
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 12ஆம் ஆண்டு இந்த இதழில் துவங்குகிறது. இதுவே எங்கள் 225ஆம் இதழும்.
2018ஆம் வருட இறுதியில், கொந்தர்களின் தாக்குதலால் அழிக்கப்பட்ட நிலையில் இருந்த பத்திரிகையைக் கடும் முயற்சிகளால் மீட்டெடுத்தோம். நவம்பர் 2018இலிருந்து, 2019 ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் வரைப் பத்திரிகையை வெளியிடுவதில் பிரச்சினைகள் இருந்ததால் நிறுத்தி இருந்தோம். மார்ச் 2019இலிருந்து முழு வேகத்துடன் வெளியீடு தொடர்ந்தது. (198ஆம் இதழ்.)
நிறுத்தியிருந்தபோது கிட்டிய சில மாத இடைவெளியில் எடுத்த சில முடிவுகளில் ஒன்று, அவ்வப்போது சிறப்பிதழ்களைக் கொணர்வது என்பது. அதன்படி 2019இல் இரண்டு சிறப்பிதழ்கள் (இதழ்கள் 200, 204 ) கொண்டுவரப்பட்டன. 2020இல் இதுவே முதல் சிறப்பிதழ். (225 ஆம் இதழ்.)
***
பல நாடுகளில் உள்ள சில எழுத்தாளர்கள், தன்னார்வலர்களாக இருந்து இந்தப் பத்திரிகையை நடத்துகிறார்கள். அவர்களைத் தவிர பல எழுத்தாள நண்பர்கள் வெளியிலிருந்து மிக்க பரிவுடனும் விருப்பத்துடனும் உதவிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சிறப்பிதழை ஸ்பானிய மொழி எழுத்தாளரான ரொபெர்த்தோ பொலான்யோவைச் சிறப்பிக்கும் வகையில் கொணரும்படி யோசனையை முன்வைத்தவர் அத்தகைய ஒரு நண்பரும் தொடர்ந்து பத்திரிகைக்குத் தம் சிறப்பான படைப்புகளைக் கொடுத்து உதவுபவருமான நம்பி கிருஷ்ணன் அவர்கள்.
இந்த இதழ் வெளிவரத் தேவையான உந்துதல், கிடுக்கிப் பிடி, தொடர்ந்த ஊக்கப்படுத்தல், விமர்சனங்கள், சோம்பலைத் துரத்தும் கிண்டல், கேள்விகள் என்று எங்கள் குழுவைத் தூண்டி வழிநடத்தி இருக்கிறார்.
நம்பி கிருஷ்ணனை இந்த இதழுக்குச் சிறப்புப் பதிப்பாசிரியராக இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்த இதழில் பிரசுரிக்கப்படும் 30+ கட்டுரைகள், கதைகள் அனைத்தையும் அவர் கவனித்திருக்கிறார். தவிர, அவரே பல கட்டுரைகளை எழுதியுள்ளார். சில கட்டுரைகளை விரிவாகப் பிரித்து ஆராய்ந்து யோசனைகள் சொல்லி, மேம்படுத்த உதவியுள்ளார். கடைசி நேரம் வரை இருந்து இதழைப் பூரணமாக்கிக் கொடுத்திருக்கிறார். அவருக்குச் சொல்வனம் குழுவினர் மிகவும் கடமைப் பட்டிருக்கின்றனர். எங்கள் நன்றியை இங்கு தெரிவிக்கிறோம்.
***
இந்த இதழுக்கு என்று அழைக்கப்பட்டுத் தங்கள் படைப்புகளைக் கொடுத்து உதவியவர்கள் பின்வருமாறு:
அம்பை
பானுமதி ந.
சுனில் கிருஷ்ணன்
வேணுகோபால் தயாநிதி
எம். நரேந்திரன்
சிஜோ அட்லாண்டா
ஆகாசஜன்
கோகுல் பிரசாத்
சித்துராஜ் பொன்ராஜ்
சமயவேல்
சுரேஷ் பிரதீப்
சித்ரன்
நரோபா
முத்து காளிமுத்து
அய்யப்பராஜ்
ஹுஸ்டன் சிவா
இவர்களுடைய படைப்புகள் இந்த இதழுக்குக் கனம் சேர்த்ததோடு, இவற்றின் பன்மைத் தன்மையால் பெரும் செழிப்பைக் கொணர்கின்றன. இவர்களின் உழைப்புக்கும் படைப்புத் திறனுக்கும் அவற்றைக் காலத்தில் கொடுத்து உதவியதற்கும் சொல்வனம் குழுவினர் தம் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சிறப்பிதழைக் கொணர நிறைய உழைத்து, பல உதவிகளைச் செய்தவர்கள்: அனுக்ரஹா ச, ரா.கிரிதரன், நம்பி கிருஷ்ணன், பாலாஜி, சாமிநாதன், ராமன் ராஜா, சிவா கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர் நடராஜன் ஆகியோர். இவர்களுடன் கூட ஒத்துழைத்துப் பெரும் துணையாக நின்றவர்கள் பானுமதி ந, அம்பை, மேலும் ரவி நடராஜன் ஆகியோர்.
பத்திரிகை தொடர்ந்து வரப் பதிப்பாசிரியர்களாகப் பணியாற்றி வரும் வ. ஸ்ரீநிவாசன், பிரபு, ஷிவ்சங்கர், கிருஷ்ணன், ஹரி வெங்கட், சேதுபதி அருணாசலம் ஆகியோருக்கும் குழுவினரின் நன்றி சேரும்.
இங்ஙனம், பதிப்புக் குழு சார்பில்
மைத்ரேயன் / 28 ஜுன் 2020 /