புறப்பாடு
ஆசையென்று பெரிதாய் ஒன்றுமில்லை.
அச்சமென்றும் சொல்ல முடியாது.
கோழிக்குஞ்சு ஒன்றைப் போல
ஒரு பரந்த வெளியில்
நிதானமாகக் காத்திருக்கிறேன்,
கழுகொன்று வந்து தூக்கிச் செல்வதற்காக.

பிரதிகளில் வாழ்பவனின் புலம்பல்கள்
ஒவ்வொரு காலையும்
மீசை, தாடியெல்லாம் உதிர்ந்து போய்
காந்தியாகக் கண்விழிக்கிறேன்.
முற்பகல் முடிவதற்குள்
ஐன்ஸ்ட்டின் ஆக மாற எத்தனிக்கையில்
பசி வந்துவிடுகிறது.
மந்தம் சூழ்ந்த மதியப் பொழுதுகளில்
லாவ்-சு ஆகிக் காற்றையும் இலைகளையும்
பார்த்துக் கிடக்கிறேன்.
மாலைத் தேநீருக்குப் பின்
தல்ஸ்தாய்யின் நிழல் பிடித்து நடை பயிலும் போது
கடைசி வெளிச்சமும் காணாமலாகி விடுகிறது.
இரவு கவிழ்ந்தால் போதும்,
ப்யூகோவ்ஸ்கி தவறாமல் வந்து
பியர் குடிக்க
தரதரவென இழுத்துச் சென்று விடுகிறார்.
விடியலுக்கு முன்னிருக்கும்
சில மணிநேரங்களுக்காவது
நான் நானாக இருக்க இரட்சிக்குமாய்
இந்த தேவாலயத்தின் வாயிலில் படுத்துக் கிடக்கிறேன்.
தேவனே,
பனி கொட்டித் தீர்க்கும்
இக்குளிர் காலத்தில் கூடவா
கதவுகளை அடைத்து வைத்திருப்பீர்.
அகால மரணம்
இன்னும் காய்ந்திராத இலைகளை
உதிர்க்கும் மரத்திடம்,
“சருகாகும் வரை காத்திருந்தால் என்ன குறைச்சல்?”
எனக் கேட்டு நிற்கிறேன்.
காயாத இலை ஒன்றை
என் நடு மண்டையில்
போடுகிறது.
***
அருமை! ‘நூலி’ழையில் தப்பிக்கும் காலைநேரம் உங்களுக்காக.