துப்பறிவாளர்கள்

“எந்த மாதிரியான ஆயுதங்கள் உனக்குப் பிடிக்கும்?”

“எதுவென்றாலும் பரவாயில்லை, பிளேடைத் தவிர.”

“கத்திகள், ரேஸர்கள், டாகர்கள், கோர்வோஸ், சுவிட்ச் பிளேட்ஸ், இல்ல பேனாக்கத்திகள், இந்த மாதிரியான ஆயுதங்களா?”

“ஏறக்குறைய, அந்த மாதிரிதான்”

“என்ன சொல்கிறாய், அந்த மாதிரி இந்த மாதிரின்னு?”

“கேனக்கூதி, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன், இது எதுவும் பிடிக்காது எனக்கு.”

“உறுதியா?”

“ஆமாம், உறுதியாகதான்.”

“ஆனால், ‘கார்வோஸ்’ உனக்குப் பிடிக்கலைங்கிறது ஆச்சரியமாக இருக்கிறது.”

“சும்மா, எனக்கு பிடிக்காது, அவ்வளவுதான் சொல்றதுக்கு.”

“ஆனால், நீ நம் தேசிய ஆயுதத்தைப் பற்றியல்லவா பேசிக் கொண்டு இருக்கிறாய்.”

” ‘கார்வோஸ்’ நம்ம சிலெயின் தேசிய ஆயுதமா?”

“ஆமாம், பொதுவா எல்லா கத்திகளும்.”

“தமாஷ் பண்ண வேண்டாம் தோழர்.”

“கடவுள் மேல சத்தியமாக. ஒரு கட்டுரையில்கூட முன்பு வாசித்திருக்கிறேன். சிலெ நாட்டு மக்கள் துப்பாக்கிகளை விரும்புகிறது இல்லை. சத்தம் நமக்கு பிடிக்கிறது இல்லை, நாம இயல்பாகவே அமைதியை நேசிக்கக்கூடியவர்கள்.”

“கடல் ஒரு காரணமாக இருக்கலாம்.”

“கடலா? எந்த கடலைப் பற்றி சொல்கிறாய்?”

“நிச்சயம் பசிஃபிக் கடலைத்தான் சொல்கிறேன்.”

நீ ‘பெருங்கடல்’ பற்றிச் சொல்கிறாயா? ஆனால், பசிஃபிக் பெருங்கடலுக்கும், அமைதிக்கும் என்ன சம்பந்தம்?”

“கடல் சத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறது என்று சொல்கிறார்கள், தேவையில்லாத எல்லா சத்தத்தையும் என்று நினைக்கிறேன். இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியவில்லை.”

“அப்படியென்றால் அர்ஜென்டீன மக்களைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“அவர்களுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் என்ன?”

“அவர்களுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் இருக்கிறது, ஆனால் அவங்கதான் பெருஞ்சத்தக்காரர்கள் ஆச்சே?”

“அப்படி சரியாக ஒப்பீடு சொல்ல முடியாது.”

“நீ சொல்கிறது சரிதான். ஒப்பிட முடியாதுதான் – ஆனால், அர்ஜென்டீன மக்கள் கத்திகளையும் விரும்புகிறவர்கள்.”

“அதனால்தான் எனக்கு பிடிக்கவில்லை, அவை தேசீய ஆயுதம் என்றாலும்கூட. பேனா கத்திகளுக்கு, குறிப்பாக சுவிஸ் இராணுவ கத்திகளுக்கு வேண்டுமானால் விதிவிலக்கு அளிக்க முடியும், ஆனால் மீதமுள்ளவை எல்லாம் ஒரு சாபக்கேடாகும்”.

“அது ஏன், தோழர்? வாருங்கள், விளக்குங்கள்.”

“என்கிட்ட விளக்கம் இல்லை, தோழர், மன்னிக்கவும். அது அப்படிதான் இருக்கிறது, டாட். இது மனதில் தோன்றிய ஒரு உணர்வு, அவ்வளவுதான்.” 

“சரி, புரிகிறது என்ன சொல்ல வருகிறீங்கன்னு.”

“அப்படியா, எனக்கும் சொல், எனக்கே சரியாத் தெரியவில்லை.”

“எனக்குப் புரியுது, ஆனால், சரியா விளக்க முடியவில்லை.”

” நினைவில் வைத்துக் கொள், கத்திகளுக்கென்றே சில சாதகமான விஷயங்களும் உள்ளன.”

“என்ன மாதிரி, உதாரணமாக?”

“தானியங்கி துப்பாக்கி ஆயுதம் ஏந்திய திருடர்களின் கும்பலை கற்பனை செய்து பார். ஒரு உதாரணத்துக்கு. அல்லது உஜிகளுடன் பிம்ப்ஸ்.”

“சரி, புரிகிறது.”

“இது எப்படி பலப்படுத்துதுன்னு பார்க்க முடிகிறதா?”

“கண்டிப்பாக நமக்கு. ஆனால், இது, இந்த வாதம், சிலேக்கு அவமானமே. உனக்கே தெரியும்.”

“சிலேக்கு அவமானமா! என்ன?”

“சிலேயோட கலாச்சாரத்துக்கு, நாம் இருக்கும் விதம், நம் கூட்டுக் கனவுகள் எல்லாவற்றுக்கும் சேர்த்து பெரிய அவமானம்தான். நாம் துயரப் படுவதற்குத்தான் லாயக்கு என்று சொல்லப்படுவது போலாகும். நான் சொல்வதைப் புரிந்து கொள்கிறாயா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனக்கு இப்போதுதான் எல்லாம் தெளிவாகிறது.”

“நீ சொல்வது புரிகிறது, ஆனால் அது இல்லை.”

“அது இல்லைன்னா என்ன சொல்கிறாய்?”

“நான் அதைப் பற்றி பேசவில்லை, கத்திகள் எனக்கு பிடிக்கவில்லை, அவ்வளவுதான். இது ஒன்னும் பெரிய தத்துவ கேள்வி அல்ல.”

“ஆனால், சிலேயில் துப்பாக்கிகள் மிகவும் பிரபலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய். அப்படியென்றால் அவை இன்னும் அதிகமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறாய் என்றும் அர்த்தமல்ல, அதானே.”

“எக்கேடு கெட்டால் என்ன, எனக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை.”

“எப்படியிருந்தாலும், யாருக்குத்தான் துப்பாக்கிகளை பிடிக்கப் போறதில்லை?”

“அது உண்மைதான், எல்லோருக்கும் துப்பாக்கிகளைப் பிடிக்கத்தான் செய்யும்.”

“அமைதியைப் பற்றி என்ன சொன்னேன் என்பதை நான் விளக்க வேண்டும் என்று விரும்புகிறாயா?”

“நிச்சயமாக, நீ என்னை தூங்க வைக்காத வரை.”

“கண்டிப்பாக அதைச் செய்ய மாட்டேன், உனக்கு தூக்கம் வர ஆரம்பித்தால், நீ நிறுத்தலாம், நான் காரை ஓட்டுகிறேன்.”

“சரி, அமைதியைப் பற்றி சொல்.”

“எல் மெர்குரியோவில் ஒரு கட்டுரையில் இதைப் படித்தேன்.”

“எல் மெர்குரியோவை எப்போது படிக்க ஆரம்பித்தாய்?”

“சில நேரங்களில் தலைமையகத்தில் ஏதாவது ஒரு இதழ் இருக்கும், வேலையில் நேரம் அதிகமாக இருப்பதால் படிக்க நேரிட்டது. எப்படியிருந்தாலும், நாம் எல்லாம் லத்தீன் மக்கள் என்றும், லத்தீன் மக்கள் கத்தியே கதியாக இருப்பதாகவும் கட்டுரை கூறியது. மாறாக, ஆங்கிலோ-சாக்சன்கள் வாழ்வதும் சாவதும் துப்பாக்கியால்தான்.”

“அப்படியும் சொல்லலாம்.”

“நானும் அப்படிதான் நினைத்தேன்.”

“உண்மையின் தருணம் வரை, உங்களுக்கு ஒருபோதும் தெரியாது.”

“நானும் அப்படிதான் நினைத்தேன்.”

“நாம் பொதுவாக பின்தங்கித்தான் இருக்கிறோம், நீ ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.”

“பின்தங்கி என்று எப்படி சொல்கிறாய்?”

“ஒவ்வொரு விஷயத்திலும் பின்தங்கி. ஒரு விதத்தில் பழமையானவர்களாக.”

“இதை பின்தங்கி இருப்பது என்றா சொல்கிறாய்?”

“நாம் இன்னும் கத்திகளைப் பயன்படுத்துகிறோம், அது கற்காலத்தில் சிக்கியிருப்பதைப் போன்றது, அதே நேரத்தில் கிரிங்கோக்கள் நவீன யுகத்திற்கு நகர்ந்து விட்டார்கள்.”

“நான் வரலாற்றை ஒருபோதும் விரும்பியதில்லை.”

“நாம் சப்பி லோய்சாவை கைது செய்தது நினைவிருக்கிறதா?”

“அதை எப்படி நான் மறக்க முடியும்?”

“சரிதான், அவன் சண்டை போட விரும்பாமல் தானே சரணடைந்து விட்டான்.”

“ஆமாம், அவன் அந்த வீட்டில் ஒரு ஆயுதக் கிடங்கை வைத்திருந்தான்.”

“பார், உனக்கே தெரியும்.”

“அப்படியானால், அவன் சண்டை போட்டிருக்க வேண்டும்.”

“ஆம், நாம் நான்கு பேர் மட்டுமே இருந்தோம், அவர்கள் ஐந்து பேர். நம்மிடம் அரசு அளித்த ஆயுதங்கள் இருந்தன, சப்பிக்கு பஸூக்கா உள்ளிட்ட ஆயுதக் கிடங்கே இருந்தது.”

“அது பஸூக்கா இல்லை, தோழர்.”

“அது ஒரு பிராஞ்சி SPAS-15! மேலும் அவன் சிறிய குழாய் கொண்ட இரு துப்பாக்கிகளையும் வைத்திருந்தார்ன். ஆனால் லோய்சாவோ ஒரு தோட்டா கூட சுடாமல் சரணடைந்து விட்டான்.”

“உனக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும், இல்லையா?”

“நிச்சயமாக இல்லை. ஆனால் அவன் பெயர் லோய்சாவுக்கு பதிலாக மெக்கர்லி என்று இருந்திருந்தால், சப்பி நம்மை தோட்டாக்களால் வரவேற்றிருப்பான், ஒருவேளை அவன்  இப்போது சிறையில் இருக்க மாட்டான்.”

“அவன் இறந்திருக்கலாம்.”

“அல்லது சுதந்திரமாக இருக்கலாம், நான் சொல்ல வருகிறது உனக்கு புரிகிறதா?”

“மெக்கர்லி?… மனதில் ஏதோ மணி அடிக்கிறது அந்தப் பெயரைக் கேட்டால்; கௌபாய் திரைப்படத்தில் வருகிற பெயர்தான், இல்லையா?”

“அப்படிதான் என்று நினைக்கிறேன், நாம் அதை ஒன்றாக பார்த்தோம் என்று நினைக்கிறேன்.”

“நாம்தான் பல ஆண்டுகளாக திரைப்படங்களுக்குச் செல்லவில்லையே.”

“ஆமாம், அது பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்குமென நினைக்கிறேன்.”

“சப்பி லோய்சாவிடம் இருந்த ஆயுதக் களஞ்சியம்; அவன் நம்மை எப்படி வரவேற்றான் என்பது ஞாபகம் இருக்கிறதா?”

“மண்டையே வெடித்து விடுகிற மாதிரி சிரித்தான்.”

“அது பயத்தால் என்று நினைக்கிறேன். அவனது கும்பலில் ஒருவன் அழ ஆரம்பித்தான். அந்தப் பையனுக்கு பதினேழு வயது கூட ஆகியிருக்காது.”

“ஆனால், சப்பி லோய்சாவுக்கு நாற்பது வயக்கு மேல் இருக்கும், அவன் ஒரு பயங்கரமான ஆளாக காட்டிக் கொண்டான். நாம உண்மையாகவே நேர்மையாய்ச் சொன்னால், இந்த நாட்டில் பயங்கரமான மனிதர்கள் யாரும் இல்லை.”

“பயங்கரமான ஆட்கள் யாரும் இல்லையா? நான் பார்த்திருக்கேனே.”

“பைத்தியக்காரர்கள், நிச்சயமாக. நீ நிறையப் பேரைப் பார்த்திருக்கலாம். ஆனால், முரட்டுத்தனமான ஆட்கள் மிக மிகக் குறைவே, எனக்குத் தெரிந்து யாருமில்லை.”

“ரவுலிட்டோ சான்செஸ் ஞாபகம் இருக்கா, ‘மானுய்ஹா’ துப்பாக்கியோட இருப்பானே?”

“அவனை மறக்க முடியாது.”

“அவன் பயங்கரமானவன் இல்லையா?”

“இருக்கட்டும், அவன் அந்த ரிவால்வரைத் தூக்கியெறிந்து இருக்க வேண்டும். அதுவே அவனது வீழ்ச்சிக்கு காரணம். மேக்னம் வகை துப்பாக்கியை விட எதுவும் கண்டுபிடிக்க எளிதானது அல்ல.”

“‘மானுய்ஹா’ துப்பாக்கி மேக்னம் வகையா?”

“கண்டிப்பாக மேக்னம் வகைதான்.”

“ஆனால் நான் அதை பிரெஞ்சு வகைத் துப்பாக்கின்னு நினைச்சேன்.”

“அது .357 பிரெஞ்சு மேக்னம் வகைத் துப்பாக்கி. அதனால்தான், அவனால் அதை விடமுடியலை, விலையுயர்ந்ததும் கூட. அவனுக்கு மிகப் பிடித்தம் அது, சிலெ நாட்டுல அந்த வகை நிறைய இல்ல.” 

“தினமும் புதுசு புதுசாக ஏதாவது தெரிகிறது.”

“ரவுலிட்டோ சான்செஸ் பாவம்.”

“அவன் சிறையில் இறந்துவிட்டதாக சொல்கிறார்களே.”

“இல்லை, சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, ஒரு மறைவிட வீட்டில் தான் இறந்தான்.”

“அவனோட நுரையீரல் எல்லாம் கெட்டுப்போச்சுன்னு சொன்னாங்க.”

“அவன் துப்பும் எச்சிலில் ரத்தம் இருக்கும், சிறுவனாக இருக்கும் போதிருந்தே. ஆனால், அவன் அதுக்கெல்லாம் கவலைப்பட்டது இல்ல, ரொம்பத் தைரியமானவன்.”

“ரொம்ப அமைதியானவனும் கூட.”

“அமைதியானவனும், கடினமாக உழைக்கக் கூடியவனும்தான். பொருள் உடைமைகளுடன் ரொம்பவே பற்று வைத்திருந்தான். ‘மானுய்ஹா’ துப்பாக்கி அவனோட வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.”

“பெண் தொடர்பும்தான்.”

“இல்லை, அவன் ஓரினச் சேர்க்கைக்காரன்.”

“தமாஷ் செய்யாதே! தெரியல, ஆனால், எதுவும் புனிதமானதும் இல்லை. எல்லாம் ஒரு நேரம்தான்.”

“இதுல என்ன நேரமெல்லாம்?”

“நல்ல ஆண்மையுடையவன்னு நினைச்சேன், சரிதானே?”

“அதுக்கும் ஆண்மைக்கும் என்ன சம்பந்தம்?”

“ஆனால் அவன் ஒரு ஆண்தான், அவனுக்கேயுரிய வகையில், என்ன நான் சொல்றது புரியுதுதானே?”

“இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.” 

“ஆனால், அவனை வேசிகள் இருக்குமிடத்தில் ஒரு தடவையாவது பார்த்திருக்கேன், அவன் ஒண்ணும் அவங்களைப் பாத்து மூஞ்சியைத் திருப்பிக்கலை.”

“அவன் யாரிடமோ அல்லது எதற்குமோ வேண்டாமின்னு சொன்னதில்லை. ஆனால் அவன் ஒரு பெண்ணுடன் ஒருபோதும் தூங்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.”

“இது மிகவும் திட்டவட்டமான கூற்று, தோழர், நீங்கள் சொல்வதில் கவனமாக இருங்க. இறந்தவர்கள் எப்போதும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.”

“இறந்தவர்கள் யாரையும் பார்ப்பதில்லை. அவர்கள் தங்கள் சொந்த விஷயத்தைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்கள் எல்லாம் தூசிக்குச் சமானம்.”

“அவர்கள் தூசிக்குச் சமானமா, என்ன சொல்றீங்க?”

“அவர்கள் செய்வதெல்லாம் உயிருள்ளவர்கள் வாழ்க்கையைக் குட்டிச் சுவர் ஆக்குவதுதான்.”

“நான் இதற்கு உடன்படமுடியாது, தோழர், இறந்தவர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.”

“நீ ஒருபோதும் கல்லறைக்குச் செல்வதில்லையே.”

“என்ன சொல்றீங்க, நான் என்ன கல்லறைக்குப் போவதே இல்லையா?”

“சரி, அப்படியானால் நீத்தார் தினம் என்றைக்கு என்று சொல் பார்க்கலாம்?”

“சரி, ஒத்துக்கிறேன். எப்ப போகணும் போல் இருக்கோ, அப்பதான் போறேன்.”

“நீ பேய்களை நம்புகிறாயா?”

“எனக்குத் தெரியவில்லை, ஆனால் மயிர்க்கூச்செரியும் அனுபவங்கள் இருப்பது தெரியும்.”

“அதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.”

“உனக்கு ரவுலிட்டோ சான்செஸ் நினைவு வந்து விட்டதா?”

“அது சரி. உண்மையாக அவர் இறப்பதற்கு முன், குறைந்தது இரண்டு முறை இறந்துவிட்டதாக நடித்தார். ஒரு முறை ஹூக்கரின் பாரில். டோரிஸ் வில்லலான் நினைவிருக்கிறதா? ஒரே போர்வைக்குள் கல்லறையில் ஒரு இரவு முழுவதும் அவள் அவருடன் கழித்தாள், டோரிஸின் கூற்றுப்படி, இரவு முழுவதும் எதுவும் நடக்கவில்லை.”

“டோரிஸின் தலைமுடி வெண்மையாக மாறியது தவிர.”

“நீ யாருடன் பேசுகிறாய் என்பதைப் பொறுத்தது.”

“உண்மை என்னவென்றால், மேரி ஆன்ட்வானெட்டைப் போல ஒரே இரவில் அவளுடைய தலைமுடி வெண்மையாகிவிட்டது.”

“நம்பகமான ஒரு இடத்திலிருந்து எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், அவளுக்கு மிகவும் குளிர் எடுத்தது, அவர்கள் இருவரும் கல்லறைக்கு  மேலே ஏறி வெற்றுச்  சுவற்றறைக்குள் நுழைந்தார்கள்; அதன் பிறகு நடந்தது தெளிவாக இல்லை. டோரிஸின் நண்பர் ஒருவரின் கூற்றுப்படி, அவள் ரவுலிட்டோவுக்கு கையடிக்க முயற்சி செய்தாள், ஆனால் அவர் உண்மையில் அதற்கு தயாராக இல்லை, இறுதியில் தூங்கிவிட்டார்.”

“எதுக்கும் கவலைப்படாத மனிதன் பார்.”

“பின்னர் அது நடந்தது, நாய்கள் குரைப்பதை நிறுத்திவிட்டன, டோரிஸ் சுவற்று அறையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது; பேய் தோன்றியது அப்போதுதான்.”

“அப்படியென்றால் பேயால் தான், அவள் தலைமுடி வெண்மையாகிவிட்டதா?”

“அப்படித்தான் சொன்னார்கள்.”

“ஒருவேளை அது கல்லறையிலிருந்த கட்டிட பூச்சு தூசியாக இருந்திருக்கலாம்.”

“பேய்களை நம்புவது எளிதல்ல.”

“இத்தனை நேரம் ரவுலிட்டோ தூங்கிக் கொண்டிருந்தார்?”

“கடைசி வரை பாவம் அந்தப் பெண்ணைத் தொடாமல்.”

“அடுத்த நாள் காலை அவர் மயிர் எப்படி இருந்தது?”

“எப்போதும் போல் கருப்புதான், ஆனால் அதை வைத்து இந்த விஷயத்தை நிரூபிக்க முடியாது. ஏனென்றால் அவர் அவளை விட்டுவிட்டுப் போய் விட்டார்.”

“எனவே, பிளாஸ்டர் தூசிக்கு எந்த தொடர்பும் இல்லை.”

“அது, அவளுக்கு ஏற்பட்ட பயத்தினால இருந்திருக்கலாம்.”

“காவல் நிலையத்தில் அவள் பயந்து போயிருக்கலாம்.”

“அல்லது அவளுடைய தலைமுடி சாயம் மங்கிப் போயிருக்கலாம்.”

“மானுட நிலையின் மர்மங்கள் இத்தகையவை. எப்படியிருந்தாலும், ரவுலிட்டோ பெண்ணுடன் ஒருபோதும் முயற்சித்ததில்லை.”

“ஆனால் அவர் ஒரு உண்மையான ஆண் போல் தோன்றினார்.”

“சிலெயில் ஆண்கள் இல்லை, தோழர்.”

“அமைதி, சாலையைப் பார்த்து வண்டியைச் செலுத்து. என் மீது பாய வேண்டாம”

“அது ஒரு முயல் என்று நினைக்கிறேன், அதன் மேல் ஏற்றியிருக்க வேண்டும்.”

“ஆண்கள் யாரும் மிஞ்சவில்லை என்றா நீ சொல்கிறாய்?”

“நாம் அனைவரையும் கொன்றுவிட்டோம்.”

“நாம் அவர்களைக் கொன்றோம் என்று ஏன் சொல்கிறாய்? நான் என் வாழ்க்கையில் யாரையும் கொல்லவில்லை. நீயும் உன் கடமையைதான் செய்து கொண்டிருந்தாய்.”

“என் கடமையா?”

“கடமை, அமைதியைக் காப்பது நம் வேலை, அதைத்தான் நாம் செய்கிறோம். அல்லது சும்மா உட்கார்ந்து இருப்பதற்கு உனக்கு பணம் வேண்டுமா?”

“நான் ஒருபோதும் சும்மா உட்கார்ந்திருப்பதை விரும்பவில்லை, எப்போதும் ஒரு குடைச்சலாகத்தான் இருக்கும். அதனால்தான் சிலெயிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும்.”

“இது சிலெயில் ஆண்கள் பற்றாக்குறைக்கு உதவியிருக்கும்.”

“குறிப்பாக நான் வாகனம் ஓட்டும்போது என்னை கேலி செய்யத் தொடங்க வேண்டாம், தோழர்.”

“நீ அமைதியாக இரு, எங்கு செல்கிறாய் என்று பார். எப்படியிருந்தாலும், இதுல சிலெக்கு என்ன வேண்டியிருக்கிறது?”

“எல்லாமேதான், நான் எல்லாம் என்று சொல்லும்போது…”

“சரி, நீ என்ன சொல்ல வருகிறாய் என்று புரிகிறது.”

“உனக்கு ’73 நினைவிருக்கிறதா?”

“அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.”

“நாம் அப்போதுதான் அனைவரையும் கொன்றோம்.”

“வேகத்தை குறைத்து மெதுவா போ, குறைந்தபட்சம் நீ என்ன சொல்கிறாய் என்பதை விளக்கும் போதாவது.”

“விளக்க நிறைய இல்லை. அழுவதற்கு ஏராளம், ஆனால் விளக்குவதற்கு அல்ல.”

“ஆனால் இது ஒரு நீண்ட பயணம் என்பதால், நாமும் பேசலாம். ’73 இல் நாம் யாரைக் கொன்றோம்?”

“இந்த நாட்டில் இருந்த உண்மையான ஆண்களை.”

“மிகைப்படுத்தத் தேவையில்லை, தோழர். எப்படியிருந்தாலும், நாம்தான் முதலில் சென்றோம்; நாமெல்லாம் கைதிகளாக இருந்தோம் என்பதை மறக்க வேண்டாம்.”

“ஆனால், மூன்று நாட்களுக்கு மட்டுமே.”

“ஆனால் அவை முதல் மூன்று நாட்கள், உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் பயந்தேன்.”

“சிலர் ஒருபோதும் விடுவிக்கப்படவில்லை, இன்ஸ்பெக்டர் டோவர், ஹிக் டோவர் போன்றவர்கள், அவரை நினைவில் வைத்திருக்கிறீர்களா? அவருக்கு தைரியம் இருந்தது, அந்த மனிதர்.”

“அவர்கள் அவரை குய்ரிக்வினா தீவில் மூழ்கடிக்கவில்லையா?”

“நாம் அவருடைய விதவை மனைவிக்குச் சொன்னது அதுதான், ஆனால் உண்மைக் கதை ஒருபோதும் வெளிவரவில்லை.”

“இதைதான், சில நேரங்களில் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.”

“அதைப் பற்றி கோபப்பட்டு எந்த அர்த்தமும் இல்லை.”

“இறந்தவர்கள் என் கனவுகளில் திரும்பி வருகிறார்கள், உயிரோடுமில்லை, சாகவுமில்லை என்கிற மாதிரி ஆட்களுடன் அவர்களைக் குழப்பிக் கொள்கிறேன்.”

“இறக்கவில்லை ஆனால் உயிரோடும் இல்லை என்றால் என்ன அர்த்தம்?”

“நான் சொன்னது, நம்மைப் போல மாறியவர்கள், நம்மைப் போலவே வளர்ந்தவர்களைச் சொன்னேன், உதாரணத்திற்கு.”

“இப்போது புரிகிறது – நீ சொல்வது போல நாம் இன்னும் குழந்தைகள் அல்ல.”

“சில சமயங்களில் நான் ஒருபோதும் விழித்து எழ மாட்டேன் என்று தோன்றுகிறது, கடைசி முடிவாக எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டது போல் இருக்கிறது”

“நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள், தோழர்.”

“சில நேரங்களில் அது என்னை மிகவும் கோபப்படுத்துகிறது, நான் யாரையாவது குற்றம் சாட்ட வேண்டும் போலிருக்கிறது, நான் எப்படிப்பட்டவன் என்று உனக்கு தெரியும், நான் மோசமான மனநிலையில் இருக்கும்போது, ​​சில சமயங்களில் யார் மீதாவது குற்றம் சாட்ட நினைப்பேன், ஆனால் என்னால் யாரையும் அதற்காகப் பிடிக்க முடியாது, அல்லது நான் தவறான நபரை பிடித்திருப்பேன், அது இன்னும் மோசம், இதனால், நான் மிகவும் உடைந்து போய் விடுகிறேன்.”

“ஆமாம், ஆமாம், எனக்குத் தெரியும்.”

“நான் சிலெயைக் குறை கூறுகிறேன், இது ஓரினச் சேர்க்கைக்காரர்கள் மற்றும் கொலையாளிகள்  நாடு என்று நினைக்கிறேன்.”

“ஏன் ஓரினச் சேர்க்கைக்காரர்களை குறை கூற வேண்டும், அதை என்னிடம் சொல்ல முடியுமா?”

“சரி, அவர்கள் இல்லை, ஆனால் யார் மீது வேண்டுமானால் பழி போடலாம்.”

“அந்த விஷயத்தில் உன்னுடன் என்னால் உடன்பட முடியாது; வாழ்க்கை ஏற்கனவே கடினமாக உள்ளது.”

“நான் நினைக்கிறேன், இந்த நாடு பல ஆண்டுகளுக்கு முன்பே நரகமாகிப் போய் விட்டதென, நாம் இங்கே இருப்பதற்குக் காரணம், நாம் கொடுங்கனவுகள் காண வேண்டும் என்பது, ஏனென்றால் யாராவது இந்த நாட்டில் தங்கி அவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.”

“சாலையைப் பார், ஒரு மலை வருகிறது. என்னைப் பார்க்க வேண்டாம், நான் உன்னுடன் வாக்குவாதம் செய்யவில்லை – நீ சாலையில் மட்டும் கவனம் செலுத்து.”

“அப்புறம்தான் இந்த நாட்டில் ஆண்கள் யாரும் மிச்சமில்லை என்று நினைத்துக் கொள்கிறேன். அப்போது என் கண்கள் திறந்து கொண்டது போல்இருக்கிறது. இந்த நாட்டில் ஆண்கள் யாரும் இல்லை, வெறுமனே தூக்கத்தில் நடப்பவர்கள்.”

“பெண்கள் என்னாச்சு?”

“தோழர் நீங்கள் சில சமயம் அடிமுட்டாளாக இருக்கிறீர்கள்; நான் பொதுவாக மானுட நிலை பற்றி பேசுகிறேன், அதில் பெண்களும் அடங்குவர்.”

“நான் புரிந்து கொண்டேனா என்று எனக்குத் தெரியவில்லை.”

“ஆனால், நான் தெளிவாக சொன்னேன்.”

“எனவே சிலெயில் ஆண்களும் இல்லை, ஆண்கள் போல் இருக்கும் பெண்களும் இல்லை என்று நீங்கள் சொல்ல வருகிறாய்.”

“சரியாக அப்படி இல்லை, ஆனால் கிட்டத்தட்ட.”

“சிலெயின் பெண்கள் இன்னும் கொஞ்சம் மரியாதைக்குரியவர்கள் என்று நான் நினைக்கிறேன்.”

“சிலெயின் பெண்களை அவமதிப்பது யார்?”

“நீங்க தான் ஆரம்பித்தது தோழர்.”

“ஆனால், சிலெயின் பெண்களை நான் எவ்வாறு அவமதிப்பேன்? அவர்கள்தான் எனக்குத் தெரிந்த ஒரே பெண்கள்.”

“நீ சொல்வதுதான் இது, ஆனால் அது வெறும் உதட்டளவில் சொல்வது, இல்லையா?”

“திடீரென்று நீ ஏன் எதற்கு எடுத்தாலும் சிலிர்த்துக் கொள்கிறாய்?”

“நான் ஒன்னும் தொட்டாற் சிணுங்கியல்ல.”

“உனக்கு தெரியுமா, வண்டியை நிறுத்தி உன் முகத்தை அடித்து நொறுக்க வேண்டும் போல் இருக்கிறது.”

“நடக்கிற காரியத்தைப் பார்க்க வேண்டும்.”

“இயேசுவே, எவ்வளவு அழகான இரவு.”

“எனக்கு அழகான இரவு வேண்டாம். இரவுக்கு இதில் எதற்கும் என்ன சம்பந்தம்?”

“முழு நிலவுதான் காரணமாக இருக்க வேண்டும்.”

“விடுகதை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். நான் சிலெ நாட்டுக்காரன், நினைவில் வைத்துக் கொள், சுற்றி வளைத்துப் பேசுவதை நான் விரும்பவில்லை.”

“அங்குதான் நீ தவறு செய்கிறாய். நாம் எல்லோரும் இங்குள்ள சிலெ மக்கள், நாம் எப்போதுமே கொடுங்கனவாகிப் போன விஷயத்தை நேரடியாகப் பேசாமல் சுற்றி வளைத்து தவிர்த்துக் கொண்டிருக்கிறோம்.”

“நீ ஒரு அவநம்பிக்கையாளன், அதுதான் நீ.”

“உனக்கு என்ன வேண்டும்?”

“இருண்ட நேரங்களில் கூட பிரகாசிக்கும் ஒளி இருக்கிறது. பெசோவாதான் அப்படிச் சொன்னார் என்று நான் நினைக்கிறேன்.”

“பெசோவா வெலிஸ்.”

“இருண்ட தருணங்களில் கூட ஒரு சிறிய நம்பிக்கை உள்ளது.”

“நம்பிக்கை நாசமாப் போச்சு.”

“நம்பிக்கை எப்போதும் பொய்க்காது.”

“பெசோவா வெலிஸ். நான் இப்போது நினைவில் வைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?”

“எனக்கு எப்படித் தெரியும், தோழர்?”

“நாங்கள் குற்றவியல் விசாரணையில் தொடங்கியபோது.”

“கான்செப்சியனில் உள்ள நிலையத்தில்?”

“காலே டெல் சர்ச்சில் உள்ள நிலையத்தில்.”

“அந்த நிலையத்தைப் பற்றி நான் நினைவில் வைத்திருப்பது வேசிகளை மட்டுமே.”

“நான் அவர்களோடு ஒரு போதும் கலவி கொண்டதில்லை.”

“நீங்கள் எப்படி அப்படிச் சொல்ல முடியும், தோழர்?”

“ஆரம்பத்தில், முதல் சில மாதங்கள் என்ற அர்த்ததில் சொல்கிறேன்; பின்னர் நடந்த விஷயம் வேறு, நான் கெட்ட பழக்கங்களை பழக ஆரம்பித்தேன்.”

“எப்படியிருந்தாலும் அது இலவசம், நீ ஒரு வேசியிடம் பணம் கொடுக்காமல் கலவி கொள்வது, அவளை நீ அனுபவிக்கவில்லை என்பது போன்றது.”

“ஒரு வேசி எப்போதும் வேசிதான்.”

“சில நேரங்களில் உனக்கு பெண்களைப் பிடிக்காது என்று நினைக்கிறேன்.”

“நான் பெண்களை விரும்பவில்லை என்று எப்படி சொல்கிறாய்?”

“நீ அவர்களைகேவலப்படுத்திப் பேசும் விதம்.”

“ஏனென்றால், என் அனுபவத்தில், நீ வேசிகளுடன் கலந்து பழகும்போது எப்போதும் புளித்துப் போகும்.”

“ஆகா, உலகில் வேறு எதுவும் அவ்வளவு இனிமையானது அல்ல.”

“ஆமாம், நிச்சயமாக, அதனால்தான் நாம் அவர்களை பலாத்காரம் செய்தோம்.”

“நீ காலே டெல் சர்ச்சில் உள்ள நிலையத்தைப் பற்றி பேசுகிறாயா?”

“நான் சொல்வது அதுவேதான்.”

“இரு இரு, நாம் அவர்களை பலாத்காரம் செய்யவில்லை, அது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது மாதிரி. நல்ல ஒரு பொழுதுபோக்கு மாதிரி. அடுத்த நாள் காலையில் அவர்கள் நமக்கு ஒரு சிறிய நிம்மதியைக் கொடுத்த மகிழ்ச்சியுடன் சென்றனர். உனக்கு ஞாபகம் இல்லையா?”

“எனக்கு நிறைய விஷயங்கள் ஞாபகம் இருக்கிறது.”

“விசாரணைகள் மோசமாக இருந்தன. நான் ஒருபோதும் விரும்பி முன்வந்ததில்லை, விசாரணை செய்ய.”

“ஆனால் உன்னிடம் கேட்கப்பட்டால் நீ அதைச் செய்திருப்பாய்.”

“நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது.”

“உயர்நிலைப் பள்ளியில் நம்முடன் படித்த வகுப்புத் தோழன் கைதியாய் வந்ததை நினைவில் வைத்திருக்கிறாயா?”

“நிச்சயமாக நினைவிருக்கிறது, அவனுடைய பெயர் என்ன?”

“நான் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் அங்கு இருப்பதை உணர்ந்தேன். நீ அவனைப் பார்த்தாய், ஆனால் அவனை அடையாளம் காணவில்லை.”

“நமக்கு அப்போது இருபது வயது, தோழர், குறைந்தது ஐந்து வருடங்களாவது அந்தப் பையனை பார்த்ததில்லை. ‘ஆர்ட்டுரோ’ என்பது அவன் பெயர் என்று நினைக்கிறேன். அவனும் என்னை அடையாளம் காணவில்லை.”

“ஆம், ஆர்ட்டுரோ. அவன் பதினைந்து வயதில் சிலெயை விட்டு வெளியேறி, இருபது வயதில் திரும்பி வந்தான்.”

“மோசமான நேரம், இல்லையா?”

“ஒரு வழியில் நல்லது, நம் நிலையத்துக்கு வந்து சேர்ந்தான், எந்த இடத்துக்கும் அவன் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம்…”

“சரி, அதெல்லாம் பழைய கதை, நாம் அனைவரும் இப்போது நிம்மதியாக வாழ்கிறோம்.”

“அரசியல் கைதிகளின் பட்டியலில் அவனது பெயரைப் பார்த்தவுடன், அது அவன்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. இது மிகவும் பொதுவான பெயர் அல்ல.”

“நீ எங்கு செல்கிறாய் என்று பார்; நீ விரும்பினால் நாம் இருவரும் இடம் மாற்றிக் கொள்ளலாம்.”

“நான் நினைத்த முதல் விஷயம் என்னவென்றால், இது நம் பழைய வகுப்புத் தோழன் ஆர்ட்டுரோ, பைத்தியக்கார ஆர்ட்டுரோ, பதினைந்து வயதில் மெக்சிகோவுக்கு போனவன்.”

“சரி, அவன் நம்மை அங்கே பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தான் என்று கருதுகிறேன்.”

“நிச்சயம் அவன் மகிழ்ச்சியாகத்தானே  இருந்தான்! நீ அவனைப் பார்த்தபோது யாரும் அவனிடம் பேச முடியாத நிலையில் இருந்தான், மற்ற கைதிகள் அவனுக்கு உணவு கொடுக்க வேண்டியிருந்தது.”

“அவன் மிகவும் சந்தோஷப்பட்டான்.”

” இப்போது அதைப் பார்ப்பது போல் இருக்கிறது.”

“ஆனால் நீ அங்கு வரவே இல்லை.”

“இல்லை, ஆனால் நீ என்னிடம் சொன்னாய். நீ சொன்னாய், ‘நீ ஆர்ட்டுரோ பெலானோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பயோ-பயோவைச் சேர்ந்தவன்தானே’ என்று, அவன்,”ஆம், நான் தான்” என்று சொன்னான்.”

“வேடிக்கைதான், நான் அதை மறந்துவிட்டேன்.”

“நீ சொன்னாய், ”உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ஆர்ட்டுரோ?” நான் யார் என்று உனக்குத் தெரியாதா?” இப்போது நான் சித்திரவதை செய்யப்படப் போகிறேன், அல்லது இந்த வேசியின் மகன் என்னிடம் என்ன விரும்புகிறான், என்று நினைப்பதைப் போல், அவன் உன்னைப் பார்த்தான்.”

“அவன் கண்களில் பயம் இருந்தது, அவ்வளவுதான்.”

“‘இல்லை, எனக்கு எதுவும் தெரியாது,’ என்று அவன் சொன்னான். ஆனால், அதற்குள் அவன் உன்னை வேறு மாதிரி பார்க்கத் துவங்கி விட்டான், கடந்த காலத்தின் மலஜலத்தின் ஊடே உற்று நோக்குவது போல், என்று கவிஞன் சொல்வானே, அந்த மாதிரி.”

“அவன் கண்களில் பயம் இருந்தது, அவ்வளவுதான்.”

“பின்னர் நீ சொன்னாய், “இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வந்த உன் வகுப்புத் தோழன். உனக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? நான்தான் ‘அரான்சிபியா!’ என்று.” அவன் உன்னை அடையாளம் காண  பெரிய முயற்சியை மேற்கொண்டது போல் இருந்தது, ஏனென்றால் ஐந்து ஆண்டுகள் என்பது நீண்ட காலம், அது போக, நிறைய விஷயங்கள் இருந்தன ஞாபகம் வைத்துக் கொள்ள. சிலெயை விட்டு வெளியேறியதிலிருந்து நிறைய விஷயங்கள் அவனுக்கு நேர்ந்து விட்டது, இப்போது என்ன நடக்கிறது, அவன் திரும்பி வந்து விட்டான், அவனால் உன்னை அடையாளம் காண முடியவில்லை, பதினைந்து வயது சிறுவர்களின் முகங்களை அவன் நினைவில் வைத்திருக்க முடியும், இருபது வயதானவர்களை அல்ல, எப்படியிருந்தாலும் நீ அவனுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவன் இல்லையே.”

“அவன், எல்லோரிடமும் நண்பர்களாக இருந்தான், ஆனால் முரட்டுப் பசங்களோடுதான் பழகுவான்.”

“நீ ஒருபோதும் அவனுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவனாக இல்லை.”

“அப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், நான் அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.”

“‘அரான்சிபியா, ஆமாம், நிச்சயமாக, அரான்சிபியா, ஞாபகம் வருகிறது இப்போது. எவ்வளவு வேடிக்கையான விஷயம், இல்லையா?’ என்றான்.”

“சரிதான். ஆனால், எனது உடன் இருந்த அதிகாரி சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை.”

“அவன் உன்னை தோள்களால் பிடித்து, மார்பில் ஒரு குத்துவிட்டதில், நீ குறைந்தபட்சம் மூன்று கெஜம் பறந்து விட்டாய்.”

“இல்லை, முன்னே மாதிரி ஒன்றரை கெஜம்தான்.”

“உன் சக அதிகாரி அவன் மீது பாய்ந்தான், நிச்சயமாக, அவனுக்கு பைத்தியம் பிடித்ததாக நினைத்துக்கொண்டார்.”

“அல்லது தப்பிக்க முயல்கிறான் என்று. நாங்கள் மிகவும் திமிராக இருந்தோம், அதனால், சிறைச்சாலை அறைகளில் இருப்பவர்களை கணக்கெடுக்கப் போகும்போது எங்கள் துப்பாக்கிகளை வைத்து விட்டுச் செல்லவில்லை.”

“வேறு மாதிரி சொல்வதென்றால், உங்கள் துப்பாக்கியை அவன் பிடுங்கப் போவதாக உன் கூட்டாளி நினைத்தார், எனவே அவன் மீது பாய்ந்தார்.”

“அந்த ஆள் அவனைப் புரட்டி எடுத்திருப்பான், ஆனால் அவன் என் நண்பன் என்று சொன்னேன்.”

“பின்னர் நீ பெலானோவை முதுகில் தட்டிக் கொடுத்தாய், ஓய்வெடு என்று சொன்னாய், நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்பதைச் சொன்னாய்.”

“நான் அவனிடம் வேசிகளைப் பற்றி மட்டுமே சொன்னேன். கடவுளே, அவ்வளவு அனுபவமில்லாமல் இருந்திருக்கிறோம்.”

“நீ சொன்னாய், காவல் அறையில் நான் ஒவ்வொரு இரவும் ஒரு வேசியிடம் சாமான் போடுகிறேன் என்று.”

“இல்லை, நாம் சோதனை போடத்  திட்டமிட்டோம், பின்னர் சூரியன் உதிக்கும்வரை புணர்ந்தோம், ஆனால் நிச்சயம் வேலை நேரத்தில் மட்டும்தான் என்று சொன்னேன்.”

“அவன் இப்படிச் சொல்லியிருப்பான், அருமை, அரான்சிபியா, அருமை, நீ நற்பணியை தொடர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி என்று.”

“அந்த மாதிரி ஏதாவது; சாலையில் இந்த வளைவை கவனி.”

“நீ அவனிடம், பெலானோ, இங்கே என்ன செய்கிறாய்? நீ மெக்சிகோ செல்லவில்லையா?’ என்று சொன்னாய். ‘திரும்பி வந்து விட்டேன், தெருவில் உள்ள ஒரு  சாதாரண ஆளைப் போல நானும் ஒரு நிரபராதி,’ என்று உன்னிடம் சொன்னான்.”

“அவன் தனக்கு ஒரு உதவி செய்யும்படி கேட்டான், ஒரு தொலைபேசி அழைப்பு விடுக்க.”

“நீ அவனை தொலைபேசி பயன்படுத்த அனுமதித்தாய்.”

“அதே பிற்பகல்.”

“நீ என்னைப் பற்றி அவனிடம் சொன்னாய்.”

“நான் சொன்னேன்: கான்ட்ரெராஸும் இங்கேதான் இருக்கிறான்ம் என்று. நீ ஒரு கைதி என்று அவன் நினைத்தான்.”

“சிறை அறையில் மாட்டிக்கொண்டு, அதிகாலை மூன்று மணிக்கு சப்பி மார்டினாஸ்ஸோவைப் போல கத்திக் கொண்டு.”

“மார்டினஸ்ஸோ யார்? எனக்கு இப்போது நினைவில் இல்லை.”

“நாம் அவரை சிறிது நேரம் அங்கே வைத்திருந்தோம். பெலானோ ஒவ்வொரு இரவும் அவர் கத்துவதைக் கேட்டிருப்பான், ஆழ்ந்த தூக்கத்தில் இல்லாவிட்டால்.”

“ஆனால், நான் சொன்னேன், இல்லை, தோழர், கான்ட்ரெராஸ்சும் ஒரு போலீஸ்காரன், நான் அவனது காதில் கிசுகிசுத்தேன்: ஆனால் அவன் இடதுசாரி, இது பற்றி ஏதும் சொல்ல வேண்டாம்.”

“அது சரியல்ல; நீ அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.”

“நான் உன்னை காட்டிக் கொடுக்கப் போவதில்லை.”

“பெலனோ என்ன சொன்னான்?”

“அவன் என்னை நம்பவில்லை என்பது போல் இருந்தது. கான்ட்ரெராஸ் யார் என்று அவனுக்கு தெரியாது என்பது போல் அவர் தோற்றமளித்தான். இந்த வீணாய்ப் போன போலீஸ்காரன் என்னை கண்டதுண்டமாய் வெட்டிப் போடப் போகிறான் என்று அவன் நினைத்ததைப் போல தோற்றமளித்தான்.”

”அவன் பிறரிடம் நம்பிக்கை வைக்கக்கூடிய பையனாக இருந்தபோதிலும்.”

“எல்லோரும் பதினைந்து வயதில் நம்புகிறார்கள்.”

“நான் என் சொந்த அம்மாவை கூட நம்பவில்லை.”

“நீ உன் சொந்தத் தாயை நம்பவில்லை என்றா சொல்கிறாய்? உன் தாயை நீ முட்டாளாக்க முடியாது.”

“அதேதான், அதனால்தான்.”

“பின்னர் நான் அவனிடம் சொன்னேன்: இன்று காலை நீ கான்ட்ரெராஸைப் பார்க்கப் போகிறாய், அவன் உன்னை டாய்லெட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, ​​அவன் இருக்கிறானா பார், அவன் உனக்கு ஒரு சமிக்ஞை செய்வான். பெலானோ சரி என்று கூறினான், ஆனால் நான் தொலைபேசி அழைப்பை அமைத்துத் தர வேண்டும் என்பதில் மட்டும் அவன் அக்கறை கொண்டிருந்தான்.”

“அப்போதுதான், தனக்கு உணவு கொண்டுவர யாரையாவது ஏற்பாடு செய்ய முடியும் போன் செய்து.”

“எப்படியிருந்தாலும், நான் அவனை விட்டுப் பிரிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தான். சில நேரங்களில் நான் நினைக்கிறேன், நாங்கள் தெருவில் சந்தித்திருந்தால் அவன் ஒரு ஹலோ கூடச் சொல்லியிருக்க மாட்டான். வேடிக்கையான உலகம்.”

“அவன் உன்னை அடையாளம் கண்டிருக்க மாட்டான். நீ உயர்நிலைப் பள்ளியில் அவனது நண்பர்களில் ஒருவனாக இருக்கவில்லை.”

“நீயும் இல்லை.”

“ஆனால் அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான். பதினொரு மணியளவில் அவர்களை வெளியே அழைத்துச் சென்றபோது, ​​அனைத்து அரசியல் கைதிகள் எல்லாரும் ஒரே வரிசையில், நான் குளியலறைக்குப் போகும் தாழ்வாரத்தின் அருகே சென்று அவனைப் பார்த்து தலையசைத்தேன். அவன் கைதிகளில் இளையவனாக இருந்தான், பார்க்கச் சகிக்கவில்லை.”

“ஆனால், அவன் உன்னை அடையாளம் கண்டானா இல்லையா?”

“நிச்சயமாக அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான். நாங்கள் ஒருவருக்கொருவர் தூரத்தில் இருந்து பார்த்துச் சிரித்தோம், அப்புறம்தான் நீ சொன்ன விஷயங்களில் அவனுக்கு நம்பிக்கை வந்தது.”

“நான் அவனிடம் என்ன சொல்லியிருந்தேன்? சொல், அதைக் கேட்போம்.”

“நான் அவனைப் பார்க்கப் போனபோதுதான் தெரிந்தது, மலை மலையாய்ப் பொய் சொல்லியிருக்கிறாய்.”

“நீ அவனைப் பார்க்கப் போனாயா?”

“அன்று இரவு, அவர்கள் மற்ற கைதிகளை வேறு இடத்துக்கு மாற்றிய பிறகு. பெலானோ தனியாக இருந்தான், புதிய ஆட்கள் வருவதற்கு சில மணிநேரங்கள் இருந்தன, அவன் எந்த அளவுக்கு மோசமாக இருக்க முடியுமோ அவ்வளவு மோசமாக இருந்தான்”

“மிகவும் தைரியசாலிகளாக இருப்பவர்கள்கூட உள்ளே வந்ததும் மோசமாகி விடுகிறார்கள்.”

“சரி, நீ சொல்வது இதுதான் என்றால், அவன் உடைந்து போகவில்லை.”

“இல்லை, ஆனால் கிட்டத்தட்ட.”

“கிட்டத்தட்ட, அது உண்மைதான். மேலும், அவனுக்கு மிகவும் வித்தியாசமான விஷயம் நடந்தது. அதனால்தான் இன்றிரவு அவனை நினைவு கூர்ந்தேன் என்று நினைக்கிறேன்.”

“அப்படியா, அந்த வித்தியாசமான விஷயம் என்ன?”

“சரி, அவனை யாரும் பார்க்க முடியாமல் இருந்தபோது அது நடந்தது – அந்த நிலையத்தில் எப்படி இருந்தது என்பது உனக்கே தெரியும்: அதன் பொருள் என்னவென்றால் நீ பட்டினி கிடக்க வேண்டியதுதான், வெளியில் உள்ளவர்களுக்கு நீ வேண்டிய அளவு செய்திகளை அனுப்ப முடியும். ஆனால், பெலானோவை யாரும் பார்க்க முடியாமல் இருந்ததால், யாரும் அவனுக்கு எந்த உணவையும் கொண்டு வரவில்லை, மேலும் அவனுக்கு சோப்பு இல்லை, பிரஷ் இல்லை, இரவில் போர்த்திக்க போர்வை இல்லை. சில நாட்களுக்குப் பிறகு, இயற்கையாகவே அவன் அழுக்காக, சவரம் செய்யாமல் இருந்தான், அவன் உடைகள் எல்லாம் துர்நாற்றம் வீசின, உனக்கே தெரியும் இது வழக்கம்தான், ஒரு நாளைக்கு ஒரு முறை நாம் அனைத்து கைதிகளையும் குளியலறைக்கு அழைத்துச் சென்றோம், நினைவிருக்கிறதா?”

“நான் எப்படி மறக்க முடியும்?”

“மேலும் குளியலறைக்குச் செல்லும் வழியில் ஒரு கண்ணாடி இருந்தது, குளியலறையிலேயே அல்ல, ஆனால் குளியலறைக்கும் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த ஜிம்மிற்கும் இடையில் ஓடும் பாதையில், ஒரு மிகச்சிறிய கண்ணாடி, பதிவு அலுவலகத்திற்கு அருகில், உனக்கு நினைவிருக்கிறது, இல்லையா?”

“எனக்கு அது நினைவில் இல்லை, தோழர்.”

“சரி, இந்தக்  கண்ணாடி இருந்தது, அரசியல் கைதிகள் அனைவரும் அதில் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் குளியலறையில் கண்ணாடியைக் கழற்றிவிட்டோம், யாருக்கும் முட்டாள்தனமான எண்ணங்கள் வரக்கூடாது என்று, அவர்கள் எவ்வளவு நன்றாக ஷேவ் செய்து கொண்டார்கள் அல்லது அவர்களின் உறுப்பு எவ்வளவு நேராக இருக்கிறது என்பதைப் பார்க்க அவர்களுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான், எனவே அவர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள், குறிப்பாக அவர்கள் ஷேவ் செய்ய அனுமதிக்கப்பட்டபோது அல்லது வாரத்தின் ஒரு நாள் அவர்கள் குளிக்கும்போது.”

“சரி, எனக்குப் புரிகிறது, பெலானோவை யாரும் பார்க்க முடியாமல் இருந்ததால் அவனால் ஷேவ் செய்யவோ, குளிக்கவோ அல்லது எதுவும் முடியவில்லை.”

“அதேதான், அவனிடம் ரேஸர், அல்லது ஒரு துண்டு, அல்லது சோப்பு அல்லது சுத்தமான உடைகள் எதுவும் இல்லை, அவனால் ஒரு தடவைகூட குளிக்க முடியவில்லை.”

“ஆனால் அவன் அவ்வளவு மோசமாக நாற்றமடித்ததாய் எனக்கு நினைவு இல்லை.”

“எல்லோரும் துர்நாற்றம் வீசுகிறார்கள். நீ ஒவ்வொரு நாளும் குளித்தாலும் துர்நாற்றம் வீசலாம். நீயும் நாற்றமாகத்தான் இருந்தாய்.”

“என்னை விட்டுவிடுங்க, தோழர், சாலையில் அந்த மேட்டுச் சுவற்றைப் பாருங்க.”

“சரி, விஷயம் என்னவென்றால், பெலானோ கைதிகளுடன் வரிசையில் இருந்தபோது, ​​அவன் எப்போதும் கண்ணாடியில் தன்னைப் பார்ப்பதைத் தவிர்த்தான். புரிகிறதா? அவன் முகம் திருப்பிக் கொண்டான். அவன் ஜிம்மில் இருந்து பாத்ரூமுக்குச் சென்றாலும் அல்லது குளியலறையிலிருந்து ஜிம்மிற்குச் சென்றாலும், அவன் கண்ணாடியுள்ள தாழ்வாரத்திற்கு வந்தபோதும், ​​அவன் வேறு பக்கம் பார்த்தான்.”

“அவன் தன்னைப் பார்க்கப் பயந்தான்.”

“அந்த ஒரு நாள் வரை. அவனது பழைய பள்ளித் தோழர்கள் அவனை அந்த சிக்கலிலிருந்து காப்பாற்றப் போகிறார்கள் என்று அறிந்த பிறகு, அவனுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. அவன் இரவு மற்றும் காலை முழுவதும் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதிர்ஷ்டம் வாய்த்து விட்டது, எனவே அவன் கண்ணாடியை எதிர்கொண்டு தான் எப்படி இருக்கிறோம் என்று பார்க்க முடிவு செய்தான்.”

“என்ன நடந்தது?”

“அவன் தன்னை அடையாளம் காணவில்லை.”

“அவ்வளவுதான்?”

“அவ்வளவுதான்; அவன் தன்னை அடையாளம் காணவில்லை. இரவு அவனிடம் பேச வாய்ப்பு கிடைத்தபோது அவன் என்னிடம் இதைச் சொன்னான். அவன் அப்படிச் சொல்வான் என்று நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று நான் அவனிடம் சொல்லச் சென்றேன், நான் உண்மையில் இடதுசாரி, நடந்துகொண்டிருக்கும் எல்லா விஷயங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் அவன் கண்ணாடியைப் பற்றிய இந்த அற்ப விஷயத்தைச் சொன்னான், எனக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை.”

“நீ என்னைப் பற்றி என்ன சொன்னான்?”

“நான் எதுவும் சொல்லவில்லை. அவனே பேசிக் கொண்டிருந்தான். இது ஒரு எளிய விஷயம் என்று அவன் கூறினான், இது அதிர்ச்சியாக இல்லை, நான் சொல்வது புரிகிறது என்று நினைக்கிறேன். அவன் வரிசையில் இருந்தான், குளியலறைக்குச் செல்லும் வழியில், அவன் கண்ணாடியைக் கடந்து செல்லும்போது, ​​ திடீரென்று திரும்பி, தனது முகத்தைப் பார்த்து வேறு ஒருவனைக் கண்டான், ஆனால் அவன் பயப்படவில்லை, நடுங்கவில்லை, ஹிஸ்டீரியா வந்தது போல் நடந்து கொள்ளவில்லை. நாங்கள் ஸ்டேஷனில் இருந்தோம் என்பதால், அவன் அளவுக்கு மீறி உணர்ச்சி வசப்பட எந்த காரணமும் இல்லை என்று நீ சொல்வாய் என்று நினைக்கிறேன். எப்படியிருந்தாலும், அவன் குளியலறையில் செய்ய வேண்டியதைச் செய்தான், அமைதியாக, தான் பார்த்த நபரைப் பற்றி யோசித்தான், அதைப் பற்றி மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தான், ஆனால் அதைப் பெரிதுபடுத்தவில்லை. அவர்கள் மீண்டும் ஜிம்மிற்குச் சென்றபோது, ​​அவன் மீண்டும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான், நினைத்த மாதிரியே அவன் சொன்னான், அது அவன் அல்ல, அது வேறு யாரோ, நான் அவனிடம், ‘என்ன சொல்கிறாய், பைத்தியக்காரா? வேறொருவன் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டேன்.”

“அதைத்தான் நானும் சொல்லியிருப்பேன். அவன் என்ன அர்த்தத்தில் சொன்னான்?”

“அவன் சொன்னான், வேறு யாரோ. நான் சொன்னேன், அதை எனக்கு விளக்கமாய்ச் சொல். அவன் கூறினான், வேறு ஒரு ஆள், அவ்வளவுதான்.”

“அதற்கு அப்புறம் அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைத்தாய்.”

“நான் என்ன நினைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உண்மையைச் சொல்வதானால், நான் பயந்தேன்.”

“ஒரு சிலேயன்? பயமா?”

“அது அவ்வளவு அசாதாரணமானது என்று நினைக்கிறாயா?”

“சரி, இது உனக்கு வழக்கம் என்று நான் கூறமாட்டேன்.”

“என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். அவன் சொல்வது விளையாட்டாய் அல்ல என்பதை நான் உடனே உணர்ந்தேன். நான் அவனை ஜிம்மிற்கு அருகிலுள்ள சிறிய அறைக்கு அழைத்துச் சென்றேன், அவன் கண்ணாடியைப் பற்றியும் அவர்கள் தினமும் காலையில் அதைக் கடந்து செல்ல வேண்டிய விதம் பற்றியும் பேசத் தொடங்கினான், திடீரென்று நான் உணர்ந்தேன், இவை அனைத்தும் உண்மைதான்: அவன், நான், எங்கள் உரையாடல். நாங்கள் ஜிம்மில் இல்லாததால், அவன் நம் பழைய பள்ளியில் உடன் படித்த மாணவனாக இருந்ததால், நான் அவனை கண்ணாடி இருந்த வராந்தாவுக்கு அழைத்துச் சென்று, இன்னொரு முறை பார், என்னுடன் இங்கே உனக்கு அருகில், நிதானமாக, அமைதியாக, பார்த்துக் கொள், நீ பார்க்கும் அதே பழைய பைத்தியம் பெலானோ இல்லையென்றால் என்னிடம் சொல்,” என்று கூற நினைத்தேன். 

“நீ அதை சொன்னாயா?”

“நிச்சயமாக, ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், வார்த்தைகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே சிந்தனை வந்தது. யோசனை என் தலையில் நுழைந்து புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் வெளியே வருவதற்கு இடையில் ஒரு நித்தியம் கடந்துவிட்டது போல. ஒரு சிறிய நித்தியம், அதுதான் மோசம். ஏனென்றால், அது ஒரு பெரிய அல்லது வழக்கமான நித்தியமாக இருந்திருந்தால், நீ நான் சொல்வதைப் புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன், நான் அந்த உண்மையை உணர்ந்திருக்க மாட்டேன், ஆனால் உள்ளபடியே, நான் உணர்ந்தேன், அது என் பயத்தை தீவிரப்படுத்தியது.”

“ஆனால் நீ அப்படியும் அதைச் செய்தாய்.”

“நிச்சயமாக நான் செய்தேன்; அதற்குள் இனி பின்வாங்க முடியாத நிலை உருவாகி விட்டது. நான் சொன்னேன், நாம் ஒரு சோதனை செய்யப் போகிறோம்; நானும் நீயும் சேர்ந்து நிற்கும்போதும் இதேபோல் நடக்கிறதா என்று பார்ப்போம், அவன் என்னை எச்சரிக்கையாக பார்த்தான், ஆனால் அவன் சொன்னான், சரி, நீ இப்படி வற்புறுத்தினால் அப்படியே செய்யலாம், என்று, அவன் எனக்கு ஒரு உதவி செய்வதைப் போல, உண்மையில் நான் அவனுக்கு உதவ செய்தேன், வழக்கம்போல்.”

“ஆக, நீங்கள் கண்ணாடியை நோக்கிச் சென்றீர்களா?”

“நாங்கள் கண்ணாடியை நோக்கிச் சென்றோம். எனக்கு அது ஒரு பெரிய ஆபத்தாகத்தான் இருந்தது, ஏனென்றால் நள்ளிரவில் ஒரு அரசியல் கைதியுடன் நிலையத்தை சுற்றி நடந்து வரும்போது அவர்கள் எங்களைப் பிடித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது உனக்கு தெரியும். அவன் அமைதியாக, முடிந்தவரை புறவயப்பட்ட உணர்வுடன் இருக்க உதவுவதற்காக, நான் அவனுக்கு ஒரு சிகரெட் வழங்கினேன், எனவே நாங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தோம், தரையில் இருந்த துண்டுகளை நசுக்கிய பின்னர்தான் நாங்கள் குளியலறையை நோக்கிச் சென்றோம்; அவன் நிதானமாக இருந்தான், இதைவிட மோசமாகிவிட முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன் (இது அடிமட்ட முட்டாள்தனம், இன்னும், இன்னும் மோசமாக இருந்திருக்க முடியும்), நான் மிகவும் கவனமாக இருந்தேன், சிறிதளவு சத்தம், கதவு மூடும் சத்தம், கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தேன், ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் கவனமாக இருந்தேன், நாங்கள் கண்ணாடியை அடைந்ததும், உன்னைப் பார், என்றேன், அவன் தன்னைப் பார்த்தான், அவன் கண்ணாடியின் முன் நின்று தனது முகத்தைப் பார்த்தான், அவன் முடியைக் கூட கையால் கோதினான், மிகவும் நீளமாக இருந்தது, ’73 இல் மக்கள் முடி வைத்துக் கொண்டிருந்த விதம் உனக்கு தெரியும், பின்னர் அவன் பக்கவாட்டில் பார்த்தான், கண்ணாடியிலிருந்து விலகி சிறிது நேரம் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.”

“அப்புறம்?”

“அதைத்தான் நான் சொன்னேன், அப்புறம்? இது நீயா இல்லையா? அவன் என் கண்களைப் பார்த்து கூறினான்: இது வேறு யாரோ, தோழர், அவ்வளவுதான் விஷயம். எனக்குள் ஒரு தசை அல்லது நரம்பு போன்ற ஒன்றை உணர முடிந்தது, அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, சத்தியமாய்ச் சொல்கிறேன், ஆனால் அது இவ்வாறு கூறிக் கொண்டிருந்தது: சிரி, முட்டாளே, சிரி, ஆனால் தசைகள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், என்னால் சிரிக்க முடியவில்லை, என்னால் செய்யக்கூடியது இழுப்பு, ஒரு பிடிப்பு என் கன்னத்தை வலித்து இழுத்தது, எப்படியிருந்தாலும், அவன் அதை கவனித்து அங்கேயே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான், நான் மீண்டும் பயம் அடைந்ததால், என் முகத்தின் மீது ஒரு கையை ஓட்டிச் சென்று எச்சில் முழுங்கினேன்.”

“நாம் கிட்டத்தட்ட வந்தாயிற்று.”

“அப்புறம்தான் எனக்கு இந்த யோசனை வந்தது. நான் அவனிடம் சொன்னேன்: கேள், நான் கண்ணாடியில் பார்க்கப் போகிறேன், நான் என்னைப் பார்க்கும்போது, ​​நீ என்னைப் பார்க்கப் போகிறாய், பிறகு நீ என் பிரதிபலிப்பைப் பார்க்கப் போகிறாய், அப்போது உனக்கே தெரியும், எல்லாம் ஒன்றுதான், பிரச்சனை இந்த மோசமான கண்ணாடி, இந்த மோசமான காவல் நிலையம் மற்றும் இந்த நடைபாதையின் மோசமான விளக்குகள். அவன் எதுவும் சொல்லவில்லை, ஆனால் நான் அதை ஆம் என்று எடுத்துக் கொண்டேன் – அவன் ஆட்சேபித்திருக்க முடியும் – நான் கண்ணாடிக்கு வந்து கண்களை மூடிக்கொண்டு முன்னோக்கி சாய்ந்தேன்.”

“அதற்குள் விளக்குகள் தெரிகின்றன, தோழர், நாம் அருகே வந்துவிட்டோம், மெல்ல ஓட்டுங்கள்.”

“நீ செவிடா என்ன அல்லது விளையாடுகிறாயா? நான் சொல்வது உனக்கு கேட்கவில்லையா?”

“நிச்சயமாக நான் நீ சொல்வதைக் கேட்டேன். கண்களை மூடிக்கொண்டிருந்தாய்.”

“நான் கண்களை மூடிக்கொண்டு கண்ணாடியின் முன் நின்றேன். பின்னர் அவற்றைத் திறந்தேன். இது உனக்கு சாதாரணமாக இருக்கலாம்: கண்களை மூடிக்கொண்டு கண்ணாடியின் முன் நிற்பது.”

” எனக்கு எதுவும் சாதாரணமாகத் தெரியவில்லை, தோழர்.”

“பின்னர் நான் அவற்றைத் திறந்தேன், திடீரென்று, நான் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தேன், யாரோ ஒருவன் என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன், அவன் கண்களை விரித்துக் கொண்டு அச்சத்தில் மலம் கழிந்து விடும் போல் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான்,  அவனுக்குப் பின்னால் இருபது வயது இருக்கக்கூடிய ஒரு பையனைப் பார்த்தேன், ஆனால் அவன் பார்க்க குறைந்த பட்சம் பத்து வயது பெரியவனாக இருந்தான், தாடி மற்றும் கண்களுக்குக் கீழே கருவளையப் பைகள் கொண்ட ஒல்லியான ஆள் ஒருவன், என் தோளுக்கு மேல் எங்களைப் பார்த்து கொண்டு நின்றான், உண்மையைச் சொன்னால், எனக்கு உறுதியாகத் தெரியாது, நான் திரள் முகங்களைக் கண்டேன், கண்ணாடி உடைந்துவிட்டது போல, அது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பின்னர் பெலானோ மிகவும் மென்மையாக சொன்னான், இது ஒரு கிசுகிசுப்பைக் காட்டிலும் கொஞ்சமே சத்தமாக இருந்தது, அவன் கூறினான்: ”ஏய், கான்ட்ரேராஸ், அந்தச் சுவருக்குப் பின்னால் ஏதாவது அறை இருக்கிறதா?”

“அறிவு கெட்டவன்! அவன் அதிகமாக திரைப்படங்கள் பார்த்திருக்கிறான்!”

“அவனுடைய குரலைக் கேட்டபோது எனக்கு விழிப்பு வந்தது போலிருந்தது, ஆனால் தலைகீழாக இருந்தது, இந்த பக்கத்திற்கு திரும்பி வருவதற்கு பதிலாக, நான் மறுபுறம் வெளியே வந்து விட்டது போல், அங்கு என் சொந்த குரல் கூட விசித்திரமாக ஒலித்தது. இல்லை, என்று நான் சொன்னேன், எனக்குத் தெரிந்தவரை, அதன் பின்னால் ஒரு முற்றம்தான் இருக்கிறது. சிறை அறைகள் இருக்கும் முற்றமா? அவன் என்னை கேட்டான். ஆம், வழக்கமான கைதிகள் இருக்கும் இடம் அது, என்று நான் சொன்னேன். பின்னர் அந்த வேசிமகன் கூறினான்: இப்போது எனக்கு புரிகிறது. அது என்னை முற்றிலும் குழப்பி விட்டது, ஏனென்றால், அதாவது, புரிந்து கொள்ள என்ன இருந்தது? என் தலையில் தோன்றிய முதல் எண்ணத்தைச் சொன்னேன்: இப்போது உனக்கு என்ன புரிந்து விட்டது? ஆனால் நான் அதை மென்மையாகச் சொன்னேன், என் குரலை உயர்த்தாமல், மிகவும் மென்மையாக சொன்னதால் அவனுக்கு நான் சொல்வது கேட்கவில்லை, கேள்வியை மீண்டும் சொல்லவும் எனக்கு பலம் இல்லை. எனவே நான் மீண்டும் கண்ணாடியில் பார்த்தேன், பழைய வகுப்புத் தோழர்கள் இருவர், தளர்வான டை கொண்ட இருபது வயது போலீஸ்காரன், நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் அழுக்கு தோற்றம் கொண்ட ஆள், எலும்பும் தோலுமாக, நான் நினைத்தேன்: இயேசுவே, நாம் உண்மையில் நாசமாய்ப் போனோம், என்று, அது உண்மைதானே, கான்ட்ரேராஸ். பின்னர் நான் பெலானோவின் தோள்களில் கை வைத்து அவனை மீண்டும் ஜிம்மிற்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் வாசல் கதவுக்கு வந்தபோது ஒரு எண்ணம் என் மனதைக் கடந்தது: நான் என் துப்பாக்கியை வெளியே எடுத்து இங்கேயே சுட்டுவிட முடியும்; அது மிகவும் சுலபமாக இருந்திருக்கும், நான் செய்ய வேண்டியது எல்லாம் குறி வைத்து அவனது தலையில் ஒரு புல்லட் செலுத்துவதுதான், நான் எப்போதும் சரியாகச் சுடுபவன், இருட்டில் கூட. அப்புறம் நான் என்ன விளக்கம் வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை.”

“நிச்சயமாக நீ செய்யவில்லை. நாம் அப்படி ஒரு காரியம் செய்வதில்லை, தோழர்.”

“இல்லை, நாம் அப்படி ஒரு காரியம் செய்வதில்லை.”

***

One Reply to “துப்பறிவாளர்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.