ரொபெர்த்தோ பொலானோ (Roberto Bolaño)
தமிழில் : சிஜோ அட்லாண்டா

அவள் பெரிய மார்பகங்களும், மெலிந்த கால்களும், நீலக் கண்களும் உடையவள். அவளை அப்படி நினைவுகூரத்தான் எனக்குப் பிடித்திருந்தது. ஏன் என்று தெரியாமல் அவள்மேல் பைத்தியக்காரத்தனமான காதலில் விழுந்தேன். துவக்கத்தில், அதாவது முதல் சில நாள்கள், முதல் சில மணிநேரங்கள் எல்லாம் சரியாகத்தான் போயிற்று. அதன்பின், கிளாரா ஸ்பெயினின் தெற்கே அவள் வாழ்ந்த நகரத்துக்குச் சென்று விட்டாள் (அவள் பார்சிலானாவுக்கு விடுமுறையில் வந்திருந்தாள்). அதன் பிறகு எல்லாம் தலைகீழாகிவிட்டது.
ஒரு நாள் நான் கனவில் ஒரு தேவதூதனைக் கண்டேன்: ஒரு பெரிய காலியான பாருக்குள் நான் சென்றபோது, அவன் ஒரு மூலையில் தன் முழங்கையை மேசையில் ஊன்றி உட்கார்ந்திருந்தான். அவன் முன் ஒரு கோப்பை பால் கலந்த காப்பி இருந்தது. அவன் என்னைப் பார்த்து அவள்தான் இந்த ஜென்மத்தில் உன் ஆருயிர்க் காதலி என்றான். அவன் பார்வையின் உக்கிரமும், அவன் கண்களில் இருந்த தீயும் என்னை அந்த அறைக்குக் குறுக்கே தூக்கி எறிந்தது. நான் ‘வெய்டர், வெய்டர்’ என்று கத்தத் தொடங்கினேன். பின், கண்களைத் திறந்து அந்த கொடிய கனவிலிருந்து மீண்டேன். மற்ற சில இரவுகளில் நான் யாரையும் கனவு காணவில்லை. ஆனால் அழுது கொண்டே கண் விழித்தேன். இதற்கிடையில், கிளாராவும் நானும் கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். அவள் கடிதங்கள் மிகச் சுருக்கமாக இருக்கும். “ஹாய், எப்படி இருக்கிறாய், இங்கு மழை பெய்கிறது, ஐ லவ் யூ, பை.” முதலில் அந்தக் கடிதங்கள் என்னைப் பயமுறுத்தின. எல்லாம் முடிந்து விட்டது என்று நான் நினைத்தேன். ஆனால் அக்கடிதங்களை மேலும் கவனமாக ஆராய்ந்தபோது, அவளுடைய சுருக்கமான நடை இலக்கணப் பிழைகள் இல்லாமல் எழுத அவள் கண்ட உத்தி என்ற முடிவுக்கு வந்தேன். கிளாரா தற்பெருமை கொண்டவள். அவளுக்கு நன்றாக எழுத வராது. ஆனால், அது எனக்குத் தெரிவதை அவள் விரும்பவில்லை. இப்படி எழுதுவது அவளுக்கு என் மேல் விருப்பம் இல்லை என்ற தோற்றத்தைத் தந்து என்னை வேதனைக்கு உள்ளாக்கும் என்றாலும்கூட.
அப்போது அவளுக்குப் பதினெட்டு வயது. அவள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, ஒரு தனியார் கல்வி நிலையத்தில் இசையும், ஓர் ஓய்வு பெற்ற நிலக்காட்சி வரையும் ஓவியரிடம் வரையவும் கற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு இசையிலோ அல்லது ஓவியக் கலையிலோ ஆர்வம் இருக்கவில்லை. அவளுக்கு அக்கலைகள் பிடித்திருந்தாலும், அவற்றைக் கற்பதற்குத் தேவையான பேரார்வம் அவளுக்கு இல்லை. ஒருநாள், அவளிடமிருந்து வந்த கடிதம், அவளுடைய வழக்கமான சுருக்கமான நடையில் அவள் ஓர் அழகிப் போட்டியில் பங்கெடுக்கப் போவதான தகவலைச் சுமந்து வந்தது. அதற்கு பதிலாக நான் அவளது அமைதியான அழகு, கண்களின் இனிமை, கச்சிதமான உடற்கட்டு போன்றவற்றை விதந்தோதி மூன்று தாள்களின் இரு பக்கமும் நிரப்பி ஒரு கடிதம் எழுதி முடித்தேன். அந்தக் கடிதம் ஒரு அவலச் சுவையின் உச்சமாக இருந்தது. எழுதி முடித்து, அதை அனுப்புவதா வேண்டாமா என்று தயக்கமிருந்தாலும், முடிவில் அவளுக்கு அனுப்பி வைத்தேன்.
அதன்பின், சில வாரங்கள் கழித்துத்தான் அவளிடமிருந்து பதில் வந்தது. நான் அவளை அழைத்துப் பேசி இருக்கலாம் என்றாலும், அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாமெனத் தோன்றியதால் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல் அப்போது எனக்குச் சற்று பணத் தட்டுப்பாடும் இருந்தது. கிளாராவுக்குப் போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்தது. அதன் விளைவாக அவள் ஒரு வாரம் மன அழுத்தத்தில் இருந்தாள். எதிர்பாராவிதமாக அவளிடமிருந்து இப்படி ஒரு தந்தி: “இரண்டாம் இடம். நிற்க. உன் கடிதம் கிடைத்தது. நிற்க. என்னை வந்து சந்திக்கவும்.”
ஒரு வாரம் கழித்து, நான் அந்த நாளில் அவள் நகருக்குச் செல்லும் முதல் இரயிலில் ஏறினேன். ஆனால் அதற்கு முன்பாக – அதாவது அந்த தந்திக்குப் பின் – நாங்கள் தொலைபேசியில் பல முறை பேசினோம். பல முறை அழகிப் போட்டியின் கதையை நான் அவளிடமிருந்து கேட்க நேர்ந்தது. அது அவளை வெகுவாகப் பாதித்திருந்ததாகத் தோன்றியது. அதனால் நான் என்னால் இயன்ற அளவு சீக்கிரமாகப் பெட்டி கட்டிக்கொண்டு ரயிலேறி, அடுத்த நாள் பரிச்சயமில்லாத அந்த ஊரில் சென்று இறங்கினேன். ஒரு காபி மற்றும் சில சிகரெட்டுகள் உதவியுடன் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் கடத்தியபின், அவளது அடுக்ககத்துக்கு ஒன்பதரை மணிக்கு வந்து சேர்ந்தேன். கேசம் கலைந்த ஒரு பருத்த பெண்மணி கதவைத் திறந்தார். நான் கிளாராவைப் பார்க்க வேண்டும் என்றபோது பலிபீடத்துக்கு இட்டுச் செல்லப்படும் ஓர் ஆட்டைப்போல என்னைப் பார்த்தார். வெகுநேரம் போலத் தோன்றிய சில நிமிடங்கள் நான் கிளாராவுக்காக அவர்கள் வீட்டு வரவேற்பறையில் காத்திருந்தேன். (பின்னாளில் இந்த நிகழ்வுகளை அசை போட்டபோது அது உண்மையிலேயே வெகுநேரம்தான் என்று தோன்றியது). அந்த அறை, சாமான்களால் நிறைந்திருந்தபோதும், ஒரு காரணமுமில்லாமல், ஒளி நிறைந்து, வரவேற்கும் தோற்றம் கொண்டு இருந்ததாகத் தோன்றியது. கிளாரா அந்த அறைக்குள் நுழைந்தபோது அது ஒரு தெய்வம் காட்சி தந்ததுபோல் இருந்தது. அப்படி எண்ணுவதும் சொல்வதும் அபத்தம் என எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு அப்படித்தான் தோன்றியது.
அதன் பின்னான நாள்கள் இனிமையாகவும், கசப்பாகவும் இருந்தன. நாங்கள் நிறைய திரைப்படங்கள் பார்த்தோம், கிட்டத்தட்ட நாளுக்கு ஒன்று என்ற கணக்கில்; நாங்கள் உறவு கொண்டோம் (நான்தான் கிளாராவுடன் உறவு கொண்ட முதல் ஆண், அது தற்செயலாகவோ ஒரு தற்குறிப்பாகவோ அப்போது தோன்றினாலும் இறுதியில் அதற்காக நான் பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது); நாங்கள் நடை சென்றோம்; அவள் நண்பர்களைச் சந்தித்தோம்; கொடுமையான இரண்டு விருந்துகளுக்குச் சென்றோம்; நான் அவளோடு பார்ஸிலோனா வந்து என்னுடன் வாழும்படி கேட்டேன். ஆனால், அப்போது அவள் பதில் என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. ஒரு மாதம் கழித்து, நான் பார்ஸிலோனாவுக்கு ஓர் இரவு இரயிலில் பயணித்தேன். அது ஒரு கொடுமையான பயணமாக என் நினைவுகளில் உள்ளது.
அதன் பின் சில நாள்களுக்குள், அவள் எனக்கு எழுதியதிலேயே நீண்ட கடிதத்தில், அவள் எங்கள் உறவு முறிவின் காரணத்தை விளக்கியிருந்தாள். நான் அவளுக்குத் தாங்க இயலாத அழுத்தம் தந்துவிட்டிருந்தேன் (அவளை என்னுடன் வாழச் சொல்லி நிர்பந்தித்தன் மூலம்); எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. அதன்பின் நாங்கள் தொலைபேசியில் மூன்றோ, நான்கோ முறை பேசினோம். அத்துடன், வசவுகளும் காதல் பிரகடனங்களும் அடங்கிய ஒரு கடிதமும் அவளுக்கு எழுதியதாக ஞாபகம். ஒரு முறை, ஒரு மொராக்கோ பயணத்தில், அல்ஜெசிராஸில் நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவளை அழைத்தேன். இந்த முறை ஒரு கண்ணியமான உரையாடலாக அது அமைந்தது. குறைந்தபட்சம் அவள் அப்படி நினைத்தாள். அல்லது நான் அப்படி நினைத்தேன்.
பல வருடங்களுக்குப்பின், கிளாரா அவள் வாழ்க்கையில் நான் தவறவிட்டிருந்த பாகங்களைப் பற்றி எனக்குச் சொன்னாள். அதற்கும் சில வருடங்கள் கழித்து அவளிடமிருந்தும் அவள் நண்பர்களிடமிருந்தும், அவள் கதையை பல முறை சொல்லக் கேட்டேன். அது அவளது வாழ்க்கையின் தொடக்கம் முதலோ, அல்லது நாங்கள் பிரிந்ததிலிருந்தோ இருக்கும் — அவள் வாழ்க்கையில் நான் ஒரு சிறிய கதாபாத்திரம் என்பதால் (அதை ஒப்புக்கொள்ள எனக்கு அவ்வளவு எளிதாக இல்லை எனினும்) அவர்களுக்கோ, எனக்கோ அது ஒரு பொருட்டாக இருக்கவில்லை. எதிர்பார்த்ததுபோல, எங்கள் பந்தம் முடிவடைந்து வெகுகாலம் ஆவதற்குள் (‘பந்தம்’ சற்று மிகையான சொல் என்று எனக்குத் தெரியும், இருந்தாலும் என்னால் அந்தச் சொல்லைத்தான் கண்டடைய முடிந்தது), கிளாராவின் திருமணம் முடிந்தது. அவளை மணந்த அந்த அதிர்ஷ்டசாலி நான் அவள் நகருக்கு முதன்முறை சென்றபோது சந்தித்த அவள் நண்பர்களில் ஒருவனாக இருந்தது நான் யூகித்த முடிவாகவே தோன்றியது.
ஆனால், அதற்குமுன் அவளுக்கு மனரீதியான பிரச்சினைகள் இருந்தன: அவள் எலிகளைப் பற்றிக் கனவு காண்பாள்; இரவில் அவற்றின் ஓசை படுக்கையறையில் அவளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் திருமணத்திற்கு முன்பான பல மாதங்களில் அவள் வரவேற்பறையில் இருந்த சோபாவில்தான் தூங்கினாள். அந்த நாசமாய்ப் போன எலிகள் திருமணத்திற்குப் பிறகு மறைந்துவிட்டன என்று ஊகிக்கிறேன்.
அப்படியாக. கிளாராவின் திருமணம் முடிந்தது. அது மட்டும் அன்று. அவன், கிளாராவின் அன்புக் கணவன், எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். அவளையும்கூட. அதன்பின் ஒன்றோ இரண்டோ வருடம் கழித்து – உறுதியாகத் தெரியவில்லை, கிளாரா சொல்லி இருக்கிறாள், ஆனால் நான் மறந்துவிட்டேன் – அவர்கள் பிரிந்தார்கள். அது ஒரு சுமுகமான பிரிவாக இருக்கவில்லை. அவன் கத்த, அவள் கத்த, அவள் அவனுக்கு ஓர் அறைவிட, அவன் பதிலுக்கு அவள் தாடை இடம்பெயரும்படியான ஒரு குத்துவிட்டான். சில நேரங்களில், நான் தனிமையில், உறக்கம் வராமல், ஆனால் எழவும் மனமில்லாமல் படுத்திருக்கும்போது, அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கிளாரா, தாடை தொங்கிய நிலையில், சுயமாக அதைச் சரி செய்ய முடியாமல், ஒரு கையில் ஸ்டியரிங்கையும், மறுகையில் அவளது தொங்கிய தாடையையும் பிடித்துக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவளது காரில் விரையும் காட்சியை நினைத்துப் பார்ப்பேன். அதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக எண்ணிப்பார்க்க விரும்பினாலும், என்னால் அது முடிவதில்லை.
ஆனால், எனக்கு உண்மையிலேயே நகைச்சுவையாக தோன்றுவது அவளது திருமண இரவுதான். அதற்கு முந்தைய நாள் அவளுக்கு மூல நோய்க்கான அறுவை சிகிச்சை செய்திருந்ததனால், அவள் அன்று சற்றுச் சமநிலை குலைந்திருந்தாள் என்று நினைக்கிறேன். அல்லது அப்படி இல்லாமலும் இருக்கலாம். அவளால் அன்று கணவனோடு உறவில் ஈடுபட முடிந்ததா என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை. அதை அவர்கள் அவள் அறுவை சிகிழ்ச்சைக்கு முன்பாகவே செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தால்தான் என்ன? இத்தகைய விவரங்கள் அவளைப்பற்றிச் சொல்வதைவிட என்னைப் பற்றித்தான் சொல்கின்றன.
எது எப்படியோ, கிளாரா அவள் கணவனிடமிருந்து திருமணமான ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் பிரிந்து படிக்கத் தொடங்கினாள். அவள் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாததானால் அவளால் கல்லூரியில் சேர முடியவில்லை. ஆனால் அவள் வேலை கிடைக்க வாய்ப்புள்ள பல துறைகளையும் முயற்சித்துப் பார்த்தாள்: புகைப்படக்கலை, ஓவியம் (ஏனோ அவள் தான் ஒரு நல்ல ஓவியராக முடியும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டிருந்தாள்), இசை, தட்டச்சு, கணிப்பொறியியில், இப்படி வேலைக்கு காவு கிடக்கும் இளைஞர்கள் முயற்சிக்கும் பல ஒரு வருட பட்டயப் படிப்புகள். ஆனால், கிளாரா தன்மீது வன்முறை செலுத்திய அவள் கணவனிடமிருந்து விடுபட்டதில் மகிழ்ச்சியுடன் இருந்தாலும், உள்ளுக்குள் அமைதியின்மையை உணர்ந்தாள்.
எலிகள் திரும்ப வந்தன, அத்துடன் மன அழுத்தமும், விளக்க முடியா நோய்களும். இரண்டு மூன்று வருடங்கள் அவளுக்கு வயிற்றுப் புண்ணுக்கு சிகிழ்ச்சை அளித்தபின், மருத்துவர்கள் அவள் வயிற்றில் நோய் ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்த சமயத்தில் அவள் லூயியைச் சந்தித்தாள். லூயி ஒரு நிறுவன மேலாண்மைப் பதவியில் இருந்தவன். அவர்கள் காதலர்கள் ஆனார்கள். லூயியின் உந்துததலால் அவள் வியாபார நிர்வாகம் தொடர்பான எதையோ படிக்கத் தொடங்கினாள். கிளாராவின் நண்பர்களைப் பொருத்தவரை, அவள் கடைசியாக வாழ்க்கையின் மெய்யான துணையைக் கண்டடைந்திருந்தாள். சில நாள்களுக்குள், அவர்கள் ஒன்றாக வாழத் தொடங்கினர்; கிளாராவுக்குச் சட்ட நிறுவனத்திலோ அல்லது ஏதோ ஒரு நிறுவனத்திலோ வேலை கிடைத்தது. அந்த வேலை மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னபோது அவள் அதை கேலியாகச் சொன்னதாகத் தோன்றவில்லை. அவள் வாழ்க்கை ஒரு விதமாக சரியான தாளத்துக்கு வந்துவிட்டதுபோல் தோன்றியது. லூயி ஒரு கணவான் (அவளை அவன் ஒருபோதும் அடித்ததில்லை), பண்புள்ளவன் (மொசார்டின் மொத்தப் படைப்புகளையும் தவணை முறையில் வாங்கிய இருபது லட்சம் ஸ்பானியர்களில் இவனும் ஒருவன் என்று நினைக்கிறேன்), பொறுமைசாலியும்கூட (அவள் பேச்சுக்கு அவன் இரவுகள், வார இறுதி நாள்கள் உட்பட எப்போதும் செவி கொடுப்பவனாய் இருந்தான்). கிளாராவுக்குச் சொல்வதற்கு அதிகமாக ஒன்றும் இல்லை என்றாலும், சொல்ல இருந்த சொற்பத்தையும் சொல்லிக்கொண்டே இருக்க அவளுக்குச் சலித்ததும் இல்லை. அவள் இப்போது அழகிப் போட்டியைப் பற்றி அதிகமாகப் புலம்புவது இல்லை, அவ்வப்போது அந்தப் பேச்சை எடுப்பாள் என்றாலும் இப்போது அவள் பேச்சு முழுவதும் அவளது மன அழுத்தம் பற்றியும், அவளது மனச் சமநிலையின்மையைக் குறித்தும், அவள் வரைய நினைத்து வரைய முடியாமல்போன ஓவியங்கள் குறித்துமே அதிகமும் இருந்தது.
அவர்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரியவில்லை; ஒருவேளை அவர்களுக்கு அதற்கான நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் கிளாராவின் கூற்றுப்படி, லூயிக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை. அவள் நேரத்தைப் படிக்கவும், இசை கேட்கவும் (ஆரம்பத்தில் மொசார்ட், பிறகு வேறு இசையமைப்பாளர்களுடையதும்), புகைப்படங்கள் எடுக்கவும் (ஆனால் யாருக்கும் காட்டாமல்) செலவழித்தாள். அவளுக்கே உரிய, தெளிவற்றதும் பயனற்றதுமான முறையில் அவளுடைய விடுதலையைக் காக்கவும், புதிதாக ஏதாவது கற்கவும் முயற்சித்தாள்.
முப்பத்தி ஒன்றாம் வயதில் அவள் அலுவலகத்தில் வேலை செய்த ஒருவனுடன் உறவு கொண்டாள். அது தற்செயலாக நடந்த ஒன்று, அவர்கள் இருவரைப் பொருத்தவரை அப்படி ஒன்றும் பெரிய விஷயம் அன்று, ஆனால் கிளாரா அதை லூயியிடம் சொன்னதுதான் தவறாயிற்று. அவர்கள் சண்டை திகிலூட்டக்கூடியதாக இருந்தது. லூயி ஓர் இருக்கையையோ, அவன் வாங்கிய ஓர் ஓவியத்தையோ உடைத்து நொறுக்கினான், நிறையக் குடித்தான், அதன்பின் ஒரு மாதம் அவளுடன் பேசவில்லை. கிளாராவைப் பொருத்தவரை, அவர்களுடைய உறவு அதற்குப் பிறகு ஒருபோதும் சரியாகவில்லை, சண்டை ஓய்ந்த அவர்கள் ஒரு கடற்கரை நகருக்கு ஓய்வுக்காகச் சென்றபோதும், அந்தப் பயணம் சோகமானதாகவும், உற்சாகமில்லாததாகவுமே இருந்தது.
அவளுக்கு முப்பத்திரண்டு வயதானபோது, அவள் வாழ்க்கையில் உடலுறவு என்பதே கிட்டத்தட்ட இல்லாமலாகிவிட்டது. அவள் முப்பத்தி மூன்று வயதை எட்டுவதற்கு சற்று முன்பு, லூயி அவளை விரும்புவதாகவும், மதிப்பதாகவும், அவளை ஒருபோதும் மறக்கப் போவதில்லை என்றும், ஆனால் சில மாதங்களாக அவன் விவாகரத்துப் பெற்று குழந்தைகள் உள்ள ஒரு நல்ல, புரிதல் உள்ள பெண்ணை விரும்புவதாகவும், அவளுடன் சென்று வாழப்போவதாகவும் சொன்னான்.
மேலோட்டமாகப் பார்த்தால், கிளாரா இந்த உறவு முறிவை நன்றாகக் கையாண்டது போலவே தோன்றியது. (அவளை வேண்டாமென ஒருவர் விட்டுப்போவது இதுவே முதல் முறை.) ஆனால் சில மாதங்கள் கழித்து, அவள் மீண்டும் மன அழுத்தத்துக்கு ஆளானாள். வேலையில் இருந்து சில காலம் விடுப்பு எடுத்து, மனநல சிகிழ்ச்சை எடுத்தும்கூட அது அவ்வளவாக அவளுக்கு உதவவில்லை. அவளுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள் அவள் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவனவாக இருந்தன. ஆனாலும் அவள், நான் உட்பட வேறு சில ஆண்களுடன் உறவுகொள்ள எடுத்த முயற்சிகள் அதிருப்தியில்தான் முடிந்தன. அவள் மீண்டும் எலிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவை அவளை தனியேவிட மறுத்தன. அவளுக்குப் பதட்டம் ஏற்படும்போதெல்லாம் அவள் அடிக்கடி கழிவறைக்குச் செல்லத் தொடங்கினாள். (முதல் முறை நாங்கள் உறவு கொண்டபோது, அவள் பத்து முறையேனும் சிறுநீர் கழிக்கச் சென்றாள்.) அவள் தன்னையே படர்க்கையில் ஒரு மூன்றாவது ஆளைப் பற்றிப் பேசுவதுபோலக் குறிப்பிடத் தொடங்கினாள். ஒருமுறை அவள் என்னிடம், அவள் ஆத்மாவுக்குள் மூன்று கிளாராக்கள் இருப்பதாகச் சொன்னாள்: ஒரு சிறிய பெண், தன் குடும்பத்தாரால் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சூனியக்காரக் கிழவி, மற்றும் ஓர் இளம் பெண், அதாவது, அந்த நகரத்தைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்து, ஓவியம் வரைந்து, புகைப்படங்கள் எடுத்து, பயணங்கள் செய்து வாழவிரும்பிய உண்மையான கிளாரா. நாங்கள் மீண்டும் சேர்ந்த முதல் சில நாள்கள், எனக்கு அவள் உயிருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயம் இருந்தது. சில நேரங்களில், எனக்குப் பொருட்கள் வாங்க வெளியே போகக்கூட பயமாக இருக்கும், ஒருவேளை நான் திரும்பி வரும்போது அவள் இறந்து கிடப்பதைக் காணக்கூடுமோ என்ற பயம். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல அந்தப் பயம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. கிளாரா தற்கொலை செய்துகொள்ளப் போவதில்லை என்று நான் உணர்ந்தேன் (அல்லது என் வசதிக்காக என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன்); அவள் அடுக்ககப் பலகணியிலிருந்து குதிக்கப் போவதில்லை – அவள் எதுவுமே செய்யப் போவதில்லை.
அதன்பின் விரைவிலேயே நான் அவளை விட்டுப்பிரிந்தேன். ஆனால் இந்த முறை நான் அவளை அவ்வப்போது அழைத்துப் பேசவேண்டும் என்றும், அவள் நண்பர்களுடன் இடைவெளி விட்டே, ஆனாலும் அவ்வப்போது தொடர்பில் இருந்து அவளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டேன். அவ்வாறுதான் என் மன அமைதியைக் குலைக்கக்கூடிய, ஓர் ஆணவம் மிக்கவன் கேட்காமல் தவிர்க்க வேண்டியவை என்று சொல்லத்தக்கச் சில செய்திகள் எனக்குத் தெரியவந்தன.
கிளாரா மீண்டும் வேலைக்குச் செல்லத் துவங்கினாள் (அவளது புதிய மருந்துகள் அவள் மன நலத்தில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன). அவள் நீண்ட விடுப்பு எடுத்ததனாலோ என்னவோ, அவள் நிறுவனம் அவளை அங்கிருந்து வெகு தூரத்தில் அல்லாத வேறோர் அந்தொலூசியன் பிராந்திய நகருக்கு வேலை மாற்றம் தந்தது. அவள் அந்த நகருக்கு மாறி, ஜிம்முக்குப் போகத் தொடங்கினாள். (நான் முதன்முதலில் சந்தித்த பதினேழு வயது அழகி அல்லள் இப்போதைய முப்பத்து நான்கு வயதுக் கிளாரா.) சில புதிய நட்புகளும் அவளுக்குக் கிடைத்தன. அப்படித்தான் அவள் தன்னைப் போலவே விவாகரத்தான பாகோவைச் சந்தித்தாள்.
சில நாள்களிலேயே, அவர்கள் திருமணமும் செய்துகொண்டார்கள். தொடக்கத்தில், பாகோ கிடைத்தவர்களிடம் எல்லாம் கிளாராவின் புகைப்படங்களையும், ஓவியங்களையும் பற்றிய தன் எண்ணங்களைத் தெரிவித்துக்கொண்டே இருந்தான். கிளாராவும் பாகோவை ஒரு புத்திசாலியாகவும், நல்ல சுவை கொண்டவனாகவுமே நினைத்தாள். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல, கிளாராவின் அழகியல் முயற்சிகள் மேல் பாகாவோவின் ஆர்வம் குறைந்து, ஒரு குழந்தை வேண்டும் என்று விருப்பம் வந்தது. கிளாராவுக்கு அப்போது முப்பத்து ஐந்து வயது, அவளுக்கு முதலில் ஆர்வம் இல்லாமலிருந்தாலும், பின்பு மனம் மாறி ஒரு குழந்தை அவர்களுக்குப் பிறந்தது. கிளாராவைப் பொருத்தவரை, அந்தக் குழந்தை அவளுடைய ஏக்கங்களையெல்லாம் தீர்த்து வைத்தது. அதே வார்த்தைகளைத்தான் அவள் சொன்னாள்.
ஒரு முறை, இந்தக் கதைக்குத் தொடர்பில்லாத காரணங்களுக்காக, கிளாராவின் நகரத்தில் எனக்கு ஒரு நாள் தங்கவேண்டி இருந்தது. நான் என் விடுதியில் இருந்து அவளை அழைத்து, அடுத்த நாள் சந்திக்க ஏற்பாடு செய்தேன். எனக்கு அன்றிரவே அவளைப் பார்க்கும் விருப்பம் இருந்தாலும், எங்கள் முந்தைய சந்திப்பிற்குப் பிறகு என்னை ஓர் எதிரியாக (சரியான காரணங்களுக்காக) பார்க்கத் தொடங்கியிருந்ததால், நான் வற்புறுத்தவில்லை.
அவள் கிட்டத்தட்ட அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தாள். அவள் எடை கூடி இருந்தது, ஒப்பனை செய்திருந்தும்கூட அவள் முகம் வாடினாற்போல் இருந்தது. அது காலத்தினால் வந்த வாட்டம் அன்று, விரக்தியினால் வந்தது என்பது, கிளாரா எதற்காகவும் ஆசைப்படுபவள் அல்லள் என்பதனால் எனக்கு வியப்பளிப்பதாகவும் இருந்தது. ஒருவருக்கு ஆசைகள் இல்லை என்றால் விரக்தி எப்படி ஏற்படும்? அவள் புன்னகையில்கூட ஒரு மாற்றம் தெரிந்தது. முன்பு அது ஒரு மாநிலத் தலைநகரைச் சேர்ந்த இளம் பெண்ணின் மிதமான, சற்று அசட்டுத்தனமான புன்னகையாய் இருந்தது. இப்போதோ அது ஒரு எரிச்சலும் வேதனையும் மிகுந்த ஒன்றாய் மாறியிருந்தது. அந்த் புன்னகைக்குப் பின்னால் இருந்த வெறுப்பும், கோபமும், பொறாமையும் எளிதில் காணக்கூடியதாய் இருந்தது. நாங்கள் இரு அசடுகளைப்போல் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அமர்ந்துகொண்டு, சற்று நேரம் என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. நான்தான் முதலில் மௌனத்தைக் கலைத்தேன். அவள் மகனைப் பற்றிக் கேட்டேன். அவன் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதாகச் சொன்னாள், பிறகு என் மகனைப் பற்றிக் கேட்டாள். அவனும் நலம், என்றேன். நாங்கள் ஏதேனும் செய்யவில்லை என்றால் இந்தச் சந்திப்பு சகிக்க முடியாத அளவு சோகமுடையதாய் ஆகிவிடும் என்று இரண்டு பேருமே உணர்ந்தோம். நான் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறேன் என்றாள் கிளாரா. அது அவள் ‘என்னை அறையேன்’ என்று சொன்னதுபோல் இருந்தது. எப்போதும் போலத்தான், என்று உடனே பதில் சொன்னேன். நாங்கள் ஒரு காப்பி குடித்தபின், ரயில் நிலையத்துக்கு இட்டுச்செல்லும் ஒரு மர வரிசை உள்ள சாலையில் நடந்து சென்றதாக நினைவு. என் ரயில் புறப்படும் நேரம் ஆகியிருந்தது. நாங்கள் இரயில் நிலைய வாயிலில் விடை பெற்றுக்கொண்டோம். அதுதான் நான் அவளைக் கடைசியாகச் சந்தித்தது.
ஆனால், அவள் இறப்பதற்கு முன் நாங்கள் தொலைபேசியில் பேசினோம். நான் அவளை மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அழைப்பேன். என் அனுபவத்திலிருந்து தனிப்பட்ட அல்லது சங்கடப் படுத்தக்கூடிய விஷயங்களைப் பேசாமல் தவிர்ப்பது நல்லது என்று கற்றிருந்தேன். (பாரில் சந்திக்கும் புதியவர்களிடம் விளையாட்டைப் பற்றி அரட்டை அடிப்பதைப்போல.) அதனால் நாங்கள் அவள் குடும்பத்தைப் பற்றியோ, அவள் மகனின் கல்வியைப் பற்றியோ அல்லது வேலையைப் பற்றியோ பேசுவோம். ஆனால் அவை ஒரு புதுக்கவிதையை விவாதிப்பது போன்ற மிக மேலோட்டமான உரையாடலாகவே இருக்கும். அவள் பழைய அலுவலகத்தில்தான் இப்போதும் வேலை செய்து கொண்டிருந்தாள். இத்தனை வருடங்களில் அவளுக்குச் சக ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை உட்பட எல்லா ரகசியங்களும், மேலிடத்துக் கிசுகிசுகளும் பரிச்சயமாயிருந்தன. அந்த ரகசியங்கள் அவளுக்குத் தீவிரமானதும் சற்றே அதிகப்படியானதுமான இன்பத்தைக் கொடுத்தன. ஒருமுறை அவள் கணவனைப் பற்றி ஏதேனும் அவளைச் சொல்ல முயற்சித்தபோது அவள் சட்டென மௌனமாகிவிட்டாள். நீ மிகச் சிறந்தவற்றைப் பெறத் தகுதியானவள், என்றேன் நான். அட, இது விசித்திரமாக இருக்கிறதே, என்றாள் கிளாரா. இதில் என்ன விசித்திரம், என்றேன் நான். அதை நீ சொல்வதுதான் விசித்திரம் – போயும் போயும் உன் வாயிலிருந்து அது வருவது என்றாள் அவள். நான் உடனே பேச்சைத் திசை திருப்பினேன். கையில் சில்லறை தீரப்போகிறது என்றேன் (எனக்கு சொந்தமாகத் தொலைபேசி எப்போதுமே இருந்ததில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை, எனக்கு எப்போதுமே பொதுத் தொலைபேசிதான்), அவசர அவசரமாக விடைகூறி இணைப்பைத் துண்டித்தேன். கிளாராவுடன் இன்னொரு விவாததத்துக்கு நான் தயாராக இல்லை என்று எனக்குத் தெரிந்திருந்தது. அவளது முடிவில்லா நியாயப்படுத்தல்களில் இன்னொன்றை அவள் சொல்லிக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை.
சில நாள்களுக்கு முன் ஓர் இரவில், அவளுக்குப் புற்றுநோய் இருப்பதாக என்னிடம் சொன்னாள். அவள் குரல் எப்போதும்போல உணர்ச்சியற்று இருந்தது. தவறான இடங்களில் ஆச்சரியக் குறியிட்டு, விவரிக்க வேண்டிய பாகங்களை விட்டுவிட்டு, சுருக்க வேண்டிய பாகங்களை நீட்டி முழக்கி, தன் வாழ்க்கைக் கதையை ஒட்டுதல் இல்லாமல் சொல்லும் ஒரு மோசமான கதைசொல்லியின் குரல். அவள் ஏற்கெனவே மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதனை முடிவுகளைப் பெற்றாளா என்று நான் கேட்டதாக ஞாபகம், என்னமோ அவள் சுயமாக (அல்லது பாகோவின் துணையுடன்) அதைக் கண்டுபிடித்திருக்க முடியும் என்பதுபோல! ”நிச்சயமாக,” என்றாள் அவள். இணைப்பின் மறுமுனையில் ஒரு கரகரப்பான ஒலிபோலக் கேட்டது. அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் எங்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபின், என் வாழ்க்கையைப் பற்றி ஏதேனும் சொல்லச் சொன்னாள். (அவள் தனிமையாகவோ சலிப்பாகவோ உணர்ந்திருக்க வேண்டும்.) நான் அப்போதைக்கு மனதில் தோன்றிய எதையோ சொல்லிவிட்டு, அடுத்த வாரம் திரும்பக் கூப்பிடுவதாகச் சொன்னேன். அந்த இரவு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக தீய கனவுகள் கண்டுகொண்டிருந்தேன். திடீரெனக் கூச்சலிட்டு எழுந்தேன், கிளாரா பொய் சொல்கிறாள்; அவளுக்குப் புற்றுநோய் இல்லை; கண்டிப்பாக அவள் வாழ்வில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது, கடந்த இருபது வருடங்களாக நடப்பது போன்ற, மலமும் சிரிப்பும் சேர்ந்த சின்னச் சின்ன குளறுபடிகள், ஆனால் அவளுக்குப் புற்றுநோய் இல்லை. விடிகாலை ஐந்து மணி ஆகியிருந்தது. நான் எழுந்து கடற்கரைச் சாலையில் நடை சென்றேன். விசித்திரமாகக் காற்று என் பக்கமிருந்து வீசிக்கொண்டிருந்தது, பொதுவாகக் காற்று கடலில் இருந்து நிலம் நோக்கித்தான் வீசும். சாலையின் மிகப் பெரிய காஃபிக் கடைக்கு அடுத்துள்ள பொதுத் தொலைபேசிக் கூண்டை எட்டும்வரை நான் நிற்கவில்லை. காஃபிக் கடையின் மாடி காலியாக இருந்தது. இருக்கைகள் மேசைகளுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. சற்றுத் தள்ளி, கடலருகே, ஒரு பெஞ்சில் ஒரு பிச்சைக்காரன் முட்டி மடக்கித் தூங்கிக் கொண்டிருந்தான். ஏதோ கெட்ட கனவு காணபதுபோல் ஒரு நடுக்கம் இடையிடையே அவன் உடலில் ஏற்பட்டது.
என் முகவரிப் புத்தகத்தில், கிளாராவின் நகரிலிருந்து வேறு ஒரு எண் மட்டுமே இருந்தது. நான் அந்த எண்ணை அழைத்தேன். வெகு நேரத்திற்குப் பின் ஒரு பெண்ணின் குரல் பதிலளித்தது. நான் யாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆனால் சட்டென்று அதற்கு மேல் பேச முடியாமல் திகைத்தேன். இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று நான் எண்ணியபோது, ஒரு லைட்டர் பற்ற வைக்கும் ஓசையும், புகை வேகமாக உதட்டிற்கிடையே இழுபடும் ஓசையும் மறுமுனையில் கேட்டது. இன்னும் இருக்கிறாயா, என்று அந்தப் பெண் கேட்டாள். ஆம் என்றேன். கிளாராவுடன் பேசினாயா? என்றாள். ஆம், என்றேன். அவளுக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சொன்னாளா? என்று கேட்டாள். ஆம், என்றேன். ஆம், அது உண்மைதான் என்றாள்.
சட்டென்று கிளாராவை நான் முதலில் சந்தித்ததிலிருந்து உள்ள அத்தனை வருடங்களும், அதில் என் வாழ்க்கையில் நிகழ்ந்தனவும், என்மேல் உருண்டோடியது, அதில் மிகப் பெரும்பான்மைக்கு அவளுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்குப்பின், அந்தப் பெண் பல நூறு மைல்களுக்கு அப்பால் மறுமுனையில் என்ன சொன்னாள் என்று எனக்குத் தெரியவில்லை. ரூபன் தாரியோவின் கவிதையில் வருவதுபோல் நான், என்னையும் மீறி அழுது கொண்டிருந்தேன் என்று தோன்றுகிறது. என் பாக்கெட்டுகளில் சிகரெட்டுகளைத் தேடிக்கொண்டே சிறு சிறு துணுக்குகளாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். மருத்துவர்கள், அறுவை சிகிழ்ச்சை, மார்பக நீக்கம், விவாதங்கள், பல தரப்பட்ட கோணங்கள், விரிவுரைகள், என்னால் இப்போதைக்கு தெரிந்து கொள்ளவோ, தொடவோ, உதவவோ முடியாத ஒரு கிளாராவினுடையவை. இனி எப்போதும் என்னை மீட்க முடியாத ஒரு கிளாரா.
நான் இணைப்பைத் துண்டித்தபோது, அந்த பிச்சைக்காரன் ஓர் ஐந்தடித் தொலைவில் இருந்தான். அவன் அருகில் வந்ததை நான் அதுவரை உணர்ந்திருக்கவில்லை. நெடிய உருவத்துடன், அந்த தட்ப வெடப்ப நிலைக்குச் சற்று அதிகமாகத் தோன்றிய உடையுடன் அவன் என்னை வெறித்துப் பார்த்தது, என்னமோ கிட்டப்பார்வை உள்ளது போன்றோ, அல்லது நான் சட்டென்று தாக்கிவிடுவேன் என்று பயந்தது போன்றோ இருந்தது. அப்போதிருந்த என் மனநிலையில் எனக்குப் பயம்கூடத் தோன்றவில்லை. ஆனால், பிற்பாடு நகர மையத்தின் வளைந்த சாலைகளில் நான் நடந்தபோது, அவனைப் பார்த்தபோது ஒரு நொடி நான் கிளாராவை முதன் முறையாக மறந்திருந்தேன் என்பதை உணர்ந்தேன், கூடவே அது முதன் முறை மட்டுமே எனபதையும்.
அதன்பின், நாங்கள் தொலைபேசியில் அடிக்கடி பேசிக் கொண்டோம். சில வாரங்களில் நான் அவளை ஒரே நாளில் இரு தடவைகூட அழைத்ததுண்டு. எங்கள் உரையாடல்கள் சுருக்கமாகவும், அசட்டுத்தனமாகவும் இருந்தன. எனக்கு உண்மையிலேயே சொல்லத் தோன்றியதைச் சொல்ல ஒரு வழியும் தெரியாததால், அவளைச் சிரிக்க வைக்கக்கூடும் எனத் தோன்றும் எந்தவொரு அபத்தத்தையும் சொல்லிவைப்பேன். ஒருமுறை சற்று உணர்ச்சி மேலீட்டில், கடந்த காலத்தை அசைபோடத் தொடங்கியபோது, கிளாரா அதை விரும்பவில்லை என்பதை உடனே உணர்த்தியதால், பழைய காரியங்களைப் பற்றிப் பேசுவதை நானும் அத்தோடு நிறுத்திக் கொண்டேன். அறுவை சிகிழ்ச்சையின் நாள் நெருங்க நெருங்க, என் அழைப்புகளின் எண்ணிக்கையும் கூடத் துவங்கியது. ஒருமுறை நான் அவள் மகனிடம் பேசினேன். பின்னொரு முறை பாக்கோவிடம். அவர்கள் இருவரும் நன்றாக இருந்ததுபோல எனக்குத் தோன்றிற்று, என்னளவுக்கு அவர்களுக்குப் பதட்டம் இல்லை என்றும். ஆனால் அது என் தவறான கணிப்பாகவும் இருக்கலாம். கண்டிப்பாகத் தவறான கணிப்புதான். எல்லோரும் என்னைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள், என்றாள் கிளாரா ஒரு மதியத்தில். எல்லோரும் என்று சொன்னது அவள் கணவனையும் மகனையும்தான் என்று நான் நினைத்தேன். ஆனால் ‘எல்லோரும்’ என்பது நிறைய ஆட்களை உட்படுத்தியது, நான் கற்பனை செய்ததைவிட நிறைய ஆட்கள். அவள் மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய நாள், அவளை மதியம் அழைத்திருந்தேன். பாகோ பதிலளித்தான். கிளாரா அங்கே இல்லை. இரு நாள்களாக அவளை யாரும் பார்க்கவோ, அவளிடமிருந்து எந்த ஒரு தொடர்போ இல்லை. பாகோவின் குரலின் தொனி அவள் என்னுடன் இருக்கலாம் என்று அவன் சந்தேகிப்பதாக எனக்கு உணர்த்தியது. அவனிடம் நேரடியாக அவள் இங்கு இல்லை என்று சொன்னேன். ஆனால் அந்த இரவு அவள் என் அடுக்ககத்துக்கு வர வேண்டும் என்று முழு மனதாய் விரும்பினேன். நான் அவளுக்காக விளக்கை அணைக்காமல் வெகுநேரம் காத்திருந்தபின் சோபாவிலேயே தூங்கிப் போனேன். கனவில் நான் ஓர் அழகிய பெண்ணைக் கண்டேன். அவள் கிளாரா இல்லை, அவள் ஓர் உயரமான மெலிந்த பெண், சிறிய மார்பகங்களும், நீண்ட கால்களும், ஆழ்ந்த பழுப்பு நிறக் கண்களும் கொண்டவள், அவள் ஒருபோதும் கிளாராவாக இருக்க முடியாது. அந்தப் பெண்ணின் இருப்பு, கிளாராவை அழித்து, அவளை நாற்பதுகளில் உள்ள ஒரு பாவப்பட்ட தொலைந்துபோன பெண்ணாக மாற்றிற்று.
அவள் என் அடுக்ககத்துக்கு வரவில்லை.
அடுத்த நாள் பாகோவை அழைத்தேன். இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அழைத்தேன். கிளாராவின் ஒரு தடயமும் இல்லை. மூன்றாம் முறை பாகோவை அழைத்தபோது, அவன் தன் மகனைப் பற்றிப் பேசினான். கிளாராவின் நடவடிக்கையைப் பற்றிப் புலம்பினான். ஒவ்வொரு இரவும் அவள் எங்கிருப்பாளோ என்று எண்ணிக் குழம்புகிறேன், என்றான் அவன். அவன் குரலிலிருந்தும், அந்த உரையாடலின் போக்கிலிருந்தும் அவனுக்கு என்னிடமிருந்தோ வேறு எவரிடமிருந்தோ தேவையாயிருந்தது நட்புதான் என்று எனக்குப் புரிந்தது. ஆனால், அவனுக்கு அந்த ஆறுதலை அளிக்கும் நிலையில் நான் இருக்கவில்லை.
ஆங்கில மொழிபெயர்ப்பு (மூலம்): Chris Andrews
https://www.newyorker.com/magazine/2008/08/04/clara-roberto-bolano
One Reply to “கிளாரா”