கைச்சிட்டா – 4

வாசகர்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் நேரம் இது. நீங்களும் என்னைப் போன்றவர் என்றால், கிண்டிலிலோ, கணினியிலோ புத்தகம் வாசிப்பதை வெறுத்து ஒதுக்கிவிடுவீர்கள். காகிதப் பூச்சிக்கு எப்படி அச்சுப் புத்தகம் பிடிக்குமோ, அப்படியே எனக்கும். என் வீட்டில் உள்ள நூலறையில், படிக்க வேண்டும் என்று வாங்கி மறந்த புத்தகங்களை மீண்டும் புரட்டிப் பார்த்து, முழுவதுமாக வாசிக்க உகந்த காலமாக கொரோனா காலம் இருக்கிறது.

பின்வரும் நூல் அறிமுகத்திற்கு, பாஸ்டன் குளோப் புத்தகப் பகுதியில் வந்த கட்டுரை உத்வேகமாக இருந்தது. அந்தக் கட்டுரையில், நூலாசிரியர்கள் மெச்சும் நூலாசிரியர்களைக் குறிப்பிட்டு இருந்தார்கள். அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் அறிமுகப்படுத்திய நூல்: தமிழ்ச்சித்தர் மரபு

சித்தர் மரபின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மெய்யியல் நோக்கில் திருக்குறளை ஆராயும் நூல் ‘அறிவு நிலைகள் பத்து’. ஒரு பொது வாசகனுக்குச் சொற்பொருள் காண்பதில் அதீதமான நகர்வு இருக்கிறதோ என்ற ஐயம் எழலாம். அது நியாயமே. ஆனாலும் இந்த அளவுக்குச் சாத்தியமா என்ற பிரமிப்பை உருவாக்கும் நூல் இது. தமிழுக்கே உரிய ஞான, யோக மரபை புரிந்து கொள்ள வழி செய்வது.

த கண்ணன் தமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’ | உரக்கச் சொல்வேன்

‘அறிவு நிலைகள் பத்து’ நூலில் குப்புசாமி தமிழுக்கு என்று தனியே ஒரு மெய்யியல் மரபு இருப்பதாக நிறுவுகிறார். ஆறாவது அறிவைத் தாண்டி மேலும் நான்கு அறிவு நிலைகளைக் குறிப்பிடுகிறார். அன்பு நிலையை, அருள் நிலையையே உயர்ந்ததாக முன்வைக்கிறார். நவீன நடையில் பழங்கவிதைகளுக்கு இடையே இருக்கும் ஒப்புமைகளை நாம் எதிர்பார்க்காத வகையில் கண்டறிந்து முன்வைக்கிறார். இடையிடையே அவர் அறுதியிட்டுச்சொல்லும் சில விஷயங்களை இடக்கு செய்யும் என் பகுத்தறிவால் முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பினும் மொத்த நூலையும் பெரும் வியப்புடன் படித்தேன். (அவரே அப்படியானவற்றை அறிவியல் புனைகதை மாதிரி படிக்கலாம் என்று சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்.) குறிப்பாக, வள்ளுவரைப் புதிய ஒளியில் பார்க்கச்செய்தார்.

கால சுப்பிரமணியம்:

ஆர்.கே. (சேலம் இரா.குப்புசாமி) தமது ’திருக்குறள் ஞான உரை’யில் பத்து அறிவுநிலைகளை வள்ளுவரிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். ஆர்.கே. தமது ‘அறிவுநிலைகள் பத்து’ என்ற திருக்குறள் பற்றிய நூலில் (இது ஞான உரையின் 175 பக்கங்கள் கொண்ட சிறு பகுதி. மலேசியாவின் வள்ளலார் மன்றத்தின் மூலம் ஆங்கிலத்திலும் இது வெளியாகியிருக்கிறது), ஆறு அறிவு நிலைகளுக்கும் மேலான பிற நான்கு அறிவு நிலைகளை இவ்வாறு வகுத்துக் கூறுகிறார். இதை திருமூலர், வள்ளலார் போன்றோரின் சித்தர் மரபிலிருந்து அவர் வருவித்துக் காட்டுகிறார். சமணம் கூறும் ஐந்தறிவு பற்றியோ வாலறிவு பற்றியோ விளக்காமல் இதைச் செய்கிறார்.

ஏழாவது அறிவு – குறிப்பறிதல்
எட்டாவது அறிவு – மெய்யுணர்தல்
ஒன்பதாவது அறிவு – நுண்மாண் நுழைபுலம்
பத்தாவது அறிவு – வாலறிவு.

 • நூல்: அறிவு நிலைகள் பத்து
 • ஆசிரியர்: இரா. குப்புசாமி
 • பகுப்பு: தமிழ் மெய்யியல்
 • பதிப்பகம்: தமிழினி
 • முதல் பதிப்பு: டிசம்பர் 2009
 • விலை: ரூ. 120/-
 • பக்கங்கள்: 176

~oOo~

வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் ஜன்னலோர வாசமும், அண்டை அயல் நடப்புகளும் நிறையக் காணக் கிடைக்கின்றன. நான் உட்காரும் இடத்திற்கு வெளியே உள்ள கொல்லைப்புறத்தில் இரண்டு தனித்தனி ஜோடிப் பறவைகள் கூடு வேறு கட்டியிருக்கின்றன. ‘கபாலி’ படத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி கதாபாத்திரம் சொல்வதுபோல், “அதப் பறக்க விடுங்கடா… அதுதான் அதன் இயல்பு” என மரக் கிளைகளுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குருவிகளும், பட்சிகளும் உட்கார்ந்து கூட்டம் கூடி இரையைக் கொத்திக்கொண்டு காணாமல் போவது, நாள் முழுக்கக் கணினிச் சந்திப்புகளில் அடைபட்டிருக்கும் எனக்கு உவகையைத் தரும். சிறகடிக்கும் ஜீவன்கள் குறித்த நூல்களைத் தேடினேன். சற்றே இன்ப ஆச்சரியம். அமெரிக்காவில் அதிகமாக விற்கும் நூல்களின் தலைப் பத்து பட்டியலில் கட்டுக்காடையும் அன்றில் கரிஞ்சமும் குறித்த இரண்டு நூல்கள் இடம் பிடித்திருக்கின்றன:

 1. The Bird Way: A New Look at How Birds Talk, Work, Play, Parent, and Think by Jennifer Ackerman
 2. What It’s Like to Be a Bird: From Flying to Nesting, Eating to Singing–What Birds Are Doing, and Why by David Allen Sibley

ஜெனிஃபர் ஆக்கர்மென் ஏற்கெனவே “பறவைகளின் அறிவுஜீவித்தனம்” என்னும் நூலை எழுதியிருக்கிறார். பறவைகள் எவ்வாறு வாழ்கின்றன, அவை எவ்வாறு யோசிக்கின்றன என்பது இந்த இரண்டாவது நூல்: “பறவை வழி: பறவைகள் எவ்வாறு பேசி, உழைத்துப், பெற்றோராக இயங்குகின்றன என்பது குறித்த புதிய பார்வை”. பாலூட்டிகளுக்கு என்று ஒரு பாதை இருக்கிறது; பறவைகள் இன்னொரு பாதை வகுத்துக் கொள்கின்றன. சில சமயம் முட்டைகளை இன்னொருவர் கூட்டில் விட்டு அடைகாக்க வைக்கும் சோம்பேறி சால்ஜாப்புகளில் ஆரம்பித்து, முழு நேர மோசடிகள் வரை எல்லாவற்றையும் ஆராய்ந்து இருக்கிறார். திருடு, பொய், புரட்டு, ஏமாற்றுதல் என வில்லத்தனத்தோடு கொஞ்சம் மனிதாபிமானம்(?!), ஒத்துழைப்பு, விளையாட்டு ஆகியவற்றையும் ஒவ்வொரு பகுதியாகக் கவனித்து ஆராய்கிறார். பறவையும் பாலூட்டி போலத்தான் எனத் தோன்றுகிறது. எல்லாப் பறவையினத்திற்கும் ஒரேயொரு குணம், ஒன்றே பண்பு என்று பொதுமைப்படுத்த முடியவில்லை என்பது புரிகிறது.

 • Print Length: 367 pages
 • Publisher: Penguin Press
 • Publication Date: May 5, 2020
 • Sold by: Penguin Group (USA) LLC
 • Language: English
 • ISBN: 0735223017 (ISBN13: 9780735223011)
 • ASIN: B07XNGHN1W

டேவிட் ஆலன் சிப்ளி தலைப்பு இன்னும் கவர்ச்சியாக இருந்தது: “பறவையாக இருத்தல் எப்படி இருக்கும்: சிறகடித்து விண்ணில் வட்டமிடுவது முதல் இரையுண்டு பாடித் திரிவதுவரை – பறவைகள் என்ன செய்கின்றன மற்றும் ஏன் அப்படி இயங்குகின்றன?” முன்னர் சொன்ன புத்தகம் பறவையியல் வல்லுநர்களுக்கு; இந்தப் புத்தகம், சிட்டுகளை வேடிக்கை பார்த்து வியந்துவிட்டுச் செல்லும் சாதாரணர்களுக்கு. 330 முழு வண்ணப் படங்கள்; இரு நூறுக்கும் மேற்பட்ட விதவிதமான பறவை இனங்களுக்கான அறிமுகம்.

வீட்டிற்குப் பின்புறம் கூடு கட்டியிருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கூடு ஆறு ஆண்டுகளாக இருக்கிறது. அதில் மூன்று ஆண்டுகள், அந்தக் கூடுகள் புனருத்தாரணம் கண்டு, குஞ்சு பொரித்துப் பெரிய பறவைகளாகிக் காணாமல் போயுள்ளன. என் சந்தேகமான, “போன ஆண்டு வந்த அதே இனப் பறவைதான் இந்த ஆண்டும் வந்ததா? அதே வம்சாவழியா? ஏன் நடுவில் ஓரிரண்டு ஆண்டுகளில் இந்த இடத்தை பட்சிகள் தேர்ந்தெடுக்கவில்லை?” போன்ற வினாக்களுக்கு இந்த நூல் விடையளிக்கிறது.

 • Print Length: 235 pages
 • ISBN: 0307957896
 • Publisher: Knopf
 • Publication Date: April 14, 2020
 • Sold by: Random House LLC
 • Language: English
 • ASIN: B07SQMT9Q1

படம் உதவி: David Allen Sibley Offers Some Thoughts On ‘What It’s Like To Be A Bird’? : NPR

~oOo~

இ) கடுகுவின் ‘கமலாவும் நானும்’..

புத்தக என்னுரையில் அவர் இப்படி எழுதுகிறார். இசை விமர்சகர்களைப் பற்றி ஒரு குறும்பு வாசம் உண்டு.  பாடத் தெரிந்தவன் பாடுகிறான்.  பாடத் தெரியாதவன் விமர்சகனாகிறான்.  இன்றைய இன்டர்நெட் உலகில் அதைச் சற்று மாற்றிச் சொல்கிறார்கள் எழுதத் தெரிந்தவன் எழுதுகிறான்.  எழுதத் தெரியாதவன் பிளாக்கைத் துவங்கித் தானே எழுதி, தானே பிரசுரித்துக் கொள்கிறான். (தானே பாராட்டிக்கொள்ளவும் செய்கிறான்).

IdlyVadai – இட்லிவடை: கமலாவும் நானும் – புத்தக விமர்சனம் சுபத்ரா

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்ற ஒரு பழமொழி உண்டு. 1960-களில் குமுதம் இதழில் ‘கடுகுச் செய்திகள்’ எழுதத் தொடங்கிய திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள் ‘கடுகு’ என்ற புனைப்பெயரினால் தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் அறியப்படுபவர். எளிமையாக இருக்கும் அவரது எழுத்து நடையில் நகைச்சுவை இழையோடியிருக்கும்.

206 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் சுமார் 100 பக்கங்களில் “நானும்” கட்டுரைகள். கல்கி, குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., சாவி, தேவன், சுஜாதா போன்ற பலருடன் ஏற்பட்ட தன் அனுபவங்களை மிகவும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். அப்பக்கங்களைப் புரட்டிப் படித்த எனக்கு அவர்மேல் ஒரு வியப்பு அல்லது திகைப்பு ஏற்பட்டதில் ஆச்சர்யமில்லை.

அடுத்த 40 பக்கங்களில் எனக்குப் பிடித்த ‘கமலா புராணம்’ கதைகள். மீதி பக்கங்களில் சில கொசுறு கதைகள்.

கடுகு அவர்கள் குமுதத்தில் எழுதத் தொடங்கியதற்கு முன்னரே ‘கல்கி’ இதழில் அவரது ‘பொன் விளையும் பூமி’ என்ற கட்டுரை எழுத்தாளர் கல்கி அவர்களாலே வெளியிடப் பட்டிருக்கிறது. இரண்டு வருடங்கள் கல்கியுடன் பழகிய வாய்ப்பு கிட்டிய இவர் தனது டெல்லி இல்லத்திற்கு வைத்திருக்கும் பெயர் ‘கல்கி’. தமிழின் “குந்தவி, வந்தியத்தேவன், ராஜராஜன், தாரிணி, கரிகாலன், பொன்னியின் செல்வன்” போன்ற எழுத்துருக்கள் (fonts) இவர் உருவாக்கியவையே!

தனது எழுத்துத் திறமையை ஊக்கப்படுத்தியதில் கல்கிக்கு அடுத்ததாகக் குமுதம் ஆசிரியர் திரு.எஸ்.ஏ.பி. அவர்களைப் பற்றிக் கூறியிருக்கும் இவர், ஓர் அத்தியாயத்தில் ரா.கி.ர., பாக்கியம் ராமசாமி மற்றும் புனிதனுடன் குமுதம் அலுவலகத்தில் இருந்த அனுபவத்தைச் சொல்லியிருப்பார். காகிதங்கள், ப்ரூஃப்கள் என்று விரவியிருந்த அந்த அறைகளில் ‘அச்சு மை’யின் வாசனையை ‘உலகின் மிக உயர்ந்த சென்ட் மணத்தைவிட உயர்ந்த வாசனை’ என அவர் குறிப்பிட்டதில் இருந்து பத்திரிகைகளில் எழுதும் ஒரு டிபிகல் எழுத்தாளரின் ஆர்வமும் ஈடுபாடும் புலனாகியது.

1968-ல் தினமணிக் கதிரிலும் எழுதத் தொடங்கிய கடுகு, அதன் ஆசிரியரும் பிரபல நகைச்சுவை எழுத்தாளருமான திரு.சாவி அவர்களை மிகவும் கவர்ந்த தனது எழுத்துகளால், கதிரின் ஆஸ்தான எழுத்தாளராக விளங்கியதைக் கூறியிருக்கிறார். கதிரில் பிரபலமாகிய இவரது ‘கேரக்டர் கட்டுரைகள்’ பின்னால் குங்குமம் இதழிலும் தொடர்ந்திருக்கின்றன! அப்போது டெல்லியில் இருந்ததால் சுஜாதா அவர்கள் கதிரில் தொடர்கதை எழுதத் தொடங்கியிருந்த காலத்தில் அவரது படைப்புகளையும் வாங்கி அவற்றைச் சென்னைக்கு அனுப்புவதையும் இவர் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

விகடன் அலுவலகத்திற்குச் சென்று தேவனைச் சந்தித்த இவரது அனுபவம் சுவாரசியமானது. மவுண்ட்ரோடில், வாலாஜா ரோடு சந்திப்பு மூலையில் அன்றைய அலுவலகம் இருந்ததாம். அப்போதைய விகடனில் ‘கேள்வி-பதில்கள்’ தொடரில் ஆசிரியரிடம் ஸ்ரீமான் பொதுஜனம் கேள்விகள் கேட்பதாய் அமைந்திருக்கும். ஆசிரியரை நேரில் சந்திக்கச் சென்ற இவர் ஒரு துண்டு காகிதத்தில் “ஸ்ரீமான் பொதுஜனம்” என்று எழுதி மடித்து ஒருவரிடம் கொடுத்திருக்கிறார்! அதைப் படித்த தேவன் அவர்களும் உடனே இவரை வரச்சொல்லிப் பார்த்ததில் ஏதும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! 2006-ல் ‘தேவன் அறக்கட்டளையினர்’ சார்பில் கடுகு அவர்களுக்கு ‘தேவன் விருது’ கிடைத்திருப்பது கூடுதல் தகவல்.

இந்த “நானும்” சீரீஸில் என்னை மிகவும் கவர்ந்தது “ஸ்ரீதரும் நானும்” தான். ஏனென்று புத்தகத்தைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். கல்யாணப் பரிசு, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா போன்ற பல வெற்றிப் படங்களைத் தந்த ‘சித்ராலயா ப்ரொடக்ஷன்ஸ்” ஸ்ரீதருக்கும் கடுகு அவர்களுக்கும் சுமார் 65 வருட ஆழமான நட்பு!

எம்.எஸ். அம்மாவைக் கடுகு அவர்கள் சந்திக்கச் சென்றதும் ஆர்வமூட்டும் ஒரு அத்தியாயம். பக்தியிலும் இசையிலும் ஊறியதால் அவர்களின் முகத்தில் தெரிந்த தெய்வீகக் களையும், சாந்தமான முகமும், பரிவையும் பாசத்தையும் பிரதிபலிக்கும் புன்முறுவலும் என இவர் குறிப்பிட்டிருப்பது மயிர்கூச்சரியச் செய்தது. “எம்.எஸ்.அவர்களைப் பார்த்தோம் என்று கூறுவது தவறு. தரிசித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்!” என்று எழுதியிருப்பார்.

“சிவாஜி கணேசன் அவர்களும் நானும்” என்னும் அத்தியாயத்தில் அவரது நாடகங்களைப் பார்க்கச் சென்றதும், அங்கே டேல் கார்னகியின் “How to win friends and influence people” புத்தகத்தின் உத்திகள் எந்த அளவுக்கு வேலை செய்தன எனவும் அவர் கூறியிருப்பது நல்ல நகைச்சுவை. “டைரக்டர் பாலச்சந்தரும் நானும்” பகுதியில் ‘வறுமையின் நிறம் சிறப்பு’ படத்திற்குத் தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்தபோது முதன்முதலில் அவர் கடுகு அவர்களைத் தொலைபேசியில் அழைத்துச் செய்தியைத் தெரிவித்ததாக வந்த இடம் மனம் நெகிழச் செய்தது. அந்த அத்தியாயம் முழுவதுமே மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் பகுதி.

கடுகு அவர்களும் அவரது மனைவியும் ஒரு வருட காலம் உழைத்து ‘நாலாயிரத் திவ்யப் பிரபந்த’ப் பாசுரங்களைப் பதம் பிரித்து அழகாக ஒரு புத்தகமாக குறைந்த விலையில் வெளியிட்டிருக்கிறார்கள். பல காபிகள் விற்றுவிட்ட அந்தப் புத்தகத்தை சுஜாதா அவர்கள், “புத்தகச் சந்தையில் நான் வாங்கிய ஒரே ரத்தினம்” என்று எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இரண்டு பாகங்களையும் எப்போதும் தனது மேஜையில் சுஜாதா வைத்திருப்பார் என்று ‘சுஜாதா தேசிகன்’ சொன்னதாக அந்த அத்தியாயத்தில் கடுகு குறிப்பிட்டிருப்பார்.

Calligraphy துறையிலும் கடுகு அவர்களுக்கு மிகுந்த ஆர்வத்தைப் பற்றி ஓர் அத்தியாயம் உண்டு. கணினியும் இணையமும் பிரபலமாகிய நாட்களில் தமிழ் எழுத்துகளைத் திரையில் பார்ப்பது எத்தனை சுவாரசியாமனது என நம்மால் யூகிக்க முடியும். வாசன், மதன், குஷ்பூ, அழகியின் ‘சாய் இந்திரா’, சிவகாமி, புலிகேசி, ஆனந்தி, காவேரி, தாமிரபரணி, பாலாறு, வைகை, பொன்னி, பொருனை எனப் பல எழுத்துருக்களை இவர் உருவாக்கியுள்ள கதைகள் அடங்கிய அந்த அத்தியாயம் சிறப்பானது.

“ஆவிகளும் நானும்”, “டயரியும் நானும்” தொடர்ந்து “நகைச்சுவையும் நானும்” அத்தியாயம் மிக முக்கியமானதாக எனக்குப் பட்டது. அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து நான் படிக்கும் ஒவ்வொரு எழுத்திலும் கடுகு அவர்கள் சொன்ன கருத்துகள் கண்முன் வந்துபோவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ‘நகைச்சுவை எழுதுவது எப்படி’ என்ற கட்டுரையைத் தான் நான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வளவு சிறந்த கருத்துகள்.

“குஷ்வந்த் சிங்கும் நானும்” பகுதியும் அதில் “ILLUSTRATED WEEKLY”-யை இவர் வேறுமாதிரி பிரித்து எழுதியிருப்பதும் சிரிப்பூட்டுபவை. தாகூர், மெர்லின் மன்றோ, கார்ல் மார்க்ஸ் ஆகியவர்கள் காலமான சமயம் வீக்லியும் இருந்து, அதன் ஆசிரியராக குஷ்வந்த் சிங்கும் இருந்திருந்தால் ‘ஆசிரியர் பக்கத்’தில் அவர் எப்படி எழுதியிருப்பார் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையைக் கடுகு அவர்கள் அழகாக எழுதியிருப்பார். மறுவாரமே அதை ‘ஆசிரியர் பக்கத்’தில் வெளியிட்ட குஷ்வந்த் சிங் தன்னுடைய ஜோக் புத்தகத்திலும் அதனைச் சேர்த்திருக்கிறாராம்.

இதற்கடுத்து புத்தகத்தில் வருபவை கமலாவின் பிரதாபங்கள். அவற்றின் சுவாரசியத்தை நீங்கள் படித்துத் தான் தெரிந்துகொள்ள முடியும். தொச்சு கதாப்பாத்திரமும், பின்னால் வரும் ‘ப்ரியம்வதா’ கதாப்பாத்திரமும் என்றும் மனதில் தங்குபவை. இவ்வளவு சொன்ன பிறகும் நான் எழுதாமல் விட்ட விஷயங்கள் பல அடங்கிய புத்தகம் இந்தக் ‘கமலாவும் நானும்’. ஒரே வார்த்தையில் சொல்வதானால் “சுவாரசியம்” என்று சொல்லலாம்.

   

Series Navigation<< கைச்சிட்டா – 3கைச்சிட்டா – 5 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.