிட்டேன் சொல்லு” என்றான். “அப்படியே பையனையும் எழுப்பிவிடுங்க, சாப்பிடலாம்” என்றாள். மது லோகேஷை எழுப்பினான். அவன் தூக்கத்திலேயே இருந்தான்.

இரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. வேணுவுக்கும் சியாமளாவுக்கும் உள்ள தொடர்பை அவன் எப்போதோ அறிந்துவிட்டான். அவன் அதிர்ச்சி ஏதும் அடையவில்லை. உண்மையில் அது அவளுடைய சுதந்திரம் என்றுதான் நினைத்தான். 

அவனுக்குச் சின்ன வயதில் அம்மா அப்பாவிடம் பட்ட அடிகள். வேதனை. ஓலம். அழுகை. அந்த கோரமான வாழ்க்கை எல்லாமே நினைவுக்கு வந்தது. அவன் விவரம் தெரியாத வயதிலேயே இம்மாதிரியான உறவுகள் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். 

சியாமளா நால்வருக்கும் சாப்பாடு போட்டுக்கொண்டு வந்தாள். மது அந்தச் சாப்பாட்டையே பார்த்தான். அதில் விஷம் ஏதாவது கலந்திருக்குமா எனச் சந்தேகமாய் இருந்தது. ஆனால், அவனுள் எந்த உள்ளுணர்வும் இல்லை என்பதால் சாப்பாட்டைப் பிசைந்து எடுத்துச் சாப்பிட்டான். முதல் வாயில் கூர்மையாக கவனித்தான் ஏதாவது மெல்லிய கசப்பு அல்லது ஒவ்வாத ஒரு வாசனை. எதுவும் இருக்கிறதா என்று. அப்படி எதையும் உணர முடியவில்லை. மவுனமாகச் சாப்பிட்டு எழுந்தான். 

வேறு பெண்களின் தொடர்பில் இருக்கும் ஆண்கள். வேறு ஆண்களின் தொடர்பில் இருக்கும் பெண்களைப் பற்றிய செய்திகளை அவன் எப்போதும் தேடிக்கொண்டே இருந்தான். 

சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் சமூகத்தில் அளிக்கப்படும் இடம் அவனுக்கு விசித்திரமாய் இருந்தது. 

மளிகை கடைக்காரர் அண்ணாமலைக்குப் பல பெண்களுடன் தொடர்பிருந்தது. அதனாலெல்லாம் அவர் கண்ணியம் எப்போதும் குறைந்ததில்லை. கோவிலுக்கு அவர் வரும்போது யாரும் அவரை இளக்காரமாய்ப் பார்த்ததில்லை. கோவில் முதல் மரியாதையில் அவருக்கு எதிராக எந்த முணுமுணுப்பும் எழுந்ததில்லை. அதே நேரம் அவரோடு தொடர்பில் இருந்த கோமதியை எல்லோரும் பார்த்த பார்வை, அவளைப் பற்றிப் பெண்கள் பேசிய பேச்சுகள், அவள் கோவிலுக்குச் செல்லும்போது எழும் நமட்டுச் சிரிப்புகளை அப்போதே அவன் கவனிக்கத் துவங்கியிருந்தான். 

அவன் அப்பா, அம்மாவைப் போட்டு அடிக்கும் போதெல்லாம் அவன் அம்மாவுக்காகப் பரிந்துகொண்டு போவான். ஆனால், அப்பா கொஞ்சமும் வேகம் குறையாமல் அதேபோல அவனையும் போட்டு அடிப்பார். 

மது, சியாமளாவை எதுவும் கேட்கக்கூடாது என்றுதான் இருந்தான். வரம்பற்ற காதல் அதனால் நடக்கும் கொலை குறித்த செய்திகளை அவன் வெகு நாள்களாக எந்த உணர்வும் இன்றிதான் பார்த்து வந்தான். திடீரென்று ஒருநாள் இந்தச் செய்திகளுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு உரைத்தது. அவன் கொலை செய்யப்படும் இடத்தில் இருக்கிறான். ஆமாம் படுகொலை செய்யப்படும் இடத்தில் அல்லது அந்த கொலையைத் தான் செய்யவேண்டிய ஒரு சூழலில் இருக்கிறான்.

அவன் ஒருநாளும் அதுபோலச் செய்யமாட்டான். ஏனென்றால் லோகு அம்மாவை இழந்துவிடுவான். அது கூடாது. அதே நேரம் அவனும் கொலையாகக் கூடாது. அதற்கும் அதே காரணம்தான், லோகு அப்பாவை இழந்துவிடுவான். அது கூடவே கூடாது அவன் தன் தந்தையின் அன்பை எப்போதும் பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். 

அவன் இது பற்றிச் சியாமளாவிடம் வெளிப்படையாகப் பேசிவிட வேண்டும், உன்னுடைய எண்ணத்துக்கு நான் எப்போதும் தடையாக இருக்கமாட்டேன் என்று சொல்லிவிட வேண்டும் எனப் பலமுறை முயற்சித்துவிட்டான். ஆனால், அதை எதனாலோ அவனால் சொல்ல முடியவில்லை. 

இரவு படுக்கையில், சியாமளாவின் கை அவன் மேல் விழுந்தது. ஒரு கணம் அதை விலக்கி விடலாமா என்று பார்த்தான். ஆனால் தன் மேல் கணவனுக்குச் சந்தேகம் வந்துவிடக்கூடாது என நினைக்கும் அவள் மனதைக் கண்டு அவன் லேசாகச் சிரித்துக் கொண்டான். தொடர்ந்து விலக்குவதன் மூலம் அவளுக்குச் சந்தேகம் ஏற்படலாம். பின் ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவள் தள்ளப்படுவாள். அப்போது அவர்கள் மனதில் தானே கொலைத் திட்டம் உருக்கொண்டுவிடும் என்றெல்லாம் அவன் மனதில் யோசனைகள் ஓடியது. அவன் திரும்பி அவளை இறுக்கி அணைத்தான். 

***

சியாமளா அன்று நேரமாக வீட்டுக்கு வந்துவிட்டிருந்தாள். மது வந்தவுடன் காபி போட்டுத் தந்தாள். 

அவள் மனதின் வெகு ஆழத்துக்குள் இருப்பதை அவள் முகத்தைப் பார்க்கும்போது அவனால் உணர முடிந்தது. ஏதோ ஓர் ஏமாற்றம் அதில் உறைந்து கிடந்தது. கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பாள். தலைவலி என்பாள் அல்லது வேலையிடத்தில் பிரச்னை என்பாள்.  

இரவில் அவள் கண்களை மூடி அசையாமல் படுத்திருந்தாள். உறங்குவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தாள். ஆனால் அவள் தூங்கவில்லை என்பது நன்றாக அவனுக்குத் தெரிந்தது. 

நடு இரவில் ஏதோ ஓர் உள்ளுணர்வில் கண் விழித்தபோது, இரவு விளக்கின் வெளிச்சத்தில் கண்ணீர் பளபளக்க கூரையை வெறித்துக் கொண்டிருந்தாள். அவன் அசைவைக் கண்டதும் தூங்குவதைப்போல மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

அந்த வாரம் முழுவதும் அவள் அப்படியே இருந்தாள். அவன் கேட்டுக்கூடப் பார்த்துவிட்டான். “ஏன் இப்படி இருக்க?” “என்னவோ தெரியல மனசே சரியில்ல,” என்பதற்கு மேல் அவள் எதுவும் சொல்லவில்லை.

மதுவுக்கு வேணுவைச் சந்திக்க வேண்டும்போல இருந்தது. அவர்களுக்குள் ஏதாவது ஆகியிருக்கும். ஆனால், தான் இந்த அளவுக்குப் போக வேண்டுமா? அவர்களுக்குள் என்னவானால்தான் என்ன? அவர்கள் பிரிந்துவிட்டால்தான் என்ன? உண்மையில் அவர்கள் பிரிந்துவிட்டால் அவன் சந்தோஷம்தானே படவேண்டும். ஆனால், ஏனோ அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அதற்கு என்னதான் காரணம் என்றும் அவனுக்குப் புரியவில்லை. அன்று பட்டறைக்குப் போகும்போது, வேணுவின் மில்லுக்குப் போனான். 

திடீரென இவனை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் திணறல் சொன்னது. மெஷினில் மிளகாய்ப் பொடி அரைபட்டுக் கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாமல் மிளகாய்த் தூள் மெல்லக் காற்றில் பரவி மேலே படிந்ததால் காந்தலெடுத்தது. 

“என்ன ஏதும் விஷேசமா?” என மெஷின் சத்தத்துக்கு மேலாகக் கத்தினான். 

இவன், “ஒண்ணுமில்ல இந்தப் பக்கமா வந்தேன்” என்றான்.

 “மல்லி அறச்சி ரொம்ப நாள் ஆச்சே, தீந்து போயிருக்குமே, திரும்ப அரைக்கலையா?” என்றான்.

“அறைக்கணும், மில்லுக்குப் போகணும்னு சியாமளா சொல்லிகிட்டே இருந்தா” என்றான். 

அவன் கண்களில் ஒரு திட்டமிட்ட நிதானம். மிளகாய் ஓடி முடிந்துவிட்டிருந்தது. வேணு மிஷினை நிறுத்தினான். திடீரென வேறொரு உலகத்துக்குள் சென்றுவிட்டதைப்போல அவ்வளவு அமைதியாய் இருந்தது. 

வேணு திரும்ப ஏதோ சொல்ல வாயெடுத்தான். மெஷின் ஓடும் ஞாபகத்தில் கத்த முனைந்தான். ஆனால் அந்த அமைதியின் கணத்தை உணர்ந்தவனாய் இயல்பான குரலில், “உக்காருங்க வேலை எல்லாம் எப்படிப் போகுது, பையன் எப்படி இருக்கான்?” என்றான். 

பையன் என்றபோது அவன் கண்ணில் மின்னிய ஒரு தந்தைமையின் வாஞ்சையை மது தேடிக் குறித்துக் கொண்டான். 

மது, “ஏதோ போகுது அவளுக்கு வேற உடம்பு சரியில்ல போலிருக்கு. ஒரு வாரமாவே ஒரு மாதிரி இருக்கா, என்னன்னு சொன்னாத்தானே எதாவது செய்ய முடியும்?” என்றான்.

அவன் ஏதோ யோசனையாய்ப் புன்னகைத்தான். பின் மது அங்கிருந்து கிளம்பிவிட்டான். 

சாயந்திரம் வேலை முடிந்து வரும்போது சியாமளாவின் முகத்தில் இயல்பான புன்னகை இருந்தது. 

“மல்லிப் பொடி அரைக்கணும். தீந்து போச்சு” என்றாள். அவன் எதுவும் பேசவில்லை. 

ஒரு வாரம் கழித்து ஒரு சனிக்கிழமையன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அப்பாவைப் பார்த்து லோகு குதித்துக்கொண்டு வந்தான். “அப்பா இன்னைக்கி நம்ம வீட்டுக்கு ஒரு அங்கிள் வந்தாரே..”

மது கண்களாலேயே யாரு என்றான்.

லோகு அவன் கண்களைப் பார்த்து சிரித்தான். “அவரு எனக்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்தார் இந்தா” என்றான். 

அவர்கள் உறவில் இது அடுத்த கட்டம். இப்போது அவன் வீட்டுக்கே வரத் துவங்கிவிட்டான் போல என நினைத்தவனாய், மது சியாமளாவைப் பார்த்து, “அப்பா எங்கயும் வெளிய போயிருக்காரா?” என்றான்.

“இல்ல இங்கதான் இருக்கார். மத்தியானம் ரேஷன் கடைக்கிப் போயிருந்தார். அப்பதான் அந்த மில்லுக்காரர் வேணு வந்தார்.” 

“பையனுக்கு பிஸ்கட் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கார். எதாவது விஷேசமா?” 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, சும்மாதான். இந்தப் பக்கம் ஏதோ வேலையா வந்திருக்கார். நான் தண்ணி பிடிச்சிகிட்டிருக்கறதைப் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தார்.” 

ஏதேச்சையாக வந்தவர் பிஸ்கட் எப்படி வாங்கிட்டு வந்தார் எனக் கேட்க நினைத்துக் கேட்கவில்லை. அப்படிக் கேட்பது தன்னிடம் சந்தேகப் புள்ளி துவங்கிவிட்டதான எண்ணத்தின் துவக்கமாகிவிடும் என நினைத்து அமைதியாக இருந்தான். 

புரிந்தது. லோகு தெருப் பசங்களோடு விளையாடப் போயிருப்பான். அல்லது விளையாடப் போகும்படி அனுப்பி வைக்கப்பட்டிருப்பான். அதன் பின்… அதன் பின்…. என்ன நடந்திருக்கும் என மனதுக்குள் காட்சிகள் ஓடின. மதுவுக்கு குப்பென்று ரத்தம் தலைக்கேறியது. வியர்த்தது. உடலில் நடுக்கம்போல வந்தது. 

உள்ளறைக்குப் போய் கைகளை இறுக்கமாக கோர்த்துப் பற்றிக் கொண்டான். பற்களைக் கடித்துக் கொண்டான். தான் ஏன் இப்படி தன்வசம் இழக்கிறேன் என அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏதாவது ஒரு கடினமான பொருளால் அவளை உடனே தாக்க வேண்டும் என அவனுக்குள் உண்டான உத்வேகத்தைப் பார்த்து அவன் பயந்தான். 

லோகு… லோகு… லோகு… மந்திரம்போல மகனின் பெயரை ஜெபித்தான். அவனின் சிரித்த முகம் மனதுக்குள் நின்று அவனுடைய தன்னை மறந்த ஆவேசத்தைக் குறைத்தது. தன் மனம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதைக் கண்டு அவனுக்கு அச்சமாய் இருந்தது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதேபோல் தனக்கும் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கக்கூடும். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவே கூடாது என அவன் தனக்குள் உறுதியாக சொல்லிக் கொண்டான். தான் வேண்டுமானால் அப்படி இருந்துவிடலாம். ஆனால் அவர்களும் அப்படியே இருப்பார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும். என்றைக்கிருந்தாலும் தான் ஒரு இடஞ்சல்தான். அந்த இடஞ்சலைக் காலம் பூராவும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே கொலை செய்யப்படுவதுதான் தன்னுடைய முடிவாக இருக்கும். பிறகு மதுவின் கதி?

அன்று இரவு வெகு நேரம் தூங்காததால் காலையில் தாமதமாகத்தான் எழுந்தான். பட்டறைக்குப் போக அவசர அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தான். 

பொதுக் குழாயில் நல்ல தண்ணீர் வந்தது. சியாமளா பிளாஸ்டிக் குடங்களை வாரிக் கொண்டு குழாயடிக்குப் போனாள். கொஞ்ச நேரத்தில் அங்கே சச்சரவு ஆரம்பமாகிவிட்டது. இந்தப் பெண்கள் இவ்வளவு ஆபாசப் பேச்சுகளை இப்போது மட்டும் எப்படி இவ்வளவு லாவகமாகப் பேசுகிறார்கள் என மதுவுக்கு வியப்பாய் இருந்தது. சியாமளாவின் குரல் கணீரெனக் கேட்டது. இப்படி தண்ணீர் பிடிக்கும்போது மட்டும் அவள் வேறொருத்தியாய் ஆகிவிடுகிறாள். அவளுக்கு இவ்வளவு ஆத்திரம் வரும் என்பது அவனுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. சியாமளாவின் வசவுக்குப் பதிலாய் கோமதியின் குரல் இடியாய் முழங்கியது. “போடி அவுசாரி.. உன் புருசன அனுப்பிட்டு அந்த மில்லுக்காரன வரச் சொல்லி…”

மது சட்டெனத் தடுமாறினான். அவளின் குரல் வீட்டுக்குள் இருக்கும் மதுவுக்குக் கேட்டிருக்கும் என அறிந்த சியாமளா பீதியில் நடுங்கினாள். என்றாலும் அது ஒரு வழக்கமான குழாயடிச் சண்டை என்பதுபோல் தொடர்ந்து வசைகளைப் பொழிந்துவிட்டு குடத்துடன் உள்ளே வந்தாள். என்னாப் பேச்சு பேசறா தூ என அழுதாள். அவள் குரலில் இன்னும் நடுக்கம் இருந்தது. மது அவளையே வெறித்துப் பார்த்தான். அப்போது அப்படி பார்ப்பது தவறு என்று தோன்றினாலும் அவனால் தன் பார்வையை மாற்ற முடியவில்லை. அவள் அப்போது மதுவை திரும்பிக்கூடப் பார்க்காமல் அழுதுகொண்டிருந்தாள்.

திரும்பவும் அவர்கள் இருவருமே அதைப் பற்றிப் பேசிக்கொள்ளவில்லை. அன்றிரவு அவர்கள் உடலுறவு வைத்துக் கொண்டார்கள். 

அந்த வாரம் முழுவதும் அவர்களுக்கு இடையேயான உரையாடல் மிகச் சுருக்கமாக இருந்தது. 

அன்று லாரி ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க முதலாளி அவனை சென்னைக்குப் போய்விட்டு வரும்படி சொன்னார். காலையில் போனால் மாலையில் சாமான் வாங்கிக் கொண்டு இரவில் பஸ் ஏறினால் மீண்டும் காலையில் வீடு திரும்பிவிடலாம் என்றார். சில சமயங்களில் இங்கே எங்கேயும் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காதபோது இது நடப்பதுதான் என்பதால், மது சியாமளாவுக்குப் போன் செய்துவிட்டுச் சென்னைக்குக் கிளம்பினான்.

பஸ் ஒரு மணி நேர தூரத்தைக் கடந்தபின், என்றுமில்லாத ஓர் உள்ளுணர்வு அவன் மனதைப் பிசைந்தது. என்ன நடக்கக்கூடும் என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை. அவர்கள் லோகுவைக் கொன்றுவிடுவார்கள் என்பதைத் தவிர வேறெதையும் அவனால் சிந்திக்க முடியவில்லை பெருகும் கண்ணீரை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. லோகு.. மகனே லோகு.. பஸ்சை நிறுத்தச்சொல்லி இறங்கி வீட்டுக்கு ஓடிவிடலாமா எனப் பார்த்தான். ஆனால், அவ்வளவு பைத்தியக்காரத்தனமாய் நடந்து கொள்ள அவனால் முடியவில்லை.

சாயந்திரம் சென்னையில் போய் இறங்கியதும் சியாமளாவிடம் இருந்து போன் வந்தது. மது நடுங்கும் கரங்களால் போனை ஆன் செய்தான். நினைத்துப் பார்க்கவே கூடாத தகவலை எதிர்கொள்ள அவன் மனம் சில ஒத்திகைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தபோது அவன் கண்கள் இருண்டன,  “என்னங்க, உங்க அப்பா உங்க அப்பா, நம்மள விட்டு நம்மள விட்டு…”

சியாமளா என்னாச்சு என்றான். அவன் குரல் தொண்டையைவிட்டு வெளிவரவில்லை. “ஐயோ, சீக்கிரம் கிளம்பி வாங்க எனக்கு இங்க கையும் ஓடல காலும் ஓடல..”

அப்பாவின் மரணம் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தாலும், அவன் நினைத்ததைப்போல லோகுவுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற எண்ணம் பெரும் ஆசுவாசமாய் இருந்தது. இப்படி எத்தனை நாளைக்குப் பயந்து பயந்து சாவது. இது போன்ற உறவுக்குள் விழுந்தவர்கள் இந்நேரம் தன் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது இயற்கையாக நடக்கச் சாத்தியம் இல்லை எனப் புரிந்ததும், என் கதையைத் தாங்களாகவே எப்படி முடிப்பது என்றுதான் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அவர்களை அப்படி சிந்திக்கவிட்டு, அவர்களைத் திட்டம் வகுக்கவிட்டு கடைசியில் அவர்கள் கையில்தான் பலியாக வேண்டுமா? அப்படி தான் இறந்து லோகு அவர்கள் கையில் தன்னைப் போலவே அடிபட்டுச் சாவதைவிடப் பையனைக் கூட்டிக்கொண்டு எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். 

ஆனால் லோகு அப்படி வரச் சம்மதிப்பானா? சியாமளா அம்பலப்பட்டுப் போய்விடுவாளே? அவளும் வேணுவும் அந்த அவமானத்தைத் தாங்குவார்களா? தன்னைக் கண்டுபிடித்துத் தர அவள் போலீசில் புகார் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். மீண்டும் தான் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து அவளோடு இயல்பாய் வாழ முடியுமா? அவன் மனம் என்னென்னவோ யோசித்தது. 

நடுநடுவே அப்பாவின் இறந்த உடல் அவன் மனக் கண்ணில் தோன்றியது. வாயைப் பிளந்தபடி உயிரை விட்டிருக்கும் அந்தப் பிரேதம் அவனுக்குள் எல்லையற்ற சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அது அவர் இறந்ததற்கான சோகமன்று என்பதையும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

பஸ்சில் போவதைவிட ரயிலில் போனால் சீக்கிரம் ஊருக்குப் போய்விடலாம் என அவன் ரயிலைத் தேடிப்போனது தவறாகப் போய்விட்டது. ஏதோதோ காரணங்களால் ரயில் பல மணி நேரம் தாமதமாக மறுநாள் மத்தியானம்தான் அவனால் வீட்டுக்கு வரமுடிந்தது. 

அப்பா மாலை போட்டு உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தார். மதுவைப் பார்த்ததும் சியாமளா தலை தலையாய் அடித்துக்கொண்டு வந்து அவன் காலைக் கட்டிக்கொண்டாள். “தண்ணி குடுமான்னுதாங்க கேட்டாரு. கொண்டு வந்து குடுத்ததும் ஒரு முழுங்குதான் குடிச்சாரு. அப்படியே உயிரு போயிடுச்சே ஐயோ…”

மதுவுக்குக் கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை. லோகு எப்போதும் போலத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அதுவரை தன் இடத்தில் இருந்து வேணுதான் எல்லாக் காரியங்களையும் செய்து கொண்டிருந்தான் என்று தெரிந்தபோது அவனுக்கு பூமி எதிர்திசையில் சுற்றுவதைப் போல இருந்தது. சாங்கியக்காரர், “அப்புறம் என்னப்பா எல்லா சாங்கியமும் பண்ணியாச்சி. பையனும் வந்தாச்சி. பாடிய எடுத்தரலாம்” என்றார். 

வேணு மதுவின் கைகளைப் பற்றிக்கொண்டு கண் கலங்கினான். அந்தப் பற்றுதலில் தெரிந்த அசாத்திய ஆறுதலைக் கண்டு தடுமாறியவனாய் மது அந்தக் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். 

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.