சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்

This entry is part 3 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

– பகுதி 2

ரவி நடராஜன்

வாதம் செய்வது என் கடமை
அதில் வழியைக் காண்பது உன் திறமை

-கவிஞர் கண்ணதாசன்

Tetraethyl lead சம்பந்தமான விபத்து, உயிரிழப்பு மற்றும் விஷ நோய் ஒரு புறமிருக்க, Bureau of Mines –ஐ, தான் திரித்த விஞ்ஞான முடிவை ஜி,எம். வெளியிடச் சொன்னது. 

இவர்களின் முடிவு, “பல விஞ்ஞானச் சோதனைகளுக்குப் பின், எங்களது முடிவு, Tetraethyl lead கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் கார்களால், பொதுமக்களுக்கு எந்த அபாயமும் இல்லை.”

செய்தித்தாள்கள், ஆய்வுக்கூட விபத்திற்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தங்களது முடிவை வெளியிட்டன. ஆனால், பல விஞ்ஞானிகள், ஸ்யன்டிஃபிக் அமெரிக்கன் போன்ற இதழ்கள், மற்றும் அமெரிக்க மருத்துவக் கழகம், இதில் ஏதோ தில்லு முல்லு நடந்திருப்பதக்ச் சொன்னார்கள். அத்துடன், இந்தத் தொழிலாளர்களின் இறப்பு, பெட்ரோலில் Tetraethyl lead –ஐக் கலப்பதில் பொதுமக்களின் உடல்நலத்திற்குப் பெரிய கேடு விளைவிக்க வாய்புள்ளதைச் சுட்டிக் காட்டுவதோடு நிற்காமல், பெட்ரோலில் ஈயத்தைக் கலப்பதை அறவே நிறுத்த வேண்டும் என்று சொன்னது, ஜி.எம்.-மிற்குத் தர்மசங்கடத்தைத் தந்தது.

மற்றுமொரு பொது மருத்துவ நல விஞ்ஞானியை வைத்து (Emery Hayhurst), ஈயம் கலப்பதால் மனித உடல்நலனுக்கு எந்தக் கேடும் இல்லை என்று விஞ்ஞான இதழ்களில் எழுதிக் குழப்ப முயன்றது ஜி.எம். ஆனாலும், Bureau of Mines -ன் முடிவு பற்றிய விவாதம் மற்றும் சலசலப்பு ஓய்ந்ததாகத் தெரியவில்லை. அத்துடன், செய்தித்தாளகள் இன்னும் கொஞ்சம் விசாரித்ததில், வேறு சில ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் ஈய விஷத்தால் பலவித நோய்களுடன் அவதிப்படுவதை, ஜி.எம். மறைத்ததும் தெரியவந்தது.

 அமெரிக்க சர்ஜன் ஜென்ரல், இந்த விஷயத்தைத் தீவிரமாக ஆராய வேண்டும் என்று நாட்டின் பொது மருத்துவ நல நிபுணர்களை ஒரு கருத்தரங்கிற்கு அழைத்தார். இதைத் தள்ளிப்போட ஜி.எம். எவ்வளவோ முயற்சி செய்துக் கடைசியில், தனக்கு ஆதரவான ஒரு பெரிய விஞ்ஞானிகள் கூட்டத்தையே கருத்தரங்கிற்கு அனுப்பியது. வாஷிங்டனில் நடந்த இந்தக் கருத்தரங்கில் இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து மோதினார்கள். இறுதியில், இன்னும் தெளிவான முடிவிற்கு வர கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று முடிவானது.  இந்தச் சுற்றில் ஜி.எம். -மிற்கு வெற்றி! ஆனால், பொதுவெளியில் ஏராளமான சந்தேகங்கள் உலாவத் தொடங்கியதால், ஜி.எம். தாற்காலிகமாக leaded petrol  தயாரிப்பை நிறுத்தி வைத்தது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய தந்திரம், இதுதான்: உலகின் மிகப் பெரிய வியாபாரங்கள், தங்களுடைய லாபத்தைத் தக்க வைத்துக்கொள்ள, விஞ்ஞான முறைகளைத் தங்களுக்குச் சாதகமாக வைத்துக்கொள்ளப் பல விஞ்ஞானத் தில்லாலங்கடி வேலைகளையும் செய்கிறார்கள். இதற்குத் துணைபோகும் விஞ்ஞானிகளும் கடந்த 100 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார்கள்.  

U.S. BUREAU OF MINES. 
Seal of the U.S. Bureau of Mines.

இந்தக் கருத்தரங்கின் இறுதியில் சர்ஜன் ஜென்ரல், ஒரு நீல ரிப்பன் கமிட்டி இந்த விஷயத்தில் முடிவு செய்யும் என்று முடிவானது. இதில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பல்கலைக்கழகங்களில் பொது மருத்துவத்தில் நிபுணர்கள். இவர்களுக்கு ஏழு மாத காலம் வழங்கப்பட்டது. இதில் பொது மக்கள் நல்ல முடிவு வெளிவரும் என்று எதிர்பார்த்தும், இந்தக் கமிட்டி, மூன்று வடமேற்கு அமெரிக்க நகரங்களில், கராஜ்களில் வேலை செய்யும் ஊழியர்கள், கார் ஓட்டுனர்கள், பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் சில தொழிற்சாலை ஊழியர்கள் என்று சிலரைத் தேந்தெடுத்துத் தரவுகளைச் சேகரித்தார்கள். இவர்களின் முடிவு? 

“எங்களது பார்வையில் ஈயம் கலந்த பெட்ரோலால், மனித உடலுக்கு எந்தப் பாதகத்தையும் எங்களால் திட்டவட்டமாக நிரூபிக்க இயலவில்லை. இதில் மேலும் ஆராய அரசாங்கம் முன்வர வேண்டும்.”

ஏழு மாத நிறுத்தலுக்குப் பின் ஜி,எம். Tetraethyl lead கலந்த பெட்ரோலை மீண்டும் தயாரிக்கத் தொடங்கியது. இது 1920 –களில் நடந்த விஷயம். இந்த நிலை, இதற்குப் பிறகு,  40 வருடங்கள் தொடர்ந்தது. இதில் உள்ள மிகப் பெரிய விநோதம் என்னவென்றால், இந்தத் துறையில் அரசாங்க ஆராய்ச்சி (அதாவது பொதுநல மருத்துவம்) கைவிடப்பட்டது. Tetraethyl lead -ஐத் தயாரித்த நிறுவனத்தின் பெயர் Ethyl Corporation. அதில் என்ன விநோதம்? இன்று நாம் பயன்படுத்தும் பெட்ரோலில் Ethyl alcohol 10% முதல் 20% வரை கலக்கப்படுகிறது. ஈதைல் ஆல்கஹால், பெட்ரோலின் எரியும் செயல்திறனைக் (high octane) கூட்டும் தன்மை படைத்தது. இதைச் சோளம் மற்றும் கரும்பிலிருந்து யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். எவருக்கும் இதில் முன்னுரிமை கிடையாது. இது ஜி.எம். -மிற்கு நன்றாகத் தெரியும். ஆனால் Tetraethyl lead –ன் பேடண்ட் ஜி.எம். -மிற்குச் சொந்தம். ஜி.எம். –மிடம் சட்டப்படி யார் இந்த Tetraethyl lead –ஐத் தயாரித்தாலும், அதற்கு ஜி.எம். –மிற்கு உரிமத்தொகை கொடுக்க வேண்டும். ஆனால், Tetraethyl lead –ஐத் தயாரிக்கும் நிறுவனத்திற்கு Ethyl Corporation  என்று பெயர் வைத்தது வியாபார உலகின் விநோதம்.  Ethyl Corporation –ல் வேலை செய்யும் விஞ்ஞானிகள் தங்களது நிறுவனத்திற்கு நற்சான்றிதழ் வழங்கிய வண்ணம் இருந்தனர். இன்றைய கணக்குப்படி, அந்த 40 ஆண்டுகளில், வட அமெரிக்காவில் வாழ்ந்த மனிதர்களின் உடலில் ஈயத்தின் அளவு வழக்கமானதைவிட 400 முதல் 500 சதவீதம் அதிகமிருந்தது. இதனால், பலவித நரம்பு மற்றும் மூளை சார்ந்த நோய்கள் பரவி வந்தன. ஆனால், அரசாங்கத்தால் எதையும் விஞ்ஞான முறைகளால், திட்டவட்டமாக நிரூபிக்க முடியாததால், வியாபார லாபம் மனித உடல் நலனைப் பின்தள்ளி, ஜி.எம். -மை, உலகின் மிகப் பணக்கார வியாபார நிறுவனமாக ஆக்கியது.

இந்தப் பின்னணியில் பேட்டர்ஸனின் ஆராய்ச்சியைப் பார்த்தால், பெரு வணிகப் பேராசை முன் தூய விஞ்ஞானம், எப்படி அடி வாங்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். Ethyl Corporation –ன் பிரதான விஞ்ஞான ஆலோசகர், ராபர்ட் கெஹோ (Robert Kehoe) என்பவர் ஆவார். இவர் ஈயம் சார்ந்த ஆராய்ச்சியில் உலக நிபுணர் என்று பெயரெடுத்தவர். இவர், Ethyl Corporation –க்கு நற்சான்றிதழ் வழங்கி வந்தார். இப்படி இருக்க சர்ஜன் ஜென்ரல், ஜி.எம். –மிற்குச் சாதகமானார். இரண்டாம் உலகப் போர் காலத்தில், டூபாண்ட் நிறுவனம் குடியரசுக் கட்சிக்கு ஏராளமான நிதி வழங்கியது. அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்ட், தான் பதவி ஏற்ற கையோடு, Ethyl corporation விஞ்ஞானிகளை, பிரிடிஷ் பொது மருத்துவ நல நிபுணர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவைப்போல, பிரிட்டனிலும் ஈயத்தால் வரும் அபாயத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. சர்ஜன் ஜென்ரலை வைத்து, பிரிடிஷ் பொது மருத்துவ நல நிபுணர்களின் வாயைச் சாதுர்யமாக அடைத்தது Ethyl corporation. பிரிடிஷ் அரசாங்கம் Tetraethyl lead –ற்கு நற்சான்றிதழ் வழங்கியது. பிறகு என்ன? இந்த விஷம் பிரிட்டனுக்கும் பரவியது. மெதுவாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. Tetraethyl lead கலவைக்கு வருடம் ஒன்றிற்கு ஏறத்தாழ 300 மில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டியது ஜி.எம். மிகவும் குறைந்த அடிப்படையில் பார்த்தால், இந்த விஷக் கலவையால் 12 பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது ஜி.எம். இவர்களின் கார்கள், பெட்ரோல் வினியோகம் சார்ந்த வியாபார லாபம் இதில் அடக்கமில்லை.

ராபர்ட் கெஹோ, சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வுகளை நடத்தி வந்தார். இவருடைய ஆய்வகம், ஜி.எம்., டூபாண்ட் மற்றும் ஈதைல் நிறுவனங்களின் அன்பளிப்பில் தொடங்கி, உதவித் தொகையில் இயங்கியது. அத்துடன், ராபர்ட், ஈதைல் நிறுவனத்தின் ஆலோசகர். ஈதைல் நிறுவனத்திற்குச் சாதகமான சோதனை முடிவுகள் தொடர்ந்து வெளிவந்ததன் பின்னணி இதுதான். 1958 –ல் ராபர்ட் ஓய்வு பெறும்வரை இந்த ஏற்பாடு தொடர்ந்தது. விஞ்ஞானப் பித்தலாட்டத்தின் ஒரு வசீகர ஏற்பாடு இது. ராபர்ட், ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக வெளியுலகிற்குக் காட்சியளித்தார். இதனால், அவரது முடிவுகளுக்கு ஒரு நடுநிலை இருப்பதாக அனைவரும் நம்பினார்கள். இன்றும் இது போன்ற ஏற்பாடுகள் உலகப் பல்கலைக்கழகங்களில், அதுவும் வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏராளம்.

அடுத்த பாகத்தில் இந்த வியாபார, விஞ்ஞான தந்திரத்திற்கு இன்னும் பல உதாரணங்களைத் தர உள்ளேன். எப்படி ஆஸ்பெஸ்டாஸ், ஃப்ரீயான், பூச்சி மருந்து, ஜி.எம்.ஓ, சிகரெட், ஈ-சிகரெட், மின்சார கார், பூச்சி மருந்து என்று பலவகைத் தொழில்கள், விஞ்ஞானத்தின் விளிம்பில் லாபம் சம்பாதிக்கின்றன என்று பார்க்க உள்ளோம். இவர்களது பிரதான வாதம்:

”எதில்தான் நிச்சயத் தன்மை உள்ளது? நாங்கள் செய்வதில், தவறு இருக்கிறது என்று சொல்கிறீர்கள். நிரூபியுங்கள், நாங்கள் நிறுத்தி விடுகிறோம்.”

இப்படிச் சொல்லிவிட்டு, உண்மையான நிரூபணத்திற்கு எல்லா விதத்திலும் தங்களது பணபலத்தை வைத்துக்கொண்டு, தடைக்கற்களை உருவாக்குவதே இவர்களது தந்திரம். அப்படியே இவர்களது முறைகளில் உள்ள குறைகள் நிரூபிக்கப்பட்டாலும், தங்களது சர்வ வல்லமை படைத்த கோணல் விஞ்ஞானத்துடன், முடிவுகளில் ஓட்டைகளைக் கண்டுபிடித்து எப்படியாவது பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்களைக் குழப்புவதில் திறமைசாலிகள்.

1962 –ல், திடீரென்று ஜி.எம். மற்றும் டூபாண்ட் நிறுவனங்கள், ஈதைல் நிறுவனத்தை ஒரு சிறிய நிறுவனத்திற்கு விற்றது எல்லோரையும் வியப்படையச் செய்தது.  இத்தனை லாபமளித்த நிறுவனத்தை ஏன் விற்க வேண்டும்? வரப்போகும் சிக்கலை ஜி.எம். ஏற்கனவே கணித்திருந்ததா?

சென்ற பகுதியில் பேட்டர்ஸன், 1965 –ஆம் ஆண்டு ஒரு முக்கிய விஞ்ஞான வெளியீட்டில், ஈயத்தால், மனித குலத்திற்கு விளையும் தீங்கு முழுவதும் சரியாக ஆராயப்படவில்லை என்று சொன்னது, ராபர்ட் போன்றவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆராய்ந்த விஷயத்தில் இந்தப் புவிரசாயன விஞ்ஞானி என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறார்? இப்படி ஆரம்பித்தது இவர்களது மோதல்.

இதைத் தொடர்ந்து 1966-ல், அமெரிக்கக் காங்கிரஸ் மீண்டும் ஈய விஷத்தன்மை விஷயத்தில் விசாரணை நடத்தத் தொடங்கியது. இந்த விசாரணையில் ராபர்ட், தான் நடத்திய சோதனைகளில், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈயத்தைச் சுவாசித்தவர்களின் உடலில் எந்த வித பாதகமும் இல்லை, மனித உடல் சுற்றுச்சூழலுக்கேற்பத் தன்னை மாற்றிக் கொண்டுவிடும், இதனால் எந்தத் தீங்கும் இல்லை என்று வாதாடினார். பேட்டர்ஸனின் விஞ்ஞான முறைகள் புதிது; அத்துடன் அவர் புவிரசாயனத்தில் தேர்ந்தவர். காங்கிரஸ் முன் ராபர்டின் விஞ்ஞானத்தில் உள்ள ஓட்டைகளைத் தவிடு பொடியாக்கினார். அவர், 1,600 ஆண்டுகள் பழைய மனித எலும்பில் எத்தனை ஈயம் கலந்திருந்தது, அன்றைய மனித எலும்பில் எத்தனை ஈயம் கலந்திருக்கிறது என்று தன்னுடைய ஆராய்ச்சியை வெளியிட்டார் – அதாவது, 100 மடங்கு அதிகமாகியிருந்தது. அத்துடன் காற்றில் 1,000 மடங்கு அதிகமாகியிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

காங்கிரஸில் பேட்டர்ஸன் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, அவருடைய வீட்டிற்கு ஈதைல் நிறுவன ஆசாமிகள் வந்து பணத்தாசை காட்டினார்கள். பொது மேடையில் ஈதைல் நிறுவனத்தை நல்ல நிறுவனமாகச் சித்திரிக்க வேண்டும் என்றும் மிரட்டினார்கள். மாறாக, பேட்டர்ஸன், இவர்கள் செய்வது ஏமாற்று வேலை, இன்னும் கொஞ்ச நாள்களில் இவர்கள் ஆட்டம் ஓய்ந்துவிடும் என்று சொல்லிவிட்டார்.

ஈதைல் நிறுவனம், பேட்டர்ஸன் வேலை செய்த கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழகத்திற்குப் பலவித மிரட்டல்களை விடுத்துப் பார்த்தார்கள். ஈதைல் நிறுவனம் பலவித ஊக்கத் தொகைகளைப் புதிதாகத் தருவதுடன், ஏற்கெனவே கொடுத்துவரும் ஊக்கத் தொகையையும் தொடரும், ஒரு நிபந்தனையின் பேரில் – பேட்டர்ஸனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்!

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கையில், கார்களின் புகை குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பும் வளரத் தொடங்கியது. ஒவ்வொரு காரிலும் வினையூக்க மாசகற்றி (catalytic converter) பொருத்தப்பட வேண்டும் என்ற  அரசாங்கக் கொள்கையும் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் கார் தயாரிப்பாளர்களுக்கு இருந்தது. 1970 –ல், திடீரென்று ஜி.எம்., வினையூக்க மாசகற்றியைத் தன்னுடைய எல்லா கார்களிலும் பயன்படுத்துவதாக அறிவித்தது. வினையூக்க மாசகற்றி பயன்படுத்தும் கார்கள், சாதாரண பெட்ரோலைப் பயன்படுத்த வேண்டும். இத்தனை நாள் லாபம் பார்த்த ஈயம் கலந்த பெட்ரோல் விஷயத்தில், ஜி.எம். அந்தர் பல்டி அடித்தது எல்லோரையும் அசர வைத்தது. ஜி,எம். –மைத் தொடர்ந்து, மற்ற கார் தயாரிப்பாளர்களும் ஈயம் கலந்த பெட்ரோலைத் தேவையற்றதாகச் செய்து, வினையூக்க மாசகற்றியைத் தங்களது புதிய கார்கள் பயன்படுத்தும் என்று அறிவித்தனர்.

MagnaFlow Ford California Grade CARB Compliant Universal Catalytic Converter

அமெரிக்க சுற்றுச்சூழல் கழகம் (EPA) ஈயம் கலந்த பெட்ரோலை நீக்க ஒரு கால அட்டவணையை அறிவித்தது. அரசாங்கம் மற்றும் EPA –வை நீதிமன்றத்திற்கு இழுத்தது, ஈதைல் மற்றும் டூபாண்ட் நிறுவனம். தங்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் பிடுங்க முடியாது என்று வாதிட்டார்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் பலவிதமாக ஒரு பத்து ஆண்டுகள் இழுத்த வண்ணம் இருந்தன. இவர்களின் குறிக்கோள், ஈயம் கலந்த பெட்ரோலை நிறுத்துவதை எப்படியாவது தள்ளிப்போட வேண்டும் என்பதே. அதற்குள், பெட்ரோல் ரசாயனத் தொழில்நுட்ப வளர்ச்சியால், Tetra Ethyl Lead (TEL) –க்கு மாற்றுப் பொருட்கள் வரத் தொடங்கின. அரசாங்கம், வேலியை காக்க வேண்டிய பணியைத் தனியாரிடம் விட்டதைக் கடைசிவரை உணரவேயில்லை.

அதிபர் ரேகன் தலைமையிலான அரசாங்கம், வளரும் ஈய விஷத்தைப் பற்றிய எதிர்ப்பைச் சமாளிக்க, நோய்கள் கட்டுப்பாடு மையத்திடம் (Center for Disease Control – CDC) ஆய்வு செய்யச் சொன்னது. CDC –ன் ஆய்வுபடி, 1976 முதல் 1980 வரை, அமெரிக்காவில் ,பெட்ரோலில் ஈயத்தின் அளவு 50% குறைந்துள்ளதாகவும், அதே காலத்தில் சராசரி அமெரிக்க பிரஜையின் ரத்தத்தில் ஈயத்தின் அளவு 37% குறைந்துள்ளதையும் சுட்டிக் காட்டியது. இதனால், அரசாங்கத்திற்கு ஏறக்குறைய 700 மில்லியன் டாலர்கள் மருத்துவச் செலவு குறைந்துள்ளதையும் சுட்டிக் காட்டியது. ஈதைல் நிறுவனம், CDC –ஐ நீதிமன்றத்திற்கு இழுத்து, அவர்களுடைய ஆய்வு தவறென்று வாதாடியது. இன்னும் சில அரசாங்க ஆய்வுகள் தொடங்கப்பட்டன. இதுபோன்ற விஞ்ஞானச் சந்தேகங்களைக் கிளப்பிவிடுவதில் இவர்கள் கில்லாடிகள். சந்தேகம்,  லாபத்தின் துணைவன். அத்துடன், முழு அரசாங்கத் தடையைத் தள்ளிப்போடவும் இயலும். இத்தனைக்கும், அமெரிக்கக் குழந்தைகள் மருத்துவக்கழகம், குழந்தைகளுக்கு ஈயத்தைப்போல விஷமான ஒரு பொருள் வேறு இல்லை என்று தெளிவாகத் தன் முடிவை வெளியிட்டது.

ஈயம் கலந்த பெட்ரோலை அமெரிக்காவில் 1976 –ல் தொடங்கி 1986 –ல் படிப்படியாகக் குறைத்தார்கள். 1996 –ல் அமெரிக்கா, ஈயம் கலந்த பெட்ரோலை முழுவதும் தடை செய்தது. மற்ற நாடுகள் படிப்படியாகச் செய்து, இன்று நாம், சில நாடுகள் தவிர்த்து unleaded petrol –லையே பயன்படுத்துகிறோம். ஈதைல் நிறுவனத்தின் கதை முடிந்துவிடவில்லை. அமெரிக்காவில் லாபம் குறைந்தாலும், வெளிநாடுகளில் பெரிய லாபங்களைத் தொடர்ந்து சம்பாதித்தது. இன்றும், உலகின் மிக ஏழை நாடுகள்தாம் ஈயம் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துகின்றன. ஈதைல், ஜி.எம். மற்றும் டூபாண்ட் போன்ற நிறுவனங்கள் இன்று ஈயம் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதில்லை. ஆயினும், இந்த மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தால் வந்த ஏராளமான லாபத்தில், பல புதிய நிறுவனங்களை உருவாக்கித் தங்களது பழைய தில்லாலங்கடியை மறைக்க முயலுகிறார்கள். இது போன்ற நிறுவனங்கள் , விஞ்ஞானத்தை வளைத்து, மக்களைக் குழப்பி, அரசாங்கத்தை ஏமாற்றி, உலகெங்கும் இயங்குவது வேதனையான விஷயம். ***

Series Navigation<< சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை >>

3 Replies to “சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்”

  1. குழைந்தைகள், ஏன் பெரியவர்கள் கூட விரும்பும் காட்பரி சாக்லேட்டுகளில் ஈயம் கலந்து தயாரிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.அது பொய் என்று அந்த நிறுவனம் கண்ணீர் வடித்தது. சிறிது காலப் பரபரப்பிற்குப் பின் அது மீண்டும் வலம் வருகிறது.ஈயத்தைப் பற்றிய பேச்சே காணோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.