மருவக் காதல் கொண்டேன்

‘அம்மாவுக்கு என்ன ஆச்சு, மாமா’ – கதவைத் திறந்தபடி உள்ளே வந்தான் கணேஷ். 

35 வயது ஐ.டி ஊழியன். நீங்களே கற்பனை செய்திருப்பீர்கள், மேலும் வர்ணனை தேவையில்லை.

‘இன்னிக்கு காலைல ஃபோன் பண்ணி என்னை ஸைக்கியாட்ரிஸ்ட்  கிட்ட கூட்டிட்டு போக முடியுமான்னு கேட்டா’

‘நேத்து ராத்திரி கூட பேசினேனே. எதுவுமே சொல்லலை’

‘என்கிட்டயும் எதுவும் சொல்லலை. கார்ல வரும்போது கூட எதுவும் பேசலை’

‘உள்ள போய் எவ்வளவு நேரம் ஆகுது’

‘அஞ்சு நிமிஷம்’

‘அப்பா இறந்தபோதே சொன்னேன், உன்னால இங்கே தனியா இருக்க முடியாது, என் கூட வந்துடுன்னு, கேட்டாத்தானே’

‘சரி விடு, அவ வெளிய வரட்டும்’

கணேஷ் தவிப்புடன் கிளினிக் அறையின் மூடிய கதவுகளைப் பார்த்தான். வெள்ளி நிறத்தில் “வானதி, MBBS, MD, மனோதத்துவ நிபுணர்” என்ற பெயர் எளிமையாக மின்னியது.     

வானதிக்கு எதிரில் ரிக்ளைனர் நாற்காலியில் அமர்ந்திருந்தார் சுதா. வயது 70’ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. முகம் 60 தான் சொல்லும். தென்னிந்தியப் பெண்களுக்கே  உண்டான சர்வலட்சணங்களும் பொருந்திய கலையான முகம். 

‘ரொம்ப குளிருது. ஏசி கொஞ்சம் குறையேன்… இந்த சேர்ல இப்படி படுத்துட்டு இருக்கறது கொஞ்சம் சங்கோஜமா வேற இருக்கு, சாதாரணமா உட்காரவா?’

சுதா சொந்த வீட்டைப் போலவே க்ளினிக்கையும் பாவித்தது வானதிக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. அவளும் அதை ரசித்தாள்.

‘சொல்லுங்கம்மா. என்ன ஆச்சு உங்களுக்கு’

‘நேத்து ராத்திரி சாப்பிட்டு உக்காந்துட்டு இருந்தேன், அவர் குரல் கேட்டுச்சு, என்னைக் கூப்பிடறாரு, வீடு முழுக்க தேடிப்பார்த்தேன்’

‘அப்புறம்’

‘அவரை காணல. திரும்ப வந்து உட்காந்துட்டேன், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மறுபடியும் அவர் குரல். மனசு பட படனு அடிச்சுக்கிச்சு, கொஞ்ச நேரத்துல அழ ஆரம்பிச்சுட்டேன். வீட்ட விட்டு வெளியே எங்கயோ ஓடிப் போயிடணும்னு தோனுச்சு. கஷ்டப்பட்டு கதவைத் திறக்காம என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டேன்’

சுதா சொல்லச்சொல்ல வானதி குறிப்பெடுத்துக்கொண்டே பேசினாள்.  

‘வேற என்ன ஆச்சு’

‘தனிமை புதுசு… ரொம்ப அழுதேன், அப்படியே தூங்கிட்டேன். காலையில எழுந்த உடனே எங்க அண்ணனுக்கு ஃபோன் செய்து, இப்போ இங்க வந்துட்டேன்’.

‘உங்க கணவர் பேரு?’

‘ராமநாதன்’

‘என்ன ஆச்சு அவருக்கு’

‘ஹார்ட் அட்டாக். இறந்து ரெண்டு மாசம் ஆச்சு’

எழுதிக்கொண்டிருந்த வானதியின் பேனாவின் முனை ஒரு கணம் நின்றது. இனி குறிப்புகள் தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்தவள் போல நிமிர்ந்து உட்கார்ந்து நேராக சுதாவின் கண்களை நோக்கினாள்.

‘உங்களுக்குப் பசங்க இருக்காங்களா’

‘இரண்டு பசங்க. பெரியவன் அமெரிக்கா. சின்னவன் தாம்பரம். நான் மாம்பலம். சின்னவன் கூப்பிட்டான், நான் தான் போகல’

‘ஏன்’

‘இந்த வீடு என்னை விடலை’

‘புரியலை’

‘அவர் கூட இருக்கற கதகதப்பு இந்த வீட்டுல மட்டும்தானே கிடைக்கும்’

மெல்லிய புன்முறுவலுடன் வானதி ஏதோ சொல்ல எத்தனிக்க, சுதா, ‘இது ஏதோ மரண வாக்குமூலம் கொடுக்கற மாதிரி இருக்கு’

வாய்விட்டுச் சிரித்தாள் வானதி. 

‘எனக்கு உடம்புக்கு எதுவுமில்லை. மனசுவிட்டுப் பேசினாப் போதும்’ 

‘பேசிட்டா போச்சு’ என்றவள் டாக்டர் என்ற தோரணையில் இருந்து விலகி சாவகாசமானாள். 

மஞ்சள் நிற ஷிஃபான் சுடிதாரில் இளமையாக இருந்த வானதியை இப்போதுதான் முழுதாகப் பார்த்தார் சுதா.   

‘உனக்கு என்னம்மா வயசு ஆகுது’

வானதி சற்றுத் தயங்கினாள்.

‘பொண்ணுகிட்ட வயசு கேட்கக்கூடாதுதான், ஆனா அதை இன்னொரு பொண்ணு கேட்டா தப்பில்லை’

சொன்னாள்.

‘இன்னொரு பையன் இருந்திருந்தால் உன்னையே கேட்டிருப்பேன். உன் வயசுல நானும் உன்னை மாதிரியே ரொம்ப அழகா இருப்பேன்’

வானதி கொஞ்சம் வெட்கப்பட்டாள்.  

‘இப்பவுமே நீங்க அழகு தான்’ என்றவள் தொடர்ந்து, ‘உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?’

‘பி.எஸ்.சி முடிச்ச உடனே’

‘அவரைப் பார்த்த உடனே புடிச்சுதா?’

‘அவருக்கு என்ன… ராஜ்கபூர் மாதிரி இருப்பார்’

‘கண்டதும் காதலா’

வெட்கத்துடன் ‘இல்ல இல்ல… ஆரம்பத்துல ரொம்ப பயமா இருந்தது, இப்போ மாதிரி பார்த்துப் பேசிப் பழக முடியாதுல, என் கல்யாணமே எனக்கு வெறும் தகவல்தான்’

‘அவரு எப்படி’

‘ரொம்ப சுமாரான கணவன்… ஆனா சூப்பரான அப்பா’

‘சுமாரான கணவனா?’

‘ஆமாம். பேச்சு இரத்தினச் சுருக்கமா இருக்கும். கல்யாணம் ஆன புதுசுல வித்தியாசமா இருந்தது. போகப் போகப் பழகிடுச்சு.  அக்கறை, பாசம் எல்லாம் உண்டு, ஆனா வெளிய காட்டத் தெரியாது. கேட்காமயே எல்லாத்தையும் செய்வார். ஆனா அதுல ஏதோ ஒன்னு குறையும். அவர் அந்த காலத்து என்ஜினீயர், தவிர நிறைய புஸ்தகம் படிப்பார்… அறிவுஜீவி’

‘அவரை விட்டு நீங்க இருந்ததே இல்லையா?’

‘இல்லை, அவருக்கு வெளிச் சாப்பாடு ஒத்துக்காது. மே மாசம் கூட பசங்கள மட்டும்தான் அம்மா வீட்டுக்கு அனுப்புவேன். ஒட்டுன்னி மாதிரி கூடவே தான் இருப்பேன். இவருக்கு அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் ஆகும். இவர் புண்ணியத்துல ஒரு நாலஞ்சு ஊர் பார்க்க முடிந்தது, ரெண்டு மூனு பாஷை கத்துக்கிட்டேன்’

வானதியின் கைப்பேசி ஒலித்து உரையாடலுக்கு இரண்டு நிமிட இடைவேளை கொடுத்தது. 

‘ஸாரி’

‘பரவாயில்லைம்மா’

‘அவர் உங்களுக்கு ஏதாவது பரிசு கொடுத்துருக்காரா’

சுதா சிரித்தார். 

‘பரிசா? கல்யாண நாள், தீபாவளின்னா புடவை வாங்கிக் கொடுப்பார். அவ்வளவுதான். இரண்டாவது பையன் கணேஷ் ஹிந்திப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். மருமககிட்ட பேசுறதுக்காக ஹிந்தி கிளாஸ் போயிட்டு இருந்தேன். ஒரு நாள் கிளாஸுக்குக் கிளம்பிட்டு இருந்தபோது என்னைக் கூப்பிட்டு ஒரு புஸ்தகம் கொடுத்தார். ஹிந்தி டிக்ஷனரி.   இன்னைக்கு உனக்குப் பிறந்த நாள்னு சொன்னார்’

‘ரொம்ப அன்னியோன்யமான தம்பதி நீங்க’

‘இல்லையா பின்னே… 50 வருஷம் குடும்பம் நடத்திருக்கேன். அவருக்கு முதல் முறை பைபாஸ் பண்ணப்ப மனசு அடிச்சுக்கிச்சு. நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சு அவரைப் பார்த்தபோது என் கையப்புடிச்சு சொன்னார் ‘அவ்வளவு சீக்கிரம் உன்ன விட்டுப் போயிடமாட்டேன்’ன்னு’ 

‘அவருக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் போல’

நினைவுகளில் மூழ்கி மெலிதான ஒரு வலியுடன் சிரித்தார் சுதா.

“அவரை சுத்திதானே என் வாழ்க்கையே. இந்த தடவை அவர் ஆஸ்பத்திரி போகும் போது எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருந்தது. அவருக்கும் எனக்குமான பந்தம் அவ்வளவுதான்னு தோனுச்சு. அங்க அவர் ரொம்ப கஷ்டப்பட்டார், என்னால பார்க்கவே முடியல. ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு என்கிட்ட மன்னிப்பு கேட்டார். உன்னை இன்னும் நல்லா பாத்துகிட்டு இருந்திருக்கணுமோன்னு சொன்னார். இன்னும் என்னென்னவோ பேசினார். நான் அழ ஆரம்பிச்சுட்டேன். எனக்கு தைரியம் சொன்னார். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம், புது ஜோடி மாதிரி. வாழ்க்கை ரீவைண்ட் ஆச்சு. நேரம் ஆச்சு தூங்குங்கன்னு சொல்லிட்டு கிளம்பும் போது என் கையப் புடிச்சு சொன்னார், ‘வாழ்க்கை மேல இருக்கற சுவாரஸ்யம் போயிடுச்சு சுதா’

சுதாவின் குரல் உடைந்து தடுமாறியது.  

‘நீங்க அவரை ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு தெரியுது’ – ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் கனத்த இதயத்துடன் சொன்னாள் வானதி. 

‘உலகத்துல காதலை விட மோசமானது என்ன தெரியுமா?’

தோளைக் குலுக்கியபடி வானதி உதட்டை பிதுக்கினாள்.

‘ஒரு விஷயத்துக்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கிறது. கோவமோ, காதலோ, வெளிப்படுத்த ஒருத்தர் நம்ம கூடவே இருப்பார். அவர் கேட்கறாரோ இல்லையோ, பேசித் தீத்திருவேன். ஆனா இப்போ அவர் இல்லைங்கறத பழக்கப்படுத்திக்க முடியல’

வானதிக்கு இந்த உரையாடல் ஒருவிதமான நெகிழ்ச்சியைக் கொடுத்தது. சுதா இனி தன் மனதில் என்றுமே நீங்காத பாரத்தை சுமக்கப் போகிறாள் என்பது மட்டும் புரிந்தது. 

கண்களின் ஓரம் லேசாக எட்டிப்பார்த்த நீரைத் துடைத்துவிட்டுப் பேனாவை எடுத்து ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதினாள்.

‘தூக்க மாத்திரை தானே, பரவால்ல கொடு’

வானதி சிரித்தாள்.

‘என் வயசுக்கு இந்த மாதிரி மனசு விட்டுப் பேசினாலே போதும். சரிம்மா, நான் வரேன். நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வா’, துண்டு சீட்டில் அட்ரஸ் எழுதிக் கொடுத்துவிட்டு எழுந்தார் சுதா.  

‘கண்டிப்பாம்மா’, அட்ரஸ் எழுதியச் சீட்டை பத்திரப்படுத்திக் கொண்டாள் வானதி.

சுதா அறையை விட்டு வெளியே வந்தார். வெளியே கணேஷும், மாமாவும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

சுதாவைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்து ஓடி வந்தான் கணேஷ். 

‘அம்மா… என்ன ஆச்சு உனக்கு’ என ஆரம்பித்து பேச்சைத் தொடங்கிய கணம் வானதியும் வெளியே வந்தாள். கணேஷின் கவனம் வானதியின் பக்கம் திரும்பியது. அதே பரபரப்புடன் அவளை அணுகினான். 

‘டாக்டர்! அம்மா உடம்புக்கு என்ன பிரச்சினை?’

‘உடம்புக்கு ஒன்னும் இல்லை. மனசுக்குத்தான்… காதல்’ என்றாள் வானதி, சிரித்தபடியே. ‘ஒரு கணவன் கிட்ட இருந்து மனைவிக்கு காதல் வாழ்க்கையில கிடைக்கிற எல்லாமே அவங்களுக்கும் கிடைச்சிருக்கு, காதலைத் தவிர’

புரியாமல் கணேஷ் வானதியைப் பார்க்க, வானதியின் கண்கள் சுதாவின் கையிலிருந்த ஹிந்தி டிக்ஷனரியின் மேல் இருந்தன.  

3 Replies to “மருவக் காதல் கொண்டேன்”

    1. இடங்கள், மனிதர்கள், நிகழ்வுகள் மனதில் ஏற்படுத்தும் அழுத்தமான அடையாளங்கள் எப்படி ரணமாகி , பிரம்மையில் வீழ்த்துகிறது, தற்காலச்சூழல் குடும்பம் என்ற உருப்பினர்களை எவ்வாறு பிரித்தாளுகிறது, இதற்கான தீர்வுகள் என்ன , என்று மிக ரத்தினச்சுறுக்கமாக வெளிப்படுத்தி உள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.