மர்மமான அந்தச் சிலெ நாட்டான்

வெண்டி லெஸ்ஸர்

தமிழாக்கம்: மைத்ரேயன்

ஓர் அமெரிக்க வாசகருக்கு, ரொபெர்த்தோ பொலான்யோவின் நாவல்களின் மிக வினோதமான அம்சமாகத் தெரிவது, அவை அரசியலையும் கவிதையையும் எப்படிக் கலக்கின்றன என்பதே. அவர் அரசியலைப் பற்றி எழுதுகிற ஒரு கவிஞர் என்று நான் சொல்ல வரவில்லை, அது உண்மைதான் என்றாலும் (அது எதிர்பார்க்கப்படுகிற மாதிரி உண்மையில்லை:அவருடைய நாட்டுச் சக எழுத்தாளர் பாவ்லோ நெரூதா போன்ற அரசியலில் அக்கறையுள்ள கவிஞர்களை நீங்கள் படித்திருந்தால், அவர்களின் படைப்புகளில் உள்ளது போன்ற கூர்மையான தொனி இவரிடம் காணப்படாது). அந்த வினோதத் தன்மை எழுவதற்குக் காரணம், பொலான்யோவின் நாவல்களிலும், ஓரளவு அவருடைய சிறுகதைகளிலும், அனேகமாக எல்லாப் பாத்திரங்களுமே, நல்லவையோ, கெட்டவையோ, இனிமையானவையோ, கடுமையானவையோ, எதானாலும் அவை கவிதையிலும், அரசியலிலும் கொண்டுள்ள தீவிர அக்கறைகள் வியப்பூட்டும் விதங்களில் தொடர்புள்ளவையாக இருப்பதுதான்.

உதாரணமாக, பொலான்யோவின் புத்தகங்களில் முதலில் இங்கிலிஷுக்கு மொழி பெயர்க்கப்பட்ட புத்தகங்களில் ஒன்றான, பை நைட் இன் சிலே என்ற புத்தகத்தைக் கருதுங்கள். அதன் மையப் பாத்திரம் மரபு சார்ந்த ஒரு பாதிரியார், சிலேயில் கதோலிக்க அதிகார அடுக்கமைப்பில் ஒரு தூண், ஒரு புனைபெயரைப் பயன்படுத்திக் கொண்டு அவர் காலத்து இலக்கிய விமர்சகர்களில் ஒருவராக இருக்கிறார். பெரும் மனிதராகவோ அல்லது அந்த நிலைக்கு அருகிலோ உள்ளவர்களோடு விருந்துகளில் பங்கெடுக்கிறார், யூரோப் முழுதும் பயணம் செய்து பாதிரிகளிடையே வல்லூறுகளைக் கொண்டு வேட்டையாடும் உத்திகள் நிலவுவதைப் பற்றி விசாரிக்கிறார், வேறு விதங்களிலும் உலகத்தோடு உறவாடுகிறார், ஆனால் சில நேரங்களில் தம் படிப்பறையில் புதைந்திருந்து புனித ஒகஸ்டீன், ராபர்ட் பர்ட்டன், மற்றும் பல அதிகம் தெரியவராத கிரேக்கர்களை எல்லாம் படிக்கிறார்.  1973 ஆம் வருடத்து ராணுவப் புரட்சிக்கு அடுத்து, இரு மர்ம மனிதர்கள் இவரை அணுகுகிறார்கள், (அவர்களின் பெயர்கள் “பகை” மற்றும் “அச்சம்” என்ற சொற்களைத் திருப்பிப் போட்டு எழுதியதாக இருந்தன). மிக ரகசியமாக உள்ள வாடிக்கையாளர் சிலருக்கு மார்க்சியம் பற்றிய ஒரு குறுகிய கால வகுப்பு ஒன்றை நடத்தச் சொல்லிக் கேட்கின்றனர்- அவர்கள் பினோஷேயும், அவருடைய சில ராணுவ தளபதிகளும்தான். அந்தப் பத்து வார கால வகுப்பு பாதி முடிந்த நிலையில், பினோஷே இந்தப் பாதிரியைத் தனியே அழைத்துப் போய், தான் மேம்பட்ட வகை அறிவு ஜீவி என்றும், சால்வடோர் அல்யெண்டேயை விட மேலான எழுத்தாளர் என்றும் பெருமை பீற்றிக் கொள்கிறார். ராணுவப் புரட்சிக்குப் பிறகான இதே காலகட்டத்தில், இந்தப் பாதிரியும், விமர்சகருமானவர், வசதி உள்ளவரான மரியா கனாலிஸ் என்ற, எழுத்தாளராக விரும்பும் ஒரு பெண்மணி நடத்துகிற இலக்கியக் கலந்துரையாடல்களில் பங்கெடுக்கத் துவங்குகிறார். ஊரடங்குச் சட்டத்தால் சிலே நாட்டின் விறுவிறுப்பான காஃபிக் கடை வாழ்க்கை முடங்கிப் போயிருந்ததால், இந்தப் பெண்மணியால், நிறைய கவிஞர்கள், நாவலாசிரியர்கள் மேலும் பத்திரிகையாளர்களை இந்தச் சந்திப்புகளில் கலந்து கொள்ளத் தன் வீட்டுக்கு ஈர்க்க முடிகிறது. இருந்த போதும், மேல் மாடியில் இவரது வைன் பானங்களை விருந்தினர்கள்  அருந்திக் கொண்டிருக்கிற அதே நேரத்தில், அவருடைய கணவர், மிக நல்லதொரு கனவானாகத் தெரிகிற அமெரிக்கர், ராணுவ ஆட்சியாளர்களோடு ரகசியமாக ஒட்டுறவு கொண்டவர், அந்த வீட்டின் நிலவறையில் கைதிகளைச் சித்திரவதை செய்துகொண்டிருக்கிறார்.

அல்லது பொலான்யோ இதற்கு முன்னதாக எழுதிய ‘டிஸ்டண்ட் ஸ்டார்’ என்ற நாவலைப் பார்ப்போம். ‘பை நைட் இன் சிலே’ நாவலுக்குப் பிறகு ஒரு வருடம் கடந்து, 2004 இல் இது இங்கிலிஷில் மொழி பெயர்க்கப்பட்டது, இதில் கதைத் திட்டம் ஒரு கவிஞரும், விமானியுமான கார்லோஸ் வீடர் என்பவரை மையமாகக் கொண்டது. அவர் ஆல்பெர்டோ ரூயிஸ்-டாக்லெ என்றும் அறியப்படுபவர். அல்யெண்டேயின் ஆட்சிக் காலத்தில், இந்தப் பாத்திரத்தை நாம் முதல் முறை சந்திக்கும்போது, அவரும், அவருடைய உற்ற நண்பனான பிபியானோ ஓ’ரையனும், திறமையுள்ளவர்களும், அழகானவர்களுமான கார்மெண்டியா சகோதரிகளும், மற்றும் பெயர் சொல்லப்படாதவரான கதை சொல்லியும், வாராந்தர கவிதைப் பயிலரங்கு ஒன்றின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார்கள். பிற்பாடு, ராணுவப் புரட்சிக்குப் பிறகு, ஆல்பெர்டோ தந்திரமாக கார்மெண்டியா சகோதரிகளின் கிராமப் புறப் புகலிடத்தில் தன்னை நுழைத்துக் கொள்கிறார், அவர்களை மிருகத்தனமாகக் கொல்லப்பட வைக்கிறார்- அரசியல் காரணங்களுக்காக இல்லை, ஆனால் பாலுணர்வு சார்ந்த சுய வெறுப்பும், கவிதை சார்ந்த பொறாமையும் விபரீதமான விதத்தில் கலந்ததே காரணம் என்று நாம் உணரத் தலைப்படுகிறோம். ஆல்பெர்டோ ரூயிஸ்- டாக்லே இதன் பிறகு தன்னை கார்லோஸ் வீடராக மாற்றிக் கொள்கிறார், பினோஷேயின் அரசுக்கு உவப்பானவராகிறார், சிலே நாட்டின் புதிய கவிதை வகையில் தன் பங்களிப்பாகச் சிலவற்றை, கவர்ச்சியுள்ள ஒரு விமானியாக இருந்து, ஆகாய-எழுத்துகளால் எழுதுகிறார். பொதுவில் இப்படி அவர் முன்வைக்கும் “கவிதைகளில்” லத்தீன மொழி விவிலியத்தின் முதல் வாக்கியங்கள், இறந்த பல இளம் பெண் கவிஞர்களின் பெயர்கள், மற்றும் தீமையெனத் தொனிக்கும் சொற்றொடர்கள், உதாரணமாக “சாவு சுத்தப்படுத்துவது,” “சாவு என்பது பொறுப்பு,” மற்றும் “சிலேதான் சாவு,” ஆகிய எல்லாம் இருந்தன. கடைசியில் வீடருக்குத் தலைமறைவாகும் நிலை கட்டாயமாகிறது, (ராணுவத் தளபதிகளுக்குக் கூட அவருடைய கிறுக்குத்தனம் தாங்க முடியாததாகி விடுகிறது). அவருடைய புது கோணங்கிச் செயல்களிலும், பழைய குற்றச் செயல்களிலும் இன்னும் ஈர்ப்பு உள்ளவர்கள், அதிகம் தெரிய வராத இலக்கியப் பத்திரிகைகளில் உலகெங்கும் அவர் பிரசுரித்த படைப்புகள் மூலமாகத்தான் அவரைத் தொடர முடிந்திருக்கும்.

பொலான்யோவின் மூன்றாவது நாவல், ஆம்யுலெட் கடந்த ஜனவரியில்[1] இங்கிலிஷில் வெளிவந்தது. அதுவும் கவிதையில் தீவிரமாக இறங்கிவிட்ட ஒரு கதை சொல்லியைக் கொண்டது (அவர் தன்னை “மெக்ஸிகக் கவிதையின் தாய்” என்று அழைத்துக் கொள்கிறார், ஆனால் விவரங்களைக் கவனித்தால் அவர் பாதிப் பிச்சி, அனேக நேரம் வீடுவாசல் இல்லாத சுத்திகரிப்புத் தொழிலாளி என்பதாகத் தெரிகிறது), அவருடைய நினைவுகள் செப்டம்பர் 1968 இல் இரண்டு வாரங்களைச் சுற்றிச் சுழல்கின்றன, அப்போது மெக்ஸிக ராணுவ வீரர்கள் பல்கலை மாணவர்களை வளைத்துப் பிடித்துக் கொன்று கொண்டிருந்தனர். அடுத்து, அமெரிக்காவில் இந்த வசந்தத்தில்[2] பிரசுரிக்கப்படவிருக்கிற, நெகிழ்வாகவும், பெரியதாகவும் வடிவமைக்கப்பட்ட  ‘த சாவேஜ் டிடெக்டிவ்ஸ்’ என்ற நாவல் இருக்கிறது. இதர நீளம் குறைந்த நாவல்களைப் போல இல்லாது, பல புறமும் அலைகிற, பல குரல் கொண்ட அமைப்பு கொண்டு இருபதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதி முழுதும் இருந்த மெக்ஸிகக் கவிஞர்களில் இளைஞர்களிடமும், முதியவர்களின் மீதும் கவனம் குவிக்கிறது.  அவர்களில் ஒருவர் குறிக்கிறார்: “கவிஞர்களும் சரி, அரசியல் வாதிகளும் சரி, குறிப்பாக மெக்ஸிகோவில், எல்லாரும் ஒருப் போலத்தான் என்று நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை, குறைந்தது அவர்களெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.”

ரொபெர்த்தோ பொலான்யோ தன் புனைவுகளுக்கான விஷயங்களை நேர்மையான, பழைய முறைகளில்தான் பெற்றார்- அதாவது, அவற்றில் பெரும்பாலானவற்றூடே தானே வாழ்ந்துதான் அடைந்திருக்கிறார். 1953 இல் சிலேயில் பிறந்த அவர், தன் குடும்பத்தோடு மெக்ஸிகோவுக்கு 1958 இல் குடி பெயர்ந்தார், அதுதான் பல்கலை வளாகத்தில் வன்முறை நடந்த வருடம். பிறகு 20 வயது இளைஞனாக சிலேக்குத் திரும்பினார், அல்யெண்டேயின் சோசலிசப் புரட்சிக்கு உதவுவதாக எண்ணம். ஆனால் மறுபடியும், அவர் போன நேரம் சரியில்லை: அவர் போய்ச் சேர்ந்து ஒரு மாதத்தில், ராணுவப் புரட்சி நடந்தது. அவருடைய தலைமுறையில், அரசியலில் தீவிரமாக இறங்கிய பல இளைஞர்களைப் போல, பொலான்யோவும் சிறையில் தள்ளப்பட்டார்; ஆனால் அவர்கள் பலரைப் போல இல்லாமல், அவர் ஒரு வழியாக விடுதலை செய்யப்பட்டார், அப்போது அவர் மெக்ஸிகோ நகர் மற்றும் பாரிஸ் நகரங்களின் வழியே பார்ஸெலோனா நகருக்குக் குடி பெயர்ந்தார். அவர் தன்னைச் சிலேயைச் சேர்ந்தவராகவா, அல்லது மெக்ஸிகராகவா அல்லது ஸ்பானியராகவா எப்படிக் கருதுகிறார் என்று, வாழ்வில் பின்னாளில் அவரைக் கேட்டபோது, அவர் தான் பொதுவான ஒரு “லாடின் அமெரிக்கன்” என்பதாக மட்டும் ஏற்றார்.

மேலோட்டமாகப் பார்த்தால், அவருடைய கதைக் கருக்கள் சராசரி லாடின் அமெரிக்க மாய எதார்த்தம் போலத்தான் தொனிக்கும், ஆனால் பொலான்யோ அந்த வேர்களிலிருந்து ஆன மட்டும் தொலைவில்தான் இருக்கிறார். ஒரு அம்சத்தைக் கருதினால், அவர் நகையுணர்வோடு, சுருக்கமாக எழுதுகிறார். அலங்காரமான உவமைகளும், நூற்றாண்டுகளைக் கடந்து வெடிக்கும் தொன்மங்களும், வட்டார வண்ணங்களும், மண்ணின் உயிர்ப்பும் அக்கினிக் குழம்பாக ஓடும் வாக்கியங்களும் அவருக்கு ஒவ்வாதவை. அவருடைய அனேக நாவல்கள் இருநூறு பக்கங்களுக்குக் கீழான அளவே கொண்டவை. (இரண்டு விலக்குகள் உண்டு- அறுநூறு பக்கங்கள் கொண்ட ‘த சாவேஜ் டிடெக்டிவ்ஸ்’ மற்றும் இதுவரை மொழி பெயர்க்கப்படாத 2666 நாவலும், இதுவோ ஸ்பானிய மொழிப் பதிப்பில் 1100 பக்கங்கள் நீளம்.)

இரண்டு நாவல்களும், சிறுகதைகளும்- இவற்றில் பாதி, இதுவரை இங்கிலிஷ் மொழிப் பதிப்பான ‘லாஸ்ட் ஈவினிங்ஸ் ஆன் எர்த்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டு விட்டன- அனேக நேரம் ரொபெர்த்தோ பொலான்யோவைப் போலவே தொனிக்கும் பாத்திரங்களைக் கொண்டிருக்கின்றன, அல்லது அவை பொலான்யோவேதான், சில நேரம் நேரடியாக அவரேயாகவோ, அல்லது சிறிதே மாற்றப்பட்ட உருவான ஆர்டுரோ பெலானோவாகவோ வருகின்றன. இந்தச் சிறுகதைகளில் பலவற்றில், அவர் பெயர் மேலும் சுருக்கப்பட்டு  ‘பி’ என்றாகிறது (அடிக்கடி வேறொரு எழுத்துடனும் சேர்த்துச் சித்திரிக்கப்படுகிறார், காட்டாக, ‘ஏ’, ஒரு பிரபல எழுத்தாளர், அல்லது ‘யு’ புலம் பெயர்ந்த ஒரு சக சிலேய நாட்டார்). இந்த எழுத்தாள விளையாட்டுத்தனம் அவருடைய படைப்புகளுக்கு ஒரு போர்ஹெஸ்ஸிய மேல்தொனியைக் கொணர்கின்றது. நிச்சயமாக அந்த ஆர்ஜெண்டீனிய எழுத்தாளர் இவர் மீது, மிக்க சக்தி வாய்ந்த, ஆழமான தாக்கம் கொண்டவராக ஏற்கப்பட்ட ஒரு பேராசான். ஆனால் விளைவில் அது ஜான் டாஸ் பாஸோஸ் மீதோ அல்லது ஜோசஃப் கான்ராட் மீதோ போர்ஹெஸுக்குத் தாக்கம் இருந்தால் என்ன நடக்குமோ அதைப் போல இருந்தது- உலகத்தின் அனைத்து அவலமும், பயங்கரமும் உட்பட்டு, அது இருக்கிற விதத்தின் மீது ஒருவர் கொண்டுள்ள தீவிர ஈடுபாடு, மற்றபடி விளையாட்டுத்தனம் நிரம்பிய அவருடைய அழகுணர்வின் மீது ஆட்சி செய்கிறதாக இருந்தது.

நாவல்களில் பொலான்யோவின் மிக விசித்திரமான புத்தாக்கங்கள் அனேகமாக நேரடியான உண்மைகள் போலத் தெரிய வருகின்றன, ஏனெனில் அவை உண்மைகளே. பை நைட் இன் சிலே நாவலில் உள்ள இலக்கியச் சந்திப்புக் கூடம், உதாரணமாக, சிலேயர்களுக்கு ‘டௌன்லி விவகாரத்தை” நினைவூட்டி இருக்கும். ஏனெனில் மரியா கெனாலிஸ் என்னும் பாத்திரம், 1970களில் இருந்த ஒரு ‘சலோனிஸ்ட்’ [3], இவர் மைக்கெல் டௌன்லி என்ற அமெரிக்கரை மணந்திருக்கிறார், அந்த அமெரிக்கர் பிற்பாடு அன்றைய சிலேய அரசிற்காக, சித்திரவதைகளை ரகசியமாக நடத்தியவர் என்பது அம்பலமாகிறது. அதே போல,  ‘ஆம்யுலெட்’ நாவலின் மையத்தில் உள்ள வன்முறைச் சம்பவங்கள், (மெக்ஸிக மாணவர்களை ராணுவ வீரர்கள் சுட்ட நிகழ்ச்சி),  ‘டிஸ்டண்ட் ஸ்டார் ‘நாவலில் உள்ளன (பினோஷேயின் கையாட்களால் இளம் கவிஞர்கள் கொல்லப்படுதல்) ஆகியன் எல்லாம் நிஜத்தில் நடந்தவைதான். லாடின் அமெரிக்கச் சரித்திரத்தில் இத்தகைய சம்பவங்கள் எதார்த்தத்தையும் மீறிய நிஜங்கள், ஆனால் இந்த வகைக் கதைகளை வெறும் உணர்ச்சிக் கொப்பளிப்புக்கான வன்முறைச் சித்திரிப்பாகவோ, அல்லது நியாய உணர்வுக்காகப் பாடம் நடத்துவதாகவோ இல்லாமல் சித்திரிக்க பொலான்யோவின் அங்கதச் சுவை கொண்ட புத்தியின் எதார்த்தத்தால்தான் முடிந்திருக்கிறது.

நகைமுரண், லாடின் அமெரிக்க இலக்கியப் போர்க்கருவிகளில் மிகக் கனரக ஆயுதம், பொலான்யோவிடம் மிக இலேசானதாகவும், மெலிதாகவும் ஆகிறது. அவருடைய வாக்கியங்களோ, ஒரேநேரம் ஆக்ரோஷமானதாகவும், மிதப்பனவாகவும் இருக்கின்றன, நம் உணர்வுகளை அவை அலகு போட்டுக் கொண்டே இருக்கையில் ஒரு உணர்ச்சியில் தங்கி நிலைக்க மறுக்கின்றன. (அவருடைய முன்னிலை மொழிபெயர்ப்பாளரான க்ரிஸ் ஆண்ட்ரூஸ், அவருடைய தொனியைக் காப்பாற்றுவதில் அற்புதங்களை நிகழ்த்துவதால், அவருக்கு அபாரமான சேவை புரிந்திருக்கிறார்.) இங்கே, உதாரணமாக டிஸ்டண்ட் ஸ்டாரிலிருந்து ஒரு பத்தி. இதில் கதை சொல்லியும், அவருடைய சக சிறைக்கைதியும், பித்தனுமான நார்பெர்ட்டோவும், அவர்களை எல்லாம் சிறைப்படுத்தி இருக்கிற விளையாட்டு மைதானத்திலிருந்து, அந்த விமானி, விமானத்தால் ஆகாயத்தில் எழுதத் துவங்கியிருக்கிற ‘கவிதைகளை’ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்:

அது உனக்குச் சந்தோஷமாக இருந்ததா? நார்பெர்டோ கேட்டான். நான் கை விரித்தேன். நான் அதை ஒருநாளும் மறக்க மாட்டேன், அவ்வளவுதான் எனக்குத் தெரியும், என்றேன். அது ஒரு மெஸ்ஸர்ஷ்மிட் விமானம் என்பதை நீ பார்த்தாயா? ஏதோ, நீ அது அப்படி என்றால், நீ சொல்வதை நம்புகிறேன், என்றேன். அது ஒரு மெஸ்ஸர்ஷ்மிட், என்றான் நார்பெர்டோ, அது அந்த இன்னோர் உலகத்திலிருந்து வந்தது என்று நினைக்கிறேன். நான் அவனை முதுகில் தட்டினேன், ஆமாம் பின்னே, அங்கேருந்துதான் வந்தது, என்றேன். அந்த வரிசை நகரத் துவங்கி இருந்தது; நாங்கள் அரங்கத்துக்குள் திரும்பிப் போகத் துவங்கி இருந்தோம். அது லாடினில் எழுதித்து, என்றான் நார்பெர்டோ. ஆமாம், என்றேன், ஆனால் எனக்கு அது ஏதும் புரியவில்லை, என்றேன். எனக்குப் புரிந்தது, என்றான் நார்பெர்டோ, சும்மாவா, அச்சுக் கோர்ப்பதில் நான் அசகாயசூரனாச்சே. அது உலகத்தின் துவக்கம் பற்றி, மனத்துணிவைப் பற்றி, ஒளியையும், இருட்டையும் பற்றியது. லூக்ஸ் என்றால் ஒளி. டெனெப்ராஸ் என்றால் இருட்டு. ஃபீயட் என்றால் அங்கே தோன்றட்டும். அங்கே ஒளி தோன்றட்டும், புரிஞ்சுதா? அது ஏதோ இத்தாலியக் கார் போல எனக்குத் தெரிகிறது என்றேன். இல்லை, நீ தப்பாப் புரிஞ்சுகிட்டிருக்கே, சகோதரா. கடைசியில் அவன் நம் எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும் என்றான். நீ அப்படியா நினைக்கிறே? என்றேன். ஆமாம், நம் எல்லாருக்கும், ஒவ்வொருத்தருக்கும். ஒரு கவிஞன், என்றேன். குறைஞ்சது மரியாதை தெரிஞ்சவன், என்றான் நார்பெர்டோ.

அது நாவலின் துவக்கத்தில், நம் கதைசொல்லி ஒரு நிருபரைப் போல செயல்படும் விதம். வேறிடத்தில் அவர், பல வருடங்கள் கழித்து, த வார்லாக் ரிடர்ன்ஸ் என்ற புத்தகத்தில், கார்லோஸ் வீடரைப் பற்றித் தன் நண்பன் பிபியானோ எழுதியதை வைத்து, இலக்கிய விமர்சனத்தைப் பற்றிக் கருத்து சொல்லும்போது, இன்னும் கூடுதலான நினைவுகளில் தோய்வோடு தெரிகிறார்:

“எல்லைகளைச் சோதித்தல்”[4] என்று தலைப்பிட்ட ஓர் அத்தியாயம் (புத்தகத்திலேயே நீளமானது இது) வீடருக்கென்று உள்ளது, அதில் பிபியானோ பொதுவாகத் தான் கொள்ளும் நிதானமான, உண்மை சார்ந்த தொனியைக் கைவிட்டு விடுகிறார்… அந்த விமானி தோன்றியது அவரை அதிரச் செய்து, நிலைகுலையச் செய்தது போல இருக்கிறது. ஆர்ஜண்டீனிய மற்றும் ப்ராஸிலியர்களான சித்திரவதைக்காரர்களைப் பற்றி அவர் கவலை கொள்வதில்லை, மாறாக அவர்களைக் கிண்டல் கூடச் செய்கிறார் என்றாலும், வீடரை எதிர் கொள்ளும்போது அவர் இறுக்கமடைகிறார், அடைச் சொற்களை திறமையற்று அடுக்குகிறார், மலத்தைச் சுற்றிய கெட்ட வார்த்தைகளை வீசுகிறார், கண்களைக் கூடச் சிமிட்டாமல் பார்க்க முயல்வது போல இருக்கிறார், அப்படி இருந்தால் அவருடைய கதை மாந்தர்கள் (விமானி வீடர், தானே எல்லாம் கற்றுத் தேர்ந்த ரூயிஸ்-டாக்லே) தொடுவானைத் தாண்டி மறைந்து விடாமல் இருப்பார்கள் என்பது போலப் பாவனை. ஆனால் எல்லாரும் இறுதியில் கண்ணைச் சிமிட்டத்தான் செய்கிறார்கள், எழுத்தாளர்களும் கூடத்தான், ஏன் குறிப்பாக எழுத்தாளர்கள்தான் அப்படிச் செய்கிறார்கள், வீடரும் எப்போதும்போல, மறைந்து விடுகிறார்.

“தென் அமெரிக்காவில் 1972 இலிருந்து 1989 வரை இருந்த ஃபாசிச இலக்கிய இயக்கங்களைப் பற்றிய, படிக்கத் தூண்டும் ருசியான ஆராய்வு” என்று வருணிக்கப்படுகிற,“த வார்லாக் ரிடர்ன்ஸ்” என்பதான ஒரு புத்தகம் இருக்கிறது என்ற யோசனையே ஒருக்கால் நம்பமுடியாத அம்சமாகத் தெரியலாம். “டிஸ்டண்ட் ஸ்டார்” நாவலில் முதலில் காணும் முன்னுரைக் குறிப்பை நாம் நுணுகிப் பரிசீலிக்கும்போதுதான் நாம் அறிகிறோம், பொலான்யோவே (ஆம், அது உண்மைதான்) நாஜி லிடரேச்சர் இன் த அமெரிக்காஸ் என்ற நாவலுக்குத் தான் ஆசிரியர் என்று சொல்லிக் கொள்கிறார்.

ரொபெர்த்தோ பொலான்யோவின் புனைவுகளைக் கபளீகரம் செய்யும்போது ஒரு நேரத்தில், ஒவ்வொரு வாசகரும் அந்த மனிதரையே பற்றி நிறையத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவார். இந்த விருப்பம் துவக்கத்திலோ அல்லது பிற்பாடோ எப்போது எழுந்தாலும், ஏற்கனவே அது காலதாமதமாக எழுந்த விருப்பம்தான்: பொலான்யோ 2003 இல் இறந்துவிட்டார், அப்போது அவருக்கு வயது ஐம்பது. ஒவ்வொரு புத்தக அட்டையிலும் அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள்- மேலே நான் கொடுத்திருக்கிற விவரங்கள் போல மட்டும், அவற்றோடு நடு வயதில் அவருடைய அகால மரணம் பற்றிய தகவலும்- சுருக்கமாகக் கொடுக்கப்படுகின்றன. சில நேரம், எல்லா நேரமும் இல்லை, பதிப்பாளரின் சுருக்கக் குறிப்பு அவர் மரணத்துக் காரணம் “ஈரல் குலைவு” என்று சொல்கிறது.

அவருடைய மரணம் பற்றிய தகவலின் போதாமையால் சலிப்புறும் ஒருவர், பொதுவில் கிட்டுகிற அவருடைய இரண்டு ஒளிப்படங்களைச் சோதிக்கக் கூடும். அடிக்கடி பயன்படுத்தப்படுகிற ஒரு படம், பொலான்யோவை அவர் சிறப்பான நிலையில் இருக்கையில் காட்டும், உதடுகளில் சிகரெட்டுடன், இன்னொரு கை நாற்காலியின் முதுகில் போடப்பட்டு, அவருடைய வட்டமான முகத்தில் நடுவில் வட்ட வில்லைகள் கொண்ட மூக்குக் கண்ணாடி பொருத்தப்பட்டு, அவருடைய சுருள் முடி அவருடைய  மேல் அங்கி போர்த்திய டி சட்டையின் நிறத்திலேயே இருக்கிற படம் – சுருக்கமாகச் சொன்னால், நிழல் வீதியில் உலாப் போகிறவரின் தோற்றம். இன்னொரு படத்தில், இது அபூர்வமாகவே காணப்படுகிறது, தெளிவாகத் தெரிகிறபடி பின்னாளில்தான் எடுக்கப்பட்ட படம் இது, அவர் இறக்கப் போகிற நிலைக்கு நெருங்கிய காலத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும்: அந்த முடி, இன்னும் கருமையாக இருந்தாலும், சிறிது பின் வாங்கியிருக்கிறது, அந்த சிகரெட் இப்போது இல்லை, முகமும் இப்போது நிறைய மெலிந்து இருக்கிறது, கண்ணாடி இல்லாமல்,நோகக் கூடியதாகத் தெரிகிறது. இரண்டிலும் அவர் சிரிக்கவில்லை, ஆனால் உதடுகளில் ஒரு சிறு நெளிசல் இருக்கிறது, அல்லது கண்புருவங்களில் ஒரு தூக்கல், அது கூர்மையான நகையுணர்வு இருப்பதைச் சுட்டுகிறது.

“பொலான்யோ சிரிப்பது போலத் தெரிவார்; அனேகமாக ஒருபோதும் அவர் சிரித்ததில்லை, ஆனால் ஒருபோதும் கடுமையாக இருப்பதாகவும் தெரிந்திருக்கவில்லை.” இந்த வாக்கியம், ஹாவியர்  செர்க்காஸ் என்பவர் எழுதிய ‘சோல்ஜர்ஸ் ஆஃப் ஸலாமிஸ்’ என்கிற ஸ்பானிய நாவலில் வருகிறது, அது 2001 இல் ஸ்பெயினில் பிரசுரிக்கப்பட்டது, இங்கிலிஷில் 2004 இல் மொழி பெயர்க்கப்பட்டது. அந்தப் புத்தகத்தில் கடைசி மூன்றாம் பாகம் வரை இந்தப் பாத்திரம் தோன்றல்லை என்றாலும், அங்கிருந்து பொலான்யோ முக்கியமான பாத்திரமாக ஆகிறார், அவர்தான் அந்தக் கதைத் திட்டத்துக்குத் தேவையான உந்துதலைக் கொடுத்து ஒரு முடிவை நோக்கி நகர்த்துகிறார். உண்மைத் தகவல்களைத் துரத்துவதில் செர்க்காஸ் காட்டும் பிடிவாதத்தில் ஏதோ ஒன்றும் (அந்த நாவல் ஓரளவு இதைப் பற்றியதுதான்),  மேலும் அந்தப் பாத்திரத்தை நாவல் சித்திரித்தற்கும், பொலான்யோவின் எழுத்திலும், பேட்டிகளிலும் நமக்குத் தெரியவரும் ஒரு நபரின் சித்திரத்துக்கும் இடையே உள்ள முழுப் பொருத்தம் பற்றிய ஏதோ ஒன்றும், செர்க்காஸின் “புனைவில்’ நாம் பெறும் பொலான்யோ எனும் மனிதனின் உருவரைவுதான் அறுதியாக நாம் அவரைப் பற்றிப் பெறப் போகிற ஒரு உண்மையான சித்திரிப்பு என்று என்னை நம்பச் செய்கிறது. இதற்கு மேல் நமக்கு ஏதும் கிட்டாது என்று தோன்றுகிறது.

நாவலின் இறுதிப் பகுதி துவங்கும்போது, செர்க்காஸ் தான் பணி புரியும் ஒரு வட்டாரச் செய்தித்தாளுக்காகப் பேட்டி எடுக்க ரொபர்த்தோ பொலான்யோவைக் காணச் செல்கிறார். பொலான்யோ- தன் மனைவியுடனும், மகனுடனும் கடலோர நகரான ப்ளேன்ஸில் வசிக்கிறார், அது பார்ஸெலோனாவிலிருந்து அதிக தூரமில்லை- பல வருடங்களாக வறுமையிலும், யாருக்கும் தெரியாதவராகவும் வாழ்ந்திருந்து விட்டு, அப்போதுதான் ஒரு பெரிய இலக்கியப் பரிசை வென்றிருக்கிறார், அதனால் பிரபலஸ்தராகி இருக்கிறார். இருந்தும் வெற்றி அவருக்குப் போதையூட்டி இருக்கவில்லை. கதவைத் திறக்க வரும் பொலான்யோ முதலில் சொல்வது, ஹாவியர் செர்க்காஸின் பெயர் அவருக்குத் தெரிந்திருந்தது என்பதுதான்; அவர் உடனே வீட்டின் பின்புறத்து அறைக்கு விரைந்து சென்று, செர்க்காஸின் ஏற்கனவே பிரசுரமான இரண்டு நாவல்களை எடுத்து வருகிறார்.

அந்த இரு புத்தகங்களும் கருக்கு இழந்திருப்பதைப் பார்த்த பிறகு, “நீங்கள் இவற்றைப் படிக்கிறீர்களா,” என்று அதிர்ஷ்டமில்லாத செர்க்காஸ் வியப்புடன் கேட்கிறார்.

“பின்னெ, இல்லையா?” பொலான்யோ பதிலளிக்கிறார். “நான் எல்லாவற்றையும் படிக்கிறேன். தெருவில் காற்றில் அடித்துப் போகும் துண்டுக் காகிதங்களைக் கூட.” அவர் அந்த நாவல்களைப் பாராட்டுகிறார், பிறகு ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பங்கெடுத்து மீண்ட ஒரு வீரர் பற்றிய அருமையான கதை ஒன்றைக் கொடுத்து, அதன் மூலம் செர்க்காஸுடைய இன்னும் முடிவடையாத புத்தகத்துக்கு உதவுவதால், செர்க்காஸுக்கு நெருக்கமானவராக ஆகிறார்.  பொலான்யோ இப்படி மற்ற எழுத்தாளர்களைத் தரமறிந்து உதவும் தாராள குணமுள்ளவர் என்பதும், அதே போல அவருடைய இளக்காரம் கலந்த நகைச்சுவை உணர்வும் அந்தச் சந்திப்பு பூராவும் தெரிய வருகிறது.  பினோஷேயின் ராணுவப் புரட்சி காலத்தில் வாழ்ந்தது எப்படி இருந்ததென்று செர்க்காஸ் கேட்கும்போது (தெளிவாகவே முட்டாள்தனமான கேள்வி, ஏனெனில் பொலான்யோவின் புனைவுகள் பெரும்பாலும் அந்த விஷயத்தைப் பற்றியவையே), பொலான்யோ ஒரு கணம் தயங்குகிறார், பிறகு பதிலளிக்கிறார், “மார்க்ஸ் சகோதரர்களின் படம் போல இருந்தது, ஆனால் நிறைய பிணங்களோடு.”

செர்க்காஸ் 47 வயதான பொலான்யோவை வருணிக்கையில் ”தப்பாமல் ஒரு ஹிப்பி சிறுவியாபாரி போலத் தெரிந்தார், அந்தத் தோற்றம் நாடு கடத்தப்பட்டு யூரோப்பில் அன்று வாழ்ந்த பல லாடின் அமெரிக்க எழுத்தாளர்களையும் பீடித்திருந்தது,” என்று எழுதுகிறார், ஆனால் அவருடைய பொதுவான தேக நலம் பற்றி எதையும் சொல்வதில்லை. ஆனால் அவர்களுடைய சந்திப்பு பொலான்யோவின் சாவுக்கு மூன்று வருடங்கள் முன்புதான் நேர்ந்தது, அவரைக் கொன்ற ஈரல் குலைவு நோய் 1992 இலேயே கண்டறியப்பட்டிருந்தது, எனவே அந்நேரத்தில், தன் சாவு வரப்போகிறது என்பதைப் பொலான்யோ ஏற்கனவே அறிந்து குறைந்தது எட்டு ஆண்டுகள் ஆகி இருந்தன.

பத்திரிகையாளர்களில் எல்லாரும் செர்க்காஸைப் போல அந்தரங்கத்தை மதிப்பவர்களாக இருக்கவில்லை. பொலான்யோ கொடுத்த ஒரு இறுதிப் பேட்டி, ’ப்ளேபாய்’ பத்திரிகையின் மெக்ஸிகப் பதிப்பில் அவருடைய மரணத்துக்கு அடுத்த வாரம் வெளியானது. அதில் அந்தப் பெண் பேட்டியாளர் பொலான்யோவை அவரது நோய் பற்றிய கேள்விகளால் துளைத்து விட்டார்.  நீங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று எப்போது தெரிந்து கொண்டீர்கள்? நீங்கள் இறப்பதற்கு முன் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? தற்கொலையைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மரணத்துக்குப் பிறகான வாழ்வில் யாரைச் சந்திக்க விரும்புவீர்கள்? (”மரணத்துக்குப் பிறகு வாழ்வேதும் உண்டு என்று நான் நம்பவில்லை,” எனப் பொலான்யோ பதிலளிக்கிறார். “அப்படி ஒன்று இருந்தால் நான் வியப்படைவேன்! பாஸ்கெல்[5] நடத்தும் ஒரு வகுப்பில் நான் சேர்ந்து கொள்வேன்.”)

செர்க்காஸ் அன்பான, தடுமாறுகிற ஒரு பேட்டியாளராக இருக்கிறாரென்றால், ப்ளேபாய் பத்திரிகையின் பெண் பேட்டியாளர் அதற்குச் சரிநிகர் எதிராக கறாராகவும், உறுதியான எஃகைப் போல கூர்மையாகவும் இருக்கிறார். அவர் பொலான்யோவைத் தன் நாடு எதெனச் சொல்லுமாறு வற்புறுத்துகிறார், அவரை பொலான்யோ “லாடின் அமெரிக்கன்” என்று சொல்லித் தட்டிக் கழிக்கும்போது, அவர் மேலும் அழுத்தம் கொடுக்கிறார். ஆனால் தந்தை நாடு என்பது உங்களுக்கு எப்படி அர்த்தமாகிறது? என்று, அங்கு ஸ்பானிய மொழிச் சொல்லான ‘பாத்ரியா’ என்பதைப் பயன்படுத்தி, அவர் கேட்கிறார்.  “என் தந்தைநாடு என்பது என் இரு குழந்தைகள், லாவ்டாரோவும், அலெக்ஸாண்ட்ராவும்,” என்று பொலான்யோ உறுதியாகச் சொல்கிறார், பிறகு தன் பதிலைத் திருத்திக் கொள்கிறார்: “ஒருக்கால், இரண்டாம் பட்சமாக, என்னுள்ளே இருக்கும் சில கணங்கள், சில தெருக்கள், சில முகங்கள் அல்லது சில காட்சிகள் அல்லது புத்தகங்கள், மேலும் இவற்றை நான் ஒருநாள் மறக்கக் கூடும், ஒரு தந்தை நாட்டை வைத்துக் கொண்டு நாம் செய்யக் கூடியதில் அதுதான் மிகச் சிறப்பானது.”

ஆனால் அந்த உரையாடல் முழுதும் சாவும், தந்தை நாடும் பற்றி இருக்கவில்லை. அவருடைய அபிமான எழுத்தாளர்களைப் பற்றிக் கேட்கப்பட்டபோது பொலான்யோ நாம் எதிர்பார்க்கக் கூடியவர்களையே பட்டியலிடுகிறார்: செர்வாண்டெஸ், மெல்வில், போர்ஹெஸ், கொர்த்தாஸார், விட்கென்ஷ்டைன், பெரெக், ஹாரி, ப்ரெடொன்… பேட்டியாளர், உலகத்தில் பிரபலமானவர்களில் யாரைப்போல இருக்க வேண்டுமென்று அவர் விரும்பி இருப்பார் என்று கேட்கையில், பொலான்யோ அனேகமாக புனைவுலகின் பாத்திரங்களையே பதிலாகத் தருகிறார்: ப்ரின்ஸ் மிஷ்கின், நமது மாமன், ஆலிஸ், நமது ஆசிரியர். ஹூடினி, ஆனால் அவரோ ஆலிஸ், சோரெல் மேலும் மிஷ்கினுடைய ஒரு கலவைதான்.” இந்தப் பட்டியல் விளக்கமாக இருப்பது அதன் பன்னாட்டுத் தன்மையால் மட்டுமல்ல. அது பொலான்யோவின் சொந்தப் பார்வைக்கு ஒரு அணுகல் முறையையும், அதன் முன் காரணங்களையும் கொடுக்கிறது. அவருடைய பார்வை ஒரே நேரம் வழி தவறாத தர்க்கத்தோடு, ஆனால் நிச்சயமாக அறிக்கையில் எழுதப்படக் கூடிய வகைக் கிறுக்குத்தனத்தோடும், குழந்தைத்தனமாகவும், மனமுதிர்ச்சி உள்ள விதமாகவும், அதீதப் புனைவாகவும் அதே நேரம் முற்றிலும் எதார்த்தமாகவும் இருக்கும் பார்வை. அவர் ஏதோ பாழிலிருந்து தோன்றி விடவில்லை, அப்படிச் சில நேரம் தோன்றலாம், ஆனால் அவருடைய படிப்பினாலும், நிறைய நிகழ்வுகள் கொண்ட அவரது வாழ்வின் சம்பவங்களால் போஷிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டவர். அவருடைய பாத்திரங்கள் அரசியலையும், கவிதையையும் பற்றி சரிசமமான அக்கறை கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ரொபெர்த்தோ பொலான்யோவின் புனைவுகளைக் கவனிக்கத்தக்கதாக ஆக்கும் ஒரு குணம் எதென்று நான் சொல்ல வேண்டுமானால் அது, கறாரான, நடைமுறைக்கு ஏற்ற வகை இரக்கத்தைக் காட்டுவதில் அவருக்கு இருக்கும் திறன் என்பேன்.  உலகுடன் ஒன்றுகிற புரிதலோ, தெய்வீகத்தால் உந்தப்பட்ட மன்னிப்போ, அல்லது வேறெந்த அசட்டுப் பிசட்டு உணர்ச்சிப் பெருக்கோ அல்ல. பொலான்யோ மனிதத்தின்  அல்லது குறிப்பிட்ட தனி நபர்களின் குற்றங்களைக் காண மறுக்கும் குருட்டுத்தனம் ஒருபோதும் இல்லாதவர்; என்ன இருந்தாலும், அவர்கள்தான் அவருடைய பிரதான கருப்பொருட்கள். ஆனால் அவர் தன் மனதுக்குள்ளும், பிறருடைய மனதுகளிலும் -அந்த மற்றவர்கள், கொலைகாரர்களாகவோ, போலிகளாகவோ அல்லது பைத்தியக்காரர்களாகவோ, அல்லது இலக்கிய விமர்சகர்களாகவோ, யாராக இருந்தாலும்- சமமாக நுழைந்து விடும் புனைவுகளைப் படைக்கிறார், அதற்காக அவர் நன்மை தீமை என்ற கருத்துப் பாகுபாடுகளை முற்றிலும் கைவிட்டு விட்டார் என்றில்லை, ஆனால் அவை பாகுபாடுகள் என்ற அளவில் போதுமானவை அல்ல என்று தோன்றச் செய்கிறார்.

டிஸ்டண்ட் ஸ்டார் நாவலின் ஒரு உப பாத்திரம் பற்றி பொலான்யோ குறிக்கிறார், “ஓர் உண்மையான வட அமெரிக்கரைப் போல, தீமை என்பது, முழுமுற்றான தீமை என்பது உண்டு என்பதில், அவருக்கு உறுதியான, போர்க்குணமுள்ள நம்பிக்கை இருந்தது.” நாம் இப்படிப்பட்டவரை அறிவோம். ஆனால், இப்படி ஒரு நம்பிக்கைக்கு ஏதாவது நியாயம் இருந்தால், அது டிஸ்டண்ட் ஸ்டார் புத்தகத்தில் விவரிக்கப்படும் சம்பவங்களாகவே இருக்கும்: அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுவது, அதிகாரத்தின் குரூரமான மகிழ்ச்சிகள், பினோஷேயின் ஒட்டு மொத்தமான மூளைப் பிறழ்வு ஆகியன அவை. ஆனால் பொலான்யோ, இப்படிப்பட்ட சுலபமான பிரிப்புகளைச் சிறிதும் மதிப்பதில்லை. அவருடைய அரக்கர்களையும், கொலைகாரர்களையும் ஒரு புறம் வைத்து, அவருடைய எழுத்தாளர்களையும், கனவு காண்போரையும் இன்னொரு புறம் வைத்துப் பார்த்தால் அங்கு ஒரு நீள் தொடர்ச்சி புலப்படும்- அல்லது தொடர்கோட்டை விட மேலானதாக, ஒரு பிரதிபலிக்கும் ஆடியை வைத்தால், எதிரெதிர் முனைகளில் இருப்பவர்கள் பிரதிபலிக்கும் தளத்தில் இரட்டையராகத் தெரிவார்கள்.

வெளிப்படையாகவும், மறைவாகவும், இந்த இரட்டையர்கள் மற்றும் இதர ஜோடியான உருக்கள் பற்றிய கருத்து டிஸ்டண்ட் ஸ்டார் புத்தகம் பூராவும் பரவியிருக்கிறது; அந்த நாவலின் இறுதியில் போலான்யோவியப் பார்வையோடு கதை சொல்லும் பாத்திரம் ப்ளேன்ஸ் என்ற நகரில் ஒரு சிற்றுண்டிக் கடையில் உட்கார்ந்திருக்கிறார், ப்ரூனோ ஷூல்ட்ஸின்[6] புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த பிம்பம், செய்த கருமத்தின் விளைவைப் போலத் திரும்ப வந்து வாட்டுகிறது:

அப்போது கார்லோஸ் வீடர் உள்ளே வந்து, மூன்று மேஜைகளுக்கு அப்பால், முன்புற ஜன்னலருகே, உட்கார்கிறான்.  அவன் அப்போதே திறந்த ஒரு புத்தகத்தை அவனுடைய தோளுக்கு மேலிருந்து பார்க்கிற வெறுப்பூட்டும் ஒரு சயாமிய இரட்டையன் போல, அவனோடு இணைந்த உடலாக, ஒரு குமட்டுகிற கண நேரத்துக்கு, என்னையே நான் பார்க்க முடிந்தது. அவன் கடலை வெறித்துப் பார்த்தபடி புகை பிடித்துக் கொண்டிருந்தான், அவ்வப்போது தன் புத்தகத்தைப் பார்த்தான். சிகரெட்டை அணைத்து நசுக்கியபடி, என் புத்தகத்தின் பக்கங்களில் இணைய நான் முயன்று கொண்டிருந்தபோது, அவன் என்னைப் போலவே இருந்தான் என்று உணர்ந்து அச்சமடைந்தேன்.

இந்தப் பத்தி வருணிக்கிற மனநிலையைக் குறிக்க, பரிவு என்பது மிகவும் வறிய, தொய்வான சொல். இங்குள்ளது சக்தி மிக்கதும், விரும்பி யோசிக்காமலே எழும் ஒன்றுதல், ஹூடினி[7] மறைவது போன்ற நிகழ்த்தல், இது பொலான்யோ அவருடைய மிக அச்சமூட்டும், மிக்க அருவருப்பான ஒரு பாத்திரப் படைப்போடும், அவருடைய மிக அருமையான பாத்திரம் ஒன்றோடும் கரைந்து இணைய வழி செய்கிறது. இந்த சுயத்தை ஆழ்த்தல் என்பது அவருடைய கதைகளிலும், நாவல்களிலும் தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அவருடைய சிறப்பான கதைகளில்- அவைதான் மிகக் கனிவான உணர்ச்சிகள் கொண்டவை, ’ஸென்ஸினி ’மற்றும்  மௌரீஸியோ ’த ஐ’ ஸீல்வா போன்றன- பொலான்யோ தன்னை விரும்பத்தக்க பாத்திரங்களோடு இணைத்துக் கொள்வதையே அனேகமாகச் செய்கிறார்; நாவல்களில்தான், விட்டு விலகி நிற்பதற்கு அவற்றில் நிறைய இடம் இருக்கிறது, அவரால் கிராதகர்களை முழுதாக அரவணைத்துக் கொள்ள முடிகிறது போலத் தெரிகிறது.

வெறெந்த புத்தகத்தையும் விட பை நைட் இன் சிலே நாவலில்தான் இந்த அணுகல் மிகத் தெளிவாகத் தெரியக் கிடைக்கிறது, அதை அவர் 2000த்தில் பிரசுரித்தார். த சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நூலுக்கு எல்லாப் பரிசுகளையும் வாங்கிய பிறகு இது நடந்தது. இந்தச் சிறு நாவல் (இதை அவர் முதலில் ‘ஸ்டார்ம்ஸ் ஆஃப் ஷிட்’ என்று அழைக்க விரும்பி இருந்தார், அவருடைய பிரசுரகருடன் உரையாடியது இந்த எண்ணத்தைக் கைவிட வைத்தது) பரிசுகளை வென்ற பருமனான நாவலை விட மேலானது என்பது அவர் கருத்து.  ஏன்? “ஓர் எளிய காரணத்தால்,” அவர் ஒரு பேட்டியாளரிடம் சொல்லி இருந்தார்.  “நாவல் என்பது குறைப்பட்ட கலை வடிவு- ஒரு வேளை, இலக்கியத்தில், இருப்பதிலேயே மிகவும் அதிகம் குறைப்பட்ட ஒன்று. பக்கங்கள் அதிகமாக ஆக, அதில் உள்ள குறைகள் வெளித்தெரிய வர வாய்ப்புகள் மேலும் அதிகமாகும்.” பொலான்யோவுடைய வழக்கமான கோணல் பார்வையால், தான் ‘பை நைட் இன் சிலே’ நாவலில் ஏதோ சிறப்பான ஒன்றைச் சாதித்திருக்கிறோம் என்று அவர் அறிந்திருந்தார் என்பதை மறைக்க முடியவில்லை.

அந்த மொத்த நாவலுமே ஒரு புலம்பல், அல்லது ஒரு ஆழ்ந்த யோசிப்பு, அல்லது அதன் மையப் பாத்திரமான பாதிரி உர்ரூடியா லாக்வாயின்[8] மனதில் நடக்கும் ஒரு நினைவு கூரும் வேலை. அவர் இலக்கிய விமர்சகரான எச்.இவாகாச்சே என்றும் அறியப்படுகிறார். (இது அவருடைய இரட்டையரான பாத்திரம், அதாவது பொலான்யோவின் மற்ற இரட்டைப் பெயர் கொண்ட வில்லன் பாத்திரங்களைப் போலத்தான்). இப்போது தன் மரணப் படுக்கையில் கிடக்கும் பாதிரி உர்ரூடியா, ராணுவப் புரட்சிக்கு முன்பும் பின்பும் தான் ஒரு சிலேய இலக்கிய விமர்சகராக இருந்த அனுபவங்களை நினைவு கூர்கிறார். பாவ்லோ நெரூதாவுடன் தனக்கு நேர்ந்த ஒரு சந்திப்பைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார்; இடதுசாரி மற்றும் வலது சாரி (அனேகர் இந்த வகைதான்) இலக்கிய ஆளுமைகளை நினைவு கூர்கிறார்; அவர் ஒரே ஒரு முறையல்ல, ஆனால் மூன்று முறைகள்- மரியா கனாலிஸின் இலக்கியச் சந்திப்புகள் நடக்கும் நேரத்தில் அவளுடைய அமெரிக்கக் கணவன் ’சந்தேகத்துக்குள்ளானவர்களை’ அந்த வீட்டின் நிலவறையில் சித்திரவதை செய்ததைத் தான் பார்த்த காட்சியையோ அல்லது கற்பனை செய்த காட்சியையோ- விவரிக்கிறார்.  இதெல்லாமே உயிர்த் துடிப்பு நிறைந்த ஆனால் அடங்கிய குரலில் செய்யப்படுகிறது. அக்குரல், வேண்டி ஏற்ற முட்டாள்தனத்துக்கும், பிரகாசமான அறிவுக்கும் இடையில், தன்னுடன் ஐக்கியமாவதற்கும், தன்னை நியாயப்படுத்துவதற்கும் இடையில், பேருவகைக்கும், மனக்கசப்புக்கும் இடையில் எங்கோ மிதக்கிறது.

இப்படி கசப்புக்கும், உவகைக்குமிடையே ஒரு மறைவான தொடர்பு இருக்கிறது என்பதை ஒரு பெண் பாத்திரம், ஆம்யுலெட் என்ற நாவலின் கதை உரைப்பவர், வெளிப்படுத்துகிறார்:

அந்தச் செய்தியை நான் கேட்டபோது அது என்னைச் சுருங்கச்செய்தும், நடுங்குபவளாகவும், ஆனால் கெட்ட செய்திதான் என்றாலும் அதே நேரம் பிரமிப்புக்குள்ளானவளாகவும் ஆக்கிச் சென்றது, ஏதோ எதார்த்தமே என் காதில் ரகசியமாகச் சொல்வது போல இருந்தது: என்னால் இன்னமும் பெருஞ்செயல்களைச் செய்ய முடியும்; மூடப் பெண்ணே, என்னால் இன்னமும் நீ எதிர்பாராமல் இருக்கும்போது -உன்னையும் வேறு அனைவரையும் கூடத்தான்- ஆட்கொள்ள முடியும்….

‘பை நைட் இன் சிலே’ நாவலுக்கு முந்தைய நாவலான ஆம்யுலெட் எழுதப்பட்டபோது அடுத்து வரப் போகிற ஒரு சிறப்பான நாவலுக்குத் தயாரிப்பான முயற்சியாக இருந்தது. பொலான்யோ அடுத்த நாவலில் இரு முன்னெடுப்புகளை அடைந்தார்: சகிக்க முடியாத ஒரு பாத்திரம் விவரிக்கும் உரையாக நாவலை அமைத்தார், தன்னை அந்தப் புத்தகத்திலிருந்து முழுதும் நீக்கி விட்டார். ஆம்யுலெட் நாவலிலோ, த சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலிலோ இரண்டிலும் இருந்த மாதிரி, பை நைட் இன் சிலே நாவலில் ஆர்டுரோ பெலானொ என்று ஒரு பாத்திரம் இல்லை; போலான்யோவின் உருவம் எந்த விதமாகவும் அதில் இல்லை. அதில் வருகிற ஒரு  “தளர்ந்த இளைஞனை”ப் பார்த்து அந்தப் பாதிரி மிகவும் பயப்படுவதாகத் தெரிகிறதே, அவனை ஒருக்கால் நாம் கணக்கில் எடுக்கலாமோ என்னவோ. ஆனால் அவன் யாராக வேண்டுமானாலும், சாவாகக் கூட இருக்கலாம்.  டிஸ்டண்ட் ஸ்டார் நாவலில் எதைச் செய்ய எழுத்தாளர் மிகவும் தயங்கினாரோ,  கடைசியில் அதையே கச்சிதமாக பை நைட் இன் சிலே நாவலில் செய்து விடுகிறார்: அதாவது தன் மிக வெறுக்கப்படக் கூடிய பாத்திரத்தில், உடலோடு ஐக்கியமாகி விடுகிறார். ”வெறுப்புக்குரிய சயாமிய இரட்டையர்” என்ற பிரித்துப் பார்க்கும் தன்மை கூட இங்கு இல்லை, அவர்கள் ஒன்றாகி ஒரே நபராகி விடுகிறார்கள், அவன் அச்சம் பீடித்து இறந்து கொண்டிருக்கும், சிலேயில் தன் கடந்த கால நாட்களின் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பவன், தானும், தன் எல்லா எழுத்துகளும் பூரணமாக அழியப் போவதை எண்ணித் திகிலுறுபவன்.  ரொபெர்த்தோ பொலான்யோ போலச் சிறிதும் இல்லாத ஒரு பாத்திரம் என்றால், அது அந்தப் பாதிரி உர்ரூடியாவாகத்தான் இருக்கும்: ஒப்பொஸ் டெய்[9] அமைப்பின் உறுப்பினர், சூதுவாது செய்கிற இலக்கிய விமர்சகர், வலது சாரி மேல்தட்டு கர்வி, மதவழிப் போலி, பினோஷேக்குச் சேவகம் செய்யும் ஒரு புழு.  இருந்தும் பை நைட் இன் சிலே நாவல் நெடுகk கொடூரமாக மற்றும், ஆமாம்,  கிளர்வூட்டும் விதத்திலும், நாம் அவருக்குள் இருக்கிறோம்.

பொலான்யோ அடிக்கடி ஒப்பிடப்பட்ட எழுத்தாளரான டபிள்யு, ஜி. சீபால்டைப் பற்றிச் சொல்லப்பட்டது சரிதான், அவருடைய எல்லாப் பாத்திரங்களும் சாரத்தில் அவருடைய பல வடிவுகள்தாம்.  அது, என் கருத்தில், அவருடைய நாவல்களில் ஒரு குறை- குறிப்பாக ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் அது குறை, ஏனெனில் அது வேறு ஒருவரைப் பற்றியது என்று தோற்றம் கொண்டது.  இதே போன்ற குறை, அவரை விடவும் பெரிய எழுத்தாளரான ஃப்ரான்ஸ் காஃப்காவையும் பீடித்திருந்தது, அவருடைய மிக வலுவான படைப்புகள் கிட்டத் தட்ட தாங்க முடியாதவையாக அமைந்திருந்தன, அவை தம்மையே தமக்குள் அடைத்துச் சுவரெழுப்பிக் கொண்டவை போல அமைந்து சுவாசிக்கக் காற்றில்லாத வெளியாக இருக்கும். ரொபெர்த்தோ பொலான்யோ முற்றிலும் இதே குற்றச் சாட்டை எதிர் கொள்ளக் கூடிய விதமான எழுத்தாளராக  இருந்தாலும், அந்தக் குறையை மீறி வென்று விடுகிறார். இறுதியாக, அவருடைய எல்லா நாவல்களும் அவருடைய பல பிரதிகளாகவே இருப்பதில்லை, ஆனால் எதிராக உள்ளன: அவருடைய நாவல்களில், அவர் தன் பாத்திரங்களில் எதார்த்தத்தில் ஒரு துண்டுக் கற்பனையாக, அவர்களின் கனவுகளில் ஒரு நிழலாக ஆகி விடுகிறார், அவர் மிகப் பாராட்டிய ஃப்ரெஞ்சு சர்ரியலிசக் கவிஞர்களைப் போல, அவர் மதி மயக்கும் ஆடிகளைக் கவனமாகப் பொருத்துகிறார், எல்லா கபடமான அழகியல் இணைகளையும் கட்டி அமைக்கிறார், நம்மோடு விளையாடுகிறார் என்று நம்மை நம்ப வைக்கிறார்- பிறகு மொத்தக் கட்டமைப்பையும் துகள்களாக நொறுக்கி விடுகிறார். அந்தப் புழுதி அடங்கும்போது, மீதம் இருப்பதெல்லாம் (ஆனால் அது தேவைக்கு அதிகமானது) உண்மையான உணர்ச்சியின் ஒரு கணம்தான்.


இந்தக் கட்டுரை த்ரீ பென்னி ரிவ்யூ என்ற கலை-இலக்கியப் பத்திரிகையில் 2007 ஆம் ஆண்டு, வசந்த கால இதழில் வெளியானது.

இங்கிலிஷ் மூலக் கட்டுரைத் தலைப்பு: த மிஸ்டீரியஸ் சிலெயன்.

தமிழாக்கம்: மைத்ரேயன்

இந்தக் கட்டுரையாசிரியர் த்ரீ பென்னி ரிவ்யூ பத்திரிகையை நிறுவிய பதிப்பாசிரியரான வெண்டி லெஸ்ஸர்.  அபுனைவுகளாக டஜன் நூல்களையும், ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். 2020 இல் பிரசுரமான புத்தகம்,  ‘ஸ்காண்டிநேவியன் நோய்ர்: இன் பர்ஸூட் ஆஃப் அ மிஸ்டரி.’


[1] கட்டுரை 2007 ஆம் வருட வசந்த காலத்தில் பிரசுரமானது. எனவே ‘ஆம்யுலெட்’ நாவலின் இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு 2006 ஆம் ஆண்டு பிரசுரமாகி இருக்க வேண்டும்.

2 இங்கு சொல்லப்படுகிற காலமும் 2007 வசந்தத்தைக் குறிக்கும். 2007க்குப் பிறகு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்களைக் குறித்து இந்த கட்டுரை பேசுவதில்லை. உதாரணமாக 2666 நாவல் இன்னும் மொழி பெயர்க்கப்படவில்லை என்று ஒரு வாக்கியம் கட்டுரையில் காணப்படும். அந்த நாவல் இப்போது மொழி பெயர்க்கப்பட்டு விட்டது.

[3] Saloniste என்பது மூலக் கட்டுரையில் உள்ள சொல். சமூகச் சந்திப்புகளில் பங்கெடுப்பவர் என்று பொருள்.

[4] Exploring the Limits என்பது கட்டுரைத் தலைப்பு.

https://www.historytoday.com/archive/natural-histories/intelligence-earthworms

[5] இது ப்ளெய்ஸ் பாஸ்கெல் என்ற ஃப்ரெஞ்சு கணிதவியலாளரைக் குறிக்கிறது. அவர் பின்னாளில் ஒரு மதச் சிந்தனையாளராக மாறி இருந்தார். மேலும் விவரங்களை இங்கு பெறலாம்:

[6] ப்ரூனோ ஷுல்ட்ஸ் 50 ஆவது வயதில் கெஸ்டாபோ என்ற நாஜி ரகசியப் போலிஸைச் சேர்ந்த அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட யூத எழுத்தாளர். போலிஷ் மொழியின் தலை சிறந்த எழுத்தாளராகக் கருதப்பட்டவர். ஹோலாகாஸ்ட் எனப்படும் யூத இன அழிப்புப் போரில் இவரது பல நூல்கள் அழிக்கப்பட்டிருந்தன.

[7] Harry Houdini- ஹாரி ஹூடினி என்பவர் 1930களில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்த ஒரு மாயாஜாலத் தந்திரக் காட்சிகளில் நிபுணர். குறிப்பாக அவர் எந்தப் பூட்டையும் திறக்க வல்லவர். பல விதமான சிறைகளில் இருந்து தப்பிப்பதைத் தன் காட்சிகளில் சிறப்பு அம்சமாக வைத்திருந்தார். இங்கு அந்தப் பெயரைப் பயன்படுத்துவது, பார்த்துக் கொண்டே இருக்கையில் மாயமாகிற, கண்புலனிலிருந்து மறைகிற செயலைக் குறிக்கிறது.

[8] உர்ரூடியா லக்வா- Urrutia Lacroix ; எச். ஈவாகாச்சே – H.Ibacache

[9] Opus Dei – இது ஒரு கதோலிக்க மத நிறுவனம். சர்ச்சின் ஊழியரல்லாத பொது ஜனங்களில் தீவிரமான மதப் பிடிப்பு உள்ளவர்களுக்கான அமைப்பு. இதில் மிகக் குறைவான நபர்களே சர்ச்சிலிருந்து பொறுப்பில் உள்ளனர். பெரும்பாலானவர்கள் சமுதாய உறுப்பினர்கள். இதைப் பற்றி எதிரும் புதிருமாகக் கருத்துகள் கிட்டுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.