உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – ரொபெர்த்தோ பொலான்யோவின் கவிதைகள்

புனைவின் உண்மையும் உண்மையின் புனைவும்

தான் நெசவு செய்யும் எண்ணற்ற பாத்திரங்களுள் ஏதோ ஒன்றின் இழையில் ஆசிரியனின் அகம் ஒளிந்திருக்க கூடும்தான். தான் புனையும் எண்ணற்ற பாத்திரங்களுள் ஏதோ ஒன்றின் சாயலில் அவன் அகம் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளதுதான். என்பது போலவே, சுயகதை எனும் மொழிபின் வழி, இல்லாத தன் இருப்பை படைப்பில் ஒரு பாவனையாக உருவாக்கி அது ஒரு உண்மைச்சம்பவம்தான் என நம்பவைத்து எளிய மனம் கொண்ட வாசகனை அவன் ஏமாற்றவும் கூடும்.

நாவல்கள் மற்றும் குறுநாவல்களில் வரும் பாத்திரங்கள் அதனதன் அளவில் தனித்த இருப்பாக தன்னிச்சையான கருவிகளாக இயங்க வல்லவை என்பதை சொல்லத் தேவையில்லை. அனைத்துமே எழுத்தாளனின் அகத்திலிருந்து உருவாகி வருபவைதான், -என்றாலும் ஆசிரியனின் சுவடு என்பது அறவே அற்ற நிலையிலும் பெரும் நாவலின் பாத்திரங்கள் அமையக்கூடும்.

சொல்லப்போனால் பல சமயங்களில் அப்பாத்திரங்கள் வாழும் இல்லத்தில் ஒரு பார்வையாளனாக, திரை மறைவில் அமர்ந்து அவர்களின் நடவடிக்கைகளை அவதானித்து பதிவு செய்யும் ஒரு எளிய கருவியாக மட்டுமே பெரும் நாவல்களின் ஆசிரியன் அமைகிறான் என்பதால் பாத்திரங்களின் எண்ணங்கள் சிந்தனைகள் மனஓட்டங்கள் வாழ்க்கையின் மீதான அணுகுமுறைகள் ஆகிய அனைத்துமே அதில் வரும் பாத்திரங்களுக்கே உரியவை.

ஆகவே, ஒரு பெரும்காப்பியத்தை அல்லது மாபெரும் நாவலை ஆராய்ந்து விமர்சித்து மதிப்பிட அதன் ஆசிரியனின் ஆளுமை மீதான அறிமுகம் மிகவும் அவசியமானது என்று சொல்வதற்கில்லை. ஒரு படைப்பை உருவாக்கிய ஆசிரியனை அறிவது அவன் படைப்புகளை புரிந்துகொள்ளவும் விமர்சிக்கவும் எல்லா வகையிலும் உதவிகரமானதுதான் என்ற விதி எங்கும் எப்பவும் செல்லுபடியாகக்கூடியதே, என்றாலும்.

கம்பராமாயணத்தை விமர்சிக்க கம்பரின் ஆளுமையை ஒருவர் விரிவாக அறிந்திருக்க வேண்டுமா? சிலப்பதிகாரத்தை ஆராய இளங்கோவடிகள் என்ற ஆளுமையின் மீதான தகவல்கள் அத்தியாவசியமா? மகாபாரதத்தின் கதையை புரிந்துகொள்ள வியாசனின் வாழ்க்கையைப் பற்றியும் ஒருவர் அறியவேண்டுமா? என்று கேட்டுப்பார்த்தும் நம் பதிலை சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால், காப்பியத்தைப்போன்ற விரிவான வடிவை எட்டி அதில் தன்னிச்சையான பாத்திரங்கள் உருவாகி உலவாத நிலையில், ஒரு நவீனக் கவிதையின் மதிப்பீட்டுக்கு அதன் ஆசிரியனை அறிவது அத்தியாவசியமானது.

காரணம் ஒரு காவியத்தை விடவும், புதினத்தை விடவும் நவீனக்கவிதையின் வெளிப்படும் அனைத்துமே கவிஞனின் நேரடி அகத்தின் சிதறல்கள் அல்லது பிரதிபலிப்புகள் என்பதே. தன் கவிமரபின் பிரதிநிதியாக நின்றாலும் எதைச்சொல்வது, எப்படிச்சொல்வது என்பதை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரமும் சுதந்திரமும் கவிஞனுக்கே விடப்பட்டுள்ளது (இங்கு நான் குறிப்பிடுவது ”ஆசிரியனின் படைப்புச் சுதந்திரம்” என்ற எளிய கருதுகோளுக்கு அப்பாற்பட்டது). ஒரு பிரபஞ்ச மனிதனின் பொதுவான பிரச்சினையை, மனஎழுச்சியை, துயரத்தை சொல்வதானாலும், உலகின் எந்த தேசத்திற்கும் பொதுவான இயற்கையை காட்சிப்படுத்தினாலும், பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் வாழும் ஏதோவொரு மனிதனின் நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு குரல் எழுப்பினாலும் கூட கவிஞனின் அகமும் அதன் பிரதிபலிப்புமே நவீனக்கவிதையில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. பிற இலக்கிய வடிவங்கள் அளிக்க இயலாத அப்படி ஒரு உயரிய அரியாசனத்தை அதன் ஆசிரியனுக்கு அளிக்கிறது என்பது நவீனக் கவிதையை பிற இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்துவது. நவீனக் கவிதையைப் பொறுத்தவரை அதன் நாயகன் ஆசிரியனே.

பானையை மீறி நிற்கும் பருக்கை

கவிஞனின் ஒரு சிறு எண்ணத்துளியை, அவன் வாழ்க்கையின் சிறு கணத்தையே ஒரு நவீனக்கவிதை காட்சிப்படுத்துகிறது என்பதால் எல்லா சமயங்களிலும் அது சமநிலை கூடிய சிந்தனையின் புள்ளியிலிருந்து உருவாகி வருவது சாத்தியமில்லை என்பதும், தத்தளிப்புகளும் அலைக்கழிப்புகளும் கொண்ட கவிஞனின் ஒட்டுமொத்த அகத்திற்கு அவனின் ஒரு சிறு எண்ணத்துளி மட்டுமே மாதிரியாக அமையாது என்பதும், எந்த வாசகனும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதே. சொல்லப்போனால் சமநிலையான சிந்தனையில் நின்று ஒரு சாமனியன் வைக்கக்கூடிய அவதானத்தின் சராசரித்தனத்திலிருந்து மாறுபட்டு விலகும் கவிஞனின் கோணமே சில எளிய வரிகளை கவிதையாக்குகிறது. உவமையோ உருவகமோ அற்ற எளிய ஜென் கவிதைகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

பரிவாரங்களுடனும் பல்வகையான படைகளின் பிரம்மாண்டமான அணிவகுப்புகளுடனும் நாவல்களில் வரும் ஒரு படைப்பாளி, தன் கவிதையில் தனியனாக தோன்றும் ஒற்றை மனிதனாக வெட்டவெளியில் விடப்படுகிறான். அதிகபட்சமாக ஒரு வாள் மற்றும் கேடயம் இவையே அவன் ஆயுதங்கள். சிலசமயங்களில் தன் ஆயுதங்களை இழந்து நிராதபாணியாகவும், கவசங்களையும் ஆடைகளையும் களைந்த நிர்வாணியாகவும் தன் கவிதையில் ஆசிரியன் நிற்கக் கூடும்.

ஆகவே தன் சுயத்தை மறைக்கவும் திரிக்கவும் தெரிந்தும் தெரியாமலும் பல உபாயங்களையும் ஆசிரியன் தன் கவிதையில் முயலக்கூடும். வாளைச்சுழற்றி முன்னேறிச் செல்கையில் தன் அடவின் நிறைவின்மையில் சந்தேகமடைந்து அவன் இடம் வலமாக திரும்பக்கூடும். வேடிக்கையான உடைகளில் மாறுபட்ட ஒப்பனையில் தோன்றி ஒரு கோமாளியைப் போன்ற குரலில் பேசக்கூடும். யாரோ தொடர்வதாக எண்ணி சந்தேகமுற்று தேவையின்றி பின்பக்கமாக தன் வாளை சுழற்றக்கூடும். பொலோன்யோவையும் இன்னும் பல நவீனக்கவிஞர்களை உதாரணமாக காட்டி இதை இன்னும் விரிவாக விவாதிக்க முடியும். நவீனக்கவிஞர்கள் எவரும் இதற்கு விலக்கல்ல என்பதை உறுதிசெய்தும் இது ஒரு கவிஞனின் தனிப்பட்ட போதாமை அல்ல, நவீனக் கவிதையின் இயல்பு என்பதை நாம் அறியலாம்.

இதனால்தான் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற விதி நவீனக்கவிதைகளுக்கு பெரும்பாலும் செல்லுபடியாவதில்லை. ஒரு கவிஞனின் பெரும்பாலான கவிதைகளை ஒத்து வரும் தோராயமான சிறந்த மாதிரியாக ஒரு தனிக்கவிதையை சுட்டமுடியலாமே ஒழிய, அகத்தின் ஒரு சில்லை மட்டும் காட்டுவது, நீண்ட வாழ்க்கையின் ஒரு கணத்தை மட்டும் காட்சிப்படுத்துவது என்பதால் ஒரு பெரும் கவிஞனுக்கு அவனின் ஒற்றைக் கவிதை ஒருபோதும் மாதிரியாக ஆவதில்லை.

சில்லுகளில் தெரியும் வானம்

தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு சொல்லிலும், சொல் இணைவிலும், பொருளிலும், வரியிலும், கவிதையிலும், தன் சுயத்தை, வாழ்நாள் அனுபவத்தை, கல்வியை, விருப்பு வெறுப்புகளை, ரகசியங்களை ஒரு மருந்து தெளிப்பானைப்போல தன் கவிதையில் தொடர்ந்து தெளித்தபடியே செல்கிறான் கவிஞன். ஆசிரியனின் இடம் எவ்வளவு நேரடியானது என்பதை நுணுக்கமாக அறியும்தோறும் நவீனக்கவிதையில் துலங்கும் அதன் ஆசிரியனின் பிம்பம் வளர்ந்தபடியே செல்கிறது.

மேலும், அடர்த்தி அரூபம் எடை ஆகியவற்றின் காரணமாக ஒரு கவிதையின் தொடர்ச்சி, அதன் இன்னொரு துணுக்கு இன்னொரு கவிதையிலோ அல்லது கவிஞனின் அகத்திலோ ஒட்டிக்கொண்டிருக்கலாம். திறக்க முடியாத பெட்டியைப்போன்ற ஒரு கவிதையின் சாவி இன்னொரு கவிதைக்குள் புதைந்திருக்கலாம்.

ஆகவே ஒரு ஆசிரியனின் நவீனக்கவிதைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஒரே சரடில் தொடுக்கப்பட்டவை, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்ற பிரக்ஞை விமர்சகனுக்கு வேண்டும். இயன்றவரை ஒரு கவிஞனின் அனைத்து கவிதைகளையும் பயின்று, அதன் ஒவ்வொரு சில்லுகளிலும் சிதறிக்கிடக்கும் ஆசிரியனின் அகத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொண்ட அலைநீளங்களின் முழுமையைக்கொண்டு ஒவ்வொரு பிரதியையும் பிரதிபலிப்பையும் ஆழ்ந்து மறுவாசிப்பு செய்யும்போதே கவிதைகளும் தங்கள் கதவுகளை திறந்துகொள்கின்றன. நவீனக்கவிதையை பொறுத்தவரை அதன் ஆசிரியனை அணுகி அறியும்போதே அவன் கவிதையில் இருந்து பெறுவதற்கு சாத்தியமான முழு வாசிப்பையும் அடையமுடியும்.

ஆகவேதான் நவீனக் கவிதையின் மீது மதிப்பீட்டை வைக்கும் முன், அதை எழுதியவனையும் அறிய வேண்டியது அவசியமாகிறது. கவிஞனின் கல்வி (நிச்சயமாக கல்லூரிப்படிப்பை சொல்லவில்லை), வளர்ப்பு, ஆளுமை, சித்தாந்தச் சார்பு இவற்றைக்கொண்டு தன் சூழலை எவ்விதமாக எதிர்கொண்டான் என்ற எளிய அடிப்படைகளை அறிய வேண்டியிருக்கிறது. ஒரு கவிஞன் தன் சொற்களை எவ்வாறு சம்பாதித்தான், எப்படி செலவழிக்கிறான், அதற்கான தகுதியை எங்கிருந்து பெற்றான், அதற்காக எதை இழந்தான், தன் மரபின் மீது அவன் கொண்டுள்ள ஏற்பும் மறுப்பும் எவை, அவற்றை எவ்வாறு மீறிச்செல்கிறான் என்பது போன்ற சாரங்களை தொகுத்துக்கொண்டு அவற்றின் ஒட்டுமொத்தத்திலிருந்து வகுத்துக்கொண்ட ஒரு தனி அளவுகோலை அடிப்படையைக் கொண்டு ஆராய்ந்து வைக்கப்படும் மதிப்பீடே முழுமை கொள்ளும் (ஆகவே கவிஞனின் மொத்தவாழ்க்கையும் பதிவாகி முடியும் முன் உருவாகாத எச்சத்தால் முடியாதது).

சிறந்த மாதிரியாக சொல்லமுடிகிற தன் ஒவ்வொரு கவிதையையும் மீறிச்சென்று இன்னொரு வடிவின் மாதிரியாக சொல்ல முடிகிற இன்னொரு கவிதையை எழுதுபவனே பெருங்கவிஞன். பொலோன்யாவின் கவியுலகின் குறுக்குவெட்டை ஓரளவாவது பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கவிதைகளின் மொழிபெயர்ப்பு இந்த இதழில் வெளியாகி உள்ளது. வடித்தெடுத்த தெளிவு கொண்டவை, உணர்ச்சிகரமானவை, உடைபட்டு சிதறிக்கிடப்பவை, மனதை உருக்கும் மெல்லுணர்ச்சிகளால் ஆனவை, அப்பட்டமானவை என விரிந்து கிடக்கும் பொலான்யோவின் கவிதைகளை ஒரு வகைமைக்குள் அடைப்பது சிரமம். மீயதார்த்தவாதம்(surrealism), மற்றும் அதீதயதார்த்தவாதம் (infrarealaism) ஆகியவற்றின் கூறுகள் மிகுந்தவை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதீதயதார்த்தவாதம் எனும் போய்க்கொண்டேயிருத்தல்

அதீதயதார்த்தவாதம் (infrarealaism) என்றால் என்ன? பொலான்யோ எழுதியது போல ”சவால் வேறு எங்கோ இருக்கிறது. உண்மையான கவிஞன் ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே விட்டுச்செல்கிறான். எந்த இடத்திலும் தேவைக்கு அதிகமாகத் தங்கி விடுவதில்லை. பறக்கும் தட்டுக்களைப்போல, கொரில்லா போரளிகளைப்போல, வாழும் கண்களின் விழி வெள்ளையைப் போல எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பது” என்பது அதீதயதார்த்தவாதிகளின் அறிக்கையில் உள்ள சித்தாந்தம். பொலான்யோ ஒரு நேர்காணலில் கூறியதுபோல, “என்னைப் பொறுத்தவரை நானும் சாண்டியாகோவும் மெக்ஸிகோவுக்கு சென்றபோதே அதீதயதார்த்தவாதிகள் காணமாமலாகிவிட்டார்கள். ஏனென்றால் அதீதயதார்த்தவாதம் என்பது என்னுடைய கிறுக்குத்தனம் மற்றும் சாண்டியாகோவுடைய கிறுக்குத்தனம்” மரியோ சாண்டியாகோ பொலான்யோவின் நண்பர் (படத்தில் பரட்டைத்தலையுடன் மரத்தின் கீழ் உயரமாக அமர்ந்திருப்பவர்) ’கொடூரமான துப்பறிவாளர்கள் (Savage Detectives) என்ற நாவலில் வரும் யுலிசஸ் லிமா எனும் பாத்திர உருவாக்கத்திற்கு ஆதாரமாக இருப்பவர்.

இலக்கியத்தின் அதிகார மையத்தை எதிர்த்து மறுதலித்து புத்தக வெளியீடுகள், விருது விழாக்கள், கவியரங்கங்கள் ஆகியவை நிகழும் அரங்குகளுக்குள் அத்துமீறி நுழைந்து, மேடையில் இருப்பவரை மேற்கொண்டும் பேசவிடாமல் இடைமறித்து தங்களுடைய கவிதைகளை அதிரடியாக உரக்க வாசிப்பது அதீதயதார்த்தவாதிகளின் அன்றாட நடைமுறையாக இருந்தது. புகழ்பெற்ற கவிஞர்களான ஆக்டோவியா பாஸ், டேவிட் ஹுர்டோ போன்ற பெரும் ஆளுமைகள் கூட இதைப்போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பவில்லை என்பதை வைத்து பொலான்யொவின் ஆளுமையின் தீவிரத்தை நாம் ஓரளவு கற்பனை செய்யலாம்.

சிலே நாட்டின் தலைநகரான சாண்டியாகோ நகரில் 1953 ஆம் ஆண்டு பிறந்த ரொபெர்த்தோ பொலான்யோ உற்சாகமாக பழகக்கூடியவர், ஆனால் எளிதில் நினைவிலிருந்து வரையறுத்துக் கூறிவிட முடியாதவர். கனவானைபோன்ற நடத்தை கொண்டவர் ஆனால் மெஹிகோவின் பரப்பிசை பாடல்களை தன் ஸ்பானிய நண்பர்களுக்கு பாடிக்காட்டும்போது மனநோயாளியோ என்று எண்ணச்செய்பவர். அவரின் ஆளுமையின் மர்மத்தை உடைக்க விரும்பாதவரைப்போல அவருடன் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த அவரின் மனைவி(கேரலினா லோபஸ்) பல ஆண்டுகள் வரை ஊடகங்களில் அவரைப்பற்றி ஒரு சொல்கூட கூறவில்லை. தன் 2666 நாவலை எழுதியபடி மாற்று கல்லீரலுக்காக காத்துக்கொண்டிருக்கையில் ஐம்பதாவது வயதில்(2003) இறந்து போன பொலான்யோ இருபதாம் நூற்றாண்டின் தென்அமெரிக்க இலக்கியத்திலும், உலக இலக்கியத்திலும் முக்கியமான ஆளுமையாக நிற்பவர். பொலான்யோவின் பத்தாம் ஆண்டு நினைவை ஒட்டி நடந்த விழாவின்போது ஒரு நேர்முகத்தில் உடனிருந்த மகன் லவ்தாரோ(23), மகள் அலஹாண்ரா(12) உடன் அவர் விளையாடிக்கழித்ததை விஷயங்களை சொல்லி மிகவும் அன்பானவர், குழந்தைகளை மிகவும் நேசிப்பவர் குழந்தைகளுடன் பெரும் பொழுதுகளை செலவழிப்பவர், கொலைக்காட்சிகள் நிறைந்த மர்மப்படங்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர் என நினைவுகூர்கிறார்.

கீழ்தட்டு நடுத்தரவர்க்கத்தின் ஒரு எளிய குடும்பத்தைச்சார்ந்த எழுத்துக்கூட்டிப்படிப்பதில் சிரமம் கொண்ட, கண்ணாடி அணிந்த நோஞ்சானாக சக மாணவர்களால் கேலிசெய்யப்படும் வகுப்பின் சராசரியான மாணவராக இருந்த ரொபெர்த்தோ பொலான்யோ இளம் வயதிலேயே தீவிரமாக வாசிப்பவராக இருந்தார். லாரி ஓட்டுநர் மற்றும் குத்துச்சண்டை வீரரரான தந்தை, மிகவும் எளிய வாசிப்பு கொண்ட ஆசிரியையான தாய் மற்றும் இளைய சகோதரியுடன் 15ம் வயதில் (1968) மெஹிகோவின் மெஹிகோ நகருக்கு குடிபெயர்ந்தவுடன் உயர்நிலைப்பள்ளி படிப்பை துறந்து இடது சாரி இயக்க நடவடிக்கைகளிலும் கவிதையிலும் தீவிரமானவராக ஆனார்.

பதினைந்து வயதிலேயே தன் கவிதையின் வெள்ளந்தித்தனத்தை இழந்தது பற்றி பாதி சுயசரிதையாக வரும் ‘நடன அட்டை’ என்ற சிறுகதையில் “என்னைப் பொறுத்தவரை ஒரு கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணம் திரைப்பட இயக்குனர் அலெஹாந்ரோ ஹொதரவாவ்ஸ்கி” என்ற குறிப்பிற்கு பிறகு பின்வரும் சம்பவம் வருகிறது. இடதுசாரி அரசியல் மற்றும் தீவிர இலக்கியம் பற்றி அவருடன் உரையாட ஆரம்பித்தவுடன், “கவிஞர்களின் மோஸ்தரை தகர்த்தெறிந்து, கவிஞர்களுக்கு எதிர் பிம்பமாக நிற்கும் நிகனோர் பாராதான் சிலேயின் ஆகச்சிறந்த கவிஞன்” என்கிறார் இயக்குனர். பாராவை அதுவரை வாசித்திராத இளம் வாசகரான பொலான்யோ அவரை மறுத்து, அந்த மரியாதைக்கு உரியவர் எப்பவுமே பாப்லோ நெரூதாதான் என்கிறார். இந்த விவாதம் தொடர்ந்து செல்கிறது, இளம் பொலான்யோ கண்ணீர் சிந்தி அழுது அந்த இடத்தை விட்டு செல்லும்வரைக்கும். அந்தபிரிவு இறுதியானது அதற்குப்பிறகு அலெஹாந்ரோ ஹொதரவாவ்ஸ்கி மற்றும் பாப்லோ நெரூதா இருவரையுமே பொலான்யோ இழந்துவிடுகிறார். நெரூதாவின் கவிதை போலியானது, கறை படிந்தது, அருவருக்கத்தக்கது என்ற முடிவுக்கு வருகிறார்.

விந்து ரத்தம் வியர்வை மற்றும் கண்ணீர்

சிலேயின் அதிபராக சால்வடோர் அயண்டே தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, அதாவது 1973 ஆம் ஆண்டில், சோஷியலிசத்தை கட்டி எழுப்ப உதவுதற்காக பொலான்யோ சிலேவுக்கு திரும்பிச்செல்கிறார். அவர் வாங்கிய புத்தகங்களுள் முதல் இரண்டு பாராவுடையது.

ஆனால் அவர் எதிர்பார்த்தது போல எதுவுவே நடக்கவில்லை. அயண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். பொலான்யோ கைது செய்யப்படுகிறார். ”என்னை அவர்கள் கொடுமைப்படுத்தவில்லை ஆனால் சித்திரவதைக்கு உள்ளானவர்களின் அலறலை என்னால் கேட்கமுடிந்தது” என்று நினைவுகூறுகிறார். அதிர்ஷ்டவசமாக சிறையிலிருந்து விடுதலையாகி நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்படுகிறார். ’காதல் நாய்கள்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகிய முதல் கவிதை தொகுதியின் முகப்புக்கவிதையில்

”என் தேசத்தை இழந்தேன், ஆனால் ஒரு கனவை வென்றேன்”
------------------------------------
”சில நேரங்களில் 
எனக்குள் நானே பின்வாங்கி
என் கனவை 
தரிசிக்கிறேன்
நீரைப்போன்ற எண்ணங்களில் 
நிரந்தரமாகி நின்று விட்ட சிலையை.
ஒரு வெண்ணிறப்புழு 
காதலில் துடிதுடிப்பதை.
பிரியம் பறந்து செல்லும். 
என் கனவுக்குள் 
இன்னொரு கனவு”

தோல்வியின் எல்லா தடயங்களுக்குப் பிறகும் தன் கனவின் மீது அவருக்குள்ள உறுதியான நம்பிக்கையே அவரின் பல கவிதைகளுக்கும் ஆதாரப்புள்ளி. தன் கனவை அரவணைத்தும் புறக்கணித்தும், வெறுத்தும் நிராகரித்தும் மீண்டும் மீண்டும் அந்தக் கனவுக்கே அவர் வந்து சேருகிறார். ”பாராவின் தடத்தில்” என்ற கவிதையில் தன் கனவை ஒருவகையான சுமையாக முன்வைக்கிறார்.

“அட்லாண்டிஸ்என்பது புரட்சியின் பெயர்
கொடிய முடிவின்மை கொண்டது
ஆனால் 
முழுக்கவும் பொருளற்றது.
செல்வோம் 
லத்தீன் அமெரிக்கர்களே
செல்வோம்.
செல்வோம்
தொலைந்து போன கவிஞனின்
மறைந்துபோன தடங்களை 
தேடுவோம், 
அசைவின்றி நிற்கும்
சகதியில்”

இக்காலகட்டத்தின் பழைய நினைவுகளை பிரியத்துடன் நினைவுகூர்ந்து ஆர்டுரோ பெலானோ என்ற பாத்திரத்தில் தன்னை சற்றே மறைக்க முயன்றபடி தன் அதீதயாதார்தவாத குழு நண்பன் சாண்டியாகோவை யுசிசஸ் லிமா என்ற் பாத்திரத்தில் வைத்து சேவேஜ் டிடக்டிவஸ்(1998) நாவலை பொலான்யோ எழுதினார். அதில் மேற்கண்ட கவிதையை போன்ற வரிகளை அவர் சொல்லுவதில்லை. மாறாக உள்ளூர் கவிதைக்கு எதிரியாக மாறி ஆக்டோவியா பாஸை எப்படி கடத்துவது என்பது போன்ற சதித் திட்டங்கள் பற்றி மது அருந்தியபடி பேசிக்கொண்டும், பேசிக்கொண்டே மது அருந்திக்கொண்டும் இருக்கிறார்.

வாழ்வியல் சித்திரவதைக்கு ஆளான மனிதனின் துன்பத்தின் வழியான தேடல்கள் என்று பொலான்யோவின் கவிதைகளை கூறலாம். ”ஒரு கவிஞனைப் போல நான் வாழ விரும்பினேன், கவிஞனைப் போல வாழ்வது என்றால் என்ன என்பதை இன்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாமல் போகலாம். இருந்தாலும் என்னுடையை முக்கியமான விருப்பம் என்பது ஒரு கவிஞனை போல வாழ்வதில்தான்”. என்று ஒரு நேர்முகத்தில் சொல்வதோடு வாழ்க்கையையே ஒரு கலையின் படைப்பாக மாற்றுவது என்ற சித்தாந்தத்தின் அலையிலிருந்து ”தப்பிப்பிழைத்தவன்” என்றும் தன்னை கூறிக்கொள்கிறார்.

1973 ஆம் ஆண்டு மெஹிகோவிலிருந்து புரட்சி செய்வதற்காக சிலேவுக்கு திரும்பிச்சென்று ஆகஸ்தோ பினொச்செத் என்பவரின் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரணத்தை சந்திக்க இருந்த வேளையில், அவரின் பழைய பள்ளித்தோழன் ஒருவன் சிறையதிகாரியாக இருந்த ஒரே காரணத்தால் தப்பிப்பிழைத்து மெஹிகோவுக்கு மீண்டதாக அவர் சொல்லிக்கொள்வது உண்டு. அவரின் சமகாலத்தவர் பலர் இதை மறுத்து அவர் திரும்பவும் சிலேவுக்கு செல்லவே இல்லை என்று வாதிடுவதும் உண்டு.

இந்த ஒரு நிகழ்வையே விரித்து அதையே போலான்யொவின் படைப்புகளின் மையமான அம்சம் என்றும் கூறமுடியும். அதாவது அவராலேயே கூறப்பட்ட ஆனால் அறுதியிட்டு நிச்சயமாகச் சொல்லிவிட முடியாத அவரின் சுயசரிதை.

அரிய கவிதையைப்போல தோன்றியும் மறைந்தும்

தன் நம்பிக்கைகளில் கடும் பின்னடைவுகளையே சந்தித்தார் (ஒரு கனவுலகத்தை கனவுகண்டோம் அலறிக்கொண்டு விழித்தோம்”) என்றாலும் அவற்றில் ஆத்மார்த்தமான நம்பிக்கையே அவருக்கிருந்தது. பலவருடங்களுக்கு முன் ’முதல் அதீத யதார்த்தவாதிகளின் அறிக்கை’ யில் அவர் எழுதியதைப்போல ”புரட்சியே நம் கோட்பாடு, அழகியல் நம் வாழ்க்கை -இரண்டும் ஒன்றே” என்பதேயே அவர் நம்பினார்.

பதினான்கு நாவல்கள், ஆறு சிறுகதை தொகுதிகள், ஆறு கவிதை தொகுதிகள் வெளியிட்டிருந்தாலும் ரொபெர்த்தோ பொலான்யோ அடிப்படையில் ஒரு கவிஞர், அவரே தன்னைப்பற்றி கூறிக்கொண்டது போல.

பொலான்யோவை பொறுத்த வரை விந்து, இரத்தம், வியர்வை கண்ணீர் இவற்றால் எழுதப்படுவதே கவிதை. “உண்மையான கவிதையைப்போல தோன்றியும் மறைந்தும்” இருப்பவன் என சாண்டியாகோவை பற்றி போலோனியோ கூறுவது அவரின் கவிதைக்கும் பொருந்தும். சாண்டியாகோ என்பவன் ”தோற்கடிக்கப்பட்ட ஆனால் சாகாத உண்மையான கவிதை”.

மெஹிகோவை விட்டு வெளியேறி ஐரோப்பா சென்று ஹெராயின் போதைப்பழக்கத்தை நிறுத்திவிட்டு 1977 ஆம் ஆண்டு ஸ்பெய்ன் நாட்டின் பார்ஸிலோனாவுக்கு அருகில் உள்ள பிளேன்ஸ் என்ற சிறு கடற்கரை நகரில் உள்ளூர் பெண்மணி ஒருவரை மணம் செய்துகொண்டு பாத்திரம் கழுவுபராகவும், திராட்சைப்பழம் பறிப்பவராகவும், தங்குமிடத்தின் சிப்பந்தியாகவும், மைதானத்தின் காவலராகவும், குப்பை அகற்றுபராகவும் பகல் நேரத்தில் பணியாற்றி, இரவில் எழுதும் வழக்கம் கொண்டிருந்த பொலான்யோ, 1990 ஆம் ஆண்டு தன் வாழ்வின் கடைசி பத்தாண்டுகளில், தன் நாற்பதாம் வயதில் கவிதையை விட்டு உரைநடையின் பக்கம் திரும்பினார். காரணம்? நேர்முகங்களில் அவரே ஒத்துக்கொண்டது போல ஒரு ஆண்குழந்தைக்கு தகப்பனான பிறகு தன் குடும்பத்தின் எதிர்காலத்தின் பொறுப்பு தன்னிடம் உள்ளது என்பதை உணர்ந்து, புனைகதை எழுதுவதில்(கவிதையில் கிடைப்பதை விட) கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று அவர் கருதியதுதான். அதேபோல அந்நாளின் பல சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்டு ரொக்கப்பணம் வென்றார். குணப்படுத்த முடியாத கல்லீரல் நோய் இருப்பதை தன் 38 ம் வயதில்(1992) அறிந்த பொலான்யோ இன்னும் உக்கிரமாக எழுத ஆரம்பித்தார். அதன் பிறகு வெளியான சறுக்கு மைதானம் (The Skating Rink, 1993) இன்னொரு பரிசையும் வென்றது. அமெரிக்க கண்டங்களின் நாஜி இலக்கியம், (Nazi Literature in the Americas; 1996), தூர நட்சத்திரம் (Distant Star;1996) ஆகிய நாவல்கள் பிறகு வெளியாகின. சாவேஜ் டிடக்டிவ்ஸ்(1998) நாவல் வழி காஜிகோஸ் பரிசு (100,000) வென்றபின் லத்தீன் அமெரிக்காவின் முன்னணி எழுத்தாளராக உலகமெங்கும் அடையாளம் பெற்றார். 2003 ஆண்டு அவர் இறக்கும் வரை அநேகமாக ஆண்டுக்கு ஒரு புத்தகம் வெளிவந்து கொண்டிருந்தது.

பொலோன்யோவின் படைப்புகளில் வருவது பெரும்பாலும் பத்திரிக்கையாளர்கள், தத்துவவாதிகள், கட்டுரையாளர்கள், நாவலாசிரியர்கள், இவர்களை விடவும் முக்கியமாக, கவிஞர்கள். அவர்களில் பலர் இன்னும் சிலரை விட மேலும் கற்பனையானவர்கள். தங்களின் சுய ஏமாற்றல்கள், அரசியல் இழப்புகள், அற்பமான விஷயம் முதல் பெரும் லட்சியங்கள் வரையிலான காரணங்களை முன்னிட்டு அவர்கள் அடைந்த சிரமங்கள், பிரச்சினைகள், பகைமைகள், அழைக்கழிப்புகள் போராட்டங்கள் ஆகியவற்றால் அல்லல்பட்டு துரத்தப்பட்டு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நகரங்களின் மதுநிலையங்களிலும், படுக்கையறைகளில் நடமாடிச்செல்லும் பாத்திரங்களின் நுட்பமான கேலிச்சித்திரங்களை கொண்டு கட்டி எழுப்பப்பட்டது பொலோன்யோவின் படைப்புலகம்.

வாக்குமூலம் என்று சொல்லத்தக்க சுயகதை கொண்டவை, சிதறல் கொண்டவை, கொடூரமானவை, வலி மிகுந்தவை, ஒளிவு மறைவற்று அப்பட்டமானவை, ஆபாசமானவை, புனைவா சுயசரிதையா என்று உறுதிப்படுத்தி என்றுமே நிச்சயமாக சொல்லிவிடமுடியாதபடிக்கு உண்மையும் புனைவும் இடைவெளியின்றி மறையும் தளத்தில் புகைபோல மங்கி முயங்கி நிற்பவை என பொலோன்யோவின் கவிதைகளை கூறலாம்.

”நான் எழுதுவது எல்லாம் ஏதோ ஒருவகையில் லத்தீன் அமெரிக்க போர்களில் மரணமடைந்த இளைஞர்களுக்கு எழுதும் காதல் கடிதம், அல்லது அவர்கள் விடைபெறும் கடைசிக்கடிதம்” என்று அவரே கூறியது போல, வாழ்க்கையில் தோல்வியடைந்த, அறியப்படாத எழுத்தாளர்களே போலோன்யொவிற்கு விருப்பமானவர்கள். பொலோன்யோவின் நாவலில் வரும் வரியைப்போலவே ”கவிஞன் இறப்பதில்லை. அவன் எல்லாவற்றையும் இழக்கக்கூடும் ஆனால் இறப்பதில்லை.”

One Reply to “உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – ரொபெர்த்தோ பொலான்யோவின் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.