ரொபெர்த்தோ பொலான்யோ : ஒரு படிப்புத் திட்டம்

கார்த் ரிஸ்க் ஹால்பர்க்

தமிழாக்கம்: பானுமதி ந.

கடந்த இருபது ஆண்டுகளாக, பொலான்யோவை எழுத்துலகம் பல்வேறு வகைகளில் ஆராய்ந்து வியக்கிறது. உள்ளடக்கத்தால் பல லாடின் அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து பிரிந்துபோய்த் தனி வகையான இலக்கியம் படைத்த பொலான்யோ, அதேநேரம் லாடின் அமெரிக்க இலக்கியத்தின் நீண்ட பாரம்பரியத்தை நன்கு அறிந்திருந்ததோடு, அதை ஒட்டியே தன் இயக்கத்தை அமைத்திருக்கிறார். இப்படி ஒட்டியும், விலகியும் இயங்கும் அவரது எழுத்து முறையே சமீப காலத்தில் இவர்மீது எழுந்துள்ள  பெரும் ஆர்வத்துக்குக் காரணமாகவும் இருக்கலாம்.

21ஆம் நூற்றாண்டின் புதுத் தலைமுறைகள் இருபதாம் நூற்றாண்டு இலக்கியப் பாரம்பரியத்தின் நீட்சியாகவே தெரிந்தாலும், அதைப் பின்னே விட்டுச்செல்லவும் விரும்புவர் இல்லையா? இந்த ஒட்டி ஒழுகுதலும், விட்டு விலகலும் என்ற இருதலைக் கொள்ளி நிலையை சாதாரண எதார்த்தமாகக் கொண்டுவிட்டவர்கள் 2000த்துக்குப் பிறகு வயதுக்கு வந்த தலைமுறையினர்.

பள்ளிகள், கல்லூரிகள் வழியே நீட்சியான ஓர் உலகில் நுழைவுக்கு வழி தேடியவர்கள், திடீரென அவை மூடப்பட்டு, மறுபடி வீட்டில்தான் சிறைவாசம் என்பதால், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று விக்கித்து நிற்கிறார்கள் இளைஞர்கள்.  

எப்படியும் அவர்களுக்கு வெளியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அரிது. அதே நேரம் ஏதும் இல்லாத நிலையும் நிரந்தரம் என்று தோன்றவில்லை. அது முடிந்து பழைய சகஜ நிலை வரும்போலவும் இருக்கிறது, வராது இனி என்றும் தோன்றுகிறது.

இந்த மாதிரி வியர்த்தமோ, இழுபறியோதான் வருங்காலமாகத் தோன்றும் உலகில், யாரோ சிலர் இதை எல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்தவர்கள்போல உலவுகிறார்கள். ஓரளவு சகஜமாக இதையெல்லாம் ‘நார்மலப்பா’ என்றே தோன்றும்படி  உலவிவரும் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார்கள்.

இதில் கருக்காக, செறிவாக இவற்றை எழுதியவர்களின் புத்தகங்கள் சில மட்டுமே. மாறாக, ஏராளமாக அதிபுனைவுகளில், அறிவியல் (!!) நவீனங்களில் ஒழுங்கழிந்து தறுதலை வாழ்வே நிலவப்போகிற வருங்கால உலகைக்காட்டி அச்சுறுத்தி, அவற்றின் நடுவே மறுபடி மறுபடி சாகச நாயகர்களையே கதையை நகர்த்துவோராகவும் காட்டும் புத்தகங்களே அதிகம்.

வளமான பொன்னுலகைக் காட்டும் அதிபுனைவாகவும் இல்லாமல், நசிவே எதிர்காலமெனக் காட்டும் அதிபுனைவாகவும் இல்லாமல், எதார்த்தமே அச்சுறுத்துவதாக உள்ளதெனக் காட்டும் புனைவைச் செய்யும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அதையும் மொழிவளம், கருவை அமைக்கும் சாதுரியம், புதிர்களால் வாசகரைச் சுற்றிப் புதர்களை, பாதையழிந்த சொற்கானகத்தைப் படைத்து அலையவிடும் சிலர் இருக்கிறார்கள்.  பொலான்யோ அப்படிப்பட்ட ஒருவர்.

இவருடைய இலக்கியம் அதன்  மொழி வளத்தால் ஈர்த்தாலும், மையமாக இதன் விளையாட்டுத்தனமும், துயரங்களில்  ஆழத் துய்ப்புகளும், அதில் நெடுகக் காணப்படும் வன்மையும், அதிலிருந்து விலகிநின்று நோக்குகையில் தென்படும் மென்மையும்,  படிப்பவரை  எதார்த்தத்தில் காலூன்றச் செய்த வண்ணம், வேறெங்கோ ஓர் அசாதாரண உலகுக்கு எடுத்துச் செல்கின்றன.

இவரின் நாவல்கள், சிறுகதைகள் பற்றிக் கார்த் ரிஸ்க் ஹால்பர்க் (Garth Risk Halberg) எழுதியுள்ள ஒரு காத்திரமான கட்டுரை, பொலான்யோவைச் சரியாக அறிமுகப்படுத்துகிறது.[1]


பொலான்யோவைப் படிக்க ஒரு திட்டம்

“குறிப்பிட்ட இடைவெளிகளில் வரும் இதழ்களைப்போல, பொலான்யோவின் படைப்புகள், அமெரிக்கப் புத்தகக் கடைகளில் இந்த வருடமும் வந்துகொண்டிருக்கின்றன. 2008-ல் எழும்பிய இவரது அலை, ஒரளவிற்கு மிதப்பட்டும்கூட, இவரது படைப்புகள் காணக்கிடைப்பது சிந்திக்க வைப்பதே. இவரை உயர்த்திக் கொண்டாடும்  மும்முரங்களை நாம் கடந்திருக்கக்கூடும் – இவருடைய  சொந்த அட்டவணையில் தீவிர ஒருமித்தக் கருத்துக்களை நாம் தேடியிருக்கக்கூடும். ஜனவரியில், விமர்சகர்கள், இவருடைய ‘மான்ஸியூர் பான்’ (வாழ்வின் கபடத்தனமான மர்மங்களை இரசவாத எழுத்தாக்கிய அபாரமான நூல் இது) பற்றி  அடிப்படைக் கருத்துக்களைக்கூட வெளியிடத் தயங்கியதாகத் தோன்றியது. ‘த ரிடர்ன்’ பற்றிக் குளிர் பருவத்தில் தீர்மானமான, கலவையான கருத்துகள் வந்தன. (இடையில் நம்முடைய எமிலி செயின்ட் ஜான் மான்டெலைத் தவிர யாருக்கும் ‘ஆண்ட்வெர்ப்பை என்ன செய்வது’ என்று தெரியவில்லை.) எனவே, பொலான்யோவின் எழுத்துக்களை அறிய விரும்புவர் எதை முதலில் தேர்ந்தெடுப்பது?[2]

இந்தக் கேள்விக்காக, எங்களுடைய பொலான்யோவின் நூல்களின் முதல் பட்டியல் மூலம் பதிலளிக்கப் பார்த்தோம். ஆர்வமுள்ள ரசிகர்களுக்கும், புதுப் படிப்பாளிகளுக்கும் வழிகாட்டும் விதத்தில் நாங்கள் கீழ்க்கண்டவாறு இவரது மிகச் சமீபத்திய நாவல்கள் இரண்டையும், பதிமூன்று சிறுகதைகள் அடங்கிய ‘த ரிடர்ன்’ தொகுப்பையும் விமர்சன அறிமுகமாகப் புதுப்பித்தோம். ‘த இன்சஃபரபில் கௌசோ’ விரைவில் சேர்க்கப்படும்; தீவிர ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தால் மட்டுமன்று, இவர் கடந்த பத்தாண்டுகளின் மிக முக்கிய எழுத்தாளர் என்பதாலும்தான். இந்தப் பட்டியலோடு, இன்னமும் வெளியாக வேண்டிய ‘கட்டுரைத் தொகுப்பு, கவிதைப் புத்தகம், ‘த சாரோஸ் ஆஃப் ரியல் போலீஸ்மேன்’ (2666-ன் ஆறாவது பகுதி என்றும் அறியப்படுகிறது) ஆகியவற்றையும் நாம் முன்னதாகவே அறிமுகம் செய்வோம்.

புதுப்பிக்கப்பட்டது[3].

கீழே உள்ள பட்டியலில் பல, முதல் பட்டியலில் இருந்ததிலிருந்து மேம்படுத்தப்பட்டவை.

1 “டான்ஸ் கார்ட்” மற்றும் சென்சினி”- லாஸ்ட் ஈவ்னிங்ஸ் ஆன் எர்த் நூலிலிருந்துமற்றும் டிடெக்டிவ்ஸ்(1997-2001), த ரிடர்ன் நூலிலிருந்து.

இவை மூன்றுமே இவருடைய தனிப்பட்ட புராண உருவாக்கங்களின் உயிரோட்டத்தைக் கொண்டு இவர் சமைத்த ஆக்கங்கள் எனச் சொல்லலாம். முதலாவது, இளம் தலைமுறை எழுத்தாளர்களின்மீது லத்தீன் அமெரிக்காவின், குறிப்பாக 1960,1970-களில், சிலேயன் அரசியல் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பேசுகிறது.

இரண்டாவது சிறுகதை, பல வருடங்களுக்குப் பிறகு கலை மற்றும் நாட்டைவிட்டு வெளியேறி வாழும் ‘பொலான்யோ’வைப் போன்ற கதைசொல்லியைக் கொண்டிருக்கிறது. மூன்றாவது கதை, பினோஷேயின் சிறைச்சாலை அமைப்பில்  “ஆர்தூரோ பொலானோ” (Arturo Belano)-வின் சுருக்கமான அனுபவங்களை நுணுக்கமாக நோக்குகிறது.[4]

2. அமெரிக்காவில் நாஜி இலக்கியம் (1996)

இவரது இந்தத் தொடக்கக் காலப் படைப்பு, புனைவு எழுத்தாளர்களின் பட்டியல் போன்ற இந்த நாவல், பொலான்யோவின் அபிலாஷை எத்தனை பெரியது என்று நமக்கு முதல் முறையாகக் காட்டுகிறது. இவருக்கே உரிய விநோதமான நகைச்சுவைக்கு இது ஒரு பிரமாதமான அறிமுகத்தைக் கொடுக்கிறது. அந்த நகையுணர்வோடு அபத்தத்தையும், உணர்ச்சியை வெளிக்காட்டாத அமுக்கத்தையும்  கலந்து, எது என்ன என்பது புரியாமல் மயங்க வைக்கும் முறையில் எழுதப்பட்டுள்ளது. எனக்குப் பிடித்தமானது.

3. டிஸ்டன்ட் ஸ்டார் (1996)

பிரசுரிக்கப்பட்டபோது, அதுவரை வெளியான இவரது படைப்புகளில் தவிர்க்கக்கூடாத ஒரு நூலாக இது அமைந்தது. நாஜி இலக்கியம் புத்தகத்தில் ஓர் அத்தியாயத்தின் விரிவாக்கமாக, அவருடைய பிரதான ஈடுபாடுகளான கவிதையும், துப்பறிவாளர் கதைகளும் இதில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இது இன்னோர் அபிமானப் புத்தகம்.

4. “லாஸ்ட் ஈவினிங்ஸ் ஆன் எர்த்” மற்றும் “தி க்ரப்”(இதுவும் லாஸ்ட் ஈவ்னிங்ஸ் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது [1997-2001])

’ஆர்தூரோ’வின் இளம்பிராயம் பற்றிய கதைகள் என ஊகிக்கிறேன். முதல் கதை, பொலான்யோவின் பார்வையில் அபூர்வமாகவே காணப்படும் தந்தைமையைப் பற்றியது; இரண்டாவது கதை, கபோர்கா கத்தியையும், வில்லிவிஷோசா என்ற கொலையாளர்களின் நகரத்தையும் பற்றிப் பேசுகிறது. இவர் பிற்பாடு எழுதியவற்றிலும் இவை இடம்பெறுகின்றன.

5. ஆண்ட் வெர்ப் (1980 முதல் 2002)

‘ந்யு டைரெக்‌ஷன்ஸ்’ பிரசுர நிறுவனம்,  90 பக்கங்களுள்ள இந்தக் குறுநாவலை கடின அட்டையோடு வெளியிட முடிவுசெய்தபோது, முதலில் எனக்குச் சந்தேகம்தான் வந்தது. ஆனால், இது போட்ட முதலுக்கு நிறையவே திரும்பக் கொடுக்கிறது.

வெட்டும் விளிம்பெனக் கருதப்படவேண்டிய கொண்டாட்டமான இப்படைப்பு, மொழித் திண்மையுடன் பொலான்யோ எழுதிய அழகிய  படைப்புகளில் இடம்பெறும் தகுதி வாய்ந்தது. முதல் பார்வையில் பகடை உருட்டலால் தொகுக்கப்பட்ட வசன கவிதைகளைத் தரும் இது, பாதி ‘நிகனோர் பார்ற’, பாதி ‘டேவிட் லிஞ்ச்’ எனத் தோன்றுகிறது; ஆனால், விரைவிலேயே குவாண்டக் கொலை மர்மமென வடிவம் பெறவும், நாம் குற்றம் செய்பவர்களையும், குற்றத்தையும் அடையாளம் காண முயற்சிக்கிறோம். கவிதையையும், களேபரத்தையும்  குமுக்கிப் பொருத்துவதில், இது ஒரு கச்சிதமான முன் தயாரிப்பாகத் தெரிகிறது. அது (அடுத்த புத்தகமான)…

6. த சாவேஜ் டிடெக்டிவ்ஸ் (1999)

இதைப் பற்றிச் சொல்ல இன்னுமென்ன இருக்கிறது? நீங்கள் இதை ஒருமுறை படித்தீர்களானால், இவர் எழுதிய அனைத்தையும் படிக்க ஆர்வம் கொள்வீர்கள். (எங்கள் விமர்சனத்தைப் பாருங்கள்.)

7. “ஃபோட்டோஸ்” (த ரிடர்ன் நூலிலிருந்து) (1999)

‘சாவேஜ் டிடெக்டிவ்ஸ்’சிற்கு உணர்ச்சிகரமான முத்தாய்ப்பாக அமைந்த கதை. கதையில், வழக்கம்போல ‘ஆர்தூரோ பெலானோ’ நாட்டைவிட்டு ஓடி அயல் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

8 “த ரொமேன்டிக் டாக்ஸ்” (1980-1998)

‘த சாவேஜ் டிடெக்டிவ்ஸ்’ படித்தபிறகு கவிதைகளைப் பற்றி இத்தனை அலட்டல்கள் ஏன் என நீங்கள் நினைக்கலாம். இவரது தனிப்பட்ட புராணப் புரிதல்கள் சூசகமாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் இதில், தானியமும், தவிடும் கலந்திருப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்ளக்கூடும். சொல் முறை, கதாபாத்திர குணச் சித்திரங்கள், கனவான தரிசனம் ஆகிய இவரது திறன்கள் – நாவலாசிரியராக இவருக்குள்ள அதே திறமை, கவிதையிலும் கிட்டும் என்று தெரிந்து கொள்கிறோம்.

9.“ஹென்றி சைமன் லெ ப்ரின்ஸ்”, “எ லிட்ரரி அட்வெஞ்சர்”, “என் மோர்ஸ் லைஃப்”, (2001); ஃபோன் கால்ஸ்”, “வாகபான்ட் இன் ஃப்ரான்ஸ் அன்ட் பெல்ஜியம்”, “டேய்ஸ் ஆஃப் 1978 [1997] (லாஸ்ட் ஈவினிங்க்ஸ் ஆன் எர்த் தொகுப்பிலிருந்து), “மீட்டிங் வித் என்ட்ரிகே லின்” (த ரிடர்ன் தொகுப்பிலிருந்து) [2001]

இதில் முதல் மூன்று சிறுகதைகள்,  ‘நாஜி இலக்கிய’த்திலிருந்து சில சிறிய மாறுபாடுகளுடன் எழுதப்பட்டுள்ளன. அடுத்த மூன்றிலும், ஒரு கதைசொல்லி – இவரே  ஒவ்வோர் அவதாரத்திலும் – கதாநாயகராகவோ, மரித்த பிறகு புத்துயிர் பெற்று மீண்டவராகவோ வருகிறார். இது இவரது பல ஆக்கங்களிலும் இடம்பெற்று நம்மை வேட்டையாடுகிறது. கிட்டத்தட்ட ‘சென்சினி’க்கான ஓர் உலர் ஓட்டம்போல,  மூன்றாவதில் இலக்கியக் கனவு தென்படுகிறது.

10. “செல் மேட்ஸ்மற்றும் க்ளாரா” (த ரிடர்ன் தொகுப்பு) [1997]

பொலான்யோவின் நேரடியான, அணுகத்தக்க, அன்பைப் பற்றிய இரு கதைகள் இவை. ஆனாலும், மர்மமான வேதனைகள் இடம் பெற்றுள்ளன.

11 “த ஸ்கேடிங் ரிங்” (1993)

நான் வ்யாட் மேசனிடமிருந்து பணிவுடன் மாறுபடுகிறேன். இது இவரது பெரும் படைப்பன்று; முதலில் வெளியிடப்பட்ட நூல்களில் ஒன்றான இது, (எழுத்துத்) தொழில் திறனில் சிறந்தது. இது பிராந்திய அளவிலான போட்டியில், (பொலான்யோ இவ்வகைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் ) இவ்வளவு படித்த பிறகு, அது போன்ற விவரங்கள் உங்களுக்கு ஆர்வத்தைக் கொண்டு வந்திருக்கலாம்.

12. “ஜோஆனா சில்வெஸ்ட்ரி”, “ஸ்னோ”, “பூபா” (ரிடர்ன் தொகுப்பிலிருந்து) [1997-2001]

இந்த மும்மணிகளும், ‘த ரிடர்ன்’னின் இதயம் எனச் சொல்வேன். முன்னர் ஆங்கிலத்தில் வெளியான இவரது படைப்புகள், எழுத்தாளரின் புனைவுக் கண்ணாடி பிம்பத்தைச் சுற்றி அமைந்திருந்தது. ஆனால், மேலே சொல்லியிருக்கிற மூன்றும் முறையே வணிகப் பாலுறவுப் பட நட்சத்திரம், குண்டர், கால்பந்து வீரர் ஆகியோரை மையமாகக்கொண்டு, இவரது புறவயப் பார்வையில் கிட்டும் அற்புதமான விளைவுகளைக் கொடுக்கின்றன.

13. “கோமெஸ் பலாசியோ”, “மா(வ்)ரிசியோ”, “த ஐ’ சில்வா”, “டென்டிஸ்ட்” (லாஸ்ட் ஈவினிங்க்ஸ் ஆன் எர்த் தொகுப்பிலிருந்து) [1997-2001]

எழுதும் நுட்பங்கள் எக்கேடும் கெடட்டும்; இங்கே இவரது மறுபக்கம் நம்மை ஆட்கொள்கிறது. செய்முறையால் இவை படைக்கப்பட்டவை என்பதைவிட, சொப்பனத்தால் உருவாக்கப்பட்டவை என்று சொல்லலாம். கடைசி இரண்டின் மருள் பிரமைகளின் அடர்த்தி, 2666க்கான சரியான முன் தயாரிப்பு எனலாம்.

14. ஆம்யூலெட் (1999)

த சாவேஜ் டிடெக்டிவ்ஸில் உள்ள ஒரு சம்பவம் விரிவாக்கப்பட்ட குறுநாவலான இதுவும் அப்படி ஒரு முன்னோட்டம்தான். ஆனால் இது ‘டிஸ்டன்ட் ஸ்டார்’ போன்ற வெற்றிகரமான ஒன்றன்று; என்றாலும், இந்நேரம் நீங்கள் அதையெல்லாம் மன்னிக்கத் தயாராக இருக்கிறீர்கள் அல்லவா? ‘அர்தூரோ பெலானோ’, இதில் அதிகமாக இடம்பெற்றுள்ளார். கதாநாயகி ஆக்ஸீலியோ லாகூடர், 2666-ன் ‘ஃப்ளோரிடா அல்மாடா’வின் ஒரு கோட்டுருவாக – இதைப் பற்றியும்  ஆக்ஸிலியோவுக்கு (சிசாரியா டினஹேர்லுவைப் [Cesarea Tinajero] போல) அருள்தரிசனங்கள் கிட்டுகின்றன; என்ன, மயக்கம் வருகிறதா?

15. என்ரிகே மார்டின் (லாஸ்ட் ஈவினிங்ஸ் தொகுப்பிலிருந்து) [2001]

பொலான்யோவின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு அல்லது மூன்று கதைகளில் இதுவும் ஒன்று. என்ரிகே, ஆக்ஸிலியோ மற்றும் சிசாரியாவிடமிருந்து எண்கணித மயக்கத்தைப் பெற்றிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

16. 2666 (2004)

இதை சூபர் நோவா என்றே சொல்வேன். இதை வழிபடுகிறேன். (இதைப் பற்றிய என் குறிப்பைப் பாருங்கள்.)

17. மான்ஸியூர் பான் (1981-1982)

மீண்டும் நாளிதழ்களின் விமர்சனத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இவரது படைப்புகளில் சிறிதும் முக்கியத்துவம் அற்ற ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது. இது தெளிவாகவே ஒரு தொடக்க காலப் படைப்பு; ஆந்த்வெர்ப்பைப்போல் அக்னி ஜ்வாலை வீசவில்லை. அமைப்பைப் பொருத்தவரையில் இவரது அருமையான சிறு நாவல்களை ஒத்திருந்தாலும், வழமையான, இவரது புனைவுகளிலிருக்கும் மர்ம உணர்வை இதில் காண முடியவில்லை. இந்தக் கட்டத்தில், நீங்கள் இதை அனுசரித்துப்போக ஒப்புக்கொள்வீர்கள்.

18. “வில்லியம் பர்ன்ஸ்”, “மர்டரிங் வோர்ஸ்” (த ரிடர்ன் தொகுப்பிலிருந்து) [1997-2001]

தேவையில்லாதவை; எனக்கு, இவை இரண்டும் அவ்வளவு உவப்பானவை அல்ல.

19. “ப்ரிஃபிகரேஷன் ஆஃப் லாலோ கூரா” (த ரிடர்ன் தொகுப்பிலிருந்து) [2001]

துடிப்பான அபாயகரத்தோடு, வணிகப் பாலுறவுக் காட்சித் தொழிலை காட்சிப்படுத்திய விதத்தினால், “ஜோஆனா சில்வெஸ்ட்ரி” போலத் திடமான ஒன்றாக இதை எடுத்துக் கொள்ளலாம். 2666 –ல் நாம் சந்தித்த அதே பெயர் கொண்ட அந்தக் கதாபாத்திரம்போல, இந்த  லாலோ கூரா இல்லை – குறைந்தபட்சம் பெற்றோர்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. அதனால்தான், இது முன்வரைவு என்று பெயர் பெற்றதா?

20. “பை நைட் இன் சிலி” (2000)

பின்னர் வெளியாகிய இவரது இந்தச் சிறிய நாவலைச் சிலர் பொலான்யோவின் நாவல்களில் மிகச் சிறப்பானதென்று சொல்கிறார்கள். நான் அவர்களுடன் ஒத்துப் போகாவிடினும், இனிப்பை விருந்தின் முடிவில்  வைத்துக் கொள்ளலாமல்லவா? பொலான்யோவின் மற்ற நூல்களை ஒப்பிடுகையில், இதில் மட்டும் மற்ற ஆக்கங்களுடன் தொடர்பு குறைவாக இருப்பதால், இதிலிருந்து தொடங்கவும், முடிக்கவும் சரியான நூலாக இது இருக்கலாம்.

21.த ரிடர்ன் [ த ரிடர்ன் தொகுப்பிலிருந்து) [2001]

ஒரே சமயத்தில் புரட்சிகரமானதும், ஆற்றுப்படுத்துவதுமான இந்தக் கதை, இன்று இவர் உயிரோடு இருந்தால் எந்த நிலைக்குச் சென்றிருப்பார் என எனக்கு ஒரு சிந்தனையைக் கொடுத்தது – இதன் பொருள், இவர் எல்லா இடங்களிலும் பரவியிருப்பார் என்பதா….

ரொபெர்த்தோ பொலான்யோ  நம்மை மூழ்கச் செய்யும் எழுத்தாளர். வாழ்க்கையின் அபத்தங்களை, கபடங்களை நகைச்சுவையுடன் (கொஞ்சம் அவல நகைச்சுவை) காட்டியவர். அவரை ஒரு நிகழ்வெனச் சொல்பவர்கள் உள்ளனர். மொழித் திண்மையால், கதை சொல்லும் விதத்தில் காட்டிய மாறுதல்களால், மர்மமென ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குப் பயணிக்கும் ஆற்றலால் அவரை இன்றளவும் கொண்டாடுகிறார்கள்.


[1] Garth Risk Halberg, இந்தக் கட்டுரையை இங்கிலிஷில் எழுதியவர். “Where to start Reading – Publisher’s note – The Bolano Syllabus” என்பது இதன் தலைப்பு. இவர்  ‘City on Fire’ என்ற நாவலையும், ’A Field Guide to the North American Family’ என்ற நூலையும் எழுதியுள்ளார். 2017 ஆம் வருடம், பிரகாசமான எதிர்காலம் உள்ள இளம் நாவலாசிரியர்களில் ஒருவராக க்ராண்டா பத்திரிகையால் அடையாளம் காணப்பட்டவர்.

இக்கட்டுரை, ’த மிலியன்ஸ்’ வலைப் பத்திரிகையில் நவம்பர் 15, 2010 அன்று வெளியானது.

பொலான்யோ பற்றி இவரே எழுதிய இன்னொரு கட்டுரையை இங்கே காணலாம்:  https://themillions.com/2009/11/the-bolano-myth-and-the-backlash-cycle.html

[2] இந்தப் பத்தியில் வரும் பெயர்கள் வரிசையில் –

Monsieru Pain , The return, Emily St.John Mandel, Antwerp.

ஆண்ட்வெர்ப், மான்சூர் பான் ஆகியன பொலான்யோவின் நாவல்கள். த ரிடர்ன் ஒரு சிறுகதைத் தொகுப்பு.

மாண்டெல் ஒரு கனேடிய நாவலாசிரியர், விமர்சகர்.

[3] இந்தப் பத்தியில் வரும் பெயர்கள் இங்கிலிஷில்: The Insufferable Gaucho, The Sorrows of the Real Policeman. (அல்லது Sixth Part of 2666.)

[4] Dance Card, Sensini (From Last Evenings on Earth) and Detectives (from The Return).

இனி வருவன, அடுத்தடுத்த புத்தக அறிமுகக் குறிப்பிலிருந்து கிட்டும் பெயர்களின் இங்கிலிஷ் பெயர்கள். இவை தோன்றும் வரிசைப்படி இங்கு கொடுக்கப்படுகின்றன.

 • Nazi Literature in the Americas (1996)
 • Distant Star (1996)
 • Last Evenings On Earth (1997-2001)
 • The Grub
 • The Caborca Knife and Villaviciosa, the town.
 • Antwerp (1980s-2002)
 • Nicanor Parra, David Lynch
 • The Savage Detective (1999)
 • The Romantic Dogs (1980-1998)
 • Henri Simon LePrince
 • A Literary Adventure
 • Anna Moore’s Life
 • Phone calls
 • Vagabond in France and Belgium
 • Days of 1978 1997  from Last Evenings on Earth
 • Meeting with Enrique Lihn (from The Return) [2001]
 • Cell Mates and Clara (From The Return) 1997
 • The Skating Rink [1993]
 • Wyatt Mason
 • Joanna Silvestri, Snow, Buba (from The Return) [1997-2001]
 • Gomez Palacio, Maruricio ‘the Eye’ Silva, Dentist (From The last Evenings….) [1997-2001].
 • Amulet [1999]
 • Arturo Belano, Auxilio Lacoutre, Florita Almada, Cesarea Tinajero.
 • Enrique Martin (from last evenings…) [2001].
 • Monsieur Pain [1981-1982].
 • William Burns, Murdering Whores (from The return) [1997-2001].
 • Prefiguration of Lalo Cura (from The Return) [2001].
 • By Night in Chile [2000].
 • The Return [2001].

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.