பார்செலோனாவில் உள்ள நவீன கலாசார அருங்காட்சியகத்தில் (CCCB in Barcelona), ரொபெர்த்தோ பொலான்யோ பயன்படுத்திய பொருட்கள், எழுதிய நோட்டுப் புத்தகங்கள், உபயோகித்த தட்டச்சுக் கருவி என சகல விஷயங்களையும் BOLAÑO ARCHIVE. 1977-2003 என்னும் தலைப்பிட்டுச் சிறப்பு ஆவணக்காட்சி நடத்தியிருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டின் மார்ச் ஐந்தாம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்குள்ளானது.
அதிலிருந்து…

2005ஆம் ஆண்டு வரை பொலான்யோவின் தனிப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பெட்டிக்குள் பூட்டப்பட்டு இருந்தன. 2006ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் இந்தக் கையெழுத்துப் பிரதிகள் காணக்கிடைத்தன. பெட்டிக்குள் கிடைத்த புதையலில், எண் வரிசைப்படி கோப்புகள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் பொலான்யோவின் கடிதங்கள், கையெழுத்துப் படிகள், கிறுக்கல்கள், செய்தித்தாளில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட குறிப்புகள், துடைக்கப் பயன்படுத்தும் பேப்பரில் எழுதிய குறிப்புகள், ஓவியங்கள், எண்ணங்கள், சிந்தனை வரைவுகள் என பலவும் இருக்கின்றன.
இது கைப்பட எழுதியவை; அதுதவிர, வன்தட்டுகள், ஃப்ளாப்பி டிஸ்க்குகளிலும் எண்ணற்ற கோப்புகள் கிடைத்தன. உத்தேசமாக அவற்றின் எண்ணிக்கை:
- அச்சில் வெளிவராத 14,374 பக்கங்கள் – கையெழுத்துப் பிரதி
- அதில் 26 சிறுகதைகள், நான்கு நாவல்கள், கணக்கிலடங்காக் கவிதைகள், முன்வரைவுகள், கடிதப் பரிமாற்றங்கள், டயரிக் குறிப்புகள்
- கணினியில் தட்டச்சப்பட்ட 24,000 பக்கங்கள்
- அவற்றில் 300 பக்கங்கள் அச்சில் வெளிவராதவை
- அவற்றில் புனைவுகளாக 200 பக்கங்கள்
- அவற்றில் கவிதைகளாக 100 பக்கங்கள்
இந்த சிறப்புக் கண்காட்சியில் பொலான்யோவின் எழுத்தை உணர்வுபூர்வமாக எவ்வாறு பலரும் அணுகுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். பொலான்யோவின் கவிதைகளை இசை வடிவாக்கிப் பார்க்கிறார்கள். அவரின் ஒட்டுச்சித்திரப் புனைவு மொழியை ஓவியமாக்கி வடிக்கிறார்கள். இங்கே அப்படிப்பட்ட பரீட்சார்த்த முயற்சியைப் பார்க்கலாம்:
கீழே காணும் வரைபடம், 2666 நாவலைச் சார்ந்தது. பேராசிரியர் அமல்ஃபிடானோ சடாரென்று ஜியாமெட்ரி சார்ந்த வடிவ கணிதத்தில் படம் வரைகிறார். நாவலின் அந்தப் பகுதி:
“அடுத்த நாள் அவரின் மாணாக்கர்கள் குறிப்பெடுக்கும்போதோ அல்லது அவர் உரையாற்றும்போதோ அமல்ஃபிடானோ எளிமையான ஜியாமெட்ரி வடிவங்களான முக்கோணத்தையும், செவ்வகத்தையும் வரையத் தொடங்கினார்; அதன் ஒவ்வொரு கோண உச்சியிலும் விதிவசத்தாலோ, சோம்பேறித்தனத்தாலோ அல்லது தன் மாணவர்களினாலும், வகுப்பினாலும், தகிக்கும் சூட்டில் மிதக்கும் நகரத்தில் கிடைத்த சொல்லொண்ணா அலுப்பினாலோ – தனக்குத் தோன்றிய பெயர்களை எழுதினார். இதைப் போல்:” (“The next day, as his students wrote, or as he himself was talking, Amalfitano began to draw very simple geometric figures, a triangle, a rectangle, and at each vertex he wrote whatever name came to him, dictated by fate or lethargy or the immense boredom he felt thanks to his students and the classes and the oppressive heat that had settled over the city. Like this:”)

சாண்டா தெரேஸாவின் வரைபடம்:

சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் வரும் தினாஹேரோ எழுதிய கவிதை; ஆண்ட்வெர்ப் (அம்பெரெஸ்) நாவலிலும் இந்தப் பகுதி இடம்பெறுகிறது:

ஆண்ட்வெர்ப் (அம்பெரெஸ்) நாவலின் ஒரு பக்கம்:
“பிற்குறிப்பு: தொலைந்து போனதிலிருந்து, மீட்டெடுக்க முடியாதபடி தொலைந்து போனதிலிருந்து, என்னுடைய பராக்கிரமத்தின் இறுதி இழையில் இருக்கும் தருணத்தில், கூந்தல் கற்றையைப் பிடித்து என்னைத் தூக்கி உயர்த்தவல்ல வரிகளை, அன்றாடம் எழுத வகை செய்யும் கிடைக்கும் தகைமையை மட்டும் மீட்க விழைகிறேன். (குறிப்பிடத்தக்கது, என்கிறார் அயல்நாட்டார்.) மனிதத்திற்கும் தெய்வீகத்திற்கும் வாழ்த்துப் பாக்கள். என் எழுத்துக்கள் என்பவை, நார்டிக் பாலத்தில் மேலிருந்த டேனியல் பிகா, தனக்கு மன உரம் தரும் கவசம் பூண லெப்பர்டியின் கவிதை வரிகளை முழங்கியதுபோல் இருக்கட்டும்.” (“POSTSCRIPT: Of what is lost, irretrievably lost, all I wish to recover is the daily availability of my writing, lines capable of grasping me by the hair and lifting me up when I’m at the end of my strength. (Significant, said the foreigner.) Odes to the human and the divine. Let my writing be like the verses by Leopardi that Daniel Biga recited on a Nordic bridge to grid himself with courage.”)

ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆளறி அட்டை; வருகையாளர் முகவரிச் சீட்டு – தன்னைக் கவிஞர் என்றும், ஊர் சுற்றும் நாடோடி என்றும் அழைத்துக் கொள்கிறார்.


அருங்காட்சியகம் என்றவுடன் பொலான்யோவின் மேற்கோள் நினைவிற்கு வருகிறது. எல்லாவற்றையும் மீண்டும் விட்டு விடுங்கள் என்னும் “முதல் அகச்சிவப்பு அறிக்கை”யில் ரொபெர்த்தோ பொலான்யோ இவ்வாறு சொல்கிறார்:
ஒழுங்காகப் பாருங்கள், குப்பை என்பது அருங்காட்சியகங்களில் மட்டுமன்று. (“Take a look, it’s not just in the museums that there’s shit.” ROBERTO BOLAÑO, ‘Leave it all behind, again’)
அடுத்த குறிப்புப் படத்தை மொழிபெயர்ப்பது இன்னும் சிக்கலாகிறது. தினாஹேரோ எழுதிய மற்றொரு கவிதையின் முன்வரைவு. “The Savage Detectives / Ción [in Mexican Spanish sounds like “Sion”] / visual poem? By Cesárea Tinajero found in an issue of “Caborca” / that according to Lima and Belano meant / Navigation / Acta Est Fabu”.

பொலான்யோவின் குறிப்புகள் கிறுக்கல்களாக இல்லாமல் தெளிவாக எழுதப்பட்டிருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. சிந்தித்தை அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதிக் கொண்டே போயிருக்கிறார். இங்கே மதேரோவின் ஓவியங்கள் (claves = மறைதிறவுக் குறிப்புகள்) – சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் இருந்து:

ரொபெர்த்தோ பொலான்யோவிற்குப் பிடித்த பலகை ஆட்டமான The Rise and Decline of the Third Reichவின் காட்சி:

எழுத்தாளனின் எழுத்தைக் கொண்டு சில பகுதிகள் அறியலாம். அவரின் கையெழுத்துப் பிரதியைக் கொண்டு சிந்தனை எவ்வாறு வடிவம் காண்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த கண்காட்சியின் இறுதியில் பொலான்யோவின் கண்ணாடிகளை ஒரு பேழையில் சிறை வைத்திருக்கிறார்கள். அது வெறுமை கலந்த சோகத்தைக் கொணர்கிறது. சின்னஞ்சிறிய காட்சிப்பேழை முழுமையாக ஒளியூட்டப்படாமல் காணக் கிடைக்கிறது:

“விமர்சகர்களை நம்பாதீர்கள். உங்களுக்கு அவசியமென்றால் படியுங்கள், ஆனால் அவர்களின் ஒரு வார்த்தையைக் கூட நம்பாதீர்கள்.”