இரா.இராஜேஷ்

சிவகாசிக்கு இன்று காலை எப்போதும் போல் 6:25 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் வந்துசேர்ந்தது. இரவு முழுதும் ரயில் பயணத்தில் நாளை மறுநாள் திருச்செந்தூர் தேரிக்குடி சென்று, தன்னுடைய குலதெய்வக் கோவிலுக்குப் போவது பற்றி ஏதோதோ எண்ணிக்கொண்டு சரியாகத் தூங்கவில்லை கார்த்திக். குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்குச் செல்வது புதிதல்ல, சென்னையில் இருந்து குடும்பத்துடன், ஒவ்வொரு கார்த்திகை மாதத்திலும் ஏதோ ஒரு சனி ஞாயிறு ஒதுக்கி, ஆரவாரமின்றிச் சென்று வந்துவிடுவான். ஆனால், இந்த வருடம், தன்னுடைய மாமனார் குடும்பத்தாரையும், அழைத்துக்கொண்டு, ஒரு வண்டி பிடித்துச் செல்ல முடிவு செய்து, சிவகாசிக்கு வந்தனர் கார்த்திக் குடும்பத்தார். ஸ்டேஷனில் இருந்து ஆட்டோவில் ஏறிப் பத்து நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.
“வாங்க மதினி, மெதுவா எறங்குங்க” என்று கார்த்திக்கின் அம்மாவைக் கை பிடித்துக்கொண்டார், மறுகையில் பையை வாங்கி வாசலில் வைத்தார் கார்த்திக்கின் மாமியார்.
“வாங்க மாப்ள, நல்ல வேள ட்ரெயின் லேட்டா வரல” என்று கார்த்திக்கிடம் பேசிக்கொண்டு, “டேய் தர்ஷன் குட்டி, என்ன ட்ரெய்ன்ல நல்ல தூங்குனிங்களா?” என்று தனது 10 வயதுப் பேரனை அணைத்தார்.
“பாப்பா, வாம்மா .. நீங்க உள்ள இருக்குற ரூம்ல போய் தூங்குறீங்களா? என்று மகளிடம் மெதுவாகக் கேட்டுக்கொண்டு, “மாப்ள டீ போட்டுட்டேன், கொண்டு வரட்டுமா? இல்ல இன்னும் கொஞ்சம் நேரமாகட்டுமா? என்றார்.
“இல்ல அத்தை நேரமாகட்டும் , மாமா மேட்ச் ஆபீஸ் திறக்க போயிருப்பார்ல? அவர் 9 மணிக்கு வர்ற நேரத்துல வரேன் என்று பெட்ரூம் சென்றுவிட்டான். கார்த்திக்கின் மாமனார் என்றுமே அதிகாலை 6 மணிக்கே தீப்பெட்டி ஆபீஸ் சென்றுவிடுவது வழக்கம். ஒரு அளவான தீப்பெட்டித் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இரண்டாவது தூக்கத்தைத் தூங்கி முடித்து, கையை நீட்டி துலாவி தன்னுடைய கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான் கார்த்திக். மணி 9, அடுத்த 5 நிமிடத்தில் அவனுடைய போனில் whatsapp, மெசஜஸ் செக் செய்துவிட்டு, 20 நிமிடத்தில் குளித்து முடித்து , மாமாவுடன் அமர்ந்து டிபனை முடித்தான். நாளை கோவில் செல்ல இருக்கும் பிளான், வண்டி விபரம் கேட்டறிந்தான்.
“மாமா, இன்னோவா கார்லா AC முக்கியம் சொல்லிருங்க, அப்டியே, நீங்க ஆபீஸ் போற வழில என்ன பஜார் ல இறக்கி விடுங்க, நெட் சென்டர் போகணும். ஒரு ரிப்போர்ட் அனுப்பனும், 2 நாள் லீவு போட்டுட்டேன்ல ஒரு சின்ன வேலைய மிச்சம் வச்சிட்டேன் ” என்று கூறினான்.
பைக்கில் சென்று கொண்டே, மீண்டும் குலதெய்வ கோவில் செல்வது பற்றி சிந்தித்துக்கொண்டு இருந்தான்.
நேற்று ட்ரைனில் கார்த்திக் அம்மா சொன்னது நினைவு வந்தது, “இது உனக்கு 25 வது வருஷம் பா, ஞாபகம் இருக்கா?. “இந்த குலதெய்வம் கோவிலுக்கு போறதெல்லாம் அப்போ எங்க காலத்துல பழக்கமில்ல, உங்க அப்பா அவளோ வசதி இல்லாததால, திருச்செந்தூர் வந்து தேரிக்குடி கோவில் போக முடியாது”. “ஆனா, கொஞ்சம் பிடி மண் வச்சு நம்ம சின்னமனுர் பக்கத்துல சங்கராபுரம்னு ஒரு எடத்துல வருஷ வருஷம் கிடா வெட்டி கும்புடுவாங்க. வருஷம் தவறாம டவுன் பஸ்ல போய்ட்டு வருவோம். “ ரொம்ப வருஷம் கழுச்சு, நம்ம ரெண்டு தெரு தள்ளி இருந்த சாந்த அக்கா தான் சொன்னாங்க, வேன் பிடிசிட்டு குலதெய்வம் கோவிலுக்கு போறோம், உன் பையன அனுப்பு , 65ரூ வேனுக்கு கொடு போதும், பத்திரமா, கூட்டிட்டு கொண்டாராம் னு சொன்னங்க. அப்போ நீ 9த் படுச்சுகிட்டுஇருந்த”, எனக்கு ரொம்ப யோசனை தான், ஆனா நீதான் “போயிடு வரேன் மா, கூட அவங்க மகன் , அதான் வேலு, என்னோட தெரு friend வரான்ல”னு கெளம்புன”.
“பஜார் வந்துருச்சு, அந்த சந்துல தான மாப்ள” என்று பைக்கை நிறுத்தினார் கார்த்திக் மாமனார். இறங்கி மெல்ல நடந்து “வேல முடுஞ்சவுடனே ஆட்டோ ல வீட்டுக்கு போயிடுறேன் மாமா” என்று சந்துக்குள் நடந்தான் கார்த்திக்.
இன்டர்நெட் சென்டரில் இரெண்டாம் வரிசையில் கடைசி கேபின் எடுத்து, email செக் பண்ணிக்கொண்டு, தன்னுடைய அலுவலை சில நிமிடத்தில் முடித்தான். பர்சனல் மெயில் செக் பண்ணலாம், ரொம்ப நாளாச்சு என்று பரௌஸ் செய்தான்.
“வேலு ன்னே ” என்று ஒருவன் குரல். “10த் கிளாஸ் சயின்ஸ் ப்ராஜெக்ட், மாடல் ஏதாச்சும் ரெடிமேட இருக்கா, என்று சென்டர் நோக்கி ஒரு பள்ளி மாணவன் வந்தான்.
“எல்லாம் அந்த லாஸ்ட் சிஸ்டத்துல இருந்துச்சு, நேத்துத்தாண் பார்மட் பண்ணினேன்” என்று சென்டர் அட்மின் சொல்லக்கேட்டேன் கார்த்திக். தன்னுடைய காபின்லிருந்து தலையை தூக்கி ஒருமுறை அந்த வேலு என்ற அட்மினை உற்றுநோக்கினான்.
“வேலு ன்னே கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க”, என்று அந்த பள்ளி மாணவன் சொல்ல, “நீ அந்த லாஸ்ட் வரிசையில இருக்குற கடைசி சிஸ்டம் எடுத்துக்கோ, 15 நிமிசத்துல வரேன் னு சொன்னார் அந்த அட்மின். அடுத்து நிமிடம் மூன்றாம் வரிசையின் கடைசி கேபின் எடுக்கப்பட்டது.
மீண்டும் பிரௌஸ் செய்துகொண்டு, என்ன செய்கிறோம் என்பது மறந்து, தேரிக்குடி கோவில், வேலு, முதல் குலதெய்வ கோவில் பயண அனுபவம் பற்றி நினைத்தான்.
கார்த்திக்கின் வாழ்க்கையில் இதுவரை “பங்காளி” என்று வேலு வை தவிர வேறு யாரும் அழைத்ததில்லை. வேலு இவனை விட ஒரு ரெண்டு வயது மூத்தவன், ஆனால் பார்ப்பதற்கு கார்த்திக்கின் தம்பி போல தான் இருப்பான். அப்போவே வேலு கொஞ்சம் அலட்டல் சுபாவம் தான். தனக்கு எல்லாம் தெரிந்தவன் போலத்தான் இருப்பான், கொஞ்சம் பணக்காரன் வேறு, சொல்லவா வேணும், பல விஷயங்களுக்கு முன்னோடி.
கடைசி சிஸ்டம்மில் இருந்த அந்த பள்ளி மாணவனுக்கு ஒரு போன் கால், அவன் அட்டன் செய்து கொண்டு இருந்தான். கார்த்தி மனதில் “நம்ம செல்போன பார்த்தது காலேஜ் பைனல் இயர்ல தான் , அதுவும் ஒன்ன சொந்தமா வாங்குனது, வேலைக்கு சேர்த்து 2 வருஷம் கழுச்சுதான், ஆனா இப்போல்லாம் ஸ்கூல் பசங்க கிட்ட 2 இருக்கு, கொடுமைடா ” என்று மனதுக்குள் சொல்லி சிரித்தான்.
கொஞ்சம் காது கொடுத்து கேட்டான் கார்த்திக் , அந்த சிறுவன் யாரோ ஒருவனிடம் ” ம்ம் ஆமாடா…சுஜா அக்கா, அதான் நம்ம பஜார் ஸ்மைலி சுஜா, எங்க வீடுக்கு அடுத்த வீடு, .. “ “எப்படியா ? எங்க வீட்ல எல்லாம் திருப்பதி போய்ட்டாங்கலா, அம்மா சுஜா அக்கா வீட்ல நைட் படுத்துக்க, ரெண்டு நாளுல வந்துடுவோம்னு சொல்லிட்டாங்க”. “ம்ம் அதுவா? சுஜாகா வீட்டுக்கார் திருநெல்வேலி போய்ட்டாராம் , நானும் ரெண்டு நாளு நைட் அங்கதான் படுத்தேன், என்னென்ன ஆச்சு தெரியுமா?” என்று மிக மெல்லமாய், அய்யயோ, அத உன்கிட்ட நேருல வந்து சொல்றேன்” என்று போன் ஐ துண்டித்தான்.
கேபினிலிருந்து பள்ளி மாணவன் எழுந்து, “னா அரமநேரத்துல வரேன்” என்று இன்டர்நெட் சென்டர் அட்மினிடம் சொல்லி ஓடினான்.
சற்று, அதிர்ந்து பொய் கார்த்திக், கண் விரித்து, பின் தன்னைத்தானே தேற்றி கொண்டான்.
அந்த சிறுவன் பேசியது தற்போது, இவனுக்கு, வேலு வை பற்றியும், மீண்டும் அந்த முதல் வருட பயணம் நினைவு பற்றி ஆழ எழுந்தது.
சின்னமனுரில் இருந்து வேனில் முதல் முறை கோவிலுக்கு சென்ற போது வேலுவை யும், கார்த்திக் கை யும், வேன் கதவு அருகில் இருந்த படிக்கட்டில் உட்கார வைத்தார் வேலுவின் அப்பா. “ பிஸ்கட் சாப்பிட்ரய பங்காளி”, என்று கேட்டான் வேலு. என்னதான் அலட்டல் காரன இருந்தாலும், கார்த்திக்கிடம் கொஞ்சம் நட்பாய் தான் இருந்து வந்தான். “வண்டில இருக்குற பெருசெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல தூங்கிடும்”, “கருப்புசாமி சித்தப்பா கிட்ட சொல்லிட்டேன், ஆண்டிபட்டி outer ல , நிப்பாட்டி ஒரு தம் அடிக்கலாம் “, என்று வேலு சொல்ல, கார்த்திக் கால் நடு நடுங்கிவிட்டது. “கருப்புசாமி சித்தப்பா வும், வேலும் திருட்டு தம் அடிக்க பிளான் போட்டு இருந்தனர்.
டிரைவர் அண்டிபட்டியில் வண்டியை ஓரம் கட்ட , ஒரு சிலரே, சிறுநீர் கழிக்க இறங்க, கார்த்திக் , வேலு, சித்தப்பா, மற்றும் டிரைவர், தேநீர் கடையில் தஞ்சம்.
“பங்காளி, இதான் “வில்ஸ்” சிகரெட் , என்று பத்த வைத்து ஒரு இழுப்பு வேலு இழுக்க, “நீ ஒரு இழு”? என்று கேட்க, அதிர்ந்து போய் நின்றான் கார்த்திக், வேண்டாம் என்றவாறு தலை அசைத்தான்.
“இதெல்லாம் வேணாம்டா” என்று கார்த்திக் சொல்ல, “அட நா, ஒரு வருசமா அடிக்கிறேன், ஒண்ணுமாகாது டா, பங்காளி” என்று ஒரு ஹால்ஸ் மிட்டாய் யை வாயில் போட்டான, இருவரும் வண்டி யை நோக்கி நடந்தனர்.
கருப்புசாமி சித்தப்பா இவன் பின்னே வர “ஒரு வருசமா…?, நாய் பொய் சொல்லுது, ரெண்டு நாளாத்தான் அடிக்குது, அதும் என்ன வாங்கிட்டு வர சொல்லி” என்று முணுமுணுத்தது கார்த்திக் காதில் விழுந்தது.
அடுத்த அரைமணி நேரம், ஒரு கெட்ட நாற்றத்துடன் தொண தொண என்று பேசி வேலு, கார்த்திக்கை எரிச்சல் மூட்டினான், வார்த்தைக்கு ஒரு முறை “பங்காளி” வேறு. கார்த்திக் சிரித்த முகத்துடன், சகித்து கொண்டு, வேறு வழியின்று பயணித்தான், தேரிக்குடி கோவில் செல்லும் வழி வரை இதுவரை 4 முறை வண்டி நிறுத்தப்பட்டும், ஒரு முறையும் தவறாது வேலு வில்ஸ் ஐ முழுதாக முடித்தும் இருந்தான். கார்த்திக் மனதில் “இவன் தான் அந்த பிஞ்சுல பழுத்தவன் போல, இவன போய் நம்ம அம்மாகிட்ட friend னு சொல்லிட்டேனே ” என்று எண்ணினான்.
தேரிக்குடி – பரந்த செம்மண் காடு, எண்ணில் அடங்கா பனை மரங்கள், ஆயிர கணக்கான மக்கள், கொட்டு மேளம், ஆங்காகே கூடாரம் என் திருவிழா பிரணமிப்பை தந்தது. கடைகள் நிரம்பி வழிந்தன, ராட்டினம் நிற்க நேரமில்லை, காலை முதல் இவை அனைத்தும் கண்டு வியப்பில் இருந்தான் கார்த்திக்.
அய்யனார் கோவில்லில் சாமி கும்பிட்டு விட்டு, கார்த்திக்கும், வேலுவும் வெளியே வந்தனர். “பங்காளி, வா அப்டியே இந்த தேரிக்காடு சுத்தி வரலாம்” என்று கூறி, தன்னுடைய மேல் சட்டை பையில் 2 சிகரட் இருப்பதை உறுதி செய்தான் வேலு.
சிறிது தூரம் செல்ல, ஒரு பனை மரமடியில் அமர்ந்தனர். “பங்காளி கூட்டத்தை பாத்தியா ? எப்படி கலர் கலர் ஆ இருக்கா?” , என்று வேலு கண்ணடித்து கேட்க, “அய்யயோ யாராவது கோவில்ல வந்து இப்டி பாப்பாங்களா” என்று கார்த்திக் சொல்ல, “அப்போ வேற எங்க பாத்துருக்க? இல்ல தொட்டுருக்க பங்காளி” என்று வேலு கேட்க, ஒரு விதமாக சிரித்து மழுப்பினான் கார்த்திக்.
“தொடலாம் இல்ல, எங்க class ல இருக்க girls ட பேசுவேன் அவ்ளோதான், ஏன் நீ எப்படி?” என்றான் கார்த்திக்.
“பேச்சியக்கா தெரியுமா ? எங்க எதுத்த வீடு, இப்போதான் ஊர காலி பண்ணி குடும்பத்தோட மதுரை போச்சு ல” என்று சொல்ல, கார்த்திக் “ரொம்ப நல்லா தெரியுமே, அம்மா கிட்ட அப்பப்போ கடன் வாங்கிட்டு போவாங்க” என்றான்.
“ம்ம்…., அந்த பேச்சி அக்கா, நம்ம வீட்லதான் வேலை பாத்துச்சு, தெரியுமா பங்காளி?. எனக்கு தெரியாது என்பதுபோல் தலை அசைத்தான் கார்த்திக்.
“ஒரு விஷயம் சொல்றேன் யார்ட்டையும் சொல்லிராத பங்காளி”, என்று சொல்லி, கார்த்திக் தலை அசைக்கும் முன்பே ஆரம்பித்தான் வேலு .
“அது ஆளு போட்ஸா இருக்கும், எனக்கும் ஒரு கண்ணு தான், ஒரு நாள் வீட்ல எல்லாம் ஊருக்கு போய்ட்டாங்க, அம்மா பேச்சி அக்காவை, எனக்கு துணைக்கி படுக்க சொல்ல்லிட்டாங்க, ராத்திரில…” என்று தொடங்கினான் வேலு.
கார்த்திக்கின், மனது தனது கைகளை கொண்டு காதுகளை பொத்த தூண்டியது, ஆனால் அவன் அப்படி செய்யவில்லை, இதுபோல ஒரு விஷயத்தை கேட்டுயிராது இருந்தவன், இன்று காதுகளை தீட்டினான். மனது பட பட வென்று அடித்துக்கொண்டு தான் இருந்தது, ஆனாலும் சுத்தி சுத்தி பார்த்துவிட்டு, வாயை பிளந்துகொண்டு கேட்டான். இடை இடையில், “அப்டியா”?, “அப்ரோம்”, “ஐயோ”!! என்று மிக குறைந்த அளவு வார்த்தைகள் மட்டுமே வந்தன கார்த்திக்கிடம் இருந்து. கிட்ட தட்ட ஒரு முழுநீள நீல படம் ஒரு கோவில் வளாகம் அருகில் நடந்தேறியது போல் அவனுக்கு தோணியது.
“பங்காளி எப்படி”? என்று வேலு சொல்லி முடிக்க, அவனிடம் இருந்த 2 சிகரட் முழுவதுமாக முடிந்து இருந்தது. கார்த்திக், அடுத்த சில நிமிடம் மௌனம், இவன் உடம்பில் ஒரு ரசாயன மாற்றம் நடந்து முடிந்தது, எழுந்த நின்று, ஒரு சோம்பல் முறித்து, கால் விரல்களை மணலில் பதிய அழுத்து மடக்கி, தலையை அசைத்து “வேலு நீ, பெரிய ஆளு தான்” என்றான்.
இரவு கிளம்பி அடுத்தநாள் விடிய சின்னமனுர் வந்து சேர்த்தனர்.
பேச்சி அக்கா பற்றியும், வேலு பற்றியும் கார்த்திக்கின் நினைவு ஒரு படம் போல் சில நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது.
ஆரம்பத்தில் சில வருடங்கள் அந்த நினைவுகள் ஒரு விதமான ஆனந்தம் அளித்தாலும், போக போக அது ஒவ்வொரு வருடமும், கோவிலுக்கு செல்லும் நாட்களில் வேதனை அளித்தது.
“சார் ஒரு மணி நேரம் ஆச்சு”, பிரௌசிங் டைம் எக்ஸ்டெண்ட் பண்ணட்டுமா என்று அட்மின் கேட்டான்.
நோ தேங்க்ஸ்” என்று வீட்டுக்கு கிளம்பினான் கார்த்திக் சற்று மன கலக்கத்துடன்.
தேரிக்குடியில் இன்னோவா கார் கோவில் வாசலில் உள்ள பார்க்கிங் அருகே நின்றது. அனைவரும், தேங்கா பழ தட்டுடன் சாமி தரிசனம் செய்ய சென்றனர். மிதமான கூட்டம், ஒரு மணி நேரத்தில், தரிசனம் முடித்து வந்தனர். அனைவரும் முன் செல்ல, கார்த்திக் தன் அம்மாவை கை பிடித்து மெல்ல பின் நடத்தி வந்தான். “சாந்தக்கா எதுத்தாப்ல வராங்க பாரு” என்று அம்மா சொல்ல, கார்த்திக் உற்று நோக்கினான். அம்மாவை சட்டென்று கண்டு அவர்கள “என்னபுள்ள நல்லா இருக்கயா, தம்பி, கார்த்திக் தான”?, என்று கேட்டு முடிக்க அம்மாவும் அவர்களும் அருகில் உள்ள திண்ணையில் பேச அமர்ந்தனர்.
ஆர்வம் காட்டாத கார்த்திக்கிடம் “வேலு குடும்பத்தோட வந்துருக்கான்” என்று வேலுவின் அம்மா சொல்ல சற்று பத பதைத்தான் கார்த்திக்.
“பேசிகிட்டு இருங்க இதோ வரேன்” என்று சொல்ல கார்த்திக் முற்பட்டான், சில எட்டுக்கள்தான் வைத்துஇருப்பான் , சட்டென்று முதுகில் கைவைத்த வேலு , “என்ன பங்காளி, இப்போதான் அம்மா சொல்லுச்சு, அந்த ப்ளூ சட்டை தான் போய் பாத்துட்டு வானுச்சு”. எப்போ வந்த?” என்று ஆரம்பித்தான்.
பெரிதாக ஒன்றும் கார்த்திக் பேசவில்லை, “கொஞ்சம் ஓரமா வா, ஒரு விஷயம் என் மண்டையில ஓடிட்டு இருக்கு, தாங்க முடியல, இந்த கோவிலுக்கு வர்ற போதுதெல்லா அந்த ஞாபகமும் கூடவே வருது, எல்லா உன்னாலதான். என்ன சொல்றது னு புரிலே” சற்றே பதட்டமானான் கார்த்திக்.
“என்ன சொல்ற பங்காளி”, அப்டி என்ன விஷயம்? என்று கேட்க,
“பன மரத்தடில பேசுனது, நீ அப்போ 11த் படுச்சன்னு நெனைக்கிறேன்” என்றான் கார்த்திக்.
“பங்காளி எது அந்த பேச்சிக்கா விஷயமா”? கொள்ளென சிரித்தான்.
“நம்பிட்டயா? அப்போ சும்மா அடிச்சு விட்டேன் பங்காளி.”
“அந்த அக்கா பக்கத்துல போன தலைல ஒரே ‘கொட்டு’ வைக்கும், மண்டை வீங்கிரும்.”
“நான் சும்மா தான் சொன்னேன். இன்னுமா அத நெனச்சுட்டு இருக்க”, “விடு விடு, பழச மறந்துரு, நீ சென்னைலயா இருக்க? என்று வேலு சொல்ல வாயடைத்து நின்றான்
“ அப்பா பிசினஸ் ரொம்ப loss ஆச்சு, நா இப்போ என் பொண்டாட்டி ஊருல செட்டில் ஆகிட்டேன். ரொம்ப தூரம்லாம் இல்ல பங்காளி சிவகாசிதான், மாமனார் வீட்டுல இப்போ சப்போர்ட் பன்றாங்க, மார்கெட்டிங் வேலை, அவளும் பஜார்ல ஒரு சின்னக் கடைய பாத்துக்குறா, மாசத்துல பாதி நாள் சுத்திகிட்டே இருப்பேன்.
அதோ வர்றா பாரு அவ தான் என் wife சுஜா , என்று சொல்ல எதிரில் வந்தவரை அறிமுகம் செய்தான் வேலு , இடைமறித்து “ஸ்மைலி சுஜா” அப்டினு சொன்னா எங்க சிவகாசி பஜார்ல எல்லாருக்கும் தெரியும்” என்றார் வேலுவின் மனைவி.
“நங்” என்று மண்டையில் அடித்தது போல கார்த்திக்கு மீண்டும் தலைசுற்ற, சற்றே நிதானித்து “ஓ! ரொம்ப நல்லது, நீங்க நல்லா தலையில கொட்டு வைப்பிங்களா?” என்று கார்த்திக் கேட்க, அவள் முழித்தாள்.
எல்லாம் புரிந்தது போல வேலு வாய்விட்டுக் கொல்லக்ச் சிரித்தான்.
***