இருமை

விமான நிலையத்தில்   காத்திருந்த என்னைப் பார்த்தவுடன் வேலன் கள்ளிப் பூவென சில்லென்று சிரித்தான். அந்தக் கபடமற்ற சிரிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும் நான் அந்த விபரத்தை உடனே கூறியதற்கு. 

   சிங்கப்பூரிலிருந்து வந்த அவன் கொண்டு வந்த இரு பெட்டிகளையும் ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்டு  திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சென்றோம். அது இரண்டாயிரமாவது ஆண்டு. வாடகை வண்டிகளெல்லாம் இப்போதளவிற்கு இல்லை. நான் வில்லிவாக்கத்திலிருந்து டி.வி.எஸ்   எக்செல் வண்டியில் சென்று  நுங்கம்பாக்கத்தில் நிறுத்திவிட்டு இரண்டு ரிடர்ன் சீட்டு வாங்கிக் கொண்டு திரிசூலம் சென்றிருந்தேன். 

      நடைமேடையில்   காலியாகயிருந்த இருக்கையில் பெட்டியை வைத்தவுடன் அவனிடம் கூறினேன் ” வள்ளிக்கு அடுத்த வாரம் கல்யாணம்” என்று. ஊரிலிருப்பவர்களையும் நண்பர்களையும் விசாரித்து அனைவரையும் காணப்போகும் எதிர்பார்ப்பின் மகிழ்வில் கிறக்கமாக நடந்து வந்தவன் அமர்வதற்கு முன் இதைச் சொன்னதற்கு அவனின் கந்தர்வப் புன்னகையை பொறுக்க முடியாத என்னுள்ளிருந்த கொடு அரக்கனே காரணம். 

        வள்ளி இவன் மணக்க  விரும்பிய  பெண். அவன் முகத்தின் மலர்வு  கண்ணாடித் துண்டுகளென உடைந்து சிதற அடுத்து வைப்பதற்கு உயர்த்திய காலடி பெரும் பள்ளத்தாக்கின் மேல் அந்தரத்தில் நிற்பதைக் கண்டவன்போல முகம் வெளிறினான். அதைக் கண்ட என் அரக்கனே சற்று கூசினான். 

         சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் எங்கள் ஊரில் என் பக்கத்து வீட்டுக்காரன்தான்  இந்த வேலன். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவன். என்னைவிட இரண்டு வகுப்பு கூடுதலாகப் படித்தான். பள்ளியில் சேர்க்க வலது கையால் இடக் காதைத் தொடவேண்டும் என்பதே விதியாக இருந்ததால் நல்ல உடற்வாகோடு இருந்த வேலன் ஒரு வருடம் முன்னதாகவே பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டான். நானோ சரியான வயதில் சேரவே பெரும் பிரயத்தனப் படவேண்டியதாகிவிட்டது. 

         வேலனுக்கு ஒரு அக்கா இரண்டு அண்ணன்கள் மற்றும் இரு தங்கைகள். எனக்கு ஒரு அக்கா மட்டும். அவன் துறுதுறுவெனத் திரிவான். இவன் ஏதாவது குறும்பு செய்து அவர்கள் வீட்டில் அனைவரும் சேர்ந்து சிரிக்கும் சத்தம் எங்கள் வீட்டிற்கு கேட்கும். அவர்கள் வீட்டில் மூத்த மூவரும் சரியாக படிக்காததால்  இவன் சிறிது நன்றாகப் படித்தவுடனேயே சிறப்பாக படிப்பதாக கொண்டாடினார்கள். எங்கள் வீட்டில் என் அக்கா நன்றாகப் படித்தாள். நானெங்கே பேர் வாங்குவது. 

       படிப்பெல்லாம் பிறகுதான். அவன் பார்க்கும் வேலைகளைப் பார்க்கும்போது எனக்கே அவன் மேல் பிரியம் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒற்றையடிப் பாதையில் ஓட்டிச் சென்று புல் அறுத்து வருவான். மாடுகளுக்கு தவிடோ புண்ணாக்கோ போட்டு தண்ணீர் காட்டுவான். மாட்டு வண்டியில் சென்று களத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிவருவது. அவற்றை அவன் அம்மாவோடு சேர்ந்து அவித்து காயவைப்பது. பின் அவற்றை மீண்டும் வண்டியிலேற்றி அரவை மில்லிற்கு கொண்டு சென்று அரைத்து வருவது…என எல்லா வேலைகளும் செய்வான். மற்றவர்கள் உதவி செய்தாலும் இவன்தான் அவர்களை ஊக்குவான். அப்போது நான் சைக்கிள் ஓட்டக்கூட கற்றுக் கொள்ளவில்லை. 

           வேலை மட்டுமில்லை. அவனின் அக்கா தங்கைகள் எந்த வேலை சொன்னாலும்  செய்வான். அவனிடம் இருக்கும் எதைக் கேட்டாலும் கொடுப்பான். அவனை அவன் வீட்டில் கொண்டாடுவது போலவே ஊரில் உள்ளோரும் தூக்கி வைத்துப் பேசுவார்கள். எங்கம்மா அவ்வப்போது அவனைப்போல உண்டா. இவனும்தான் இருக்கான் ஒன்னுக்கும் பிரயோசனமில்லாமல் எனக் கடிக்கும்போது அம்மா மீது கோபம் வருவதைவிட அவன் மீதான வெறுப்பே அதிகமாக உண்டானது. 

          ஆனால் வேலன் என்னிடமும் அன்பாகத்தான் இருந்தான். ஒன்றுவிட்ட மாமன் மகனென்பதால் ” மச்சான்! மச்சான்! ” என்றே அழைப்பான். உடன் பிறந்தவர்களோடு செல்ல முடியாத இடங்களுக்கு என்னைத்தான் அழைத்துச் செல்வான். சந்தைக்குச் செல்வது, நாடகங்களுக்கு செல்வது,  கண்மாய்க்கு செல்வது என நாங்கள் சில இடங்களுக்கு சேர்ந்து போவோம். எந்த வேலையானாலும் முகம் சுழிக்காமல்  காலங்காலமாக அதை செய்து வருவது போன்ற  உற்சாகத்துடன் செய்வான். என்னால் அவற்றை செய்ய முடியாது என்பதால்  அவனுடைய ஒவ்வொரு செயலும் என்னுள் பொறாமையைக் கிளறியபடியே இருந்தது. 

       வேலனின் வேலைத் திறத்தால் அவன் அண்ணன்களின் திறன் மிகவும் மட்டமாகத் தெரிந்தது. இதை அவர்களே நம்பவும் ஆரம்பித்தார்கள். எந்த விசயத்திற்கும் அவன் அப்பா மட்டுமல்ல அண்ணன்களும் அவனிடமே யோசனை கேட்டார்கள். அவன் மேல்நிலை வகுப்பு படிக்கும்போதே குடும்பத் தலைவனாகிவிட்டான். இவன் சொல்வதையே மற்றவர் இயல்பாக ஏற்றார்கள். 

        அப்பா சென்னையில் இருந்ததால் அக்கா அம்மாவுடன் நானும் சென்னைக்கு வந்துவிட்டேன். திருவிழாக்களுக்கு செல்லும்போது அவனோடு திரிவேன். பட்டப்படிப்பை முடித்தவுடன் ஐ.ஏ.எஸ்.  படிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவன்  சிங்கப்பூர் சென்றான். இவன் சிங்கப்பூர் செல்லும் முன்பே முதல் அண்ணனுக்கு திருமணம் முடிந்துவிட்டது. சென்ற ஆறு வருடங்களில் மற்ற நால்வரின் திருமணமும் முடிந்தது. 

     தடையெல்லாம் நீங்கி, இவன் வாழ்க்கையைத் தொடங்க விமானம் இறங்கியவனிடம்தான் அவன் மனதைக் கூம்ப வைக்கும் விசயத்தைக் கூறினேன். அதன் பிறகு என் வீட்டில் இருந்த ஒருநாள் முழுக்க அவன் சிரிக்கவேயில்லை. எனக்கு மனம் உறுத்தினாலும், விசயத்தை நான் சொல்லாவிட்டால் நாளை தெரியத்தானே போகிறது  என ஆற்றுப்படுத்திக் கொண்டேன். அன்று இரவு ரயிலில் ஊருக்குச் சென்றவன் வள்ளியின் திருமணத்தன்று சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டான். அதன் பிறகு வேலனைப் பார்க்கவேயில்லை. 

        ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பியதாகவும், அவனே திருமணம் செய்து கொண்டு அருகிலுள்ள புதுவயலில் தனியாக இருப்பதாகவும் அவன் வீட்டு ஆட்கள் யாரையும் அவன் பார்ப்பதில்லையெனவும்  அவனுடனும் யாரும் பேசுவதோ அவன் வீட்டிற்கு செல்வதோ இல்லையென்றும் சொன்னார்கள். அவ்வளவு அன்போடும் பிரியத்தோடும் இருந்தவர்கள் எப்படி சட்டென மாறமுடியும் என மனதினுள் எழுந்த கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் கிடைக்கவில்லை.

           இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பெரியகோட்டையூரிலுள்ள என் குல தெய்வக்  கோவில் குடமுழுக்கிற்காக ஊருக்குச் சென்றேன். நிகழ்ச்சி முடிந்து புதுவயல் வழியாக இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பும்போது சட்டென வேலன் நினைவு வந்தது. அவன் முகவரியை அவன் அண்ணனிடம் கேட்டால் சொல்வாரோ மாட்டாரோ என்று எண்ணி என் பெரியப்பாவிடம் கேட்டேன்.

         அந்தப் பகுதியின்  நுழையுமிடமே நாய்களும் காற்றும் சேர்ந்து கலைத்துப் போட்ட குப்பைகளால்  நாற்றமடித்தது. இத்தனை வருடம் சிங்கப்பூரில் சம்பாதித்தவன் ஏன் இம்மாதிரியான இடத்தில்  இருக்கிறான் என யோசிக்க வைக்குமாறு சுவர்கள் பூசப்படாத   ஓடுகள் போட்ட வீடுகளுடன்  கழிவுநீர் பாதையில் கசிந்தபடி அந்தத் தெரு மிகவும் மோசமாகயிருந்தது. 

         பத்து வீடுகள் தள்ளி சாலையைவிட்டு சற்று உள்ளொடுங்கிய வீட்டின் திண்ணையில் உயரத்திற்கு பொருத்தமற்ற தொப்பையுடன் அமர்ந்திருந்தவர் நான் தேடியபடி வருவதைப் பார்த்து ” யாரைத் தேடுறீங்க  ”  எனக் கேட்டார். 

  ” சிவலாங்குடிக்காரர், வேலன்னு பேரு” என்றேன். 

       சிறிது  யோசித்தவர்          ” டேய் சங்கரா, நீயாடா … வா வா “

என எழுந்து கையை விரித்தபடி வந்தார். 

       அவரின் முகத்திற்குள் என் நினைவிலிருந்த வேலனின் முகத்தை கண்டறிய முயன்றவாறே நெருங்கினேன். 

    “எத்தனை வருடங்களாயிற்று பார்த்து” என்றவாறு கையைப்பிடித்து அழைத்துச் சென்று திண்ணையில் அமர்த்திவிட்டு சிறிய நிலைப்படிக்குள் நுழைந்து சென்று  செம்பில் தண்ணீர் கொண்டுவந்தார். 

    அடையாளம் ஏன் தெரியவில்லையென மனதிற்குள் குழப்பமாய்  இருந்தது. மீண்டும் அவர் முகத்தையே உற்றுப் பார்த்தபோது அந்த வேறுபாடு தெரிந்தது. வேலனின் அடையாளமே அவனின் கள்ளமற்ற புன்னகைதான். இவரின் முகம் இறுக்கமாக இருந்தது. 

       “என்ன.. உத்து உத்து பார்க்கிற” 

     ” உங்க முகம் அடையாளமே தெரியல, அந்தச் சிரிப்பு எங்கே போச்சு” 

   ” அதெல்லாம் போன பிறவி மாதிரி இருக்கு. எல்லாம் போச்சு” 

என்று சொல்லிக்கொண்டே தனக்குள் ஆழ்ந்தார். 

” நம்ம சொந்தக்காரங்க யாரும் இங்க வந்ததில்ல. உனக்கு யாரு இந்த இடத்த சொன்னது” 

” தாமனிச் செல்லய்யனார் கோயில் குடமுழுக்குக்கு வந்தேன். இந்த ஊர்லதான் இருக்கீங்கன்னு யாரோ சொன்ன ஞாபகம். என் பெரிப்பாக்கிட்ட கேட்டேன். அவருதான் இந்தப் பகுதிதான் வீட்டு நம்பர்லாம் தெரியாதுன்னாரு ” என்று கூறிவிட்டு தண்ணீர் குடித்தேன்.

 செம்பை கீழே வைத்தபடியே

   ” உங்களப் போல உண்டான்னு ஊரே பேசுச்சே. அவ்வளவு பாசமா சிரிச்சுக்கிட்டு இருந்துட்டு எப்படி யாருமே வேண்டாம்னு இப்படி இங்க வந்து கெடக்கறீங்க”   எனக் கேட்டேன். 

     ” அமுதமாவே இருந்தாலும் அதையே சாப்பிட்டுக்கிட்டு இருந்தா சலிப்பாயிடாதா, அது மாதிரிதான்”. 

   ” சும்மா சமாளிக்காம ஏன் இப்படி ஆனிங்கன்னு சொல்லுங்க” 

  ” என்னோட முப்பது வயசு வரைக்கும் வீட்டுக்காகத்தான் வாழ்ந்தேன். அவங்களுக்கு என்ன புடிக்குமோ அதைச் செஞ்சேன். அவங்க விரும்பின மாதிரி நடந்தேன். தனிப்பட்ட விருப்பம் ஏதுமேயில்லாமா மத்தவங்களுக்காக வாழ்றது எவ்வளவு சுகமா இருக்கும் தெரியுமா. கூட இருக்கறவங்க சந்தோசத்தப் பாத்துப் பாத்து சந்தோசத்துல, பஞ்சு மாதிரி நாமே பறக்கற மாதிரியிருக்கும். ஆண்களோட வாழ்க்கையில முக்கியமான கட்டம் காலேஜ் முடியிற காலந்தான். அப்ப அவன் எந்தப்பக்கம் திரும்பறானோ அதுதான் அவனோட திசை. அதுக்கப்பறம் திரும்பவே முடியாது. நான் ஐ.ஏ.எஸ் படிக்கனும்னு நெனச்சேன். அக்காவுக்கு கொஞ்சம் நல்ல எடத்துல மாப்பிள்ளை பாக்கனும்னா பணம் வேணும். அதுக்காக என்னைய சிங்கப்பூர் போகச் சொன்னாங்க. என்னோட வாழ்க்கை திசை மாறிடிச்சு” 

   ” சிங்கப்பூர் போனது நல்லதுதானே. நெறையப் பேரு அங்க போயி நல்லா சம்பாதிக்கிறாங்களே” 

   ” நல்லதுதான். இங்க ஊர்ல படிக்காம வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கிறவனுகளுக்கு. படிச்சிட்டு போறவனும் ஊர்க்காலிப் பயல்களோட ஒன்னாத் தங்கி, ஒன்னா பொங்கித் தின்னுக்கிட்டு அடிமை மாதிரிதானே இருக்கனும். கொஞ்சம் படிச்சிட்டு போறவனுக்கெல்லாம் இருண்ட காலம் மாதிரிதான் அங்க இருக்கிற நாளெல்லாம். அங்க பாத்த வேலய இங்க வந்து பாக்க முடியாது. இங்க தங்கனும்னா  முதல்லேருந்து ஆரம்பிக்கனும். இல்லேன்னா மறுபடி அங்கேயே ஓடனும்”. 

  “ரெண்டு வருச காண்ட்ராக்ட்லதானே போனீங்க” 

   “ஆமா, அப்படித்தான் போனேன். அப்புறம் அக்கா கல்யாணம் முடிஞ்சவுடன தங்கச்சிங்க கல்யாண செலவுக்காக எக்ஸ்டன்ட் பண்ணச் சொன்னாங்க. அப்பறம் அவங்க எல்லாருக்கும் சீர் செய்யனும்னு இன்னம் ரெண்டு வருசம். மொத்தம் ஆறு வருசம்”.

     ” வந்த பிறகு ஏன் மறுபடி போனீங்க ” 

    ” வீட்டு ஆளுங்கக்கிட்ட எனக்குன்னு ஒன்னே ஒன்னுதான் கேட்டேன். அந்த வள்ளிய பேசி முடிங்கன்னு”

    “வள்ளிய காதலிச்சிங்களா” 

 “காதல்னும் சொல்லலாம். இல்லேன்னும் சொல்லலாம்”

  ” ஒரு தலைக் காதலா” 

” இல்லையில்ல. காரைக்குடி அழகப்பாவுல ரெண்டு பேரும் பி.ஏ. ஒன்னாப் படிச்சோம். ரெண்டு பேருக்குமே புடிச்சிருந்துச்சு.  ஆனா நான் சொல்லிட்டேன் வீட்டு ஆளுங்க ஒத்துக்கிட்டாதான் கல்யாணம்னு. இது காதலான்னு என்னால உறுதியா சொல்ல முடியல” 

  “என்னாலயும் சொல்ல முடியல” என்றேன்.

” அப்பறம் நடந்ததுதான் உனக்கு தெரியுமே. நீதானே சொன்ன வள்ளிக்கு கல்யாணம்கிற விசயத்தை. சிங்கப்பூர்ல இருக்கறப்பவே பல தடவ சொல்லிட்டேன் வள்ளிய பேசி முடிங்கன்னு. பண்ணலாம்னு சொன்னவங்க எதுவுமே பண்ணல”

  ” ஏன், பொண்ணப் புடிக்கலையாமா”. 

” வள்ளியோட அக்காவுக்கு சடங்கு வச்சு இவங்கள கூப்பிட்டாங்களாம். இவங்களும் போயிருக்காங்க. சொந்தக்காரங்க  நாலஞ்சு பேரு சேர்ந்த மாதிரி அவங்க வீட்டுக்குள்ள  போனப்ப அவங்க எல்லாரையும்  பொதுவா வாங்கன்னு கூப்பிட்டாங்களாம். ஆனா, இவங்கள தனியா வரவேற்கலைன்னு இவங்களுக்கு கோபம். என்னைய மதிக்காதவங்களோட  வீடேறிப்போய் பொண்ணு கேட்க மாட்டேன்னு எங்கப்பா இருந்திட்டாரு. வந்த உடனே வள்ளி வீட்ல போய் கேட்டேன்,  அவங்கள வந்து பொண்ணு கேட்கச் சொல்லு தர்றோம்னு சொன்னாங்க. இவங்க  வேணும்னா நீ கூட்டிக்கிட்டு வந்திடு வரவேற்க்றோம் ,  அந்த வாசல மாத்திரம்   மிதிக்க மாட்டோம்னு நின்னாங்க. அந்த மாதிரி வர்றதுக்கு வள்ளி சம்மதிக்கல. எனக்கு பைத்தியம் புடிக்கிற மாதிரி ஆயிடுச்சு. எங்கேயாவது ஓடனும்னு வெறி வந்துச்சு. சிங்கப்பூர் ஓனருக்கு என்மேல நல்ல அபிப்ராயம் வர்றேன்னு சொன்னவுடனே இங்க ஏஜன்டுக்கிட்ட சொல்லி டிக்கெட் ஏற்பாடு பண்ணினார்”

” நீங்க ஏன் மறுபடி சிங்கப்பூர் போறதுக்கு முடிவு பண்ணுனீங்க”

  ” எங்க அப்பா முடியாதுன்னு சொன்னவுடனே என் அண்ணன்கக்கிட்டயும் அக்காக்கிட்டேயும் கெஞ்சினேன். நீங்களாவது வந்து பொண்ணு கேளுங்க.  கல்யாணம் முடிவு பண்ணியிருந்தாலும் அதை மாத்திப்பாங்கன்னு. ஆனா அவங்களும் அப்பா பேச்ச மீற மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எல்லாருக்குமே ஏதாவது ஒரு கணத்துல தோணும். நாம இப்ப வாழ்றது சரியான வாழ்க்கைதானான்னு. அது ஒரு தரிசனம் மாதிரி. சில பேரு மாறுறான். பல பேரு அப்படியே போயிடலாம்னு மனம் குமைந்தபடி வாழ்ந்து கழிச்சிடறான்”

செம்பில் மீதமிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு எதிரில் இருந்த வேம்பில் காய்த்திருந்த    பசும் பொன்னிறக் காய்களை சற்று நேரம் நோக்கினார். சில காக்கைகள் வேப்பம் பழத்தின் தோலுக்குள்ளிருந்த இனிய சதைப்பகுதியை சப்பிவிட்டு கொட்டைகளை கீழே நழுவவிட்டுக் கொண்டிருந்தன.

  ” அதுவரைக்கும் மனசுல திடமாயிருந்த ஒன்னு நொறுங்குச்சு. அப்படியே என் வாழ்க்கைய திரும்பிப் பார்த்தேன். முப்பது வருச முழு வாழ்க்கைய அவங்களுக்காக வாழ்ந்திருக்கேன். எனக்காக ஒரு சின்ன ஈகோவ அவங்களால விட்டுக்குடுக்க முடியல. அப்ப முடிவு பண்ணுனேன். அவங்களுக்கு உதவுற மாதிரி இனி நடந்துக்கவே கூடாதுன்னு” 

” அவங்க மேல உள்ள கோபத்துல உங்க வாழ்க்கையை ஏன் அழிச்சுக்கிட்டீங்க” எனக் கேட்டேன்.

“எதிரிகள பழிவாங்கனும்னா வாழ்ந்து காட்டனும். உடனிருக்கிறவங்கள பழிவாங்கனும்னா அழிஞ்சுதான் காட்டனும். எனக்கே தெரியுது என் வாழ்க்கைய அழிச்சுக்கிறேன்னு. அவங்கமேல உண்டான கசப்பு அப்படியே அடியாழத்துல படிஞ்சிருச்சு. எதக் குடிச்சாலும் கரையல. எவ்வளவு துப்பினாலும் தீரல. என்னதான் பண்றது”.

சிங்கப்பூரில் தனியாகவே இருந்து உள்ளுக்குள்ளேயே மறுகி  மறுகி, இது மாதிரி பேசக் கற்றிருப்பார் என எண்ணிக் கொண்டேன்.

” சிங்கப்பூர்ல அஞ்சு வருசம் இருந்து சம்பாரிச்சு,  குடிக்கிறதுக்கும் மற்றதுக்குமா அழிச்சேன். இங்க வந்து சொந்தக்காரங்க நல்லது கெட்டதுக்கெல்லாம் தள்ளாடியபடியே போயி அவங்கள எங்கேயும் வரவிடாம பண்ணுனேன். நாடகத்துல டான்ஸ்க்காரியா நடிச்சவள  கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊருக்குள்ளேயே தலை காட்டவிடாம செஞ்சேன்”. 

அப்போது இடுப்பில் பிளாஸ்டிக் குடத்தை தூக்கியபடி நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் வந்தாள். 

” இவதான் ரமாதேவி. என் பொண்டாட்டி”  எனச் சொன்னார் லேசாக இளித்தபடி.

       நான் , அவளின் கருத்து வெடித்த உதடுகளையும் உள்ளொடுங்கிய கண்களையும் பார்த்து உண்டான    அசூசையை முகத்தில் காட்டாமல் மெல்ல தலையாட்டினேன். அவள் எந்த உணர்வையும் காட்டவில்லை.

” இவன் என் மச்சான். மெட்றாசில இருக்கான். கொஞ்சம் காப்பி போடு” என்று அவளிடம் சொன்னான். அவள் உள்ளே சென்றவுடன்  என்னைப் பார்த்து 

” சிங்கப்பூர்லேந்து வந்தப்ப கொஞ்சம் பணம் இருந்துச்சு. பெரிய மைனருன்னு நெனச்சுக்கிட்டு வந்தா. இப்ப கூடச் சேர்ந்து சீரழியிறா” என்றார். 

” இந்தப் பழிவாங்கும் படலம் எப்பத்தான் முடியும் ” என்றேன். 

” அப்பப்ப யோசிப்பேன் ஏனிப்படி வேகனும்னு. ஆனா உள்ள கனன்றுகிட்டு இருக்கிற அனல் ஆறலையே. எல்லாருடைய மனசுலயும் அமுதத்தையும் நஞ்சையும் கலந்துதான் வச்சிருக்கு. மத்தவங்கல்லாம் இரண்டையுமே மாத்தி மாத்தி வெளிய காட்றாங்க. ஆனா, நான் முழுசா அமுதத்தையே செலவழிச்சேன். ஒரு கட்டத்தில அமுதம் மொத்தமும் காலியாகி வெறும் நஞ்சு மட்டுமே முழுசா மிஞ்சிடுச்சு. அதத்தான் இப்ப காட்டிக்கிட்டு இருக்கேன். பார்ப்போம் நஞ்சுக்குக்கீழ அமுதம் கொஞ்சமாச்சும்  மிச்சமிருக்கான்னு” என தீர்க்கமாக என்னை நோக்கினார்.

      உள்ளே காப்பி போடும் ஓசை சன்னமாக வெளியே கேட்டது.

~oOo~

ஊருக்குச் சென்றுவிட்டு செல்லலாமென்று சென்றேன். இங்கு வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. எங்கள் வீட்டிற்கு முன்பாகவே கிளை விரித்துப் பூத்திருந்த புளிய மரத்திற்கு அருகில் வேலன் வீடு கண்ணில் பட்டது.  அவன் அப்பா வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்துவிட்டு செல்லலாம் எனத் தோன்றவே அவரை அணுகினேன். முற்றிலுமாக உருமாறியிருந்தார். நரைத்த தாடி  முகத்தை மறைத்து கழுத்தையும் தாண்டியிறங்கியிருந்தது. உள்ளொடுங்கிய விழிகளில் துயரிருந்தாலும் தெளிவும் மிளிர்ந்தது. 

  நெருங்கிய என்னை கூர்ந்து பார்த்து ” சங்கரனா, வா வா” என்றபடி கையை நீட்டினார். 

  அவரின் உலர்ந்த கைகளை பிடித்தபடி   “மாமா, நல்லாயிருக்கீங்களா” எனக்கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தேன். ஏதோ இருக்கிறேன் என்று பொருள் கொள்ளும் வண்ணம், அவர் தலையை ஆட்டினார்.

  “அத்தை எங்க மாமா, நல்லாயிருக்காங்கல்ல” 

  ” ஆங் ஆ.. அவளுக்கென்ன.. நல்லாத்தான் இருக்கா. இந்தா கம்மாய்க்கு போயிருக்கா” என்றவரிடம் பையிலிருந்த வாழைப்பழ சீப்பைக் கொடுத்தேன். 

” இதெல்லாம் எதுக்குப்பா”  என்று தயங்கியபடி வாங்கிக் கொண்டார் .

  ” மாமா, கோயிலுக்கு போயிட்டு வர்ற வழியில வேலு அத்தானைப் பார்த்தேன்” என்றேன்.

    அவர் விழிகள் ஒருகணம் ஒளிர்ந்து அணைந்தது. அவராக ஏதாவது சொல்வார் என நினைத்தேன். அவர் எதுவும் கூறாமல் தனது விரல்களை விரித்தும் மடக்கியும் நோக்கிக்கொண்டிருந்தார். 

    ” நீங்க அத்தானுக்கிட்ட பேசினீங்களா” என மெல்லக் கேட்டேன். 

    ” அவன் ஊருக்கு கெளம்பனதுல இருந்து பேசத்தான் மெனக்கெடறேன். அவந்தான் காத அடச்சுக்கிட்டானே. எங்க பக்கம் பாக்கவும் மாட்டேங்கிறான், நாங்க சொல்றத கேக்கவும் மாட்டேங்கிறான்”.

  ” அவரு ஆசப்பட்டது ஒன்னே ஒன்னதாம். அத ஏன் நீங்க நிறவேத்தி வைக்கலன்னு கேக்கறாரு”

   ” அந்த விசயத்தத்தான் சொல்ல முயற்ச்சி பண்றோம்.  போன் பண்ணா எடுக்கறதில்ல. லெட்டர் போட்டா படிக்கிறதில்ல. நேர்ல வர்றப்ப முகம் பாக்கிறதில்ல. நாங்க என்னதான் பண்றது.”

சற்று நேரம் காற்றில் மேலும் கீழும் ஆடிய புளிய மரத்தின் கிளைகளைப் பார்த்தார். 

  ” அப்பவே நெனச்சேன்.  இவ்ளோ பாசமா ஒருத்தன் இருக்க முடியுமான்னு. யாரு கண்ணு பட்டுச்சோ, இல்ல எங்கண்ணுதான் பட்டுச்சோ, அப்படியே புறண்டுடுச்சு. ஊஞ்சல் ரெண்டு பக்கமும் மாறி மாறி ஆடனுங்கிறதுதான் அதோட அமைப்பு. ஒரே பக்கமா ரொம்ப தூரம் வந்துச்சுன்னா எதிர்ப்பக்கமும் அதே தூரம் போகனுமில்ல.  இப்ப அப்படி போயிக்கிட்டிருக்கிற ஊஞ்சல் திரும்பவும் இந்தப்பக்கம் வரும் . அப்படித்தான் நெனச்சுக்கிட்டு வாழ்றோம்” என்று அவர் கூறியபோது துளி விழிநீர் அவரின் வேட்டியில் விழுந்தது.

” காலம் எல்லாத்தையும் மாத்தும். கவலைப்படாதீங்க மாமா” என்று அவர் கைகளை என் உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தியபடி கூறிவிட்டு எழுந்தேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.