‘The Savage Detectives’ 54 கதைசொல்லிகளின் கதையாடல் “நான் ஒரு தோல்வியுற்ற கவிஞன். ஒரு வேளை ஒவ்வொரு நாவாலாசிரியனும் முதலில் கவிதையையே எழுத முயற்சிக்கிறான், அவனால் முடியவில்லை என்பதை உணர்ந்தபின் சிறுகதையை முயற்சிக்கிறான். அதுவே கவிதைக்குப் பிறகு சவாலான வடிவம். அதிலும் தோல்வியுற்ற பிறகு மட்டுமே அவன் நாவலை எழுதத் துவங்குகிறான்.”
– வில்லியம் ஃபாக்னர்

தன்னை மரணம் உன்மத்தம் பிடித்த ஓநாயாய் மீளவியலா இருட்குகைக்குள் துரத்திச்சென்ற வேளையில் ஸ்பானியக் கவிஞன் ரொபெர்த்தோ பொலான்யோ, ‘The Savage Detectives’ எனும் தோல்வியுற்ற கவிஞர்களின் நாவலை எழுதத் துவங்கினான். நாவல் என்பது ஒரு குறைவுபட்ட கலை என்கிற மனநிலையோடு. நாவலை குறைவுபட்ட கலையாய் மதிக்கும் கவிஞன்ச் ஏன் நாவல் எழுத வேண்டும்? ஏனெனில், வாழ்வின் வெறுமையை எழுத நாவலைவிட சிறந்த கலை வடிவம் ஏதுமில்லை. லத்தீன் அமெரிக்கக் கவியுலகைப் புரட்டிப்போடும் வேட்கையுடன் புறப்பட்ட கவிஞர்கள் – ஒரு கவிதையால்கூட நினைவு கூறப்படாதவர்களாய் அல்லது நினைவு கூறத்தக்க ஒரு கவிதையைக்கூட எழுதாதவர்களாய் இலக்கிய வரலாற்றில் தடயமின்றிப் போனவர்களைப் பற்றிய நாவலே, ‘The Savage Detectives’.
Visceral realists என்ற இலக்கியக் குழு, சிசாரியா டீனாஜெரா என்ற பெண் கவிஞரால் மெக்சிகோ சிட்டியில் 1920களில் ஆரம்பிக்கப்பட்டது. அவள் Caborca என்ற இலக்கிய இதழை வெளியிட்டுப் பின், மெக்சிகோ சிட்டியிலிருந்து வெளியேறி சொனாரா பாலைவனத்தில் மாயமாகிவிட்டாள் என்ற தொன்மத்திலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. 1975ல் ஆர்துரோ பொலானோ மற்றும் உலிசஸ் லீமா என்ற இரு கவிஞர்கள் மூலம் மீண்டும் Visceral realists குழு ஆரம்பமாகிறது. அவர்கள், ஸ்பானியக் கவியுலகம் நெருதாவிற்கும் ஆக்டேவியா பாஸிற்குமிடையே சிக்கிக்கொண்டு அல்லாடுவதாகக் கருதுகிறார்கள். மொத்த லத்தீன் அமெரிக்கக் கவிதைகளையே மாறுதலுக்கு உள்ளாக்கி முன்னெடுத்துச் செல்லும் கற்பனாவக்ச் செயல் திட்டங்களுடன் மதுக்கூடங்களில் கவிதை வாசிப்புகள், பல்கலைக்கழகத்தில் விமர்சனக் கூட்டங்களென அக்குழுவின் செயல்பாடு அமைகிறது. பொலானோவும், லீமாவும் கஞ்சா விற்ற காசில் Visceral realistsன் இலக்கிய இதழை நடத்துகிறார்கள்.
இலக்கற்ற அலைச்சலான வாழ்க்கை, கட்டற்ற காமமென இருபது வயதுகளில் இலக்கியப் பித்தில் திரியும் இளங்கவிஞர்களின் வாழ்வு ‘மெக்சிகோவில் தொலைந்துபோன மெக்சிகர்கள்’ எனும் நாவலின் முதல் பகுதியில், கார்சியோ மெடிரா எனும் பதினேழு வயதுக் கவிஞனின் நாள்குறிப்பின் மூலம் விரிகிறது. 1975 நவம்பர் 2ல் அவன் Visceral realists குழுவில் இணைவதில் துவங்கி, டிசம்பர் 31ல் லூப் எனும் வேசியை அவள் தரகனிடமிருந்து காப்பாற்றி பொலானோவுடனும் லீமாவுடனும் மெக்சிகோ சிட்டியிலிருந்து தப்பிச்செல்வது முடிய நாவலின் முதல் பாகமாக அந்நாள்குறிப்பு உள்ளது.
நாவலின் இரண்டாம் பாகத்தின் பெயர் ‘The Savage Detectives’. தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஃப்ரிக்கா, ஆசியா என நான்கு கண்டங்களிலிருந்து 54 கதை சொல்லிகள் ஆர்துரோ பொலானோவைப் பற்றியும், உலிசஸ் லீமாவைப் பற்றியுமான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். 1976ல் துவங்கும் அந்நினைவுகள் 1996ல் நிறைவடைகின்றன. இருவரின் அலைச்சலும் நம்மை மிரட்சிக்குள்ளாக்குகிறது. நாவலின் பக்கங்கள் விரிய விரிய வாழ்வின் வெறுமையின் கணமும் கூடிச்செல்கிறது. இருவரும் ஏதோ ஆவிகளைப் போன்று கதைசொல்லிகளின் மனதில் ஊடாடித் திரிகிறார்கள்.
நாவலின் மூன்றாம் பாகம் ‘சொனாரா பாலைவனம்’. அது மீண்டும் கார்சியா மெடிராவின் 1976 நாள்குறிப்பாக, ஜனவரி 1 முதல் ஆரம்பமாகிறது. லூப்பின் தரகனிடமிருந்து தப்பிய நால்வரும் சொனாரா பாலைவனத்தில் சிசாரியா டீனாஜெராவைத் தேடித் திரிகிறார்கள், வரலாற்றில் தொலைந்துபோன பெண் கவிஞரின் தடயங்களைப் புழுதி நிறைந்த சொனாரா பாலைவனச் சிறு நகரங்களில். வேசி லூப்பின் தரகன் அவர்களைத் துப்பறிந்து துரத்தி வருகிறான்.
54 கதைசொல்லிகள் மூலம் நாவலைக் கட்டமைத்து ஒரு அலாதியான வாசிப்பனுவத்தை பொலான்யோ நமக்குத் தருகிறார். கூர்மையான மொழியும், தடாலடியான இலக்கிய உரையாடல்களும் நாவல் முழுதும் விரவிக் கிடக்கின்றன. உதாரணங்களாக, “இலக்கியத்தைப் பொதுவாக இவ்வாறு வகைப்படுத்தலாம் நாவல் – எதிர்ப்பாலுறவு, கவிதை முழுமையாக தற்பாலுறவு, சிறுகதைகள் – இருபாலுறவு”.
“அனைத்துக் கவிஞர்களுக்கும், மிகுந்த முற்போக்குவாதிக்கும்கூட இலக்கியத்தில் ஒரு தந்தை தேவை. ஆனால், இக்கவிஞர்கள் அநாதைகளாய் இருப்பதற்கே தகுதியானவர்கள்.”
“நீ ஒரு பெண்ணை ஒரு கவிதையால் வசியப்படுத்தலாம், ஆனால் அவளைத் தொடர்ந்து உன் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. ஒரு இலக்கிய இயக்கத்தாலும்கூட முடியாது.”
அனைத்து லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப்போல பொலான்யோவும், தமது தாய்நாடான சிலேயைவிட்டு வெளியேறிய பின்பே முக்கிய இலக்கிய ஆக்கங்களைப் படைத்தான். தமது தாய்நாடென அவன் பிற்காலத்தில் குறிப்பிட்டது ஸ்பானிய மொழியை. மொத்த லத்தீன் அமெரிக்காவும் அதன் மறக்கப்பட்ட இளைஞர்களின் எலும்புகளோடு சேர்ந்து நொறுங்குவதாகக் கூறிய பொலான்யோ தமது நாவல் மூலம் மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுத்தான்.
தமது நாவல்களுக்காகப் பொலான்யோ பிற்காலத்தில் எவ்வளவு புகழடைந்தாலும், கவிதை எழுதுவதை இறுதிவரை நிறுத்தவில்லை. நாவலைக் குறைவுபட்ட கலையெனக் கருதுவதையும். நெருதாவின் உணர்ச்சிமயமான கவிதைகளைப் புறக்கணித்த பொலான்யோ பின்பற்றியது நிகானர் பாராவை.
ஒரு அரை நூற்றாண்டு காலத்திற்கு
கவிதையானது
முட்டாள்களின் பெருமித சொர்க்கமாயிருந்தது
நான் எனது
ரோலர் கோஸ்டருடன் வரும் வரையில்.
நீங்கள் விரும்பினால் ஏறிக்கொள்ளுங்கள்
அதிலிருந்து குருதியொழுகும்
வாயுடனும் மூக்குடனும் நீங்கள் வெளியேற நேர்ந்தால்
நான் பொறுப்பாக முடியாதென்பதும் உண்மைதான்.
– நிகானர் பாரா
ரொபெர்த்தோ பொலான்யோ மற்றும் அவனது நண்பன் மரியா சான்டியாகோ ஆகிய இருவரின் அலைச்சலான வாழ்வே இந்நாவல். ஆனால், பொலான்யோவின் படைப்பைப் பற்றிய நடாஷா விம்மரின் வரிகள், “வாழ்வு புனைவிற்கான எளிய மூலப்பொருளாக பொலான்யோவின் படைப்பில் இடம்பெறவில்லை. வாழ்வு புனைவுடன் நிகழ்த்தும் மகரந்தச் சேர்க்கையாக அவரது படைப்பு அமைந்துள்ளது.”
மரியா சான்டியாகோ, மெக்சிகோவில் விபத்தில் இறப்பதற்குச் சில காலம்முன் ஸ்பெயினிலிருந்து ரொபெர்த்தோ பொலான்யோ எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதுகிறான்: “நான் ஜன்னல்களைத் திறந்து வைத்துள்ளேன், வெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது, கோடைப் புயல், மின்னல், இடி, நம்மை பரவசமோ அல்லது துயரத்திற்கோ உள்ளாக்கும் ஒரு வகையான தட்பவெப்ப நிலை. மெக்சிகோ எப்படி உள்ளது? மெக்சிகோ தெருக்கள் எப்படி உள்ளன, அங்கே உலாவித் திரியும் என்னுடைய ஆவி, நமது கட்புலனாகா நண்பர்கள்? Al Este del Paradiso இன்னும் திறக்கப்படுகிறதா அல்லது எளிமையின் உறக்கத்திற்குள் சென்று நலிவடைந்துவிட்டதா? என்னுடைய பொருளாதாரச் சூழல் முன்னேறிய ஒரு இரவில் நான் ஒருவேளை உன் வசிப்பிடத்தில் காட்சிதரக்கூடும். அப்படி இல்லையென்றாலும் அது ஒரு விசயமன்று. நாம் பயணித்த தொலைவுகள் ஏற்கெனவே ஒரு விதத்தில் சரித்திரமாகிவிட்டது, மேலும் அது உயிர்ப்புடனேயே உள்ளது. நான் கூற விழைவது: அது புலன்களில் உயிர்ப்போடு இருப்பதை இன்னும் நான் உணர்கிறேன், இருண்மைக்குள் ஆனால் இன்னும் தாக்குப்பிடித்தவாறு – யார் அவ்வாறு கருதியிருப்பர்? சரி, அதிலே மனதைச் செலுத்திவிட வேண்டாம். நான் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ அதில் உலிசஸ் லீமா என அழைக்கப்படுகிறாய். நாவலின் தலைப்பு ‘The Savage Detectives’. அன்புடன் R.”
(முன்னர் கல்குதிரையில் வெளிவந்தது.)
Excellent one .