சுடோகுயி

[1]

”ஆர் ஓ எம்”

”ஆர் ஓ எம்”

மக்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.

ஆங்காங்கே நின்றிருந்த ரோபோக்கள் குரல் எழுப்பின. அரங்கை சுற்றிலும் காவலுக்கு நின்றிருந்த வலுகூடிய, ரோபோக்களை விட பெரிய ஸ்டாமினாக்கள் தங்கள் கால்களை தரையில் தட்டி தாளத்துடன் ”ஆர் ஓ எம்” என அடிக்குரலில் சொல்ல ஆரம்பித்தன. அரங்கம் ஒலியால் நிரம்பி அதிர்ந்தது.

அமைதி என்று சைகை தருவது போல கையை உயர்த்திய பிரதமர் ஆரவாரம் குறைந்ததும் உரையை தொடர்ந்தார்.

“நாம் மார்ஸ் கிரகத்துக்கு குடிபெயர்ந்து முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.. நம் தேசம் குடியரசாகி ரிபப்ளிக் ஆப் மார்ஸ் (ROM) என பெயர் மாற்றம் பெற்று இன்றோடு நூற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு தேசமாக தன்னிறைவு அடைந்து எழுபத்து நான்கு ஆண்டுகள்”

”நம் விண்கலங்கள் எண்பது நாட்களுக்குள் பூமிக்கு சென்று திரும்புகின்றன. 2.5 லட்சம் ஒளிஆண்டுகள் தூரத்தில் உள்ள ஆண்ட்ரமெடா கேலக்ஸிக்கு சென்று திரும்ப தேவையான வெம்துளைகள் நுணுக்கமாக ஆராயும் பணி முழுமையடைந்து விட்டது. அவற்றின் ஊடாக செல்வதற்கான விண்கலத்தின் திட்ட வரைவு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கட்டுமானம் அடுத்தமாதம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது”

அரங்கம் கைதட்டலால் நிரம்பியது.

”நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் சுமார் பத்து ஆண்டுகளுக்கு தேவையான ஆக்ஸிஜனுன், நீரும் உணவும் கைவசம் உள்ளன”

”கடைசியாக சொன்னது பொய், பொய். சுத்தமான பொய்!”

குரல் எழுந்த திசையில் பிரதமரும் அவரின் மெய்க்காப்பளர்களும் திரும்பினர்.

அதை கவனித்து காவலுக்காக நின்றிருந்த ரோபோக்களும் ஸ்டாமினாக்களும் அதே திசையில் திரும்பின.

“சர்வாதிகாரத்தை கைவிடு, இளைஞர்களுக்கு செவிகொடு”

அந்த இளைஞன் நுரையீரல் அதிர ஆவேசமான குரலில் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தான்.

மேலும் சிலர் எழுந்து கைகளை உயர்த்தியபடி குரல் எழுப்பினர்.

மெய்க்காப்பாளர் ஒருவர் அருகில் நின்றிருந்த ரோபோவை பார்த்தார். சமிக்ஞையை புரிந்துகொண்ட ரோபோ முழங்கைக்குமேல் கையை உயர்த்தி முன்னோக்கி வெட்டி ’செல்க’ என ஆணையிடவும் ஸ்டாமினாக்கள் கூச்சலிட்டவர்களை நெருங்கிச்சென்று தடுத்து அவர்களை அப்புறப்படுத்த ஆரம்பித்திருந்தன.

பிரதமருக்கு நெற்றியில் மெலிதாக வியர்த்துவிட்டிருந்தது.

‘நண்பர்களே, குடியரசு தின வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக்கொண்டு, மேலும் தாமதிக்காமல் இந்த வருட குடியரசு தின விளையாட்டுப்போட்டிகளை ஆரம்பித்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்”

மீண்டும் கைதட்டல்கள், ஆரவாரங்கள். கைக்கொடியின் அசைவுகள்.

பிரதமர் மேடையிலிருந்து கீழிறங்கியதும் கீழே காத்துக்கொண்டிருந்த செயலர் பதட்டமான குரலில் பேசினார்,

“மிகவும் அவசரமான செய்தி! இன்று மூன்றாவது சம்பவம். மேலும் நூற்றி இருபது பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்”

பிரதமரின் முகம் வெளுத்து விட்டது. முகத்தை வேகமாக துடைத்துக்கொண்டார்.

”சுகாதாரத்துறை அமைச்சருக்கு உடனே செய்தி அனுப்பு. காலையில் அறிக்கையோடு வரச்சொல்”

சொல்லிவிட்டு முடிந்த மட்டும் வேகமாக நடந்தார்.

அரங்கின் சுற்றுச்சுவரை தாண்டி பிரதமர் வாகனத்தை நெருங்கியதும் சாலையில் மக்கள் கூட்டம்.. கடுமையான கூச்சல்.

”வீ வாண்ட் சுடோகுயி!

வாசகங்கள் ஒளிரும் மின்பலகைகளை உயர்த்தி ஆட்டியபடி பலர் உரக்க கத்திக்கொண்டிருந்தார்கள்.

பிரதமரை நோக்கி ஓடிவர முயன்றவர்களை ரோபோக்களின் சைகையை கவனித்து ஸ்டாமினாக்கள் தடுத்து நிறுத்தின.

பிரதமர் வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் வாகனம் உறுமலுடன் மேலே உயர்ந்தது.

மார்பு பட்டையை சரிப்படுத்தியபடி காதில் தொலைபேசியின் குமிழை தொட்டு ”சொல்லு கோம்ஸ்” என்றார்.

சில வினாடிகள் அமைதி.

”குமாரு” உரக்க அலறினார். கேட்கக் கூடாத துர்ச்செய்தியை கேட்டவரைப்போல அவர் முகம் மாறிவிட்டிருந்தது.

படபடப்பான குரலில், ”நேராக வீட்டுக்கு போ. இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விடு”

ஒரே குரலில் ”ஓ.கே சார்” என்றார்கள், வாகன ஓட்டியும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த செயலரும்.

வாகனம் உறுமி வேகமெடுத்து உயரச்சென்று மேகங்களுக்குள் மறைந்தது.

[2]

”குறைந்த அவகாசத்தில் அவசரக்கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றி. நேற்று நடந்த துயரச் சம்பவத்தை செய்தியில் பார்த்திருப்பீர்கள். கடந்த இரண்டு மாதத்தில் இப்படி நடப்பது இது நான்காவது முறை. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது பெரும் துயரமளிக்கிறது. நேற்று மொத்தம் நூற்றி இருபது பேர். முப்பத்திஆறு பேர் மூளைச்சாவு காரணமாக மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டார்கள். நாற்பத்து எட்டுபேர் இன்னும் அபாய நிலையில்.”

இரவு முழுக்க உறங்காதவரைப்போன்ற தோற்றத்தில் பேசிக்கொண்டிருந்தார் பிரதமர்.

”இது பற்றி மேலும் தகவல்கள் அளித்து தெளிவுபடுத்தும்படி சுகாதரத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்”

ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் அந்த அறைக்குள் இருக்க நேர்ந்துவிட்டவரைப்போல அமர்ந்திருந்த சுகாதரத்துறை அமைச்சர் பேச ஆரம்பித்தார்.

”பிரதமருக்கு நன்றி. அவசரம் என்பதால் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நூற்றிஇருபது இளைஞர்களையும் எல்லா வகையிலும் பரிசோதித்துவிட்டோம். சிலசோதனைகளை நானே நின்று நேரடியாக மேற்பார்வை செய்தேன். நேற்று அனுமதிக்கப்பட்ட நூற்றி இருபது பேர், அதற்கு முன் இருநூற்று பதினாறுபேர் -இவர்கள் அனைவரின் இரத்த பிளாஸ்மாவையும் சோதித்து ஒவ்வொரு வேதிப்பொருள்களையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி அவற்றை ரோம் மக்களின் தரவுகளுடன் ஒப்பீடு செய்து மருத்துவமனையின் குவாண்டம் கணினி கொடுத்த அறிக்கை”

”இந்த படத்தை பாருங்கள்”

மேடையின் சுவர் திரையாக மாறி ஒளிர்ந்தது. கோட்டுருவம் போல உயர்ந்தும் தாழ்ந்தும் மலைத்தொடர் போல செல்லும் கோடுகள் தோன்றின.

“சுருக்கமாக சொல்கிறேன். சிகரம் போலத் தோன்றும் ஒவ்வொறு உயரமும் ஒரு வேதிப்பொருளின் தடம். இந்த மூன்று வேதிப்பொருள்களையும் பாருங்கள்”

”முதலாவது டெஸ்மிதைல்புரோடின், டோபமின் நியூரான்களில் செயலாற்றக்கூடிய புதுவகையான போதைப்பொருள். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது சுவாசத்தை முற்றிலுமாக நிறுத்திவிடும் திறன் பெற்றது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கரியமில வாயுவின் அளவு அதிகமாகி உடனடி மரணம் ஏற்படுகிறது”

“இரண்டாவது மெதைல் பினைல் டெட்ராஹைட்ரோ பிரிடின். மேற்சொன்ன போதைப்பொருள் தயாரிக்கும்போது உண்டாகும் துணைப்பொருள். இதனால் நேரடி ஆபத்து ஏதுமில்லை. ஆனால் வடிவில் மிகவும் சிறியது, கொழுப்பு அமிலங்களுடன் ஒட்டக்கூடியது என்பதால் இரத்த-மூளை தடுப்பையும் தாண்டி நேரடியாக மூளைக்குள் சென்றுவிடுகிறது. மூளையின் உள்ள நியூரான்களின் காப்பு ஸெல்களான ஆஸ்ட்ரோஸைட்ஸ் இதை மோனோஅமின் ஆக்ஸிடேஸ் என்ற நொதியின் மூலம் உடைத்து உடலை விட்டு நீக்க முயற்சி செய்கின்றன. அப்போது உருவாகும் மூன்றாவது பொருள் மெதைல் பினைல் பிரிடினியம். இதுதான் மிகவும் ஆபத்தானது”

”உடல் உறுப்புகளுக்கு அவை இயங்குவதற்கான சமிக்ஞைகளை மூளையிலிருந்து எடுத்துச்செல்பவை மோட்டார் நியூரான்கள். பினைல் பிரிடினியம் மோட்டார் நியூரான்களை தாக்கி சிதைக்கிறது. மூளையின் கட்டளைகள் சென்றடையாமல் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் இயக்கத்தை இழக்க ஆரம்பிக்கின்றன. உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளும் செயல் இழக்கும்போது மெதுவாக படிப்படியாக மரணம் நிகழ்கிறது”

சிலையைப்போல பேச்சின்றி அமர்ந்திருந்த பிரதமரின் தொண்டையிலிருந்து இரும்பு கொக்கியைபோல திடீரென கேவல் ஒலி எழுந்தது.

குலுங்கி அழுதுகொண்டிருப்பவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றிருந்தார் சுகாதாரத்துறை அமைச்சர்.

பேச ஆரம்பிக்க பிரதமருக்கு சற்று நேரம் பிடித்தது.

”மரணமடைந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 25 வயதுக்கும் கீழானவர்கள், மாணவர்கள். அதில் என் மகனும் ஒருவன். பத்து வருட சிகிச்சைகளுக்கு பிறகு பிறந்த ஒரே குழந்தை அவன். அசையாமல் பேச்சில்லாமல் படுத்திருக்கிறான். மருத்துவர்கள் எதையும் சொல்ல முடியாது என்கிறார்கள்”

அறையில் நீண்ட நிசப்தம்.

குரலை சரிசெய்துகொண்டு பேசினாலும் அழுவது போன்ற தொனியில் ஒலித்தது பிரதமரின் குரல்.

கண்ணீர் பளபளக்கும விழிகளுடன் பிரதமர் ”இந்த சம்பவம் எங்கே நடந்தது?” என்றார்.

”போதைப்பொருள் தயாரிக்கப்பட்ட கட்டிடம் கைப்பற்றப்பட்டு தற்சயம் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் ஈடுபட்ட மாணவர்களுள் ஒருவர் உயிர்வேதியியலில் ஆராய்ச்ச்சி மாணவர். அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால்…. நாம் நினைப்பது போல சம்பந்தப்பட்ட இடம் ஆய்வுக்கூடமோ தொழிற்சாலையோ அல்ல”

”பிறகு?”

“மாணவர் தங்கும் விடுதியின் சமையலறை”

”சமையலறையா?

அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் பிரதமரின் குரல் உரத்து ஒலித்தது.

“சமையலறையில் எப்படி போதை மருந்து தயாரித்தார்கள்? அதற்கு அவர்கள் பயன்படுத்தும் பொருள்களை நாம் ஏன் இதுவரை தடைசெய்யவில்லை?”

“போதை மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களின் பட்டியலை வைத்து நேற்றே தொழில்துறை வணிகத்துறை அமைச்சர்களுடன் விவாதித்தேன். அவற்றின் விற்பனையை நாம் கண்காணிக்கலாம். ஆனால் அவற்றை நம்மால் சட்டப்படி தடைசெய்ய முடியாது”

”ஏன்?”

”ஏனென்றால் அவை சாதாரணமான எளிய பொருள்கள். சலவை சோப்பு, வினிகர், கழிவறையை சுத்தப்படுத்த பயன்படும் பிளீச்சு, கசகசா என்று அழைக்கப்படும் ஓப்பியச்செடியின் விதை, உப்பு, பொடியாக்கப்பட்ட மரக்கரி… இப்படி”

பிரதமர் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் திகைப்புடன் அமர்ந்திருந்தார். முன்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்த சம்பவம் அவர் நினைவுக்கு வந்தது.

”நிதி நெருக்கடி காரணமாக தேசிய சேமிப்பில் இருந்த ஆக்சிஜனையும் உணவுப்பொருள்களையும் இண்டர்கேலக்டிக் சந்தையில் ரகசியமாக விற்ற விஷயம் எப்படியோ வெளியே கசிந்துவிட்டது. அரசின் கையிருப்பில் உள்ளது பற்றி நான் சொன்னது பொய் என்று லட்சம் நபர்கள் முன்னால் ஒருத்தன் கத்துகிறான். பெருத்த அவமானமாக ஆகிவிட்டது”

”இன்னொன்று. விளையாட்டு கூடத்திற்கு வெளியே நேற்று எதிர்ப்பு குரல் கொடுத்தவர்கள் சுடோகுயி பற்றி கோஷமிட்டார்கள். என்ன தொடர்பு என்று தெரியவில்லை”

”இதையெல்லாம் துப்பு துலக்க சரியான ஆள் பேராசிரியர் புரோதான். அவர் நாளைக்கு இங்கே அறிக்கை சமர்ப்பிக்கிறார் அல்லவா?

”ஆமாம். இன்று காலை அவருடனும் பேசினேன். எல்லா சம்பவங்களும் தொடர்புடையவை என்கிறார்.”

[3]

”சுடோகுயி விளையாட்டை அரசு தடை செய்ததற்கும் இளைஞர்கள் சட்டவிரோதமாக போதை மருந்து தயாரித்தற்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் முக்கியமான கேள்வி. இல்லையா?

“சொல்கிறேன். பின்னணியை விரிவாக தெரிந்து கொள்ளாமல் இந்த பிரச்சினையின் சிக்கலின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியாது.”

”நம் கல்வித்திட்டம் தொழிற்கல்வியையும் தொழில்நுட்பத்தையும் மட்டுமே அடிப்படையாக கொண்டது என்பதால் வரலாறு நம் பாடத்திட்டங்களில் இல்லை. ஆகவே வரலாற்று நூல்களின் புழக்கமே இல்லை. வரலாற்று தரவுகள் எளிதில் கிடைப்பதில்லை. ஆவணக்காப்பகத்தின் நிலவறையில் இரண்டு மாதங்கள் ஆய்வு செய்து திரட்டிய தகவல்கள் இவை”

”சுடோகு என்பது ஒரு புராதான ஜப்பானிய எண் கணித விளையாட்டு. வயதானவர்களுக்கும் மூளை மற்றும் உளவியல் சிக்கல்கள் உள்ள நோயாளிகளுக்கும் ஆரோக்கியத்தின் எல்லையை நிர்ணயிப்பதற்காக மருத்துவர்கள் இதை பயன்படுத்தினார்கள். மனதையும் மூளையையும் தொடர்புபடுத்தி கணினியின் தொடுதிரையில் எழுதவைப்பதன் மூலம் நோயாளியை பரிசோதிக்கும் எளிய ஒரு சோதனை முறையாக சுடோகு வழக்கில் இருந்தது”

”போதை பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையில் இருந்த கைதிகள் மூன்றுபேர் சுடோகு விளையாட்டை ’சுடோகுனி’ என பெயர் மாற்றி விரிவாக்கினார்கள். தண்டனை முடிந்து வெளியே வந்து இணையத்தில் இலவசமாக வைத்திருந்த பிறகு கைக்கணினியில் இயங்குமாறு வடிவமைத்து சிறிய தொகைக்கு விற்றார்கள். பரவலாக விற்கப்பட்டதால் வணிகத்துறையின் விதிகளுக்கு ஏற்ப ஒரு நிறுவனத்தில் பெயரில் பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நிறுவனம் ஓரளவு லாபம் சேர்த்து அதை பிரித்துக்கொள்வதில் தகராறு ஏற்பட்டு மூவரில் ஒருவர் பிரிந்து செல்ல நேரிட்டது.”

”பிரிந்து சென்றவர் புதிய நிறுவனம் ஒன்ற ஆரம்பித்து எண்களுக்கு பதிலாக எழுத்துகளை வைத்து ஆடும் சொல் விளையாட்டை அறிமுகப்படுத்தினார். அதுவும் லாபத்துடன் சிலவருடங்கள் விற்றது. வேறுசிலர் விளையாட்டை வேறுவிதங்களில் மாற்றி பல்வேறு பெயர்களில் உலவ விட்டார்கள். விளையாட்டின் முதல் நிலையை தாண்டியதும் அந்த வெற்றிக்கு சன்மானமாக என்ன தரப்படுகிறது என்பதை வைத்து அதன் வடிவங்கள் வேறுபட ஆரம்பித்தன. இதே போல இன்னும் சில புதிய நிறுவனங்கள் தோன்றி விளையாட்டு பல்வேறு விதமான வடிவங்களில் உருமாறியது. ஒரு கட்டத்தில் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என எந்த வயது மனிதராக இருந்தாலும் அவர்களின் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரு விளையாட்டு கிடைக்க ஆரம்பித்தது”

”இளம் தொழிலதிபர்களுக்கு என பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு ஒன்றில் பெரும் பணக்காரன் ஒருவரின் மகன் பித்தாக ஆனார். அவர் பெயர் சுமந்தன். அவரின் அப்பா அவருக்கு நிர்வாகம் செய்ய அளித்திருந்த நிறுவனத்தின் நிர்வாகியின் அறையில் அடைந்து கொண்டு அலுவலக நேரத்திலும் விளையாடினார். அலுவலக பணிகளை மறந்து விளையாட்டில் மூழ்கி தொடுதிரைகள், தொலைபேசி அழைப்புகள், கைபேசி செய்திகள் அனைத்தையும் புறக்கணிக்க ஆரம்பித்தார்.”

”அந்த ஆண்டின் நிர்வாகிகளின் கூட்டத்தில் சுமந்தன் இருக்கவில்லை. அழைப்புகளுக்கு எந்த பதிலும் வராதால் தேடிப்பிடித்து உடனே அழைத்துவர அவர் தந்தையார் தன் மெய்க்காப்ப்பாளர்களை பணித்தார். அறைக்கதவை தட்டி பதில் வராதால் உடைத்துச்சென்று பார்த்தபோது அவர்கள் வந்ததைகூட அறியாமல் கணினியில் விளையாடிக்கொண்டிருந்தார் சுமந்தன்.”

“விஷயத்தை சொல்லி அவரை கூட்டத்திற்கு வரும்படி பணியாளர்கள் மன்றாடினர். காதில் பொருத்திய இசைக்குமிழிகளுடன் கணினியில் உள்ள ஏதோ ஒரு விளையாட்டின் உலகத்துக்குள் அவர் சென்று விட்டிருந்தார். எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் கூறிய ஒரு சொல்லைக்கூட அவர் செவிகொள்ளவில்லை. நிறுவனத்தின் நிறுவனர்கள், பங்குதார்கள் மத்தியில் மகனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த தந்தை வெறுங்கையோடு திரும்பிய மெய்க்காப்பாளர்களிடம் விஷயத்தை கேட்டறிந்து கடும் கோபமுற்றார். ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றவர் பல நாட்களாக தூக்கமின்றி, குளிக்காமல், ஆடை மாற்றாமல் காலி உணவுத்தட்டுகள் சூழ அவர் வருகையையும் பொருட்படுத்தாமல் அழைத்தபோதும் கேள்விக்கு பதில் இல்லாமல் துர்நாற்றம் வீசும் உடலுடன் பைத்தியத்தைப்போல விளையாடிக்கொண்டிருந்த சுமந்தனை கண்டு கொடும் சினமடைந்தார். உடனடியாக அவரை அப்புறப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச்செல்ல ஆணையிட்டார். கணினியைவிட்டு எழ மறுத்த சுமந்தனை குழந்தையைபோல நான்குபேர் நாற்காலியுடன் உயரத்தூக்கி வாகனத்தினுள் வைத்து வீட்டுக்கு கொண்டு சென்றனர்”

”வீட்டுக்கு தூக்கி வரப்பட்ட சுமந்தன் ஒரு வாரம் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவர் உணவு உட்கொண்டார் நீர் பருகினார். ஆனால் பேசவில்லை உறங்கவில்லை. சுவாசம் சீராக இருந்தது கருவிழிகளின் விரிவு இயல்பு நிலையில் இருந்தது. மூளையின் செயல் மட்டும் அதிதீவிரமாக இருந்தது. பள்ளிப்படிப்பின் பாதியிலேயே தன் தந்தையின் தொழிற்சாலைகளுள் ஒன்றை நிர்வகித்து வந்தால் கல்லூரிக்கு செல்லாதவர், பள்ளியில் மிகவும் சராசரியான ஒரு மாணவர். குறிப்பாக உயர்கணிதத்தில் சுமந்தனுக்கு எளிய அறிமுகம் கூட இருக்கவில்லை. ஆனால் கணித நிபுணர்களால் தீர்க்க முடியாத, குவாண்டம் கணினி சிலமணிநேரம் அவகாசம் எடுத்துக்கொள்ளும் சிக்கலான உயர்கணித சூத்திரங்களை சில நொடிகளில் அவரால் செய்ய முடிந்தது.”

”மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும் ஏதோ ஒரு போதை மருந்தை உட்கொண்டிருகிறார் என்று கருதி அவரின் இரத்தம் மூத்திரம் மூளையின் செயல்பாடுகள் அனைத்தும் நுணுகி ஆராயப்பட்டன. மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகித்து அவரின் மொத்த மரபணுக்களையும் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் மரபியல் அறிஞர்கள் சோதித்தனர். அவர் உடலில் குறிப்பிடத்தக்க எந்த வித்தியாசத்தையும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.”

“சுமந்தன் ஒரு பெரும் நரம்பியல் புதிராக ஆகி நாட்டின் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அவரை சுற்றி குவிந்தனர். மூளையில் புற்றுநோய் ஏற்பட்டு ஒரு குறிப்பிட்ட வகை நியூரான்கள் எண்ணிக்கையில் பலமடங்கு பெருகும்போது இதைப்போன்ற அசாதாரணமான ஆற்றல் கைகூடும் என்ற எளிய அனுமானம் மட்டும் ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையில் கிடைத்தது. ஆனால் சுமந்தனின் மூளையில் அதைப்போனற பிறழ்வுகளும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. உளவியல் நிபுணர்களாலும் இந்த ஆச்சரியத்தை விடுவிக்க முடியவில்லை. ஆகவே ஆராய்ச்சியாளர்கள் இதை ”சுமந்தன் அதிசயநிகழ்வு” அதாவது ”சுமந்தன் ஃபினாமினா” (Sumandan Phenomenon) என அடையாளப்படுத்தினர்.

”சுமந்தன் ஃபினாமினா” இன்றுவரையும் நரம்பியலிலும் உளவியலிலும் முழுக்க அறியப்படாத விஷயமாக உள்ளது. அதை விளக்க முயன்றவர்கள் பலவிதமான் யூகங்களை முன்வைத்துள்ளனர். பலர் உயர் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதியும் அது பற்றி பலவிதமான யூகங்கள், தியரிகள் மட்டுமே உள்ளன.”

“இது பற்றி ஒரு ஆராய்ச்சிமாணவர் எழுதிய கட்டுரை இந்த விஷயத்தை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகியது. அதை சுருக்கமாக இப்படிச்சொல்லலாம். நாம் அமர்ந்திருக்கும் இந்த அறை பிரதமரின் அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி. இந்த கட்டித்தில் இந்த அறையைப்போல பல அறைகள் உள்ளன. இந்த கட்டிடதைப்போல பல கட்டிடங்கள் இந்த நகரத்தில். இந்த நகரம் போல் ரோம் தேசத்தில் பல நகரங்கள் உள்ளன. ரோம் போல பல கோள்கள் நம் சூரியக்குடும்பத்தில். நம் சூரியக்குடும்பம் போல ஒருகோடி சூரியக்குடும்பங்கள் சேர்ந்தது நம் பால்வெளிமண்டலம்.”

”நம் பால் வெளி மண்டலம் என்பது அதைப்போன்ற இரண்டு ட்ரில்லியன் சூரியமண்டலங்களுள் ஒன்று. இரண்டு ட்ரில்லியன் அதாவது இரண்டு லட்சம் கோடி என்பதுகூட ஒரு தோராயமான மதிப்பீடுதான். இந்த பிரபஞ்சம் அதை விடவும் பெரிதாக இருக்கமுடியும் என்கிறார்கள். நம் பிரபஞ்சத்தில் சுமார் ஒரு பில்லியன் ட்ரில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. நாம் கண் இமைக்கும் ஒவ்வொரு நொடியும் சுமார் நாலாயிரத்து எண்ணூறு நட்சத்திரங்கள் புதிதாகப் பிறக்கின்றன. இது ஒருபக்கம்”

”அதேசமயம் நம் ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 27.2 ட்ரில்லியன் ஸெல்கள் உள்ளன. நம் உடலில் மொத்தமாக சுமார் நூறு ட்ரிலியன் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. ஒரு ஸெல்லை விட சுமார் பத்துமடங்கு சிறியவை பாக்டீரியங்கள். நம் உடலில் வாழும் ஒரு சராசரி பாக்டீரியத்துக்கு நம் உடல் ஒரு பிரபஞ்சம். நமக்கு நாம் பிரபஞ்சம் என அழைக்கும் இந்த பிரபஞ்சம்.”

”இந்தக் கேள்வியை ஒரு நிமிடம் எண்ணிப்பாருங்கள். நாமெல்லாம் பாக்டீரியாக்கள் என்றும் இந்த பிரபஞ்சத்தை ஒரு தனி உயிரி என்றும் கொண்டால், அந்த தனி உயிரியின் பிரபஞ்சம் எது? நம் பிரபஞ்சத்தை விட அது எவ்வளவு பெரியது?” எண்ணிப்பாருங்கள்….“உண்மையில் பிரபஞ்சம் என்பது எது?”

”பேசிக்கொண்டிருந்த விஷயத்தை விட்டு தள்ளிப்போய்விட்டது போல இருக்கிறதல்லவா? இதெல்லாம் நான் சொல்வதல்ல. சுமந்தன் ஃபினாமினா பற்றிய தியரியை புரிந்து கொள்ள இந்த ஒப்பீடுகள் அவசியம். அதாவது இங்கு நாம் காணும் பொருள்கள், நட்சத்திரங்கள், விவாதித்த பிரபஞ்சங்கள் எவையுமே அறுதியிட்டு சொல்லமுடிகிற முழு உண்மைகள் அல்ல. இவை அனைத்துமே நம் மூளையில் உருவாகும் மின்தூண்டல்களால் உருவகிக்க முடிகிற அதன் தர்க்கத்துள் நிகழும் எளிய பிம்ப பதிவுகள் மட்டுமே. ஆகவே பிரபஞ்சம் எவ்வளவு பெரியது சிக்கலானது என்பது, அது நம் மூளையில் அவ்விதம் உருவகிக்கப்படுகிறது என்பதையே அடிப்படையாக கொண்டுள்ளது. நாம் உருவகிக்க முடிகிற பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் என்பது நம் மூளையின் பிரம்மாண்டம்தான். அதாவது அதிபிரம்மாண்டம் என எண்ணி வியக்கத்தக்கது இந்த பிரபஞ்சம் அல்ல. அப்படி உருவகிக்க முடிகிற சிந்தனையை நமக்கு அளிக்கும் மூளையின் ஆற்றல்தான் -என்பது அந்த கட்டுரையின் சாரம். அத்தகைய பிரம்மாண்டமான மனித மூளையின் ஆற்றலின் ஒரு மிகச்சிறிய பகுதியைத்தான் ஏதோ ஒரு கணத்தில் சுமந்தன் திறந்து கொண்டார். ஆகவே, இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்று கட்டுரையில் அந்த மாணவர் வாதிட்டிருந்தார். சுமந்தனின் இரத்தத்தையும் மூத்திரத்தையும் பல ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்து ரகசியமான வேதிப்பொருள்கள் எதுவும் இல்லை என இறுதியாக மருத்துவர்கள் அறிவித்த பிறகு இதுவே சுமந்தன் ஃபினாமினாவுக்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கமாக இன்றுவரையும் உள்ளது.”

”அந்த ஆண்டு நரம்பியலில் முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்ந்தது. மூளைச்செயல்பாடு குறைந்து கோமா நிலையில் உள்ள நோயாளிகளை தட்டிஎழுப்ப சப்தம், வெளிச்சம், வாசனை, குளிர்ந்த மற்றும் இளஞ்சூடான உருளைகளை பற்றிக்கொள்ள தருதல் ஆகியவற்றுடன் சுடோகுவை சேர்த்த ஒரு நரம்பியல் மருத்துவர் சாதகமான விளைவுகள் ஏற்படுவதை கண்டார். இவை அனைத்தையும் உள்ளடக்கிய புதிய சுடோகு விளையாட்டை உருவாக்கினால் அது பல நோயாளிகளுக்கு உதவும், என்று ஒரு நிகழ்ச்சியில் சொல்வதை கேட்ட சுமந்தன் ஒரு புதிய வீடியோ விளையாட்டை உருவாக்கினார். அதன் மூலம் அன்றாட பயிற்சிமூலம் படிப்படியாக மின் தூண்டல் பெற்று பல மூளைநோயாளிகள் குணமடைந்தனர்.”

”சுடோகு என்பது எண்களை வைத்து சதுரவடிவில் அமைந்த 9×9 கட்டங்களில் ஆடப்படுவது. அப்போதைய முன்னணி கணினி நிறுவனம் ஒன்று புதிதாக வடிவமைத்திருந்த அதிநவீன குவாண்டம் கணினியில் அதை பிரம்மாண்டமாக்கி 81×81 கட்டங்களில் மிகப்பெரிய வடிவில் வீரர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றை வைத்து விளையாடும் புதிய விளையாட்டாக வடிவமைத்து ’சுடோகு இன்ஃபினிடி’ என அறிமுகப்படுத்தியது. அது ’சுடோகு(இ)’ என அழைக்கப்பட்டு பிறகு ’சுடோகுயி’ என மருவியது.”

”மனிதனின் புலன்கள், அறிதல் முறைகள், அவைகளை கொண்டு மனிதன் சிந்திக்கும் முறை ஆகிய அனைத்தையும் அடிப்படையாக கொண்டு அவற்றிற்கு எதிராக, மனிதமூளைக்கு பெரும் சவாலாக, அதாவது மனிதனை வெல்வதற்கு என்றே அப்போதிருந்த சக்தி வாய்ந்த குவாண்டம் கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்டது சுடோகுயி. அதன் ஆரம்ப கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து அதன் முதல் நிலைக்கு நுழைவதே பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. அறிவுத்திறனுக்கு பெயர்போன பலர் தொடர்ந்து முயன்றும் ஆரம்பத்திலேயே தோற்ற நிலையில் ’மனிதனின் தோல்வி’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதி அறிவியல் சஞ்சிகைகள் கவலை தெரிவித்தன.”

”சுமந்தன் ஒரு மாதம் முழுநேரமாக விளையாடி முதல் மூன்று நிலைகள் வரை முன்னேறிச்சென்றார். மேலும் சில மாதங்கள் விளையாடித்தேர்ந்து அந்த விளையாட்டின் எட்டு நிலைகளையும் கடந்துசென்றார். முன்னணி சதுரங்க வீர்ர்கள் பலர் முயன்று ஆரம்பத்திலேயே தோற்ற விளையாட்டு சுடோகுயி. அதன் எட்டு நிலைகளையும் கடந்தவர் சுமந்தன் மட்டுமே என்பதால் எல்லாச்செய்திகளிலும் அவரே பேசு பொருளாக இருந்தார். மனிதகுலத்தின் இழிபெயரை நீக்கிய வீரராக சுமந்தன் கொண்டாடப்பட்டு ’சுமந்தன் எட்டாம் நிலை’ என்பது எங்கும் தலைப்புச்செய்தியாக ஆகி, சுமந்தன் பெரும்புகழ்மிக்கவராக ஆனார். அவர் பெயருடன் எட்டாம் நிலை என்பது ஒரு பெரும் பட்டத்தை போல ஒட்டிக்கொண்டது.”

”அதற்குப்பிறகு அவருக்கு சவாலான விளையாட்டுகளோ அவருக்கு எதிராக ஆட வீரர்களோ இருக்கவில்லை. ஆகவே தன் குடும்பத்தொழிலுக்கு திரும்பி எட்டாம்நிலை என்ற பெயரில் இன்னும் பல தொழிற்சாலைகளை நிறுவினார். வியாபாரத்தின் எல்லைகளை விஸ்தரித்து உணவுப்பதார்த்தங்கள், அழகுசாதனப்பொருள்கள், ஆடைகள், வாகனங்கள், விமானங்கள் என எல்லாவற்றையும் தாயரித்து விற்று ரோமின் மிகப்பெரும் பணக்காரராக ஆனார். ரோம் எங்கும் அவர் குடும்பம் எட்டாம் நிலை குடும்பம் என அறியப்பட்டது. பெரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தும், மனம் போனபடி செலவு செய்தும் நடுவயது தாண்டியதும் அவ்வளவு பணத்தையும் என்ன செய்வது என்று தெரியவில்லை. எட்டாம் நிலை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி பல சேவைகள் செய்தார். அவர் பெயரை அறியாதவர் நாட்டில் ஒருவர் கூட இருக்கவில்லை. கருத்துக்கணிப்புகளில் கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் விரும்பப்படும் மனிதராக, ஏன் மனிதகுலத்தின் மூளை ஆற்றலின் பிரதிநிதியாகவே அவர் அறியப்பட்டார்.”

”சில ஆண்டுகள் கழித்து சுடோகுயி விளையாட்டில் இன்னும் ஒரு பெரும் பாய்ச்சல் நிகழ்ந்தது. கணினியை வைத்து விளையாடுவது தவிர ஆட்களையும் குதிரை, யானை வடிவமுடையை ரோபோக்களையும் ஸ்டாமினாக்களையும் வைத்து உண்மையான மைதானத்தில் விளையாடும் பிரம்மாண்டமான விளையாட்டாக எட்டாம்நிலை மாற்றி அமைத்தார். ஏற்கனவே பெரும் மூளைச்சவாலாக மாறிவிட்டிருந்த விளையாட்டை நாற்புறத்திலிருந்தும் தோன்றும் எதிர்பாரத ஆபத்துகள், அந்த ஆபத்துகளை தீரம், சாதுர்யம் மற்றும் உடற்தகுதியால் வெல்லுதல் என மேலும் பல அம்சங்களை சேர்த்து விளையாட்டை ஒரு நிகர்வாழ்வு அனுபவமாக ஆக்கினார். தன் சொந்த விளையாட்டு மைதானத்தில் ரோபோக்களையும் ஸ்டாமினாக்களையும் வீரர்களையும் வைத்து அவரே சில விளையாட்டுகளை நிகழ்த்திக்காட்ட சுடோகுயி அனைவரையும் பித்துக்கொள்ள வைக்கும் விளையாட்டாக ஆகியது.”

”மேலும் தொடுதிரையின் எளிய சுடோகு வழி பகடையாடி ஆபத்துகளின் தன்மையை தீர்மானிக்கும் வாய்ப்பு பார்வையாளர்களுக்கு அளிக்கப்பட்டதும் விளையாட்டும் இன்னும் சுவாரஸ்யமாகி அனைவரும் விளையாட்டின் மீது வெறிகொண்டவர்களாக ஆனார்கள். குறுகிய காலத்தில் ரோமிற்கு வெளியிலும் பிரபலமாகி விரும்பப்படும் விளையாட்டாக ஆனது. எட்டாம்நிலையின் பெயர் பிறதேசங்கள் கிரகங்கள் அனைத்திற்கும் சென்றுசேர்ந்தது.”

”அந்த ஆண்டின் இறுதியில் திருப்புமுனையான சம்பவம் ஒன்று நிகழ்ந்து. எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்தபோது ‘எட்டாம் நிலை மரணம்’ என்ற செய்தி எல்லா தேசங்களிலும் கிரகங்களிலும் தலைப்புச்செய்தியாக ஆனது.”

”எட்டாம்நிலையின் நினைவு நாளன்று எட்டாம்நிலை ஜுனியர் தன் தந்தையின் நினைவாக ஒரு விளையாட்டு போட்டியையும் போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசாக ஒரு மிகப்பெரும் தொகையையும் அறிவித்தார்.”

”அதுவரை எவரும் கேள்விப்பட்டிராத பெரும்தொகை அது. ஆகவே தூர தேசங்களிலிருந்தும் கிரகங்களிலிருந்தும் கூட போட்டியாளர்களும் பார்வையாளர்களும் குவிந்தனர். அவ்வளவு கூட்டத்தை இளைய எட்டாம் நிலை எதிர்பார்த்திருக்கவில்லை. உள்ளூரின் பழைய சிறு அரங்கம் அந்த கூட்டத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை. பெரும் இட நெரிசல். பாதுகாப்பு அரண்கள் தடுப்புகளை மீறி கூட்டம் அலையாடியது. நெரிசலில் நசுங்கி பதினாறு குழந்தைகள் உட்பட ஐம்பத்து மூன்று பேர் மரணமடைந்தனர். ’பொறுப்பற்ற விளையாட்டுத்தனம்’ என்று தலையங்கம் எழுதி எதிர்கட்சிக்கு ஆதரவான பத்திரிகை ஒன்று அரசை கடுமையாக குற்றம் சாற்றி விபத்தில் இறந்தவர்களை பற்றி செய்தி வெளியிட்டது. போட்டியை தடைசெய்யசொல்லி எதிர்கட்சியிடமிருந்து கடுமையான குரல்கள் எழுந்தன. ஆகவே பாதுகாப்பை காரணம் காட்டி அரசு விளையாட்டு போட்டியை தடைசெய்தது. ஆனால், வேறு பொழுபோக்கு இல்லாத நிலையில் பெருவாரியான மக்கள் விளையாட்டு போட்டிக்கு ஆதரவாக நின்றார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளில் தலையிடுவதாக இடதுசாரிகள் போராட்டத்தை ஆரம்பித்தனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையும் விவாதிக்கும் விஷயமாக அந்த வருடத்தின் விளையாட்டுப்போட்டி ஆகி அரசுக்கு நெருக்கடியான விஷயமாக ஆகியது. எந்த அசம்பாவிதமும் நிகழாமால் போட்டியை நடத்தவிரும்புவதாகவும் அதற்காக அரசுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் இளைய எட்டாம் நிலை அறிவிக்க அவருக்கு ஆதரவு பெருகியது.”

”விளையாட்டுப்போட்டி வேண்டுமென நாடெங்கும் பேரணிகள் நடந்தன. விளையாட்டுப்போட்டி வேண்டும் எனும் மக்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது. ரோமின் ஒட்டு மொத்த மக்கள் தொகைக்கும் எதிராக அரசு நிலைப்பாடு எடுத்துள்ளது என செய்திகளில் சொல்லப்பட்டது. விளையாட்டுக்கு பெரும் பொருட்செலவில் பத்திரிகைகள் நடத்தி படிப்படியாக எட்டாம் நிலை ஜூனியர்தான் மக்கள் செல்வாக்கை வளர்த்தார் என்றும் சில ஆய்வாளர்கள் சொல்வதுண்டு. எப்படியோ, நம் கட்சியான PPSS (பீப்பிள்ஸ் பார்ட்டி பார் ஸஸ்டெய்னபிள் ஸொஸைட்டி) சுடோகு விளையாட்டு ஆதரவு இயக்கத்தால் ”பீப்பிள்ஸ் பார்ட்டி பார் ஸூப்பர் சுடோகு” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் என்பதையும் பின்நாளில் பெயர் மாற்றப்பட்டது என்பதையும் நான் குறிப்பிட்டாகவேண்டும்”

”புதிதாக ஆரம்பித்த கட்சி அரசு தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுகோள் வைக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. விளையாட்டு விழாவுக்கு ஆதரவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தரவேண்டியதும் அரசின் கடமையாக ஆகியது. அரசு, மக்கள், எட்டாம் நிலை ஜூனியர் ஆகிய மூன்று தரப்பும் நியமனம் செய்த ஒன்பது நபர்கள் கொண்ட நடுவர் அணி அமைக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் பதினெட்டு அணிகள் உருவாக்கப்பட்டன. எட்டாம் நிலை ஜுனியர் செலவை ஏற்று நடத்த விளையாட்டு போட்டி முடிந்ததும் அதில் வரும் லாபத்தின் ஒரு பகுதியை அரசுக்கு ஈடாக தருவதாக ஏற்பாடாகியது. ஒப்புக்கொண்டதற்கும் மேலதிகமாக ஒரு தொகையை எட்டாம் நிலை ஜுனியர் அரசு அதிகாரிகளுக்கு அன்பளிப்பாக அளித்ததாக சொல்லப்படுவதும் உண்டு.”

”எப்படியோ….இப்படித்தான் ஸூப்பர் சுடோகுயி எனும் தேசிய விளையட்டுப்போட்டி ரோமில் ஆரம்பமாகியது. போட்டியின் ஒவ்வொரு அம்சமும் அந்த துறையில் நிபுணத்துவம் கொண்டவர்களால் தெளிவாக திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யபட்டன. முதல் நடவடிக்கையாக 500 ஆயிரம் மக்கள் அமரக்கூடிய அதிபிரம்மாண்டமான தேசிய விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. வாகன நிறுத்து தளங்கள், ஊரைவிட்டு வெளியே உள்ள வாகனம் நிறுத்தும் இடங்களிலிருந்து அரங்கிற்கு செல்ல மின்வாகனங்கள், விழா நடக்கும் இருமாத காலமும், பயணிகள் தங்க உணவகத்துடம் கூடிய விடுதிகள், விருந்தினர்களுக்கு தேவைப்படும் பொருட்களை விற்க அங்காடிகள் அமைக்கப்பட்டன.”

”முதல் ஆண்டு ஸூப்பர் சுடோகுயி போட்டியில் பார்வையாளர் கூட்டம் அரங்கை பாதிதான் நிறைத்தது. அரங்கை நிறைக்க அரசும் ஜூனியர் எட்டாம் நிலையும் கூட்டாக ரோம் முழுக்கவும், வேறுநாடுகளிலும், அருகில் உள்ள கிரகங்களிலும் பலவிதமான விளம்பரங்களை செய்து பரவச்செய்த முயற்சி எதிர்பார்த்த பலன் கொடுத்தது. இரண்டாம் வருட விழா அரங்கம் நிறைந்தாக நடைபெற்று மைதான வளாகத்தின் அங்காடிகளில் விளையாட்டு உபகரணங்கள், நினைவுப்பொருள்கள், உணவு, பானங்கள், ஆடைகள் என எதிர்பார்த்ததை விட அதிகமாக வருவாய் கிடைக்கவும் பரிசுத்தொகை மேலும் உயர்த்தப்பட்டு இன்னும் தூரமான கிரகங்களிலிருந்தும் அதிகமான மக்கள் குவிந்தனர். அவர்களுக்கு அமர இடம் இல்லாமல் ஆகி அரங்கிற்கு வெளியே பெரும் திரைகளில் விளையாட்டு போட்டி ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு துணைநிலையங்கள் தோன்றின. அதற்கு அடுத்த ஆண்டு பார்வையாளகளின் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டது. ஆனாலும் கூட்டம் குறையவில்லை.”

”ரோமிறகு நேரடியாக வரமுடியாதவர்களுக்காக ரோமிற்கு வெளியே உள்ள நாடுகளிலும் கிரகங்களிலும் சாட்டிலைட் திரைகளில் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் ஏற்பாடாகி பெருந்தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்து. அரங்கத்தின் மேற்சுற்று மேலும் உயர்த்தப்படு மேலும் 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டன. இவ்வாறாக ஸூப்பர் சுடோகுயி ரோமிற்கு பயண தொலைவில் உள்ள எல்லா தேசங்களிலும் கிரகங்களிலும் அறியப்பட்ட நிகழ்வாக ஆகியது.”

”இறுதியாக ரோம் மக்களின் ஒரே பொழுதுபோக்காக ஸூப்பர் சுடோகுயி ஆகியது. விளையாட்டுக்கு தலைநகரமாகவும் விளையாட்டு சார்ந்த தொழில்களுக்கு மிகப்பெரும் சந்தையாகவும் ரோம் மாறியது. விளையாட்டுக்கான சாதனங்கள், ஆடைகள் தயாரிப்பு, குதிரை மற்றும் யானை வடிவிலான ரோபோக்கள் ஸ்டாமினாக்களின் தயாரிப்பு, பழுதடைந்த ரோபோக்கள் ஸ்டாமினாக்களை பழுதுபார்க்கும் நிலையங்கள், அவற்றிற்கான உதிரிபாகங்கள் தாயாரிக்கும் தொழிற்சாலைகள், விற்கும் அங்காடிகள், விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி நிலையங்கள், அழகு நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் முதலான பலவிதமான சேவை நிலையங்கள் பெருகி ரோம் நகரின் முக்கியமான தொழில்களாக மாறின.”

”போட்டியில் பங்கேற்கும் அணிகள் அதிகமாகியதால் அணிகளை தெரிவு செய்யும் ஆரம்பகட்ட தகுதிச்சுற்று, கால் மற்றும் அரை இறுதி, மற்றும் இறுதிச்சுற்று என சுமார் நான்கு மாதங்கள் விளையாட்டுகள் நிகழ்ந்தன. மீதி நாட்களில் அரங்க பராமரிப்புகள், விளையாட்டுக்கான தயாரிப்புகள் பயிற்சிகளில் ரோம் தீவிரமாக இருந்தது. அன்றாடமும் வெளிகிரகங்களிலிருந்து வீர்கள், பயணிகள் வியாபாரிகள் ரோமிற்கு வந்து கொண்டிருந்தனர். நாட்டின் அந்நிய செலாவணி பெருகியது. ரோமின் பொற்காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கணிக்கும் காலமும் ஸூப்பர் சுடோகு உச்சத்தில் இருந்த காலமும் ஒன்றுதான் என்பதை வைத்து ஸூப்பர் சுடோகுவின் பிரம்மாண்டத்தை நாம் ஓரளவு கற்பனை செய்யலாம்.”

”அடுத்த ஆண்டில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நடந்தன. அந்த விழாவின் முதல் ஆட்டத்திலேயே தங்கள் அணி தோற்ற ஆத்திரத்தில் வேறுகிரகத்திலிருந்து வந்திருந்த பார்வையாளர் ஒருவர் கையிலிருந்த உணவுத்தட்டை எதிர் அணியின் ஸ்டாமினாவின் மீது வீசி எறிந்தார். ஸூப்பர் சுடோகு விளையாட்டு விதிகளின்படி இது தண்டிக்கப்படக்கூடிய குற்றம். ஆனால் அவரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்தநாள் நடந்த விளையாட்டிலும் இது போனற சில அசம்பாவிதங்கள் தொடர்ந்தன. ஆனால் அந்த அணியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது செய்திகளில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் எதற்காகவும் யாரும் தண்டிக்கப்படவில்லை.”

“விழாவிற்கு வரும் பார்வையாளர்கள் குறிப்பாக வெளிநாட்டிலிருந்தும் கிரகங்களிலிருந்தும் வருபவர்கள் நம் மதிப்பிற்குரிய விருந்தினர்கள். அவர்களை இன்முகத்துடனும் மனம் கோணாதபடியும் நடத்தவேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆணை இருந்தது இதற்கு முக்கியமான காரணம். விழாவின் இறுதிப்போட்டி அன்று பார்வையாளர்கள் சிலர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன் அரங்கத்தின் இருக்கைகளையும் சுவர் திரைகளையும் சேதப்படுத்திச்சென்றனர். காணொளி ஆதாரங்கள் இருந்தும் அவர்களை ரோம் அதிகாரிகள் கண்டிக்கவோ தண்டிக்கவோ இல்லை என்பது பலராலும் கவனிக்கப்பட்டு செய்திகளில் கவனப்படுத்தப்பட்டது.”

”அடுத்த ஆண்டு நிகழ்ந்த விழாவில் முரட்டுத்தனமான அசம்பாவிதங்கள் அதிகமாயின. எதிர் அணியினரை கேட்க கூசும் வசைச்சொற்களால் உரக்க அழைப்பது, குப்பைகளை வீரர்களின்மேல் எறிவது போன்ற சம்பவங்கள் முதல் நாள் அன்றே நிகழ்ந்தன. விருந்தினர்கள் மாளிகையில் ஏதோ ஒரு சிறு விஷயத்திற்காக கைகலப்பு ஏற்பட்டு இரண்டு உபசரிக்கும் ரோபாக்கள் முற்றிலுமாக செயலிழக்கும்படி கொடூரமாக தாக்கப்பட்டன. அமைதியான முறையில் விளையாட்டை கண்டுகளிக்கும்படி பார்வையாளர்களை கேட்டுக்கொள்ளும் பிரதமரின் செய்தி மைதானத்தின் பெருந்திரைகளில் திரும்பதிரும்ப ஒளிபரப்பப்பட்டது. அதைத்தவிர அரசிடமிருந்து இது தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையும் இருக்கவில்லை.”

”அடுத்த நாள் இன்னும் ஒரு மோசமான ஒரு சம்பவம் நடந்ததை பலர் விரிவாக எழுதியிருக்கிறார்கள். இதுதான் விஷயம். மது விடுதியில் நடந்த சர்ச்சைமுற்றி உள்ளுர் அணியின் முன்னணி வீரர் ஒருவர் எதிர் அணியினரால் கடுமையாக தாக்கப்பட்டு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பக்கப்பட்டார். அவர் பெயர் மகேந்திரன். விளையாட தேவையான உடற்தகுதி சான்றிதழ் பெறாததால் மகேந்திரன் மேற்கொண்டும் போட்டியில் விளையாட முடியாதபடி ஆகியது. வன்முறையில் ஈடுபட்ட வேறு கிரகத்தை சார்ந்த எதிர் அணியின் மீது வழக்கு பதிந்து வீர்ரகளை அரசு கைது செய்தபோது அவர்களின் நாட்டிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தங்கள் நாட்டின் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த ஆண்டின் எல்லா போட்டிகளிலிருந்தும் விலகிக்கொள்வோம் என அந்த நாட்டின் அதிபர் எச்சரித்தார். அது ஒரு முன்னோடியான அணியாகையால் அதன் விலகல் விளையாட்டை பலமாக பாதிக்கும் என்பதால் பலத்த விவாதங்களுக்குப்பிறகும் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட எல்லா வழக்குகளையும் விலக்கிக்கொள்வதாக ரோம் அறிவித்தது.”

”இந்த அறிவிப்பு ரோமின் பாதிக்கப்பட்ட உள்ளூர் அணியையும் அணியின் ஆதரவாளர்களையும் கடுமையான கசப்புக்கு உள்ளாக்கியது. அந்த ஆண்டு போட்டியில் அந்த உள்ளூர் அணி எதிர்பாராதவிதமாக கடுமையான தோல்வியை அடைந்து எதிரணியின் கடுமையான ஏளனத்திற்கும் பார்வையாளர்களின் பரிகாசத்துக்கும் ஆளாகியது. தங்களுடைய ஊரில், சொந்த மைதானத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் உள்ளூர் அணியினர் மேலும் கசப்படைந்து எல்லாவற்றிற்கும் காரணம் ரோம் அரசுதான் என அரசுக்கு எதிராக வஞ்சம் கொண்டனர்.”

”மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஊனமுற்ற வீரான மகேந்திரன் அளித்த பேட்டி ரோம் முழுக்க விவாதிக்கப்பட்டது. விளையாட்டில் வரும் வருவாய்க்காக வெளிதேசத்தவருக்கு அரசு விலை போய் விட்டதாக குற்றம் சாற்றி தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுவதே தன் வாழ்நாள் இலட்சியம் என மகேந்திரன் அறிவித்தார். அவரின் அணி அவருக்கு முழுஆதரவு அளிப்பதாக உறுதி அளித்ததுடன் இனிமேல் ஸூப்பர் சுடோகு போட்டியில் ஒருபோதும் பங்கேற்பதில்லை என அறிவித்தது.”

”விளையாட்டு அரங்கம், வாகன நிறுத்துமிடம், விருந்தினர் மாளிகை ஆகியற்றை அமைப்பதற்காக மிகப்பெரும் நிலப்பரப்பு தேவையாக இருந்ததது. அவ்வளவு பெரிய நிலப்பரப்பை கையகப்படுத்தியதில் பல முறையீடுகள் நிகழ்ந்திருந்தன. இதைப்பற்றி சிறிய அளவில் ஆங்காங்கே செய்திகள் வந்தனவே தவிர அவை பெரிதளவு கவனம் பெற்றிருக்கவில்லை. மகேந்திரன் ஸூப்பர் சுடோகுயி விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களின் சந்ததியினரையும் நாடு முழுக்க தேடிச்சென்று முறையீடுகளை ஆண்டுவாரியாக தொகுத்து பாதிக்கப்பட்டவர்களின் நேர்முகம் அடங்கிய காணொளிகளுடன் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் பட்டியலிட்டு ஆவணப்படுத்தி பத்திரிகைகளில் செய்தியாக்கினார். விடாப்பிடியான தொடர்ந்த முயற்சிகளின் வழி பரவலாக அறியப்பட்டு ரோமின் நன்கு அறியப்பட்ட முகமாக மகேந்திரன் ஆனார்.”

”இன்னொரு வகையிலும் ஸூப்பர் சுடோகு விளையாட்டுக்கு ஆபத்து வந்தது. விளையாட்டில் எந்த அணி வெல்லும் என்பதை கணித்து அணிகளின் மீது பணம் வைத்து விளையாடும் சூதாட்டம் நெடுங்காலமாக யாருக்கும் தெரியாமல் நடந்து வந்தது. அதில் புழங்கும் தொகை வளர்ந்தபடியே சென்று பரிசுத்தொகைக்கு இணை வைக்கும் அளவுக்கு பெரிதாக ஆகியிருந்தது. அதில் ஈடுபட்டிருத்த தரகர்கள் சிலர் விதிகளுக்கு புறம்பாக அந்த தொகையில் பாதியை வீர்ர்களுக்கு அன்பளிப்பாக அளித்து விளையாட்டின் முடிவை மாற்ற முயன்றபடியே இருந்தனர். சட்டத்திற்கு புறம்பாக புழங்கும் பெருந்தொகை என்பதால் வருவாய்த்துறையின் நீண்ட புலனாய்வின் முடிவில் அது கண்டறியப்பட்டு மிகவும் போற்றப்படும் முன்னணி விளையாட்டு வீரர்கள் பற்றிய பல அருவருக்கத்தக்க உண்மைகள் வெளியாகியது தீவிர ரசிகர்களிடையே வெறுப்பையும் கசப்பையும் உண்டாக்கியது. விளையாட்டில் நடைபெறும் சூதாட்டத்தை தடைசெய்ததுடன் தொடர்ந்து கண்காணிக்க அரசு தனிப்படை அமைத்து அவ்வப்போது மேற்கொண்ட சோதனைகளால் விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் பல அசெளகர்யங்களுக்கும் ஆளானார்கள். எல்லாவற்றுக்கும் அரசு குற்றம் சாற்றப்பட்டு மக்களுக்கு அரசின் மீது அதிருப்தி வளர்ந்தது.”

”அடுத்த ஆண்டு ஸூப்பர் சுடோகுயி ஆரம்பிக்கும்போது வரலாற்றிலேயே அதுதான் கடைசி விளையாட்டு என யாருமே எண்ணியிருக்கவில்லை. ஆனால் முதல் நாளே அதை உறுதிப்படுத்தும்படி பல சம்பவங்கள் நடந்தன. சில நம்பமுடியாதவை. எல்லாவற்றையும் சுருக்கமாக இப்படி சொல்லாம். நாம் என்ன செய்தாலும் ரோம் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதாக புரிந்துகொண்ட வெளிதேசத்து வீரர்களும் பார்வையாளர்களும் உள்ளூர்வாசிகளிடம் முரட்டுத்தனமாக நடக்க ஆரம்பித்தனர். குற்றங்கள் பெருகின. ரோம் குடியரசின் குழந்தைகளும் பெண்களும் காணாமல் ஆனார்கள். வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு வீட்டில் இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். இதைப்போன்ற குற்றங்களை ரோமில் அதற்குமுன் நிகழ்ந்தே இல்லை.”

”இதை விட பெரிய பிரச்சினையாக அந்த ஆண்டு வேறொரு தேசத்தில் புதிதாக தோன்றிய ஒரு தொற்றுநோய் பார்வையாளர்கள் வழி ரோமிற்கும் வந்து சேர்ந்தது. இரண்டுமாத கால விளையாட்டின் முதல் வாரத்திலேயே பார்வையாளர்கள் நோய்வாய்ப்பட்டனர். நிர்வாகத்தின் கவனம் முழுக்க போட்டிகளை ஒருங்கிணைப்பதிலும் அட்டவணையிடப்பட்ட காலக்கெடுவில் நடத்துவதிலும் குவிந்திருந்ததால் அதி விரைவில் ஆயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகி ரோமின் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் இறந்து பிணமாக வெளியே வந்தனர். இறந்தவர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க முயன்றபோது தகுந்த பாதுகாப்பு நடவடிகை எடுக்காமல் ரோம் அரசு அவர்களை கொன்றுவிட்டதாக குற்றம் சாற்றி மக்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுத்தனர். வெளி தேசங்களிலும், இண்டர் கேலக்டிக் நீதிமன்றத்திலும் ரோமிற்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன.”

“அதிவேகமாகப் பரவிய தொற்றுநோய் சில நாள்களிலேயே அரங்கத்திற்கு வெளியே ரோமின் பிறபகுதிகளுக்கும் சென்று சேர்ந்தது. ஒரே மாதத்தில் எட்டு முன்னணி வீர்கள் உடபட ரோமின் ஆயிரக்கணக்கான குடிமக்கள் இறந்தனர். துரிதமாக செயல்பட்டும் புதிய தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து பரிசோதித்து உறுதிசெய்து மக்களுக்கு அளிக்க மூன்று மாதங்கள் பிடித்தது.”

”அதற்குள் காலம் வெகுவாக கடந்துவிட்டிருந்தது மேலும் பல்லாயிரம்பேர் மாண்டனர். நாடே துக்க கோலம் பூண்டது. சற்றுமுன் இறந்த விலங்கின் சடலம் போல கிடந்த மைதானத்தில் மொய்க்கும் ஈக்கள் போல விளையாட்டின் கடைசி நாளன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை இருந்தது.”

“தொற்று பரவுவதை தவிர்க்கும் பொருட்டு மக்களை வீட்டுக்குள் இருக்கும்படி அரசு கேட்டுக்கொண்டது. பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், விருந்துகள் என மக்கள் கூடும் நடவடிக்கைகள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டன. நாட்டிற்குள் பயணிகள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன.”

“தொற்று நோயை முழுக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாடு சகஜ நிலைக்கு திரும்பி வந்த போது அடுத்த ஆண்டின் போட்டிக்கான பயிற்சிக்காலம் கடந்து விட்டிருந்தது. ஆகவே சர்வதேச ஸுப்பர் சுடோகு கழகத்தின் விதிகளின்படி அந்த ஆண்டின் போட்டி ரத்து செய்யப்பட்டதுடன் அந்த ஆண்டின் போட்டியை நடத்தும் வாய்ப்பையும் ரோம் இழந்தது. நிலாவில் உள்ள கிரம்யா என்ற நாடு அடுத்த ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டியை நடத்த முன் வந்தது.”

”முப்பது ஆண்டுகளாக சுடோகு விளையாட்டே ரோமின் மைய அச்சாக இருந்ததால் நாட்டின் பெரும்பாலான தொழில்களும் விளையாட்டை மையமாக கொண்டவையாக மாறி இருந்தன. விளையாட்டுகு வெளியே வேறுதொழில்களே பெரிதாக இருக்கவில்லை. ஈவிரக்கமற்ற பிரம்மாண்டமான ஒரு கொடிய விலங்கைப்போல அனைத்தையும் அடித்துத்தின்று தாக்கி அழித்து நாட்டைவிட்டு வெளியேறியிருந்தது சுடோகுயி. ஸூப்பர் சுடோகுயி இல்லாத நிலையில் மக்களில் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்புகள் இருக்கவில்லை. எஞ்சிய ஸூப்பர் சுடோகுயி ரோபோக்கள், ஸ்டாமினாக்கள், அவற்றின் உதிரிபாகங்கள், உதிரிபாகங்கள் செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை நிலவில் உள்ள ஒரு நாட்டுக்கு விற்ற பிறகு நாட்டின் நிதிநிலை ஓரளவு சீராகியது ஆனால் அதன் இழப்பிலிருந்து முழுக்கவும் மீளவில்லை.”

”வேலை இல்லாதவர்களுக்கு அரசின் சமூகபாதுகாப்பு திட்டத்தின்படி ஈட்டுத்தொகை அளிக்கப்பட்டது. வேலை இல்லாமல் பொழுதுபோக்குகள் இல்லாமல் சோம்பி இருந்த மக்கள் பெருங்கூட்டமாக மதுச்சாலைகளுக்கு செல்ல ஆரம்பித்து மதுச்சாலைகள் நிரம்பி வழிந்தன. பெருந்திரளான மக்களுக்கு ஈட்டுத்தொகை அளிக்க வேண்டி இருந்ததால் அரசின் உபரி மெல்லக்கரைந்து இல்லாமலாகியது. அரசின் நிதிநிலைமை மோசமாகி வேறு வழிகளில் வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு மதுச்சாலைகளை தனியாருக்கு ஏலம் விடாமல் அரசே நேரடியாக எடுத்து நடத்த ஆரம்பித்தது. வருவாயை மேலும் பெருக்கும் பொருட்டு மதுஉற்பத்தி செய்யும் ஆலைகளையும் அரசே நடத்தும்படி ஆகியது. மதுஉற்பத்தி மற்றும் மதுச்சாலைகளின் வருமானமே அரசின் பிரதான வருமானமாகியது.”

”அரசே மதுவை தயாரித்து வினியோகிப்பதால் மதுவின் மீது மக்களுக்கு இருந்த மனத்தடை குறைந்து இல்லாமலாகியது. குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் என அனைவரும் மது அருந்த ஆரம்பித்து மது தயாரிப்பு லாபகரமான தொழிலாகியது. விளைவாக நாட்டில் குடிப்பழக்கம் பெருகியது. ரோமின் புகழ்பெற்ற நகைச்சுவைதுணுக்கில் சொல்லப்பட்டது போல மதுச்சாலைகளிலிருந்து வரும் லாபத்தை ஈட்டுத்தொகையாக மக்களுக்கு அளித்து மதுச்சாலைகளின் வழியாக அரசே மீண்டும் பெற்றுக்கொண்டது. அநேகமாக பொருளாதாரத்தில் இதைத்தவிர வேறு பணச்சுழற்சியே இல்லை.”

”மது அருந்துவது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்ப்பட்ட ஒரு இயல்பான அன்றாட நடவடிக்கையாக ஆகி நாடெங்கும் குடி அடிமைகள் தோன்றினர். மாலையில் மட்டும் மது அருந்தியவர்கள் காலையிலும் அருந்த ஆரம்பித்து போதையுடன் பணிக்குச் செல்வது என்பது மக்களின் இயல்பாக ஆகியது. மக்களுக்கு குடிதவிர வேறெந்த நினைவும் இருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் மதுக்கடைகள், மதுவிடுதிகள், அவற்றுக்கு நாள் முழுக்க வந்து செல்லும் குடிநோயாளிகள். சாலைவிதிகள் மீறப்பட்டன. விபத்துகள் அதிகரித்தன. மக்கள் ஒழுக்கம் குறைந்தவர்களாக ஆனார்கள். நாடே நூறுவருடம் பின்னோக்கி சென்று விட்டது. இந்த கால கட்டத்தைத்தான் வரலாற்றாசிரியர்கள் ரோமின் இரண்டாவது இருண்ட காலம் என அழைக்கிறார்கள். அந்த பாதிப்புதான் இன்று வரை தொடர்கிறது.”

சுடோகுயி – பாகம் 2 – சொல்வனம் | இதழ் 226

(தொடரும்)

(அடுத்த இதழில் இடம்பெற்ற இறுதிப் பகுதி: சுடோகுயி – பாகம் 2 – சொல்வனம் | இதழ் 226)

2 Replies to “சுடோகுயி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.