ரொபெர்த்தோ பொலானோ

நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில், ஆனால் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சிறைக் கைதிகளாக இருந்தோம். சோஃபியா 1950-ஆம் வருடம் பில்பாவ் நகரத்தில் பிறந்தவள். சிறிய உருவமும், இருண்ட நிறமும் கொண்ட பேரழகி. 1973-ஆம் வருடம் நவம்பரில், நான் சிலேயில் சிறைக் கைதியாக இருந்த சமயத்தில், அவள் ஆரகன் நகரச் சிறையில் அடைக்கப்பட்டாள்.
அப்போது அவள் சரகோசா பல்கலையில் உயிரியிலிலோ, வேதியலிலோ, இரண்டில் ஏதோவொன்றில், பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய வகுப்பு நண்பர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே அவளுடன் அப்போது சிறையில் அடைக்கப்பட்டனர். நாங்கள் உறவுகொள்ளத் தொடங்கிய நான்காவதோ, ஐந்தாவதோ இரவில், ஒரு புதிய முறையில் உடலுறவுகொள்ள நான் தயாராகிக் கொண்டிருந்தபோது, உன்னை நீயே சோர்வடையச் செய்துகொள்வதனால் பயனேதுமில்லை என்றாள். எனக்குப் பல்சுவை பிடிக்கும் என்றேன். நான் தொடர்ச்சியாக இரண்டு நாள் ஒரே மாதிரி புணர்ந்தால் ஆண்மை இழந்துவிடுவேன். சரி, ஆனால் என் பொருட்டு அதைச் செய்யாதே என்றாள். அந்த அறை உயரமான உட்கூரை உடையது. சுவற்றில் அடிக்கப்பட்டிருந்த சிவப்பு நிறம், பாலைவனத்தின் சூரிய அஸ்தமனத்தின் நிறத்தை ஒத்திருந்தது. குடிவந்த சில நாள்களுக்குள் அவளே அடித்தது. பார்ப்பதற்குக் கேவலமாக இருந்தது. பாலுறவின் அனைத்து சாத்தியங்களையும் செய்து பார்த்துவிட்டேன் என்றாள். நம்ப முடியவில்லை என்றேன். ‘எல்லா விதத்திலுமா?’ ‘ஆம்’ என்றாள். எனக்கு அதற்குமேல் ஒன்றும் பேச முடியவில்லை (சங்கடமாக இருந்ததாலோ என்னவோ), ஆனால் அவள் சொல்வது உண்மை என்று தோன்றியது.
அதன்பின், அதாவது பல நாள்களுக்குப்பின், பைத்தியம் பிடிப்பதுபோல் இருப்பதாக என்னிடம் கூறினாள். அவள் மிக அரிதாகவே ஏதாவது சாப்பிடுவாள், அது பெரும்பாலும் உடனடி உருளைக்கிழங்கு மசியலாகவே (instant mashed potato) இருக்கும். ஒருமுறை நான் சமையலறைக்குள் சென்றபோது, குளிர்பதனப் பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பையில் இருபது கிலோ உருளைக்கிழங்கு துருவல் இருப்பதைக் கண்டேன். இது மட்டும்தான் சாப்பிடுவாயா என்று கேட்டேன். புன்னகையுடன், ஆமாம் என்றாள். எப்போதாவது அவள் வேறேதும் உண்பாள், ஆனால் பெரும்பாலும் வெளியே, பார் அல்லது உணவகத்திற்குப் போகும்போது மட்டும்தான். வீட்டில் உருளைக்கிழங்கு மசியல் சாப்பிடுவதுதான் எளிதானது என்றாள். இப்படிப் பழகிவிட்டால், வீட்டில் எப்போதுமே சாப்பிட ஏதாவது இருக்கும். அவள் அதில் பால் கலக்கமாட்டாள், வெறும் தண்ணீர்தான், அதுவும்கூட கொதிநிலைக்கு வரும்வரை பொறுக்கமாட்டாள். பாலை வெறுப்பதால், வெதுவெதுப்பான தண்ணீரில் கலப்பதாகச் சொன்னாள். அவள் பாலில் இருந்து தயாரித்த எந்தப் பதார்த்தத்தையும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை; பால்யத்தில் அவள் அம்மா சம்பந்தப்பட்ட ஏதோவொரு உளவியல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்றாள். சில சமயம், இரவில் அடுக்கத்தில் ஒன்றாக இருக்கும்போது, வழக்கமான உருளைக்கிழங்கு மசியலைச் சாப்பிட்டுவிட்டு, என்னுடன் அமர்ந்து வெகுநேரம் வரையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பாள். நாங்கள் அரிதாகத்தான் பேசிக்கொள்வோம். அவள் எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடமாட்டாள். அந்த நாள்களில், எங்களுடன் அடுக்ககத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தங்கி இருந்தான். எங்களைப்போல் அவனுக்கும் இருபத்துச் சொச்சம் வயதிருக்கும். நானும் அவனும் பல முறை நீண்ட அர்த்தமற்ற விவாதங்களில் ஈடுபடுவோம். அவள் அந்த விவாதங்களில் ஒருபோதும் பங்கேற்கவில்லை என்றாலும், கருத்துரீதியில் அவனைவிட என்னிடமே அவள் உடன்பட்டிருந்தாள் என்பதை அறிந்திருந்தேன். ஒரு நாள், அவன் என்னிடம், ஸோஃபியா கவர்ச்சியானவள் என்றும், முதல் வாய்ப்பிலேயே அவளோடு உறவுகொள்ளப் போவதாகவும் சொன்னான். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றேன். இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு இரவில் நான் பார்டெம் நடித்த சினிமாவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவன் வெளியே நடந்துபோய் இரகசியமாகச் ஸோஃபியாவின் அறைக் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின் கதவைச் சாத்திக்கொண்டார்கள். அதன்பின் இரண்டு மணி நேரம் கழித்துத்தான் அவன் வெளியே வந்தான்.
ஸோஃபியா திருமணமானவள் என்பது நீண்டநாள் கழித்துத்தான் எனக்குத் தெரியவந்தது. அவள் கணவனும் ஸரகோவா பல்கலையில் மாணவனாக இருந்து, 1973 நவம்பரில் அவர்களுடன் சிறைக்குச் சென்றவன்தான். பட்டப்படிப்பை முடித்தபின், அவர்கள் பார்ஸிலோனாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். சிறிது காலம் கழித்துப் பிரிந்தார்கள். அவன் பெயர் எமிலியோ. பிரிவுக்குப் பிறகும் அவர்கள் நல்ல நண்பர்களாகவே நீடித்தார்கள். நீ எமிலியோவுடன் சாத்தியமான எல்லா வழிகளிலும் உடலுறவு கொண்டாயா? கிட்டத்தட்ட, என்றாள் ஸோஃபியா. அத்துடன் மனநிலை தவறிக்கொண்டிருப்பதாகவும் கூறினாள். அது, குறிப்பாக வண்டி ஓட்டும்போது அவளை மிகவும் பாதித்ததையும். ஒருநாள் இரவு டையகனலில் அது நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, அப்போது போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால் பெரிய அசம்பாவிதம் ஒன்றும் நிகழவில்லை. நீ ஏதாவது மருந்து சாப்பிடுகிறாயா? வாலியம். அளவுக்கதிகமான வாலியம். நாங்கள் படுக்கையைப் பகிரத் தொடங்கும்முன்பு, சினிமாவுக்கு இரண்டு முறை சென்றிருந்தோம். ஃபிரெஞ்சுப் படங்கள் என்று நினைக்கிறேன். ஒன்று கடல் கொள்ளைக்காரியைப் பற்றியது; அவள் வேறொரு கடல் கொள்ளைக்காரி உள்ள ஒரு தீவுக்குச் சென்று அவளுடன் வாள் சண்டை புரிகிறாள். இன்னொன்று, இரண்டாம் உலகப் போரை பின்னணியாகக் கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் ஜெர்மானியர்களுடனும், எதிர்த் தரப்புடனும் சேர்ந்து பணிபுரிந்த ஒருவனைப் பற்றியது. உடலுறவு கொள்ளத்தொடங்கிய பின்னும் நாங்கள் சினிமா பார்க்கச் சென்றுகொண்டிருந்தோம். விசித்திரம் என்னவென்றால், அப்போது பார்த்த சினிமாக்களின் பெயர்களும், அவற்றை இயக்கியவர்களின் பெயர்களும் தவிர வேறெதுவுமே எனக்கு நினைவில்லை என்பதுதான். நாங்கள் சேர்ந்திருந்த முதல் இரவிலேயே, எங்களுக்கிடையே பந்தமேதும் ஏற்படப் போவதில்லை என்பதை அவள் தெளிவாக்கிவிட்டாள். நான் வேறொருவனைக் காதலிக்கிறேன் என்றாள் அவள். நம் கம்யூனிஸ்ட் தோழரா? இல்லை, உனக்கு அவனைத் தெரியாது; அவனும் என்னைப்போல கல்வி கற்பிப்பவன். அவன் பெயரை அப்போது அவள் என்னிடம் சொல்லவில்லை. சில சமயம், அவனுடன் இரவைக் கழிப்பாள். ஆனால், மாதத்துக்கு இரு முறை என எப்போதாவதுதான். நாங்கள் ஒவ்வொரு இரவும் புணர்ந்தோம். தொடக்கத்தில் நான் அவளை களைப்படைய முயற்சித்ததுண்டு. பதினோரு மணிக்குத் தொடங்கும் எங்கள் சரசம், காலை நான்கு மணிவரை நீளும். ஆனால் அவள் களைக்கவே போவதில்லை என்பது எனக்கு வெகு சீக்கிரமே புரிந்தது.
தொடக்கத்தில் நான் அதிகாரத்தை எதிர்ப்பவர்களுடனும், தீவிர பெண்ணியவாதிகளுடனும் சுற்றிக் கொண்டிருந்தேன். அதனால் நான் படித்த புத்தகங்களும், அவர்களது சிபாரிசை ஒத்தே இருந்தன. ‘ஹெகலின் மீது துப்புவோம்’ என்பது அப்படிப்பட்ட ஒரு புத்தகம், அதை எழுதியது ஓர் இத்தாலிய பெண்ணியல்வாதி. (பெயர் கார்லா என்று நினைக்கிறேன்.) ஒருநாள் மதியம் அதை ஸோஃபியாவுக்கு இரவல் கொடுத்தேன். நன்றாக இருக்கும், படித்துப் பார் என்றேன். (அவளுக்கு அப்புத்தகம் நிறைய திறப்புகளை அளிக்கக்கூடும் என்றும் கூறியிருக்கலாம்.) அடுத்தநாள் ஸோஃபியா நல்ல மனநிலையில் இருந்தாள்; அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தபோது, ஓர் அறிவியல் புனைவாக அது நல்ல புத்தகம்தான், ஆனால் அதைத் தவிர அதில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை என்றாள். ஓர் இத்தாலியப் பெண்ணால்தான் இப்படி எழுதமுடியும் என்றும் சொன்னாள். இத்தாலியப் பெண்களுடன் உனக்கென்ன விரோதம் என்று கேட்டேன். ஒருவேளை சிறுவயதில் இத்தாலியப் பெண் எவளாவது உன்னிடம் தவறாக நடந்து கொண்டாளா? இல்லை, ஆனால் இத்தகைய புத்தகங்களைத்தான் வாசிக்க வேண்டும் என்றால், வாலரி சோலானாஸ்-ஐத்தான் படிக்க விரும்புவேன் என்றாள். அவளுக்குப் பிடித்த எழுத்தாளர் ஒரு பெண்ணல்லள், R.D. லெய்ங்கினின் உதவியாளர்களில் ஒருவராகிய டேவிட் கூப்பர் என்ற ஆங்கிலேயர் என்பதை அறிந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன்பின் நான் வாலரி சோலானாஸையும், டேவிட் கூப்பரையும், லெய்ங்கின் சானெட்டுகளையும்கூட வாசித்தேன். அவர் அர்ஜென்டீனாவில் வசித்தபோது இடதுசாரிப் புரட்சியாளர்களுக்குச் சிகிச்சை அளிக்க, உளநிலையை மாற்றக்கூடிய போதை மருந்துகளைப் பயன்படுத்தினார் என்பதாலேயே கூப்பர் என்னை மிகவும் கவர்ந்தார் என்று தோன்றுகிறது (அவர் உண்மையிலேயே அர்ஜென்டீனாவில் இருந்தாரா அல்லது நான் வேறு யாரையோ பற்றிய செய்தியைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறேனா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை). எந்நேரமும் சாவு வரலாம் என்ற பீதியில் மனநிலை குலைந்தவர்கள், நிஜ வாழ்வில் ஒரு போதும் மூப்பெய்திருக்க முடியாத, இந்த மருந்துகளின் உதவியால் மட்டுமே மூப்பெய்தியவர்கள், இது போன்றவர்களுக்கே அவர் சிகிச்சை அளித்தார். அவர்களும் தேறி வந்தார்கள். ஸோஃபியாகூட அவவப்போது போதை மருந்துகளைப் பயன்படுத்துவாள். மனதின் ஓட்டத்தைக் கூட்டவும், குறைக்கவும், வண்டி ஓட்டும்போது கைகள் நடுங்காமல் இருக்கவும் எல் எஸ் டி, ஆம்ஃபெடமின்-கள், ரோஹிப்னால் போன்ற மருந்து மாத்திரைகளை அவள் உட்கொண்டாள். அவளுடன் காரில் பயணிப்பதை முடிந்தவரையில் தவிர்த்துவிடுவேன். ஆனால், நாங்கள் அதிகம் வெளியில் செல்லவில்லை என்பதே உண்மை. பகல்களை எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைகளில் கழித்துவிட்டு. இரவுகளில், அவள் அறையிலோ, என் அறையிலோ விடிவதுவரை முடிவில்லாத காம விளையாட்டுக்குப்பின் அயர்ந்து, எங்கள் உடல்கள் பின்னிப் பிணைந்து கிடப்போம்.
ஒரு நாள் மதியம், எமிலியோ அவளைப் பார்க்க வந்தபோது, அவனை எனக்கு அறிமுகப்படுத்தினாள். அவன் நெடிய உருவமும், கவர்ச்சியான புன்னகையும் கொண்டவன். ஸோஃபியாவின்மீது அவனுக்கு இருந்த ஈர்ப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. அவனுடைய காதலியின் பெயர் நூரியா; அவள் காடலோனியாவைச் சேர்ந்தவள். ஸோஃபியாவையும், எமிலியோவையும் போல நூரியாவும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவள். இவர்களைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும் இரு பெண்களை உங்களால் கற்பனைகூடச் செய்ய முடியாது. நூரியா பொன்னிறக் கூந்தலும், நீலக் கண்களும், நெடிய, சற்றே பருத்த உருவமும் கொண்டவள். ஸோஃபியா இருண்ட கூந்தலும், கருப்பெனத் தோன்றக்கூடிய அளவு ஆழ்ந்த பழுப்பு வண்ணக் கண்களும் கொண்டவள்; குறைவான உயரமும், ஒரு மராத்தான் ஓட்டக்காரியை ஒத்த ஒடிசலான உருவமும் உடையவள். இத்தனை வேற்றுமைகளையும் மீறி, அவர்கள் நல்ல நண்பர்களாகவே தோன்றினார்கள். எமிலியோதான் அவர்களுடைய திருமண உறவை முறித்தான் எனவும், ஆனால் அவர்கள் இருவர் சம்மதத்துடனான சுமுகமான ஒரு பிரிவாகத்தான் இருந்தது என்பதும், எனக்குப் பின்னாளில்தான் தெரியவந்தது. சில தருணங்களில், நாங்கள் வெகுநேரமாக ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருப்போம்; அப்போது நூரியா ஒரு வட அமெரிக்கக்காரியைப் போலவும், ஸோஃபியா ஒரு வியட்நாமியப் பெண்ணைப் போலவும் இருப்பதாக எனக்குத் தோன்றும். ஆனால், எமிலியோ எமிலியோவாக, ஃப்ராங்கோவுக்கு எதிரான குழுக்களில் சேர்ந்து செயல்பட்டு அரசியல் கைதியாய் இருந்து, குற்றம் சொல்லமுடியாத, அதே நேரத்தில் சுவாரஸ்யமான குணாதிசயங்கள் ஒன்றும் இல்லாத, ஆரகானிலிருந்து வந்து வேதியியலோ, உயிரியலோ கற்பிப்பவனைப் போலத்தான் இருந்தான். ஓர் இரவில் ஸோஃபியா அவளுடைய காதலனைப் பற்றிச் சொன்னாள். அவனுடைய பெயர் ஹுவான். நமது தோழரைப்போல அவனும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினன். அவனும் அவளுடைய பள்ளிக்கூடத்திலேயே வேலை செய்தவன் என்பதனால், அவர்கள் தினமும் சந்தித்துக் கொண்டார்கள். அவனுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகனும் இருந்தான். அப்படியானால் அதை எங்கே செய்வீர்கள்? என் காரில், அல்லது அவனுடையதில், என்றாள் ஸோஃபியா. எங்கள் கார்களில் ஒருவரை மற்றொருவர் பின்தொடர்ந்தபடியே பார்சிலானோ தெருக்களில் வலம் வருவோம். சில சமயங்களில் திபிதாதோ அல்லது சாந்த் குகாத் வரைகூடச் சென்றுவிடுவோம். சில சமயங்களில் ஒரு இருண்ட சந்தில் கார்களை நிறுத்திவிட்டு, என் காரில் அவனோ, அவன் காரில் நானோ ஏறிக்கொள்வோம். இதை என்னிடம் சொன்ன சில நாள்களுக்குள், அவள் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாய் இருக்கவேண்டி இருந்தது. அந்தக் கட்டத்தில், அடுக்ககத்தில் ஸோஃபியா, கம்யூனிஸ்ட் மற்றும் நான், மூவர் மட்டுமே இருந்தோம். கம்யூனிஸ்ட் இரவில் மட்டும்தான் இருப்பான் என்பதால், ஸோஃபியாவை பார்த்துக்கொள்வதும், மருந்துகள் வாங்கி வருவதும் என் பொறுப்பானது. ஒருநாள் இரவு, நாம் எங்காவது பயணம் செல்வோம் என்றாள். எங்கே? என்றேன். போர்ச்சுகலுக்கு, என்றாள். எனக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்ததனால் ஒருநாள் காலை போர்ச்சுகலுக்கு, வழியில் கிடைத்த சவாரிகளில் ஏறிப் புறப்பட்டோம். (அவளுடைய காரில் போவோம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவளுக்கு வண்டி ஓட்டப் பயம்.) அந்தப் பயணம் ஒரு நீண்ட சிக்கலான பயணமாய் ஆனது. முதலில் அவள், நெருங்கிய நண்பர்கள் இன்னமும் வசித்த ஸரகோசாவிலும், பின், மாத்ரீத் நகரத்தில் உள்ள அவளுடைய சகோதரியின் வீட்டிலும், அதன்பின் எக்ஸ்ட்ரெமதூராவிலும் ஓய்வெடுத்தோம்.
ஸோஃபியா அவளுடைய மாஜி காதலர்கள் எல்லோரையும் பார்க்கப்போவதாக எனக்குத் தோன்றியது. அடுத்தடுத்து, ஒவ்வொருவரிடமும் அமைதியுடனும், ஒரு வித வெறுமையுடனும் அவள் விடைபெற்றுக் கொள்வதாக எனக்குத் தோன்றியது. நாங்கள் உடலுறவு கொண்டபோது முதலில் தாம் ஏதோ அங்கில்லாதது போலவும், அந்தச் செயலுக்கும் அவளுக்கும் தொடர்பில்லை என்பது போலவும் இருந்தாள். ஆனால் சிறிது நேரத்திலேயே தளைகளற்றவளாய் மாறிப் பலமுறை உச்சத்தை அடைந்தாள். அதன்பின் அவள் அழத் தொடங்கியபோது, நான் காரணம் கேட்டேன். ஏனென்றால் நான் ஒரு மிருகம். மனதளவில் எங்கோ இருந்தாலும், என்னால் காமத்தில் உச்சம் அடையாமல் இருக்க முடியவில்லை என்றாள். உன்னை நீயே இப்படி தண்டித்துக் கொள்ளாதே என்று நான் சொன்னேன். அதன் பிறகும் எங்கள் புணர்ச்சியைத் தொடர்ந்தோம். கண்ணீரால் நனைந்திருந்த அவள் முகம் முத்தமிடுகையில் இனித்தது. அவள் மொத்த உடலும் பழுக்கக் காய்ந்த உலோகத்தைப்போல தகித்து வளைந்தது. ஆனால் அவள் கண்ணீரோ வெதுவெதுப்பாக இருந்தது. கழுத்துவரை ஒழுகி ஓடியது. அதை அவள் முலைக் காம்புகளில் நான் தடவியபோது, குளிர் பனியெனச் சில்லிட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு நாங்கள் பார்செலோனா திரும்பினோம். ஸோஃபியா அரிதாகவே ஏதேனும் சாப்பிட்டாள். மீண்டும் உருளைக்கிழங்கு மசியல் பத்தியத்திற்குத் திரும்பிய அவள், அடுக்ககத்தைவிட்டு வெளியேற வேண்டாமென முடிவெடுத்தாள். ஒரு இரவு வீட்டுக்கு வந்தபோது, எனக்கு அறிமுகமில்லாத ஒரு பெண்ணுடன் அவள் இருப்பதைக் கண்டேன். இன்னொரு முறை அவளுடன் எமிலியோவும், நூரியாவும் இருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்த பார்வை நான்தான் அவளுடைய இந்த நிலமைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுவதுபோல இருந்தது. அது எனக்கு வருத்தமளித்தபோதும் ஒன்றும் பேசாமல் என் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டேன். படிக்க முயற்சி செய்தபோதும் அவர்கள் பேசுவது காதில் விழுந்தது. அதிர்ச்சியுற்ற ஆச்சரியக் குரல்கள், கண்டிப்புகள், அறிவுரைகள். ஸோஃபியா ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு அவளுக்கு நான்கு மாத மருத்துவ விடுப்பு கிடைத்தது. அரசு மருத்துவர் அவளுடைய ஸரகோஸா காலத்து நண்பர். இந்த விடுமுறையில் நாங்கள் அதிக நேரம் ஒன்றாகச் செலவிடமுடியும் என்று நான் நினைத்ததற்கு மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரைவிட்டு ஒருவர் விலகத் தொடங்கினோம். சில இரவுகளில் அவள் வீடு திரும்பவில்லை. உறங்காமல் வெகுநேரம் விழித்திருந்தது தொலைக்காட்சி பார்த்தபடியே அவளுக்காகக் காத்திருந்தது நினைவிருக்கிறது. சில நாள்கள் கம்யூனிஸ்ட் என்னுடன் துணைக்கு இருந்தான். செய்வதற்கு வேறு வேலை இல்லாததால், நான் அடுக்ககத்தைச் சுத்தப்படுத்தத் தொடங்கினேன்: வீடு பெருக்குவது, துடைப்பது, தூசி தட்டுவது போன்றவை. கம்யூனிஸ்டுக்கு என் செய்கை பிடித்திருந்தது, ஆனால் ஒருநாள் அவனும் பிரிந்துபோக வேண்டிவந்தபோது நான் தனியனானேன்.
அதற்குள் ஸோஃபியா ஒரு பேயைப்போல் ஆகிவிட்டிருந்தாள்; ஓசையில்லாமல் தோன்றி, அறைக்குள்ளோ, குளியலறையிலோ அடைந்துகொண்டு, சில மணி நேரத்துக்குள் மீண்டும் மறைந்து விடுவாள். ஒருமுறை படிக்கட்டில் மேலே சென்றுகொண்டிருந்த நானும், இறங்கிக்கொண்டிருந்த அவளும் சந்தித்தபோது, அவளுக்குப் புதுக் காதலன் எவனாவது இருக்கிறானா என்பதைத்தான் எனக்குக் கேட்கத் தோன்றியது. அப்படிக் கேட்பது தவறு என்று உணர்வதற்குள் தாமதாகிவிட்டிருந்தது. அவள் என்ன சொன்னாள் என்று ஞாபகம் இல்லை. ஒரு காலத்தில் நாங்கள் ஐந்து பேர் அந்தப் பெரிய அடுக்ககத்தில் தங்கி இருந்தோம்; இப்போதோ நானும் எலிகளும் மட்டும். சில நேரங்களில், அந்த 1973-ஆம் வருட நவம்பர் மாதத்தில் ஸரகோஸா சிறையில் ஒரு கூண்டுக்குள் அவளும், உலகின் தென்கோடியில் ஒரு சிறையில் நானும் ஒரே நேரத்தில் அடைபட்டுக்கிடந்த அந்த தீர்க்கமான சில நாள்களைப் பற்றி நான் கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அந்தத் தற்செயல் நிகழ்வு ஏதோ விதத்தில் முக்கியமானதாகத் தோன்றினாலும், அது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒப்புமை செய்வதில் நான் என்றுமே வித்தகனல்லன். ஒரு இரவு, நான் வீடு திரும்பியபோது, ஒரு பிரியாவிடைக் குறிப்பும், கொஞ்சம் பணமும் சமையலறை மேசைமேல் இருந்தது. முதலில் எப்போதும்போல ஸோஃபியா அங்கேயே இருப்பதாகப் பாவித்து வாழ்ந்து கொண்டிருந்தேன். எத்தனை காலம் அவளுக்காகக் காத்திருந்தேன் என்று சரியாக நினைவில்லை. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு, நான் வேறோர் அடுக்ககத்துக்குக் குடிபெயர்ந்தேன்.
அதன்பின் நீண்ட காலம் கழித்துத்தான் அவளைச் சந்தித்தேன். நகரின் பிரதானச் சாலையில் (லாஸ் ராம்ப்லாஸ்) தொலைந்து போனவளைப்போல நடந்து சென்றுகொண்டிருந்தாள். குளிர் எங்கள் எலும்புகளை ஊடுருவ, இருவருக்குமே அர்த்தமற்றதான சில விஷயங்களை நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். வீடு வரைக்கும் என்கூட வா என்றாள். எல் போர்ன் பகுதிக்கு அருகே சிதிலமடைந்த ஒரு பழைய கட்டிடத்துக்கு அருகே வசித்து வந்தாள். அந்த கட்டிடத்தின் குறுகிய படிக்கட்டுகள் நாங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் முனகின. மேல் மாடியில் வசித்த அவளுடைய அடுக்ககத்தின் கதவின் முன்னால் நாங்கள் வந்து சேர்ந்தோம். அவள் என்னை உள்ளே வர அழைக்காதது என்னை வியப்பிலாழ்த்தியது. ஏன் என்று நான் கேட்டிருக்க வேண்டும், ஆனால் ஒன்றும் கேட்காமல் நான் கிளம்பிவிட்டேன்; அவள் விருப்பம் அதுவானால் அதன்படி நடக்கட்டும்.
ஒரு வாரம் கழித்து நான் அவள் அடுக்ககத்துக்கு மீண்டும் சென்றேன். அழைப்புமணி வேலை செய்யவில்லை, கதவைப் பலமுறை தட்டியும் பதிலில்லை. உள்ளே யாரும் இல்லை என்று தோன்றியது. யாரும் அங்கே வாழவில்லை என்று பிறகு தோன்றியது. திரும்பிப் போக எத்தனித்தபோது கதவு திறந்தது. ஸோஃபியாதான் கதவைத் திறந்தாள். அடுக்ககத்துக்குள் இருட்டாக இருந்தது, தாழ்வாரத்தில் இருந்த விளக்கு இருபது விநாடிகளுக்குப் பிறகு தானாக அணைந்தது. அங்கு இருட்டாக இருந்ததால், அவள் நிர்வாணமாக இருந்ததை நான்[NK1] [CM2] முதலில் உணரவில்லை. தாழ்வார விளக்கு மீண்டும் ஒளிர்ந்தபோது, அவள் நேராக நிமிர்ந்து நிற்பது தெரிந்தது. முன்பை விடவும் மெலிந்திருந்தாள். குளிரில் உறையப் போகிறாய், என்றேன். நான் எண்ணற்ற முறை முத்தமிட்ட அவள் வயிறும் கால்களும் மிகப் பரிதாபமாகத் தெரிந்தது. அவளால் ஈர்க்கப்படுவதற்கு பதிலாக ஏதோ நான்தான் துணி இல்லாமல் இருக்கிறேன் என்பதுபோல அந்தக் காட்சி என்னை உறைய வைப்பதாக இருந்தது. உள்ளே வரலாமா? மறுக்கும் விதமாகத் தலையாட்டினாள். நிர்வாணமாக இருந்ததால் அவள் தனியாக இல்லை என்று ஊகித்துக்கொண்டேன். ஓர் அசட்டுச் சிரிப்புடன் அதை அவளிடமும் சொன்னதுடன், அவள் அந்தரங்க விஷயங்களை வேவு பார்ப்பது என் உத்தேசமன்று என்பதையும் சொன்னேன். திரும்பிப்போக எண்ணிப் படிகளில் இறங்கத் தொடங்கியபோது தாம் தனியாக இருப்பதாக அவள் கூறினாள். நின்றபடியே அவளை நோக்கினேன், இம்முறை இன்னமும் கவனமாக, என்ன சொல்ல வருகிறாள் என்பதை அவள் முகபாவத்திலிருந்து ஊகிக்க முயற்சித்தேன். ஆனால், அது புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. அவள் தோளுக்கு பின்னாலும் என் பார்வை சென்றது. அடுக்ககத்துக்கு உள்ளிருந்த முழு அமைதியிலும், இருட்டிலும் ஒரு அசைவுகூடப் புலப்படவில்லை என்றாலும், உள்ளே யாரோ இருட்டில் பதுங்கி இருந்து நாங்கள் பேசுவதைக் கேட்பது போலவும், காத்திருப்பது போலவும் என் உள்ளணர்வுக்குத் தோன்றியது. நீ நன்றாக இருக்கிறாய்தானே? ஆமாம், என்றாள் அவள் மிக மெதுவாக. ஏதாவது மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாயா? இல்லை, எந்த போதைப் பொருளையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை என்று கிசுகிசுப்பான குரலில் பதிலளித்தாள். என்னை உள்ளே வர விடுவாயா இல்லையா? உனக்குக் கொஞ்சம் தேநீர் செய்து கொடுக்கட்டுமா? வேண்டாம், என்றாள் ஸோஃபியா. கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்ததால் இன்னொரு கேள்வியையும் கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்: ஏன் என்னை உன் அடுக்ககத்துக்கு உள்ளே வந்து பார்க்க அனுமதிக்க மறுக்கிறாய், ஸோஃபியா? அவள் பதில் என்னை வியப்பிலாழ்த்தியது. என் காதலன் விரைவில் திரும்பி வருவான். அவனுக்கு என்னுடன் வேறு யாரும் இருப்பது பிடிக்காது, குறிப்பாக ஓர் ஆண். எனக்குக் கோபப்படுவதா அல்லது அதை ஒரு தமாஷாக எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை. உன்னுடைய காதலன் ஒரு காட்டேரியாக இருப்பான்போல, என்றேன். ஸோஃபியா முதன் முறையாகப் புன்னகைத்தாள். ஆனால் அது பலவீனமான, வறண்ட புன்னகையாக இருந்தது. அவனிடம் உன்னைப் பற்றிச் சொல்லி இருக்கிறேன் என்றாள். உன்னை அவன் அடையாளம் கண்டுகொள்வான். என்ன செய்வான்? அடிப்பானா? இல்லை, கோபப்படுவான், அவ்வளவுதான். அப்புறம்? என்னை உதைத்து வெளியே தள்ளுவானோ? (இப்போது எனக்குள் கோபம் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருந்தது. ஒரு கணம், ஸோஃபியா இருட்டில் நிர்வாணமாகக் காத்திருக்கும் அவள் காதலன் வரட்டுமே, என்னதான் நடக்கும், அவன் அப்படி என்னதான் செய்வான் என்று பார்ப்போமே என்ற ஆவல் என்னுள் எழுந்தது.) அவன் உன்னை உதைத்து வெளியே தள்ளமாட்டான், என்றாள். கோபப்படுவான், அவ்வளவுதான்; உன்னிடம் பேசமாட்டான், நீ போனபிறகு என்னிடம்கூட எதுவும் பேசமாட்டான். உனக்கு மறை கழண்டு விட்டது, சரிதானே? என்று நான் வெடித்தேன். என்ன சொல்கிறாய் என்று உனக்கே புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் உன்னை என்னமோ செய்துவிட்டார்கள், ஆளே மாறிப்போய் வேறு யாரோ போல் இருக்கிறாய். நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன்; நீதான் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாத அசடனாக இருக்கிறாய். ஸோஃபியா, ஸோஃபியா, என்ன ஆயிற்று உனக்கு? நீ இப்படி இருந்ததே இல்லை. வெளியே போ, இங்கிருந்து போய்விடு – என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்றாள்.
அதன் பிறகு, ஸோஃபியாவைப் பற்றிய செய்தி என்னை வந்தடைய ஒரு வருடத்துக்கும் மேல் ஆயிற்று. ஒரு நாள் மதியம், சினிமா பார்த்துவிட்டு வெளியே வரும்போது, நூரியாவைத் தற்செயலாகச் சந்தித்தேன். இருவரும், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்டோம். சினிமாவைப் பற்றிச் சிறிது நேரம் பேசியபின், காப்பி குடிக்கலாம் என்று முடிவு செய்தோம். வெகு விரைவிலேயே ஸோஃபியாவைப் பற்றிப் பேசத் தொடங்கினோம். அவளை எப்போது கடைசியாகப் பார்த்தாய் என்று நூரியா கேட்டாள். நீண்ட காலம் ஆயிற்று, ஆனால் சில நாள்கள் காலையில் எழும்போது அவளை அப்போதுதான் பார்த்ததுபோலத் தோன்றும் என்றேன். அவளைக் கனவில் கண்டது போலவா? இல்லை, அவளுடன் இரவு முழுவதும் செலவழித்ததுபோல, என்றேன். விசித்திரமாக இருக்கிறது. இதேபோல ஒன்று எமிலியோவுக்கும் நடந்து கொண்டிருந்தது. அவள் அவனைக் கொல்ல முயற்சிக்கும்வரை. அதன் பிறகு, அவளைப் பற்றிய கொடுங்கனவுகளை அவன் காண்பதில்லை.
அவள் அந்தக் கதையை எனக்குச் சொன்னாள். எளிமையானது. புரிந்துகொள்ள முடியாதது.
ஆறேழு மாதங்களுக்கு முன் ஸோஃபியா, எமிலியோவை அழைத்திருந்தாள். பிசாசுகளையும், சதிகளையும், கொலைகளையும் ஸோஃபியா குறிப்பிட்டதையும், பைத்தியத்தைக் காட்டிலும் மற்றவர்களை வேண்டுமென்றே பைத்தியமாக்குபவனையே அதிகம் அஞ்சுவதாகக் கூறியதையும் அவன் நூரியாவிடம் பின்னர் கூறினான். நான் முன்பு சென்றிருந்த அவளுடைய அடுக்ககத்துக்கு அவனை வரச்சொல்ல, அடுத்த நாள் எமிலியோ மிகச் சரியாகச் சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்தான். வெளிச்சம் குறைந்த படிக்கட்டுகள், ஒலி எழுப்பாத அழைப்பான், கதவு தட்டப்படுதல்; இந்தக் கணம்வரை நடந்தது எல்லாம் பரிச்சயமானதும் எதிர்பார்த்ததும்தான். ஸோஃபியா கதவைச் திறந்தாள், இம்முறை அவள் நிர்வாணமாக இல்லை. அவனை உள்ளே வருமாறு பணித்தாள். எமிலியோ அந்த அடுக்கத்துக்குள் இதுவரை போனதில்லை. நூரியாவின் கூற்றுப்படி, வரவேற்பறை பெரியதாக இருந்தபோதிலும், அழுக்கு வடியும் சுவர்களும், அழுக்குப் பாத்திரங்கள் குவிந்திருந்த மேசையுமாகக் கேவலமான நிலையில் இருந்தது. அறைக்குள் மிகக் குறைவான வெளிச்சமே இருந்ததால், எமிலியோவின் பார்வைக்கு ஒன்றும் புலப்படவில்லை. கண்களுக்கு இருள் பழகத் தொடங்கியவுடன், நாற்காலியில் ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவனுக்கு வணக்கம் தெரிவித்தான். அந்த மனிதனிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. உட்கார், நாம் பேச வேண்டும் என்றாள் ஸோஃபியா. எமிலியோ உட்கார்ந்தான். அவனுக்குள்ளே இருந்து ஒரு சிறிய குரல் திரும்பத் திரும்ப, இது சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தது, ஆனால், அவன் அதைப் புறக்கணித்தான். ஸோஃபியா அவனிடம் கடன் கேட்கப் போகிறாள் என்று நினைத்தான். மறுபடியும். ஒருவேளை அறையில் அந்த மனிதன் இருப்பதனால் கேட்காமல் இருந்துவிடுவாள் என்பதையும். ஒரு மூன்றாவது ஆள் இருக்கும்போது, ஸோஃபியா ஒருபோதும் பணம் கேட்பதில்லை, அதனால் எமிலியோ உட்கார்ந்து காத்திருந்தான்.
பிறகு ஸோஃபியா, வாழ்க்கையைப் பற்றி ஒன்றிரண்டு விஷயங்களை என் கணவன் உனக்கு விளக்க விரும்புகிறான் என்று கூறினாள். ’என் கணவன்’ என்று அவள் சொன்னது தன்னைக் குறித்துதான் என்று எமிலியோ ஒரு கணம் நினைத்து, அவளுடைய புதிய நண்பனிடம் ஏதோ சொல்லச் சொல்கிறாள் என்று அர்த்தப்படுத்திக் கொண்டான். புன்னகைத்தபடி, அப்படி எதுவும் விளக்குவதற்கு இல்லை, ஒவ்வொரு அனுபவமும் தனித்துவமானது என்று சொல்லத் தொடங்கினான். சட்டென எமிலியோவுக்கு, அவள் கணவன் என்று குறிப்பிட்டது அந்த அறையில் இருந்த மற்ற மனிதனை என்றும், ‘உனக்கு’ என்று அவள் குறிப்பிட்டது தன்னையே என்றும், ஏதோ மிக மோசமான, மிகவும் மோசமான ஒன்று நடக்கப்போகிறது என்றும் புரிந்தது. அவன் எழுந்து நிற்க முயற்சிசெய்து கொண்டிருக்கையிலேயே, ஸோஃபியா அவன்மீது பாய்ந்தாள். அதன் பின் நடந்தவை சற்றுக் கோமாளித்தனமானவை. ஸோஃபியா எமிலியோவின் கால்களை இறுக்கிப் பிடித்திருக்க, அல்லது பிடிக்க முயற்சிக்க, அவள் புதிய காதலன், இவன் கழுத்தை நெறிக்க முயற்சித்தான். இயன்ற முழு ஆற்றலையும் பிரயோகித்தும் ஒரு பரிதாபத்துக்குரிய முயற்சியாகவே அது இருந்தது. ஸோஃபியாவும், அந்தப் பெயரில்லாத மனிதனும் உருவத்தில் சிறியவர்கள், அதனால் அந்தச் சண்டை அல்லது அதுபோலத் தோன்றக்கூடிய ஒன்று, வெகு சீக்கிரமே முடிவுக்கு வந்தது. இந்தக் களேபரங்களுக்கு நடுவிலும், கிட்டத்தட்ட இரட்டையரைப்போல இருந்த அவர்கள் உருவ ஒற்றுமையைக் கவனிக்கும் அளவுக்கு எமிலியோவுக்கு நேரமும், சமயோசித புத்தியும் இருந்தது. ஒருவேளை பயம் எமிலியோவுக்குப் பழி தீர்க்கும் ருசியை அளித்திருக்கலாம். ஸோஃபியாவின் நண்பனைஹ் தரையில் வீழ்த்திய அடுத்த கணமே, அவனை உதைக்க ஆரம்பித்துக் களைத்த பின்னரே நிறுத்தினான். அவன் விலாவில் சில எலும்புகளாவது உடைந்திருக்கும், எமிலியோ எப்படிப்பட்டவன் என்று உனக்குத் தெரியும் அல்லவா என்றாள் நூரியா. எனக்குத் தெரியாது, ஆனாலும் தலையை ஆட்டி ஆமோதித்து வைத்தேன். அதன் பிறகு அவன் கவனம், அவனைப் பின்னிருந்து பிடித்து நிறுத்தவும், அடிக்கவும் முயற்சி செய்துகொண்டிருந்த ஸோஃபியாவின் பக்கம் திரும்பிற்று. அவளை மூன்று முறை அறைந்து விட்டு கிளம்பினான். (அவன் அவள் மேல் கை ஓங்கியது அதுதான் முதல்முறை என்றாள் நூரியா.) அதன்பின் அவளைப் பற்றி அவர்கள் எதுவுமே கேள்விப்படவில்லை. இருந்தாலும் இரவில், அதுவும் குறிப்பாக வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, நூரியாவுக்குப் பயம் இருக்கவே செய்தது.
ஒருவேளை ஸோஃபியாவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று உனக்குத் தோன்றக்கூடும் என்பதால்தான் நான் இதைச் சொல்கிறேன், என்றாள் நூரியா. இல்லை, நான் அவளைப் பார்த்து வெகுகாலம் ஆயிற்று, அத்தோடு, அவளைப் போய்ப் பார்க்கும் எண்ணமும் எனக்கு இல்லை என்றேன் நான். அதன்பின் வேறு சில விஷயங்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். இரண்டு நாள்கள் கழித்து, என்னவென்று தெரியாத ஒரு சக்தியின் உந்துதலால், நான் ஸோஃபியாவின் அடுக்ககத்துக்குச் சென்றேன்.
அவள் கதவைத் திறந்தாள். முன்னெப்போதையும்விட நன்றாக இளைத்திருந்தாள். முதலில் அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. என் தோற்றம் அவ்வளவு மாறிவிட்டதா ஸோஃபியா என்று முணுமுணுத்தேன். ஓ, நீயா? என்றாள். பின், ஒரு தும்மலுக்குப்பின், ஓர் அடி பின்னால் வைத்தாள். நான் இதை உள்ளே வருவதற்கான ஒரு அழைப்பாகப் புரிந்து கொண்டேன். (ஒருவேளை தவறான புரிதலாகவும் இருக்கலாம்.) அவள் என்னைத் தடுக்கவில்லை.
அவர்கள் தடாலடித் தாக்குதல் நடத்திய அறைக்குள் ஒளி மிகக் குறைவாகவே இருந்தது (அறைக்குள் இருந்த ஒரு ஜன்னலும் ஒரு குறுகிய இருண்ட காற்றுப் போக்கிக்கே இட்டுச் சென்றது). ஆனால் அறை அவ்வளவு அழுக்காகத் தோன்றவில்லை. சொல்லப்போனால், அந்த அறை எவ்வளவு சுத்தமாக இருந்தது என்பதே எனக்கு முதலில் உறைத்தது. ஸோஃபியாவும் பார்ப்பதற்கு அழுக்கானவள்போல் தோன்றவில்லை. நான் நாற்காலியில் அமர்ந்து ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன். அது ஒருவேளை, தாக்குதல் நடந்த அன்று எமிலியோ அமர்ந்த நாற்காலியாகக்கூட இருக்கலாம். ஸோஃபியா அப்போதும் நின்றுகொண்டே, என்னை யாரென்று சரியாகத் தெரியாத ஒரு பாவனையில் பார்த்து கொண்டிருந்தாள். அவள் வேனிற்காலத்தில் அணிவதற்குகந்த ஒரு நீண்ட குறுகிய பாவாடையும், மெல்லிய மேல்சட்டையும், சப்பாத்துகளும் அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த கனமான காலுறைகள் என்னுடையனவோ என்று ஒரு கணம் தோன்றி, பின் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தேன். எப்படி இருக்கிறாள் என்று விசாரித்தேன். அவள் பதில் சொல்லவில்லை. தனியாகத்தான் இருக்கிறாளா, குடிப்பதற்கு ஏதாவது இருக்குமா, வாழ்க்கை எப்படிப் போகிறது என்றெல்லாம் கேட்டேன். அவள் அப்படியே நின்று கொண்டிருந்ததனால் எழுந்து சமையலறைக்குச் சென்றேன். அது இருட்டாக, ஆனால் சுத்தமாக இருந்தது. குளிர்பதனப் பெட்டி காலியாக இருந்தது. அலமாரிகளைத் திறந்து பார்த்தேன். ஒரு சின்ன பட்டாணிப் பொட்டலம்கூட இல்லை. குழாயைத் திறந்து பார்த்தேன்; நல்லவேளை தண்ணீராவது வந்தது, ஆனால் அதைக் குடிக்கும் தைரியம் எனக்கு இல்லை. மீண்டும் வரவேற்பறைக்குச் சென்றேன். ஸோஃபியா அப்போதும் அவள் நின்ற இடத்திலேயே சிலைபோல, மறதியாகவா, அல்லது ஆவலுடனா என்று சொல்லமுடியாத பாவனையில் நின்றிருந்தாள். திடீரெனக் குளிர்ந்த காற்று உள்ளே வந்ததுபோலத் தோன்றியது. முன்வாசல் திறந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால், பரிசோதித்து பார்த்தபோது இல்லை என்று தெரிந்தது. நான் உள்ளே வந்தபின் ஸோஃபியா கதைவை சாத்தி இருந்தாள். அதையாவது செய்தாளே என்று நினைத்தேன்.
அதற்குப் பின் நடந்தவை என் நினைவில் குழப்பமாகவே உள்ளன. (ஒருவேளை அப்படி அதை நினைவில் வைத்திருக்க என் உள்மனம் விரும்பி இருக்கலாம்.) நான் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன் – அவள் சோகமாக இருக்கிறாளா, தீவிரமான யோசனையில் இருக்கிறாளா, அல்லது அவளுக்கு உடல் நலமில்லையா என்றெல்லாம் நினைத்தபடியே. அவள் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏதேனும் செய்யவில்லை என்றால் அழ ஆரம்பித்துவிடுவேன் என்று தோன்றியது. எனவே, அவளருகே சென்று பின்னிலிருந்து அவளை அணைத்தேன். அங்கிருந்து படுக்கை அறைக்கும், அதற்கு அடுத்த அறைக்கும் இட்டுச்சென்ற வழி குறுகிக்கொண்டே போனது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் பழைய நாள்களைப்போல், மெதுவாகவும் தீவிரமாகவும் உடலுறவு கொண்டோம். அப்போது குளிராக இருந்தது. நான் என் உடைகளைக் களையவில்லை. ஆனால் சோஃபியா அவளுடைய எல்லா ஆடைகளையும் கழற்றி விட்டாள். இப்போது நீ பனிக்கட்டிபோல குளிர்ந்திருக்கிறாய் என்று எண்ணிக் கொண்டேன். பனிக்கட்டிபோல குளிர்ந்து, தன்னந்தனியாக.
அடுத்த நாள் அவளை மீண்டும் பார்க்கச் சென்றேன். இந்த முறை இன்னும் அதிக நேரம் அங்கே தங்கினேன். ஒன்றாகத் தங்கி இருந்த நாள்களைப் பற்றியும், விடியும்வரை பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். என் புதிய அடுக்ககத்தில் தொலைக்காட்சிப் பெட்டி உண்டா என்று கேட்டாள். இல்லை என்றேன். நான் அதன் இன்மையை உணர்கிறேன், குறிப்பாக நள்ளிரவு நிகழ்ச்சிகளை என்றாள். தொலைக்காட்சி இல்லாததால், வாசிப்பதற்கு அதிக நேரம் கிடைக்கும் என்றேன். நான் இப்போதெல்லாம் வாசிப்பதில்லை என்றாள். கொஞ்சம்கூட இல்லையா? கொஞ்சம்கூட இல்லை. வேண்டுமானால் தேடிப் பார், இங்கு ஒரு புத்தகம்கூட இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப்போல் நான் எழுந்து, அந்த அடுக்கத்தைச் சுற்றி வந்தேன். சற்றும் அவசரம் இல்லாதவனைப்போல, ஒவ்வொரு மூலையாகச் சென்று பார்த்தேன். நிறைய பொருட்கள் கண்ணுக்குப்பட்டன, ஆனால் புத்தகங்கள் இல்லை. ஓர் அறை பூட்டப்பட்டு இருந்தததால் என்னால் உள்ளே போகமுடியவில்லை. நெஞ்சுக்குள் ஒரு வெற்றுணர்வு தோன்ற, திரும்பிவந்து எமிலியோவின் நாற்காலியில் அமர்ந்தேன். அதுவரை அவளது நண்பனைப் பற்றி நான் அவளிடம் கேட்டிருக்கவில்லை. அதனால் அப்போது கேட்டேன். ஸோஃபியா என்னைப் பார்த்து புன்னைகைத்தாள். நாங்கள் மீண்டும் சந்தித்தபின் அவள் உதிர்த்த முதல் புன்னகை என்று நினைக்கிறேன். அது சுருக்கமானதாக இருந்தாலும், கச்சிதமான புன்னகையாக இருந்தது. அவன் போய்விட்டான், இனிமேல் ஒருபோதும் திரும்பி வரமாட்டான் என்றாள் அவள். அதன் பின் நாங்கள் ஆடைகளை அணிந்துகொண்டு, பீட்சா சாப்பிட வெளியே கிளம்பினோம்.
***