சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்

This entry is part 2 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

1970 –க்கு முந்தைய காலத்தில், இந்தியாவில் அதிக கார்கள் கிடையாது. இன்றைய இரு சக்கர ஊர்திகளின் எண்ணிக்கை, அன்றைய மக்கள் தொகையைவிட அதிகம். இரு சக்கர வாகனம் என்றால் பஜாஜ் ஸ்கூட்டர்கள் மட்டுமே உண்டு. பஜாஜ் ஸ்கூட்டர்கள் பால்காரர்களால், காலைப் பொழுதில், தாங்கள் கறந்த பாலை நகருக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. சாலையில் இந்தப் பால்காரர்கள் சென்று மறைந்தது எல்லோருக்கும் உடனே தெரியும். இதற்குக் காரணம், இந்த ஸ்கூட்டர்கள் விடும் புகை. அதில் ஒரு விநோத வாசம் உண்டு. அன்று அது சரியாகப் புரியாவிட்டாலும், அந்த வாசம், உடலுக்கு கேடு விளைவிக்கும் ஈயம் என்று இப்பொழுது புரிகிறது.

நாம் வியந்ததுபோல, பேட்டர்ஸன் (Clair Cameron Patterson) என்ற அமெரிக்கப் புவிவேதியல் (geochemist) விஞ்ஞானியும் முதலில் (1940) வியந்தார். 1965 –ஆம் ஆண்டிலிருந்து இவர், ஈயம் சார்ந்த தொழிற்சாலைகள் பற்றி ஆராயத் தொடங்கினார். இவரது வாதம், சுற்றுச்சூழல் மற்றும் மனித உணவில் ஈயம் அதிகம் கலப்பதற்குக் காரணம், ஈயம் சார்ந்த தொழிற்சாலைகள் என்றும் இதனால் பலவித நோய்கள் பரவுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். குறிப்பாக, பெட்ரோலில் கலக்கப்படும் ஈயம் (tetraethyl lead) அறவே நீக்கப்பட வேண்டும் என்பது இவரது வாதம்.

பேட்டர்ஸனின் ஆராய்ச்சி ஆரம்பத்தில், பூமியின் பழமை பற்றியது – அதாவது, பூமி உருவாகி எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்று கண்டறிவது, இவரது ஆராய்ச்சியின் குறிக்கோள். 1950 –களில் பூமியின் வயது 3.3 பில்லியன் ஆண்டுகள் என்று அன்றைய ஆதாரங்கள் மூலம் நம்பப்பட்டது. இந்த ஆராய்ச்சி மூலம், பூமியின் வயது 4.55 பில்லியன் ஆண்டுகள் என்று கண்டுபிடித்து வெளியிட்டார். இதை இங்கு சொல்ல முக்கிய காரணம், இந்த அளவைக் கணிக்க, பேட்டர்ஸனின் முக்கிய பங்கு ஜிர்கான் (Zircon) என்னும் கனிமத்தில் உள்ள ஈயத்தின் அளவைக்கொண்டு, அந்த கனிமத்தின் வயதைக் கணிப்பது. பேட்டர்ஸன், ஈய அளவீட்டில் ஒரு வித்தகர் ஆனதற்கு இவரது முனைவர் பட்ட ஆராய்ச்சியே ஆரம்பம்.

சில ஆண்டுகளில், பேட்டர்ஸன் உலக ஈய துல்லிய அளவு நிபுணர் என்று உயர்ந்தார். இவர் தமது ஆராய்ச்சியைத் தரை மீதிருக்கும் பாறைகள் மற்றும் தனிமத்திலிருந்து, உலக சமுத்திரங்களுக்கு மாற்றினார். இதற்கு, அமெரிக்க அணுவியல் கழகம் உதவித்தொகை வழங்கியது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் சமுத்திரத்தில் எந்த அளவிற்கு ஈயம் கலந்துள்ளது என்று அளக்க முற்பட்டார் பேட்டர்ஸன். இவரது ஆராய்ச்சியில், கடலின் ஆழமான பகுதிகளில், மேற்பரப்புப் பகுதிகளைவிட 20 மடங்கு குறைவாக ஈயம் கலந்திருப்பதை நிரூபிக்க முடிந்தது. இவர் இந்த முடிவுக்கு வந்தது விஞ்ஞானிகளைச் சற்று வியப்படையச் செய்தது. அதுவரை, மனிதத் தொழிற்சாலைகளால், ஈயம், கடலின் மேற்பகுதியில், அடிப்பகுதியைவிட, இரு மடங்கு மட்டுமே பாதிப்பு இருக்கும் என்று நம்பப்பட்டது. இவர் முதன் முறையாகக் க்ரீன்லேண்டு மற்றும் அண்டார்டிகாவிலிருந்து பனிக் கட்டிகளை ஆராயத் தொடங்கினார். இன்று புவிச் சூடேற்ற விஞ்ஞானம் இந்த முறைகளை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது. 

விஞ்ஞான முறைபடி ஆராய்ந்ததில், சில திடுக்கிடும் முடிவுகள் வெளிவந்தன. மோட்டார் வாகனத் தொழில் ஓர் அமெரிக்க ராட்சசத் தொழில். இந்தத் தொழிலில் உள்ள முக்கிய ஆரம்ப காலப் பிரச்னை, எஞ்சின் அவ்வப்பொழுது பட்டாசு வெடிப்பது போன்ற ஒரு சத்தத்துடன் இயங்குவது. இதை Engine knocking என்று பொறியாளர்கள் சொல்வதுண்டு. இவ்வாறு நிகழும்போது, பயன்படுத்தப்படாத எரிபொருள் புகையுடன் வெளியேறும். (பஜாஜ் ஸ்கூட்டர் காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நினைவு கூறலாம்.) இந்தப் பிரச்னையைத் தீர்க்க மோட்டார் வாகனத் தொழில் கண்டுபிடித்த வழி, tetraethyl lead என்ற ரசாயனத்தைப் பெட்ரோலில் கலப்பது. இதை leaded petrol என்று சொல்லி விற்றார்கள். இதனால், Engine knocking குறைந்தது. ஆனால், இதன் பின்விளைவாக, காற்றில் ஈயம் கலந்தது. 

பேட்டர்ஸனின் ஆராய்ச்சி, பனிக் கட்டிகளில் சிக்கிய காற்றில், ஈயத்தின் அளவு tetraethyl lead அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலிருந்து உயர்ந்ததைக் கண்டது. இதை வெளியிட்ட கையோடு, உலகின் மிகச் சக்தி வாய்ந்த கார்த் தொழிலுடன் மோதல், பேட்டர்ஸனின் விஞ்ஞான ஆராய்ச்சி வாழ்க்கையைச் சிக்கலாக்கியது. தமது வாழ்க்கையை ஈயத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதைக் குறியாகக் கொண்டு இயங்கத் தொடங்கினார் பேட்டர்ஸன்.

அப்படி என்ன அபாயம் ஈயத்தினால்? தமிழ்க் குடும்பங்களில், அன்றாடம் ஈயச் சொம்பில் ரசம், குழம்பு செய்தல் வழக்கம். ஈயத்தினால் அப்படி என்ன நேர்ந்துவிடும்? எல்லாவித ஈயமும் மனித உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இந்தக் கட்டுரையைப் படிக்கும் தமிழர்கள், குறைந்தபட்சம், ஈயச் சொம்பை, தங்களது உடல் நலத்தைக் கருதித் துறத்தல் அவசியம். குறிப்பாக, tetraethyl lead மனித மூளைக்கு மிகவும் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது. இதனால், மூளை மற்றும் நரம்பு சார்ந்த வியாதிகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டது. விஞ்ஞான நிரூபனம் ஒருபுறம். ஆனால், 1990 வரை பெரும்பாலான நாடுகள் tetraethyl lead கலந்த பெட்ரோலைத் தடை செய்வதில் தயக்கம் காட்டின. அமெரிக்கக் காங்கிரஸில் பல விசாரணைகளுக்குப் பிறகு, முடிவெடுப்பதற்குள் 1996 ஆகிவிட்டது. கனடா, ஆஸ்த்ரியா, போன்ற நாடுகள் 1990 –ல் இந்தத் தடையை முறையாகச் செய்தனர். அடுத்தபடியாக, டென்மார்க், ஃபின்லாந்து போன்ற நாடுகள் தொடர்ந்தன. அமெரிக்காவைத் தொடர்ந்து, கடைசியாக, பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் 2000 –ஆம் ஆண்டில் தடை செய்தன. இன்றும், சில ஆப்பிரிக்க நாடுகள், ஆஃப்கானிஸ்தான், ஏமன், ஈராக் போன்ற நாடுகளில் ஈயம் கலந்த பெட்ரோல் இன்னமும் பயனில் உள்ளது.

1965 –ல் நிரூபிக்கப்பட்ட இந்த விஞ்ஞானம் நடைமுறைக்கு வர எப்படி இத்தனை காலமானது? எல்லாம் விஞ்ஞானத் திரித்தல்தான். பேட்டர்ஸன் சந்தித்த சிக்கல்களும் அவரது விஞ்ஞானம் சில பெரிய நிறுவனங்களின் லாபத்திற்கு சவால் விட்டதால்தான். இந்த விஞ்ஞானம் எப்படித் திரிக்கப்பட்டது என்று விரிவாக பார்ப்போம்.

பேட்டர்ஸன் தமது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டவுடன், அவரது ஆராய்ச்சிக்கான உதவித் தொகை வெகுவாகக் குறைந்தது. அதுவரை, அவரது ஆராய்ச்சிக்கு உதவி செய்தவை எண்ணெய் நிறுவனங்கள். பேட்டர்ஸன் தளரவில்லை. மற்ற உதவித் தொகை மூலங்களைத் தேடிப்பிடித்து, தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பெரிய பணக்கார நிறுவனங்கள் விரும்பாத ஆராய்ச்சியைச் செய்வதில் பணச் சிக்கல்கள் மட்டுமல்ல, பல வகைகளில் நேர்மையான விஞ்ஞான ஆராய்ச்சி என்பதே கேள்விக் குறியாகிவிடுகிறது. எங்கோ இருக்கும் கருந்துளைகளை ஆராயும் விஞ்ஞானிக்குப் பெரிய சவால்கள் இருக்க நியாயமில்லை. ஆனால், விஞ்ஞான ஆராய்ச்சி ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் லாபத்தில் கை வைத்தால், அந்த விஞ்ஞானியின் நிலை பரிதாபமாகி விடுகிறது. இதுதான் விஞ்ஞான உலகின் நிதர்சன உண்மை. உண்மையான விஞ்ஞானம், யாருடைய லாபத்தையும் குறியாகக் கொண்டு செயல்படுவதில்லை.  இயற்கையின் உண்மைகளை எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிப்பதே விஞ்ஞானத்தின் குறிக்கோள். இதனால், மனித குலம் என்றும் பயனடைந்துள்ளது. ஆனால், கடந்த 150 ஆண்டுகளாக விஞ்ஞானம் வளர்ந்தாலும் வணிக மற்றும் அரசியல் நோக்கங்கள் அதன் முன்னேற்றத்தைப் பெரிதும் பாதித்துள்ளன.

இந்தத் தொழில்நுட்பத்தின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. 20 –ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க வாகனத் தொழிலை ஃபோர்டு கம்பெனி ஆக்கிரமித்தது. 1920 –க்கு பிறகு, ஜென்ரல் மோட்டார்ஸ் (General Motors or GM – செவர்லே கார்களைத் தயாரிக்கும் அதே ஜி.எம்.) நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தைவிட அதிகமாக ஊர்த்திகளை விற்கத் தொடங்கியது. ஜி.எம். சம்பாதித்த லாபத்தை, இரு நிறுவனங்களில் முதலீடு செய்தது – முதலாவது அமெரிக்க ரசாயன நிறுவனமான டூபாண்ட் (Dupont); இரண்டாவது, பெட்ரோலை வினியோகிக்கும் ஸ்டாண்டர்டு ஆயில் (Standard Oil). பெட்ரோலில் tetraethyl lead –ஐக் கலந்தால், engine knocking பிரச்னையை வெகுவாகக் குறைக்கலாம் என்று கண்டுபிடித்தவர்கள் டூபாண்டின் பொறியாளர்கள். இதனால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்த மூன்று நிறுவனங்களும் பெரும் லாபம் சம்பாதித்தன. டூபாண்ட் tetraethyl lead ஐத் தயாரித்தது. அதைப் பெட்ரோலில் கலந்து ஸ்டாண்டர்டு ஆயில் விற்றது. பெட்ரோலில் இயங்கும் பளபளப்பான கார்களை ஜி.எம். தயாரித்தது. மற்ற இரண்டு நிறுவனங்களிலும் பங்காளியான ஜி.எம். ஏராளமான லாபம் ஈட்டியது. பேட்டர்ஸனின் விஞ்ஞானம் இந்த தேனிக்கூட்டில் கல்லெறிந்ததுதான் பிரச்னையாகப் போய்விட்டது.

ஆரம்பத்தில் tetraethyl lead ஐப் பெட்ரோலுடன் கலப்பதுபற்றி, பேட்டர்ஸனுக்கு முந்தைய காலத்திலேயே (1920 –களில்) சர்ச்சை எழுந்தது. ஸ்டிம்சன் (A.M. Stimson, Assistant Surgeon General at the Public Health Service)  என்ற பொது மருத்துவ நல அதிகாரி மூலம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க சர்ஜன், tetraethyl lead –ஆல் சாலைகளில் சுவாசிக்கும் காற்றில் விஷம் கலக்குமா என்று ஜென்ரல் டூபாண்ட் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினார். Tetraethyl lead ஐக் கண்டுபிடித்த டூபாண்டிடம் விஞ்ஞானபூர்வமான பதிலை எதிர்பார்த்தார் சர்ஜன் ஜென்ரல். இவர்களது பதில், மிகவும் வினோதமான வணிக பதில். 

“நாங்கள் இவ்வகைக் குற்றச்சாட்டுக்களை மிகவும் தீவிரமாகப் பார்க்கும், பொது நலனில் அக்கறை கொண்ட நிறுவனம். அதிக விஞ்ஞானச் சோதனை முடிவுகள் இல்லையென்றாலும் tetraethyl lead கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் வாகனங்கள் செல்வதால், காற்றில் பெரிதாக ஈய விஷம் பரவ சிறிய வாய்ப்புகள்கூட இல்லை என்பதே எங்கள் முடிவு.”

விஞ்ஞானத் திரித்தலின் மிக அருமையான உதாரணம் இந்தப் பதில். கேள்வி கேட்கும் அதிகாரிக்கு மதிப்பு தருவது போலவும் இருக்க வேண்டும். விஞ்ஞானத்தில் ஏராளமான நம்பிக்கை உள்ள நிறுவனமாகவும் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, விஞ்ஞானச் சோதனை முடிவுகள் எதுவும் இலை என்று கைவிரிக்கவும் வேண்டும். இதைவிட அதிகாரிகளின் வாயை அடைக்கச் சிறந்த வழியுண்டா என்றால் கேள்விக்குறிதான்.

இப்படிப் பதிலளித்தாலும் ஜி.எம். மற்றும் டூபாண்ட் இன்னொரு முக்கியத் திரித்தல் வேலையில் ஈடுபட்டார்கள். தாங்கள் மிகவும் நடுநிலை விருப்பமுடையவர்கள்போலக் காட்டிக்கொள்வதற்காக, நிறுவனத்திற்குள் விசாரணை நடத்தினால், அது பித்தலாட்டம் என்று தெரிந்துவிடும். இவர்கள், Bureau of Mines என்ற அமெரிக்க அரசாங்க அமைப்புடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அதன் சாராம்சம் இது:

  • Bureau of Mines பெட்ரோலில் tetraethyl lead கலந்தால், மனித உடல் நலனுக்குக் கெடுதலா என்று ஆராய வேண்டும்
  • இதற்கான ஆராய்ச்சி உதவித் தொகை ஜி,எம். –ன் ஆராய்ச்சிக் கழகத்திடமிருந்து வரும்
  • ஆனால், tetraethyl lead என்ற சொற்றொடரை ஒருபோதும் தங்களது எந்தக் கடிதப் போக்குவரத்திலும் பயன்படுத்தக் கூடாது. வெறும் lead என்று வேண்டுமானால் சொல்லலாம்
  • ஆராய்ச்சியின் இறுதி முடிவு வெளிவரும் வரை, செய்தியாளர்களுடன் Bureau of Mines -க்கு எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது
  • இறுதி முடிவுகள், ஜி.எம். –ஆல் விமர்சிக்கப்பட்ட பின்பே வெளியிடப்பட வேண்டும்

ஒரு மிகப் பெரிய அரசாங்கத்தையே மிகப் பெரிய நிறுவனங்கள், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் ஆரம்பம் இதுதான். விஞ்ஞான ஆராய்ச்சியைத் தங்களுடைய வியாபார லாபத்திற்கு அடிமையாக்கியதன் ஆரம்பமும் இதுவே.

இதன் நடுவே, திருடனுக்குத் தேள் கொட்டியது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஸ்டாண்டர்டு ஆயில், நியூ ஜெர்ஸியில் இயக்கி வந்த ஒரு tetraethyl lead ஆய்வகத்தில் நடந்த சம்பவம் ஒன்றில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 35 தொழிலாளர்கள் ஈயத்தின் விஷத் தன்மையால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். பலவித நரம்பு சார்ந்த பிரச்னைகளை இவர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த சம்பவத்திற்குப் பின் அனுபவித்தனர். இதன் பொறுப்பு தொழிலாளர்களுடையது, நிர்வாகத்துக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்று ஸ்டாண்டர்டு ஆயில் மழுப்பியது. இதனால், tetraethyl lead பயன்படுத்தும் கார்களால் பொதுமக்களுக்குப் பாதகம் இல்லை என்றும் சொல்லியது. செய்தித் தாள்களும், தொழிலாளர் நல அரசாங்க கமிஷனரும், ஈய விஷ வாயுவிற்கு ஸ்டாண்டர்டு ஆயில் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதாடி வந்தனர்.

அடுத்த பகுதியில், இந்த விஞ்ஞானத் திரித்தலை ஜி.எம். எப்படி ஒரு கலையாகவே மாற்றியது என்று மேலும் பார்ப்போம்.

Series Navigation<< விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.