நகரத்தில் இப்போதும் இரவு

ரொபெர்த்தோ பொலான்யோவின் படைப்புகளில் ஸ்தாபன வன்முறை 

1

ரொபெர்த்தோ பொலான்யோ, தமது வாழ்நாளின் இறுதிவரை வன்முறையின் பேரிலும், துப்பறியும் கதைகளின்மீதும் மிகப் பெரிய ஈர்ப்புடையவராக இருந்தார். 

வன்முறை நிறைந்த சமுதாயங்களில், அதிகார மையங்களின் வழியாக நிகழ்த்தப்படும் வன்முறையின் இயல்புகளும், அத்தகைய வன்முறையைப் பயில்பவர்களின் மனோநிலைகளும், அதிகாரத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்த விதமும் பொலான்யோவின் Nazi Literature in the Americas, The Savage Detectives, By Night in Chile, Woes of the True Policeman முதற்கொண்டு, அவரது மகத்தான படைப்பாகக் கருதப்படும் 2666-வரை பெரும்பாலான நாவல்களில் சிறப்புக் கவனம் பெறுகின்றன.

பொலான்யோ தமது படைப்புகளில் குறிப்பிடுவது, உணர்ச்சிகளின் வேகத்தில் தனி மனிதர்களால் அவ்வப்போது நிகழ்த்திக் காட்டப்படும் வன்முறைச் சம்பவங்களை அல்ல. பொலான்யோவின் நாவல்கள் பேசுவது உணர்ச்சிக் கொந்தளிப்புக்களுக்கெல்லாம் நேரெதிராக இருக்கக்கூடிய மிகுந்த அறிவுபூர்வமான, தர்க்க விதிகளுக்கு உட்பட்ட, மிகத் துல்லியமான வன்முறை என்ற ஸ்தாபனத்தை. முன்னர் குறிப்பிட்ட, இத்தகைய வன்முறை கண்ணுக்கு அர்த்தமில்லாததாகத் தோன்றினாலும், தமது உள்ளார்ந்த செயல்பாடுகளில் அசைக்க முடியாத வகையில் தர்க்கபூர்வமானது. காற்றில் கலந்த கிருமிகளைப்போல், இரவைப்போல் அங்கிங்கு எனாதபடி சமூகக் கட்டமைப்புக்களின் வழியே ஒரு சமுதாயத்தின் எல்லா இடங்களிலும் நீக்கமறப் பரவியிருப்பது.

பொலான்யோவின் நாவல்களில் குறிப்பிட்ட சமுதாயங்களில் வேரோடியிருக்கும் ஸ்தாபன வன்முறைக்கும் அதிகார மையங்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு அந்தந்த நாவல்களில் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள் ஆகியோருக்கும், வன்முறைக்கும் நடுவிலுள்ள நெருங்கிய தொடர்பினால் சித்திரிக்கப்படுகிறது. 

1996ல் வெளிவந்த Distant Star நாவலில் வரும் ரூயிஸ்-தேகல் என்ற விமானி, சிலே நாட்டில் 1973ல் ஏற்பட்ட ராணூவப் புரட்சிக்குப் பின்னர் நிலவும் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திப் ‘புதிய சிலேயக் கவிதை’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகிறான். ரூயிஸ்-தேகல் அறிமுகப்படுத்தும் புதிய கவிதையின் முக்கிய அம்சங்களாக பழைய இரண்டாம் உலகப் போர்க் காலத்து விமானங்கள் வெளியிடும் புகையால் வானத்தில் எழுதுவது, மனிதர்களைச் சித்திரவதை செய்வது, கவிதை நடையிலுள்ள சொற்கள், புகைப்படம் எடுப்பது, கொலை செய்வது என்பவை இருக்கின்றன. கதையின் போக்கில் முற்போக்குக் கவிஞனாகத் தன்னைச் சித்திரிக்கும் ரூயிஸ்-தேகல் கொடூரமான கொலைகாரன் என்பதும், அவன் தொடர் கொலைகளைச் செய்திருக்கிறான் என்பதும் தெரியவருகின்றன. நாவல், சிலே நாட்டில் ராணுவப் புரட்சி நடந்துமுடிந்த பின்னால் புதிய அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்று கருதப்பட்ட எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் தொடங்கிப் பல்லாயிரம் பேர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட, ஆயுதம் தாங்கிய குண்டர் படைகளின் செயல்பாடுகளையும், இக்குண்டர் படையினரால் கடத்தப்பட்டு அரசாங்கம் நடத்திய ரகசிய சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட ‘மாயமாய்ப் போனவர்கள்’ என்ற பொருளில் ஸ்பானிய மொழியில் desaparecidos என்று அழைக்கப்பட்ட அரசியல் கைதிகளில் பரிதாபகரமான நிலைமையையும் ஆராய்கிறது. 

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் நிர்வாகக் கேந்திரங்களால் கட்டவிழ்த்துவிடப்படும் அச்சுறுத்தலும், வன்முறையும் கண்ணுக்குப் புலனாகாத வகையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்போதும், சராசரி வாழ்க்கைக்கு மிக அருகிலேயே, தினசரி வாழ்க்கை புழங்கக்கூடிய இடங்களைச் சுற்றியிருக்கும் சுவர்களுக்குப் பின்னால், நம் காலடிகள் அடிக்கடி நடக்கும் இந்தத் தரைக்கு அடியிலிருக்கும் நிலவறை ஒன்றில் முழு வீச்சோடு இயங்கிக் கொண்டிருக்கக்கூடும். 2000ல் வெளிவந்த By Night in Chile என்ற நாவலில், அரசியல் கைதிகள் கொடூரமாகச் சித்திரவதைக்கு உள்ளாகும் அதே கட்டடத்தின் வேறொரு பகுதியில், எழுத்தாளர்கள் இலக்கிய உரையாடலுக்காகச் சந்தித்துக் குடியும் கும்மாளமுமாய் இருக்கிறார்கள். 

எனினும், இத்தகைய ஸ்தாபன வன்முறை நாம் புழங்கும் இடங்களை மட்டும் ஆக்கிரமித்துக் கொள்வதில்லை. ஒரு சமூகத்தின் அன்றாட வாழ்க்கையின் மொத்த மதிப்பீடுகளையும் இத்தகைய வன்முறை ஆக்கிரமித்துக் கொள்கிறது என்பது பொலான்யோவின் வாதம். ழான் கிளோட் பெல்லெட்டியேர், பியேரோ மொரினி, மானுவல் எஸ்பினோசா, லிஸ் நோர்ட்டன் என்ற நான்கு இலக்கியப் பேராசிரியர்கள் மற்றும் விமர்சகர்கள் பென்னோ வோன் ஆர்க்கிம்போல்டி என்ற ஜெர்மானிய நாவலாசிரியனைப் பற்றி விசாரிப்பதோடும், முதல் மூன்று பேர்களுக்கு ஆங்கிலப் பெண்மணியான லிஸ் நோர்ட்டன்மீது ஏற்படும் காமத்தோடும், தொடங்கும் 2666 நாவல் மெல்லத் தொடர்ந்து சாண்டா தெரேஸா என்ற கற்பனை நகரத்தில், 430 பெண்கள் மிகக் கொடூரமான வகையில் கொல்லப்பட்ட சரித்திரங்களாக வளர்ந்து, ஒரு மாபெரும் வன்முறையின் சித்திரமாகப் பெருகி நிற்கிறது. 

இத்தகைய வன்முறைக்கு எதிராகக் குரல் உயர்த்த வேண்டிய எழுத்தாளர்களும், மற்ற அறிவுஜீவிகளும், பாதிரியார்களும் மற்றும் போலீஸ்காரர்களும்கூட இந்த அதிகாரத் துஷ்பிரயோகத்தோடு சமரசம் செய்துகொண்டது மட்டுமல்லாமல், அந்த வன்முறைக்கு எதிராக ஒரு சமுதாயத்தின் மனசாட்சியாகச் செயல்படத் தங்கள் புனிதக் கடமையை மறுதலித்துவிட்டு, மிக அற்பமான கேளிக்கைகளில் மூழ்கிப் போகிறார்கள். ஸ்தாபன வன்முறை அத்தகைய மாயத் தர்க்கங்களால் கட்டமைக்கப்பட்டிருப்பது. 

By Night in Chile நாவலில் வரும் செபாஸ்டியன் உரூதியா லாக்ரூவா என்ற பாதிரியார் மற்றும் இலக்கிய விமர்சகர், பழைய தேவாலயக் கட்டடங்களைப் பராமரித்துப் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள, தாம் உறுப்பினராக இருக்கும் ஓபுஸ் டேயீ என்ற தேவாலய ஸ்தாபனத்தின் அதிகாரிகளால் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுகிறார். லாக்ரூவா ஐரோப்பா போய்ச் சேரும்போது, பழைய தேவாலயக் கட்டடங்களின் சீரழிவுக்குப் புறாக்களின் கழிவுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஊரில் இருக்கும் பாதிரிமார்கள், விலைமதிப்பில்லாத தேவலாயக் கட்டடங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் புறாக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒரு விசித்திரமான உபாயத்தைக் கைக்கொள்கிறார்கள்.  பாதிரியார்கள் பருந்துகளை வளர்த்து, அவற்றைப் புறாக்களுக்கு எதிராக ஏவிவிடுகிறார்கள். கொலைத் தொழில் ஒன்றையே குறியாகக் கொண்டு வளர்ந்த பருந்துகள், புறாக்களைக் கொன்றொழிப்பதைப் பொலான்யோ, கதையின் போக்கில் மிக நுணுக்கமான வகையில் விவரிக்கிறார். 

தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ளமுடியாத புறாக்களுக்கு எதிராகப் பருந்துகள் இப்படிக் கட்டவிழ்த்துவிடப்படுவதை எதிர்த்து லாக்ரூவா எதையும் சொல்லாமல் இருப்பதைக் காணும் அவருடைய தேவாலய மேலதிகாரிகள், சிலேயில் புதிதாக ஏற்பட்டிருக்கும் ராணுவ ஆட்சியின் அடக்குமுறைக்கும், வன்முறைக்கும் எதிராக அவர் செயல்படமாட்டார் என்றும், ராணுவ ஆட்சிக்கு அனுகூலமானவராகவே இருப்பார் என்றும் முடிவு கட்டுகிறார்கள். 

பாதுகாப்பற்ற சூழ்நிலையில், புதிய ராணுவ ஆட்சியின் பராக்கிரமத்தை எதிர்த்துப் போராடும் போராட்டக்காரர்களைத் தேவாலயச் சுவர் மாடங்களில் வாழும் புறாக்களாகவும், அவர்களை அச்சுறுத்தவும், கடத்திவந்து சித்திரவதை செய்து சாகடிக்கவும் ஏவிவிடப்பட்ட கூலிப்படையினரைப் பருந்துகளாகவும் சித்திரிப்பதற்குச் சிறப்பான கற்பனையாற்றல் எதுவும் தேவையில்லைதான். ஆனால், இந்த ஒரு சம்பவத்தில் பல தொன்மை வாய்ந்த சித்திரங்களைக் கீழறுப்புச் செய்து, அவற்றைத் தலைகீழாக மாற்றித் தனிமனிதர்களைப் பாதுகாக்க ஏற்பட்ட சமூக அமைப்புக்களே, அவர்களை வேட்டையாடும் அவலத்தை விவரிப்பதில்தான் பொலான்யோவின் கலைநயம் விளங்குகிறது.

லாக்ரூவா செயல்பட்டுவரும் கிறிஸ்துவச் சூழலின் மதிப்பீட்டின்படி புறாக்கள் குற்றமற்ற இயேசு கிறிஸ்துவின், பரிசுத்த ஆவியின், தேவ சமாதானத்தின் குறியீடுகள். ஆயினும் இவ்வுலக ராஜ்ஜியத்தின் பெரும் சின்னங்களாக விளங்கும் பண்டைய தேவாலயக் கட்டடங்களைப் பாதுகாக்க வேண்டி, கிறிஸ்துவின் பக்கமாகவும், தேவ சமாதானத்தின் பக்கமாகவும் நிற்க வேண்டிய பாதிரிமார்கள் அவ்வுலக ராஜ்ஜியத்தையே பெரிது என்று எண்ணிய இயேசு கிறிஸ்துவையே நிராகரிப்பதுபோல் பருந்துகளின் மூலமாகத் தற்காப்பற்ற புறாக்களைக் கொலை செய்கிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோதும், எதிர்த்து எந்தக் கேள்வியும் கேட்காத லாக்ரூவா புதிய ராணுவ ஆட்சிக்கு அனுகூலமாக இருப்பான் என்று அவனுடைய மேலதிகாரிகள் தீர்மானிக்கிறார்கள். 

பண்டைய தேவாலயங்களின் இடத்தில் ராணுவ ஆட்சியின் அமைப்புக்களை வைத்ததைப் போன்ற தோற்றமும், ராணுவ ஆட்சியைத் தற்காப்பது, தேவாலயத்தையும் தேவனையும் பாதுகாப்பது போன்ற சித்திரிப்பும், பண்டைய தேவாலயக் கட்டடங்கள் ஐரோப்பியக் கலைப் படைப்புகளின் உச்சம் என்பதால் அவற்றைப் பாதுகாப்பது கடமை என்ற தொனி நாவலில் வருவதால் கலை – மதம் – அரசியல் ஸ்தாபனம் என்ற மூன்றையும் நேர்க்கோட்டில் வைத்து, ஸ்தாபன வன்முறை எப்படி அவற்றைக் கீழறுப்புச்செய்து மனிதர்களால் புனிதமென்று கருதப்படும் அனைத்தினோடும், எப்படி வன்முறை தன்னையே அடையாளப்படுத்திக் கொள்கிறது என்று பொலான்யோ காட்டுகிறார். 

பறவைகளின் எச்சங்களால் பாதிரியார்களின் இந்த மிகப் பெரிய வன்முறையும் தூண்டப்படுவதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.  மலஜலம் கழிப்பது, பேசுவது, கருத்தைத் தெரிவிப்பது யாவும் மனிதர்களுடைய மிகச் சாதாரணமான தினசரிக் காரியங்கள். ஆனால், ஒரு ஸ்தாபனத்தின் சிறப்புமிக்க குறியீடுகளுக்கு எதிரானவையாக இந்தத் தினசரிக் காரியங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் கருதப்படும்போது, ஸ்தாபனம் மிகுந்த வன்முறையோடு எதிர்வினையாற்றி தனிமனிதர்களின் இந்தச் சகஜமான வெளிப்பாடுகளை ஒடுக்க முனைகிறது. ஸ்தாபனத்தின் கௌரவத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதப்படும் மனிதர்களையும் அழித்தொழிக்க முயல்கிறது. அதன் வன்முறைக்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் பணிந்து போகிறவர்களை தனக்குச் சாதகமானவர்களாக அடையாளம் கண்டுகொள்வதாய்ப் பொலான்யோ தமது நாவல்களில் காட்டுகிறார்.

பறவையின் எச்சத்தை அப்புறப்படுத்த வன்முறையை ஏவிவிடும் சர்வாதிகாரத்தின் செயல்பாடுகள் சமுதாயத்தின் சகல நடவடிக்கைகளிலும் வேர்விட்டு எங்கும் விரவியிருக்கின்றன. பொலான்யோவின் நாவல்களில் நிர்வாகக் கேந்திரங்களால் நிறுவப்பட்டுப் பயிலப்படும் வன்முறை சுலபமானதாக மட்டுமல்லாமல், தினசரி நடவடிக்கையாகவும் மாறிப்போகிறது. 2666 நாவலின் ‘விதியைப் பற்றிய பகுதி’ என்ற விவரிப்பில் பொலான்யோ கற்பனையில் உருவான சாண்டா தெரேஸா நகரத்துக்குக் குத்துச்சண்டைப் போட்டி ஒன்றைக் காண வந்திருக்கும், அமெரிக்கச் செய்தித்தாள் நிருபரின் கண் முன்னால், மதுபான விடுதி ஒன்றில் சாண்டா தெரேஸா நகரத்தின் அன்றாட வன்முறை ஒன்று நிகழ்ந்தேறுகிறது. நிருபருக்கு எதிரில் அறையின் அடுத்த மூலையில் நின்றுகொண்டிருக்கும் ஆண், ஒரு பெண்ணை முஷ்டியினால் பலமாகக் குத்துகிறான். முதல் குத்தின் வீரியத்தால் துணிப் பொம்மையின் கழுத்தைப்போல தோள்பட்டையைத் தாண்டியும் பின்னோக்கிச் சின்ன சத்தத்தோடு நகர்ந்து ஆடித் தொங்குகிறது. இரண்டாவது குத்தும் அதே வீரியத்தோடு இறங்க, அந்தப் பெண் மயங்கிக் கீழே துணிக் குவியலாகச் சரிகிறாள். 

மனிதர்களிடம் வன்முறையே இல்லை என்பது பொலான்யோவின் வாதம் என்பதாகத் தோன்றவில்லை. நாகரீகச் சமுதாயம் வன்முறையைக் குத்துச்சண்டை போன்ற பல வகையான விளையாட்டுக்களாக ஆக்கி, அவற்றை ரசிக்கத்தக்கக் காட்சிகளாக மாற்றி வைத்திருக்கிறது. சாண்டா தெரேஸா நகரத்துத் தெருக்களின் அன்றாட  வன்முறையைக் காணும் அமெரிக்க நிருபர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரனும், மெக்ஸிகக் குத்துச் சண்டை வீரனும் மோதவிருக்கும் சண்டையைச் செய்தித்தாளில் எழுதுவதற்காக வந்தபோதுதான், குடிக்கும் விடுதியில் அந்த ஆள் எதிரிலிருந்த பெண்ணைக் குத்துவதைக் கண்டான் என்று சொன்னதில், பொலான்யோவின் மேதைமை விளங்குகிறது. சடங்காக்கப்பட்ட வன்முறையைக் கண்டுகளிக்கும் ஒரு நாகரீகத்தைத் தூக்கிப்பிடிக்கும் அமெரிக்க நிருபர், மதுபான விடுதியில் அர்த்தமே இல்லாமல் நடந்தேறும் வன்முறையைக் கண்டு ஏன் திடுக்கிட வேண்டும்? வாசகர்களாகிய நாமும்கூட ஏன் திடுக்கிட்டுப் போகவேண்டும்? பல வகைகளிலும் அனுமதிக்கப்பட்ட வன்முறையைக் கொண்டாடும் நமக்கு, அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நிறுவப்பட்ட வன்முறையை அருவருக்கத்தக்கது என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? 

ஆனால், ஒரு சமுதாயக் கட்டுமானத்தில் சகஜமாகிப்போன ஸ்தாபன வன்முறையின் கட்டுப்பாடற்ற தன்மையையும், அடிப்படை அர்த்தமின்மையையும், அதன் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகச் சுலபமாகிப்போன தன்மையையும் பார்த்து நமக்குப் பயம் ஏற்படுகிறது. மதுபான விடுதியில் அடிவாங்கி விழும் பெண்ணைப் பார்க்கும் நிருபருக்குப், பின்னர் சாண்டா தெரேஸா நகரத்தின் குண்டர்களில் சிலரோடு பரிச்சயம் ஏற்படுகிறது. அவர்கள் அவனுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுவதைப்போல் தோன்றும் ஒரு வீடியோவைக் காட்டுகிறார்கள். அந்த நகரத்தில் நடக்கும் கொலைகளைச் செய்தவன் என்று கருதப்படும் முக்கியக் குற்றவாளியை அவர்கள் அவனுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். பின்னர், சாண்டா தெரேஸா நகரத்தில் நடக்கும் கொலைகளோடும் குற்றங்களோடும், போலீஸாருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பை அறிந்துகொள்ளும் நிருபர் அந்த இடத்தைவிட்டே பயந்து ஓட்டம் பிடிக்கிறான்.

சாண்டா தெரேஸா நகரத்தைவிட்டு அந்த அமெரிக்க நிருபர் எந்தக் காரணத்திற்காகப் பயந்து ஓடினானோ, அதே காரணத்துக்காகத்தான் எல்லா சராசரி மனிதர்களும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் வேரோடிப்போய் சமூக அமைப்புகள் அத்தனையிலும் பரவியிருக்கும் வன்முறையைக் கண்டு அஞ்சுகிறார்கள். காரணம், நியாயம், நீதி, அறம் என்றெல்லாம் நாம் நமக்கே அனுமதித்துக்கொள்ளும் போலியான விளக்கங்களை உள்ளடக்கிய வன்முறைச் சம்பவங்களையும், விளையாட்டையும் எந்தச் சலனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் நாமேதான், எந்தவித காரண காரியங்களுக்கும் உட்படாததுபோலத் தோன்றும் வன்முறையைக் கண்டு வெறுக்கிறோம். சுலபமாக வியாபிக்கும் அதன் தன்மையைக் கண்டு அஞ்சுகிறோம். 

மதுபான விடுதியில், ஓர் ஆண் ஒரு பெண்ணை மிகக் கொடூரமாகத் தாக்கும் வன்முறைப் புள்ளியிலிருந்து தொடங்கும் 2666 நாவலின் வன்முறை விவரிப்பு அடுத்துவரும் ‘குற்றங்களை பற்றிய பகுதி”யில், இந்த ஸ்தாபன வன்முறையின் சர்வ வியாபகத் தன்மையை வாசகனின் கண்களுக்கு நிறுத்துவதாக விரிந்து நிற்கிறது. இந்தப் பகுதியின் சுமார் 280 பக்கங்களில் (நாவலின் மூன்றில் ஒரு பங்கு) 1993ம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் 1997வரை உள்ள நான்கு ஆண்டுகளில் சாண்டா தெரேஸா நகரத்தில் நடந்த 108 கொலைகளைப் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் துல்லியத்தோடு விவரிக்கிறது. 

ஒரு பதிமூன்று வயது இளம்பெண்ணின் சடலம் கண்டு எடுக்கப்படுவதுடன் தொடங்கும் இந்த விவரிப்பு, கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டவர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்கள், கத்தியால் குத்தப்பட்டவர்கள், எரிக்கப்பட்டவர்கள், கற்பழிக்கப்பட்டவர்கள், சதை பிய்ய சாட்டையால் அடிக்கப்பட்டவர்கள், உடல் பாகங்கள் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டவர்கள், லஞ்சம் வாங்கிய போலீஸார், காட்டிக் கொடுத்தல் என்று மனிதர்களின் அத்தனை கீழ்த்தனமான செயல்களையும் பட்டியலிட்டு முடியும்போது, வாசகர்கள் தரப்பட்டுள்ள மருத்துவ விவரணைகளின் துல்லியத்தாலும், பட்டியலின் நீளத்தாலும் சற்றே உணர்ச்சியற்றுப் போய்விட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இத்தனை துல்லியமான விவரிப்புகளோடு இந்தப் பகுதி எழுதப்பட்டிருந்தாலும், பொலான்யோ இதில் சேர்க்கும் விவரத் துல்லியங்கள் அத்தனையும், இந்தப் பகுதியின் அபத்தத்தையும் அர்த்தமின்மையையும் அதிகப்படுத்துவதாகவே இருக்கின்றன. இந்தப் பகுதியில் 108 கொலைகளைப் பட்டியலிடும் பொலான்யோ இந்த விவரிப்புக்களில் மிகப் பெரும்பாலானவற்றை ‘வழக்கு விசாரணை மிக விரைவில் முடித்துவைக்கப்பட்டது’ என்றே முடிக்கிறார். போலீஸாரும், மற்ற அதிகார ஸ்தாபனங்களும் வன்முறையின் கைக்கூலிகளாக இருக்கும் ஒரு நகரத்தில் இந்த முடிவு மட்டுமே சாத்தியம். நீதியை எதிர்ப்பார்ப்பது வீண் வேலை.

சாண்டா தெரேஸா என்பது முழுக்க முழுக்கக் கற்பனை நகரம் என்றாலும், 2666 நாவலின் நான்காவது பகுதியில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு சித்திரவதையும், கொடூரமான கொலையும் மெக்ஸிகோவின் சியூதாத் ஹுவாரஸ் என்ற நகரத்தில் உண்மையிலேயே கொல்லப்பட்ட சுமார் 300 ஏழை இளம்பெண்களின் வரலாறுகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை என்பது, பொலான்யோவின் நாவலை வெறும் அத்துமீறல் இலக்கியம் என்று கடக்கவிடாமல் இந்த விவரிப்புக்களின் கனத்தைக் கூட்டுகிறது. கொசுறுச் செய்தியாக, சியூதாத் ஹுவாரெஸ் நகரத்தில் நடந்த அந்த முந்நூறு கொலைகளில் ஒன்றில்கூடக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது தனி வரலாறு. 

சிலேயில் மாயமாய் மறைந்துபோன பல்லாயிரக் கணக்கானவர்களின் கதியும் இதுதான்.

 2666 நாவலில் சொல்லப்பட்டிருப்பது போன்று, மெக்ஸிகோவின் ஒரு எல்லைப்புற நகரத்தில் நடந்த கொடூரமான கொலைகள் என்றாலும் சரி, சிலேயில் நடந்தேறிய ராணுவப் புரட்சிக்கு ஆதரவாக அவிழ்த்துவிடப்பட்ட அரசியல் கொலைகளானாலும் சரி – அவை ஸ்தாபனங்களின் தயவாலும், ஸ்தாபனங்களின் வழியாகவும் நடக்கின்றன.

ஒரு வகையில், அதிகாரபூர்வமான ஆவணங்கள் காட்டுவது உண்மைதான். அந்தக் கொலைகளுக்கு யாருமே பொறுப்பில்லை. அதேநேரம், அந்தச் சூழலில் வாழ்ந்த அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் அந்தக் கொலைகளுக்குப் பொறுப்பாகிறார்கள்.

அதனால்தான், அது ஸ்தாபன வன்முறை.

2

மெக்ஸிகன் பிளேபாய் இதழுக்குத் தந்த நேர்காணல் ஒன்றில், ரொபெர்த்தோ பொலான்யோ எழுத்தாளனாய் இருப்பதைவிட ஒரு துப்பறியும் நிபுணனாக இருப்பதையே அவர் விரும்பியதாகச் சொல்கிறார். ஆனால் துப்பறியும் நிபுணனின் வேலையைப் பற்றி அவர் தரும் விளக்கம் சுவாரசியமானது. 

“வரிசையாகக் கொலைகள். தனியாகக் கொலைகள் நடந்த இடத்துக்குப் போய்வரக்கூடிய ஒருவன். இரவு நேரத்தில், கொலை நடந்த இடத்துக்கு. பேய்களைக் கண்டு அஞ்சாமல்.”

துப்பறிவாளனின் பணிக்கு பொலான்யோ கூறும் அத்தனை இலக்கணங்களையும் – தொடர் கொலைகள், தனியாகத் துப்புத் துலக்கும் ஒருவன், எதுவும் தெளிவில்லாத இரவு நேரம், கொலையுண்டவர்களின் பேய்களை அஞ்சாமல் முகத்துக்கு முகம் பார்ப்பது – ஆகிய அனைத்தையும் பொலான்யோ தமது நாவல்களில் செய்திருக்கிறார்.

துப்பறியும் வேலை அடிப்படையில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படக்கூடியது. துப்பறிவாளன் முதலில் கொலை எப்படி நடந்தது என்று துப்பறிந்து விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இரண்டாவதாக, அந்தக் கொலைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து துல்லியமாகக் கண்டுபிடிக்க வேண்டும். 

இந்தக் கட்டுரையின் முன்பகுதியில் பொலான்யோவின் நாவல்களில் சித்திரிக்கப்படும் ஸ்தாபன வன்முறை எப்படி யார் கண்ணிலும் புலப்படாதபடி இருந்தாலும்கூட, குறிப்பிட்ட சமுதாயத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்து, அதிகார ஸ்தாபனங்களின் உதவியோடும், அவற்றின் வழியாகவும், மனசாட்சியின் குரலாய் இருந்திருக்க வேண்டியவர்கள் அத்தனை பேரையும் கீழறுப்புச் செய்து செயல்படுகிறது என்பதைப் பார்த்தோம்.

ஆனால் பொலான்யோவின் நாவல்களில் விவரிக்கப்பட்டிருக்கும் ஸ்தாபன வன்முறைக்கு எது காரணம் என்று ஆராயும்போது சிக்கல் ஆரம்பமாகிறது. ஒரு சமூகத்தில் வன்முறை நிகழ்வதற்கு அந்தச் சமூகத்திலேயே நிலைத்து நின்றுபோன சில விஷயங்கள் காரணமாக இருக்கலாம். வன்முறைக்கான காரணங்கள் களையப்படும்போது, அந்தச் சமூகத்தில் பரவி இருக்கக்கூடிய வன்முறையும் (தனி மனிதக் குற்றங்களைத் தவிர்த்து) பெரும்பாலும் அகன்றுவிடுகிறது. ஆனால், பொலான்யோ நாவல்களில் பேசப்படும் ஸ்தாபன வன்முறை அப்படிச் சிறிது காலம் இருந்துவிட்டுச் சமூகக் காரணங்கள் தீர்க்கப்பட்டவுடன் அகன்றுவிடக்கூடிய வன்முறையாகச் சித்திரிக்கப்படவில்லை. முன்னால் குறிப்பிட்டதுபோல், பொலான்யோவின் கதைகளில் வரும் வன்முறை, காரணங்கள் அற்றதாக அல்லது காரணங்களை மீறியதாகவே இருக்கிறது. 

பலவிதமான சமூகக் கட்டுப்பாடுகளை மீறியும், மற்றவர்களின் வெறுப்பைத் தாண்டியும் நிகழ்த்தப்பட வேண்டிய வன்முறையைவிட பொலான்யோவின் நாவல்களில் காட்டப்படும் ஸ்தாபன வன்முறை வெகு சுலபமாக நிகழ்கிறது. அந்தந்தக் காலங்களில் நடக்கும் வன்முறை மனோரீதியிலானது அல்லது மனிதர்களின் மன இயல்புகள், பேராசைகளின்படி உருவாவது என்றால், பொலான்யோவின் நாவல்களில் பேசப்படும் ஸ்தாபன வன்முறை உடலில் அல்லது ரத்தத்தில் ஊறியிருப்பது. தொற்று நோய்போல் மனிதர்களின் உடலில் மட்டுமின்றி, ஒரு சமூகத்தின் ‘உடம்பினுள்ளும்’ கண்ணுக்குப் புலப்படாத வகைகளில் கலந்து வன்முறைகளைத் தூண்டுவது. 

அதாவது மனிதர்களின் அடிப்படை இயல்புகளில் கலந்திருக்கும் இந்த வன்முறைத் தொற்றுதான் அவருடைய நூல்களில் காட்டப்படும் அத்தனை ஸ்தாபன வன்முறைகளுக்கும் காரணம் என்று பொலான்யோ கருதினார் என்று சொல்வதற்குச் சாத்தியம் இருக்கிறது.

மனிதர்களைப் பாவத்துக்குத் தூண்டும் ஆதி பாவம் என்ற கருத்தியல் பைபிளில், குறிப்பாக பைபிளின் புதிய ஏற்பாட்டிலிருந்து பெறப்படுவது. மனிதர்களின் மனதில் மட்டுமின்றி, அவர்களுடைய உடலில் – அதாவது அவர்களுடைய மிக அடிப்படையான இயல்புகளில் – கலந்துவிட்ட ஆதி பாவம் என்ற பலவீனத்தால்தான் மனிதர்கள் வன்முறைக்கும், காமத்துக்கும் தூண்டப்படுகிறார்கள் என்பது அப்போஸ்தலர் பவுல் ரோமானியர்களுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள வாதம். ஒவ்வொரு மனிதனும் தமது பழைய இயல்புக்குச் செத்துப்போய், இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைப்பதன் வழியாக வன்முறை கலக்காத முற்றிலும் புதிய இயல்பை ஏற்றுக் கொண்டாலன்றி, அவனால் தனக்குள் கலந்திருக்கும் வன்முறைகளையும் காமத்தையும் களைய முடியாது என்பது பவுலின் வாதம்.

வன்முறை, காமம், தந்திரங்கள் கலக்காத இயல்புக்குக் குறியீடாக இயேசு கிறிஸ்து என்றால், இவற்றை எல்லாம் உள்ளடக்கிய இயல்பின் மொத்தக் குறியீடாகப் பைபிளின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்துதல் ஆகமம் காட்டும் உருவம்தான் அந்தி கிறிஸ்து. அந்தி கிறிஸ்து என்ற வார்த்தைக்குக் ‘கிறிஸ்துவுக்கு எதிரானவன் அல்லது எதிரானது’ என்று பொதுவாகப் பொருள் சொல்லலாம்.

2666 என்ற எண்ணைப் பொலோன்யோ பயன்படுத்தியதற்கான காரணத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. பொலான்யோ இந்த எண்ணைத் தமது கடைசி நாவலின் தலைப்பாக மட்டும் வைக்கவில்லை. உண்மையில் 2666 நாவலில் ஒரு முறைகூட இந்த எண் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னால் பொலான்யோ எழுதிய இரண்டு நாவல்களில் இந்த எண் குறிப்பிடப்படுகிறது. 

Amulet என்ற நாவலில் மெக்ஸிகோ தலைநகரத் தெருக்களில் நள்ளிரவில் நடந்து செல்லும் அவுஸிலியோ என்ற பெண், ‘2666 வருடத்தில் இருந்து வந்ததுபோல் தோற்றமளிக்கும்’ ஒரு சுடுகாட்டைக் காண்கிறாள். The Savage Detectives நாவலில் பின்னாளில் நடக்கப்போகும் சம்பவங்களைக் குறிப்பிடும் சீஸேரியா, குத்துமதிப்பாக இரண்டாயிரத்து அறுநூறாம் வருடம் என்ற எண்ணைக் குறிப்பிடுகிறாள்.

பைபிள் அந்தி கிறிஸ்துவின் எண்ணாக 666-ஐக் குறிப்பிடுகிறது.

“இதிலே ஞானம் விளங்கும். அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக் கடவன். அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது. அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.”

பைபிளின் வெளிப்படுத்துதல் ஆகமம், வருங்காலத்தில் வரவிருக்கும் பேரழிவுகளையும் வன்முறைகளையும் கிறிஸ்துவுக்கும் அந்தி கிறிஸ்துவுக்கும் கடைசி காலத்தில் நடக்கப்போகும் போரையும் பற்றி முன்னறிவிப்பாகச் சொல்லும் நூல். போலான்யோ 2666 என்ற எண்ணுடன் தொடர்புபடுத்திச் சொல்லும் விஷயங்களும் (சுடுகாடு, சாவு, வருங்காலம்) அனைத்தும் பைபிளின் இந்த அர்த்தப்படுத்தலோடு ஒத்துப்போகின்றன.

ஒரே வேற்றுமைதான். பைபிள் எதிர்காலத்தில் உலகில் கட்டவிழ்த்து விடப்படப்போகும் வன்முறையைச் சொல்கிறது. பொலான்யோ அந்த வன்முறை நம் வாழ்நாளிலேயே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்கிறார்.

எனினும் கிறிஸ்துவோ, அந்தி கிறிஸ்துவோ இரண்டு வெவ்வேறு தனிப்பட்ட ஆளுமைகள் மட்டுமல்லர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி ராஜ்ஜியங்கள் என்றழைக்கப்படும் ஸ்தாபனங்களின் தலைவர்கள். கிறிஸ்துவின் அதிகாரமும் சரி, அந்தி கிறிஸ்துவின் அதிகாரமும் சரி, அவரவர்களுடைய ஸ்தாபனப் பரிவாரங்களின் வழியாக உலகில் பரவி நிற்கின்றன.  எனினும் இவ்வெவ்வேறு இயல்புகளுக்கு இடையே நடக்கும் போரில் அந்தி கிறிஸ்துவின் படைகளே வெற்றி பெறுவதாகத் தோன்றுகிறது. பொலான்யோவின் நாவல்களில் கிறிஸ்துவின் பக்கமாக இருப்பார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கும் நல்லவர்களும் வல்லவர்களும், அந்தி கிறிஸ்துவின் செல்வாக்கைக் கண்டு மயங்கியோ அல்லது அச்சப்பட்டோ அவன் பக்கமாகச் சாய்ந்திருக்கிறார்கள். பொலான்யோ தமது நாவல்களில் சித்திரித்துக் காட்டும் உலகம், அந்தி கிறிஸ்துவின் ஸ்தாபன வன்முறை கிறிஸ்துவ நல்லியல்புகளையும் ஸ்தாபனங்களையும் ஓயாமல் கீழறுப்புச் செய்து கொண்டிருக்கும் உலகம். இத்தகைய உலகத்தில் ஸ்தாபன வன்முறை என்பது உலகத்தையே தனது பிடிக்குள் வைத்திருக்கும் மாபெரும் தீமை ஒன்றின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழ்கிறது. ஆனால் இந்தத் தர்க்கம் மாயமானது, மனிதர்களின் புரிதலுக்கு அப்பாலிருந்து மனிதனை மேம்படுத்தும் அத்தனை நல்லியல்புகளையும் சிதைக்கும் நோக்கத்துடன் எல்லா இடங்களிலும் மெதுவாகப் பரவிச் செல்வது. 

பொலான்யோ தமது நாவல்களில் – குறிப்பாக 2666ல் – பெண்கள் எப்படியெல்லாம் உடல் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று விவரிப்பதில் காட்டும் ஆர்வம், அந்தி கிறிஸ்துவின் இந்த வேலையை மட்டுமின்றி ,அவனுடைய நோக்கத்தை அம்பலப்படுத்தும் எண்ணம் கொண்டதாகவே தோன்றுகிறது.

இந்தக் கருத்தியலின்படி பார்த்தால், மனிதனுக்குள் ஊறியிருக்கும் இந்த வன்முறை இயல்பு, படித்தவர், படிக்காதவர், சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர், இல்லாதவர், பாதிரியார், நாத்திகர் என்று பேதமின்றி எல்லா மனிதர்களையும் தொற்றக் கூடியதாகத்தான் இருக்க வேண்டும். Nazi Literature in the Americas என்ற தமது நூலில், இத்தகைய ஸ்தாபன வன்முறையை ஆதரிப்பதாகச் சொல்லப்படும் வலதுசாரி எழுத்தாளர்களின் கற்பனை பட்டியலைத் தருகிறார். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் பலதரப்பட்ட எழுத்தாளர்களும், பொலான்யோவின் மற்ற நாவல்களில் வரும் கதாபாத்திரங்களும் பல்வேறு சமூகச் சூழ்நிலைகளையும், நாடுகளையும் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மனிதர்களில் ஊறிப்போயிருக்கும் ஸ்தாபன வன்முறையின் பரவலை, காலம் தேசம் ஆகியவற்றை மீறிய பொதுத் தன்மையை பொலான்யோவின் கதாபாத்திரங்கள் வலியுறுத்துகின்றன.

பொலான்யோவின் நாவல்களில், தென் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நடக்கும் தொடர் வன்முறைகளுக்குப் பொலான்யோ பல நாவல்களில் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துவதும், அத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்களை ஏதோ ஒரு வகையில் நாஜி சித்தாந்தத்தோடு தொடர்புடையவர்களாகக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது. 

முதலாவதாக, பொலான்யோவின் நாவல்களில் சித்திரிக்கப்படும் ஸ்தாபன வன்முறை தென் அல்லது லத்தீன் அமெரிக்காவுக்கு மட்டும் ‘சொந்தமானதன்று’ என்று, நாஜி சர்வாதிகாரத்தோடு பொலான்யோ செய்யும் இந்தத் தொடர்புபடுத்துதல் தெளிவாக்குகிறது. தென் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நடந்ததாகப் பொலான்யோ விவரிக்கும் தொடர் அரசியல் வன்முறைகள் யாவும், நாஜி ஆட்சியின்போதும் நடந்தவை. முன்னால் வேறேதோ ஆட்சியிலும் நடந்திருக்கக்கூடும். இப்படியே வரலாற்றில் பின்னோக்கிப் போனால் பல்வேறு ஆட்சிகள், பல்வேறு வன்முறைகள்.

இரண்டாவதாக, வன்முறைகளைக் கட்டவிழ்க்கவே நாஜி ஆட்சி  நிர்வாக ஸ்தாபனங்களைக் கீழறுப்புச் செய்து தனது நோக்கங்களைச் சாதித்துக் கொண்டது. அதுமட்டுமின்றி வன்முறைக்காகவே பல புதிய ஸ்தாபனங்களை உருவாக்கிக் கொண்டது. ஸ்தாபன வன்முறையின் உச்சபட்ச வெளிப்பாடு என்று நாஜி ஆட்சியைச் சொல்லலாம்.

மூன்றாவதாக, நாஜி ஆட்சி தான் நடத்திக்காட்டிய வன்முறைகளுக்குப் பலமான சித்தாந்த விளக்கங்களை வெளியிட்டது. உணர்ச்சி ரீதியிலான ‘அன்றாட வன்முறை’களுக்கும், ஸ்தாபன வன்முறைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமே இதுதான். 

ஸ்தாபன வன்முறை எப்போதும் தகுந்த சித்தாந்த விளக்கங்களோடுதான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

3

துப்பறியும் கதைகள் என்றிருந்தால், அவை கதையின் இறுதியில் யார் குற்றவாளி என்று சொல்லியே தீரவேண்டும். ஸ்தாபன வன்முறைக்கு யார் பொறுப்பாளி? இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியில் குறிப்பிட்டதுபோல் எல்லோருடைய ரத்தத்திலும் வன்முறை ஊறிக்கிடக்கும் பட்சத்தில், அந்தந்தச் சமுதாயங்களில் பங்கெடுக்கும் ஒவ்வொருவருமே பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். அல்லது யாருமே பொறுப்பாளிகள் இல்லை எனலாம்.

ஆனாலும், பொலான்யோ இத்தகைய வன்முறைக்கு எதிராகப் பேசக்கூடிய கடமையிருந்தும், பேசாமல் அச்சத்தினாலோ ஆசையினாலோ கள்ள மௌனம் சாதிக்கும் அறிவுஜீவிகள் அத்தனை பேரையும் சாடுகிறார். By Night in Chile நாவலின் தொடக்கத்தில் லாக்ரூவா ஒரு மனிதனின் வார்த்தைகளைப் போலவே, அவனுடைய மௌனங்களும் கடவுளின் நீதி விசாரணைக்கு உள்ளாகக்கூடியவை என்று சொல்கிறார். 

“நான் எப்போதும் சொல்வதுபோல், மனிதர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கடமையிருக்கிறது. நாம் செய்யும் செயல்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது – பேசிய வார்த்தைகளுக்காக மட்டுமின்றி மௌனங்களுக்காகவும், ஆமாம், மௌனமாய் இருந்ததற்காக, ஏனென்றால் மௌனங்களும் சொர்க்கத்திற்கு எழுகின்றன. கடவுள் அவற்றையும் கேட்கிறார். கடவுளால் மட்டுமே மௌனங்களை புரிந்துகொள்ளவும், விசாரித்துத் தீர்ப்பு வழங்கவும் முடியும். ஆகையால் மௌனங்களைப் பொருத்தவரை மிகக் கவனமாக இருக்கவேண்டும்.”

தென் அமெரிக்காவிலும், மெக்ஸிகோவிலும் கட்டவிழ்க்கப்பட்ட அர்த்தமற்ற வன்முறைகளுக்கு எதிராகப் பேசாதவர்கள் அத்தனை பேரும் பொலான்யோவைப் பொருத்தவரை குற்றவாளிகளே.

இத்தகைய சூழ்நிலையில் அறத்தின் பக்கமாய் நிற்கும் எழுத்தாளன் அல்லது சமூகப் பொறுப்புள்ள அறிவுஜீவியின் பணி என்ன? அநியாயமான முறைகளில் சாகடிக்கப்பட்டவர்களை ஓயாமல்  துல்லியமான விவரங்களோடு நினைவுக்குக் கொண்டுவந்து நிறுத்துவது.

தமது நாவல்களில் வன்முறைக்கு உள்ளானவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கப் பொலான்யோ எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். அவர் நாவல்களில் தொடர் வன்முறைகள் நடந்த பல இடங்களுக்குப் போகமுடியாத நிலையில், தனது மரணத்துக்குக் காரணமாக இருக்கப்போகும் கல்லீரல் புற்றுநோயோடு போராடியபடியே பொலான்யோ கொலைகளைப் பற்றிய துல்லியமான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செய்தித் துணுக்குகள், போலீஸ் முதல் தகவல் அறிக்கைகள், மருத்தவர் சான்றிதழ்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள மெனக்கெட்டிருக்கிறார்.  கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியின் வகையை, நிறத்தை, அதில் பயன்படுத்தக்கூடிய தோட்டாக்களின் மிக நுணுக்கமான விவரங்களைத் தெரிந்துகொள்ளப் பலரைக் கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார். 

பொலான்யோவின் இந்த ஆர்வத்துக்கு, வன்முறையைப் பற்றி அறிந்து கொள்ளும் வக்கிரமான விருப்பம் எதுவும் காரணமன்று.

1998ல் ரோமுலோ கல்யேகோஸ் பரிசைப் பெறும்போது அவர் ஆற்றிய உரையில், அவர் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் லத்தீன் அமெரிக்காவில் 1960களிலும் 1970களிலும் அரசியல் வன்முறைக்கு ஆளாகிச் செத்துப்போன இளைஞர்களுக்கு அவர் எழுதிய காதல் கடிதம் அல்லது விடைபெறுதல் கடிதம் என்று பொலான்யோ குறிப்பிடுகிறார்.

அப்படிச் செத்துப் போனவர்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அவர்களைப் பற்றித் துல்லியமான விவரங்களைத் தொடர்ந்து நினைவில் வைத்திருப்பது அவசியமாகிறது. ஹிட்லரின் நாஜி அரசால் கொல்லப்பட்ட அறுபது லட்சம் யூதர்களையும் இப்படித்தான் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

வன்முறை என்ற ஸ்தாபனம் எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு உண்மைதான் அதற்கெதிராகக் குரலெழுப்பக்கூடிய தீர்க்கதரிசி என்ற ஸ்தாபனமும்.

அந்தத் தீர்க்கதரிசியின் வேலையைத்தான் பொலான்யோ தமது நாவல்களின் வழியாகச் செய்தார்.

அந்தப் பணிதான், பேய்களுக்கு அஞ்சாமல் துப்பறியும் நல்ல துப்பறிவாளனாகவே அவர் இருந்தார் என்பதை எல்லோருக்கும் காட்டிக்கொடுத்தது.

“வரிசையாகக் கொலைகள். தனியாகக் கொலைகள் நடந்த இடத்துக்குப் போய்வரக்கூடிய ஒருவன். இரவு நேரத்தில், கொலை நடந்த இடத்துக்கு. பேய்களைக் கண்டு அஞ்சாமல்.”

***

One Reply to “நகரத்தில் இப்போதும் இரவு”

  1. இந்தக் கட்டுரை பொலான்யோவின் புத்தகங்களைப் படிக்க என்னைப் பெரிதும் தூண்டிகிறது. கட்டுரை ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.
    லாவண்யா சத்யநாதன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.