என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு

ரொபெர்த்தோ பொலான்யோ

தமிழாக்கம்: அம்பை

டிசம்பர் 14, 2008

1999ல் வெனெஸுயெலாவிலிருந்து திரும்பி வந்தபின் சிலேயாக இருந்திருக்ககூடிய ஒரு நாட்டில் ஸான்டியாகோவாக இருந்திருக்கக் கூடிய ஒரு நகரத்தில், நான் என்ரீகே லின்னின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதைப்போல் கனவு கண்டேன்.  சிலேயும் ஸான்டியாகோவும்  நரகத்தை ஒத்தவை என்பது நினைவில்இருந்தது;  உண்மை நகரத்துக்கும் கற்பனை நகரத்துக்கும் ஏதோ அடித்தள அடுக்கொன்றில் எப்போதுமே இருக்கும் ஒற்றுமை அது. லின் இறந்தாகிவிட்டது என்பது எனக்குத் தெரியாமலில்லை. ஆனால் என்னுடன் இருந்தவர்கள் அவரைச் சந்திக்க என்னை அழைத்துச் செல்ல முன்வந்தபோது தயங்காமல் ஏற்றுக்கொண்டேன்.அவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்றோ இல்லை அற்புதங்கள் சாத்தியமென்றோ நான் நினைத்திருக்கலாம். ஆனால் நான் எதையுமே யோசிக்காமலும் இருந்திருக்கலாம் அல்லது அவர்கள் கூறியதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். எப்படியோ நாங்கள் மங்கியமஞ்சள் வண்ணம் பூசப்பட்ட முகப்புடன் கீழ்த் தளத்தில் மதுக்கடை ஒன்றிருந்த ஏழு மாடிக் கட்டடம் ஒன்றுக்கு வந்துசேர்ந்தோம். மதுக்கடை பெரியது; நீண்ட விற்பனை மேடையும் பல தடுப்பறைகளும் கொண்டது. என் நண்பர்கள் (அப்படி அவர்களைச் சொல்வது சற்றுப் பொருத்தமாக இல்லை; கவிஞரைச் சந்திக்க என்ன அழைத்துப் போவதாகக் கூறிய உற்சாகம் மிகுந்த சிலர் என்று சொல்லலாம்) ஒரு தடுப்பறைக்கு என்னை இட்டுச் சென்றபோது லின் அங்கு இருந்தார். முதலில் அவரை அடையாளமே தெரியவில்லை. அவர் புத்தகங்களில் நான் பார்த்திருந்த முகமில்லை அது. மெலிந்திருந்தார்; முன்பைவிட இளமையாக இருந்தார். புத்தக அட்டைப் புகைப்படங்களில் வெறும் கறுப்பும் வெளுப்புமாக மட்டும் இருந்த அவர் கண்களைப்போல் அல்லாமல்  ஒளிகூடித் தெரிந்த கண்களுடன் மேலும் வசீகரமாக இருந்தார். பார்க்கப்போனால் லின் லின் போலவே இருக்கவில்லை; தொலைக்காட்சிப் படங்களிலும் ஐரோப்பிய அரங்குகளில் எல்லாம் காட்டப்படாமல் நேரடியாக வீடியோக்களாகிவிடும் படங்களிலும் நடிக்கும் இரண்டாந்தர ஹாலிவுட் நடிகரைப்போல் இருந்தார். அதே சமயம் அவர் லின்னாகவும் இருந்தார். அதைக் குறித்து எனக்கு எந்த ஐயமும் இருக்கவில்லை. அந்த ஆர்வலர்கள் எதோ அவருக்கு நெருங்கியவர்கள் போல் அவரை என்ரீகே என்றழைத்து அவருக்கு முகமன் கூறி, அவரிடம் எனக்குப் புரியாத கேள்விகளைக் கேட்டார்கள். பிறகு எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினார்கள். அவரை எனக்கு அறிமுகப்படுத்தவேண்டிய தேவை எதுவும் இருக்கவில்லை பார்க்கப்போனால். ஏனென்றால் அது வெகு குறுகிய காலமாக இருந்தாலும் சில காலத்துக்கு அவருடன் கடிதத் தொடர்பில் இருந்தேன். அவர் கடிதங்கள் ஏதோ ஒரு வகையில் என்னைச் செலுத்தின  என்றுகூடக் கூறலாம். கையில் பணம் இல்லாமல் பணம் வருவதற்கு எந்தவித உறுதியும் இல்லாமல் கெரோனா[1] நகரத்தின் வெளியே ஒரு வீட்டில் விட்டேற்றியாக நான் வாழ்ந்த 1981-1982ம் ஆண்டுகள் நான் குறிப்பிடுவது. செவ்விய எழுத்தாளர்கள் வெகு சிலரைத் தவிர எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அகன்ற ஒரு கண்ணிவெடி வயலாக இலக்கியம் இருந்தது அப்போது; ஒவ்வொரு நாளும் அந்தக் கண்ணிவெடி வயலில் நடக்கவேண்டிவந்தது எனக்கு. ஓர் அடி மாறி வைத்தால் போதும் மரணம்தான். எனக்கு வழிகாட்ட அப்போது இருந்ததெல்லாம் ஆர்க்கிலாக்கஸ்ஸின்[2] கவிதைகள்தாம்.எல்லா இளம் எழுத்தாளர்களுக்கும் அப்படித்தான். ஒரு கால கட்டம் வரும்; அப்போது எந்தவித ஆதரவும் இருக்காது. போஷகர்கள் ஆதரவு கிடக்கட்டும், நண்பர்கள் ஆதரவு கூட இருக்காது. கைகொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். புத்தக வெளியீடு, விருதுகள், நல்கைகள் எல்லாம் மற்றவர்களுக்காக இருக்கும். நிதம் நிதம் ஆமாம் சாமி போட்டவர்கள்; கட்டுப்பாடுகளை விதிக்கும் மற்றும் தண்டனைகள் அளிக்கும் சூட்சுமத்துக்காக மட்டுமே தனித்து நின்று எதையும் தங்கள் பார்வையிலிருந்து தப்பவிடாமல் எதையும் மன்னிக்காத இலக்கிய ஆளுமைகள் கூட்டத்தைப் புகழ்ந்தவர்கள். போகட்டும்; நான் சொன்னதுபோல், எல்லா இளம் எழுத்தாளர்களும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் இப்படி உணர்வார்கள். ஆனால் அப்போது எனக்கு இருபத்தெட்டு வயது. இளம் எழுத்தாளன் என்று என்னைச் சொல்லிக்கொள்ளக்கூட முடியா வாழ்க்கையில் அலைப்புண்டு இருந்தேன். பெயருக்கு அரசு வேலை ஒன்று இருந்ததால் ஐரோப்பாவில் வாழும் வழக்கமான லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் என்றும் என்னைச் சொல்லிக்கொள்ள முடியாது. நான் எதற்கும் அருகதையற்றவன். ஆனால் கருணைப் பிச்சை கேட்கவோ என் நிலைமையைக் காட்டிக்கொள்ளவோ மனமில்லை. அப்போது நான் என்ரீகேவுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தேன். நான்தான் அதை ஆரம்பித்தேன் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. பதிலுக்கு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. சிலேயில் நாங்கள் கூறுவது போல் நீண்ட, சிடுசிடுப்பைக் காட்டும்  கடிதம்: இருண்டுபோய் அழற்றுவது.பதிலில் என் வாழ்க்கையைப் பற்றிக் கூறினேன்; கெரோனாவின் வெளியே மலை ஒன்றின் மேல் இருந்த கிராமப்புறத்து வீடு, அதன் எதிரே இருந்த இடைக்கால நகரம், அதன் பின்னே இருந்த கிராமப்புறம் அல்லது வெறுமை இவை பற்றி. என் நாய் லைகா பற்றியும் கூறினேன். என் கருத்துப்படி சில விதிவிலக்குகள் இருந்தாலும் சிலேயின் இலக்கியம் வெறும் மலம்தான் என்றும் எழுதினேன். அவர் அடுத்த கடிதத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம் என்பது தெளிவாகத் தெரிந்தது. புகழ்வாய்ந்த ஒருவர் யாராலும் அறியப்படாத ஒருவருடன் நட்பு பூணும்போது என்ன நடக்குமோ அதுதான் பிறகு நடந்தது. அவர் என் கவிதைகளைப் படித்துவிட்டு  சிலே-வட அமெரிக்கா கூட்டுக் கல்வி நிறுவனத்தில் அவர் ஏற்பாடு செய்த இளைய தலைமுறையினரின் எழுத்தை அறிமுகப்படுத்தும் வாசிப்புபோல் அமைந்த ஒரு நிகழ்வில் என் கவிதைகளையும் இணைத்தார். தன் கடிதத்தில் அவர் கருத்துபடி,  நம்பிக்கை தருபவர்களாக சிலேயின்  ஆண்டு 2000த்தின்  கவிதை இலக்கியத்தில் ஆறு புலிகளைச் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த ஆறு புலிகள், பெர்டொனி, மக்கியைரா, கோன்ஸாலோ மூன்யோஸ், மார்டினெஸ், ராட்ரிகோ லீரா[3]மற்றும் நான். அப்படித்தான் நினைக்கிறேன். ஒருவேளை ஏழு புலிகள் இருந்திருக்கலாம். ஆனால் ஆறு புலிகள்தாம் என்று நினைக்கிறேன். நாங்கள் அறுவரும் அந்த 2000ம் ஆண்டில் எதுவும் அதிகம் செய்திருக்க முடியாது; காரணம் அந்த அறுவரில் சிறந்த கவிஞனான ராட்ரிகோ லீரா தற்கொலை செய்துகொண்டாகிவிட்டது.  அவனில் மீதமிருந்தது ஏதாவது கல்லறையில் பல ஆண்டுகளாக அழுகிக்கொண்டோ அல்லது சாம்பலாக வீதிகளில் வீசியபடி ஸான்டியாகோவின் அழுக்குடன் கலந்துகொண்டோ இருந்திருக்கும் .பூனைகள் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். எனக்குத் தெரிந்தவரை பெர்டொனி ஒரு ஹிப்பி மாதிரி கடலருகில் வாழ்ந்துகொண்டு சிப்பியையும் கடல்பாசியையும் சேகரித்துக் கொண்டிருக்கிறான்.  கார்டெனால் மற்றும் கொரொனெல் உர்தெசோ[4] வெளியிட்ட வட அமெரிக்காவின் கவிதைகளின் தொகுப்பை மக்கியைரா மிகவும் கவனத்துடன் அவதானித்து எழுதினான். அதன்பின் மேலும் இரண்டு புத்தகங்கள் எழுதிவிட்டு  குடியில் இறங்கிவிட்ட வாசம். கோன்ஸாலோ மூன்யூஸ் மெக்ஸிகோ சென்றான் என்று கேள்விப்பட்டேன். அங்கு அவன் மறைந்தே போனான்.லௌரியின் புதினத்தின்[5]அந்நிய நாட்டுப் பிரதிநிதி போல் மதுவின் மயக்கத்தில் அல்ல; விளம்பரத் தொழிலில். “டுஷாம்ப் டு ஸீன்யே”[6] (டுஷாம்பின் கலை) புத்தகத்தை நுணுக்கமாக விமர்சித்து எழுதியபின் அவன் இறந்துவிட்டான். ராட்ரிகோ லீராவைப் பொருத்தவரை அவனுக்கு என்ன நேரிட்டது என்பதை நான் விளக்கியாயிற்று. எப்படி நோக்கினாலும் புலிகள் என்று கூற முடியாது; பூனைகள்தான் பொருந்திவரும். வெகு தூரத்துப் பிரதேசம் ஒன்றின் பூனைக்குட்டிகள்.  என்ன சொல்ல வந்தேன் என்றால் எனக்கு லின்னைத் தெரியும்; ஆகையால் அறிமுகம் தேவையாக இருக்கவில்லை. இருந்தாலும் ஆர்வலர்கள் என்னை அறிமுகப்படுத்த ஆரம்பித்ததை நானோ லின்னோ மறுக்கவில்லை. இதுதான் ரொபெர்த்தோ பொலான்யோ, நான் தடுப்பறையின் இருள் கவிந்த என் கையை நீட்டி லின்னின் கையைப் பிடித்தேன்; சில வினாடிகள் என் கையை அழுத்திய சற்றே குளிர்ந்து போன கைகள்—சோகமான ஒரு நபரின் கை என்று தோன்றியது எனக்கு; பரிச்சயமற்ற ஒருவனைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்க்கும் முகபாவத்துடன்  மிகச் சரியாக ஒத்துப்போகும் கை மற்றும் கைலாகு. அந்தக் கடிதப் போக்குவரத்து உடல் அசைவால் நேர்ந்த ஒரு சைகைதான். ஒளிபுக முடியாத, எதையும் பிரதிபலிக்காத, என்னைப் பொருத்தவரை எதையும் சொல்ல விழையாத சொல்வன்மைக்கு இட்டுச் சென்ற ஒன்றுதான்.அந்தக் கணம் கடந்துபோனதும் ஆர்வலர்கள் மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்; மௌனம் பின்தங்கிப்போயிற்று. எல்லோரும் லின்னிடம் சம்பத்தமேயில்லாத விஷயங்களைப் பற்றியும் நிகழ்வுகளைப் பற்றியும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்களைத் துச்சமாக நான் பார்த்த பார்வை மறைந்துவிட்டது. ஏனென்றால் நான் ஒரு காலத்தில் இருந்தது போலவே அவர்கள் இருந்தார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்: எந்தவித ஆதரவும் இல்லாத இளம் கவிஞர்கள்; பின்னாலிருந்து உந்திவிடுபவர்களோ போஷகர்களோ இல்லாமல், புதிய மைய-இடது சிலேய அரசால் புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்களிடம் இருந்ததெல்லாம் லின் மட்டும்தான்; புத்தக ஆசிரியரின் புகைப்படத்தில் தெரிந்த உண்மையான என்ரீகே லின்போல் இல்லாமல் இன்னும் அழகிய தோற்றத்துடன் வசீகரமாக இருந்த லின்; தன் கவிதைகளைப் போல் இருந்த லின்; அவர்கள் வயதுடையவனாக தன்னை ஆக்கிக்கொண்ட லின், தன் கவிதைகளை ஒத்த  ஒரு கட்டமைப்பில் வாழ்ந்த லின், நேர்த்தியான முறையில் எந்தச் சுணக்கமும் காட்டாமல் உறுதியுடன்  சிலசமயம் மறைந்துவிடும் அவர் கவிதைகளைப் போலவே மறைந்துவிடக் கூடியவர். இதை உணர்ந்ததும் நான் சற்று ஆசுவாசமடைந்தது எனக்கு நினைவிருக்கிறது.நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அந்த நிலைமை எனக்குப் புரிய ஆரம்பித்தது; சிரிப்பை மூட்டியது. பயப்பட எதுவுமே இல்லை; நான் எனக்குரிய வீட்டில் இருந்தேன், நண்பர்களுடன், எப்போதுமே போற்றிய எழுத்தாளர் ஒருவருடன். இது திகில் படம் இல்லை. அல்லது முற்றிலும் திகில் படமாக இல்லாமல் அபத்த நகைச்சுவையால் மாற்றப்பட்ட திகில் படம். நான் அபத்த நகைச்சுவை பற்றி நினைத்தபோதே லின் தன் சட்டைப் பையிலிருந்து குளிகைகள் இருந்த ஒரு குப்பியை எடுத்தார். மூன்று மணிக்கு ஒரு முறை நான் ஒரு குளிகை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார். ஆர்வலர்கள் மீண்டும் மௌனமானர்கள். பரிசாரகர் ஒரு கண்ணாடிக் குவளையில் தண்ணீர் கொண்டுவந்தார். அந்தக் குளிகை பெரியதாக இருந்தது. அது தண்ணீரில் விழுந்ததும் அப்படித்தான் எனக்குத் தோன்றியது. ஆனால் உண்மையில் அது பெரிது இல்லை. அடர்த்தியாக, கெட்டியாக இருந்தது. ஸ்பூனால் அதை உடைக்க முற்பட்டார் லின். குளிகை பல இதழ்களைக் கொண்ட வெங்காயம் போல் இருப்பதை உணர்ந்தேன். முன்னால் குனிந்து குவளையினுள் பார்த்தேன். ஒரு வினாடி எனக்கு அது முடிவே இல்லாத ஒரு குளிகையாகப் பட்டது. குவளையின் வளைந்த அமைப்பு கண்ணாடி வில்லையைப் போல் எல்லாவற்றையும் பெரிதாகிக் காட்டியது: உள்ளே அந்த இளம் ரோஜா வண்ண குளிகை ஏதோ விண்மீன் மண்டலத்தையோ பிரபஞ்சத்தையோ பிரசவிப்பதுபோல் கரைந்துகொண்டிருந்தது. ஆனால் விண்மீன் மண்டலங்கள் உடனே பிறந்தோ இறந்தோ (எது என்று நினைவில்லை) போகின்றன. நான் கண்ணாடிக் குவளையின் வளைந்த பகுதியிலிருந்து பார்த்தது மிக மெல்ல விரிந்துகொண்டிருந்தது. புரிந்துகொள்ளமுடியாத ஒவ்வொரு கட்டத்திலும்  சுருங்குவதும் அதிர்வதுமான அதன் ஒவ்வொரு அசைவும் நீண்டுகொண்டே போயிற்று. களைத்துப்போய் நான் பின்னால் நகர்ந்து அமர்ந்ததும் என் பார்வை மருந்திலிருந்து அகன்று லின்னை நோக்கியதும், அவர் பார்வை, ‘எதையும் சொல்ல வேண்டாம், மூன்று மணி நேரத்துக்கும் ஒரு முறை இதைச் சாப்பிடும் அவஸ்தையே போதும்; நீர், வெங்காயம், தாரகைகளின் மெதுவான அணிவகுப்பு என்றுகுறியீட்டுப் பொருளையெல்லாம் தேடிக்கொண்டு போகாதே’ என்று சொல்வதைப்போல் இருந்தது. ஆர்வலர்கள் எங்கள் மேசையை விட்டு அகன்றிருந்தார்கள். சிலர் தேறல் அருந்தும் பகுதியில் இருந்தார்கள். மற்றவர்களைக் காணவில்லை. மீண்டும் லின்னைப் பார்த்தபோது அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தபடி  ஓர் ஆர்வலர் மட்டும் இருந்தார். அதன்பின் அவரும் வெளியே கூடத்தில் இங்கும் அங்குமாய் நின்றுகொண்டிருந்த தன் தோழர்களைத் தேடிப் போனார். தான் உயிருடன் இல்லை என்பது லின்னுக்குத் தெரிந்திருந்தது என்பது அந்தக் கணத்தில் எனக்குத் தெரிந்துவிட்டது. என் இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது, என்றார். அது இப்போது இல்லாமல் போய்விட்டது. இங்கு ஏதோ சரியில்லை என்று எனக்குப் பட்டது. லின் புற்று நோயால் இறந்தார்; மாரடைப்பால் அல்ல. அதீத கனம் என் மேல் கவிவதை உணர்ந்தேன். சிறிது நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. மதுக்கடையின் உள்ளேயே நடக்காமல் தெருவுக்கு வந்தேன். நடைபாதைகள் சாம்பல் நிறத்தில் மேடும்பள்ளமுமாக இருந்தன. எல்லாம் பிரதிபலிக்க வேண்டியதான இடமாய் ஆனால் முடிவில் எதுவுமே பிரதிபலிக்காத ஒன்றாய் வானம் ரசம் போன கண்ணாடிபோல் இருந்தது. இருந்தாலும் எல்லாம் சரியாக இருப்பதுபோல் உணர்வு இருந்தது; அது பார்வையை நிறைத்தது. நல்ல காற்றை நிறைய சுவாசித்துவிட்ட உணர்வு ஏற்பட்டு மீண்டும் மதுக்கடைக்குப் போகும் நேரம் வந்ததும் கடையின் கதவுவரை இருந்த படிகளில் ஏற ஆரம்பித்தபோது (கல் படிகள், ஒவ்வொரு படியும் தீட்டிய மணிக்கல்லின் பிரகாசத்துடன்   இருக்கும் கருங்கல்லைப்போல் ஒரு பெரிய கல்) என்னைவிடக் குள்ளமாக, ஐம்பதுகளின்  ரௌடியைப்போல் உடையணிந்த ஒரு நபரை எதிர்கொண்டேன். வழக்கமான இன்முகக் கொலைகாரனுக்குள்ள ஒரு கேலிச்சித்திரத் தன்மை இருந்தது அவனிடம். அவன் அறிந்த யாரோ நான் என்று நினைத்து வணக்கம் சொன்னான். பதில் வணக்கம் கூறினேன். அவன் ஏதோ தவறு செய்கிறான், எனக்கு அவனைத் தெரியாது என்று ஆரம்பத்திலிருந்தே நிச்சயமாகத் தெரிந்திருந்தாலும் அவனைத்  தெரிந்தவன்போல், நானும் அவனை வேறு யாரோ என்று தவறாக நினைப்பதுபோல் நடந்துகொண்டேன். ஆகவே நாங்கள் இருவரும் தீட்டிவிட்டவைபோல் இருந்த அந்தப் படிகளை (இருந்தாலும் அவை மிகவும் சாதாரணமானவைதான்) ஏற முயற்சித்தபோது    முகமன் கூறிக்கொண்டோம். ஆனால் அந்தக் கொலைகாரனின் குழப்பம் சில வினாடிகளே நீடித்தது. தான் அடையாளம் காண்பதில் தப்புச் செய்துவிட்டோம் என்பது அவனுக்கு உடனே புரிந்துவிட்டது. பிறகு நானும் ஏதாவது தவறு செய்கிறேனோ அல்லது ஒருவேளை ஆரம்பத்திலிருந்தே அவனைத் தெரிந்துகொண்டே கிண்டல் செய்கிறேனோ  என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்வதைப் போல் என்னை வேறு மாதிரி பார்த்தான். மந்த புத்தியும் சந்தேகமும் கொண்டவன் என்பதால் (அவனுக்கே உரிய முரணான விதத்தில் அவன் புத்தி கூர்மையானவனாக இருந்தாலும்)நான் யார் என்று உதட்டில் ஒரு வன்மமான புன்னகையுடன் என்னிடம் கேட்டான். ஏய், க்ஹாரா, நான்தான் பொலான்யோ, என்றேன். அவன் புன்னகை செய்த விதத்திலிருந்து அவன் க்ஹாரா இல்லை என்பது யாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவனும் விளையாட்டில் சேர்ந்துகொண்டான்.   ஏதோ திடீரென்று மின்னலால் தாக்கப்பட்டதால் (இல்லை, லின்னின் கவிதை எதையும் நான் இங்கே மேற்கோள் காட்டவில்லை; என்னுடைய கவிதையோ என்றால் அதுவும்கூட  இல்லை) முன்பின் தெரியாத, அந்தப் பளிச்சிடும் படிகளின் மேலே நின்றுகொண்டிருக்கும் பொழுதைத் தவிர வேறு எந்த நேரத்திலும்  தான் அவனாக மாறவே முடியாத அந்த க்ஹாராவின் வாழ்க்கையை ஓரிரண்டு நிமிடங்கள் வாழ விரும்புபவன்போல் அவன் என்னிடம் என் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டான். மரக்கட்டையாய் இருக்கும் என்னிடம் நான் யார் என்று கேட்டான், அப்படிக் கேட்டதன் மூலம் தான் க்ஹாரா என்று அவன் ஒப்புக்கொண்டான்; ஆனால் பொலான்யோ என்று ஒருவன் இருப்பதையே மறந்துபோன க்ஹாரா. அப்படி மறப்பதை புரிந்துகொள்ள முடியும்தானே? ஆகவே அவனுக்கு நான் யார் என்பதை விளக்கினேன். அப்படிச் செய்யும்போது அவன் யார் என்பதையும் விளக்கினேன். இப்படி எனக்கும் அவனுக்கும் ஏற்ற, அதாவது அந்தக் கணத்துக்கு ஏற்ற க்ஹாராவை உருவாக்கினேன்—அப்படி ஒருவன் இருப்பான் என்று நம்பவே முடியாத, புத்திசாலியான, வீரம் செறிந்த, செல்வந்தனான, ஈகைக் குணமுள்ள, தைரியம் கூடிய, அழகான ஒரு பெண்ணைக் காதலிக்கும் அவளால் காதலிக்கப்படும்  க்ஹாரா—அதன் பிறகுநான் சொல்ல சொல்ல, அவனை வைத்து விளையாடுகிறேன் என்பதை நன்றாகவே புரிந்துகொண்ட, ஆனால் இதை எப்படி முடித்துவைப்பது என்று தெரியாமல், நான் உருவாக்கும் பிம்பத்தை அவன் வெகுவாக ஏற்பது போல்அந்தக் குண்டன் புன்னகைத்தான். க்ஹாராவைப் பற்றி மட்டுமல்ல அவன் நண்பர்கள் பற்றி, முடிவில் உலகத்தைப் பற்றிக் கூற என்னை ஊக்குவித்தான். க்ஹாரா போன்ற நபருக்குக் கூட மிகப் பெரியதாகத் தோன்றும் ஓர் உலகம்; அந்த மகாப் பெரிய க்ஹாரா கூட ஓர் எறும்புபோலத் தோற்றமளித்து பளபளவென்ற படிகளில் அவன் மரித்தால் கூட யாரும் கவலைப்படாத உலகம். அதன்பின் நல்லகாலமாக அவன் நண்பர்கள் வந்தார்கள்: இளம் வண்ணத்தில் முன் பக்கத்தில் ஒன்றின் மேல் ஒன்று விழும்படி இரு மடிப்புகள் கொண்ட அலங்காரமான கோட் அணிந்த, உயரமான இரு கூலிக் கொலைகாரர்கள் நான் யார் என்பதை அவனிடம்   கேட்பது போல் என்னையும் அந்தப் போலி க்ஹாராவையும் பார்த்தார்கள். இது பொலான்யோ என்று கூறுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. அந்தக் கூலிக் கொலைகாரர்கள் எனக்கு முகமன் கூறினார்கள். நான் அவர்களுடன் கை குலுக்கி (மோதிரங்கள், விலை உயர்ந்த கைக்கடியாரங்கள், தங்கக் கடகங்கள்) அவர்கள் மதுபானம் பருக என்னை அழைத்தபோது, முடியாது, நான் ஒரு நண்பனுடன் வந்திருக்கிறேன் என்று கூறிவிட்டு க்ஹாராவைக் கடந்து போய் கதவு வழியாக உள்ளே சென்று மறைந்தேன். லின் இன்னும் தடுப்பறையில் இருந்தார். ஆனால் ஆர்வலர்கள் யாருமே இல்லை அவர் அருகில். கண்ணாடிக் குவளை காலியாகக் கிடந்தது. மருந்து குடித்துவிட்டு அவர் காத்துக்கொண்டிருந்தார். ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நாங்கள் மேல் மாடியிலிருந்த  அவர் வீட்டுக்குப் போனோம். அவர் ஏழாம் மாடியிலிருந்தார். நாங்கள் மின்தூக்கியை உபயோகித்தோம். முப்பது பேர் போகக் கூடிய மிகப் பெரிய மின்தூக்கி. சிலே எழுத்தாளருடையது என்று பார்க்கும்போது சின்ன வீடுதான் அவருடையது. புத்தகங்களும் இருக்கவில்லை.அது குறித்துக் கேட்டபோது தற்போது படிக்கவேண்டிய தேவையில்லை என்று பதிலிறுத்தார். கூடவே, ஆனால் புத்தகங்கள் எப்போதுமே உண்டு என்றும் கூறினார். கண்ணாடியாலான தரைபோல் அவர் வீட்டிலிருந்து கீழே இருந்த மதுக்கடை தெரிந்தது. சிறிது நேரம் முட்டிபோட்டு அமர்ந்து, ஆர்வலர்களையோ அந்த மூன்று கூலிக் கொலைகாரர்களையோ தேடியபடி கீழே இருப்பவர்களைப் பார்த்தேன். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி நாவல் ஒன்றில் வருவதுபோல் அதீத உற்சாகத்துடன் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் அதைவிட ஒரு மேசையிலிருந்து இன்னொரு மேசைக்கோ ஒரு தடுப்பறையிலிருந்து இன்னொரு தடுப்பறைக்கோ போனபடியும்  மதுக்கடையில் மேலும் கீழும் நடந்தபடியும் இருந்த அறிமுகமற்றவர்கள்தாம் கண்ணில்பட்டார்கள். சிறிது நேரம் பொறுத்து ஏதோ சரியில்லை என்ற முடிவுக்கு வந்தேன். லின்னின் வீட்டின் தரையும் மதுக்கடையின் கூரையும் கண்ணாடியாலானது என்றால் இடையே இரண்டாம் மாடியிலிருந்து ஆறாம் மாடிவரை இருந்த வீடுகள் எப்படி அமைந்திருக்கும்? அவைகளும் கண்ணாடியால் ஆனவையா? மீண்டும் கீழே பார்த்தபோதுதான் தெரிந்தது முதல் மாடிக்கும் ஏழாம் மாடிக்கும் இடையே இருப்பது வெறும் வெற்றிடம் என்பது. அது என்னைப் பாதித்தது. ஜீஸஸ், லின், என்னை எங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன். உடனடியாகவே ஜீஸஸ், லின், உங்களை எங்கே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தொடங்கினேன். மெல்ல எழுந்தேன் காரணம் அந்த இடத்தில் வழக்கமான உலகம்போல் அல்லாமல் பொருட்கள், தொட்டாலே மனிதர்களை விட அதிகமாக உடைவது போல் இருந்தன. மறைந்துபோய்விட்டிருந்த லின்னை அந்த வீட்டின் பல அறைகளில்  தேடிச் சென்றேன். வீடு ஐரோப்பிய எழுத்தாளர் ஒருவருடையதைப் போல் சிறியதாக இருக்கவில்லை இப்போது; குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் வேலைக்காரர்கள், விலை உயர்ந்த லேசான பொருட்கள் இவைகளுடன் வீடு முழுவதும் அலையும் நிழல்களும் அரை இருட்டில் இருந்த அறைகளுமாக மூன்றாம் உலகத்து சிலேயின் எழுத்தாளர் ஒருவரின் விஸ்தாரமான, மிகப் பெரிய வீடாக இருந்தது. அங்கு எனக்கு இரு புத்தகங்கள் கிடைத்தன. ஒன்று கல்லைப்போல் வழவழவென்றிருந்த ஒரு செவ்வியல் புத்தகம்; இன்னொன்று நவீன புத்தகம்; மலத்தைப்போல் காலமற்றது. லின்னைத் தேடிக்கொண்டிருந்தபோது, மெல்ல நானும் குளிர்ந்துபோக ஆரம்பித்தேன். போக போக   வெறியும் குளிர்ச்சியும் அதிகமாகிக்கொண்டே போயிற்று. உடம்பு சரியில்லை என்று தோன்றியது. கற்பனை  அச்சின் மேல் அந்த வீடு சுழல்வதைப் போல் இருந்தது. ஆனால் அப்போது ஒரு கதவு திறந்து,  ஒரு நீச்சல் குளம் தெரிந்தது. அங்கு லின் நீந்தியபடி இருந்தார். எல்லாமே குலைந்து போகும் சிதற்றம் குறித்து நான் பேச ஆரம்பிக்கும் முன் லின் கூறினார்: அவர் மருந்தின், உயிர் வாழ அவர் உட்கொள்ளும் மருந்தின், கேடு என்னவென்றால் அது ஒரு வகையில் மருந்து கம்பனிகளுக்கான சோதனை எலியாக அவரை மாற்றிக்கொண்டிருக்கிறது. எல்லாமே ஒரு நாடகம் போலவும் என் வசனங்களும் சக நடிகர்களின் வசனங்களும் திடீரென்று நினைவுக்கு வந்ததுபோல் இந்தச் சொற்களை நான் எதிர்பார்த்தேன். லின் நீச்சல் குளத்திலிருந்து வெளியே வந்தார். நாங்கள் கீழ்த்தளத்துக்குப் போனோம். கூட்டமாக இருந்த மதுக்கடையினூடே நடந்தோம். லின் சொன்னார்: புலிகள் இல்லாமல் போயாகிவிட்டது; இருந்தவரை அது இனிமையாக இருந்தது. இதை நீ நம்ப மாட்டாய் பொலான்யோ, ஆனால் இந்தப் பகுதியில் இறந்தவர்கள்தாம் வெளியே உலாத்தப் போகிறார்கள். அதற்குள்  மதுக்கடையின் முன் பகுதிக்கு வந்து சன்னல் முன் நின்றுகொண்டு இறந்தவர்கள் மட்டுமே   நடமாடும்   அந்த விசித்திரமான பகுதியில் உள்ள வீதிகளையும்வீடுகளின் முகப்புகளையும் பார்த்தபடி இருந்தோம். பார்த்துக்கொண்டே இருந்தோம். வேறு ஒரு காலத்தின் வண்டிகள் நிறுத்தப்பட்ட நடைபாதைகளைப் போலவே அந்த வீட்டு முகப்புகளும் கட்டாயம் இன்னொரு காலத்தவை. மௌனமான ஆனால் நடமாட்டம் உள்ள (அதன் அசைவுகளை லின் பார்த்துக்கொண்டிருந்தார்) பயங்கரமான அந்தக் காலம் நிலைத்ததற்கு வெறும் அயர்ச்சியன்றி வேறு ஒரு காரணமும் இல்லை.


ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்தவர்: அம்பை

ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வர்: க்ரிஸ் ஆன்ட்ரூஸ்

இறுதிக் குறிப்புகள்:

கதையில் வரும் என்ரீகே லின் (1929-1988) சிலே நாட்டின் முக்கியமான கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர். முழுப்பெயர்: என்ரீகே லின் கராஸ்கோ.


[1] காடலான் மொழியில் கிரோனா என்றும் ஸ்பானிஷ் மொழியில் கெரோனா என்றும் அழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டின் நகரம்

[2] ஆர்க்கிலாக்கஸ் ( c. 680–645 BCE) ஆண்டுகளில் வாழ்ந்த ஒரு கிரேக்கக் கவிஞர்

[3] ஆறு புலிகள்: பெர்டொனி என்று இங்கே குறிப்பிடப்படுவது க்லௌடியோ பெர்டொனி லெமுஸ் என்ற கவிஞர், புகைப்படக் கலைஞர். “க்ளோரியா” என்ற சிலே நாட்டுப் படத்தில் உபயோகப்படுத்திய அவர் கவிதை உதாரணத்துக்கு:
I’d like to be a nest if you were a little bird.
I’d like to be a scarf if you were a neck and were cold.
If you were music, I’d be an ear.
If you were water, I’d be a glass.
If you were light, I’d be an eye.
If you were a foot, I’d be a sock.
If you were the sea, I’d be a beach.
And if you were still the sea, I’d be a fish,
and I’d swim in you.
And if you were the sea, I’d be salt.
And if I were salt, you’d be lettuce,
an avocado or at least a fried egg.
And if you were a fried egg,
I’d be a piece of bread.
And if I were a piece of bread,
you’d be butter or jam.
If you were jam,
I’d be the peach in the jam.
If I were a peach,
you’d be a tree.
And if you were a tree,
I’d be your sap…
and I’d course through your arms like blood.
And if I were blood,
I’d live in your heart.
மக்கியைரா என்று குறிப்பிட்டிருப்பது டியகோ மக்கியைரா என்ற சிலே நாட்டுக் கவிஞரை. இவர் தாத்தா தூதரகத் தலைவராக இருந்தவர். தந்தையும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் இருந்ததால் குழந்தைப் பருவத்தில் அமெரிக்காவில் இருந்தவர். அதனால் தான் சிலேயில் பிறந்த ஓர் அமெரிக்கன் என்று இவர் தன்னைக் கூறிக்கொள்வதுண்டு. இக் கதையில் வரும் என்ரீகே லின் இவர் கவிதைகள் ஆவேசமானவை, எல்லாவற்றையும் உதாசீனம் செய்பவை என்கிறார்.
கோன்ஸாலோ மூன்யோஸ் இணைப்புகளற்று சிதறிப்போன ஒன்றாய் சரித்திரத்தைப் பார்த்தவர். இவருடைய Exit (வெளியேற்றம்) மற்றும் Este (கிழக்கு) கவிதைகள் அதிகம் பேசப்பட்டவை.
ஹுஆன் லூயிஸ் மார்டினெஸ் 1992ல் பாரீஸில் ஸோர்பா பல்கலகழகத்தில் பேசியபோது தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டார்.
I hope shade separates me from day
and that out of time under the roofless sky
night shelters me where I best know how to die.
If my fate is on earth, among men
it´ll be necessary to accept in me what defined me,
´cause I do not wish to be another than myself.
My name, my face, everything that doesn´t belong to me
I give it as a fodder to the insatiable audience,
my truth I share with my folks.
I don´t live on the surface, my home is deeper
misunderstanding does not stem from me: I have nothing to hide
if I don´t know where I go, I do know whom I go with.
My share of work is to take my freedom
I say it so nobody gets amazed later on
I will struggle until I am admitted alive.
My fatherland is nameless, without flaws
there´s a truth in subversion
which will restore our scorned purity.
If I should go wrong, that would change nothing
to blow up systems is the only acceptable game,
movement is the only way to stay alive.
My love I give to the man or the woman
who will come with me on this uncertain journey
where anguish and solitude watch over.
And I won´t close my eyes nor I will lower them.

ராட்ரிகோ லீரா எழுபதுகளில் பல சிலே நாட்டுக் கவிஞர்களை பொது மேடைகளில் நாடகத்தன்மையுடன் கேலி செய்தவர். தீவிர மன அழுத்தத்தாலும், கவிஞராகப் போதிய அங்கீகாரமின்றி ஒதுக்கப்பட்டதாலும் 1981ல் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய Testimonio de circunstancios (Testimony of Circumstances, சந்தர்ப்பங்களின் சாட்சியம்) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

[4] இந்த இருவரும் நிகராகுவாவைச் சேர்ந்த எழுத்தாளர்கள். ஹோஸே கொரொனெல் உர்தெசோ (1906-1994) நிகராகுவாவின் மிகவும் முக்கியமான சிந்தனையாளராகக் கருதப்படுபவர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், நாடகாசிரியர், தூதரக அதிகாரி மற்றும் வரலாற்றாசிரியர். எர்னெஸ்டோ கார்டெனால் (1925-2020) முதலாமவரின் மருமகன். இவர் ஒரு கத்தோலிக்கப் பாதிரியார், கவிஞர் மற்றும் அரசியல்வாதி. சமீபத்தில்தான் மரணம் அடைந்தார். விடுதலை இறையியலைப் பரப்பியவர். தவிர கத்தோலிக்க மார்க்சியம் உருவாக முடியும் என்று நினைத்தவர். இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய Antologia de poesia norteamericana புத்தகம்தான் இங்கு குறிப்பிடப்படுவது.

[5] மால்கம் லௌரி (1909-1957) இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கில எழுத்தாளர். 1947ல் எழுதிய Under the Volcano (எரிமலையின் அடியில்) புதினத்தில் வரும் குடிகாரக் கதாநாயகன்தான் இங்கு குறிப்பிடப்படுவது.

[6] மார்ஸெல் டுஷாம்ப் (1887-1968) இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான கலைஞராக அறியப்பட்டவர்.

2 Replies to “என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.