கூட்டு அக்கறைகள் கொண்ட பிரதி

”வாஸ்தவத்தில், எந்த ஓர் உயிரினத்தின் நுட்பமான சிறு அசைவும் சூழலியல் அமைப்பில் நிகழும்  மாற்றத்தைக் காட்டுவதுதான்.”

 -வு மிங்-யி

தொலைதூர தேசங்களிலிருந்து பருவநிலைக்கு ஏற்ப இடம்பெயரும் பறவைகள் துல்லியமாக தம் நீர்நிலைகளைத் தேடி அடைந்து  குறிப்பிட்ட காலப்பகுதியை அங்கு கழித்த பின் வேறிடங்களை நோக்கி சென்றுவிடுவது வழக்கம்.  அவற்றின் சேகரிக்கபட்ட ஞாபகங்களின் ஊடே ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த  அபூர்வமான பறவையினங்கள் வேடந்தாங்களில் உலவுவதுண்டு. இப்போதெல்லாம் அவற்றில் பலவற்றிற்கும்  திசை  குழம்பி விடுகிறது போலும். வெகுசிலவற்றின் நடமாட்டங்களே காணக் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. போலவே தம் நிரந்தர வாழிடங்களைக் குறுக்காக வெட்டிச் செல்லும், கானல் அலையடிக்கும் தார்ச்சாலைகளை பதறியபடியே கடக்கும் விலங்கினங்களின் சகாக்களை பிறிதொரு நாள், தோட்டங்களை துவம்சம் செய்த நாசக்காரர்களாகவோ ‘ஊரு’க்குள் ‘நுழைந்து’விட்ட சதிகாரர்களாகவோ ஊடகங்களால் சித்தரிக்கப்படுவதை அவ்வப்போது கண்டிருக்கலாம்.  மழைக்காலத்து எலிகள் போல மனிதர்கள் தங்கள் பொந்துக்குள் பதுங்கிக்கிடந்த இக்கொரோனா கால வீடடங்கு நாட்கள் தொடங்கிய சில வாரங்களுக்கு பின் சில காணொளிகள் பார்க்கக் கிடைத்தன. தம் மூதாதைகள் நீர் அருந்திய சுனையிலும் சாவகாசமாக நடை பழகிய சூரியன் புக முடியாதளவிற்கு மரங்கள் அடர்ந்திருந்த இடங்களிலும் முளைத்திருந்த பேரங்காடிகளின் வாசல்களிலும்  சூடேறிக் கிடக்கும் கடைப்படிக்கட்டுகளிலும் காட்டின் உரிமைதாரர்கள் சிலரைக் காணமுடிந்தது. பயந்தால் எழுந்த மனிதக் கூக்குரல்களுக்கு அவை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. 

சமவெளியில் அதுவும் தூசும் புகையும் காலில் சக்கரமும் கொண்ட அன்றாடத்தனங்களிலிருந்தும் கட்டிடக் காடுகளிலிருந்தும் தப்பித்து வருடத்திற்கு ஒன்றிரண்டு தடவைகள் ஏதேனுமொரு மலைவாசஸ்தலத்திற்குச் செல்வோம். பிறரைப் போன்றே குரங்குகளைப் பிச்சைக்காரர்கள் ஆக்கும் மாற்றமில்லாத அதே சுற்றுலா. கண்களின் வழி பசுமை மனதில் நிறையும். குளிர் துளைக்கும் முன் இரவுகளில் சில சமயங்களில் விடுதிக் காப்பாளர்களிடமிருந்து தொலைபேசி வருவதுண்டு.  விலங்குகளின் பெயரைச் சொல்லி இரவுகளில் நடமாட்டம் இருக்கலாம் எனச் எச்சரித்து எக்காரணம் கொண்டும் வெளியில் வரக்கூடாது என்கிற கண்டிப்புடன் அந்த அழைப்பு துண்டிக்கப்படும். இதற்கும் ஒன்றிரண்டு கிலோமீட்டர்களே உள் தள்ளி அவ்விடுதி அமைந்திருக்கும். அதற்கும் அப்பால் உள்ளே பல இடங்களில் தானியத்தை விசிறி எறிந்தது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக பல சொகுசுகளில் விடுதிகள், காட்டேஜ்கள் கண்ணில் படும். அவற்றின் முதலாளிகளாக கூறப்படும் பெயர்களில் அரசியல்வாதிகள்,பினாமிகள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்களின் என அதன்  வரிசை நீளும்.  நீலகிரியில் பத்தாண்டுகளுக்கு முன் பலநாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் அபரிமிதமாக திரண்டு நிலச்சரிவுகளும்  உயிரிழப்புகளும் ஏற்பட்டன. குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் ஏகதேசமாக பலரின் வாழ்க்கைகளைக் குலைத்தது. அவற்றின் வழித்தடங்களில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட ரெஸ்டாரெண்ட்கள், விடுதிகள், வணிகவளாகங்கள் தான் காரணம் என கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. சில மாதங்களுக்கு பின் அவற்றின் செயல்பாடுகள் தொடரத் தான் செய்தன. இப்போது காடுகளுக்குள் கட்டப்பட்ட விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டதாகத்  தெரிகிறது.  ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்து பயிர்செய்து காப்பித் தோட்டங்களாக டீ எஸ்டேட்களாக மாற்றியிருக்கும்  பாதைகளில் கருத்த மேகங்கள் போல யானைகளின் கூட்டம் நடப்பதைக் கண்டிருக்கிறேன். வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவை இயற்கையின் வளங்களை காவு வாங்கியபின்பே இங்கு நடைமுறைக்கு வருகின்றன. அறிவு மற்றும் நாகரீகத்தின் பாயச்சல் என்று சொல்லப்பட்டாலுமே கூட அது யாருக்கான நாகரீகம்? யாருடைய வளர்ச்சி? என்ற அடிப்படையான வினாக்களைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து பலதரப்பட்ட விவாதங்களும் போராட்டங்களும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. மனிதர்களால் நேர்கிற இயற்கையின் சமன்குலைவு ஒட்டுமொத்தமாக விளைவிக்கும் பாதகங்கள் என்ன? என்கிற கேள்வியை அடியோட்டமாக உணர்த்தியவாறே செயற்கைத்தனம் இன்றி புனைவும் யதார்த்தமும் ஒன்றையொன்று கலந்து வெளியாகியிருக்கும் மொழியாக்க நாவலே ‘கூட்டு விழிகள் கொண்ட மனிதன்’.

புனைவிலக்கியத்திற்குள் சூழலியல் சார்ந்த பிரச்சனைகளைக் காத்திரமாக கலையை விட்டு விடாமல் எழுதப்பட்ட ஆக்கங்கள் ஆச்சரியமாக  தமிழில் மிகக்குறைவு.  இதில் சா. கந்தசாமியின் ‘சாயாவனம்’  முன்னுதாரணமான படைப்பு. அதற்கு பின் வேறு சில படைப்பினுள் சிறு பகுதியாக இவ்வக்கறைகளைக் காண முடிகிறதே அன்றி முழுமையுமாக அல்ல. நீண்ட வெற்றிடத்திற்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இரா.முருகவேளின் ‘முகிலினி’யை இவ்வகைப்பாட்டிற்குள் சேர்க்கலாம். பவானி ஆறு மாசடைந்த அவலம், கோவை நகரம் தின்று செரித்த வளங்கள், விஸ்கோஸ் ஆலை சிறுமுகை என்கிற மொத்த ஊரையுமே நோவும் சாவுமாக கிடையில் தள்ளிய கோர வரலாறு போன்றவற்றை சுவாரஸ்ய மொழியில் பத்திரிகையாளனின் நடையில் நேரடியாக முன் வைத்த நாவல். இதுகாறும் அறியாத நிலப்பரப்பிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிற வு மிங்-யின் இந்நாவல் சுவாரஸ்யத்தை இழக்காமலேயே ஆனால் ஆழமான விஷயங்களை புனைவெழுத்தின் தீவிரத்துடன் பேசுகிறது. நாவலைத் திரட்டப்பட்டத் தகவல்களைக் கொட்டும் கிடங்காகக் கருதாமல் படைப்பு மொழியில் அவர்களுக்கேயுரிய வாழ்க்கைப்பின்னணிகளுடன் சூழலுக்குரிய தகவல்கள் போதுமான அளவில் மட்டும் இடைகலந்து இந்நாவலுக்குள் வருகிறது. நாவலாசியர் சூழலியல் செயல்பாட்டாளர் என்பதால் அவர் வசம் தகவல்களின் சுரங்கமே இருந்திருக்கக் கூடும். அவற்றில் கலையை பின்னுக்குத் தள்ளாத படைப்பின் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காதவைகளையே கைகொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. முந்நூற்றைம்பது பக்க நாவலில் மலையைக் குடையும் தொழில்நுட்பம் சார்ந்த பகுதிகள் மட்டும் கட்டுரைத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. 

தைவானியத் தீவைத் தான் நாவல் சுற்றிவருகிறது என்றாலும் தற்செயலாகவும்  வினைப்பயனாகவும் அங்கு அடித்துவரப்படும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட, வித்தியாசமான வாழ்க்கைச் சூழல்களை சுபாவங்களைக் கொண்ட இரு கை விரல்களின் எண்ணிக்கைக்கும் சற்று குறைவான பாத்திரங்களின் மூலம் விஷயங்களை உணர்த்தவும் நேரடியாகக் காட்டவும் செய்கிற நாவல் இது. 

எழுத்து மொழியே இல்லாத, உலகம் என்பது ஒரே தீவு என என்னும் ‘வயோவயோ’ என்கிற கற்பனைத் தீவைச் சேர்ந்த அட்டிலெ’ய், எழுத்தாளனியாக ஆசைப்படும் ஆலிஸிடம் வந்து சேரும் கதை, ஆசிரியையாக அலைச்சல் இல்லாத பல்கலையில் பணி ஆணை கிடைக்கிற ஆலீஸ், நாடோடி போல உலகின் பல்வேறு பகுதிகளைச் (’ஆப்பிரிக்கா முழுவதும் வண்டியோட்டிச் சென்றிருக்கிறான்.அட்லாண்டிக்கின் குறுக்காக பாய்மரப் படகு செலுத்திக் கடந்திருக்கிறான். படகு உடைந்ததால், ஆளரவமற்ற தீவில் ஒதுங்கியிருக்கிறான். பாஜி பாணி குங்ஃபூ பயிற்சி பெற்றவன். மிக நீண்டதூர நெடுந்தொலைவுவோட்டக் குழுவுடன் சேர்ந்து சஹாராவின் குறுக்காக ஓடிக் கடந்திருக்கிறான்’)  சுற்றிவரும் சாகசக்காரனான தாமுடன் கொண்ட உறவுநிலைகளை அவனது நினைவுகளைப் பின் தொடரும் கதை, பழங்குடி இனத்தவனான டாஹூ தன் பூர்வ மலையை விட்டு நகரத்தில் அலைந்துத் திரியும் கதை, அன்னையால் அடுத்தடுத்த ஊர்களுக்கு நடத்திச் செல்லப்பட்டு தன் சுயசம்பாத்தியத்தால் கடற்கரை ஓரத்தில் கூரையை அமைத்துக் கொண்ட ஹஃபேயின் கதை, இவர்களுடன் மேலும் சிலரை இணைத்து வைக்கும் ஊழின் கதை, நாவலின் மனிதர்கள் தம்மளவில் அனுபவிக்கும் ‘தனிமை’களின் (’கலாச்சாரத்தின் நிஜமான வேர் தனிமையே’)  கதை, நிறைவின்மைகளின் கதை, பிரிவின் துயரை நினைவுகளால் சமன் செய்ய விரும்புகிறவர்களின் கதை, இவர்கள் ஏதோ ஓர் தருணத்தில் உணர நேர்கிற அன்பின் கதை, இத்தனைக் கதைகளுக்குள்ளும் தீவிரமான பங்கேற்பாளராகவும் மெளன சாட்சியாகவும் இடம் பெறுகிற கடலும் மலையும் தம் மனிதர்களிடத்து நிகழ்த்தும் கொடுக்கல்-வாங்கல்களின் கதை. மரபும் நவீனமும் உரையாடுகிற கதை. 

’வயோவயோ’ கற்பனைத் தீவில் இடம் மற்றும் வளப் பற்றாக்குறை காரணமாக அங்கு பிறக்கும் இரண்டாவது மகன் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் (தன் நூற்றியென்பதாவது பெளர்ணமியில்)அத்தீவிலிருந்து வெளியேறிவிட வேண்டும். காலை உணவுக்குப் பின் கிளம்பினால் மதிய உணவின் போது தீவைச் சுற்றி வந்து விடலாம் என்கிற அளவுக்கே பரப்பளவைக் கொண்ட தீவு.  கடற்காற்றாலும் கடல் மொழியாலும் (’வாழ்வு என்பதே கதைக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ரீங்காரம்’) சூழப்பட்ட அத்தீவினரை காப்பவர் ‘கபாங்’(கடவுள்). கடலையே தெய்வம் என்றும் அங்கு முன்னோர்களின் ஆவிகள் அலைகிறார்கள் என்றும் நம்பும் அக்குடிகளின் சட்டதிட்டங்களை விருப்பங்களை வரையறுப்பவர்களாக நிலமுனியும் கடல்முனியும் இருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டாவது மகனான அட்டிலெ’ய் தன் காதலி ரசுலாவின் உமிழ்நீரோடு தயாரித்த கனிந்த ஒயினை கழுத்தில் மாட்டியபடி தலவாக்கா(படகு)வுடன் அத்தீவுக்கு மீண்டும் திரும்பாத பயணத்தை கடலுக்குள் மேற்கொள்கிறான்.அவனைச் சூழும் பெரும் அலைகளால்  அச்சமுறும் போது ‘கபாங்’கிடம் வேண்டிக் கொள்வது கூட இவ்வாறு தான் ”ஓ கபாங் தேவனே, கடலை வறளச் செய்யும் வல்லமை கொண்டவரே, நீர் என்னைக் கைவிட்டு விட்டாலும் கூட, தயவுசெய்து, என்னுடைய சடலத்தைப் பவளமாக மாற்றிவிடுவீராக ; என் தாயகத்தின் பக்கமாகத் தள்ளிச் செல்வீராக; ரசுலா என்னைக் கண்டெடுக்கட்டும்”. பிறகு பெயர் அறியாத ஆளற்ற தீவில் கரை ஒதுங்கிறான். அவனை நாவல் முழுக்க அலைகழிப்பது காதலி ரசுலாவின் நினைவுகளே. ஒதுங்கும் தீவில் உயிர்வாழ்வதற்கு உகந்தவைகள் கிடைக்கின்றன. தர்க்கங்களால் நாவலின் இப்பகுதியை நோக்கி வினா எழுப்ப இயலாது. ஏனெனில் அவனுக்கு கிடைக்க வேண்டும் என நாவலாசிரியர் விரும்புவதெல்லாம் அவன் கைக்குச் சிக்குகின்றன. எவருமில்லாத அத்தீவிவிலிருந்து எப்போதோ யாரோ விட்டுச் சென்றவைகளை எடுத்து சிறு வீடு கூட கட்டிக் கொள்கிறான் அட்டிலெ’ய். அப்பொருட்களுக்கு அவனிடம் பெயரேயில்லை, வியப்பு மட்டுமே உண்டு.

மற்றொரு புறம் நிகழ் உலகில் மலையேற்றத்தால் தொலைந்து போன சாகச விரும்பியான கணவனையும் மகனையும் எண்ணி துயரம் தாளாது தற்கொலைக்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறாள் ஆலீஸ். இவ்விரு வேறுபட்ட தளங்களிலிருந்து மாறி மாறி செல்கிறது நாவல். முதலாமவனுக்கு நினைவுகளே உயிர் என்றால் இவளுக்கோ அது பெரும் சுமை. இவ்விருவரின் பகுதிகளை அதாவது புனைவையும் நிஜத்தையும் அருகருகே அடுத்தடுத்து வைத்திருக்கும் யுக்தி தமிழுக்குப் புதிதல்ல என்றபோதும் மரபின் மீதான பற்றுதலும் நவீனத்தால் உலகு கொடுக்க நேர்ந்தவைகள்  சார்ந்த விவரிப்புகள் இடம்பெற்றிருப்பது திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது. 

ஆலிஸ் தன் காதல் கணவனுடன் கனவுகளோடு கட்டிய வீட்டை நோக்கிக் கடல் நெருங்கி வருகிறது.  அவள் வசிக்கும் பகுதியையொட்டிய இடங்கள் எவ்வாறு வணிக சுயநலமிகளால் கபளீகரம் செய்யப்பட்டு தன் அழகிய முகத்தை இழக்கிறது என்கிற ஆதங்கம் நாவலின் தொடக்கத்திலேயே இடம்பெற்றுவிடுகிறது. ஆலிஸும் தாமும் விரும்பும்வண்ணம் எழுப்பும் வீட்டிற்கும் அவர்களது மகனுக்கும் கிட்டதட்ட சமவயது. ஆலீஸின் சொற்கள் மற்றும் நினைவுகளின் வழியாகவே தாமும் டோட்டாவும் நாவலுக்குள் நுழைகின்றனர். இவ்விருவரும் மேற்கொண்ட மலையேற்றத்தில் தொலைந்து போனதாக ஆலீஸால் தொடர்ந்து கூறப்படுகிறது. அவர்கள் இல்லாத வெறுமையை தாங்கொண்ணாது உலகை நீங்க அவள் முடிவெடுக்கையில் இரு கண்களும் இரு வேறு நிறங்களில் ஒளிரும் சிற்றுயிரான பூனை அவளது எண்ணத்தை மடைமாற்றி வாழ்க்கைக்குள் திருப்பி விடுகிறது. இந்த ஓட்டத்தின் வழியே அவள் வசிக்கும் அதே கடற்கரையோரத்தில்  செவன்த் சிசிட் என்கிற பெயரில் பேக்கரி போன்ற ஒன்றை நடத்தும் பழங்குடி இனத்தவளான(பாங்க்கா) ஹஃபேயுடனான நல்லுறவும் அவளது பின்னணியும் சொல்லப்படுகிறது. போலவே மற்றொரு பழங்குடி இனத்தவனான(புனூன்) டாஹுவினுடையதும்.  முன்னேற்றத்தின் பெயரால் இயற்கையை நவீனம் மெல்ல விழுங்குவது நாவல் நெடுகிலும் எங்கோ ஒலிக்கும் அனாதரவான பாடல் போல காதில் கேட்டபடியே இருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகு அந்தத் தைவான் தீவை குறிப்பாக அவர்களது கடற்கரையோரத்தை உலகமே உற்று நோக்கும்படியாக ஆபத்து சூழ்கிறது. அப்போது நிகழும் அவலத்தின் காரணமாக இம்மனிதர்கள் மீண்டும் வேறிடங்களை  புதிய மனிதர்களை நோக்கி நகர்கிறார்கள்.

விட்டு நீங்கிச் செல்லுதல் அல்லது இழத்தலின் பிரதி என இந்நாவலை வாசிக்க முடியும். ‘யாரும் யாருடனும் (நிரந்தரமாக) இல்லை’. ஆலிஸை விட்டு தாம், ஹஃபேயை  விட்டு அவளது வசீகரமான எதிர்பார்ப்பிற்குரிய வாடிக்கையாளன், டாஹூவை விட்டு அவன் மனைவி, ரசுலாவை விட்டு அட்டிலெ’ய். ஒருவகையில் காதலின் பிறிவாற்றாமையை தீவிரமாக எதிர்கொள்ளும் பிரதி என்றும் பார்க்க முடியும். பேரலை புரட்டிப் போட்ட பிறகு இடம் மாறுகிறவர்கள் அங்கே அன்பை அறிகிறார்கள். விநோதமான இந்த இடப்பெயர்ச்சியில் ஆலீஸ் தன் உறவுகளை தேடிச் செல்ல அட்டிலெ’ய்யும் , அவன் தன் காதலியைக் காணக் கிளம்ப ஆலிஸும் பரஸ்பரம் உதவிக் கொள்ளும்படி மனதளவில் நெருங்குகிறார்கள். அது போலவே  இரு வேறு தனிமைகளில் உழலும் ஹஃபேவும் டாஹுவும் மகள் உம்மாவும் ஒரு கூரையின் கீழ் இணைகிறார்கள். 

நாவலின் முதல் பக்கத்தில் மலைக்குடைவு உண்டாக்கும் சத்தத்துடன் அறிய நேரும் டெட்லெஃப்பை கிட்டத்தட்டமுக்கால்பகுதி நாவல் கழிந்த பின்பே மீண்டும் சந்திக்க நேர்கிறது. தன் தலைமையின் கீழ் குடைந்த மலையின் இதயத்திற்குள் பயணக்கும் நேரத்தில் அவருடன் துணையாக சாராவும். நாவலின் பிற உறவுகள் போல பரஸ்பர விழைவுகளின் பேரில் அல்லாமல் இவ்விருவருடையதும் வலிந்து ஒருவித செயற்கைத்தனத்துடன் அமைந்துள்ளது. ஆனால் சாராவின் தந்தையான அமண்ட்ஸன் திமிங்கலம் மற்றும் கடல்நாய் வேட்டை பகுதிகளையும், அவரது இயல்புகளையும் எப்போது வேண்டுமென்றாலும் நினைவுகூற முடியும் என்பது போல அமைந்திருக்கிறது.

நாவலின் இரு இடங்களில் கூட்டுவிழிகள் கொண்ட மனிதன் வருகிறான். இரண்டாவது முறை அவன் பிரசன்னமாகும் இடம் பின்னுரையில் யுவன் கூறுவது போல(”ஒட்டுமொத்த மனிதக்குலமுமே கூட்டுக் கண்கள் கொண்ட மனிதனாகத் திரண்டுக் காட்சியளிக்கும் சந்தர்ப்பம் அது; அல்லது அதன் கூட்டு நனவிலியே ஒற்றை மனிதனாகத் திரண்ட சந்தர்ப்பம்”-பின்னுரையில்) மிகவும் சத்தான பகுதியாக கருதத் தக்கது. இருவருக்குள்ளும் நிகழும் உரையாடல்கள் அதிலும் குறிப்பாக அம்மனிதன் தாமிடம் எழுப்பும் வினாக்களும் அளிக்கும் விளக்கங்களும் இதற்காகத் தான் இந்த இடம்வரை நாவலை வாசித்து வந்தோமோ என நினைக்க வைக்கும்படி உள்ளது. அதுகாறும் ஆலீஸுடன் சேர்த்து வாசிப்பவரும் மலையேற்றத்தில் தொலைந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த அவர்களது மகன் டோட்டோ முன்பே இறந்துவிட்டான் என்பதும் இருவரும் அவனுடன் அரூபமாக வாழ்ந்திருப்பதுமான அதிர்ச்சிகரமான உண்மை அப்போது தான் தெரியவருகிறது. ஆனால் ஒரு குறிப்பு போல முன்னரே ஆலீஸால் இது சொல்லப்பட்டிருப்பது இரண்டாம் வாசிப்பிலேயே கண்டுகொள்ள முடிந்தது. நாவலின் நடுவில் அட்டிலெ’ய் கேட்கும் ‘எதற்காகக் கதை எழுதுகிறாய்?’ என்ற கேள்விக்கு  ”ஒரு உயிரைக் காப்பற்றுவதற்காக “ என்கிற பதிலுக்காக பொருள் அம்மனிதனின் சொற்களின் வழியாகவே துலங்குகிறது.

சூழலியல் சார்ந்த அக்கறைகளுடன் எழுதப்பட்ட பிரதி அதை ஓர் அறிக்கை போலவோ பிரகடனம் போலவோ பிரச்சாரம் போலவோ உருவாகவில்லை. மாறாக உறவுகளின் அல்லாடல்களை (பின்புலமாக துறுத்தாமல் வந்து கொண்டே இருக்கும் இயற்கை வளங்களின் சுரண்டல்களைக் கவனப்படுத்திக் கொண்டே இருக்கவும் தவறவில்லை) கவித்துவத்துடனும் ஆழத்துடனும் தேவையான இடங்களில் நேரடியாகவும் பேசும் இலக்கிய பிரதியாக ஆகிறது. நமது வளங்கள் வெவ்வேறான இடங்களில் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உரத்து குரலாக இல்லாது வாசிப்பரின் தலையை அந்தப் பக்கத்தை நோக்கித் திருப்ப மெளனமாக வற்புறுத்துகிறது.

வு மிங்-யின் நான்காவது நாவல் இதுவென்று அறிகிறேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நாவல் இதுவென்றும். குறைவான மனிதர்கள் என்றாலுமே கூட அவர்களுக்குரிய பிரத்யேக மொழிப்பயன்பாடுகளுடன் அமைந்த இந்நாவலை அதற்கு ஊறு நேராதவாறு மொழிபெயர்த்திருப்பவர் யுவன் சந்திரசேகர்.  சரளமான நடை. தமிழில் தரத்தை முன்மொழியும் மிகச்சில மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர்.  மொழியாக்கத்தில் ஓரிடத்தை மட்டும் ஏற்க இயலவில்லை. தமிழ் கலாச்சாரத்துடனும் பண்பாட்டுடனும் பிணைந்துள்ள காக்கும் தெய்வமான முனியின் பெயரை கற்பனைத் தீவை காபந்து செய்பவர்களுக்கு நிலமுனி, கடல்முனி என இட்டிருப்பது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இக்குறைத் தவிர்த்து நிறைவு தந்த மொழிபெயர்ப்பாகவே இந்நாவல் அமைந்துள்ளது. யுவனின் மொழிபெயர்ப்புகளில் இதுவரை வெளிவந்துள்ள நாவல்களுக்கு அவர் எழுதியிருக்கும் பின்னுரைகள் அந்நாவலின் சாரத்தையும் ஆழத்தையும் தெளிந்த மொழியில் வாசகரிடம் முன் வைக்கும்படியாகவும்  எந்தப் புள்ளியையும்  விட்டுவிடக் கூடாது என்கிற கவனத்துடனும் தரத்துடனுமே எழுதப்பட்டிருக்கும்.   இந்நாவலும் விதிவிலக்கல்ல.

கூட்டு விழிகள் கொண்ட மனிதன் – வு மிங்- யி : தமிழில் : யுவன் சந்திரசேகர் ; பக் ;360 விலை : ரூ.395/- காலச்சுவடு பதிப்பகம் , நாகர்கோவில்.    

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.