சுதந்திர பூமியில்… (In the Land of the Free)

ஆங்கில மூலம்: சுய் ஜ்யான் ஹுவா (SUI SIN FAR) (1865-1914)

தெலுங்கு மொழிபெயர்ப்பு: காகானி சக்ரபாணி  

தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

சீனமொழிக் கதைகளை படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைப்பதில்லை. அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த சில சீனர்கள் ஆங்கிலத்தில் கதைகள் எழுதியதால் சீனர்களின் கலாசாரம் குறித்த அறிமுகம் நமக்குச் சிறிதளவு கிடைக்கிறது. ‘ஈடித் மாட் ஈட்டன்’ (Edith Maude Eaton) என்ற இந்தப் பெண் எழுத்தாளரின் தந்தை ஆங்கிலேயர். தாய் சீனப் பெண்மணி. ஈடித்துக்குச் சீனக் கலாசாரத்தின் மீது விருப்பம் அதிகம். அவர் SUI SIN FAR என்ற புனைப் பெயரில் எழுதி வந்தார். சுதந்திர பூமியில்… (In the Land of the Free) என்ற இந்தச் சிறுகதையில் அமெரிக்கா போன்ற சுதந்திர நாட்டில்கூட சுதந்திரத்திற்குத் தொகை செலுத்த வேண்டியுள்ளது என்பதை நமக்கு தெரிவிக்கிறார்.

ஈடித் (15 மார்ச்,1865 -7 ஏப்ரல்,1914) வட அமெரிக்காவில் வசிக்கும் சீனர்கள் பற்றியும் சீனர்களின் அமெரிக்க அனுபவம் பற்றியும் எழுதியுள்ளார். ஆங்கிலேயரான இவர் தந்தை வியாபாரத்தின் பொருட்டு ஷாங்காய் சென்றபோது சீனப் பெண்மணியான எடித்தின் தாயைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். எடித் இங்கிலாந்தில் பிறந்தார். அந்தத் தம்பதிகளின் மூத்த பெண் இவர். 14 குழந்தைகளில் இரண்டாமவர். 1870ல் அந்தக் குடும்பம் அமெரிக்காவில் உள்ள ஹட்சனுக்கும் அதன் பின் கனடாவிலுள்ள மாண்ட்ரியல், கியூபெக் நகரங்களுக்கும் புலம் பெயர்ந்தார்கள். பெரிய குடும்பத்தின் பாரத்தைப் பராமரிக்க எடித்தின் தந்தை மிகவும் சிரமப்பட்டார். ஈடித்தின் பால்யம் ஏழ்மையிலேயே கழிந்தது. ஆயினும், பெற்றோர் குழந்தைகளுக்கு வீட்டிலேயே பாடம் கற்பித்ததால் சிறுமியாக இருந்தபோதே ஈடித் எழுதத் தொடங்கினார். இவருடைய தங்கை வின்னிப்ரெட் ஈடன் கூட ஓனடோவதன்னா என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார். மாண்ட்ரியல் ஸ்டார், டெய்லி விட்னஸ் பத்திரிகைகளில் எடித்தின் படைப்புகள் பிரசுரமாயின. அதன்பின் இவர் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில் ஆகிய நகரங்களில் வசித்து இறுதியாக பாஸ்டனில் நிலைபெற்றார். 

இவர் ஆங்கிலேயர்களின் அமெரிக்காவில், சீனப் பெண்களின் வாழ்க்கை பற்றியும் சீன அமெரிக்கர்களின் வாழ்வு பற்றியும் பல கதைகளை எழுதியுள்ளார். இவருடைய கதைகளின் தொகுப்பு (Mrs. Spring Fragrance) 1912ல் பிரசுரமானது. அவை ஒன்றோடொன்று தொடர்புடைய கதைகள். நாவல் என்றுகூட இந்த தொகுப்பைக் கூறுவர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கனடாவின் மாண்ட்ரியலில் தன் 49ம் வயதில் காலமானார்.

ஈடித் எங்கிருந்தாலும் அவருக்குச் சீன தேசத்தின்மீது அளவு கடந்த விருப்பம். வெள்ளைக்காரர்களின் அமெரிக்காவில் சீனப் பெண்களின் வாழ்க்கை குறித்துப் பல கதைகள் எழுதியுள்ளார். சுதந்திர பூமியில்… என்ற கதையும் அது போன்ற ஒன்றுதான்.

ராஜி ரகுநாதன்

~oOo~

“பாருடா செல்லம்! காலை உதயத்தில் சூரியன் எத்தனை பிரகாசமாக இருக்கிறான்… பார்த்தாயா? உன் எதிர்கால வாழ்க்கை முழுவதும் இங்கேதான் வாழப் போகிறாய்! எத்தனை அழகான நாடு! நீ இங்கு சுகமாக இருப்பாய்”

முழுமையான நம்பிக்கையோடு கூறிய அம்மாவின் முகத்தை தலைதூக்கிப் பார்த்தான் குழந்தை. அவன் சாக்லெட்டை ருசித்து சப்பிக்கொண்டிருந்தான். அப்போதும் அவன் “ஊ..ங்…ஊ…” என்று அம்மாவின் சொல்லுக்கு ஊம் கொட்டுவதை நிறுத்தவில்லை. 

“ஆமாண்டா… என் செல்லக்குட்டி! இங்கேதான் உன் அப்பா உனக்காக ஏராளமாக செல்வம் சேர்க்கப் போகிறார். உங்க அப்பாடா…! இதோ வரப்போகிறார்… அவரை பார்த்தால் உனக்கு எத்தனை சந்தோஷமா இருக்கும் தெரியுமா? உனக்காகத்தான் செல்லக் கண்ணா…! நான் இத்தனை காலம் அவரை விட்டுப் பிரிந்திருந்தேன்”

ஆறுதலாக அம்மாவின் முழங்கால் மீது தலை சாய்த்த மகனைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டாள். இரண்டு வயது குழந்தை. உருண்டை முகம். குழி விழும் அழகிய கன்னங்கள். ஒளிரும் கோதுமை நிறக் கண்கள். உறுதியான சிறிய உடல்வாகு.

“ஆஹ்… ஆஹ்…!” என்று கன்னங்களை உப்பி அருகில் நீராவி விட்டபடி செல்லும் படகைப் போல நடித்து சிரித்தான் குழந்தை. 

சான்பிரான்சிஸ்கோ நகரின் கரையில் படகுகள் வரிசையாக நின்றிருந்தன. பிற கப்பல்கள் பெரியவையும் சிறியவையும் பிலிப்பைன்ஸில் இருந்து வந்திருந்த வெள்ளை போக்குவரத்து படகுகளோடு கூட கரையிலிருந்து தொலைவில் நங்கூரம் பாய்ச்சியிருந்தன. ‘ஈஸ்டன் க்வீன்’ கப்பல் துறையை வந்தடைவதற்கு சற்று தாமதமாகியது. கப்பல் துறையை அடைந்த பின்னும் ஒரு மணி நேரமாக தீரத்தில் காத்திருக்கும் ஒற்றைச் சீனாக்கார மனிதனை அதிகாரிகள் மேலும் சற்று நேரம் தாமதிக்கச் செய்தனர். அவர் தன் மனைவியையும் குழந்தையையும் வரவேற்பதற்கு கப்பலில் ஏற விடாமல் நிறுத்தி வைத்தார்கள்.

அவன் வந்தபின், “உங்கள் மகன்!” என்று மகிழ்வோடு கூறினாள் லேசூ. ஹோம் ஹிங் மகனை ஆசையோடு தூக்கிக்கொண்டான். குழந்தையின் சின்ன சின்ன கைகளையும் கால்களையும் தொட்டுத் தொட்டு பார்த்து மகிழ்ந்தான். கர்வமும் ஆனந்தமும் மிளிரும் கண்களால் மகனின் முகத்தைப் பார்த்தான். பின் தன் அருகில் நின்றிருந்த கஸ்டம்ஸ் அதிகாரியின் பக்கம் திரும்பிப் பார்த்தான். 

“அழகான பையன்!” என்றார் அதிகாரி. “எங்கே பிறந்தான்?”

“சைனாவில் பிறந்தான்” என்ற ஹோம் ஹிங் ஸ்டீமலிருந்து மனைவியை வெளியே அழைத்து வருவதற்குத தயாரானான். 

அவனிடம் “இதற்கு முன்பு இவன் அமெரிக்கா வந்திருக்கிறானா?” என்று கேட்டார் அதிகாரி.

“இவனா? இல்லை இதுதான் முதல் தடவை” என்று ஹோம் ஹிங் பதில் அளித்ததும் அந்த கஸ்டம்ஸ் அதிகாரி உடனே இன்னொரு அதிகாரியை அழைத்தார்.

“இந்த பையன் முதல் முறையாக அமெரிக்க வருகிறான்” என்று தெரிவித்தார். அந்த அதிகாரி யோசனையோடு முகவாயை தேய்த்துக்கொண்டார்.

“வருகிறோம்!” என்று ஹோம்ஹிங் கிளம்பினான். “நில்லுங்கள்! பையன் கரையில் இறங்குவதற்கு நாங்கள் அனுமதிக்க இயலாது. நீங்கள் எங்களிடம் காண்பித்த பத்திரங்களில் உங்களுடையதும் உங்கள் மனைவியுடையதும்தான் உள்ளன. அவற்றில் இந்தச் சிறுவனைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை” என்றார் அந்த அதிகாரி. அவர் குரல் அதிகாரத் தோரணையோடு ஒலித்தது.

“அரசாங்கம் பத்திரங்கள் அளித்தபோது பையன் பிறக்கவில்லை” என்று பதிலளித்த ஹோம்ஹிங்கின் குரல் அமைதியாகத்தான் வெளிப்பட்டது. ஆனால் அவன் கண்களிலும் மகனை இறுக்கி அணைத்துக்கொண்ட கரங்களிலும் சிறு அச்சம் எட்டிப் பார்த்தது.   

“என்ன சொல்றாங்க…?” என்று கேட்டாள் லேசூ சிறிதளவு கற்ற ஆங்கிலத்தில். அவள் குரல் சற்று நடுங்கியது. 

இரண்டாவது கஸ்டம்ஸ் அதிகாரி அவள் பக்கம் பரிதாபமாக திரும்பிப் பார்த்தார். “இந்த விவகாரம் எனக்கு சரியாகப் படவில்லை” என்று முனகினார்.

முதல் அதிகாரி ஹோம்ஹிங்கின் பக்கம் திரும்பி அதிகாரமான குரலில் கூறினார், “இந்த நாட்டிற்குள் நுழையும் அனுமதி பெறத் தகுதியான ஆவணங்கள் பையனுக்கு இல்லை. ஆதலால் அவனை நீங்கள் எங்களிடம் விட்டுச் செல்லவேண்டும்”

“என்ன சொல்றீங்க நீங்க? எங்க பையனை உங்களிடம் விட்டுட்டுப் போகணுமா?” என்றான் ஹோம்ஹிங் பதற்றமாக.

“ஆமாம். பையனை ஜாக்கிரதையாக பார்த்துக்க ஏற்பாடு செய்யப்படும். வாஷிங்டனில் இருந்து எங்களுக்கு அறிவிப்பு வந்தவுடன் பையனை உங்களிடம் ஒப்படைத்து விடுவோம்”

“ஆனால்… இவன் என் மகன்” என்றான் ஹோம்ஹிங் பலவீனமாக.

“ஆனால் அதற்கு அத்தாட்சி இல்லையே!” என்ற அதிகாரி தோளைக் குலுக்கினார். “இருந்தாலும் அரசாங்கத்திலிருந்து உத்தரவு வராமல் நாங்கள் இவனை உங்களோடு செல்ல அனுமதிக்க மாட்டோம்” என்றார் உறுதியாக.

“இவன் என் பிள்ளைங்க…!” மீண்டும் அழுத்தமாக கூறினான் ஹோம்ஹிங். “நான் சைனா வியாபாரி. சான்பிரான்சிஸ்கோவில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறேன். என் மனைவி ஒரு கனவு கண்டாள். கிளைகள் வளர்ந்த ஒரு பசுமையான மரம். அதில் மலர்ந்திருக்கும் ஒரு சிறப்பு சிவப்பு மலர். அவள் அதைப் பற்றி என்னிடம் கூறிய உடனே என் மகன் சைனாவில்தான் பிறக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்காக அவள் சைனா செல்ல வேண்டும் என்று நான் கூறினேன். என் மனைவி என் விருப்பத்தை நிறைவேற்றினாள். என் மகன் பிறந்த பிறகு என் தாயாருக்கு உடல் நலம் குன்றியது. என் மனைவி அவளுக்கு சேவை செய்தாள். அதன் பின் என் தந்தையும் நோய்வாய்ப்பட்டார். அவருக்கும் சேவை செய்தாள். இருவரும் மரணித்து விட்டார்கள். ஆனால் இறக்கும் முன்பு இருவரும் என் மனைவியையும் என் மகனையும் ஆசீர்வதித்தார்கள். அதன்பின் நான் அவளை அமெரிக்கா வரச்சொல்லி செய்தி அனுப்பினேன். எனக்கு இங்கே தொந்தரவு ஏற்படுமோ என்ற பயம் சிறிதும் இல்லை. நான் சைனா வர்த்தகன். இவன் என் மகன். என் மகன்தான்”

“நல்லா இருக்கு ஹோம்ஹிங். எப்படியானாலும் உன் மகனை நாங்கள் எடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று பதிலளித்தார் முதல் அதிகாரி.

“இல்லை…! நீங்கள் எடுத்துச் செல்ல முடியாது. இவன் என் மகனும் கூட” என்று முன்னாள் வந்தாள் லேசூ. குழந்தையை கணவனிடமிருந்து வாங்கி கைகளால் அணைத்து பிடித்துக் கொண்டாள்.

சில நிமிட நேரம் அதிகாரிகள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். பின் ஒரு அதிகாரி ஹோம்ஹிங்கை ஒரு புறமாக அழைத்து சென்று மெதுவாக ஏதோ கூறினார். செய்வதறியாமல் ஹோம்ஹிங் தலையை ஆட்டினான். 

திரும்ப வந்து மனைவியிடம் கூறினான், “இது சட்டம். கொஞ்ச நேரம்தான். நாளைக்கு காலை சூரியோதயம் வரைக்கும்தான்”

“நீயுமா…?” என்று அதிர்ந்து போய் கேட்டாள் லேசூ. 

அவள் மனம் துன்பத்தால் நிறைந்தது. ஆனால் பணிவை உடலெங்கும் நிறைத்துக் கொண்டு பழகிய அவள், குழந்தையை கணவனிடம் கொடுத்தாள். அவன் குழந்தையை முதல் அதிகாரியிடம் கொடுத்தான்.

மகன் உதைத்துக் கொண்டு அழுவதைப் பார்த்து தாய் தன் உடையால் முகத்தை மூடிக்கொண்டாள். தந்தை மௌனமாக அவளை முன் நோக்கி நடத்திச் சென்றான். அவ்வாறு அந்த நாட்டின் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

(2)

சூரியன் உதிக்கப் போகிறான். இரவு முழுவதும் கண்களை மூடவேயில்லை லேசூ. உடைமாற்றிக்கொண்டு கணவனை எழுப்பினாள்.

“பொழுது விடிந்துவிட்டது. போய் குழந்தையை அழைச்சுட்டு வா” என்றாள். கூறுவதற்குள் அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

அவன் கண்ணை தேய்த்துக்கொண்டு ஒருக்களித்து எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். ஒரு வெளிறிய நட்சத்திரம் ஆகாயத்தில் தென்பட்டது. “இன்னும் நேரம் ஆகவில்லை” என்றவன் மீண்டும் படுக்கையில் தலையை சாய்த்தான். 

“இன்னும் நேரம் ஆகலையா? ஐயோ…! நேற்று வரை நான் வாழ்ந்த நேரம் எல்லாம் சேர்த்தால் கூட நான் பெற்ற பிள்ளையை என்னிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்ற நேரம் இருக்காது” லேசூ முகத்தை மூடிக்கொண்டு கட்டில் அருகில் கீழே அமர்ந்தாள். 

ஹோம்ஹிங் எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு அவள் தலையை வருடினான். “ராத்திரி தூங்கினாயா” என்று கேட்டான்.

“தூக்கமா…?” என்று கேட்ட அவள் குரல் துயரத்தின் விம்மலாக வெளிவந்தது. “ஐயோ…! இந்த இருபது மாதங்களில் எந்த ஒரு இரவிலும் குழந்தை என் அருகில் இல்லாமல் நான் தூங்கியதில்லை. அப்படி இருக்கும்போது அவன் இல்லாமல் என் கண்களில் உறக்கம் எப்படி வரும்? நீ ஆண். அந்த உனக்கு என்ன தெரியும் அந்த சின்னச் சின்ன குட்டிக் கைகள்… கால்களின் ஸ்பரிசம்…! அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று உனக்கு என்ன தெரியும்? இருட்டில் கூட என்னை பார்த்தால் அவன் கண்கள் ஒளிரும். அவனுடைய மழலை மொழியை கேட்டபடியே நான் தூங்கிடுவேன். இப்போது அவன் என்னுடன் இல்லை. அவனைத் தொட முடியவில்லை. அவன் பேச்சைக் கேட்க முடியவில்லை. ஐயோ…! என் குழந்தை…!”

“பொறுமை…! பொறுமை! நம்பிக்கையோடு இரு!” என்று மனைவியின் தோளைத் தட்டி அவளுக்கு ஆறுதல் கூறினான் ஹோம்ஹிங். “வருத்தப்படத் தேவையில்லை. அவன் சீக்கிரம் உன் மடியில் வந்து சேர்வான். தாயிடமிருந்து பிள்ளையை பிரிக்கும் சட்டம் எதுவும் இருக்காது”

லேசூ தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். “நீ சொல்வது உண்மைதான்” என்றாள்.

தன் கலிபோர்னியா தோழிகளுக்காக அவள் கொண்டுவந்த காணிக்கைகள் இருந்த பெட்டியை முந்திய நாள் மாலையே திறந்திருந்தாள். சில்க் ஆடைகள், எம்பிராய்டரி லேஸ்கள், தந்தச் சிற்பங்கள், அலங்கார மெழுகு பொம்மைகள், பித்தளை பாத்திரங்கள், கற்பூர மரப் பெட்டிகள், விசிறிகள், பீங்கான் கிண்ணங்கள்.. அனைத்தும் அறையெங்கும் குவியலாக அங்கங்கே  கிடந்தன. அந்த சாமான்களை பெட்டியிலிருந்து எடுக்கும்போது முன்பின் தெரியாதவர் கைகளில் குழந்தையை விட்டு வந்த வேதனை அவளை பலவீனமாக்கியது. சாமான்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்து அழுதாள்.

காலையில் அவற்றை எல்லாம் சரியாக அடுக்கி வைத்துவிட்டு பால்கனியை நோக்கி நடந்தாள். நட்சத்திரங்களின் மங்கலான ஒளி இதழ்கள் மேற்கு வானத்தில் தென்பட்டன. வீதியையும் சுற்றுப்புறத்தையும் குனிந்து பார்த்தாள். அவளும் அவள் கணவனும் வசிக்கும் அப்பார்ட்மென்டின் கீழ் உள்ள அறைகளில் சீனாவைச் சேர்ந்த பல பிரம்மச்சாரிகள் வசித்து வந்தனர். அவர்கள் காலையிலேயே சிற்றுண்டி உண்ணும் பரபரப்பு ஓசை அவள் செவிகளை வந்தடைந்தது. அவர்களின் உணவறைக்குக் கீழ் அவள் கணவனின் பலசரக்குக் கடை உள்ளது. வீதியின் அந்தப் பக்கம் ஒரு ரெஸ்டாரென்ட் உள்ளது. அது முந்தைய இரவு வண்ண விளக்குகளோடும் இசை வாத்தியங்களோடும் அதிர்ந்தது. குவாங் சும் தன் மகன் பிறந்து ஒரு மாதம் ஆகிய பண்டிகையை வெகுநேரம் சத்தமாக கொண்டாடினான். அந்த சத்தத்தை தாங்க இயலாமல் அவள் காதுகளை சுற்றி கைக்குட்டையால் மறைத்துக் கொண்டாள். மகனைப் பிரிந்த அவள் பிற பெற்றோரின் சந்தோஷத்தில் பங்கு கொள்ளும் மனநிலையில் இல்லை.

ஒரு பெண் கீழே வீதியிலிருந்து தலையை தூக்கிப் பார்த்து புன்னகைத்து கையசைத்தாள். அது குயி ஹோ. அவளுடைய பழைய வீட்டின் அருகில் வசித்தவள். கோல்ட் எம்பாசர் மார்க் சிங்கின் மனைவி. அவளுடன் மஞ்சள் சட்டை, ஊதா நிற பேண்ட் அணிந்த சின்னப் பையன் இருந்தான். அவன் சின்ன குழந்தையாக இருந்தபோது பார்த்திருக்கிறாள் லேசூ. பெருமூச்சை அடக்கிக் கொண்டு பதிலுக்கு கையசைத்தாள்.

“மகிழ்ச்சியாக இருக்கிறாய் போல் உள்ளதே..?” என்று குரல் கொடுத்தான் அவள் கணவன் உள்ளேயிருந்து.

“ஆம்…! இன்று என் செல்லம் வீட்டுக்கு வரப் போகிறான். எனக்கு அத்தனை ஆனந்தமாக இருக்கு அதை நினைத்தால்…” பதிலளித்த லேசூ புன்னகையோடு அறைக்குள் நுழைந்தாள்.

மத்தியானம் ஆயிற்று. பாத்திரத்தில் ஆவி பறக்கும் சாதமும் மூங்கில் தளிர்கள் சேர்த்து சமைத்த மணம் கமழும் கோழிக்கறியும் ஹோம்ஹிங் வரவுக்காக எதிர்பார்த்திருந்தன. அன்று காலை முழுவதும் ஒரு கணம் கூட லேசூ ஓய்வெடுக்க வில்லை. அவளுக்கு வீட்டுப் பணிகள் முடிவில்லாமல் இருந்தன. 

நெருப்பு பீடத்தின் மேலே விசித்திரமாக செதுக்கியிருந்த பலகை மீது தங்க முலாம் பூசிய கடிகாரத்தின் பக்கம் கண்ணுயர்த்தி அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருந்தாள். 

“இத்தனை நேரமாகிறதே…! ஏன் இத்தனை தாமதம்?” என்று ஒருமுறை நினைத்தாள். அதன் பின் தன்னில் தானே பேசிக் கொண்டாள். “லேசூவுக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது, தெரியுமா? அவளுடைய செல்ல குட்டிப் பையன் வரப்போகிறான் அல்லவா?” என்று நினைத்துக்கொண்டாள். ரொம்ப நேரம் கண்ணீர் விட்டாள். அவ்வப்போது சிரித்துக்கொண்டாள்.

ஹோம்ஹிங் வெறும் கையோடு வீடு திரும்பினான். 

“குழந்தை?” லேசூவின் குரல் கூக்குரலாக வெளிவந்தது.

“அவர்கள் என்னை மீண்டும் நாளைக்கு வரச்சொன்னார்கள்”

பொங்கி வரும் அழுகையை அடக்க முடியாமல் தரையில் விழுந்தாள் லேசூ. மதியம் கடந்து போனது. சமைத்த பதார்த்தங்கள் மேஜைமேல் உண்பாரின்றி அப்படியே கிடந்தன.

(3)

பருவமழை பெய்து முடிந்தது. கலிபோர்னியாவில் வசந்தகாலம் பிரவேசித்தது. மலைகள் பசுமைச் சேலையை அணிந்தன. மாறிக்கொண்டே இருக்கும் பூக்களின் அழகு அவற்றை அலங்கரித்தன.

ஆனால் லேசூவின் இதயத்தில் வசந்தம் பிரவேசிக்கவில்லை குழந்தை அவள் மடியைச் சேரவில்லை. அவனை ஒரு மிஷனரியில் சேர்த்திருந்தார்கள் அதிகாரிகள். வெள்ளை  வனிதைகள் அவனை வளர்த்து வந்தார்கள். அவன் ஒரு மாத காலம் தாய்க்காக அழுதுகொண்டே இருந்தான். யாராலும் அவனை சமாதானப்படுத்த இயலவில்லை. இப்போது புற அளவில் மகிழ்ச்சியாகவே தென்படுகிறான். புது இடத்துக்கு பழகிவிட்டாற்போல் காணப்பட்டான். அவன் லேசூவை விட்டுப் பிரிந்து ஐந்து மாதங்கள் கடந்து சென்றன. வாஷிங்டனில் இருக்கும் பெருமை மிகுந்த அரசாங்கம் அவனை அவனுடைய பெற்றோரிடம் சேர்க்கும் உத்தரவை அனுப்புவதில் தாமதம் செய்து கொண்டே இருந்தது.

ஹோம்ஹிங் ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி அபாகஸ் பெட்டியில் இருந்த மணிகளை மேலும் கீழும் உருட்டி கொண்டிருந்த போது ஒரு சுறுசுறுப்பான இளைஞன் கடைக்குள் நுழைந்தான்.

“என்ன செய்தி எடுத்து வந்தாய்?” பரபரப்பாக கேட்டான் அந்த சைனா வியாபாரி.

“இதோ…! இதுதான்” என்று அந்த இளைஞன் ஒரு டைப் அடித்த உத்தரவு கடிதத்தை எடுத்து நீட்டினான்.

ஹோம்ஹிங் அதை வாங்கி வாய்விட்டுப் படித்தான். “சான்பிரான்சிஸ்கோவில் 425 க்ளே ஸ்ட்ரீட்டில் வியாபாரம் செய்துவரும் சைனா வியாபாரியின் மகன் என்று கூறப்படும் சைனா சிறுவன் தொடர்பான விஷயம். இந்த விஷயம் முடிந்தவரை விரைவில் பரிசீலிக்கப்படும்”

ஹோம்ஹிங் கடிதத்தை திரும்பக் கொடுத்துவிட்டு ஒரு வார்த்தையும் பேசாமல் மீண்டும் தன் கணித எந்திரத்தின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

“ஏதாவது கூற போகிறீர்களா?” என்று கேட்டான் இளைஞன்.

“கூற என்ன இருக்கிறது? இது போன்ற உத்தரவுகள் இதுவரை எனக்கு 15 முறை அனுப்பிவிட்டார்கள். நீதானே அவற்றை எனக்கு எடுத்து வந்து காண்பித்தாய்?”

“உண்மைதான்” என்ற இளைஞன் வியாபாரிக்குத் தெரியாமல் அவனைக் கூர்ந்து கவனித்தான். அவனிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருந்தது. அதற்குத் தகுந்த நேரம் வந்து விட்டதா இல்லையா என்று குழப்பத்தில் இருந்தான்.

“உன் மனைவி எப்டி இருக்கா?” உற்சாகத்தையும் வேலைத் திறமையையும் காட்டி வினவினான்.

ஹோம்ஹிங் கவலை தொனிக்க தலைகுனிந்தான். “அவள் நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே வருகிறாள். நான் சமாதானப்படுத்தித் தான் அவளை சாப்பிட வைக்க வேண்டியுள்ளது. எப்பொழுதும் அழுது கொண்டே இருக்கிறாள். நல்ல ஆடை அணிவதில்லை. அலங்காரம் செய்து கொள்வதில்லை. மகிழ்ச்சியையே இழந்து விட்டாள். தோழிகளை  சந்திப்பதில் அவளுக்கு ஆர்வமே போய்விட்டது. இரவெல்லாம் எங்கோ சூனியத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள். இன்னும் ஒரு மாதம் இதே போல் கடந்தால் அவள் உயிரோடு இருக்கமாட்டாள்”

“அப்படி எதுவும் நடக்காது” உண்மையாகவே திடுக்கிட்டவனாக பதிலளித்த அந்த வழக்கறிஞன்  நேரமறிந்து விஷயத்தை வெளியே எடுத்தான். சீனத் தந்தையின் கண்களில் மகிழ்ச்சியின் ஒளிக்கீற்று தோன்றியது. 

“நீ வாஷிங்டன் சென்று என் மகனை திரும்பப் பெறும் உத்தரவை வாங்கி வருவாயா? உனக்குத தெரியாதா என் இதயத்தின் வலி? என்னை ஏன் கேட்கிறாய்? உடனே போ!” என்றான். 

“அப்படி என்றால் சரி. வரும் வாரம் நான் கிளம்பிச் செல்கிறேன்” என்றான் இளைஞன். “உன் மனைவி மனசாந்தியோடு உயிர் வாழ வேண்டும் என்பதால் மகிழ்ச்சியோடு நான் இந்த பணியை எப்படியாவது சாதித்து வருகிறேன்”

“இரு. நான் அவளை இங்கு வரச் சொல்கிறேன். நீ சொல்வதைக் கேட்டால் அவள் மகிழ்ச்சி அடைவாள்” என்றான் ஹோம்ஹிங்.

சுவரிலிருந்த துளை மூலம் மேலே வசிக்கும் லேசூவுக்கு செய்தி தெரிவித்தான். சில கணங்களில் அவள் கீழே இறங்கி வந்தாள். கண்கள் குழிவிழுந்து எதிலும் ஆர்வமின்றி காணப்பட்டாள். ஆனால் கணவன் அந்த இளைய வழக்கறிஞன் சொன்னதைக் கூறியதும் உற்சாகத்தால் அவள் உள்ளம் நிரம்பியது. கண்கள் ஒளிர்ந்தன. உருவத்தில் மாற்றம் வந்தது. கன்னங்களில் செந்நிறம் மீண்டது.

“அய்யோ…! அப்படியா?” என்று பலமாகக் குரலெழுப்பி ஜேம்ஸ் கிளான்ஸின் பக்கம் திரும்பினாள். “நீ நூறு மடங்கு நல்லவன்” என்றாள் தடுமாறும் ஆங்கிலத்தில்.

இளைஞன் சற்று நாணினான். சீனத் தாயின் தீர்க்கமான பார்வையைத் தவிர்த்து ஹோம்ஹிங் பக்கம் திரும்பினான். 

“அப்படியானால் நீங்கள் கொஞ்சம் செலவு செய்யணும். உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் செலவழிக்காமல் அரசாங்க சிப்பந்திகளிடம் விரைவாக வேலை வாங்குவது இயலாத செயல்”

ஒரு கணம் ஹோம்ஹிங் வெறுமையாகப் பார்த்தான். “எத்தனை தேவைப்படும் மிஸ்டர் கிளான்ஸி?” அமைதியாக வினவினான்.

“வேலை தொடங்கணும்னா குறைந்தபட்சம் ஐநூறாவது தேவை”

ஹோம்ஹிங் தொண்டையை கனைத்துக் கொண்டான். “எனக்காக கடிதம் எழுதுவதற்கும் இங்கே கஸ்டம்ஸ் அதிகாரியை சந்திப்பதற்கும் சென்றமுறை உனக்குத தொகை கொடுத்தபோது என்னிடம் இருந்தது எல்லாம் துடைத்துக் கொடுத்துவிட்டேன். உன்னிடம் கூட சொன்னேனே…!”

“அப்படியென்றால் நாம் இது குறித்து இனி பேச வேண்டாம். இப்போது பையன் இருக்கும் இடத்தில் சுகமாக உள்ளான். உன் மனைவியும் சிறிது நாளில் தேறி விடுவாள்”

“என்ன சொல்கிறாய் நீ?” நடுங்கும் குரலில் வினவினாள் லேசூ.

ஜேம்ஸ் கிளான்ஸி ஜன்னல் வழியாக வெளியே நோக்கினான். ஹோம்ஹிங் அவளிடம் விவரித்தான். “நம் மகனை அழைத்துக் கொள்வதற்கு நாம் நிறைய பணம் செலவழிக்கணுமாம்” 

“அவ்வளவுதானே…?” ஒரு கணம் வியப்பில் ஆழ்ந்தவள் இருவரையும் உற்றுப்பார்த்தாள். அப்போது விஷயம் அவளுக்குப் புரிந்து போனது. உடனே கோபமாக அந்த லாயரைப் பார்த்து உரத்த குரலில், “நீ நூறு மடங்கு நல்ல மனிதன் அல்ல! நீ வெறும் சாதாரண வெள்ளையன்!” என்றாள்.

“ஆமாம், மேடம்!” என்று இடுப்பை வளைத்து ஏளனமாக வணங்கினான் ஜேம்ஸ் கிளான்ஸி.

ஹோம்கிங் மனைவியை பின்னுக்கு இழுத்து மீண்டும் லாயரிடம் கூறினான், “சிறிது பணம் திரட்ட முயற்சி செய்கிறேன். ஆனால் 500 என்றால் என்னால் முடிகிற காரியமல்ல”

“நானூறூ?”

“உனக்குத்தான் சொன்னேனே என்னிடம் எதுவும் மீதி இல்லை. என் நண்பர்களில் யாரும் செல்வந்தர்கள் இல்லை”

“சரி..! நல்லது” லாயர் நிதானமாக கதவு பக்கம் நகர்ந்தான். சிகரெட் பற்ற வைப்பதற்கு வாயிற்படியருகில் நின்றான்.

“நில்லுப்பா… வெள்ளையனே…! நில்லு…!” உரத்த குரலில் அலறியபடி லேசூ முன்னோக்கிப் பாய்ந்து அவன் சட்டையின் இறுதிப் பகுதியை பிடித்து இழுத்து ஆவேசத்தோடு கூறினாள், “ஹோம்ஹிங் ஐநூறு டாலர்களை உனக்குக் கொடுத்தால் என் மகனை அழைத்து கொள்வதற்கு உத்தரவு வாங்கி வருவாய்… அப்படித்தானே?” 

லாயர் அலட்சியமாகத் தலையாட்டினான். இன்னும் தீப்பற்றாத சிகரெட்டின் முனையில் அவன் பார்வை நிலைத்திருந்தது.

“சரி… அப்படியானால் அந்த உத்தரவை முதலில் வாங்கி வா! ஹோம்ஹிங் உனக்கு ஐநூறு டாலர் கொடுப்பான். அதற்கு இரு மடங்கு நான் தருகிறேன்” தன் கரத்தில் அணிந்திருந்த கனமான கங்கணத்தைக் கழற்றி அவனிடம் தந்தாள். “நான் உள்ளே போய் இன்னும் எடுத்து வருகிறேன்” அவள் வந்த வழியே அவசர அவசரமாக திரும்பிச் சென்றாள்.

“இதோபார்…! இதனை நான் வாங்கிக் கொள்ள இயலாது” என்று கூறி ஹோம்ஹிங் அருகில் சென்று கங்கணத்தை அவன் முன் வைத்தான் ஜேம்ஸ் கிளான்ஸி.

“இதற்கு என்ன குறை? சுத்தமான சீனப் பொன். எங்கள் திருமணத்தின்போது என் மனைவியின் பெற்றோர் பரிசாக அளித்தது” என்றான் ஹோம்ஹிங் கம்பீரமாக. “இதுவும் பணம் போன்றதே…! அதோடு வாஷிங்டன் செல்வதற்கு உனக்கு பணம் தேவையென்றாயே…!”

 அதற்குள் லேசூ அங்கு வந்தாள்.

“இதோ பாரு…! என் பச்சைக்கல் பதித்த தோடுகள். பொன்னால் செய்த தலை கிளிப்புகள். தங்க பட்டன்கள். முத்தாலான சீப்பு, என் தங்க மோதிரங்கள்… ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து  மோதிரங்கள்…! எல்லாம் சுத்தத் தங்கம். இதெல்லாம் நிறைய பணம். இவை எல்லாவற்றையும் உனக்குத் தந்து விடுகிறேன். எடுத்துக் கொள்! என் செல்ல குழந்தையை அழைத்துக் கொள்வதற்கான அந்த உத்தரவை வாங்கி வந்துவிடு!” என்று லேசூ ஆபரணங்கள் அனைத்தையும் அந்த இளைஞனின் முன் ஒரு குப்பலாகக் கொட்டினாள்.

ஹோம்ஹிங் அவள் தோளைத் தொட்டு அவளை ஆறுதல்படுத்த முனைந்தான். “நீ கொஞ்சம் சும்மா இரு! இத்தனை தேவை இல்லை…!” என்றான் அவளிடம் சீன மொழியில்.

சிவந்த பூக்கள் கொண்ட செடியை அவள் கனவு கண்டபோது அவன் அவளுக்கு காணிக்கையாக அளித்த மோதிரத்தை தேடி எடுத்துக்கொண்டான். மீதி இருந்தவற்றை அந்த வெள்ளைக்காரனின் முன் தள்ளினான். “இவற்றை எடுத்துக் கொள்…! எடுத்துக்கொள்! அப்பாடா…!” என்றான். “நீ வாஷிங்டன் சென்று அந்த உத்தரவை பெறுவதற்கு இந்தத் தொகை உதவும்.

ஜேம்ஸ் கிளான்ஸி ஒரு கணம் சந்தேகத்தில் ஆழ்ந்தான். அதைப் பார்த்து, “இவை நல்ல சுத்தமான தங்கம். சந்தேகப்படாதே!” என்றாள் லேசூ. அவள் குரல் கெஞ்சுவது போல் இருந்தது.

அவன் அந்த ஆபரணங்களை அள்ளி தன் கோட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். கடையிலிருந்து வேகமாக நடந்து வெளியே சென்றான்.

(4)

நர்சரி பள்ளியில் மிஷனரி பெண்ணைப் பின்தொடர்ந்து சென்றாள் லேசூ. மகிழ்ச்சியில் அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. மூச்சுவிடுவதுகூட அவளுக்குச் சிரமமாக இருந்தது. இறுதியாக உத்தரவுக் காகிதம் வந்தது. தம்மிடமிருந்து சிறுவனைப் பிரித்துச் சென்ற பத்து மாதங்களாக லேசூவுக்கு சூரியன் உதிப்பதையே மறந்திருந்தான்.

நடந்துகொண்டே மிஷனரி பெண் உரையாடினாள். சிறுவனுக்கு கிம் என்று பள்ளியில் பெயர் வைத்துள்ளார்கள். அங்கு அவன் எல்லோருக்கும் பிரியமானவன். முதலில் அவனைப் பிடிப்பது மிகவும் கடினமாக இருந்ததாம். தாயைப் பிரிந்து இருக்க முடியாமல் அழுதுகொண்டே இருந்தானாம். மஷினர பெண் கூறியது எதுவும் அவள் காதில் விழவில்லை. மகனைப்  பார்க்கப்போகும் மதுரமான கற்பனையில் மிதந்து கொண்டிருந்தாள்.

“ஒரு கணம் இங்கேயே அமருங்கள்!” என்று மிஷனரி பெண் ஒரு நாற்காலியைக் காண்பித்தாள். “பிள்ளைகள் ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரம் இது!”

நீல நிறக் காட்டன் கோட், வெண்ணிற ஷூஸ் அணிந்த சிறுவனை நடத்தி அழைத்துக்கொண்டு அந்தப் பெண் திரும்பி வந்தாள். சிறுவனின் முகம் உருண்டையாக இருந்தது. கன்னத்தில் குழி. கண்கள் ஒளியோடு விளங்கின. 

“என் செல்லமே…! சின்னக் கண்ணா…!” என்று சோகம் இழையோட அழைத்தாள் லேசூ. 

முழங்காலில் அமர்ந்து தன் மகனை அருகில் இழுத்து அணைத்துக் கொள்ளக் கரங்களைப் பரபரப்பாக நீட்டினாள்.

ஆனால் சிறுவன் அவளிடமிருந்து தூரமாக விலகிச் சென்றான். தன்னுடன் வந்த வெள்ளை மிஷனரி பெண்ணின் ஸ்கர்ட் மடிப்புகளில் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சி செய்தான்.

“போ…! போ…!” என்று கையை உதறி உத்தரவிட்டான் தாயைப் பார்த்து.

~oOo~

2 Replies to “சுதந்திர பூமியில்… (In the Land of the Free)”

  1. கதையின் மொழிபெயர்ப்பு மிக அருமை ஆனால் அதில் சொல்லப்பட்ட கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை அமெரிக்கா ஜனநாயக நாடு இப்படிப்பட்ட நிகழ்வுகள் அங்கு சாத்தியமில்லை. அதனால் நான் கூகுளில் சென்று எழுதியவரை பற்றி படித்தேன் அதை நான் கீழே கொடுத்துள்ளேன் இவளுடைய அன்னையை சீனர்களிடம் இருந்து ஆங்கிலேயர்தான் காப்பாற்றி இருக்கிறார் . ‌ இவருடைய ஆங்கிலேய தந்தை சீனர்களை கடத்தல் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். ஆக கடத்தப்பட்ட குழந்தையோ என்ற சந்தேகம் வந்தால் அதிகாரிகள் முறையான தகவல் தெரியும்வரை கடத்தல்காரர்களிடம் குழந்தையை தர மாட்டார்கள். மனித உரிமை மீறல் எல்லாம் சீனாவில் தான் நடக்கிறது ஆனாலும் ஆசிரியர் தனக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டை விட்டுக்கொடுத்து சீன நாட்டிற்கு விசுவாசமாய் இருந்திருக்கிறார்.

  2. அருமையான சிறுகதை. அமெரிக்கா சுதந்திர நாடு என்பதெல்லாம் ஆய்வு. கதை- தாயின் தவிப்பு, தந்தையின் இயலாமை, வக்கீல் இளைஞனின் குணம், சூழலோடு இணைந்துபோன குழந்தை, தாயை அறியாத நிலை. சிறுகதை இலக்கணமாக சட்டென முடிவுற்றது கதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.