
இந்தத் தொகுப்பைப் படித்து முடித்தவுடன் சிறிது நேரம் என் வாழ்வில் நான் நேரில் கேட்ட இசை வடிவங்களை நினைத்துப் பார்த்தேன்.
பதின் பருவம் வரை பெரும்பாலும் சினிமா இசைதான் என் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது. நிகழ் இசை என்றால் மாரியம்மன் கோவில் திருவிழா நேரங்களில் வாசிக்கப்படும் பறை மேளமும், எப்போதாவது கோவில்களிலும், திருமணங்களிலும் காதில் விழும் நாதஸ்வர இசையும். செவ்வியல் நிகழ் கச்சேரிகளை நான் இந்தியாவில் இருந்த வரை கேட்டதேயில்லை. டி.வி, ரேடியோ, சினிமாவில் கேட்டதை இதில் சேர்க்கவில்லை. என்னை போன்ற சிறு நகர நடுத்தர வர்க்க, பிராமணக் குடும்பப் பின்னணி இல்லாத பலருக்கும் இது பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
நான் இங்கிலாந்து வந்த முதல் வாரத்திலேயே கேட்ட முதல் இசை பீத்தோவானின் ஐந்தாம் சிம்பெனி. லண்டன் மார்லிபோன் ரயில் நிலையத்தில் ஹைவேக்கம் என்னும் ஊருக்குச் செல்லும் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கையில் “டா டா டா டாம்” என்ற முழக்கத்துடன் ஒரு பிராஸ் பேண்ட் இசைக்க ஆரம்பித்தது.
என்னையறியாமல் ப்ளாட்பாரத்தில் இருந்து கிட்டதட்ட ஓடிப்போய் அந்த பிராஸ் பேண்ட் குழுவைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்துடன் சேர்ந்து கொண்டேன். அப்போது எனக்கு அது செவ்வியல் இசை எனத் தெரியாது. பீத்தோவன் என்னும் மேதையின் சிம்பெனி அது என்று தெரியாது. அவர்கள் வாசித்த பல வாத்தியங்களின் பெயர்கூடத் தெரியாது. ஆனால் வாயைப் பிளந்து கொண்டு ரயில் புறப்படுவதுகூட தெரியாமல் அவர்கள் வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை அந்த இசை ஆக்ரமித்தது. இரவு உறங்கவிடாமல் செய்தது.
அந்த “டா டா டாம்“ என்ற ஓர் ஓசையை முதலடியாய் வைத்துக் கொண்டு என்னால் இணையத்திலும் , உடன் பணிபுரியும் ஆங்கிலேய நண்பர்கள் மூலமும் கேட்டுத் தெரிந்துகொண்டு வெகு சுலபமாக மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டுப் புரிந்து ரசிக்க முடிந்தது.
இன்னொரு முக்கிய காரணம், மேற்கத்திய செவ்வியல் இசையை நேரில் கேட்பது, இங்கு பாப் இசையைக் கேட்பதை விடச் சுலபம். ஏதாவது ஒரு சர்ச்சில், ஏதாவது ஒரு மேடையில், ஏதாவது ஒரு வடிவில் இது அனு தினமும் இங்கே நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அணுகலாம், ரசிக்கலாம், விமர்சிக்கலாம். இதற்கு நீங்கள் இசை ரசிப்பின் விற்பன்னராக (connoisseur) இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இரண்டு காதுகள் இருந்து கேட்பதற்கு மனம் இருந்தால் போதும்.
நமக்கும் ஒரு பெரிய செவ்வியல் இசை பாரம்பரியம் இருக்கிறது. அதன் ஒரு துளியும் மக்கள் தொகையின் பெரும் பகுதியான என்னைப் போன்றவர்களுக்குச் சென்று சேரவில்லை. நம் கல்வியில் அதற்கு இடமில்லை. நம் அன்றாடங்களில் அதற்குத் துளியும் சம்மந்தமில்லை. நான் மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்க ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து கர்னாடக சங்கீதக் கச்சேரிகளை ஒலித் தட்டில் கேட்க ஆரம்பித்தேன். அதன் நுட்பங்கள் எனக்கு பிடிபடவில்லை. மூன்று மாதங்களில் கேட்பதை நிறுத்திவிட்டேன். எல்லா செவ்வியல் கலைகளை ரசிப்பதற்கும் ஒரு முன்னறிமுகமும், சிறு பயிற்சியும் தேவையாகிறது.
கிரியின் இந்தத் தொகுப்பு மேற்கத்திய செவ்வியல் இசைக்கு தமிழில் நல்ல அறிமுகமாக இருக்கிறது. நான் குறிப்பிட்ட முன்னறிமுகமும் , சிறு பயிற்சியும் மேற்கத்திய செவ்வியல் இசை கேட்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்தத் தொகுப்பில் கண்டிப்பாகக் கிடைக்கும். ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழேயும் அவர்
கொடுத்திருந்த சுட்டிகள் அவர் பேசும் பொருளை உடனடியாகக் கேட்டு ரசிக்க மிகவும் உதவியாக இருந்தன. முதன் முதலாய்க் கேட்பவருக்கு இதுவே இசை கேட்கும் பயிற்சியாகவும் அமையும்.
கிரியின் வாக்னரைப் பற்றிய கட்டுரை இந்தத் தொகுப்பின் முதன்மையான கட்டுரை என்பதில் எனக்கு ஐயமில்லை. கருத்தியல் முரண்பாடுகள் கலையை ரசிப்பதற்குக் தடையாக வேண்டுமா என்பது இப்பொழுதும் நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. இந்தக் கட்டுரை வாக்னரின் இசையை முன்வைத்து இதைப் பேசுகிறது. ஸ்டீபன் ப்ரை அடையும் திறப்பை அந்தக் கட்டுரையைப் படித்தபின் நீங்களும் அடையக்கூடும்.

இந்தத் தொகுப்பைப் பற்றிய என் விமர்சனங்கள் அவர் இந்திய இசையைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் மீதே.
“எப்படிப் பெயரிட” ஆல்பத்தைப் பற்றிய கட்டுரை அதிகமும் அதற்கு வந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லும் வடிவிலேயே அமைந்துள்ளது. இதே கட்டுரையில் இப்படிபட்ட இசையை எப்படி அணுக வேண்டும், எதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இந்த இசையைக் கேட்டால் மேலதிகமாக ரசிக்கலாம் போன்ற அருமையான தகவல்களும் உள்ளன. ஆனால், விமர்சனத்திற்கு விமர்சனம் என்னும் பாணியில் கட்டுரை அமைந்துள்ளதால், விமர்சனத்திற்கான பதில்கள் மனதில் பதியும் அளவிற்கு, இந்த முக்கிய வழிகாட்டிக் குறிப்புகள் மனதில் பதிவதில்லை. ஆசிரியர், இந்தக் கட்டுரையையும் பிற கட்டுரைகளின் ரசனையைக் கட்டமைத்தல், இசையை விளக்குதல் போன்ற பாணியில் அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
பெரியவர் பி.எஸ். ராஜம் பற்றிய கட்டுரையில் பாடாந்திரம் என்று ஒரு சொல் வருகிறது. கிரி அதை விளக்கவில்லை. வாசகனுக்கு அது தெரிந்திருக்கும் என நினைத்து எழுதியதுபோல இருந்தது. இது போன்ற கலவையான தொகுப்பு நூல்களில் வாசகனுக்குக் கர்னாடக இசை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதி எழுதுவதே சிறந்தது என நினைக்கிறேன். ஜி.என்.பி பற்றிய கட்டுரையில், அவருடைய பாணியைப் பற்றிச் சில வரிகள் எழுதியிருக்கலாம்.
இந்தத் தொகுப்பு ஒரு மேற்கத்திய செவ்வியல் இசை அறிமுக நூலாக எனக்கு நிறைவை அளித்தது. தமிழ் பேசும் மக்களுக்கு மேற்கத்திய செவ்வியல் இசையை அறிமுகப்படுத்துவதைவிட நம்முடைய கர்னாடக இசையைப் புரியும் வகையில் எளிமையாக அறிமுகபடுத்துவது மிக முக்கியம் என நினைக்கிறேன். கிரியைப் போன்ற இசையறிவும், எழுத்தாற்றலும், ஆர்வமும் கொண்டவர்களால் இதைத் திறம்பட செய்ய முடியும்.
இந்த தொகுப்பு ஒரு மேற்கத்திய செவ்வியல் இசை அறிமுக நூலாக எனக்கு நிறைவை அளித்தது. மேற்கத்திய இசையை அறிமுகபடுத்திகொள்ள விரும்புவோருக்கு இந்த நூலை நான் தயங்காமல் பரிந்துரைப்பேன்.
புத்தகக் குறிப்பு:

- தலைப்பு : காற்றோவியம்
- எழுதியது: ரா.கிரிதரன்
- புத்தகம் வாங்க: அமேசான் கிண்டில் வடிவில்
One Reply to “‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து”