ரொபெர்த்தோ பொலான்யோ குறு மொழிகள்

ஒவ்வொரு நூறடிக்கும் உலகம் மாறுகிறது.

நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என அறியாத போதிலும், எப்படித் தேட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

நிலா செழிப்பாக, இரவுக் காற்று அவ்வளவு தூய்மையாக, உண்டுவிடலாம் போல.

கவிதை ஒன்றுதான் மாசுபடாது இருக்கிறது. அது விளையாட்டின் பகுதியன்று.

உலகம் உயிர்ப்போடு இருக்கிறது; வாழ்பவைகளுக்குத் தீர்வு இல்லை. இதுதான் நம் அதிர்ஷ்டம்.

படிப்பது என்பது சிந்தித்தல்போல, பிரார்த்தனை செய்வதுபோல, ஒரு நண்பரிடம் பேசுவதுபோல, உங்கள் எண்ணங்களைப் பகிர்வதுபோல, மற்றவர்களின் கருத்துகளைக் கேட்பதுபோல, இசையைக் கேட்பதுபோல, நல்ல காட்சியைப் பார்ப்பதுபோல, கடற்கரையில் நடை செல்வதைப்போல.

தற்செயல் நிகழ்வுகளுக்கு விதி முறைகள் கிடையாது; அப்படி ஒருக்கால் இருந்தால் அது என்னவென்று நமக்குத் தெரியாது. நான் சொல்லும் ஒப்புவமையை நீங்கள் அனுமதித்தால், நம் கிரகத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  கடவுள் கொள்ளும் உருவங்கள்போல என்பேன். உணர்வற்ற கடவுள், தன் படைப்பான உணர்வற்றவர்களிடம் காட்டும் உணர்வற்ற செய்கை என்பேன். அந்தப் புயலிலே, அந்த எலும்பு வெடிப்பிலே ஒற்றுமை காண்கிறோம்.

எவ்வளவு கோணலான மனிதர்கள் நாம். அந்தரங்கமாக முறுக்கிக்கொண்டும், குறைந்தபட்சம் பிறர் முன்பு எளியவர்கள் என்று காட்டிக்கொண்டும் இருக்கிறோம். அற்ப எண்ணங்கள் கொண்டு அதை நமக்கு நாமே திரையிட்டு மறைத்துப் பிறர் கண்களுக்கும் புலப்படாமல்… இவையெல்லாம் எதற்காக, எதை மறைக்க, மனிதர்களை எதை நம்ப வைக்க?

ஒவ்வொரு கணப் பொழுதும் சிறிது சிறிதாக, நாம் அனைவரும் இறக்க நேரிடுகிறது. பொதுவாகப் படிப்படியாக இது நிகழ்வதால், இதன் முடிவில் நாம் எப்போதையும்விட உயிர்ப்புடனும், முடிவில்லாத வயோதிகத்துடனும், வாழ்வுடனும் இருக்கிறோம்.

Image

கனாக்களைக் கனவு காண்பவரே, இனிய இரவு உங்களுக்கு. காலை ஒளியில் கனவுகள் வெளுக்கின்றன, உங்களுக்கு அப்படி ஒரு காலை இல்லை.

ஆழமான விரக்தித் தருணத்தில் வாழ்க்கையை விளக்கிக்கொள்கிறோம்.

கலிஃபோர்னியக் கல்லூரி ஒன்றின் ஒவ்வொரு சதுர அடியிலும், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அசட்டுப் பெண்கள் நிறைந்திருக்கின்றனர்.

இலக்கியம் ஒரு பெருங்காடு. அதன் உன்னத இலக்கியப் படைப்புகள் ஏரிகள், பெரும் மரங்கள் அல்லது விநோதமான மரங்கள், அழகான சிறப்பான மலர்கள்,மறைந்திருக்கும் குகைகள்; ஆனால், ஒரு காடு சாதாரண மரங்கள், பசுமைத் திட்டுக்கள், குட்டைகள், படரும் கொடிகள், காளான்கள், காட்டுப் பூக்கள் ஆகியவையும் உள்ளடக்கியது.

அவரின் நூல்களைப் படிக்கும்போது, நகரச் சதுக்கத்தில் அவரைத் தூக்கிலிடக் கட்டுப்படுத்தவியலா ஆவல் வாசகர்களுக்கு எழுகிறது. ஓர் எழுத்தாளனுக்கு இதைவிடச் சிறந்த கௌரவம் ஒன்றை என்னால் நினைக்க முடியவில்லை.

எதுவும் இல்லை என்பதே எப்போதும் நம் பின்னால் இருக்கிறது.

வாழ்ந்திருப்பது மகிழ்விலோ, சோகத்திலோ, படிப்பது இன்பம்; அனைத்திற்கும் மேலாக அது அறிதலும், கேள்விகளும்.

குழப்பத்தில் மட்டுமே நம்மைக் கற்பனை செய்யமுடிகிறது.

கவிதைகள் சொல்ல ஒரு நேரம்; முஷ்டி மடக்க ஒரு நேரம்.

அவன் சொன்னான், “நான் அவர்களின் கனவுகளைக் களவாடுகிறேன், அவர்களின் அதிகமாகக் கூசவேண்டிய எண்ணங்களைத் திருடுகிறேன், அவர்களின் ஆன்மாவின் ஒவ்வொரு நடுக்கத்திலும், பிடிப்பிலும் இருக்கிறேன், அவர்களின் அடிப்படை நம்பிக்கைகளை ஆராய்கிறேன், அவர்களின் பகுத்தறிவற்ற தூண்டுதல்களின், வெளியிடமுடியாத உணர்ச்சிகளின் அலைவரிசையைப் படிக்கிறேன், கோடையில் அவர்களின் நுரையீரலிலும், குளிர் காலத்தில் அவர்களின் தசைகளிலும் உறங்குகிறேன். இதையெல்லாம் அநாயாசமாக, அதைப்பற்றிய நோக்கங்களற்று, அதை விரும்பிக் கேட்டோ அல்லது தேடுதல்கள் இன்றியோ, தடைகளற்று, அன்பும், அர்ப்பணிப்புமாகச் செய்கிறேன்.

இன்றைய சமூக-அரசியல் சூழலில் தற்கொலை செய்துகொள்வது என்பது அபத்தமானது, தேவைக்கு அதிகம் அது என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பேசாமல் ஓர் தலைமறைவான கவிஞனாகி விடு.

தனித்திருப்பது நம்மை வலிமையுடையவராக்குகிறது. இது ஒரு நேர்மையான உண்மைதான். அது என்னை நானே ஆற்றுப்படுத்துதல்தான், ஏனெனில் நானே தோழமையை விரும்பினாலும் என்னை நெருங்க இனி எவரும் விரும்பப்போவதில்லை.

ஆகவே, நாம் மிகவும் நேசிப்பவை, நம் ஆர்வம், நம் நேர்மை எல்லாம்  நம்மைக் கைவிட்டுவிடுகின்றன. ‘ஆம்’ என்றது குரல், ஊக்கம் கொள், முடிவில் எல்லாம் கேளிக்கையே.

நீங்கள் சொல்ல விரும்பியதைச் சொல்வீர்கள் என்றால், கேட்க விரும்பாததைக் கேட்பீர்கள்.

அன்பிலிருந்து எப்போதும் நல்லது ஒன்றும் வருவதில்லை. எப்போதுமே அன்பிலிருந்து வருவது இதைவிட மேலானது.

இறப்பு நிச்சயம் என்று தெரிந்த போதிலும் வாழ்வதை நாம் எவ்வாறு நிறுத்தவில்லையோ, அவ்வாறே ஒவ்வொரு புத்தகமும் முடிவுற்றாலும் நாம் படிப்பதை ஒருக்காலும் நிறுத்துவதில்லை.

https://www.azquotes.com/author/1598-Roberto_Bolano

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.