குற்றச் சிந்தனைகளுக்கு ஓர் அகராதி

நாஜிகளுக்கு உடந்தையானவர்களின் எழுத்து பற்றி  ராபர்ட் பொலான்யோவின் சுருக்கத் தொகுப்பு

ஜாஷுவா கோயென்

தமிழாக்கம்: மைத்ரேயன்

அமெரிக்காக்களில் நாஜி இலக்கியம் ரொபெர்த்தோ பொலான்யோ ஸ்பானிய மொழியிலிருந்து இங்கிலிஷுக்கு மொழி பெயர்ப்பு: க்ரிஸ் ஆண்ட்ரூஸ் நியூ டைரெக்‌ஷன்ஸ் (280 பக்)/  2009

ரொபெர்த்தோ பொலான்யோ (1953-2003) ஒரு ட்ராட்ஸ்கியவாதி, போதை மருந்துக்கு அடிமை, நாடோடி, மற்றும் புலம் பெயர்ந்தவர். முதலியம் பெயர் சூட்டக் கூடிய வகையான ‘பரீட்சார்த்தக் கவிஞன்’ ஆக விரும்பியவர், மாறாக அவர் சிலேயின் ஆகச் சிறந்த நாவலாசிரியராகி விட்டார். பொலான்யோ தான் துவக்கிய ஓர் இலக்கிய இயக்கத்துக்கான நையாண்டி செய்யும் கொள்கை அறிவிப்பில் தன் வாழ்வைச் சுருக்கிக் கொடுத்திருப்பது போலத் தெரிகிறது, “அகஎதார்த்தம்”:முழு வேகத்தில் அனுபவம், தம்மைத் தாமே உண்ணும் அமைப்புகள், அப்பட்டமான புலம்பல்களான முரண்பாடுகள்….”

இந்த ஆவணத்தில் (அதன் ஒரே ஆசிரியரும் ஒரே ஒப்புதல் தெரிவிக்கும் கையெழுத்திட்டவரும் பொலான்யோதான்) அவர் எழுதுகிறார்:”ஆபத்து எங்கும் இருக்கிறது. உண்மையான கவிஞர் எப்போதும் தன்னைப் பின்னே விட்டுச் செல்கிறார்.”

இந்த ‘உண்மையான கவிஞர்” பிறந்தது சிலேயின் சாண்டியாகோ நகரில், ஆனால் அவருடைய குடும்பம் 1968 இல் மெக்ஸிகோ சிடிக்குக் குடி பெயர்ந்தது. ஐந்து வருடங்கள் கழித்து, சோசலிசத்தை முன்வைத்த அதிபர் சால்வடொர் அல்யெண்டேவிற்கு ஆதரவு தெரிவிக்கவென, அவர் சிலேக்குத் திரும்புகிறார். அதிபரோ பினோஷேயின் ராணுவப் புரட்சிக்குப் பிறகு சந்தேகத்துக்குரிய வகையில் தற்கொலை செய்து கொள்கிறார். பொலான்யோ வெறும் சிறைவாசம் பெறுகிறார். லாடின் அமெரிக்காவிலிருந்து ஓட்டம் பிடிப்பது, எழுத்தாளரின் அதிர்ஷ்ட வசமான  தப்பித்தலுக்குப் பிறகு நேர்கிறது; 1980கள் பொலான்யோவை ஒரு நாதியுமற்ற வறியோனாக யூரோப்பில் காட்டுகின்றன. அவருடைய வாழ்வின் கடைசிப் பத்தாண்டுகள் ஸ்பெயினின் கடற்கரை நகர் ஒன்றில் கழிகின்றன, அங்கே காலப்போக்குக்கு எதிராக விரைந்து வேலை செய்து, (அவருக்கு ஈரல் குலைவு வியாதி வந்திருந்தது, அவர் இடைவிடாமல் புகை பிடிக்க வேறு செய்தார்), பொலான்யோ தன் வாழ்நாளுக்கான படைப்புகளைச் செய்து முடிக்கிறார்: “த சாவேஜ் டிடெக்டிவ்ஸ்” (ஸ்பானிஷில் 1998 ஆம் ஆண்டு பிரசுரமானது) நாவல் பரிமள சுகந்தத்தோடு பாராட்டப்பட்டிருக்கிறது, அதில் கவிஞரும் கள்ளக் கடத்தல்காரர்களான கவிஞர்கள் உயர்தர கஞ்சாவைக் கடத்துகிறார்கள்; “2666” (2004 இல் பிரசுரிக்கப்பட்டது/ ஸ்பானிஷில்) ஒரு பெரும் புத்தகம், அதன் பாதிப் பக்கங்கள், மெக்ஸிகோவின் சியூடாட் ஹுவாரெஸ் நகரில் நடந்த தொடர்கொலைகளைப் பற்றியது. இந்தப் படைப்புகளும், மற்ற மேலும் நம்ப முடியாத வகைப் புத்தகங்களும் இப்போது இங்கிலிஷில் மொழிபெயர்க்கப்படுகின்றன.[1]

ஸ்பானிஷ் மொழியில் 1996 இல் முதலில் பிரசுரமான ‘நாஜி லிடரேச்சர் இன் த அமெரிக்காஸ்,” எனும் புத்தகம், படிப்பதற்கு அது ஒரு வரலாற்றுத் தகவல் களஞ்சியம் போல இருக்கிறது, குற்றச் சிந்தனைகளின் வாழ்வுச் சரித அகராதி போல உள்ளதென்றாலும், அது ஓர் அ-புனைவு இல்லை. கவிதையைப் பற்றியும், குறிப்பாக கவிஞர்களின் வாழ்வுகளைப் பற்றியும் அது கொண்டுள்ள உளைச்சலால், அது பொலான்யோ இன்னும் எழுதியிராதவற்றிடம், எழுதவிருக்கிறவற்றிடம் பேசுகிறது, ஆனாலும் இலக்கிய சோதனை முயற்சிக்கான தனியொரு கலைப்பொருளாக நிற்கிறது; வளர்ச்சி நோக்கி நிகழ்த்தும் முயற்சியாக, பதிலிகளால் நிகழ்த்தும் அறிவுத் தேட்டை, இது பொலான்யோவின் ஆர்ஜண்டீனிய வழிகாட்டியான, ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்ஸும் செய்திருக்கிற இதே போன்ற கூத்துகளோடு சேர்த்து அடுக்கப்படவேண்டிய புத்தகம். (போர்ஹெஸ், 1899-1986; இந்த வழிகாட்டியின் கட்டுரைகளையும், மேலும் குறிப்பாக அவருடைய “அசமத்துவம் பற்றிய ஒரு உலகளாவிய வரலாறு” புனைவு நூலையும் சிரத்தை மிக்க கவலையோடு எதிரொலிப்பதைக் காண்பதை நாம் தவிர்க்கவியலாது.)

பொலான்யோ நமக்குக் கொடுத்திருப்பது ஒரு கேலியான உசாத்துணைப் பிரதி, அமெரிக்காக்களின் நாவலாசிரியர்கள் அல்லது கவிஞர்கள் அல்லது எழுத்தாளர்களில் நாஜிகளின் முயற்சிகளுக்கு, நேரடிப் பங்கெடுப்பாலோ அல்லது கலைத் துறைச் சார்பாலோ உடந்தையாக இருந்தவர்களின் படைப்புகளுக்கு இன்றியமையாத துணைப் புத்தகம். இதில் சேர்க்கப்பட்டவையும், வகை மாதிரியாகவும் இருக்கும் பதிவுகள் மெண்டிலூஸெ சமூகக் குழு பற்றியவை: எடெல்மீரா தாம்ப்ஸன் டெ மெண்டிலூஸெ எனும் கண்டிப்பான ஒரு “பெண் கவிஞர்”; அவருடைய மகன், ஹுவான் மெண்டிலூஸெ தாம்ப்ஸன், கோபம் கொண்ட நாவலாசிரியர், ஹூலியோ கொர்த்தாஸாரையும், அவரது வழிகாட்டியான போர்ஹெஸ்ஸையும் பகிரங்கமாய்க் கண்டனம் செய்தவர், ” அவர்களின் கதைகள் “கேலிப் படைப்புகளின் கேலிப் படைப்புகள்” என்பதுதான் அவருடைய அறிவிப்பு; மேலும், லூஸ் மெண்டிலூஸெ தாம்ப்ஸன், அந்தக் குடும்பத்தின் ஸ்தூலமான பெண் கவிஞர், இவர் தான் குழந்தையாக இருந்த போது ஹிட்லர் தன்னைக் கையிலேந்திய படம் ஒன்றைத் தன் வாழ்நாள் பூராவும் பொக்கிஷமாக வைத்திருந்தவர்.

பிற்பாடு, “மதிமலர்ச்சிக்கு எதிரான இயக்கத்தின் முன்னோடிகளும், பங்காளர்களும்” என்று சிலருக்கு வாசகர் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர்களில் சில்வியோ சல்வாடிகோ[2] (1901-1994) போன்றவர்கள் உண்டு. அவர்களைப் பட்டியலிட்டு ஒரு சொகுசு வாக்கியத்தில் கொடுக்கையில் பொலான்யோ உச்சத்தை எட்டுகிறார்:

ஓர் இளைஞனாக சல்வாடிகோ இருக்கையில், பல விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார், அவற்றில் சில, வாயைக் கட்டி நடத்தும் அடக்கு முறை கிருஸ்தவ மதத்தின் விசாரணையை மறுபடி கொணர்தல், பொதுவில் சவுக்கு/ தடியடித் தண்டனை, சிலேயர்களுக்கும், பராகுவேயர்களுக்கும், பொலிவியர்களுக்கும் எதிரான நிரந்தரப் போரை உடற்பயிற்சி விளையாட்டைப் போல நாட்டில் நடத்துதல், பலதார மணம், ஆர்ஜண்டீனிய இனம் இனிமேலும் மாசுபடாமல் இருக்க பழங்குடி அமெரிக்கர்களை கொன்றழிப்பது, யூத ரத்தம் உள்ள எந்தக் குடிமக்களுடைய உரிமைகளையும் கட்டுப்படுத்துவது, ஒழுக்கக் குலைவு காரணமாக நாட்டின் பழங்குடி மக்களோடு கலவி புரிந்து கருமை கூடிப்போன நாட்டு மக்களின் தோல் நிறத்தை படிப்படியாக வெளுப்பாக்குவதற்காக ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்து ஏராளமான குடியேறிகளைக் கொணர்ந்து குடியமர்த்துவது, வாழ்நாள் பூராவும் எழுத்தாளர்களுக்கு உதவி நிதி அளித்தல், கலைஞர்களின் வருமானத்துக்கு வருமான வரி விலக்கு கொடுத்தல், தென் அமெரிக்காவில் மிகப் பெரிய விமானப்படையை உருவாக்குதல், அண்டார்டிகாவைக் காலனியத்துக்குட்படுத்துதல், மற்றும் படகோனியாவில் புதுநகரங்களை நிர்மாணித்தல் ஆகியன.

அப்புறம், எழுத்தாளர் (வாசகரோடு) நிறைய நடனம் ஆடிவிட்டது போலவும், இனி கத்தியை இலக்குக்குள் செருகுவதற்குத் தயார் என்பது போலவும்: “அவர் ஒரு கால்பந்து விளையாட்டுக்காரரும், எதிர்காலத்தை நம்புபவருமாக இருந்தவர்.” (என்று முடிக்கிறார்.)

அடுத்து “போயெட் மோடீ”[3] ஆக வருபவர்கள் பெட்ரோ கொன்ஸாலெஸ் கரேரா, மற்றும் ஆண்ட்ரெஸ் ஸெபீடா ஸெபீடா, இவர் ‘த பேஜ்’ என்று அறியப்பட்டவர். ஜெர்மனிய வம்சாவளியிலிருந்து வந்த தென் அமெரிக்கர்கள் ஃபாசிச இலக்கியத்திற்கு நிறைய வளம் கூட்டியவர்கள், அவர்களில் சிலர்-  ஃப்ரான்ஸ் ஸ்விக்காவ்,  ‘ஹைமாத்’ என்கிற ஒரு கவிதையை எழுதிய வெனிசுவெல எழுத்தாளர், அக்கவிதை அவருடைய பிறப்புறுப்பை ஜெர்மன் மொழியிலும், ஸ்பானிஷ் மொழியிலும் வர்ணித்த கவிதை, தவிர வில்லி ஷூர்ஹோல்ஸ் என்கிற சித்திரக் கிறுக்கு பிடித்த விமர்சகர், இவர் நாஜி சாவு முகாம்களின் கட்டமைப்பை[4] ஆய்வு செய்தவர் (இந்த இரு பாத்திரங்களிடமும் அமேஸான் பகுதியில் வாழ்ந்த நாஜி யோசெஃப் மெங்கெலெயின் சாயல் தெரிகிறது); அறிவியல் நவீனம் எழுதியவர்களில் லாஸ் ஏஞ்சலெஸ்காரரான ஸாஹ் சோடென்ஸ்டெர்ன், இவர் நான்காவது ரைஹ்[5] யுகம் பற்றிய பரபரப்பு நாவல் எழுதியவர், மேலும் வட அமெரிக்கக் கவிஞர்களாக ஜியார்ஜியா மாநிலத்தின் மேகான் நகரைச் சேர்ந்த ஜிம் ஓ’பானன், இவர் தற்பாலுறவுக்காரர்களையும், யூதர்களையும் வெறுப்பவர் என்பதோடு ஆலன் கின்ஸ்பர்க் ஒரு முறை இவருடன் உறவு கொள்ள விரும்பியபோது அதை விலக்கியவர், பிறகு ரோரி லாங், இவர் ஆவாங் கார்ட் இயக்கத்திலிருந்து விலகி, கலிஃபோர்னியாவின் கிருஸ்தவர்களின் கரிஸ்மாடிக் சர்ச்சுக்குத் தலைமை வகிக்கப் போனவர், பிரசங்க மேடையிலிருந்து அமெரிக்க மத்திய உளவு அமைப்பையும் (சிஐஏ) ஜயானிஸத்தையும் கண்டனம் செய்தவர், அமெரிக்கா மறுபடியும் “விண்வெளிப் பந்தயத்தில்” ஈடுபட வேண்டும் என்று கோரியவர்.

இரண்டு நபர்களுக்கு நீண்ட பதிவுகள் உண்டு: கார்லோஸ் ராமிரெஸ் ஹாஃப்மான், மற்றும் மாக்ஸ் மியாஹ்பாலெய் அல்லது மாக்ஸ் காஸிமியர், மாக்ஸ் வான் ஹாவ்ப்ட்மன், மாக்ஸ் லெ க்யல், ழாக் ஆர்த்திபொனிடோ ஆகியோர் இவர்கள்.

மியாஹ்பாலெய் ஒரு உதவி சமூகப் பத்திரிகையாளராக, போர்ட் ஆஃப் ப்ரின்ஸ் மானிடர் என்ற செய்தித்தாளில் பணி புரியத் துவங்கி,  “தலைநகரில் விஸ்தாரமான வீடுகளில் நடந்த விருந்துகளிலும், மாலைக் களியாட்டங்களிலும்”கலந்து கொள்கிறார். அந்த சமூகக் குழுக்களில் மதிமயங்கி, அவருக்கு முடிந்த ஒரே ஒரு வழியில், அல்லது அவரைப் படைத்த ஆசிரியருக்குத் தெரிந்த ஒரே வழியில் அதற்குள் நுழைகிறார் – அது கவிதை; அவர் முதலில் பாடல்களை எழுத ஆரம்பிக்கிறார், அல்லது எழுதப்பட்டதை மறுபடி எழுதுகிறார்,“பயிற்சி பெறத் தேவைப்படும் பல வருடத் துன்பத்தைத் தவிர்க்கத் தீர்மானித்ததால்,” சமூகத்திற்குத் தெரிய வராதவர்களின் படைப்புகளை நகலெடுத்துத் தான் எழுதியதாகக் கொடுக்கிறார்: துவக்கத்தில் அவர் மாக்ஸ் காஸிமியர் என்ற பெயரில் ( “மாக்ஸ் மியாஹ்பாலேயின் ஒன்று விட்ட சகோதரன்”) பிரசுரிக்கிறார், பல வகை ஹைட்டியக் கவிஞர்களிடமிருந்து திருடியவை அவை, மியாஹ்பாலே- மியாஹ்பாலேயாகவே இருந்து, பல மார்டினீக் கவிஞர்களிடமிருந்து திருடினார், பிறகு “காஸிமியர்” ஆக மாடகாஸ்கர் மற்றும் செனெகல் கவிஞர்களிடமிருந்து திருடினார்.  இப்படி பலரிடமிருந்து எடுத்து ஒட்டுவது பலபெயர் கவிஞனுக்குப் போதவில்லை என்பது தெளிவாகிறது: கிறுக்கன் மாக்ஸ் சீக்கிரமே மொத்தக் கவிதைகளையும் ஒரு வார்த்தை கூட மாற்றாமல் தன் பெயரில் வெளியிட்டுக் கொள்கிறார். திடீரென்று இதெல்லாம் ஒரு முடிவை எட்ட வழியாக இருப்பது மாறி, அவையே ஒரு முடிவாகி விட, அல்லது ஒரு உத்தியாகி விடவும், மியாஹ்பாலே கடைசியில் தன்னையே பிரதியாக்கிக் கொள்கிறார்: “இறப்பு,” பொலான்யோ மரணக்குறிப்பாக எழுதுகிறார், “அவரைத் தன் பெயர் போலவே எழுதப்பட்டு வேறு பொருள் கொண்டவர்களின் இறப்புக்குப் பிறகான படைப்புகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.”

ஹாஃப்மன் பற்றிய பகுதிதான் புத்தகத்தில் கடைசியும், இலேசாக இருப்பது போல ஏமாற்றுவதுமானது (ஏனெனில் அது ஒரு வகைப்பட்ட இலக்கியத்தின் வடிவில் உள்ளது: துப்பறியும் கதை போல உள்ளது.) இங்கு பொலான்யோ தானே ஒரு மீபுனைவைக் கொடுக்கிறார், இதில் அவரே கலங்கச் செய்யும் தோற்றத்துடன் வருகிறார். ஹாஃப்மன் (1950-1998) ஒரு புகழ் பெற்ற விமானி, ஒளிப்பட நிபுணர், மேலும் ஆகாய-எழுத்துகளில் கவிதைகள் படைப்பவர், அதோடு இரக்கமில்லாத கொலைகாரர். மர்மமான ஒரு துப்பறிவாளர், சதி செய்து கொல்பவராக ஆனவர், தானே நாட்டை விட்டு வெளியேறி ஸ்பெயினில் பார்ஸெலோனா நகரில் வாழும் பொலான்யோவைப் பார்க்க வருகிறார். அலைந்து திரிந்து சாகசங்களைச் செய்யும் கதைகளைக் கிண்டலடிக்கும் வகையில், வீஸேந்தால் நாஜிகளை வேட்டையாடியதைப் போல, பொலான்யோவை ஒரு காஃபிக் கடைக்கு வந்து- அங்கு அடையாளம் காட்டப்பட வேண்டி, குற்றவாளிகளைப் போலிசார் வரிசையில் நிற்க வைப்பது போல, இலக்கியவாதிகளின் நடுவிலிருந்து- அவருடைய நீண்ட நாள் நண்பரான ஒரு கவிஞரை, இப்போது தலைமறைவாகி வாழ்பவரை, அடையாளம் காட்டச் சொல்கிறார். “அவர் கொடுத்த காரணம் இது,” பொலான்யோ எழுதுகிறார்: “ராமிரெஸ் ஹாஃப்மன் ஒரு கவிஞர், நான் ஒரு கவிஞன், [துப்பறிவாளர்- கொலைகாரர்] கவிஞரல்ல. ஒரு கவிஞரைக் கண்டுபிடிக்க, அவருக்கு இன்னொரு கவிஞரின் உதவி தேவை.”

இந்த விதமான நகைச்சுவைக்குப் பின்னே முழுச் செயல் தீவிரம் இருக்கிறது: இலக்கியம், அதன் அமெரிக்க வாழ்வைப் போல அல்லாமல், ஒரு ஆபத்தான வேலை. நீங்கள் பேசியது அல்லது எழுதியது எதற்காகவாவது, நீங்கள் குற்ற நடவடிக்கைக்கு ஆளாக்கப்படலாம் என்றிருக்கும் சமூகங்களில்- உதாரணமாக, நாஜி ஜெர்மனி, கம்யூனிஸ்ட் ரஷ்யா, தென் அமெரிக்க சர்வாதிகார ஆட்சிகள் போன்றன- இலக்கியம் என்பது ஒரு புனித குணத்தை அல்லது மிக முக்கியத்துவத்தை அடைந்து விடுகிறது, அதை பொலான்யோ, தனிநபர்களைச் சுதந்திரமாக இருக்கவிடும் புதுவகை யூரோப்பில் வாழ்ந்தபடி, மாறி விட்ட காலத்துக்கேற்றபடி மறுபடி உருக் கொடுக்கவோ அல்லது அதற்கு உயிரூட்டவோ முயன்று கொண்டிருந்தார்,  பொலான்யோவின் இருண்ட அறிவார்ந்த தத்துவ நகைச்சுவை, அதன் பல இடித்துரைக்கும் வாக்கியங்களின் தொகுப்பை விடக் கூடுதலாகப் பொருள் கொண்டதாகத் தெரிய வருவது அவர், தன் கழுத்தைத் தந்திரமாக அறுத்துக் கொண்டு, தானே தன்னைக் குற்றவாளியாக ஆக்கிக் கொள்ளும்போதுதான்.  இந்த வகை இலக்கியக் கிச்சடியின் நடுவில், பொலான்யோ, சோசலிசப் புரட்சிவாதியும், பினோஷேயின் சிறைவாசியுமானவர், ஒரு சக கவிஞரை அடையாளம் காட்டி, அதற்காகச் சன்மானமும் பெறுகிறார். சிறப்பான புத்திக் கூர்மையோடும், களேபரமாகவும் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், நாட்டுக்குள்ளேயே வளர்ந்து வரும் ஃபாசிசத்தைக் கண்டனம் செய்கிற நூல். ஆனால் அதன் கடைசி, தன்முனைப்புள்ள பதிவில், அது தன் குறிக்கோளை மீறிச் சென்று, வேறொரு புத்தகமாகிறது. அப்போது அது, கடுமையாக நசுக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடும், வக்கிரமான அரசியலும் கொண்ட ஒரு சமூகத்தில், மிகத் தூய்மையான கவித்துவப் பார்வை கொண்டவர்கள் கூட கறைப்பட்டவர்களாகி விடுவோம் என்பதைப் பற்றிய புத்தகமாக இருக்கிறது.


(இந்தக் கட்டுரை ஃபார்வர்ட் பத்திரிகையின் இலக்கிய விமர்சகரான ஜாஷுவா கோயென் எழுதி, அப்பத்திரிகையில் ஜனவரி, 2008 இல் பிரசுரமானது. மூலக் கட்டுரையை இங்கே காணலாம்: https://forward.com/culture/12414/a-dictionary-of-criminous-thought-01073/)

நன்றி: ஜாஷுவா கோயென் மற்றும் ஃபார்வர்ட் பத்திரிகை

தமிழாக்கம்: மைத்ரேயன்


[1] இந்த விமர்சனக் கட்டுரை ஃபார்வர்ட் பத்திரிகையில் ஜனவரி 2008 இல் பிரசுரமாகியது. அதற்குப் பிறகு இக்கட்டுரையில் சொல்லப்படுகிற பல பொலான்யோ புத்தகங்களும் இங்கிலிஷில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன.

[2] சில்வியோ சல்வாடிகோ என்ற பாத்திரம் ஆர்ஜண்டீனியர் என்பதை நாம் உணர வேண்டும்.

[3] Poetes Maudits- என்ற சொல்லுக்கு அகராதி அர்த்தம் கொடுக்கிறது-  Cursed poet : a writer dogged by misfortune and lack of recognition. சபிக்கப்பட்ட கவிஞர்கள், அங்கீகாரமும் இல்லாது, துரதிர்ஷ்டத்தாலும் பீடிக்கப்படும் எழுத்தாளர் என்று பொருள் கொள்ளலாம்.  

[4] Graphomaniacal critic of architecture of death camps – என்பது மூலத்தில் உள்ள வர்ணனை

[5] Reich- ஜெர்மன் ஏகாதிபத்திய அரசு. ஹிட்லருடையது மூன்றாவது ஜெர்மன் ஏகாதிபத்திய அரசு. நான்காவது என்பது கற்பனையாக, மீண்டும் எழக்கூடிய ஜெர்மன் ஏகாதிபத்திய அரசைக் குறிக்கிறது.

One Reply to “குற்றச் சிந்தனைகளுக்கு ஓர் அகராதி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.