இறைவி

அபிமன்யு

சீனிவாசன் வழக்கத்தைவிட அன்று சீக்கிரமாகவே கோவிலுக்கு வந்துவிட்டான். நடை திறந்து சிறிது நேரம்தான் ஆகியிருந்தது. குருக்கள் பிரதான கதவையடுத்து மற்ற கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்துகொண்டிருந்தார். நல்ல விஸ்தாரமான கோவில். 

கரிகாலனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த அந்த பேரூர் பட்டீஸ்வரன் கோவிலின் சிறப்புகள்தான் எத்தனை எத்தனை!

“இறவாப் பனை”, “பிறவா புளி”, “புளுக்கா சாணம்” என பேரூரும் அதன் கோவில் அதிசயங்களும், அற்புதங்களும் பற்பல.

“சீனிவாசா, இன்னைக்கு சீக்கிரமே வந்துடாப்படி தெரியர்தே? கொடி மரத்தின் இடப்புறம் அமைந்துள்ள நடராஜர் சன்னதியின் பிரகார விளக்குகளை ஏற்றியபடியே கேட்டார் குருக்கள்.

ஆமாம் மாமா, ஏதோ தூக்கமே வரலை. மனசெல்லாம் பாரமா இருந்தது. அதான் சீக்கிரமே வந்துட்டேன்.

ஒன்றும் கவலைபடாதே டா. எல்லாம் நேரம் வந்தால் தன்னாலே நடக்கும். குரு பெயர்ச்சி ஆகறான். வர ஆவணிக்குள்ள ஏதாவது நல்ல செய்தி வரும் பாத்துண்டே இரு. நேத்தைக்குக்கூட என் சொந்தக்காரா ஒருத்தர் உன் ஜாதகம் வாங்கிண்டு போயிருக்கா. எல்லாம் நல்லபடியா நடக்கும். ஒண்ணும் கவலைப்படாதே. 

ஐந்தாறு வருடங்களாகக் கேட்க்ச் சலித்துவிட்ட இதே ஆறுதல் வார்த்தைகளைக் கேட்கப் பிடிக்காதவன்போல நந்தீஸ்வரன் சன்னதியின் மேற்கூரையில் வரையப்பட்டிருக்கும் முப்பரிமாண சிவலிங்கப் படத்தை அண்ணாந்து பார்த்தபடியே பதில் சொன்னான் சீனிவாசன்.

பார்க்கலாம் மாமா, முப்பத்தேழு ஆயிடுத்து. இதுக்கு மேல எப்போ ஆறது. எல்லாரும் வயசு ஜாஸ்தி ஆயிடுத்தேன்னு சொல்றா. 

இருபத்தியெட்டு, இருபத்தியொன்பது இருக்கும் போதெல்லாம் உத்யோகம் சரியில்லைன்னு சொன்னா. இப்போ நல்ல சம்பளம் வர்றது. ஆனா இப்படி சொல்றா. எனக்கு நம்பிக்கையே போயிடுத்து மாமா.

சீனிவாசனுக்கு ஏழெட்டு வருடங்களாக வரன் பார்த்தும் ஒன்றும் அமையவில்லை. நல்ல படிப்பு, போதுமான வருமானம், எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, தோற்றத்திலும் நல்ல பொலிவான முக லக்ஷணம் உள்ளவன் தான், ஆனாலும் என்னவோ ஒவ்வொரு வரணும் ஏதோ ஒரு காரணத்தால் தடைபட்டுப் போனது. அவனுக்கும் அவன் வீட்டாருக்கும் இது ஒரு பெரும் வேதனையாக ஆனது. 

ஆனால் இது ஒன்று மட்டுமே அவன் கவலைகளுக்கெல்லாம் மொத்த காரணம் என்று சொல்லிவிட முடியாது.

அடிப்படையிலேயே சீனிவாசன் சற்று கூச்ச சுபாவி. எல்லா விஷயங்களிலும் உணர்ச்சிவசப்படக்கூடியவன். மிகுந்த வெள்ளந்தியான குணம் உடையவன். தெருவில் போகிற வழியில் யாராவது இருவர் சற்று உரத்த குரலில் கோபமாக பேசிக்கொண்டால் கூட, இவனுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து விடும். யாராவது பிச்சைக்காரன் கை, கால்கள் செயலற்று காண நேர்ந்தால் உடனே கண் கலங்கிவிடுவான்.

சீனிவாசன் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். 1919 ம் வருடம் ஜாலியன் வாலாபாக் எனுமிடத்தில் 379 பேர் கொல்லப் பட்டனர் என்பதை பாடத்தில் கேட்டவன், அடுத்த மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. 

மிகுந்த ஜுரத்தில் படுத்துக்கொண்டான். 

நாள் முழுதும் தம் தாயாரிடம், “பாவம் மா, அவ்ளோ பேர் செத்துப் போய்ட்டாளே, அவாளோட அப்பா அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா”, என்று ஏதேதோ உளற ஆரம்பித்துவிட்டான். பின் ஒரு வழியாக சமாதானம் செய்து மருந்து கொடுத்து அவனை தேற்றுவதற்கு அவன் தகப்பனார் மிகுந்த சிரமப்பட்டார்.

பின்னொரு சமயம் தம் வீட்டுக் கொல்லைப்புறத்தில் பாம்பு ஒன்று வந்துவிட்டதைக் கண்ட சீனிவாசன், தம் அப்பாவிடம் தெரிவித்தால் அதனைக் கொன்று விடுவார் என பயந்து, அதன் மீது சிறு சிறு குச்சிகளை மெதுவாக எரிந்து விரட்ட, அது பக்கத்துக்கு வீட்டு சுவரில் ஏறி உள்ளே சென்றுவிட்டது.

பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஜீவகாருண்யத்தில் தன் அப்பாவை விட முரடர் என்பது சிறுவன் சீனிவாசனுக்கு தெரியும். உடனே ஓடிச்சென்று “நான் உங்க வீட்டிற்குள் பாம்பை அனுப்பிவிட்டேன், அதை ஒன்றும் செய்யாதீர்கள்” என்று ஏதேதோ உளற, இரண்டு வீட்டாருக்கும் இடையே பெரிய சண்டையாகிவிட்டது.

இப்படி சிறுவயதிலிருந்தே சீனிவாசன் எது எதற்கெல்லாமோ மனதை குழப்பிக்கொண்டு கவலைப் படக்கூடியவன் தான்.

இன்றும் கூட காலை செய்தித்தாள்களில் வரும் கொலை, கற்பழிப்பு செய்திகளை படித்து நீண்ட நேரம் மனதை கஷ்டப்படுத்திக் கொண்டு, பின்பு தானே சமாதானம் ஆகிக்கொள்ள முயலும் ஒரு பிள்ளை மனம் கொண்டவன் சீனிவாசன்.

அதே சமயம் நல்ல ஞானம் கொண்டவன். சிறுவயது முதலே பலதரப்பட்ட புத்தகங்களை படிப்பதில் நாட்டமும், எதையும் எளிதில் புரிந்துகொண்டு, சரியாக செய்யும் குணமும் சீனிவாசனிடம் உண்டு. பள்ளிக்காலங்களிலேயே தமிழ் இலக்கிய செய்யுள்கள், பாரதியார் கவிதைகள், தேவார, திருவாசக பதிகங்களையெல்லாம் கூட தாமே படித்து புரிந்துகொண்டு விடுவான். நல்ல கேள்வி ஞானமும், கற்பனா திறனும் பெற்றவன்.

இவையெல்லாம் அவன் தகப்பனாரிடமிருந்தோ, தாத்தாவிடமிருந்தோ வந்திருக்க வேண்டும். அவன் தகப்பனார் சதாசிவ அய்யர் பெரும் பண்டிதர். பூர்விகமான கும்பகோணத்தில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த போதே, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். ஆதீனத்தில் நடக்கும் சைவ சித்தாந்த வகுப்புகளில் கலந்துகொண்டு நல்ல தேர்ச்சி பெற்று பின்பு தாமே வகுப்புகளை நடத்தும் அளவிற்கு புலமை பெற்றவர்.

பொதுவாகவே ஸ்மார்த்த பிராமணர்கள் தம் சமூகத்திற்கான குருவாக ஆதி சங்கரரை ஏற்றவர்கள். அவரது தத்துவமான அத்வைதத்தையே தமக்கானதாய் கொண்டவர்கள். சதாசிவய்யரும் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது மஹாபெரியவரை நேரில் சென்று தரிசித்து வரும் அளவிற்கு பக்தி உடையவர் தான். அத்வைத தத்துவத்திலும் பெரும் புலமை கொண்டவர்தான். நாளுக்கு மூன்று முறை சந்தியாவந்தனம் செய்யத் தவறாத அவர், சிவ பக்தியினால் ஆதினம் செல்ல ஆரம்பித்து, அத்வைதத்திற்கு நேர் எதிரான சைவ சித்தாந்தத்தின் மீதும் ஈர்ப்பு ஏற்பட, அதையும் அறிய ஆரம்பித்தார்.

அவர் அந்த வகுப்புகளுக்கு தம் புதல்வன் சீனிவாசனையும் அவ்வப்போது உடன் அழைத்து செல்வது வழக்கம். வெறும் பள்ளிக்கூடப் பாடங்களைப் படித்து வேலைக்குச் சென்று பொருளீட்டும் வழிமுறைகளைச் சதாசிவய்யர் என்றைக்குமே ஊக்குவித்ததில்லை. 

“ஞானமே கடவுள்”, “அறிவே உயர்வு” என்பவையே அவர் எண்ணம். சீனிவாசனும் நல்ல ஞானம் உள்ளவனாகவே திகழவேண்டும் என்றே அவர் விரும்பினார்.

ஒருமுறை அய்யர் அவ்வாறு சிறுவன் சீனிவாசனையும் வகுப்புக்கு உடன் அழைத்து சென்றிருந்தார். அப்போது அவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும்.

மடத்தின் இளைய தம்பிரான் அவர்கள் அன்று “சிவஞான சித்தியார்” எனும் பகுதியை விளக்கிக்கொண்டிருந்தார். அதில் ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லும்போது,

“அருள்நந்தி சிவம் சொல்கிறார், ‘என்னால் பெரியோர்கள் அருளிய வேதத்தை மறுப்பது முடியாது, அது இறைவனால் வழங்கப்பட்டது. ஆனால்…”

அங்கு அமர்த்திருக்கப் பிடிக்காமல் நெளிந்துகொண்டிருந்த சீனிவாசன், அந்த சமயம் சற்று பாடம் கவனிப்பது போல் செய்யவும், சதாசிவய்யர் அவனை கவனித்தார்.

மதிய உணவு வேளை. பாடம் கேட்க வந்தவர்கள் இந்த இடைவேளையில் காலையில் நடந்தவற்றில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவற்றை இளைய தம்பிரான் ஸ்வாமிகளிடம் கேட்பது வழக்கம். சிலர் அவ்வாறு கேட்டுக்கொண்டிருக்க, சதாசிவய்யர் இளைய தம்பிரான் ஸ்வாமிகள் அருகில் சென்றார். வழக்கமாக அவர் ஏதும் சந்தேகம் கேட்க மாட்டார். ஆனால், சீனிவாசன் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று வீட்டிலேயே சொல்லித்தான் கூட்டிவந்திருந்தார்.

அருகில் சென்றதும் சீனிவாசன், ஸ்வாமிகள் காலில் விழ முனைந்து உடனே “அபிவாத்யையே” சொல்ல ஆரம்பித்து விட்டான், சதாசிவய்யரே இதை எதிர் பார்க்கவில்லை. சொல்லி முடித்ததும் சாஷ்டாங்கமாக ஸ்வாமிகளின் கால்களில் விழுந்து எழுந்த சிறுவனின் நெற்றியில் ஸ்வாமிகள் திருநீறிட்டு விட்டார். பின், சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பக்கம் திரும்பி தம் சம்பாஷணையை தொடரலானார்.

அய்யர் சிறுவனின் கையை பற்றி, சாப்பிடப் போகலாம் எனும் பங்கில் சற்று இழுக்க, சீனிவாசன் அதை விரும்பாதவனாய் மீண்டும் இளைய  தம்பிரான் ஸ்வாமிகளிடம் பேசலானான்.

“எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கு, கேட்கலாமா மாமா?”

அய்யருக்கு கோபம் வந்துவிட்டது. இவன் எங்கே போனாலும் அதிக பிரசங்கி வேலை பண்றது. சின்னப்பையன் சைவ சித்தாந்தத்தில் என்ன தெரியுமுன்னு கேள்வி கேக்கறான். அதுவும் ஸ்வாமிகள் கிட்டையே கேக்கறானே. அப்படி ஏதாவது கேக்கறதுன்னா கூட என்கிட்ட கேக்கலாமோல்யோ. 

மனதிற்குள் சீனிவாசனை திட்டியபடியே சற்று பலவந்தமாக அவன் கையை இழுத்தார்..

அதற்குள் இளைய தம்பிரான் அவர்கள் “தாராளமா கேளேன், உன்ன மாதிரி சின்ன பசங்க இது மாதிரி விஷயங்களுக்கு வராதே பெரிய விஷயம். நீ சந்தேகம் கேட்டா இன்னும் சந்தோஷம் தான். கேளு” என்று கூறவே, சதாசிவய்யர் சற்று குனிந்து மெல்லிய குரலில், 

“ஸ்வாமிகள் மன்னிக்கணும், சின்னப்ப பையன் ஏதோ அதிகப்பிரசங்கித் தனம் பன்றான். தப்பா நினைக்க வேண்டாம்” என்று கூறினார்.

அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயரே. பையன் என்ன கேக்கறான்னு பார்க்கலாம் இருங்க, என்று கூறியவாறே சீனிவாசனின் கையை பிடித்து தம் அருகில் இழுத்துக்கொண்டார். 

அவர் மீதிருந்து வந்த விபூதியின் மணம் சீனிவாசனுக்கு மிகவும் பிடித்ததாய் இருந்தது. 

கார்த்தாலே ஒருத்தர் எழுதுன புக்-ல அவர் வேதத்தை எல்லாம் நான் தப்புனு சொல்ல மாட்டேன், அது உண்மை னு சொல்வேன் னு சொல்ற மாதிரி ஒரு பாட்டு சொன்னேளே. என்று கேட்டதும் இளைய தம்பிரானவர்கள் “ஆமாம், அருள்நந்தி சிவாச்சாரியார் அப்படி சொல்றார். “சிவஞான சித்தியார்” ன்ற புத்தகத்தில அப்படி வருது. அதுல என்ன சந்தேகம்? என்று கேட்டார். 

ஆனா, அப்பா மத்தவா கிட்ட பேசும் போது கேட்டிருக்கேனே. சைவ சித்தாந்தமும் வேத தர்மமும் வேற வேற, எதிர் எதிரானது. நான் ரெண்டையும் படிச்சிருக்கேன்-னு சொல்லுவாளே.

இளைய தம்பிரான் ஸ்வாமிகளுக்கு  சிறுவன்  என்ன கேட்க வருகிறான் என்று புரிந்தது. சிறுவனின் அறிவை மெச்சி பலமாக சிரித்தபடியே சதாசிவய்யரைப் பார்த்தார். அய்யர் என்ன செய்வதென்று தெரியாமல் நெளிந்தார்.

இது பற்றி ஆழமான தத்துவ விஜாரணைகள் இருந்தாலும், சிறுவனுக்கு விளக்கினால் புரியாது என்பதால் இளைய தம்பிரானவர்கள் சீனிவாசனிடம் அவனளவிற்கு சில விளக்கங்களை கூறிவிட்டு, வகுப்பை தொடரலானார்.

அது முதல் சதாசிவய்யருக்கே சீனிவாசன் மீது சற்று நம்பிக்கை கூடியது.

ஏதேதோ நினைவுகளில் நடந்தவனாய், வெளி பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு உள்ளே நுழைந்தவன் காதில் மூலவர் சன்னதியில் யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்பது போல இருந்தது.

“என்ன மாமா, யாரோ உள்ளே இருக்கறாப்படி தெரியர்தே.? இவ்வளோ சீக்கிரமா யார் வந்திருக்கா?

ஆமாம் டா சீனிவாசா. நடை திறந்து கொஞ்ச நேரத்தில் நீ வந்த. நடை திறக்கும் போதே அவ வந்துட்டா. யாருன்னு தெரியலை. மூலவர் சன்னதி-ல தனியா உக்காந்து பேசிண்டு இருக்கா.

யாராக இருக்கும் என்ற ஆவல் மேலிட, சீனிவாசனும் மூலவர் சன்னதியை நெருங்கினான். தற்போது அவள் பேசுவது தெளிவாக கேட்க ஆரம்பித்தது.

அழுதுகொண்டும், ஆசுவாசப் படுத்திக்கொண்டும், மிகுந்த கோவத்துடனும் மூலவர் பட்டீஸ்வரன் சன்னதி முன்னமர்ந்து யாரோ ஒரு மனிதரிடம் பேசுவது போல பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் பேச்சுக்கள் காதில் விழ ஆரம்பித்ததும், சீனிவாசன் ஒரு கணம் ஆடி விட்டான்.

“என்னை தேவடியா-னு சொல்லிட்டான். என் மேலயே சந்தேகப் பட்டுட்டான்.

நான் தேவடியாளுக்கு பிறந்தவளாம், நானும் அப்படித் தான் இருப்பேனாம். வீட்டை விட்டு வெளிய துரத்திட்டான். 

உன்னை நம்பி தானேடா அவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். இதுவரைக்கும் உன்னை கேக்காம ஏதாவது செஞ்சேனை?

இந்த அனாதை முண்டைக்கு அப்பா, அம்மா எல்லாமே நீ தானடா.?

அவன் அப்படி சொன்னது என்னை இல்லை. உன்னை தான் அப்படி சொல்லிட்டான்.

என்னை பெத்தது யாருனு தெரியாது. ஆனா வளர்த்தது நீ தானே. என்னை திட்டினா, அது உன்னை தானே சேரும்?

உன்னை கேட்டு கேட்டு தானே ஒவ்வொண்ணும் செஞ்சேன்.

இப்போ எனக்கு இந்த தேவடியா பட்டம்.

நான் தேவடியாளா. சொல்லு நீயே.

இத்தனை நாளா யாருமே இல்லாத அனாதையா வளர்ந்தேன். அப்பவே என்னை உன்கிட்ட சேர்த்துக்கிட்டு இருக்கலாமே?

இப்படி ஒரு கல்யாண வாழ்க்கையை தந்து இப்போ அதுவும் நிலைக்காம என்னை இப்படி அசிங்கப்பட வெச்சுட்டியே.

என்னை எட்டி உதைச்சு வெளிய அனுப்ப வெச்சிட்டியே.

இது தான் உன் பொண்ணுக்கு நீ தர வரமா?

கர்பிணின்னு கூட பார்க்காம என்னை அடிச்சு துரத்திட்டானே. நீ பார்த்து கொடுத்த வாழ்க்கைன்னு தானே நான் ஏத்துக்கிட்டேன்.

பிறந்ததுல இருந்து எந்த சந்தோஷமும் இல்லாம இருந்த உன் பொண்ணுக்கு நீ கொடுத்த ஒரே வரம் இந்த கல்யாணம் தான். இப்போ அதையும் உடனே பிடுங்கிட்டயே.

இடையிடையே அழுதும், மூக்கை சிந்தியும் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் ஆபாச வார்த்தைகள் சீனிவாசனை மிகவும் சங்கோஜப் படுத்தியது. குருக்கள் இன்னும் இவளருகே வரவில்லை. ஜனங்கள் வர நேரமாகுமாதலால் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் போனது.

“நான் இப்போ போறேன். இன்னும் ஒரு வாரம், 

அதுக்குள்ள அவனா வந்து, நீ தப்பானவ இல்லைன்னு சொல்லி என்னை கூட்டிட்டு போகணும். இல்லைன்னா உன் பொண்ணு தேவடியாளாவே சாவா.!

அதுக்கப்புறம் என்னை யாரும் திட்ட மாட்டாங்க. உன்னைத் தான் காரி துப்புவாங்க. பட்டீஸ்வரன் அவ சொந்த பொண்ணை காப்பாற்ற கூட துப்பில்லாதவன்னு  சொல்லுவாங்க. நான் இப்போ போறேன்”.

இறுதியாக அவள் கூறியவை, சீனிவாசனை ஆழமாகவே உலுக்கியது.

ஆவேசம் அடங்கிக் கிளம்ப எழுந்தவள், தம்மையே பார்த்துக்கொண்டிருந்த சீனிவாசக்ச் சற்றும் சட்டை செய்யாமல் சென்றுவிட்டாள்.

இவள் என்ன பைத்தியமா?

பொது இடத்தில், அதும் தெய்வத்தின் சன்னதியில் இப்படி நாகரீகமில்லாமல் ஆபாச வார்த்தைகளால் கத்திக்கொண்டிருக்கிறாளே?

ஏதோ சாதாரண மனிதர்களிடம் பேசுவது போல, அப்பா என்கிறாள், நீ தானே செய்தாய் என்கிறாள், ஒரு வாரம் கெடு விதிக்கிறாள்,

மனநலம் பாதித்தவளாய் இருக்குமோ?. யார் இவளை கோவிலுக்குள் விட்டது. 

அது சரி. யாருமில்லாத நேரம் பார்த்துத் தானே அவளே வந்திருக்கிறாள்.

சீனிவாசன் மனம் இன்னும் அடங்கவில்லை.

என்னடா, யாரோ ஒரு பொம்பனாட்டி தனியா பேசிண்டு இருந்தாளே. போய்ட்டாளா? என்ன பேசிண்டு இருந்தா அப்படி?

கேட்டவாறே மூலவர் சன்னதியில் நுழைந்தார் குருக்கள்.

போய்ட்டா மாமா. யாரோ பைத்தியம் போல இருக்கு. பித்துக்குளி மாதிரி ஏதேதோ தானா உளறிண்டு இருந்தா. ஆற்றாமையை வெளிப்படுத்தினான் சீனிவாசன்.

பாவம். அவளுக்கென்ன கஷ்டமோ. போறா விடு!

சீனிவாசனுக்கு ஏதோ பட்டது.

கஷ்டமா?

அவள் கூறிய வார்த்தைகள் நினைவில் வந்தன.

அவளது நிலை, அவளது துயரம், அவள் ஒரு அனாதை என்பது, கர்ப்பிணியான அவள் தம் கணவனால் சந்தேகப்படப்பட்டு அடித்து விரட்டப்பட்ட விவரம், எல்லாம் அவள் செவிகளில் அவள் குரலிலேயே மீண்டும் ஒருமுறை பேசப்பட்டன.

சில மாதங்களுக்கு முன் பேருந்து நிலைய நடைபாதையில், தம் இரு கை விரல்களும் முழுவதுமாக இழந்து விட்டிருந்த முதியவர் ஒருவர், மிகுந்த சிரமப்பட்டு உணவருந்திக்கொண்டிருந்தது,

ஒரு பெட்டிக்கு கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த, முகம் முழுவதும் ஏதோ நோய் போல கொப்புளங்களும், வரிகளுமாய் சற்றும் பார்க்க சகிக்காதவாறு இருந்த, ஒருவர்,

இரண்டடி உயர வளர்ச்சியே கொண்டு, துறுத்திய பற்களுடன் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்மணி.,

என எப்போதோ பார்த்த அனைத்து சபிக்கப்பட்டவர்களும் அடுத்தடுத்து மனக்கண்ணில் தோன்றி சீனிவாசனை ஏதோ செய்தனர்.

நிச்சயமாக சொல்லிவிடலாம். இது போன்ற பிறவிகள் வாழ்க்கை முழுவதும் எண்ணற்ற துயரங்களையும், அவமானங்களையும் சந்தித்திருப்பார்கள்.

முழுவதுமாக கடவுள் நம்பிக்கையற்று, வாழ்வின் மீதான உட்சபட்ச வெறுப்பில் இருப்பவர்களாகத்தான் இவர்கள் இருக்க முடியும்.

அவர்களின் சுக, துக்கங்களெல்லாம் அவர்களை மட்டுமே சாறுமல்லாமல், துளியும் கடவுளை அவர்கள் அணுக மாட்டார்கள். கடவுளே இல்லை என்றிருப்பார்கள் என்றும் சொல்லலாம்.

ஆனால் இவளோ,?

கடவுளை தன் சொந்தத் தந்தையாக அல்லவா நினைக்கிறாள். தம் தந்தையிடம் உரிமையுடன் சண்டையிடும் பெண் போலல்லவா இவள் கடவுளிடம் முறையிடுகிறாள்.

துளியும் அவநம்பிக்கைக்கு இடமில்லாதபடி மனப்பூர்வமான, ஆழமான பக்தியுடன் கடவுளை கூப்பிடும் இவளுக்கு, எங்கிருந்து யார் சொல்லி இவ்வளவு நம்பிக்கை வந்தது.

எந்தப் புத்தகத்தைப் படித்திருப்பாள்.?

யாருடைய போதனைகளை கேட்டிருப்பாள்.?

எல்லாவற்றிற்கும் ஈசனே காரணம் என்கிறாளே?!

இது தான் அத்வைதமா?

அவனின்றி ஓரணுவும் அசையாது என்கிறார்களே?

அதைத் தான் இவள் சொல்கிறாளா?

“நீ சொல்லித்தானே எல்லாமே செய்தேன்” என்கிறாளே!

மனிதன் ஒரு கருவி மட்டுமே, ஆட்டுவிப்பவன் இறைவன் என்று கீதையில் பகவான் கிருஷ்ணன் இதைத் தானே கூறினார்.

ஓஷோவும் இதைத்தானே கூறினார், “உன்னை இறைவனின் கையில் ஒப்படைத்துவிடு” என்று.

அதைத்தான் இவள் செய்கிறாளா?

தன்னை முழுவதுமாக கிருஷ்ணருக்கு அர்ப்பணித்த ஆண்டாளை போலல்லவா இவள் ஈசனை சரணாகதி அடைகிறாள்.

எந்த மந்திரங்கள் இவளை இவ்வளவு பண்படுத்தியிருக்கும்?

எவைகளை இவள் பாராயணம் செய்திருப்பாள்?

ஒன்றும் கிடையாதே.

இதைத்தான் திருமூலர்,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே

என்றெல்லாம் சொல்கிறாரோ?

யார் இவள், இறைவனுக்குள்ளேயே தம்மை முழுவதுமாக கரைத்துக்கொண்ட இவள் என்ன இறைவியா?

மூலவருக்கான அலங்காரங்களை முடித்து, திரையை விலக்கிக்கொண்டே குருக்கள் எழுப்பிய மணியோசை கேட்டுஹ் திரும்பிய சீனிவாசன் முன்பு, திவ்ய ரூபனாய்க் காட்சி தந்த பட்டீஸ்வர லிங்கத்தின் தலையிலிருந்த தாமரை மலரொன்று பட்டென விழுந்தது.

***

3 Replies to “இறைவி”

  1. அருமையான படைப்பு, சிறுகதையை சிறு படமாக கண்முன்னே காட்டியது போல் இருந்தது, மேலும் இது போன்ற படைப்புகளை படைக்க எல்லாம் வல்ல பட்டீஈஸ்வர பெருமானை வேண்டிக் கொள்கிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.