கவிதைக்களத்தில் விளையாட்டாக…

ட்வைட் கார்னர்

ஜூலை 9, 2013

[தமிழாக்கம்: ஹுஸ்டன் சிவா]

சிலே நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர் ரொபெர்த்தோ பொலான்யோ, புனைவைவிட கவிதை உன்னதச் செயல்பாடு என்று சற்று நம்பகத் தன்மையுடன் வாதிடுவதை விரும்பினார்.

தாம் ஒரு நல்ல நாவலாசிரியர் என்பதைவிடவும், சிறந்த கவிஞரே என்று எந்த விதமான நம்பகத்தன்மையுமின்றி வாதிடுவதையும் அவர் விரும்பினார். “கவிதை, என்னைக் குறைவாகவே கன்னம் சிவக்க வைக்கிறது,” என்று அவர் கூறினார். பல எழுத்தாளர்களைப் போலவே, பொலான்யோவும் (1953-2003) தமது சொந்த கலைப் படைப்புகளுக்கு நம்பத்தகாத வழிகாட்டியாக இருந்தார்.

இப்போது அவருடைய தொகுக்கப்பட்ட கவிதைகள், “அறியப்படாத பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில், கனமான அழகிய இருமொழிப் (ஆங்கிலம், ஸ்பானிஷ்) புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அவரது சிறந்த நாவல்களான,  “தி சாவேஜ் டிடெக்டிவ்ஸ்” (1998), “பை நைட் இன் சிலே” (2000) மற்றும் “2666” (2004) ஆகியவற்றிலிருக்கும் தீவிரமான இன்பத் தீற்றல்கள் இப்புத்தகத்திலும் காணக் கிடைக்கின்றன. ஆனால், அவற்றைத் தேடுவது தங்கத்திற்காக ஆற்றின் அடியில் சலிப்பதைப் போலத்தான். 

பொலான்யோ, தம் இளம்  வயதிலேயே (50) கல்லீரல் நோயால் இறந்தார். இறப்பதற்குமுன் புத்தகத்தைத் தொகுத்துத் தலைப்பை அளிப்பதற்கு அவருக்கு நேரம் கிடைத்தது. நுணுக்கங்கள் கூடிய நகைச்சுவைமிக்க கடைசிக் கவிதைகளை இயற்றுவதற்கும்கூட. அவற்றில் சில, அவரது இளம் மகனிடம் நேரடியாக உரையாடின. அழகான கவிதை ஒன்று இப்படித் தொடங்குகிறது:

பழைய கவிஞர்களை வாசி, என் புதல்வனே
அதற்கு நீ வருத்தப்பட மாட்டாய்
ஒட்டடைகளுக்கும் பாவக்கடனில் சிக்கியிருக்கும்
கப்பல்களின் உளுத்துபோன கட்டைகளுக்கும் இடையில்
அங்குதான் அவர்கள்
பாடிக் கொண்டிருக்கிறார்கள்
அபத்தமாகவும் வீரத்துடனும்!

“அறியப்படாத பல்கலைக்கழகம்” தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள், பொலான்யோ 20 வயதடைந்த அடுத்த சில வருடங்களில் எழுதப்பட்டவை. பெரும்பாலும் முதிரா விடலைத்தனமான எழுத்துக்கள் – ஒலியிசைவற்ற வரிகளை இயற்றிய, சமபங்குக் கவிஞர், கவிஞராக முயற்சித்துத் தோற்றவர் என்ற கலவையாகவும், சொற்கள்மீது போதைகொண்டு இலக்கியத்தில் அலைந்து திரிந்து, தம் குரலைக் கண்டடைய முயல்பவராகவும் அவர் தென்படுகிறார்.  பல கவிதைகள் சுயசரிதைத் தன்மையுடையவை. அவரது புனைகதைகளைப் போலவே பட்டினியில் வாடி, அலைந்து திரிந்து, சண்டை பிடித்து, பாலியல் பித்துப்பிடித்த, மனக்குறைகளுடைய, அகந்தை அடிபட்ட கவிஞர்களாலும், கலைஞர்களாலும் அவை நிரப்பப்பட்டவை.

அதி உன்னத தருணங்களும் இதில் உள்ளன. பொலான்யோ இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தின் மாபெரும் அழுக்கு மனம் ஒன்றைக் கொண்டிருந்தார். இத்தொகுதியின் பல சிறந்த வரிகள் இங்கே வெளியிடப்பட முடியாதவை. “பெரிய வெள்ளி அலைகள்” என்ற கவிதையில், ஒரு காமத் தரகனின் வார்த்தைகள் இப்படி செல்கின்றன : “இடி குத்து இடி குத்து முடிவிலி வரையில்.”

அதே அளவிற்கு அவர் ஆழ்ந்த கற்பனாவாதம் மிக்கவராகவும் இருந்தார். “அதிகாலை 4 மணிக்கு லிசாவின் பழைய புகைப்படங்கள் / ஓர் அறிவியல் புனைகதை நாவலின் பக்கங்களுக்கு இடையே,” என்று எழுதுகிறார். “நம்பிக்கை” என்ற ஒரு கவிதையில், “சொர்க்கத்திற்கு நன்றி கூறுகிறேன் / நான் அக்கறை செலுத்திய பெண்களுடன் உறவு கொண்டதற்காக” என்று அறிவிக்கிறார். காதல் ஏக்கத்தில் நடந்து திரிந்தவர் அவர். ஒரு கவிதை இவ்வரியுடன் முடிவடைகிறது: “சடக், உடைகிறது உங்கள் இதயம்.”

வறுமை ஒரு நிலையான கருப்பொருள். “தெய்வங்கள் உங்களுக்குப் பணம் வழங்கவில்லை / ஆனால் விசித்திரமான விருப்பங்களை வழங்கியுள்ளன” என்று பெயரிடப்படாத ஒரு கவிதையில் எழுதுகிறார். இன்னொன்றில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “பணம், பெண்களுடனும் நிலப்பரப்புடனும் உங்களை இணைக்கும் தொப்புள் கொடிபோல / பணம்,  எனக்கு ஒருபோதும் கிடைக்காதது, அத்தவிர்த்தலால் ஆக்கியது என்னை ஒரு துறவியாக, பாலைவனத்தில் திடீரென வெளிறிப்போன கதாநாயகனாக.”

எப்போதும்போல, அவருடைய சிறந்த படைப்புகள், எழுத்து மற்றும் எழுதும் வாழ்க்கை பற்றியவை. “விதிகள் இல்லை” என்ற ஒரு கவிதையில் அவர் அறிவிக்கிறார்: “சொல்லுங்கள் அந்த மடையன் ஆர்னால்ட் பென்னட்டிடம், சதி குறித்த அவனது விதிகள் அனைத்தும் மற்ற நாவல்களின் நகல்களான நாவல்களுக்கு மட்டுமே பொருந்தும் என.” இந்தக் கவிதை நகைச்சுவையாக, அடைப்புக்குறிக்குள் பின்வரும் வார்த்தையுடன் முடிவடைகிறது: “கைதட்டல்.”

இந்த கவிதைகளில் ஒருசில, நுணுக்கமான உன்னத படைப்புகளுக்கு நிகரானவை. “எர்னஸ்டோ கார்தேனாலும் நானும்” என்னும் கவிதையில்,  முன்னாள் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாரும், நிகரராகுவா தேசத்துக் கவிஞருமான கார்தேனாலுடன் நடந்துகொண்டே கேள்வி கேட்பதாகக் கற்பனை செய்கிறார்:

தந்தையே, பரலோக ராஜ்யமான
அக்கம்யூனிசத்தில்
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இடம் இருக்கிறதா?
ஆம், என்றார்.
கையடிப்பதற்கு மனம் வருந்தாதவர்களுக்கு?
செக்ஸ் அடிமைகளுக்கு?
செக்ஸ் மடையர்களுக்கு?
சேடோமாஸோகிஸ்டுகளுக்கு, விலைமாதர்களுக்கு, 
எனிமா மேல் ஆர்வம் உள்ளவர்களுக்கு,
இனிமேலும் தாள முடியாதவர்களுக்கு, உண்மையாக மெய்யாக இனிமேலும் தாள முடியாதவர்களுக்கு?
ஆம், என்றார் கார்தேனால்.

அது ஒரு சிறு பகுதி மட்டுமே. எனக்குச் சொந்தமான “அறியப்படாத பல்கலைக்கழகம்” புத்தகத்தில், அப்பக்கத்தின் ஓரம் மடிக்கப்பட்டிருக்கும். பெயரிடப்படாத இன்னொரு கவிதையை கொண்ட இப்பக்கமும்கூட:

குட்நைட் விழிப் படலமே குட்நைட்
கரு நகங்களே குட்நைட் மணிக்கட்டே
குட்நைட் கடிபட்ட கழுத்தே குட்
நைட் ஆசனவாயே குட்நைட் 
ஜலதோஷத்தினால் சிவந்த மூக்கே
குட்நைட் மயிரடர்ந்த வயிரே 
குட்நைட் என் உள்ளங்கைக் கோடுகளே
குட்நைட் முழங்கால்களே …

அப்பட்டமான காட்சி விளக்கத் தன்மையுடன் கவிதை மேலும் நீள்கிறது.

லாரா ஹீலியால், ஸ்பானிஷ் மொழியிலிருந்து சரளமாக மொழிபெயர்க்கப்பட்ட “அறியப்படாத பல்கலைக்கழகம்” தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் சிறந்த படைப்புகள் அல்ல என்று கூறுவதால், அவற்றை வெகு மோசமானவை என்றோ, அல்லது படிப்பதற்கு வேதனை தருபவை என்றொ விமர்சிப்பதாக அர்த்தமல்ல. அவை வெறும் சிறகு வளராத முட்டைப் புழுக்களே. பல வரிகள் விளையாட்டுத் தன்மையுடன் கிட்டத்தட்ட டயரிக் குறிப்புகள்போல எழுதப்பட்டுள்ளன. பெயரிடப்படாத ஒரு கவிதை “காற்றால் தீண்டப்படாத நீண்ட கூந்தலின் நடுத்தர வயது” என்ற வரியுடன் தொடங்குகிறது, அங்கிருந்து மேலும் உயரே எழும்பாமல் நின்றுவிடுகிறது. மற்ற கவிதைகள் தொடர்பற்ற படிமங்களின் குவியல்களாக இருக்கின்றன. பெயரிடப்படாத ஒரு முழுக் கவிதை இங்கே:

“யாரும் இப்போது உங்களுக்குக் கடிதங்களை அனுப்புவதில்லை   கலங்கரை விளக்கத்தின் கீழ்  அந்தி வேளையில் காற்றால் பிரிக்கப்பட்ட உதடுகள்   
அவர்கள் கிழக்கில் புரட்சியை உருவாக்குகிறார்கள்    ஒரு பூனை 
உங்கள் கைகளில் தூங்குகிறது   
சில நேரங்களில் நீங்கள் மிகவும் மகிழ்வுற்றிருக்கிறீர்கள்.

“அறியப்படாத பல்கலைக்கழகம்” எழுப்பும் ஒலி பெரும்பாலும் சொற்களின் உலகில் தமது வழியைத் தேடும் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளனுடையது.

அதன் மிகச் சிறந்த இன்பங்களில் பல மண்ணிலூன்றி நிற்கும் சாதாரணத்துவத்தைப் பேசுவதால், “பணம்” என்ற கவிதையை மேற்கோள் காட்டி இக்கட்டுரையை முடிக்கிறேன். பொலான்யோ எதிர்பாராத விதமாக தமது பாக்கெட்டில் சில பெசெட்டாக்களுடன் இருப்பதைப் பற்றியது:

… வெற்று ஒலிநாடாக்கள் இரண்டு வாங்க 
முடிவு செய்தேன் சிசில் டெய்லரைப் பதிவு செய்ய 
உடன் அஸிமுத் டிஸ்ஸி கில்லெஸ்பி சார்லி மிங்கஸ்
கூடவே உண்ண நல்ல ஒரு போர்க் ஸ்டேக்கும்
தக்காளி வெங்காயம் வறுத்த முட்டைகளுடன் 
பிறகு எழுதும் இக்கவிதை அல்லது குறிப்பு
ஒரு நுரையீரலைப் போலவோ அல்லது 
ஒரு தற்காலிக வாயாகவோ கூறுகிறது 
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் 
ஏனெனில் நீண்ட காலமாகிவிட்டது
எனது பைகளில் இவ்வளவு பணமிருந்து.

பொலான்யோ பசியுடன் இருந்தார், எல்லாவற்றின் மேலும் என்று நமக்கு நினைவூட்டுகிறது இப்புத்தகம்.


இங்கிலிஷ் மூலம்: ட்வைட் கார்னர்

இந்தக் கட்டுரையின் மூலத்தை இங்கே பெறலாம்: https://www.nytimes.com/2013/07/10/books/roberto-bolanos-unknown-university-collects-his-poems.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.