
சொற்களின் இரசவாதம்
குழந்தையோடு பேசும்போது
குழந்தையாகிறேன்
நீருக்குள் துள்ளிக் குதிக்கும்போது
மீனாகி நீந்துகிறேன்
கடற்கரைக்குச் செல்லும்போது
காற்றாகி வீசுகிறேன்.
எங்கு சென்றாலும்
அதுவாகவே ஆகிறேன்.
காற்றாக அலைகிறேன்
அலையாய் இருக்கிறேன்
சொற்களற்ற பெருவெளிக்குள்
நுழைகிறேன்.
இன்னொருவர் இப்போது தான்
அங்கிருந்து
வெளியே செல்கிறேன் என்றார்
இந்தக் கரும்பூனைகள்
சந்திக்கும் புள்ளியில் தான்
நிகழ்கிறது சொற்களின் இரசவாதம்.
கண்ணாடியில் வழியும் இரவு
நரம்புகள் தெறிக்க
உச்சக் குரலில்
மூச்சைப் பிடித்துப் பாடல்
ஒலித்துக்கொண்டிருக்கிறது
இரவின் அமைதியில்
மெல்லிய வெளிச்சத்தில்
நடனம் தனியே ஆடுகிறது
நடு இரவு வரை
கால் மேல் கால் போட்டு
ஒவ்வொரு நிமிடமும்
ரசித்துக் குடிக்கப்படுகிறது
கண்கள் தாகத்தைத்
தீர்த்துக்கொள்கின்றன
எச்சில் நனையும் இரவுகள்
பிடித்திருக்கிறது இவர்களுக்கு
பின்னிரவு நெடுங்காய்ச்சலுக்குப் பின்
தளர்ந்து போகிறது நடை
தனித்த வாழ்வாகவோ
வாழாமல் விட்டுப்போன
வாழ்க்கையையோ
சலிப்போடு தேடிவருபவர்களோடு
மலரில் அமர்ந்து தேனை
உறிஞ்சத்தொடங்குகிறது இரவு
பின்
அதிகாலைத் தோட்டத்தில்
சில கணங்கள் கூடுதலாய்
நிரப்பிக்கொண்டு
கண்ணாடிக் கோப்பைக்குள்
வழிந்தோடுகிறது இரவு