வடிவாய் நின் வலமார்பினில்

எங்கே இனி வாழ்நாளில் ஒரு முறைகூட போகவே கூடாதென்று நினைத்துக் கொண்டிருந்தேனோ  அங்கு பதினோரு மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வரவேண்டிய கட்டாயம் எனக்கு. 

பாலு வீட்டில் குழந்தைக்கு முதல் மொட்டை திருமலையில்தான் அடிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றுவிட்டார்கள்.

இன்னோவா திருப்பதி பஸ் ஸ்டாண்ட் எம்.எஸ். சுப்புலட்சுமி சிலையைத் தாண்டும்போதே கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. 

குழுந்தையை மாரில் போட்டுக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன். 

வேண்டவே வேண்டாம் , வர மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும்போது, 

“மனுசங்க பண்றதுக்கு எடம் என்ன பண்ணும் யாமி ”  என்றார் பாலு சாதாரணமாக. 

அவருக்கு எல்லாம் தெரியும். ஆனால் இத்தனை வருடத்தில் ஒரு முறைகூட இதைப் பற்றி ஜாடையாகக்கூடப் பேசியதில்லை.

இடம் என்பது வெறும் இடமல்ல. காணும்தோறும்  பல நூறு நினைவுகளை மனதுள் கிளர்த்திவிடும் வல்லமை அதற்கு உண்டு.

ஆனால் அதைப் பாலுவிடம் சொல்லவில்லை. அதன் பிறகு மறுப்பேதும் சொல்லாமல் திருப்பதிக்கு கிளம்பிவிட்டேன். 

எத்தனை முறை ஏறிய மலையிது. நடந்தும், ஓடியும், பஸ்ஸிலும் , ஜீப்பிலுமாக. ஆறாவது படிக்கும் போதிலிருந்து, கல்லூரி இறுதியாண்டு படிக்கும்வரை ஒரு பிரம்மோற்சவத்தைக்கூடத் தவறவிட்டதில்லை. பத்து நாள்கள். அப்பா மணவாள மாமுனிகள் சபை என்னும் வைணவ சபையில் உறுப்பினராய் இருந்தார். ஶ்ரீரங்கம், திருப்பதி பெருமாள் கோயில் உற்சவங்களுக்குச் சபை உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தோடு சென்று கைங்கர்யங்கள் செய்வது வழக்கம். 

என்னுடைய அப்பா, திருப்பதி உற்சவத்திற்குப் பொறுப்பு, அதனால் எல்லா வருடமும் அங்கு சென்று விடுவோம். திருப்பதியில் சிருங்கேரி சங்கர கிருபா காட்டேஜ் எனக்கு என் வீடு போல. 

விடுமுறைக்கு வீட்டில் வேறு எங்கும் அழைத்துச் செல்வதில்லை. அதனால் திருப்பதி என்றாலே சிறு வயதில் உற்சாகம் வந்துவிடும். என்னைப் பொருத்தவரை அது விடுமுறை. புதியவர்களை நிறையச் சந்திக்கலாம், நாள் முழுக்க விளையாடலாம். தனியாக நாலு மாட வீதிகளையும் சுற்றி வரலாம்.  

கோலாட்டம், கும்மி, இசை என அற்புதமாகப் பொழுதுபோகும். 

ஒன்பதாவது படிக்கும் போதுதான், கையில் நடிகை ரேவதி படம் போட்ட பொம்மை பத்திரிக்கையுடன் நரேன் அறிமுகமானான்.

“அடையாளம் தெரியலயா, நீ பாவா தா” என்றார் ராஜபாளையம் அத்தை. அந்த வருடம்தான் புதிதாகப் ப்ரம்மோற்சவத்திற்கு வந்திருந்தார்கள். அதற்கு முன் ஒன்றிரண்டு கல்யாணங்களில் அத்தையைப் பார்த்திருக்கிறேன். என் அப்பாவின் பெரியப்பாவின் மகள். மிக அன்பாகப் பேசுவார். 

நான் பத்திரிக்கையையே பார்ப்பதைப் பார்த்துவிட்டு, அதை என்னை நோக்கி நீட்டி, “இந்தா” என்றான் நரேன்.

“தாங்க்ஸ்”  என்று வாங்கி கொண்டேன். 

என் வீட்டில் வாரப் பத்திரிக்கை எல்லாம் அப்பா வாங்கித் தரமாட்டார், தினத்தந்தி மட்டும்தான். 

“கட்டிக்கப் போறவனுக்குத் தாங்க்ஸ் எல்லாம் சொல்ற,” என்றார் அத்தை.

பெரிதாக அவர் ஜோக்கடித்துவிட்டது போல எல்லோரும் சிரித்தனர். 

எனக்குப் புக்கை வாங்கி இருக்கக்கூடாதோ என்று தோன்றியது. 

அம்மா “சாமி புறப்பாடு ஆச்சானு போயி பாத்துட்டு வா” என்றார். 

என் முகம் வாடுவதை அவர் பார்த்திருக்க வேண்டும். நான் எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தேன். என்னிடம் தெலுங்கில் பேசச் சொல்லி என் அம்மாவிடம் அத்தை சொல்வது கேட்டது. 

அனைவரிடமும் சகஜமாய்ப் பேசிச் சிரிப்பவள் அந்த வருடம் அவர்கள் இருந்த நான்கு நாள்களும் அத்தை குடும்பத்தை முற்றிலுமாக தவிர்த்தேன். 

அத்தை இழுத்து வைத்துப் பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு ஓடிவிடுவேன். 

ஊருக்குப் புறப்படும் நாளன்று சொல்லிவிட்டுச் செல்ல ரூமுக்கு அத்தை குடும்பம் வந்திருந்ததது.  அவர்களை பார்த்துச் சிரித்துவிட்டு, 

“காபி வாங்கிட்டு வரேன்” என்று பிளாஸ்கை எடுத்துக் கொண்டு வெளியே போகப் போனவளைக் கையைப் பிடித்துச் சேரில் உட்கார வைத்தார் அத்தை. 

“ஏல பிள்ளா” என்றார் என் முகத்தையே பார்த்தபடி. இரு கைகளையும் என் முகத்தில் ஓட்டிவிட்டு நெட்டி முறித்தார்.

“பிட்டக்கு சுட்டி வையி சரோ” என்றார் அம்மாவைப் பார்த்து

“இங்க்கா பைகா, உன் கிட்ட தமிழ்லயே பேசுறேன் சரியா,” என்றவர் சற்று நிறுத்திவிட்டு,

“இப்படி நீ என்னப் பாத்தவுடனே ஓடுனா மனசுக்குக் கஷ்டமா இருக்கில்ல,” என்றார். அவர் கண்கள் கலங்கி கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது.

“அவ வெளையாடிகிட்டுச் சுத்திகிட்டு இருக்கா. நீயா ஏதாவது நெனச்சுகிட்டு அழுதுகிட்டிருக்க, வேற வேல இல்ல உனக்கு,” என்றார் அப்பா.

“நீ சும்மாரு. உன்னச் சொல்லனும், புள்ளைக்கி பாஷையும் கத்துக் கொடுக்கல, சொந்தத்தையும் சொல்லிக் கொடுக்கல.  வெளையாடப் போற பொண்ணுக்கும், உட்டா போதும்னு ஓடுற பொண்ணுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாதா? யாமினி கண்ணு இனி மேல நான் தமிழ்ல மட்டும் உன்கிட்ட பேசுறேன், சரியா” என்றார்.

எனக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் “ம்” மட்டும் கொட்டினேன்.

கிளம்பிப் போகும்போது, “என் வீட்டு மகாலட்சுமிய ஒழுங்கா பாத்துக்கோ சரோ” என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டுச் சென்றார்.

அவர்கள் சென்றவுடன் அம்மாவிடம் எரிச்சலாக, “எதுக்கு இந்த அத்த எப்பப் பாரு இப்படி பேசிட்டிருக்காங்க?” என்றேன்.

“நீ பொறந்ததுல இருந்தே உங்கத்த இப்படிதான் பேசிட்டு இருக்கு,” என்றார் அம்மா

“அடுத்த வருஷமே நரேனுக்கு உன்னக் கட்டி வெச்சி அனுப்பிரலாம்னு இருக்கோம்,” என்றார் அப்பா சிரிப்பை அடக்கியபடி.

படுக்கையில் இருந்த தலையணையைத் தூக்கி அவர் மேல் வீசினேன். பலமாகச் சிரித்தார். 

“இப்டி சிரிச்சிட்டே இருந்தா ப்ளாஸ்க்கை தூக்கிப் போடுவேன்,” என்றேன் அப்பாவைப் பார்த்து. 

“ஏய்,” என் கையில் இருந்து பிளாஸ்கைப் பிடுங்கினார் அம்மா.

“நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா? பதினாலு வயசாச்சு உங்க பொண்ணுக்கு, இன்னும் கொழந்தயில்ல. யாமி, இதுக்கெல்லாம் எதுக்கு கோவப்பட்ற. உன்ன பிடிச்சதுனாலதான ஆசையா பேசறாங்க,” என்றார் அம்மா.

“எனக்குப் பிடிக்கல” கிட்டத்தட்டக் கத்தினேன்.

“சரி. கத்தாத. இப்படி உக்காரு,” என்று தோளைப் பிடித்துக் கிழக்குப் பார்த்துத் தரையில் உட்கார வைத்தார். ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்து, வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டு கையை என்னைச் சுற்றி வட்டமாக மூன்று முறை சுழற்றினார். 

மூன்று முறை என் முகத்திற்கு நேராக கையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு, என் முன்னால் தரையில் நெட்டி முறித்தார். 

அந்த உப்பை ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டார்.

“ஆரத்தி கரைச்சு ஊத்தல” என்றார் அப்பா, படுக்கையில் இருந்து பார்த்தபடி நக்கலாக. 

“உங்க அக்கா இவள பாத்திட்டு போனாலே காய்ச்சல் வந்து படுத்துடுறா, அப்படி ஒரு கண்ணு” என்றார் அம்மா.

“இன்னமும் எங்க ஊர்ல புது தொழில் ஆரம்பிக்கிறவனெல்லாம் அவ வந்துதான் மொதல் வரவு வெக்கணும்னு காத்திருக்கானுங்க. அவ கண்ண பழிக்கிற நீயீ. அவளுக்கு உண்மையிலேயே இவ மேல கொள்ள பிரியம்டி. பொட்டு மாரி பாத்துக்குவா,” என்றார் அப்பா.

“எல்லாம் காலம் வரும் போது பாத்துக்கலாம். ப்ராப்தம் எப்படி இருக்கோ. நீ போ, காபி எடுத்திட்டு வா,” என்றார் அம்மா. 

அதன் பிறகு கிட்டதட்ட அவர்களை நான் மறந்தே போனேன் அடுத்த வருட பிரம்மோற்சவம் வரை. 

அடுத்த வருடம் அத்தை குடும்பம் இரண்டு நாள்கள்தான் இருந்தார்கள். நரேன் பெட்டி நிறைய புத்தகங்களோடு வந்திருந்தான். பனிரெண்டாம் வகுப்புப் பரீட்சைக்குப் படிக்க.

நானும் பத்தாவது அந்த வருடம் . நான் எதையும் எடுத்து வரவில்லை, என் வீட்டிலும் என்னை ஒன்றும் சொல்வதில்லை. 

அவர்கள் வந்த முதல் நாள் நான் பச்சைப் பழம் இரண்டும், கல்கண்டும், கொளுத்தாத சூடமும் வைத்த வெண்கலத் தட்டை கையில் வைத்துக் கொண்டு உற்சவர் ஆரத்திக்கான வரிசையில் நின்று கொண்டிருந்தேன். மாட வீதிப் படியில் அமர்ந்திருந்த அம்மா அப்பாவின் அருகில் அத்தையின் குடும்பம் வந்து அமர்ந்தது. அத்தை என்னை பார்த்துக் கையசைக்க நானும் கையசைத்தேன். சேர்ந்து கையாட்டிய நரேனை பார்த்து புன்னகைத்தேன். அத்தையும் மாமாவும், அம்மா அப்பாவுடன் பேசிக் கொண்டிருக்க நரேன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் உற்சவர் வருகிறாரா என மாடவீதியில் ஒரு கண்ணும், இன்னும் என்னையே பார்த்து கொண்டிருந்த நரேனின் மேல் ஒரு கண்ணுமாய் இருந்தேன்.  கோலாட்டமும், பஜனைக் குழுக்களும், வேத வரிசைகளும்தான் வந்துகொண்டிருந்தன.  அவன் என்னையே இப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது பிடித்தது போலவும் இருந்தது, பிடிக்காதது போலவும் இருந்தது. 

மலையப்பர் ஶ்ரீதேவி பூதேவியுடன் கற்பக விருட்ச வாகனத்தில் வந்து ஆரத்தி ஏற்க முன்னால் நின்றார். கேட்பதையும் கேட்காததையும் தருபவர். சூடத்தைக் கொளுத்தி வாகனத்தின் மேல் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பட்டாச்சாரியார் கையில் கொடுத்தேன். தட்டை சாமிக்கு காட்டிவிட்டு, இரண்டு சாமந்திப் பூவைத் தட்டில் வைத்து என் கையில் கொடுத்துவிட்டுத் தலையில் சடாரி வைத்தார். 

வாகனத்தின் கீழே நுழைந்து மறுபக்கம் வந்த பிறகுதான் உரைத்தது நான் எதுவுமே வேண்டவில்லை என்பது. பத்தாவது ஸ்கூல் பர்ஸ்ட் வர வேண்டிக் கொள்ள நினைத்திருந்தேன். நகைகளையும், அலங்காரத்தையும் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றுவிட்டேன். சரி கேட்காமலே தருவார் எனச் சமாதானப்படுத்திக் கொண்டு படியேறினேன். கை நீட்டியவர்கெல்லாம் கல்கண்டைக் கொடுத்துக் கொண்டே அம்மாவிடம் போய்த் தட்டைக் கொடுத்தேன். தட்டில் ஒன்றிரண்டு கற்கண்டுகளும், பழமும் மட்டும் இருந்தன. அம்மா சாமந்திப் பூவை எடுத்து என் ஜடையில் வைத்துவிட்டாள். அத்தை என்னை பிடித்து இழுத்துக் கட்டிக்கொண்டார்.

“எப்படி இருக்க?” என்றார். நான் பலமாகத் தலையாட்டினேன்.

“பாரு, மறக்காம அத்த தமிழ்ல பேசுறேன்,” என்றார்.

நான் சிரித்துவிட்டு மெதுவாக அவர் கரங்களில் இருந்து விடுவித்துக் கொண்டு அப்பாவின் அருகில் சென்று நின்றேன். 

நரேன் அவன் கையில் வைத்திருந்த புத்தகத்தை என்னிடம் கொடுத்தான். 

பள பளவென, கனமாக இருந்தது. ஃபிலிம்பேர் என்று ஆங்கிலத்தில் போட்டிருந்தது. வாங்கிக் கொண்டேன்.

“யாமினி எங்களோட உள்ள சாமி பாக்க வரியா?” என்றார், அத்தை.

நான் அம்மாவைப் பார்த்தேன். அவர் சரி என்பது போல் பார்த்தார். நான் தலையாட்டினேன். 

எங்களுடன் அன்று ஊரிலிருந்து வந்திருந்த சில சபை உறுப்பினர்களும் வந்திருந்தனர். 

வராக சாமி கோயிலுக்கு முதலில் போனோம். அங்கும் நரேனின் கண்கள் என் மேலேயே இருந்தன. இப்போது அது எனக்கு  எரிச்சலைக் கொடுத்தது. 

உள்ளே தரிசனத்திற்காகக் காத்திருந்த அறையில் அத்தையும் மாமாவும், சபையில் இருந்த சிலருடன் முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்துவிட்டனர். அங்கு இடமில்லாததால் நானும், நரேனும் பின்னிருக்கையில் உட்கார்ந்தோம். 

உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே,

“எதுக்கு அப்டி உத்து உத்துப் பாத்திட்டே இருக்க?” என்றேன்.

அந்தக் கேள்வியை எதிர்பார்க்காதவன்போல் அவன் கண்கள் விரிந்தன. உடனே சிரித்துவிட்டு,

“இந்த பட்டுப் பாவாடை சட்டையில் ரொம்ப அழகா இருக்க. ரெட் உனக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு. அதான் பாத்திட்டே இருக்கேன். நான் பாக்கறது மட்டும்தான் உனக்கு தெரியுது, அங்க பார், அந்தப் பையன்கூடத்தான் உன்ன பாத்திட்டு இருக்கான்,” என்றான்.

கண்களில் எனக்கு கண்ணீர் கோர்த்துக் கொண்டது. அவன் முன் அழக்கூடாது என அடக்கிக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் ஃபிலிம்பேரைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 

“யாமி, இதுக்கெதுக்கு கண் கலங்கற. அம்மா பாத்தா நான் அவ்ளோதான், ஏய்” என்று கையில் வைத்திருந்த அவன் பாடப் புத்தகத்தால் என் புறங்கையை இடித்தான்.

“என் பேரு யாமினி” என்றேன் எரிச்சலாக.

“சரி ஸாரி,” என்றவன் பாடப் புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்துவிட்டான்.

அதன் பிறகு இருவரும் காத்திருப்பறை கதவு திறந்து வரிசையில் சேரும் வரை பேசிக் கொள்ளவில்லை. 

எங்களுடன் வந்தவர்கள் எங்களுக்கு இருபது முப்பது பேர் முன்னால் சென்று கொண்டிருந்தனர். மாமா எங்களை அழைத்துச் செல்ல பின்னால் வர முயற்சிக்க, கூட்டம் அவரைத் தள்ளிக் கொண்டு போனது. அவர் நரேனிடம் என்னைப் பத்திரமாகக் கூட்டி வரும்படி சைகை காட்டிவிட்டு கூட்டத்தோடு நகர்ந்துவிட்டார். 

நரேன் கண்களில் பயம் தெரிந்தது. இப்படி முண்டியடிக்கும் கூட்டத்தில் அவன் தனியாக மாட்டுவது இதுதான் முதல் முறை எனத் தெரிந்தது. எனக்கு இது நிறைய பழக்கம். பல முறை விளையாட்டுப் போல நான் தனியாகவே தரிசனத்திற்கு வந்துவிட்டுப் போவேன். பத்து நாளும் பொழுது போகவேண்டுமே. 

எனக்குச் சிரிப்பு வந்தது, அவன் முகத்தைப் பார்த்துப் பாவமாகவும் இருந்தது. 

அவன் கையைப் பிடித்தேன். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான், அது நான்தான் என்பது தெரிந்து அவன் முகத்தில் சற்று ஆசுவாசம். 

என் பின்னால் வா என சைகை காட்டிவிட்டு, முன்னால் நகரும் கூட்டத்தின் இடப்புறமாகக் குறுக்காக நகர்ந்தேன். அவனும் நகர்ந்து என்னருகில் வந்தான். கூட்டம் நடுவிலும், வலப்புறமும் முண்டியடிக்க, இடப்புறத்தில் யாரும் தள்ளாமல் நடக்க முடிந்தது. 

“ரைட் சைட் கதவு இது. கதவு தெறந்தப்புறம் எல்லோரும் ரைட்லயும், சென்டர்லயும்தான் ஓடுவாங்க. இப்படி லெப்ட்ல நகந்துட்டா நம்ம நசுங்காமத் தப்பிச்சுக்கலாம்,” என்றேன்.

என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“நீ ரொம்ப படிப்ஸ்னு தெரியும். இவ்ளோ ப்ராக்டிகல் புத்திசாலியா இருப்பனு தெரியாது,” என்றான்.

“அதெல்லாம் இல்ல, ரெண்டு தடவ நசுங்கனா தானா தெரிஞ்சிரும். நான் நல்லா படிப்பேனு யார் சொன்னா?” என்றேன்.

“யாரு சொல்லணும். உன்னப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும்,” என்றுவிட்டு என்னைப் பார்த்தான்.

நான் புருவத்தை அப்படியா என்பது போல் உயர்த்தினேன்.

“உனக்குச் சிகப்பு பிடிக்கும், ஸ்கூல் பிடிக்கும், 103 டிகிரி காய்ச்சல் இருந்தாலும் ஸ்கூலுக்குப் போயிடுவ, சினிமா பாக்க பிடிக்கும், அத்த சன்டே ஆனா  பிரியாணி செஞ்சே ஆகணும், கைல எது கெடச்சாலும் படிப்ப, எப்பவும் முதல் ராங்க்தான் எடுப்ப, உன் க்ளோஸ் ப்ரெண்ட் பேரு ஆர். பிரியதர்ஷினி, உனக்கு க்ளோஸா இருக்கவங்களத் தவிர வேற யாரும் உன்ன யாமினு கூப்டா பிடிக்காது. அப்புறம் உனக்கு என்னப் பத்தி என் பேரத் தவிர ஒண்ணுமே தெரியாது,” என்றான்.

“என் க்ளோஸ் ப்ரெண்ட் பேரெல்லாம் எப்படித் தெரியும்?” என்றேன்.

“எல்லாம் தெரியும்,” என்றான் மர்ம புன்னகையுடன்.

“அத்தைக்கு என்னைப் பிடிக்கும்.  அவங்க கேட்டுச் சொல்லி இருப்பாங்க,” என்றேன்.

“ஆமா உன் அத்தைக்கு உன்னப் பிடிக்கும், ஆனா உன்னப் பத்தி பெருசா ஒண்ணும் தெரியாது. எனக்கு தெரியும்,” என்றான்.

“யாரு சொன்னா என்ன பத்தி?” என்றேன். ‘யாரை’ச் சற்று அழுத்தியே சொன்னேன்.

“யாரெல்லாம்னு கேளு. கோயம்புத்தூர்ல இருந்து வர்ர எல்லா சொந்தக்காரங்களும் நல்லா இருக்கியானுகூட கேக்க மாட்டாங்க, உன் புராணம்தான் பாடுவாங்க. மொதல்ல எரிச்சலா இருக்கும் , இப்பப் பழகிடுச்சு,” என்றான்.

“உன்னப் பத்தியெல்லாம் அப்படி யாருமே எங்கிட்ட சொன்னதே இல்ல,” என்றேன் ஆச்சர்யமாய்.

“உனக்கு அது பிடிக்காதுனு அவங்களுக்குத் தெரியும்,” என்றான்.

“உனக்கு மட்டும் புடிக்குமா? இப்பதான் எரிச்சலா இருக்கும்னு சொன்ன,” என்றேன்.

“சின்ன வயசுல இருந்து சொல்லிட்டேதான் இருக்காங்க. நான் பெருசா ரியாக்ட் பண்றதில்ல, அதுனால பிடிக்குதுனு நெனச்சிட்டு சொல்றாங்க போல,” என்றான்.

ஏதோ ஏமாற்றமாய் இருந்தது. இருவரும் அதன் பிறகு ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. இருந்த இரண்டு நாளும் அவன் கண்கள் என்னையே சுற்றி கொண்டிருந்தன. அவர்கள் கிளம்பும்போது அப்பார்வை எப்போதும் என் மேல் இருந்ததுபோல என் மனம் அதற்குப் பழகிவிட்டிருந்தது. 

அந்த வருடம் நரேனைப் பற்றி என் காதுகளில் அடிக்கடி விழுந்து கொண்டே இருந்தது. அவன் குறைவாக மார்க் வாங்கியது. அவனை சென்னையில் தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பு சேர்த்துவிட்டது. மாமாவிடம் அவன் மார்க் வாங்காததற்காகத் திட்டுவாங்கி அழுதது. என்னைப் பற்றி இங்கிருந்து போவோரிடமெல்லாம் விசாரித்தது. 

அடுத்த வருடம் ப்ரம்மோற்சவத்திற்கு அத்தையும் மாமாவும் நான்கு நாள்கள் வந்திருந்தனர். நரேன் ஒரே நாள்தான் இருந்தான். சென்னையில் இருந்து கருட சேவை அன்று காலையில் வந்தான். 

அதிகாலையில் வயதானவர்கள் சிலரை தரிசனத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு மதியம்தான் நான் காட்டேஜிற்கு வந்தேன்.  அம்மா  நரேன் வந்திருப்பதாகச் சொன்னாள். 

தளிகையறைக்கு சாப்பாடு எடுக்கக் கேரியர் கூடையை எடுத்து கொண்டு சென்றேன். 

கருட சேவை என்பதால் ஒரே கூட்டமாக இருந்தது. பந்தி போடுவதற்கு முன் திருப்பல்லாண்டு சேவிக்க தொடங்கியிருந்தனர்.

நான் கேரியர் கூடையை உள்ளே கொடுத்துவிட்டு அறையின் பெண்கள் பகுதியில் வந்து நின்றேன். அக்கண்கள் என் மேல் வந்து அமர்வது தெரிந்தது. 

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

கோஷ்டியில் அவன் குரல் மட்டும் பிரிந்து எனக்கு ஓங்கி ஒலித்தது, கண்கள் அவன் மேல் போய்ப் பதிந்தது. மேல் சட்டையை மடியில் வைத்து ,வெற்று மார்புடன் கோஷ்டி நடுவில் மூன்றாம் ஆளாய் உட்கார்ந்திருந்தான். கையில் பிரபந்த நோட்டு இருந்தது. அவன் கண்கள் அதில் இல்லை. சுற்றியிருக்கும் யார் பிரக்ஞையும் இல்லாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் தலையை இடமும் வலமும் ஆட்டி, பிரபந்த நோட்டைப் பார்க்கும்படி தலையை அசைத்தேன். எனக்கு மட்டும் ஒரு புன்னகையைக் கொடுத்துவிட்டு நோட்டிலும் ஒரு கண் வைத்தான்.

என் மனதில், ‘வடிவாய் நின் வல மார்பினில்’ எனும் வரி ஓடிக்கொண்டே இருந்தது. சேவை முடியும்வரை அவன் மேலிருந்து என் பார்வையை எடுக்கவில்லை. முடிந்தவுடன் வெளியே எனக் கண் காட்டினான். நான் அவசரமாக உள்ளே சென்று கேரியர் கூடையை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். ஒரு புங்க மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தான். அதுவரை அப்படி எனக்கு இதயம் அடித்துக் கொண்டதில்லை.

சென்று அருகில் நின்றேன். 

ஃபிலிம்பேர் ஒன்றைக் கூடைக்குள் வைத்தான். ஒரு பெரிய சாக்லேட் பாரை என்னை நோக்கி நீட்டினான்.

“இது நீ ஸ்கூல் பர்ஸ்ட் வந்ததுக்கு,” என்றான்.

வாங்கிக் கூடைக்குள் போட்டேன்.

“நைட் கருட சேவ பாத்திட்டு உடனே இறங்குறேன். காலேஜ் லீவ் போட முடியாது,” என்றான்.

“எல்லாரும் எறங்குவாங்க, கூட்டமா இருக்கும்” என்றேன்.

“என்ன பண்றது , போயாகனும்” என்றான்.

என்னையறியாமல் என் கண்கள் கலங்கியது.

“யாமி, பொது எடம்,” என்றான்.

என் கையில் இருந்த கூடையை வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அவனுடன் நடந்தேன்.

“புக்ல நடு பேஜ்ல ஹாஸ்டல் போன் நம்பர் எழுதியிருக்கேன். சாயந்திரம் ஏழு டூ ஒன்பது கூப்பிடலாம்,” என்றான்.

“ம்,” என்றேன்.

“உனக்கு நான் எப்போ பண்றது,” என்றான்.

“செவ்வா, வெள்ளி சாயந்திரம் அம்மா கோயிலுக்கு போவாங்க” என்றேன்.

தொடர்ந்து, “ஹாஸ்டல் கஷ்டமா இருக்கா?” என்றேன்.

“அதெல்லாமில்ல. நல்லாதான் இருக்கு,” என்றான்.

எங்கள் அறை வந்துவிட்டது. 

“உள்ள வா,” என்றேன்.

“காலையிலயே அத்த மாமாவ வந்து பாத்துட்டேன்,” என்றுவிட்டுக்  கூடையை என் கையில் கொடுத்தான்.

இரண்டு கைகளிலும் கூடையைப் பிடித்துக்கொண்டு அவனைப் பார்த்துக்கொண்டு நின்றேன். கண்களில்  கண்ணீர் என்னையறியாமல் வழிந்து கொண்டிருந்தது. 

நரேன் பதட்டமாகச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

“யாமீ, லூசு, கண்ண தொட,” என்றான்.

நான் திரும்பிப் படிக்கட்டேறி கைப்பிடி திண்டில் கூடையை வைத்தேன். துப்பட்டாவைச் சரி செய்வதுபோல் முகத்திற்கருகில் கொண்டுவந்து கண்ணைத் துடைத்துவிட்டுத் துப்பட்டாவைத் தோளில் சரிய விட்டேன். திரும்பி அவனைப் பார்த்துப் புன்னகத்துவிட்டுச் சரியா என்பது போல் தலையை ஆட்டினேன். அவனும் புன்னகைத்துவிட்டு அவன் அறைக்கு நடக்க ஆரம்பித்தான். 

அவன் சென்னை கிளம்பிய பிறகு இருப்புக் கொள்ளாமல் திருமலையில் இருந்தே மூன்று முறை அவன் ஹாஸ்டலுக்கு எஸ் டி டி போட்டுப் பேசிவிட்டேன்.

அதன் பிறகு நான் பனிரெண்டாவது படித்து முடிக்கும்வரை, ஒரு நாள் அவனிடம் பேசாமல் இருந்தாலும் எனக்குப் பைத்தியம் பிடிப்பதுபோல் இருக்கும். புத்தகத்தை மடியில் வைத்து கொண்டு பகல் கனவுகளில் ஆழத் தொடங்கினேன். 

பளஸ் டூ மார்க்கில் அது பிரதிபலித்தது. 

ஸ்கூலின் முதல் ஐந்து மார்க்குகள் வாங்கியவர்கள் லிஸ்டில்கூட நானில்லை. 

வாங்கிய மார்க்கிற்கு பாண்டிச்சேரி மகாத்மா காந்தி  பல் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. 

சென்னைக்கு அருகில் , நரேனுக்கு அருகில் . வெளியூருக்கு அனுப்பவே விருப்பமில்லாத அப்பாவிடம் சண்டை பிடித்துச் சென்று சேர்ந்தேன்.

தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது என்னைப் பார்க்கக் கல்லூரி ஹாஸ்டல் வாசலில் வந்து நின்றுவிடுவான். 

ப்ரம்மோற்சவத்திற்கு ஒரு நாளிற்கு மேல் அவனால் வர முடியாது. அதனால் நிறைய நேரம் கூட இருக்க வேண்டும் என்பதற்காக மதியம் திருப்பதி சென்று சேர்ந்து, அலிப்பிரியில் இருந்து நடந்தே திருமலை செல்வோம். நாங்கள் மேலே ஏறிச் செல்ல ஆகும் ஐந்து மணி நேரமும் சிரிப்பும், விளையாட்டுமாய் இருக்கும். காட்டேஜ் பக்கம் போகவே மனசில்லாமல் திருமலை மாட வீதிகளில் சுற்றிச் சுற்றி வருவோம். 

என் கல்லூரி இறுதியாண்டில், மருத்துவப் பயிற்சிக் காலம் முடித்து நரேன் சென்னையில் இருந்து ராஜபாளையம் சென்று விட்டான். ஒரு சின்ன கிளினிக்கைத் தொடங்கி நடத்தி கொண்டு எம் டி பரீட்சைக்குப் படித்து கொண்டிருந்தான்.

நான் பி. டி. எஸ் முடித்துவிட்டுக் கோவை வந்து சேரும்போது அவனுக்கு எம்.டி. சீட் கிடைக்கவில்லை என்னும் செய்தியும் வந்தது. 

மாமா திட்டியிருக்க வேண்டும்,  ஃபோனில் என் மேல் எரிந்து விழுந்தான். 

“விடு. ப்லாப் , யூ எஸ் எம் எல் ஈ நு ஏதாவது எழுதிக்கலாம்,” என்றேன்வ்

“ஊரவிட்டு எல்லாம் என்ன எங்கயும் அனுப்ப மாட்டாரு இந்தாளு,” என்றான்.

“எத்தன தடவ சொல்றது இப்டி மரியாத இல்லாம பேசாதனு,“ என்றேன்.

“அவர் கூட இருந்து பாத்தாத் தெரியும் உனக்கு,” என்றான்.

“நா வேணா ரெண்டு நாள் அங்க வரட்டுமா?” என்றேன்.

“வேணாம். நீ இருந்தா அப்புறம் உன் முன்னாடி ஒரு அர்ச்சனை ஆராதன நடக்கும்,” என்றான்.

“சரி, நீ இங்க வா. எனக்கும் உன்னப் பாக்கணும் போல இருக்கு” என்றேன்.

“கிளினிக் விட்டுட்டு வர முடியாது யாமி, அதுக்கும் கத்துவாரு,” என்றான்.

அவனுக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு வைத்தேன். 

அம்மா இரவில் சாப்பிடும்போது, “மேல ஏதாவது படிக்க போறியா?” என்றாள்.

“இல்லமா, வேலைக்குதான் போப் போறேன்,” என்றேன்.

“அப்போ மொதல்ல கல்யாணத்த முடிப்போம்” என்றாள்.

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. 

அடுத்த நாளே அம்மாவும் அப்பாவும் ராஜபாளையம் கிளம்பிச் சென்று வந்தனர். மூன்று மாதத்தில் வைத்துக் கொள்ளலாம் என சொல்லியதக்ச் சொன்னார்கள். ஆனால், இரண்டு நாள்களாக அதற்கான மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் இல்லை. 

மூன்றாம் நாள் என்னால் பொறுக்க முடியவில்லை. 

அம்மாவிடம், “என்ன நடந்தது அங்க? போய்ட்டு வந்ததுல இருந்து ரெண்டு பேருக்கும் மூஞ்சே இல்ல,” என்றேன்.

அம்மா அப்போதும் ஒன்றும் சொல்லவில்லை, நின்ற வாக்கில் காய் நறுக்கிக் கொண்டிருந்தாள். 

பிடித்து என் பக்கம் திருப்பி  நிற்க வைத்து, “என்னம்மா?” என்றேன்.

அம்மா, “ஒண்ணுல்லடி, சீக்கிரம் வெச்சுக்கலாம்னுதான் சொன்னாங்க” என்றாள்.

“ஒழுங்கா சொல்றியா இல்ல இப்பவே கடைக்குப் போய் அப்பாகிட்ட அத்தன பேரு முன்னாடி கேக்கட்டுமா?” என்றேன்.

“நிஜமாவே சீக்கிரம் வெச்சுக்கலாம்னுதான் சொன்னாங்க யாமி.” சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தாள் “நரேனுக்கு எம்.டி சீட்டுக்கு பிரைவேட் காலேஜ்ல  30 லட்சம் கேக்குறாங்கலாம். தொழில் எதுவும் இப்ப சரி இல்ல, நீங்க சீட்டு வாங்கிக் குடுத்து கல்யாணம் பண்ணிருங்கனு அண்ணன் சொல்றாரு,” என்றாள்.

அதிர்ச்சியில் அருகில் இருந்த சுவரில் சாய்ந்துவிட்டேன். இரண்டு நாள்களில் நான்கு முறை நரேனிடம் பேசிவிட்டேன். ஒரு முறைகூட இதை அவன் என்னிடம் சொல்லவில்லை.

“ஏய் யாமி, என்னடி, இந்தா குடி,” அம்மா அவசரமாகத் தண்ணீர் எடுத்துக் குடிக்க வைத்தாள்.

“இதுக்குதான் உங்கிட்ட சொல்லல. கவலபடாத அப்பா ஏற்பாடு பண்ணிருவார்,” என்றாள்.

“ஏம்மா வெளையாடிறியா நம்மென்ன மாமா மாதிரி மில்லா வெச்சிருக்கோம், மூணு மாசத்துல முப்பது லட்சம் பொரட்ட, எப்படிமா?” என்றேன்.

“பண்ணிருவார். நீ விடு,” என்றாள்.

“எப்படி?” என் கத்தலில் சமையலறை அதிர்ந்தது.

அம்மா பயந்துவிட்டாள், கண்ணில் நீர் வழிய, “யாமி, அமைதியா இருடி” என்றாள். என் தலையை வருடிவிட்டாள்.

“சொல்லும்மா,” நானும் அழ ஆரம்பித்துவிட்டேன்.

“கடைய விக்கறதுக்கு பாத்துட்டிருக்கார். இன்னிக்கி சேட்டுகாரங்க யாரோ கடையப் பாக்க வராங்க,” என்றாள்.

என் அப்பா பதினெட்டு வயதில் இருந்து தனியாளாக எடுத்து நடத்திய ஜவுளிக் கடை. 

அந்த கடை அவர் உயிர். 

ஆத்திரத்தில் அருகில் இருந்த காய்கறி தட்டை தூக்கி வீசிவிட்டு ஹாலுக்கு வந்தேன்.

கடைக்கு போன் போட்டேன், அப்பா எடுத்தார்

“இன்னும் கால் மணி நேரத்துல வீட்ல இல்லனா என் பொணத்ததான் பாப்ப” என்றுவிட்டு வைத்துவிட்டேன்.

பத்து நிமிடத்தில் அவர் ஸ்கூட்டர் வாசலில் வந்து நின்றது. 

வந்து சோபாவில் என்னருகில் உட்கார்ந்தார்.

அடுத்த நாள் காலை விடியும்வரை அவர் மடியில் படுத்து அழுதுகொண்டே இருந்தேன்.

அப்பாவும், அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் நான் இந்தக் கல்யாணம் வேண்டாம் என உறுதியாக மறுத்துவிட்டேன். 

அதன் பிறகு நான் நரேனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. சுத்தமாக அவன் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்துவிட்டேன். ஒரு பல் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்து போய்வர ஆரம்பித்தேன். 

அடுத்த ஓரிரு மாதங்களில், மாமா மதுரையில் பெரிய மருத்துவமனை வைத்திருக்கும் ஒரு டாக்டரின் பெண்ணை நரேனுக்குப் பேசி முடித்திருக்கிறார் என்னும் செய்தி வந்தது. அந்தப் பெண்ணும் மருத்துவம்தான் படித்திருந்தாள். 

அப்பா எனக்கு உடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். எனக்கு முதலில் கல்யாணம் நடத்திவிட வேண்டும் என்ற வெறியில் இருந்தார். அனைத்தையும் அவர்களிடம் சொல்லி விடுங்கள் என்று சொன்னதைத் தவிர வேறு மறுப்பு எதுவும் நான் சொல்லவில்லை. டாக்டர் மாப்பிள்ளையே வேண்டும் என அப்பா பிடிவாதமாய் இருந்தார். 

முதலில் வந்த வரனே பாலுதான். அதுவே அமைந்துவிட்டது. கல்யாணத்திற்கு அப்பா ராஜபாளையத்துகாரர்கள் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் கல்யாணத்திற்கு இரண்டு நாள்கள் இருக்கும்போது அத்தை அவர்களுடைய வெள்ளை நிற அம்பாசிடரில் வந்து வீட்டு முன் இறங்கினார்.  அப்பா வீட்டில் இல்லை. அம்மா என்ன செய்வது என்று தெரியாமல் உள்ள வாங்க என்பது போல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு வீட்டிற்குள் வந்துவிட்டாள். ட்ரைவர்  பெரிய தட்டு நிறைய மங்கலப் பொருட்களைக் கொண்டுவந்து டீப்பாய் மேல் வைத்தார். பின்னால் அத்தை வந்தார். 

நான் நைட்டியில் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். எதுவும் பேசத் தோன்றாமல் அத்தையை வெறித்துப் பார்த்தேன். 

“உங்கப்பன் குடும்பத்துல ஒரே பொண்ணு நான்தான். என்னோட ஆசீர்வாதம் இல்லாம நீ மறுவீடு போக் கூடாது கண்ணா. போ போயி சேல மாத்தி பொட்டு வெச்சுட்டு வா. சரோ தண்ணி கொஞ்சம் கொண்டா” என்றுவிட்டுத் தட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா போ என்பது போல் சைகை காட்டினார். 

சென்று சேலை மாற்றிப் பொட்டு வைத்து வந்தேன். அதற்குள் அத்தை நடுவீட்டில் மனை வைத்துக், குத்து விளக்கேற்றி தயாராக நின்று கொண்டிருந்தார்.

அம்மா சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு சேலையை வாய் மேல் வைத்து அழுகையை அடக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

அத்தை என்னை அழைத்துச் சென்று மனையில் உட்கார வைத்தார்.

மஞ்சள் குங்குமம் வைத்து விட்டு, தெலுங்கில் ஒரு மங்கலப் பாடலை முணுமுணுத்துக் கொண்டு நெல்லை இரண்டு கைகளிலும் கைப்பிடி பிடித்து என் தலையிலும், தோளிலும், மடியிலும், காலிலும் மூன்று முறை போட்டார். 

கன்னத்தில் மஞ்சள் சந்தனம் பூசிவிட்டு , முன்னால்  புடவையும் நகையும் வைத்திருந்த தட்டை எடுத்து என்னிடம் நீட்டினார். 

நான் வாங்கவில்லை. 

தட்டைத் தரையில் வைத்துவிட்டு, அப்பொருட்களின் மேல் தன் கையை வைத்து அக்கையை என் தலையில் தடவினார். 

அம்மா “கால்ல உழு” என்றது தீனமாக கேட்டது.

நான் அத்தையின் மஞ்சள் தேய்த்துத் தேய்த்து மஞ்சளாகவே மாறிவிட்ட கால்களை தொட்டேன். 

என் தலையைத் தொட்டு, “பாக உண்டால நா தல்லி,” என்று வாய்விட்டுச் சொன்னார்.

அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டே “இப்படி ஆசீர்வாதம் பண்ணி அனுப்பறதுக்கு தா சின்ன வயசுல இருந்து அவ மனசுல ஆசைய வளத்து உட்டிங்களா வெதன?” என்றார்.

அத்தை அம்மாவின் அருகில் சென்று உட்கார்ந்து அம்மாவை அவர் தோளில் சாய்த்துக் கொண்டார். 

நான் சிலை போல் தரையைப் பார்த்துகொண்டு உட்கார்ந்திருந்தேன்.

“நேரம் நல்லா இல்லனா கண்ணு முன்னாடி இருக்க மகாலட்சுமிய இப்படி எட்டி உதைக்கத்தான் தோணும் சரோ. எம்புள்ளக்கி கொடுத்து வக்கல. அவன் விதி. மகாலட்சுமி மார்ல இல்லனா பெருமாளே வெறும் ஆள்தான். என் மருமவ மகாலட்சுமி சரோ.  நீ ஏன் அழுவற, யாமினி யார கட்னாலும் அவள அவன் நெஞ்சுல வெச்சுத் தாங்குவான்,” என்றார். 

சற்று நேரம் இருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார். எதற்கெடுத்தாலும் அழும் அத்தை அன்று அழவேயில்லை. 

கல்யாணம் முடிந்த கையோடு பாலு, ப்லாப் எழுத லண்டன் போய்விட்டார். ஆறு மாதம் கழித்து அவர் ஒரு மருத்துவமனையில் வேலை வாங்கியவுடன் நான் லண்டன் போய்ச் சேர்ந்தேன். 

புதுச் சூழலும், பாலுவின் கனிவும், பொறுமையும், காதலும் என்னை சிறிது சிறிதாக மீட்டெடுத்தது. இதையெல்லாம் ஐந்து வருடங்களாகச் சுத்தமாக மறந்திருந்தேன். 

கார் ராம் பஹீஜா கெஸ்ட் ஹவுஸ் வாசலில் நின்றது.

பாலு, “மொதல்ல மொட்டயடிச்சிருவோம். அப்புறம் ரூமுக்குப் போய்க்கலாம்,” என்றார்.

மாமா, “சரி” என்றார்.

பின்னால் இன்னொரு இன்னோவாவில் பாலுவின் நெருங்கிய சொந்தங்களுடன் என் அப்பாவும் அம்மாவும் வந்திறங்கினர்.

அதில் அவர் தாய் மாமன் மகள் குடும்பமும் அடக்கம். அவர் மகளுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான். எனக்குத் திருமணமானவுடன் பிறந்தவன். 

பாலுவின் தாய்மாமா ஊரில் இருந்து வந்தவுடன் குழந்தையைத் தூக்கியும் தூக்காமல், “சுந்தரு பார்ரா நீ கட்டிக்க போற பொண்ணு” என்றவரை இடம், சூழல், வயது எதுவும் பார்க்காமல் கண்டபடி கத்திவிட்டேன்.

அம்மா, “யாமி” என்று ஆரம்பித்தாள். அவளையும் திட்டிவிட்டேன். 

அதற்குக் கோபித்து கொண்டு அவர் இன்று வரவில்லை, அவர் மகள் குடும்பம் மட்டும் வந்திருக்கிறது. 

என் நாக்கிற்குப் பயந்து அதன் பிறகு யாரும் அப்படிப் பேசவில்லை.

“குழந்தைய மொட்ட போடும்போது உங்க மடிலதான் உக்கார வெக்கணும்” என்றேன் பாலுவிடம், விடுதிக்குக் கீழே இருந்த கல்யாணக் கட்டத்திற்குப் படியிறங்கிக் கொண்டிருக்கும்போது. 

என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு , குழந்தையை கையில் வாங்கிக் கொண்டார்.

குழந்தை அழுவாள் எனக் காரணம் சொல்லி அவரே மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

யாருக்கும் இது பிடிக்கவில்லை என்பது அமைதியாக நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தாலே தெரிந்தது. என் மாமியாருக்கும்கூட வருத்தம் என்பது அவர் முகத்தில் தெரிந்தது. மொட்டையடித்தவுடன் அழும் குழந்தையை வாங்கிக்கொண்டு நான் அறைக்க்ச் சென்றுவிட்டேன்.

கல்யாண உற்சவம் முடித்து  தரிசனம் செய்துவிட்டு வரும்வரை நான் தன்னிலையிலேயே இல்லை. பாலுவிடம்கூட ஒன்றுமே பேசவில்லை. அறைக்கு வந்தவுடன் எதுவும் சாப்பிடாமல் தலைவலி மாத்திரை போட்டுக்கொண்டு படுத்துத் தூங்கிவிட்டேன். நான் எழுந்து கொள்ளும்போது நன்றாக இருட்டியிருந்தது. அருகில் பாலுவும் குழந்தையும் இல்லை. பசித்தது. 

எழுந்து முகம் கழுவி , உடை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தேன். பாலு எதிரில் இருந்த பூங்கா பெஞ்சில் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி மற்றவர்கள் நின்றுகொண்டும், உட்கார்ந்துகொண்டும் அவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். 

சற்றுத் தள்ளிப் புல்வெளியில் சுந்தர் குழந்தையை மடியில் வைத்து உட்கார்ந்திருந்தான். குழந்தை விழாமல் பத்திரமாகப் பிடிக்க வேண்டும் எனத் தன் கைகளை ஜாக்கிரதையாக அவளைச் சுற்றிக் கோர்த்துக் கொண்டிருந்தான். என் மாமியார் ஒரு பெரிய வண்ணப் பந்தை அவர்களை நோக்கி உருட்டிக் கொண்டிருந்தார். குழந்தை அதைக் கையில் பிடித்து வீசிவிட்டு உற்சாகமாகச் சிரித்தாள்.

நான் பூங்காவிற்குள் சென்று என் மாமியாரின் அருகில் நின்றேன். பந்து என் காலில் வந்து மோதியது. அதை கையில் எடுத்துக்கொண்டு அவர் அருகில் முட்டிக்காலிட்டு அமர்ந்தேன். 

“இப்ப எப்டி இருக்குடா?” என்றார் பாலுவின் அம்மா.

“நல்லாருக்கு அத்தம்மா,” என்றுவிட்டுச் சற்று தயங்கி “கோவமா?” என்றேன்.

எதுக்கு என்பது போல் பார்த்தார்.

“காலைல நான்தான் அவர மடில வெச்சுக்கச் சொன்னேன்,” என்றேன்.

என் தோளில் மெதுவாகத் தட்டிவிட்டுப் புன்னகைத்தார்.

“இதுக்கெதுக்கு கோவம். உனக்கு பிடிக்கலனா அத எதுக்குச் செய்றது. இதெல்லாம் நம்ம இஷ்டத்துக்குப் பண்ணிக்கறதுதான்” என்றார்.

அவர் கையை என் கைக்குள் எடுத்துகொண்டு அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

அவரும் புன்னகைத்துவிட்டு, “பாரு, அத்தன பேரு சுத்தி நின்னு பேசிகிட்டு இருக்காங்க. எப்படா நீ வருவனு உன் புருஷன் உன்னயே பாத்திட்டிருக்கான் பாரு. போ, போயி பாரு,” என்றார்.

நான் வாய்விட்டுச் சிரித்தேன். நான் சிரிப்பதைப் பார்த்துவிட்டுச் சுந்தர் என்னைப் பார்த்துச் சிரித்தான். 

கையில் இருந்த பந்தைச் சுந்தரை நோக்கி உருட்டினேன். 

“வருது வருது, பிடி பிடி,” என்றான்.

குழந்தை பந்தைப் பிடித்து எறிந்தாள். 

நான் எழுந்து அருகில் சென்று அவன் தலையைச் சிலுப்பிவிட்டு “பாப்பாவ ரொம்ப அழுத்திப் பிடிச்சா அப்புறம் உன் மேலயே கக்கிருவா,” என்றேன்.

“நல்ல பாப்பா , அப்படியெல்லாம் பண்ண மாட்டா த்த” என்றான்.

நான் சிரித்து அவன் கன்னத்தை கிள்ளிவிட்டு, பாலுவை பார்த்தேன்.

என்னைத்தான் கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தார். ஏனோ ராஜபாளையம் அத்தை கடைசியாய் என்னைப் பார்த்தபோது சொன்னது ஞாபகம் வந்தது.

“வடிவாய் நின் வலமார்பினில்” எனும் வரி மனதுள் ஓடிக் கொண்டிருந்தது. அவரை நோக்கி நடந்தேன்.  

6 Replies to “வடிவாய் நின் வலமார்பினில்”

  1. கதை யாமினியின் பார்வையில் ஓடுகிறது.சம்பவங்கள் கோர்வையாய் உரையாடல்கள் நேர்த்தியாய் உள்ளன. சிறுவயதில் அதுபோன்று முறை வைத்துப் பேசும் பழக்கம் இப்பொழுது சற்றுக் குறைந்துள்ளது. அது கூடாது என்பதே கதையின் மையம். ஏனெனில் அது போன்று பேசினால் சிறுவயது முதலே அவர்கள் கனவு காணத்தொடங்கி விடுகிறார்கள். சொந்தத்தைப் பெரிதாக எண்ணாமல் பணத்தைப் பெரிதாக நினைத்துவிடும்போது கனவு முறிகிறது. யாமினி போன்று ஒரு சிலரே மனத்தை மடை மாற்றிக் கொள்கிறார்கள்.காரணம் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. கிடைக்காத வேறு சிலர் வீழ்கிறார்கள்.உள்ள உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதை

    1. உறவு, பிணைப்பு, காதல், இவை எல்லாம், காசிம் துவண்டு போவது போல், மிகவும் இயல்பாய் இல்லா விடினும், அகிலனின் சினேகிதி போல் கதையின் நாயகி நகர்த்தி செல்லும் சம்பவங்கள் மிகவும் நேர்த்தியாக பின்னப்பட்பிருந்தது, கதை சொன்ன விதம் உணர்வு பூர்வமாக இருந்தாலும, என்னுள் ஒரு முழுமையை உணர இயலவில்லை, முடிவில் நரேனின் மீதான காதலை கதையின் நாயகி தன் மனதிலேயே தக்கவைத்யுள்ளால் என்பதை அவளின் மன உணர்வுப்போரட்டத்தை வெளிப்டுத்திய விதம் ஏனோ பொருந்தாதது போல இயல்பாய் இல்லை.

  2. அழகான இயல்பான கதை.. ஆனால் முடிவுதான் இயல்பை மீறியிருந்தது. கதை அழகாக முடிநதபின் சமூகத்துக்கு கருத்து சொல்வதற்காக சற்றே வளர்கககப்பட்டதுபோல தோன்றியது

  3. மிகவும் அழகாக எழுதப்பட்ட கதை ; நல்ல நடை, உணர்ச்சிபூர்வ மானது . போகும் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு செல்லும்போதும், ஏற்படும் தளர்ச்சிகளும் பாடங்களும்  நல்ல  உணர்வுள்ளவர்கள் சேர்க்கையும் சேர்ந்து செல்வது தெரிகிறது. மிக்க நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.