
1. அன்றாடப் பணி
காரண காரியம் உருப்பெருவதன் வழி ஒரு சாய்சதுரம் அசைவது போல் நிகழ்கிறது, என் அன்றாடப் பணி அற்புதமான ஒரு சூரிய அஸ்மதனதிற்கு எதிரே துப்பறிவாளனைப் போன்ற துணிகரமான பார்வை. இனி நிகழப்போகும், என்னால் காணமுடியாத ஓர் இனிய நாளின்மீது உடனடியாக எழுதப்படும் வேகமாக வரிகள் கற்பனையின் சுழல்பாதையின் வழி வெளியேறிச் செல்ல பாலங்கள் இல்லை இணைப்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. உறங்கிக் கொண்டிருக்கும் சிறுமியின் கனவில் வரும் பாடல் போல சிறுபிள்ளைத்தனமானது, ஆனால் அதன் கட்புலனாகாத கவசத்தின் பாதுகாப்பு கொண்டது. எதிர்காலத்தில் என் இருளை, என்றென்றைக்குமான வெற்றியாக ஆக்கிவிடும் என் கவிதை. அப்போது ஒரு பெயராக மட்டுமே இருப்பேன். பழைய மற்றும் புதிய கண்டங்களின் இறைச்சிக் கூடங்களில் பணியாற்றி கையில் காசில்லாமல் அலைந்து திரிந்தவனாக அல்ல. 26ம் வயதுவரை என் ஆண்டுகளின் ஆசீர்வாதம், சந்தித்த உண்மையான பெண்களின் நினைவுகள். அவற்றின் அஞ்சலியாக இயற்றும் பாடல்களில் நான் அடைய நினைப்பது நினைவுகளுக்கு நீண்ட ஆயுளை அல்ல, நம்பகத்தின் உண்மையை.

2. மரங்கள்
நான் எழுதும்போது
அமைதியாக என்னை
அவதானிக்கின்றன
மரங்கள்.
அவற்றின் மேற்கவிகையில்,
நிறைந்த பறவைகள், பாம்புகள்
எலிகள், புழுக்கள்.
என் தலை முழுக்க
திட்டங்களும்
பயங்களும்
எதிர்நோக்கியுள்ள
புல்வெளியை
எண்ணி.

3. இருபது வருடங்களின் சுய வரைபடம்
நான் புறப்பட்டுச் சென்றேன் அணிவகுப்பில் சேர்ந்து கொண்டேன், அது எங்கு கொண்டு செல்லும் என்றறியாமல், பயத்தினால் நிறைந்தேன் இரைப்பை கீழிறங்கியது தலைக்குள் இரைச்சல் அது இறந்தவர்களின் சில்லிட்ட காற்றா தெரியவில்லை. நான் கிளம்பி விட்டேன் அவ்வளவு விரைவில் விட்டுச்செல்வது அவமானம் என நினைத்தேன். அதே சமயம் நான் கேட்டதோ மர்மமான நம்பக்கூடிய ஓர் அழைப்பு. செவிசாய்க்கலாம், அல்லது புறக்கணிக்கலாம் அவ்வளவுதான். நான் கேட்டேன் ஏறக்குறைய கதறிவிட்டேன் காற்றிலும் கடலிலும் பிறந்த மோசமான ஒரு கேவல். ஒரு வாள் மற்றும் கேடயம் அச்சத்தையும் மீறி புறப்பட்டேன் என் கன்னத்தை மரணத்தின் கன்னத்துடன் இணை வைத்து. எனக்கும் உடனே நடந்துவிட்ட ஒரு யதார்த்தம் என்றாலும், இமைகளை மூடியபடி அந்த விசித்திரமான அதிசயத்தை காணாமல் இருப்பது இயலாத ஒன்று. தன் கன்னத்தை மரணத்தின் கன்னத்துடன் உரசியபடி, என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள். குழந்தை முகத்துடனோ தாடியுடனோ சென்றாலும் அனைவரும் இலத்தீன் அமெரிக்கர்கள்.

4. லிசாவின் நினைவு
இறங்கி வருகிறது மீண்டும் லிசாவின் நினைவு இரவின் துளை வழியாக. ஒரு கயிறு ஒரு ஒளியின் கற்றை இதோ இருக்கிறது: மெஹிகோவின் கனவுக் கிராமம். காட்டுமிராண்டித் தனங்களுக்கு இடையில் லிசாவின் உறைந்த சித்திரம் லிசாவின் புன்னகை. ஒழுங்கற்று சிதறிக்கிடக்கும் இந்த அறையில், லிசாவின் கதவு திறந்த குளிர்சாதனப் பெட்டி சிறிய ஒளியை சிதற வேண்டி, நாற்பதை நெருங்கிவிட்ட ரொபெர்டோ பொலான்யோவாகிய நான் மெஹிகோவின் மெஹிகோ நரகத்தை தொடர்புகொள்ள ஒரு கட்டணத் தொலைபேசியை தேடுகிறேன். குழப்பம் மற்றும் அழகுகளுக்கு இடையே தன் ஒரே ஒரு உண்மையான காதலை அழைக்க.
5. லிசா கூறியபோது
வேறு ஒருவனுடன் உறவு கொண்டாள் என லிசா என்னிடம் கூறியபோது டெபியாக் கிடங்கின் அந்த பழைய தொலைபேசி சாவடியில் நான் செத்துவிட்டேன் என நினைத்தேன். உயரமாக ஒல்லியாக நீண்ட முடியுடன் நீண்ட ஆண்குறி கொண்டவன், அவளை ஆழமாக ஊடுருவ இன்னொரு சந்திப்பிற்கு காத்திருக்காத ஒருவன். முக்கியமாகச் சொல்ல எதுவும் இல்லை ஆனால் என் வாழ்க்கையிலிருந்து உன்னை வெளியேற்றுவதற்கான சிறந்த வழி அதுதான் என்றாள். பார்மனடீஸ் கார்சியா நீண்ட கூந்தல் உடையவன். லிசாவின் காதலனாக இருக்கலாம் ஆனால் சில ஆண்டுகள் கழித்து மனநல மருத்துவமனையில் இறந்தான், அல்லது தற்கொலை செய்துகொண்டான் என்று கண்டுபிடித்தேன். மென் மேலும் தோத்தாங்குளிகளுடன் உறவுகொள்ள லிசா விரும்பவில்லை. சில சமயம் என் கனவில் வருகிறாள் மகிழ்ச்சியாக, நிதானமாக காதலின் பயணத்தின் முடிவின்மைக்குள் பயணிப்பவளாக. கார்சியாவுக்கு பிடித்தமான அடைக்கப்பட்ட சூடு என்ற பாடலைக் கேட்டோம் பிறகு மூன்று முறைகள் உறவு கொண்டோம். முதல் முறை என்னுள் இரண்டாம் முறை வாயில். மூன்றாம் முறை என் மார்புகளின் மீது ஒன்றுமில்லாமல், மார்புகளுக்கு இடையே மீன் சென்ற தடம் போல. மெல்லிய நீர் ஒழுக்கு. இவை அனைத்தும் இரண்டு மணி நேரத்துக்குள் என்றாள் லிசா. என் வாழ்க்கையின் கொடூரமான இரண்டு மணி நேரம் என்றேன் நான் தொலைபேசியின் மறுமுனையில்.
6. உனக்கான என்னுடைய பரிசு
உனக்கான என்னுடைய பரிசு ஒரு படுகுழி என்றாள் லிசா. ஆனால் நுட்பமானது என்னையும் மெஹிகோவையும் பிரிந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் உனக்கு தெரியவரும். எப்போது தீவிரமாக தேவைப்படுகிறதோ அப்போது அதிமாகக் கிடைக்கும். மகிழ்ச்சியான ஒரு முடிவாக இருக்காது. ஆனால் உடனடியான வெறுமையும் ஆறுதலுமாக இருக்கும். ஒருவேளை அப்போது நீ என்னை நினைவு கூறலாம் சிறிதளவாவது.
(லாரா ஹீலியின் ஆங்கில வடிவத்திலிருந்து)
தமிழில்: வேணு தயாநிதி
தொடர்புள்ள பதிவு: உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – ரொபெர்த்தோ பொலான்யோவின் கவிதைகள்
2 Replies to “ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்”