ரொபெர்த்தோ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள்

நான் நன்றாக, ஆழமாக தூங்கினேன்; கனவு கண்டிருந்தேன் என்றால், என் கனவுகளை மறந்து விடும் மனப் பக்குவமும் எனக்கிருந்தது. தாமதமாக எழுந்தேன்- இது ஒரு பழக்கமாக ஆரம்பித்திருக்கிறது-, குளித்து முடித்தபின் டிபன் சாப்பிட ராவூலின் கபேக்குப் போனேன்.

காத்திருக்கும் நேரத்தில், யாரோ டேபிளில் விட்டுப் போயிருந்த காலை தினசரியை எடுத்துப் பார்த்தேன்- இன்னதென்று தெரியாத ஒன்றை நிதானமாய்த் தேடி என் கண்கள் தலைப்புச் செய்தியில் ஆரம்பித்து பக்கம் நிரப்ப அச்சிடப்பட்ட செய்திகள், பின்னர் புகைப்படங்கள் என்று திரிந்தன.

நான பார்க்க வாட்டமாக இருந்திருக்க வேண்டும், ஏனென்றால், பாருக்குப் பின்னாலிருந்து ராவூல் கேட்டான்:

“கெட்ட செய்தியா?”

ஸ்பெயினில் நடக்கும் யுத்தம் பற்றி புதுச் செய்திகள்: குண்டு வீச்சு விமான ஓட்டங்கள், ஷெல்லடிப்பது, மகா யுத்தத்தில் நாம் அறிந்திருக்காத புதிய ஆயுதங்கள்.

“நாசமாய்ப் போன ஜெர்மானியர்கள் தங்களிடம் இருக்கிற ஆயுதங்களை எல்லாம் போர்க்களத்தில் பயன்படுத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றான் ராவூல்.

“உளறல், அவர்களிடம் ஸ்பெஷலாக எதுவுமில்லை,” என்று அடர்ந்த பிரவுன் ஓவரால்கள் போட்டுக் கொண்டிருந்த மெக்கானிக் ஒருவன் சொன்னான். பாரின் மீது சாய்ந்தபடியே அவன் தன் கிளாஸில் இருந்த வைனைக் குடித்துக் கொண்டிருந்தான்.

“அப்படியானால் தாழப் பாய்ந்து வந்து குண்டு வீசுகிறார்களே, அதில் ஸ்பெஷலாக ஒன்றுமில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய், இல்லையா, ராபர்ட்? ஸ்டூகாக்கள்!” என்று பதிலளித்தான் ராவூல். அவனுக்கு ராணுவ தொழில்நுட்பம் பற்றி மிக நன்றாகத் தெரிந்திருந்தது. “ஒற்றை என்ஜின், இரட்டை இருக்கை விமானங்கள், மூன்று இயந்திரத் துப்பாக்கிகள், அவை ஆயிரம் கிலோக்களுக்கு மேல் குண்டுகள் எடுத்துச் செல்ல முடியும்!”

“நீ பேசுவதைப் பார்த்தால் அவற்றுக்கு கோயில் கட்டி கும்பிடுகிறாய் போலிருக்கிறது.”

“நிச்சயம் கிடையாது! இல்லவே இல்லை…! ஆனால் நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்…”

“சரி ராவூல் நானும் உண்மையில் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, ஆனால் நாம் இப்போது உலகின் எட்டாவது அதிசயம் பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை. மனிதர்கள்தான் முக்கியம், பெருந்திரள் மக்களின் வீரம்.”

“போர் போர்தான்,” என்று பிரகடனம் செய்தான் குருட்டுப் பையன். தன் முழங்கால்களுக்கு இடையே வெண்ணிற கோல் ஊன்றி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அவன். “நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், மெஸ்யூ பானிடம் கேட்டுப் பாருங்கள்.”

விளம்பரங்கள், விளையாட்டுச் செய்திகள், கலாச்சாரம், பொழுதுபோக்குப் பக்கங்கள், கிசுகிசு பத்திகள் நிறைந்திருந்த செய்தித்தாளிலிருந்து கண்களை எடுக்காமல், “அது சரி,” என்றேன்.

“நல்ல வேளை நான் போருக்குப் போனதில்லை.”

வாடிக்கையாளர்களில் சிலர் சிரித்தார்கள்.

“நீ ஒரு கோமாளி, ழான்-லூக், நீ கோமாளியேதான்,” என்றான் ராவூல்.

“நான் சீரியஸாகத்தான் சொல்கிறேன்,” என்று அந்தக் குருட்டுப் பையன் ஆட்சேபம் செய்தான், கொஞ்சம் விளையாட்டாய்ச் சொல்வது போல்.

“அவன் சொல்வது உண்மைதான்,” என்றேன். “அந்த வகையில் நீ அதிர்ஷ்டக்காரன்தான் ழான்-லூக். போர்க்காட்சி என்பது… தாந்தேத்தனமானது. இல்லை: பரிதாபமானது… அவலம் மிகுந்தது… பிரச்சினை என்னவென்றால், இப்போது யுத்தம் வருகிறது என்று வைத்துக் கொள், உனக்கு கண் தெரியாது என்பதால் நீ போர்க்களத்துக்குப் போவதிலிருந்து தப்பித்துக் கொள்வாய், ஆனால் யுத்தங்களுடன் சேர்ந்து வரும் மற்ற நாசங்கள் எதிலிருந்தும் உன்னால் தப்பித்துக் கொள்ள முடியாது. உன் வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், போர் அதை இன்னும் மோசமாக்கும். இதை நம் எல்லாருக்கும்தான் சொல்கிறேன், உனக்கு மட்டுமல்ல.”

“இப்போது புரிந்ததா ழான்-லூக்?”

“சரி, சரி,” என்றான் குருட்டுப் பையன். “நீங்கள் சொல்வதை நம்புகிறேன்.”

“நாளுக்கு நாள் ஆயுதங்களை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்,” என்று குறைபட்டுக் கொண்டான் ராவூல், காப்பியை என் டேபிளில் வைத்துவிட்டு, “நாமானால் சும்மா சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் செயலில் இறங்கியாக வேண்டும். நாம் உறுதியான ஒரு நிலை எடுக்க வேண்டும், கட்டுறுதியுடன் இருக்க வேண்டும்…”

“ஆனால் அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒருவர், சிறிய உருவம், தாடி வைத்திருந்தார், அவரது தலைமுடி நெட்டுக்குத்துத் தீவாய் விரைத்திருந்தது, பாரின் மறு முனையின் மறைவில் இத்தனை நேரம் இருந்தவர், கேட்டார். “உருப்படியாய் எதுவும் செய்யத் தெரியாத நம் அரசாங்கம் இருக்கிற பிரச்சினை எல்லாம் போதாது என்று இப்போது ஆயுதப் போட்டிக்கும் நம்மை இழுத்துச் சென்றாக வேண்டுமா? அடக்கடவுளே! நண்பா, ஒன்று சொல்கிறேன் கேள், ஐரோப்பாவில் இப்போது இருக்கிற நாஜிக்களே அதிகம்.”

“நான் சொல்வதைக் கேளுங்கள், நாஜிக்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் ஜெர்மானியர்கள் நம் தேசத்துக்கு அச்சுறுத்தல் என்பது எனக்குத் தெரியும், நாம் கனவு கண்டு கொண்டிருப்பதை விட்டுவிட்டு அவர்களை எதிர்த்து நேருக்கு நேர் நின்றாக வேண்டும்.”

“பிரெஞ்சு பூர்ஷ்வாக்களும் ஒரு அச்சுறுத்தல்தான்,” என்று குறுக்கிட்டான் மெக்கானிக், “பிரெஞ்சு உழைக்கும் வர்க்கத்துக்கு.”

“மெஸ்யூ பான் வேலை செய்வதில்லை,” என்றான் குருட்டுப் பையன். “நானும் வேலை செய்வதில்லை. எங்களால் வேலை செய்ய முடியாது.”

” ழான்-லூக், வாயை மூடுகிறாயா, எங்களுக்கு உதவியாக இருக்கும்,” என்று ராவூல் பொறுமையாக கேட்டுக் கொண்டான். “நம் தாய்நாட்டின் எதிர்காலம் பற்றி பெரிய மனிதர்கள் இங்கே சீரியசாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”

“ஆகா, ஆமாம், இனிய தாயகம்…” என்றான் ழான்-லூக்.

“எது எப்படியானாலும் போர் முனையில் நின்று போரிடுவது ஏழைகள், போர்ப் படைகளின் பின்னாலும் அவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள், என்ன, நான் சொல்வது சரிதானே மெஸ்யூ பான்?”

“அவ்வப்போது உயரதிகாரிகளும் கொல்லப்படுகிறார்கள், ராபர்ட்.”

உண்மையில் உயரதிகாரிகள் நிறைய பேர் இறந்து நான் பார்த்த நினைவில்லை. குண்டுகள், விஷவாயு, நோய்கள் எங்களை, பீதியில் குலை நடுங்கிய, அச்சத்தால் உறைந்த விவசாயிகள், தொழிற்சாலை ஊழியர்கள், மன மயக்கத்தில் இருந்த பெடீ பூர்ஷ்வா படையை, கொன்று குவித்தன. வேண்டாம், எனக்கு போர்களில் விருப்பமில்லை. இருபத்து ஒரு வயதில் என் நுரையீரல்கள் இரண்டும் வெர்தானில் பொசுங்கிப் போயின. என் உடலைப் பெற்றுக் கொண்ட மருத்துவர்களால் நான் எப்படி பிழைத்துக் கொண்டேன் என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மன உறுதி, என்பது என் பதிலாக இருந்தது. சாவை விடுவோம், ஏதோ மன உறுதிக்கும் உயிருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது போல். அது வெறும் அதிர்ஷ்டம்தான் என்பது எனக்கு இப்போது தெரிகிறது. அதில் ஒரு ஆறுதலும் இல்லை. சில சமயம் என்னால் மருத்துவர்களின் வெளிறிய, இயல்பான ஆனால் அரக்கத்தனமானதாக இருந்தாலும் இயல்பாக காட்சியளித்த பச்சை படிந்த முகங்களை, எந்த ஒரு விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராய் மிதந்திருந்த வலுவற்ற புன்முறுவல்களை, நினைத்துப் பார்க்க முடிகிறது. இது என் உயிர், என்று அவர்களிடம் சொன்னேன். அவர்களின் முகங்களுக்குப் பின்னால் தெரிந்த கள மருத்துவமனையின் துண்டங்களை, அவற்றுக்கு அப்பால், புயலின் முன்னறிவிப்பாய் பழுப்பு வானின் மடிப்புகளை, நினைவு வைத்திருக்கிறேன்.

அதன் பிறகு உடல்நலம் குன்றியவர்களுக்கு அளிக்கப்படும் எளிய ஓய்வூதியத்தின் துணையுடன், அது ஒரு வேளை எந்த சஞ்சலமுமில்லாமல் என்னைச் சாவை நோக்கி அனுப்பிய சமூகத்துக்கு நான் அளித்த எதிர்வினையாகவும் இருக்கலாம், ஒரு இளைஞனின் முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் நல்லது என்று கருதப்பட முடியுமோ, அது எல்லாவற்றையும் வேண்டாம் என்று விட்டுவிட்டு, மறை விஞ்ஞானம் பயில ஆரம்பித்தேன், அதாவது, அறவே நளினமற்றது என்று சொல்ல முடியாத வகையில், தீர்மானமாக, முழுமையான முறையில் நான் வறுமையில் அமிழ என்னை அனுமதித்துக் கொண்டேன். என் வாழ்வின் அக்கட்டத்தில் ஏதோ ஒரு புள்ளியில் ஃப்ரான்ஸ் மெஸ்மர் எழுதிய ‘மிருக காந்த வசியத்தின் சுருக்க வரலாறு’ வாசித்தேன், ஒரு சில வாரங்களில் மெஸ்மரிஸ்ட்டுமானேன்.

“மெஸ்மரின் ஆசிரியர் பெயர் என்ன தெரியுமா?” என்று திடீரென்று ராவூல் இடம் கேட்டேன்.

“தெரியாது,” என்றான்.

அத்தனை பெரும் மௌனமாக இருந்தார்கள், சிறிது அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“ஹெல்… மிருக காந்த வசியத்தால் நோய்களை குணமாக்க முதலில் முயற்சி செய்தவர் அவர்தான். அதுதான் அவர் பெயர்: ஹெல்.” துரதிருஷ்டத்துக்கு நான் விலக்கு என்ற முட்டாள்தனமான நம்பிக்கையில் நேசமாய்ச் சிரித்தேன். “மெஸ்மரின் ஆசிரியர்களில் ஒருவர் ஹெல், இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

ராவூல் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

“ஜோக்தானே?” என்று தன் கருத்தை முன்வைத்தான் குருட்டுப் பையன்.

சில நொடிகள் யாரும் ஒன்றும் பேசவில்லை. நீல நிற ஸ்கர்ட் அணிந்த பெண்ணொருத்தி கதவைத் திறந்தாள், குளிர்க் காற்று அலையென அவளுடன் உள்ளே வந்தது; எங்கள் அனைவரையும் அது எழுப்பி விட்டாற்போல் இருந்தது. மடாம் ரெனூவின் முகமும் என் அகங்காரமும் நினைவுக்கு வந்தன. குருட்டுப் பையனின் முழங்கால் மீதமர்ந்து அந்தப் பெண் அவன் காதில் ஏதோ சொன்னாள். ஹலோ க்லோடீன் என்று ராவூல் சொல்வது கேட்டது. நான் அவனைத் திரும்பிப் பார்த்தேன்; மதுக் கோப்பைகளை துடைத்துக் கொண்டிருந்தான், அவன் முகத்தில் வழக்கமாய் நிலவும் சாந்தத்தை எதுவும் குலைக்கவில்லை என்று தோன்றியது.

“அப்படியானால் நீங்கள் மெஸ்மரிச பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?” கேள்வி கேட்டவர் தாடி வைத்த அந்த சிறிய மனிதர், அவர் என் டேபிளுக்கு வந்து விட்டிருந்தார்.

பதிலுக்கு நான் ஆமோதித்தேன். ஈடுபாடு என்ற சொல் சாத்தியங்கள் கொண்டதாய் தோன்றியது.

“நீங்கள் டாக்டர் பரடூக் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.”

“ஆகா. ‘ஜீவ சக்தி’ வாசித்திருக்கிறேன்.”

“இது சுவாரசியமான விஷயம்தான்,” என்று சொல்லிக் கொண்டே அவர் என் அருகில் அமர்ந்தார், “நீங்கள் ஹெல் பற்றிச் சொன்னீர்கள். உடனிகழ்வுக்கு ஒரு காட்டாக, அதாவது…”

“எனக்கு புரியவில்லை.”

“மன்னித்துக் கொள்ளுங்கள். அது ஒரு விஷயமில்லை. எனக்கே நான் சொல்வது புரிகிறது என்று சொல்ல முடியாது. ஏக காலத்து நிகழ்வுகள், வெவ்வேறு காலத்தைய இணை நிகழ்வுகள், கழைக்கூத்து… ஹெல் ஒரு பாதிரியார் எனபது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.”

“பிராட்டஸ்டண்ட் மதபோதகர்.”

“மிருக காந்த வசியம், அல்லது பரடூக் மற்றும் பலரால் ஜீவ சக்தி என்று பின்னர் அழைக்கப்பட்ட ஆராய்ச்சிகளில் மதபோதகர்களுக்கு அவ்வளவு முக்கியமான பங்கிருந்தது சுவையான விஷயம். ஆனால் அவர் ஃபாதர் ஃபோர்டேன் என்ற பாதிரியுடன் இணைந்து ஆராய்ச்சி செய்ததும் உண்மைதான்…”

“அவர் எங்கு போரிட்டார் என்பதைக் கேட்காமல் இருப்பது நல்லது.” அது அவ்வளவு நல்ல ஜோக் அல்ல, ஆனால் நாங்கள் இருவரும் சிரித்தோம்; தாடி வைத்தவர் பழகுவதற்கு இனியவராக இருந்தார், தனக்கும் தன்னோடு பேசுபவனுக்கும், இருவருக்குமே மகிழ்ச்சியான உரையாடலாய் அமைய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார், எனக்கும் முந்தைய சில நாட்களில் நான் எதிர்கொண்டவர்களில் பலர் மீது இருந்தது போல் அவர் மேல் விரோத பாவம் எதுவும் தோன்றவில்லை.

“முதலில் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். என் பெயர் ஜுல் சோத்ரோ.”

“பியேர் பான். உடன்நிகழ்வு பற்றி நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?

“நான் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன் என்று தோன்றுகிறது.. உடன்நிகழ்வு, சுவர்களில் கறைகள், அறவே சாத்தியமில்லை என்ற காரணத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத செய்திகள்.. எது எப்படியானாலும் நம் நண்பர்கள் சம்பந்தப்பட்ட வேதக்காரர்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.”

“உங்களுக்கு மிருக காந்த வசியத்தில் ஆர்வம் உண்டா?”

“உங்களுக்கு அதன் முதற்பெயரே விருப்பமானது என்று அவதானிக்கிறேன். இல்லை, நான் அதில் தேர்ந்தவனல்ல, நீங்கள் அந்த அர்த்தத்தில்தான் கேட்கிறீர்கள் என்றால். ஆனால் நான் தொடர்ந்து வாசித்த வகையில் அந்தத் துறையில் சிறிது முன்னேற்றம் கண்டிருக்கிறேன், ஆனால் இதை முதலில் சொல்லி விடுகிறேன், எந்த நோக்கமுமில்லாமல், அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் என் எளிய பொழுதுபோக்குக்கு மட்டுமே வாசிக்கிறேன். நான் ஒரு அமெச்சூர், அறிவியல் ஆய்வறிக்கைகள் மீது எனக்கு போதுமான மரியாதை இருந்தபோதிலும் அவற்றைக் காட்டிலும் எட்கார் ஆலன் போவின் ஆக்கங்களே அதிக இன்பம் நல்குவதாய் இருக்கின்றன, உதாரணத்துக்கு “மெஸ்மரிக் தரிசனம்,” என்ற நூலையே எடுத்துக் கொள்ளுங்களேன். கவனமாய் தேடும்போது சில சமயம் அபூர்வமானவை தென்படும். “மானுட ஆன்மா: அதன் அசைவுகள், அதன் ஒலிகள், மற்றும் புலப்படாத நீர்மையின் படிமவியில்,” வாசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டியதுண்டா?”

“அவ்வப்போது அதை நான் ஆலோசித்திருக்கிறேன்.”

“இது சிந்தனையைத் தூண்டும் விஷயம் என்று உங்களுக்கு தோன்றவில்லையா… எழுபது பராதீத-ஒளிப்படப் பதிவுகள் கொண்டு…”

“ஆனால் தொடுகைக்கு அப்பாற்ப்பட்டவற்றின் ஒளிப்பட பதிவுகள் போலவே ஊசி விஷயம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டது.”

“ஒருவன் தன்னுடைய தனிப்பட்ட அதிர்வுகளால் அவற்றின் மீது தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதை நீங்கள் ஏற்கவில்லையா?”

“அதைவிட அதிகம் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.” (மெஸ்மரிசம் என்பதை ஒரு வகை மானுட நேயம் என்று புரிந்து கொள்வதைக் கொண்டு, என்று சேர்த்துக் கொள்ளும் உந்துதல் எழுந்தது). “எது எப்படியானாலும் ஆதாரச் சுனைவாயில் அருந்துவதே எனக்கு உவப்பானது.”

De planetarum influxu, பில்லியர்ட்ஸ் டேபிளில் உருளும் ஆகாசப் பந்துகள், நாடிகளின் இசை மாதிரி விஷயங்கள், இதைத்தானே சொல்கிறீர்கள்?

“மெஸ்மரிச நூற்தொகையில் உங்களுக்கு பரிச்சயம் உண்டு போலிருக்கிறது.”

“தலைப்புகள் மட்டுமே,” என்று அவர் வேகமாய்ச் சொன்னார். “அவற்றின் சிலவற்றைப் பற்றி பரடூக் குறிப்பிடுகிறார், மற்றவற்றை, அதன் உதிரி அலங்காரங்களை, பெர்சோவின் ‘மெஸ்மர்’, ‘மிருக காந்த வசியம்’, ‘சுழலும் மேசைகள் மற்றும் ஆவிகள்’, ஆகியவற்றில் காணலாம்.”

“ஆமாமாம், திரைகள், மெஸ்மரிசத்துடன் எப்போதும் இணைந்திருக்கும் கந்தல் ஆடம்பரம். அற்ப கருவிகள், நிச்சயம் நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன், இவை ஒரே ஒரு நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுகின்றன: குரூபம் செய்யவும் மறைக்கவும்…”

“இவை போக ஆவிகள்.”

“ஆவிகள் ஒரு வகை புகைத் திரை.”

“புகைத் திரையாய் அவை பயன்படவில்லை என்பதுதான் விஷயம், அவை ராயல் சொசைட்டி ஆப் மெடிஸினின் கண்டனத்தை தருவித்துக் கொடுத்தன, அதனால் மெஸ்மர் தனது பயிற்சியை கைவிட வேண்டியதாயிற்று. குறைந்தபட்சம், ஊரறிய.”

“உண்மையில் அது ஒரு வகையில் ஹிப்னடிசத்தை விசாரணைக்கு உட்படுத்தியது என்று சொல்லலாம். கிட்டத்தட்ட எல்லா நோய்மைகளும் ஏதோ ஒரு நரம்புக் கோளாறைக் காரணமாய்க் கொண்டது என்பதைக் கண்டறிய முடியும் என்று நம்பினார் மெஸ்மர். இது குறிப்பிட்ட சில தனி நபர்களுக்கும் அழுத்தம் அளிக்கும் குழுக்களுக்கும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது என்று தெரிகிறது. ஆரம்பம் முதலே அவர் தன் போராட்டத்தில் தோற்றுக் கொண்டிருந்தார் என்றும் கூட நீங்கள் சொல்ல முடியும். ராயல் சொசைட்டி ஆப் மெடிஸின் சகிப்புத் தன்மைக்கு பேர் போனதல்ல.”

“ஆனால் கூட 1831 ஆம் ஆண்டு அவர்கள் மிருக காந்தவசியக் கோட்பாட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்கள்.”

“ஆமாம், ஆனால் அதற்குள் மெஸ்மர் இறந்து விட்டிருந்தார், அவரது ஆதரவாளர்களோ, நீங்கள் சொன்னது போல் உண்மையை விட பேய்களில்தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். பின்னர், 1837 ஆம் ஆண்டில், அவரது கோட்பாடுகள் தீர்மானமாக நிராகரிக்கப்பட்டன, பர்டூக் பின்னர் செய்த சோதனைகள் அதை எதுவும் செய்ய முடியவில்லை. இது எல்லாமே பஞ்ச் அண்ட் ஜூடி ஷோ மாதிரிதான் இருக்கிறது. நீங்கள் அதை இப்படி பார்க்கலாம்: நோய்மைகள், அவை அனைத்துமே, நரம்புக் கோளாறுகளால் தோன்றுபவை. உடல்நலக் கேடுகள் வடிவமைக்கப்பட்டவை, நிதானமாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை, ஆனால் யாரால்? நோயாளியால், சூழலால், தெய்வத்தால் அல்லது விதியால். எதைச் சொல்லி என்ன ஆகப் போகிறது?.. ஹிப்னடிசம் இந்தப் போக்கினைத் திருப்ப வேண்டும், நோயை குணப்படுத்த வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், மறதியைத் சாத்தியப்படுத்த வேண்டும். வலியையும் மறத்தலையும் அதன் காரணங்களையும், அத்தனைக்கும் மத்தியில் சிக்கிக் கொண்ட நம்மையும், ஒரு கணம் இந்த விஷயத்தை நினைத்துப் பாருங்கள்..”

“அசல் பொன்னுலகம்தான்.”

“அல்லது, நோய்த்தன்மை கொண்ட மாயை. பதினெட்டாம் நூற்றாண்டு மருத்துவர்களையும் நோய் நீக்குபவர்களையும் நினைத்துப் பார்க்கும்போது, அவர்களுக்காக வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. வேண்டுமானால் நீங்கள் அதை அர்த்தமற்ற இரக்கம் என்றே வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் கூட அது இரக்கம்தான். உண்மையில் நானும் பொன்னுலகில் நம்பிக்கை கொண்டவன்தான், ஆனால் அவர்களைப் போல் இல்லாமல், பொன்னுலகை ஒரு ஸ்திதியாய் கருதுகிறேன். எனக்கு மெஸ்மரிசம் என்பது மத்தியக்கால ஓவியம் போன்றது. அழகியது. பயனற்றது. காலத்துக்கு அப்பாற்பட்டது. சிக்குண்டது.”

“சிக்குண்டதா?”

நான் ஒரு கணம் அமைதியாக இருந்தேன், நிச்சலனத்துள் நிலவிய ஓர் அமைதியில் அசையாதிருந்தேன், மேசையின் பளபளக்கும் மேற்பரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

வசீகரம், கொடூரம், என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இதோ இங்கே நான் டாக்டர் டெம்பிள்டன் வேடம் போட்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால் மோசமான நினைவாற்றலோடு.

“நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்று தெரியவில்லை… சிக்கிக் கொண்டது.. சிக்கிக் கொண்ட சிந்தனை.. காலத்தில் சிக்கிக் கொண்டது என்ற அர்த்தத்தை நான் உத்தேசித்திருக்க வேண்டும்.”

“அல்லது யாராவது ஒருவரால் சிக்க வைக்கப்படுவது.”

“By Hell?”

“பாதர் ஹெல்லாலா?”

மிகவும் ஆழமான ஒரு கண்ணிய உணர்வு நாங்கள் சிரித்து விடுவதைத் தடுத்து நிறுத்தியது.

நான் கஃபேவை விட்டு வெளியேறப் போனபோது மழை பெய்து கொண்டிருந்தது. மிகவும் சன்னமான மழை, கிட்டத்தட்ட காற்றாலானது, புலப்பட அரிதானது. குளிரில் நடுங்கி நின்றேன். அடுத்து, உடனே, நான் வாசற்படிக்கு அப்பால் கால் வைப்பதற்கும் முன், ஒரு ஊளைச் சத்தம் கேட்டது. ஒரு ஓநாய் ஊளையிடுவது போலிருந்தது. நிச்சயம் அது வெறும் நாயாகத்தான் இருக்க வேண்டும். உறைந்து நின்றேன்; சாலை வழக்கத்துக்கு மாறாய் ஆளரவமற்று இருந்தது; யாரோ ஹாரன் அடித்திருக்க வேண்டும் என்று நினைத்தேன், என்னைச் சுற்றி உயர்ந்து கவிந்து நின்ற கட்டிடங்களில் ஒன்றினுள் செல்ல வந்தவர். ஒற்றையான, ஒடுக்கமற்ற இசை. அந்நிய இசை (வட துருவத்துக்கு உரியது, என்று நினைத்துக் கொண்டேன். அல்லது ஆப்பிரிக்க இசை), அதன் நாடி நரம்புகள் உச்சத்தில் நிற்கும் இசை. கண்ணாடிக் கதவின் வழியே கஃபேயினுள் திரும்பிப் பார்த்தேன். சோத்ரோ அதே டேபிளில்தான் அமர்ந்திருந்தார், நான் புரட்டிப் பார்த்த செய்தித்தாளை கவனமில்லாமல் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் திருப்பும்போது செய்தித்தாளின் பக்கங்கள் அவரது தாடியின் நுனியைத் தொட்டன. ராவூல், பாருக்குப் பின்னால் இருக்கும் அவனது இடுப்பு வரைதான் தெரிந்தான், அந்தப் பெண் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பது போலிருந்தது, தன்னை தூக்கி நிறுத்தச் சொல்வது போல் அவளது கைகள் அவனை நோக்கி உயர்ந்திருந்தன. மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள், ஸ்பெயினில் நடக்கும் போர் பற்றியோ சைக்கிள் ஓட்டுவது பற்றியோ, என்னால் ஒரு அட்சரம் கூட கேட்க முடியவில்லை. நான் என் கோட்டை இறுக்கி கழுத்து பட்டன் வரை போட்டுக் கொண்டேன். முடிவற்ற யுககாலம் போல் தோன்றிய சில கணங்களுக்குப் பின், மீண்டும் அந்த ஊளைச் சத்தம் கேட்டது. அந்த இசைக் கலைஞனின் நோக்கம் (அது இசைக் கலைஞன்தான், என் சந்தேகம் தீர்ந்து விட்டது) எளிதில் வசப்பட்டது. ஆழமான குகையிலிருந்து எழுந்த, கிழித்துக் காயப்படுத்தும் ஒலி. எனக்கு மேல் உயர்ந்தெழுந்த கோபுரக் கூரைகளிலிருந்து நொறுங்கி விழுந்து வீடுகளின் மூடப்பட்ட சன்னல்களின் அதிர்வலைகளாய்ப் பரவியது. ஒரு நொடியின் பின்னப் பொழுது யாருமில்லாத சாலைகளைச் சுழற்றிச் சென்ற ஓசை. ஒரு கொம்பினை ஊதியது போல். ஆனால் அது கொம்பொலியல்ல. மாபெரும், செயலுக்கு உதவாத இரக்கம் என்னை ஆட்கொண்டது. நான் உறைந்து நின்றேன்.


போர் முனையை விட்டுத் தப்பியோடிய ராணுவ வீரன் போல், முதலிலேயே விஷ வாயு என்னைச் சாய்க்காமல் இருந்திருந்தால் போர் முனையை விட்டு தப்பித்து ஓடியிருக்கக் கூடிய ராணுவ வீரன் போல், மருத்துவமனைக்குள் புகுந்து மறைந்தேன், செவிலிகளையும் எதிர்பாராமல் மூலை முடுக்குகளிலிருந்து திடீரென்று கண்ணீருடன் அல்லது சிரித்துக் கொண்டே வெளிப்படும் வருகையாளர்களையும் தவிர்க்கும் வகையில் அடிக்கடி என் பாதையை மாற்றியபடி நடந்தேன்.

இப்படி யாரும் கவனிக்காத வகையில் கடந்து செல்லும் உத்தியின் விளைவாய், சில நிமிடங்களிலேயே நான் வழி தவறி விட்டேன். நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், வருபவர்களுக்கு வழி காட்டும் குறிப்பலகைகள் இருக்கவில்லை, அறைகளின் எண்களும் வரிசையாக இலக்கமிடப்படவில்லை என்பதால் நான் எங்கே இருக்கிறேன் என்பதை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது; அது போலவே, பிழையாய் வடிவமைக்கப்பட்ட மாடிப்படிகள், ஒவ்வொன்றும் மற்றது போல் இல்லை, ஆனால் எல்லாவற்றின் மீதும் தேவையில்லாத லாண்டிங்குகள் சுமத்தப்பட்டிருந்தன, வட்ட வடிவமான, அரை வட்ட வராந்தாக்கள் எல்லாம் சேர்ந்து, பார்க்க வந்திருப்பவன் எவ்வளவு புத்திசாலியாய் இருந்தாலும் அவன் வெகு சீக்கிரமே தான் எந்த மாடியில் இருக்கிறோம் என்பதை அனுமானிக்க முடியாத விளைவு கொண்டதாய் இருந்தது. யாரிடமும் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் தீர்மானித்திருந்த காரணத்தால் என் சிக்கலான நிலை இன்னும் மோசமாகி விட்டது.

சீக்கிரமே யாரையும் கேட்டு தெரிந்து கொள்வதற்கு கூட ஆள் இல்லாத இடத்துக்கு வந்து விட்டேன். நான் வந்து சேர்ந்திருந்த வராந்தா இருட்டாக இருந்தது, ஈரமாக இருந்தது, இரு பக்கமும் காரை பூசப்படாத சிமெண்ட் சுவர்களும் இரு அறைகளும் இருந்தன; பாதி கட்டி முடிக்கப்பட்ட குளியலறை, படுக்கைகளும் செல்லரித்த கம்பளங்களும் மூட்டை மூட்டையாய் குவித்து வைக்கப்பட்ட ஸ்டோர் ரூம், விளக்கில்லாமல் இருட்டில் இருந்தது. வராந்தா முடியும் இடம் ஒரு சுவரெழுப்பி மூடப்பட்டிருந்தது, அதில் புரிந்து கொள்ள முடியாத கையெழுத்தில், ஆனால் சந்தேகமே இல்லை, காம வாசகமொன்று, சிமெண்ட் உலராதபோது ஒரு பெரிய இதயம் வரைந்து அதனுள், கிறுக்கலாய் பொறிக்கப்பட்டிருந்தது. ஒரு மெல்லிய கெட்டித்த கூளம் அந்த மாடி முழுவதன் மேற்பரப்பில் பூசப்பட்டிருந்தது போல் அந்த இடம் எங்கும் சிறுநீர், அல்லது மனித மலமும் மிருக மலமும் கலந்த அழுகல், நாற்றம் அடித்தது,

ஒன்பது மணி வரை குளியலறையில் மறைந்திருந்து விட்டு அதன் பின் வல்யேஹோவைத் தேடிச் செல்வது என்று முடிவு செய்தேன்.

நான் வெளியே வந்தபோது மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்திருந்தது. மருத்துவமனைக்கு வந்து பார்ப்பவர்கள் போயிருந்தார்கள், சாந்தமான தொலைதூர குரல்கள், மருந்து கொண்டு செல்லும் அல்லது நோயாளிகளின் டின்னர் தட்டுக்களைச் சேகரித்துச் செல்லும் ட்ராலிக்களின் கிணுகிணுப்பு, நீர்த் தொட்டிகளின் குமிழ்ச் சத்தம், தண்ணீர் ஹீட்டர்களின் சன்னமான பொருமல் ஆகியவற்றின் ஒலியால் மிகக் குறைவாகவே உயிர்ப்பிக்கப்பட்ட வெண்ணிற வராந்தாக்கள் அந்நிய மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தின் பக்கங்கள் போல் கடந்து மறைந்தன.

நான் வேறு இருவரை மட்டுமே சந்தித்தேன்; முதலாமவர் ஒரு செவிலி, என்னை வேறொருவர் என்றோ, அல்லது, ஒரு மருத்துவர் என்றோ நினைத்துக் கொண்டு அவர் தலையசைத்து வரவேற்றார்; இரண்டாமவர் அங்குலம் அங்குலமாக பக்கவாட்டு வராந்தா ஒன்றில் நகர்ந்து சென்று கொண்டிருந்த முதியவர், அவர் என்னைப் பார்க்கக்கூட இல்லை.

நான் மாடிகளில் ஏறி இறங்கினேன். ஏதோ ஒரு மாயக் கோளைப் பார்ப்பது போல் தெருவில் எதிர்ப்புறம் இருந்த மூன்று மாடி வீட்டை வைத்த கண் வாங்காமல் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது; ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்று எனக்கு தோன்றிய வராந்தாக்களைத் தவிர்க்க முயற்சி செய்தேன், அதன்பின், வேறு வழியில்லாதபோது, நான் இருக்கும் இடம் எதுவென்பதை விளங்கிக் கொள்ள போதுமான அவகாசம் மட்டும் எடுத்துக் கொண்டு எவ்வளவு சீக்கிரம் கடக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவற்றை கடந்து சென்றேன்; கதவுகளைத் திறந்தேன், பருத்த மனிதர் ஒருவரின் களைத்த முகத்தைக் கண்டேன், இரவு விளக்கு அவரது படுக்கையருக்கே எரிந்து கொண்டிருந்தது; முதிய பெண் ஒருவரது தலை தலையணையில் ஆழ அமிழ்ந்திருந்தது., அவரது முகம் திருப்தியாய் இருந்தது, அதே வேளை, அவரை விட ஓரளவு இளைய மனிதர், அவரது மகனாய் இருக்கலாம், அல்லது காதலனாய், அவர் அந்தப் பெண்ணருகே கை வைத்த நாற்காலி ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்தார்; நான் ஒரு சிறுமியின் வட்டமான முகம் கண்டேன், அந்தப் பெண் பதிலுக்கு என்னை அச்சமோ ஆச்சரியமோ இல்லாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

நேரம் போய்க் கொண்டிருந்தது, காலரிக்கள் தொடர்ந்து நீண்டவாறிருந்தன. நேரமாக நேரமாக குளிர் அதிகரிப்பதை உணர்ந்தேன்; என் காலடி அத்தனை பக்கமும் ஒத்ததிர்வது போலிருந்தது. வல்யேஹோவின் அறையை நான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிந்து விட்டது.

அப்போதுதான், கட்டிடத்தில் பிரயோசனமில்லாமல் நான் தேடிக் கொண்டிருந்த பிரிவை விட்டு வெளியேற வழி தேட முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அதை வராந்தாவின் முடிவில் கண்டேன், எனக்காகவே அது அத்தனை நேரம் காத்துக் கொண்டிருந்தது போலிருந்தது. அது மங்கலான நிழலுருவம், கை இல்லாத உடல், என் குழந்தைப் பருவத்திலிருந்து நேராய் வீசி எறியப்பட்ட கொடுங்கனவு. அது அச்சுறுத்தலாக இருந்தது என்பதை விட பரிதாபமாக இருந்தது, ஆனால் அதன் இருப்பு தாங்க முடியாததாக இருந்தது. அதை அணைத்துக் கொள், என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ஆனால் அந்த எண்ணத்துக்கு அதிக இடம் கொடுக்கவில்லை. என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த நிழலுருவமும் நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் மறு புறம் திரும்பி ஓட்டமெடுத்தேன்.

தடம் புரியாத பாதைகள் கொண்ட இடம், திருக்குமறுக்காக விரியும் புதிர்ப்பாதையின் வசீகரம் என்னை ஆட்கொண்டது: சீரற்ற வகையில் ஒளிர்விக்கப்பட்ட அந்த காலரிக்களில் மயக்கத்தில் இருப்பது போல் நான் நடந்து செல்கையில் தோன்றிய ஒவ்வொரு புது ஹால்வேயும் ஒவ்வொரு மாடிப் படிக்கட்டும் லிஃப்டும் சுரமேறிய என் தயக்கத்துக்கு சோதனையாய் அமைந்தன. நான் வியர்த்துச் சொட்டிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்; ஒரு கதவின் மீது சாய்ந்தேன்; அது திறந்து கொண்டது..

அந்த அறையில் இரு படுக்கைகள் இருந்தன, இரண்டிலும் ஆளில்லை. கதவை மூடினேன், என் கண்கள் இருளுக்குப் பழகக் காத்திருந்தேன். வெளியே இருந்த வராந்தாவில் இப்போது மீண்டும் கோலோச்சிய பனி பொழியும் சூழ்நிலத்தின் ஒளிர்வமைதி. படுக்கைகளில் ஒன்றில் படுத்துக் கொண்டேன். ஜப்பானிய ஓவியத்தில் இருப்பது போல், ஜன்னலைச் சட்டகமாய் கொண்ட வானில் கிளைகள் துருத்திக் கொண்டிருந்தன. நான் மடாம் ரெனூவை நினைத்துக் கொண்டேன், இழை போன்ற வாழ்வின் எளிமையை, அவரை மீண்டும் பார்க்க வேண்டிய தேவையை. குளிரடித்தது; அறையில் எங்கோ ஒரு ஹீட்டர் இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஜன்னலை நெருங்கி கீழே பார்க்கும்போது உள் தாழ்வாரம் என்ற நோக்கத்தில் கட்டப்பட்ட சிமெண்ட் செவ்வகத்தில் மூன்று பேர் இருப்பதைக் கண்டேன். விளக்கொன்று பழுப்பு நிறத்தில் வளைகூரை வேயப்பட்ட பாதையின் தூண்களுக்கும் அதற்கு அப்பாலும் நீளும் நிழல்கள் சாய்த்தது.

இரு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர்; அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்; அவ்வப்போது அந்தப் பெண் தன் குதிகாலைத் தரையில் உதைத்துப் பேசினாள்; அவள் கருப்பு நிறத்தில் ஸ்கர்ட்டும் மேலாடையும் அணிந்திருந்தாள், கைப்பை வைத்திருந்தாள், அவளது கரமொன்றில் பழுப்பு நிற ட்ரென்ச்கோட் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஆண்களில் ஒருவர் மருத்துவர் போல் வெள்ளை கோட் அணிந்திருந்தார், மற்றவர், குள்ளமாகவும் குண்டாகவும் இருந்தவர், காது வரை தொப்பியை இழுத்து விட்டிருந்தார். தொப்பி அணிந்திருந்தவர் நம்பிக்கை இல்லாமல் கேட்டுக் கொண்டிருப்பது போலிருந்தது, அவருக்கு பொறுமை போய் விட்டது போல் தெரிந்தது, அதே வேளை, தூண்களின் பாதம் வரை நீண்ட தன் நிழலை ஓரக்கண்ணால் எச்சரிக்கையுடன் பார்த்தபடி இருந்தார் அவர்.

குறிப்பாக எது என் கவனத்தைக் கவர்ந்தது என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் ஹீட்டரைத் தேடி அந்த அறையைச் சுற்றி நடந்திருந்த நிலையில், என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்பது எனக்கு தெரிந்திருந்தது- அப்படியே அது இருக்கும் இடம் தெரிந்திருந்தாலும் அச்சத்துடன் கூடிய எச்சரிக்கையுணர்வு நான் அதை இயங்கச் செய்வதைத் தடுத்திருக்கும்-, மூச்சு திணறுவது போன்ற உணர்வில் சன்னலை நோக்கி வேகமாய்ப் போனேன், என் மூக்கையும் வாயையும் கண்ணாடியில் அழுத்தினேன், அதில் என் மூச்சு புகையாய்ப் படிந்தது.

நான் அங்கு போகவும் அந்த கனத்த மனிதர் முற்றத்தைக் குறுக்காய்க் கடந்து ஒரு வாராந்தாவினுள் புகுந்து மறைவதைக் காணவும் சரியாக இருந்தது, அதில் மிகப் பெரிய கரிய மண் தொட்டிகள் இருப்பது மங்கலாக தெரிந்தது. அந்தப் பெண்ணும் இன்னொரு மனிதரும் இன்னும் அங்கே ஒரு எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்தார்கள், தன் சகாவின் ஸ்கர்ட் ஓர மடிப்புகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது போல் அவரது முகம் முன்னோக்கிச் சாய்ந்திருந்தது, அவளது பார்வையோ, தனக்கு வலப்புறம் இருந்த ஒளி ஊடுருவாத சன்னல்களில் கவனமில்லாமல் அலைந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த மனிதர் ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவளை நோக்கித் நீட்டினார். அவள் வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தாள், தன் நன்றியை மிகச் சிறிய சமிக்ஞையில் தெரிவித்து விட்டு, முகத்தை இடப்புறம் திருப்பி சந்தேக பாவத்துடன் முற்றத்தில் தனக்கு எதிர்ப்புறம் இருக்கும் சன்னல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கொண்டே வந்தவள் அதில் ஒன்றில், அவள் மட்டும் இன்னும் கூர்மையாய் உற்று நோக்கியிருந்தால், என் நிழலுருவத்தைக் கண்ணுற்று அவர்களை கவனித்துக் கொண்டிருக்கும் என்னை அங்கு பார்த்ததும் அச்சத்தால் விதிர்த்திருப்பாள்; அம்பலமாகி விட்ட என்னையும் அஞ்சச் செய்திருப்பாள். அவர்களைப் பிரிந்து சென்றிருந்த கனத்த மனிதர் திடீரென்று திரும்பி வந்தார், மற்ற இருவரும் அவர் வருவதைப் பார்த்துக் கொண்டு திரும்பி நின்றார்கள்.

அந்த மனிதர் லூமியேயின் சாயலில் இருந்ததைக் காண்கிற அளவு என்னால் நன்றாக பார்க்க முடிந்தது (போகாமல் இருந்தவர் லேஷார் பொலிருந்தார், ஆனால் நிச்சயம் அந்தப் பெண் மடாம் வல்யேஹோ அல்ல). அவர் வேகமாக சிமெண்ட் தரையில் அசைந்தாடிச் சென்றார், படபடப்பாக நடக்கும் வாத்து போல. அவர் வளைகூரைகள் வேயப்பட்ட பாதையிலிருந்து நேரடியாக இங்கு வந்திருந்தார், மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள மிகவும் அவசரப்படுவது போலிருந்தது. அந்தப் பெண் அவர் தோள்களில் மிக மென்மையாய் தன் கைகள் வைத்தாள், அது சிறிது நேரம் அங்கு தாமதிக்க அனுமதித்தாள், அந்த கனத்த மனிதர், அவர் (அவர் லூமியே அல்ல) அவளைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார், இது எனக்கு முதலில் குழப்பமாக இருந்தது. டாக்டர் அந்தப் பெண்ணின் கைகளைப் பிடித்துக் கொண்டார்; கனத்த மனிதர் தன் தொப்பியை அகற்றினார், இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்ள காத்திருந்தார், அதன்பின் மீண்டும் தலையசைத்தார். எளிய மறுப்பு அது, கிடைமட்ட தலையசைப்பு: வலம், இடம், வலம்… அதன் பின் அந்தச் செய்கையை இன்னும் உருக்கமானதாக மாற்றுவதாயிருந்த வகையில் அவர் தன்னை உள்ளூர திடப்படுத்திக் கொண்டதும் அவரது முகவாய் முன்னோக்கிச் சரிந்து ஒரு மணியின் நாக்கு போல் அவரது காரை எலும்பில் விழுந்தது, அந்த மறுப்பால் அவரது சுதந்திரம் அத்தனையையும் அவர் இழந்து விட்டது போல். அந்தப் பெண் தன் கரங்களை டாக்டரின் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு தன் கண்களுக்கு உயர்த்தினாள், அதன் பின் அது தன் போக்கில் ஒரு சிலந்தியைப் போல் அவள் கன்னங்களில் சரிந்து வாயின் குறுக்கே விரல்கள் விரிய விழுந்தது. கனத்த மனிதர் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டார். டாக்டர் திடீரென்று தன் தலையை மேலும் கீழும் அசைத்தார், அதன் பின் ஒரு பொய்யான உற்சாகத்துடன் அந்தப் பெண்ணின் இடையைச் சுற்றி தன் கையை வளைத்துப் பிடித்தார். மறுப்பேதும் தெரிவிக்காமல் அந்தப் பெண் தன்னை வளைகூரை வேய்ந்த பாதையை விட்டு அழைத்துச் செல்ல அனுமதித்தாள், நான் பார்த்துக் கொண்டு நின்ற இடத்துக்கு கீழ் நடந்து மறைந்தாள் (டாக்டருக்கு பிசிரற்ற வட்டமாய் சொட்டை விழுந்திருந்தது, அந்தப் பெண்ணின் தலைமுடி மென்மையாய் இருந்தது, விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் ஒளிரும் அலைகளாய் படிந்திருந்தது). கனத்த மனிதர் முகவாய் நெஞ்சில் தாழ்ந்திருக்க, கைகளை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு முற்றத்தின் மத்தியில் சிறிது நேரம் நின்று பின் மற்ற இருவரையும் தொடர்ந்து நடந்து போனார்.

அங்கு நடந்து கொண்டிருந்த நாடகம் எதுவாக இருந்தாலும் அது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது சீக்கிரமே தெளிவானது. என் முன்னிருந்த ஆரக்கூரைப் பாதையின் கீழிருந்த இருள் திரியில் ஒரு சிகரெட்டின் கங்கு தென்பட்டது, சுவற்றை ஒட்டி கட்டப்பட்டிருந்த பெஞ்சில் ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஊகித்தேன். அவர் அத்தனை நேரமும் அங்குதான் இருந்திருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன், அவர் அங்கு இருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் அல்லது உள்ளூர உணர்ந்திருந்தார்கள் என்றும் நினைக்கிறேன்; குறைந்தபட்சம் அந்த பருத்த மனிதருக்காவது தெரிந்திருக்கும், அவர் நிச்சயம் பார்த்திருக்க வேண்டும், ஒருவேளை அவருக்கு சிகரெட் பற்ற வைக்க நெருப்புகூட தந்திருக்கலாம், கூனிக் குறுகி, அச்சத்துடன், தீக்குச்சியின் சுவாலையை அவரது உடல் என் பார்வையிலிருந்து மறைத்திருக்க வேண்டும்.

என் உளவின் இலக்குகள் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல, நிச்சயம் நான் அவர்களைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை, என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ள முயற்சி செய்தேன்; அதற்கான யத்தனமும் செய்தேன். பின் சிகரெட் இரவுக் காற்றில் ஒரு பரவளைவாரம் வரைந்தது, அந்த மனிதன் வெளிப்பட்டான், தன் கைகளைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, இரவுத் தூக்கமில்லாதவன் நடை செல்வது போல் அவசரமற்ற போக்கில் முற்றத்தில் வெளிச்சமிருந்த பகுதியினுள் நுழைந்தான்.

அவன் என்னைப் பார்த்துவிட்டான் எனபதை ஓரளவு சுலபமாய்ச் சொல்லி விட முடிந்தது. முதலில் அவன் மற்றவர்களைப் பின்தொடர்ந்து வருவது போலிருந்தது, ஆனால் பின் நின்றுவிட்டான், என் சன்னலை நோக்கி நேராகப் பார்த்தான். நான் அவனை கவனித்துக் கொண்டிருந்ததை அவன் அறிந்திருந்தான் என்று நினைக்கிறேன், அவன் என் அச்சத்தையும் பார்த்திருக்க வேண்டும், ஒருவேளை என் குழப்பத்தையும் சோகத்தையும்கூட கவனித்திருக்கலாம். எப்படியாயினும், அவன் நின்றிருந்த விதம் மிகச் சாதாரண ஆர்வத்துக்கு அப்பால் எதுவும் இருப்பதாகத் காட்டிக் கொள்ளவில்லை. ஏதோ ஒரு பைத்தியக்காரனைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் என்று நினைத்துக் கொண்டேன் (ஜோடியாயப் போகும் கனூக்கள் போல் என் மனதில் இரு பிம்பங்கள் தோன்றி மறைந்தன; மருத்துவமனைக்குள் வர விடாமல் வழிமறித்த செவிலி, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நான்). என் கைகள் சன்னலைத் திறக்க முயன்று தோற்றுக் கொண்டிருப்பதை திடீரென்று உணர்ந்தேன். முதல் ஆச்சரியத்துக்குப் பின் (நான் அப்படி ஒரு நோக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை), அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டேன், சன்னல் சட்டத்தில் கதவைத் திறக்கும் வழியை என் விரல்கள் தொடர்ந்து தேடலாயின. அது பிரயோசனப்பட்டவில்லை; சன்னலுக்கு தாழ் கிடையாது, கண்ணாடியை நகர்த்தவும் முடியாது; சன்னலைத் திறக்க வழியில்லை. முற்றத்தின் மத்தியில் அவன் இன்னும் நின்று கொண்டிருந்தான், என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். என் விரல் முட்டிக்களால் நான் சன்னலைத் தட்டினேன். அவனுக்குக் கேட்டிருந்தால், அதன் அறிகுறிகளை அவன் காட்டிக் கொள்ளவில்லை. நான் ஸ்விட்ச் இருக்கிறதா என்று தேடினேன், அறையை வெளிச்சமாக்க வேண்டும், என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தமற்ற ஆவல் என்னை உந்தித் தள்ளியது. என் இருப்பை, என் வருகையை, விநயமான ஆனால் நேரத்துக்கு பார்வையாளனாய் வந்து நின்றதை, சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதிப்படுத்த, விரும்பினேன். விளக்கும் எரியவில்லை. எல்லாம் உடைந்திருந்த ஒரே அறைக்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன். நான் மீண்டும் சன்னலுக்குப் போனபோது, கிட்டத்தட்ட கேவிக் கொண்டிருந்தேன், அவன் இன்னும் அங்கேதான் நின்று கொண்டிருந்தான், மேலே பார்த்துக் கொண்டு, நான் அந்தச் சன்னல் சட்டத்தை விட்டுச் சென்றிருக்காதது போல், அந்த அறை, சுவர்கள், க்லினீக் ஆராகோ மற்றும் என் உடல் எல்லாமே இருந்த வானையும் அப்பால் இருந்த நட்சத்திரங்களையும் தேடிக் கொண்டிருந்த அவன் பார்வையின் முன் ஒளி ஊடுருவும், பிரயோசனமற்ற தடுப்புகள் என்பது போல்.

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் மேலும் ஒரு கணம் பார்த்துக் கொண்டு நின்றோம். அதன்பின் அவன் தன் வழியில் நிதானமாகச் சென்றான், சத்தம் எழுப்பாத நடை, என் பார்வையிலிருந்து மறைந்தான். அவன் போனதும் நான் எவ்வளவு ஆழமாய்க் களைத்திருந்தேன் என்பதை உணர்ந்தேன். மேலே பார்த்தேன்; இரும்பு சட்டங்களால் தாங்கி நிறுத்தப்பட்ட, வெளியிலிருக்கும் இரவிலிருந்து முற்றத்தை தனியாய்ப் பிரிந்து நின்ற கண்ணாடிக் கூரை. கணப்பொழுது கூட தயங்காமல், அந்த அந்நியனின் தன்னம்பிக்கையில் ஒரு பகுதி என் மீது ஒட்டிக் கொண்டது போல், நான் அங்கிருந்த படுக்கைகளில் ஒன்றில் படுத்து ஆழமான உறக்கத்தில் ஆழ்ந்தேன். நள்ளிரவுக்குப் பின் விழிப்பு வந்தது, யாரும் என்னைப் பார்த்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை எதுவும் இல்லாமல் கிளம்பினேன்; யாரும் என்னைத் தடுத்து நிறுத்தவில்லை, எதுவும் சொல்லவுமில்லை.

One Reply to “ரொபெர்த்தோ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.