அக்னி

“ரீட்டா, எறச்சி வெந்துட்டான்னு பாரு, லைட்டா பெப்பர் போட்டு எறக்கு கேட்டியா?…கொஞ்சோல அண்டிப்பருப்பும் வறுட்டி..” என்றவாறு ஒரு மால்பெக் ஒயின் பாட்டிலை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன்.

“எப்டித்தான் இதக் குடிக்கியளோ? வ்வே…ஒரே வாட..” என்று முகத்தைச் சுளித்தாள் ரீட்டா.

“எட்டி, ஒயினப் பழிக்கப்புடாது கேட்டியா? அது ஜீசஸப் பழிக்க மாதில்லா! அமிர்தமாக்கும் இது…”

“சும்மாக் கெடங்க..அத்த காதுல விழுந்துராம.”

“அம்மக்கி ஜீசஸ நல்லாத் தெரியும்ட்டி…நீ இங்க வா..ஒரு க்ளாஸ் அடிச்சிப் பாரு…சில்லுன்னு ஒரு காதல் ஜோதிகா மாதி…கம் ஆன், லெட்ஸ் டூ இட் பேபி…” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தேன். வெடுக்கென கையை உதறிவிட்டு அவள் சமையலறைக்குள் ஓட, அம்மா வந்து மேசையின் மறுபுறம் உட்கார்ந்தாள்.

“மக்ளே, அம்மக்கிம் ஒரு கிளாஸ் எடு மக்ளே..” என்றாள். அவள் நிஜமாகத்தான் கேட்டாள். நான் சென்று அலமாரியில் இருந்து அழகான வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு புதிய பெல்ஜியம் கிளாஸை எடுத்து வந்து அவள் முன் வைத்தேன். அம்மா அந்த கிளாஸை எடுத்து கொஞ்ச நேரம் சுற்றிச் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள். நான் என் கிளாஸில் ஒயினை ஊற்ற அம்மாவும் கிளாஸை நீட்டினாள். நான் அதை நிரப்பி அம்மாவின் முன் வைத்தேன்.

அதைக் கையில் எடுத்து சில நொடிகள் கூர்ந்து பார்த்தாள். மெதுவாக அதைக் குடிக்க ஆரம்பித்தாள்.

“எம்மா..ஒரு நிமிசம் இரி…ஒயின் குடிக்கதுக்கு ஒரு மொற இருக்கு..ஃபிரான்ஸ்ல  ஒரு ஃபிரெண்ட் சொல்லித் தந்தான் கேட்டியா? இந்தாப் பாரு.” என்று சொல்லி எனது கிளாஸை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தேன். பின், மெதுவாக ஒரு மிடறு உறிஞ்சி அதை இடது பக்கக் கன்னத்தில் ஒதுக்கினேன். பின், அதை வலது பக்கக் கன்னத்திற்கு மாற்றினேன். அப்படியே கண்களை மூடி சில நொடிகள் அதை வாயில் வைத்து மெல்ல தொண்டைக்குள் இறக்கினேன்.   

“கொள்ளாம் மக்ளே நீயும் ஒனக்க ஒயினும்..” என்று சொல்லி அம்மாவும் அப்படியே குடித்தாள்.

மட்டன் மற்றும் அண்டிப் பருப்புடன் வந்த ரீட்டாவைப் பிடித்து என் அருகே உட்காரச் சொன்னேன். அவள் தர்மசங்கடத்தில் நெளிந்தாள்.

அம்மா குடித்து முடித்து மீண்டும் கிளாஸை நீட்டி, “இன்னொரு கிளாஸ் வுடு மக்ளே” என்றாள்.

இருவரும் மூன்று சுற்றுகள் குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ரீட்டா இடையிடையே என் கையில் அழுத்தி கண்ணால் சைகை செய்தாள்.

மௌனத்தைக் கலைத்த அம்மா, “மக்ளே, அம்மக்கி நீ ஒண்ணு செய்யணும்…” என்றார்.

“என்னம்மா…சொல்லு..”

“அம்மய பொதைக்கக் கூடாது மக்ளே…எரிக்கணும்…” என்றாள். என் முகத்தைக் கூர்ந்து பார்த்து, “எரிக்கணும் மக்ளே…நீ செய்வியா மக்ளே..அம்மக்கி பொணத்த நீ எரிக்கணும்..என்ன?” என்றாள்.

அம்மா அப்படிக் கேட்டதும் சட்டென உமா அத்தையின் நினைவு வந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்தே அம்மாவும் உமா அத்தையும் நெருங்கிய தோழிகள். எங்கள் வீட்டில் ஒருத்தியாகவே இருந்தாள் உமா அத்தை. நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது ஒருநாள் யாரோ வந்து அத்தையின் தற்கொலையைப் பற்றிச் சொல்ல, அம்மா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாள். நினைவு திரும்பியதும் அழுது கதறிக் கொண்டே அம்மா உமா அத்தையின் வீட்டிற்கு ஓடினாள்.

அன்று இரவு நான் அம்மாவின் மடியில் படுத்திருக்க, “அப்பிடி வெந்து போய்க் கெடக்கா மக்ளே…பாலப்பம் மாதி..எதுக்கு மக்களே அவ அப்பிடி வெந்தா? அவளுக்கு எரியணும்னு அப்பிடி என்ன வந்து? எல்லாமே எனட்ட சொல்லிட்டுத் தான செய்வா? இப்ப என்ன விட ஏதோ பெருசா அவள நெருப்புக்குள்ள இழுத்துருக்கு பாத்துக்க.”

நான் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு கிடக்க அவள் சொன்ன காட்சி எனக்குள் அப்படியே ஓடியது.

“ஆனா…ஒண்ணு மனசிலாவல மக்ளே…வீட்டுல உள்ள எல்லா வெங்கலப் பாத்திரத்தயும் புளி போட்டுத் தேச்சிக் கழுவி தண்ணி எடுத்து அந்த ரூம் ஃபுல்லா வச்சிருக்கா…எதுக்கு இப்படிச் செஞ்சா? எனக்கு அது தெரியணும் மக்ளே..” என்றாள் அம்மா. அந்தக் கேள்விக்கான பதில் இன்றுவரை எனக்குப் புரியவேயில்லை. ஒருவேளை அம்மாவிற்குத் தெரிந்திருக்கலாம்.

அப்போதிருந்து அம்மாவிற்கும் நெருப்பிற்கும் ஒரு உறவு ஆரம்பித்திருக்க வேண்டும். உச்சபட்ச மகிழ்ச்சியிலும், கடும் துயரத்திலும் சில சமயங்களில் நீண்ட மௌனத்தின் முடிவிலும் அம்மா என்னிடம் கேட்பது, “அம்மய எரிக்கணும் மக்ளே” என்பதுதான்.

……..

நான் முதல் வேலையில் சேர்ந்திருந்த சமயம். ஒருநாள் வீட்டில் நுழையும்போது அம்மா சுவரில் சாய்ந்து உட்கார்ந்து என்னென்னவோ புலம்பிக்கொண்டிருந்தாள். பெரிய மாமா கோவமாக கத்திக்கொண்டிருந்தார்.

“எம் மானத்த வாங்கதுக்குன்னுதா இருக்கா இவா…அடிச்சி சென்னியப் பேத்துரணும்… மொவனுக்கு மீச மொளச்சாச்சி… பண்ணுத காரியம் கொள்ளாம்…”

அம்மா தனக்குத்தானே, “எனக்க மொவனுவ இருக்கானுவ… எனக்கப் பொண்ணு மக்களு… மக்ளே, அம்மய எரிக்கணும் மக்ளே.. பொதைக்காத மக்ளே..எப்பிடியாவது எரிச்சிரு மக்ளே” என்று பிதற்றினாள்.

சின்ன மாமாக்கள் முகத்தை இறுக்கமாக வைத்து உட்கார்ந்திருந்தனர். நான் மெதுவாக சமையலறைக்குள் சென்று ஆச்சியின் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

“ஆச்சி, அம்மக்கி என்னாச்சி? மாமா யேன் கத்துகாரு?”

“ஒங்கம்ம திருக்கூத்து பண்ணிட்டா மக்ளே..மாமா வெளிநாட்லருந்து ஒரு பெரிய குப்பி கொண்டாந்துருக்கான்…இவா எடுத்து ஃபுல்லா குடிச்சிட்டா பாத்துக்க..குடிகாரனுவ பொலம்ப மாதி ஒரே பொலம்பக்கம்…”

நான் எழுந்து சென்று அம்மாவைக் கையைப் பிடித்து எழுப்பி அறைக்குள் அழைத்துச்சென்று படுக்க வைத்தேன். அம்மா இன்னும் புலம்பிக்கொண்டுதான் இருந்தாள், “மக்ளே எரிக்கணும் மக்ளே…”

சற்று நேரம் என்னை அணைத்துப் படுத்துக் கிடந்து என் தலையில் விரல்களால் அளைந்துகொண்டிருந்தாள். விசும்பல் சத்தத்தோடு, “மக்ளே, அம்மய மாதி இருக்கப்படாது… செரியா?… நா ஒட்டுண்ணி மாதி ஆய்ட்டேன்… நீ நிமிந்து நிக்கணும் ….கேட்டியா?… லேய்…. என்ன?.. எவன் வந்தாலுஞ் செரி…நேரா நிக்கணும்…என்ன?” என்றாள்.

அம்மா தனது ஒவ்வொரு பலவீனம் வெளிப்படும்போதும் என் கண்களை மட்டுமே பார்ப்பாள். அந்த மாதிரி சமயங்களில் நான் அந்த இடத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வாள். பெரிய விசயங்கள் விவாதிக்கப்படும் இடங்களில் என்னை இழுத்துக் கொண்டு சென்று நிறுத்தினாள். அவளை முன்வைத்து என்னை திசை மாற்றி விட்டாள்.

ஒவ்வொரு நாளும் கேட்கிற சுடுசொற்கள், சம்பவங்கள் அம்மாவின் அகத்தில் மிகக் கொடூரமான தீக்கங்காக கனன்று கொண்டிருந்தது. நாளுக்கு நாள் அந்நெருப்பு விரிந்துகொண்டே சென்றதை என்னால் மட்டுமே உணர முடிந்தது. அவளது அக நெருப்பை அணைக்க எந்த நீர்மையாலும் குளிர்மையாலும் முடியாது. அவளது நெருப்பு நெருப்பினால்தான் அணையும். ஆனால், அவளது நெருப்பின் வெம்மை என்னைக் கருக்குவதற்குப் பதில் பலமாகக் காத்துநின்றது.

….

நான் மீண்டும் ஒரு கிளாஸ் ஒயின் ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தபோது அம்மா மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

“மக்ளே, மாமாக்க ஸ்காட்ச் பாட்டில நா குடிச்சி பிரச்சின ஆச்சில்லா? ஒனக்கு ஒர்ம இருக்கா மக்ளே?”

“ஆமாம்மா…மாமா நெலயா நின்னாருல்லா?”

“நிப்பான் நிப்பான்..அவனுக்க பவுசு….அவஞ் செஞ்சதெல்லாம் எனக்குத்தான தெரியும்…ராஸ்கல் ஒரு குட்டியள நடக்க வுட மாட்டான்..அவனுக்க ஒழுக்கம் மயிரு…”

நான் அமைதியாக அம்மாவின் கையைப் பிடித்து உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ரீட்டா, மக்களு ஒண்ணும் மனசுல நெனைக்காத கேட்டியா? அது எனக்கும் எனக்க அண்ணனுக்கும் உள்ளதாக்கும்…ஒங்கப்பனயும் அம்மயயும் சேத்து வச்சது நானாக்கும்..தெரியுமா மக்களுக்கு?”

ரீட்டா தலையை ஆட்டினாள்.

“ஒன்ன இவனுக்கு கெட்டதுக்கு எனக்கு மொதல்ல மனசு வரல்ல மக்ளே…ஒங்கம்ம என்ன கொஞ்சமா கேட்ருக்கா? ஒம் வயசுல ரெண்டு பிள்ளயளயும் தூக்கிட்டு வீம்புல வந்தவளாக்கும் நா…அவ என்ன என்னெல்லாம் கேட்டா தெரியுமா மக்ளே…”

பேச்சை திசைதிருப்ப வேண்டி, “அம்மா இந்த ஒயின் அர்ஜென்டினால இருந்து வந்ததாக்கும், தெரியுமா?” என்று கேட்டேன்.

“நீ செரியான ஆளு மவனே..பொண்டாட்டிக்க கண்ணு கலங்க வுட மாட்ட..என்ன மக்ளே?”

ரீட்டாவைக் கண்ணைக் காட்டி உள்ளே போகச் சொன்னேன்.

“ஒங்கத்த என்னப் பாத்துக் கேட்டா..எதுக்கு இப்பிடி முன்னாடி முன்னாடி வந்து ஆட்டிட்டு நிக்க, போயி பொழக்கடைல கெடக்க வேண்டியதானன்னு…எங்கூடப் படிச்சாம்லா ஐயப்பன், அவன் பொண்டாட்டி பிள்ளையோட போய்ட்ருந்தான்…என்னடே எப்டி இருக்கன்னு தா கேட்டேன்…இவ வந்து இப்பிடி ஆடிட்டா..அவனுக்க மூஞ்சி கருத்துப் போய்ட்டு பாத்துக்கோ…அவளுக்கச் சீரு தெரிஞ்சது தான மக்ளே…அம்ம ஒண்ணுஞ் சொல்லாம நின்னேன்..ஆனா, ஒனக்க மாமனும் சேந்து கேட்டாம் பாரு…எனக்குத் தாங்க முடில மக்ளே..என்ன தோணிச்சோ என்னமோ, வேணுன்னே அவனுக்க பாட்டில எடுத்து முழுசா குடிச்சிட்டேன்..அதுக்க கூட தண்ணி சேத்துதான் குடிக்கணுமாமெ…அது கூடத் தெரியாம மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டேன்…ஒரே எரி…நல்ல எதமா இருந்து பாத்துக்க…எரி..எரி…போதமில்லாம போயிட்டு…அம்மைக்க நெஞ்சுக்குள்ள தீயாக்கும் மக்ளே…எரிச்சாதான் அடங்கும்…”

அம்மா ஏன் தன் கணவனை விட்டு வந்தார் என்று இன்று வரை நானோ தம்பியோ கேட்டதில்லை. எங்கள் வாழ்க்கையில் அப்பா என்றொரு நபர் இல்லவே இல்லை. அதொன்றும் பெரிய இழப்பாகத் தெரிந்ததில்லை. அப்படிப் பார்த்துக்கொண்டாள் அம்மா. இருபத்தி மூன்று வயதில் இரண்டு கைக்குழந்தைகளுடன் தாய்வீட்டிற்குத் துணிந்து வந்தவள். மாமாக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். தாத்தா போய்விட்டதால் மாமாக்களின் கூட்டு வருமானத்தில்தான் குடும்பம் ஓடியது. நானும் தம்பியும் மாமா மகன்கள், மகள்களோடு மகிழ்ச்சியாகத்தான் வளர்ந்தோம். ஆனால், அம்மா வாய்விட்டுச் சிரித்து நான் பார்த்ததேயில்லை. அந்தப் பெரிய குடும்பத்தின் எல்லா வேலைகளையும் அம்மாதான் கவனித்துக்கொண்டாள். ஆனால், அவளது இருப்பு பெரும்பாலும் சமையலறையிலோ அல்லது புறவாசலிலோ தான் இருக்கும். வெள்ளைப் புடவை மட்டும்தான் கட்டவில்லை. மற்றபடி அவளை ஒரு விதவையாகத்தான் நடத்தினார்கள். தாத்தா இருந்தபோது அவளை இளவரசி போல வைத்திருந்தார். ஒரே சாதிக்குள் திருமணம் செய்ய நினைத்து அம்மாவை அந்தப் படுகுழிக்குள் தள்ளியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த ஆள் என் பெரிய மாமாவுக்கு நன்றாகத் தெரிந்தவர்தான்.

……

ஒருநாள் நள்ளிரவு, தூக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு முழித்துப் பார்த்தேன். என் தலைமாட்டில் தன் இரண்டு கால்களையும் விரித்து நீட்டி, கைகள் இரண்டையும் பின்னால் தரையில் ஊன்றி பின் சாய்ந்து உட்கார்ந்து பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தாள் அம்மா. முடியை விரித்துப் போட்டிருந்தாள், அவளது முகம் முழுவதும் வியர்வை. பயந்துபோய் எழுந்த நான் அவளருகே போய், “எம்மா…என்னம்மா செய்யி..தண்ணி வேணுமாம்மா?” என்று கேட்டேன். அம்மா எதுவும் சொல்லாமல் கண்களை மூடியிருந்தாள். அந்தக் கணம் அவள் அழுத மாதிரி எனக்கு நினைவில்லை.

தண்ணீர் எடுத்து வந்து அம்மாவின் கையைப் பிடித்துக் குடுத்தேன். வேக வேகமாக தண்ணீரைச் சிந்திக்கொண்டே குடித்தாள். அவளது புடவை ஈரமானது. சொம்பை கீழே வைத்துவிட்டு அப்படியே என்னை இறுக்கமாக அணைத்து முத்தமிட்டாள். அவளது உடல் தீக்கங்கு போல கொதித்துக்கொண்டிருந்தது. அந்த முத்தத்தின் ஈரமும் வெம்மையும் என்னுள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. புல்லின் மீது வைக்கப்பட்ட எடைமிக்க ஒரு பனித்துளி போல!

ரீட்டா வந்து, “அத்த சோறு எடுக்கட்டா?” என்றாள்.

“இல்ல மக்களு…பசிக்கல்ல…அவனுக்கு கொண்டு குடு…” என்றாள். நான் ரீட்டாவைப் பார்த்து வேண்டாமென தலையாட்டினேன். அம்மா மீண்டும் ஒரு கிளாஸ் ஒயினை அவளே ஊற்றிக் குடித்தாள்.

“எனக்கு வேற ஒருத்தனக் கெட்டக் கழியாமலா நா வந்தேன் மக்ளே? எனக்கக் குடும்பம் போதும்னுதான வந்தேன்…எனக்கு எம் மவனுவளும் ஒடப்பொறந்தவனுவளும்  போதும்னுதான வந்தேன்…குடும்ப கவுரவம் பாக்கவனுவ மொதல்ல தான் ஒழுங்கா இருக்கணும்லா மக்ளே…பொட்டப்புள்ளயளுக்கு மட்டும் தனி ரூல்ஸா…எங்கப்பா இருந்திருந்தா இவனுவ ஒரு வார்த்த சொல்ல முடியுமா? பொண்டாட்டிய பேச்சக் கேக்க வேண்டியதா, வேண்டான்னு சொல்லல்ல..அதுக்குன்னு சொந்தத் தங்கச்சி மேல நம்பிக்க இல்லாமப் போவுமா? அப்பிடி என்ன சந்தேகம் மக்ளே? நா இந்த வீட்டுப் படியத் தாண்டியிருப்பனா சொல்லு..”

“விடும்மா…நீ அதயெல்லாம் போட்டுக் கொழம்பாத…அதான் தனியா வந்தாச்சில்லா..என்னவாஞ் செஞ்சித் தொலையட்டும்..” என்றேன் நான்.

“அதுக்குச் சொல்லல்ல மக்களே…இன்னிக்கி ஒனக்கு நாலுவேரு இல்லாம ஆய்ட்டுல்லா? என்ன மூஞ்சக்கூட பாக்காமல்லா போறான் ஒம் மூத்த மாமென்…அங்க எல்லா பிள்ளையளும் எம் மடிலல்லா வளந்துச்சி…அவ்வோ அம்மமாருக்கு ஊர் சுத்த மட்டுந்தா நேரம்…நீ ரீட்டாக்கிட்டக் கேளு…நா என்னெல்லாம் செஞ்சேன்னு…”

“அது இப்பிடித்தா நடக்கணும்னு இருக்கும்மா..அன்னிக்கி வீட்ட விட்டு எறங்கும்போ மாமாட்ட நாக்கப் புடுங்க மாதி நாலு வார்த்த கேட்டுருப்பேன்…செரி, தாத்தாக்க மூஞ்சி ஞாபகம் வந்துட்டு…”

…..

எங்கள் திருமணத்திற்கு ஒரு வருடம் முன்பு ஒரு நாள். அம்மா ஓய்வில் இருந்த சமயம். அதற்கு சில தினங்களுக்கு முன்புதான் அம்மாவுக்கு கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. அலுவலகம் முடித்து வீட்டில் நுழைகிறேன். பக்கத்துத் தெருவில் வசித்த அம்மாவின் வகுப்புத் தோழியின் கணவர் எங்கள் வீட்டிலிருந்து வெளியிறங்குகிறார்.

அவர் எங்கள் வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டியிருக்கவில்லை. “தேவிடியாப் பய…குசலம் விசாரிக்கல்லா வந்துருக்கான்…தேவிடியா…இவளுக்க மூஞ்சிக்கி…மவனுக்குக் கல்யாண வயசாவு…அடங்குகாளா பாரு…” அத்தை கத்திக்கொண்டிருந்தாள். மாமா எதுவும் சொல்லாமல் சுவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். உள்ளே அம்மாவின் அழுகைச் சத்தம் கேட்டது.

எனக்குள்ளிருந்து கோவமும் அழுகையும் பீறிட்டு வெளிவந்தது.

“ஓய்..நீரெல்லாம் ஒரு மனுசனா ஓய்? ஒம்ம தங்கச்சிய ஒருத்தி தேவிடியான்னு கேக்கா..நீரு பாத்துட்டு நிக்கீரு என்ன? பெரிய குடும்ப கவுரவம் மயிரு என்ன வோய்? எங்கம்மைக்க யூட்ரச அறுத்தப் பொறவும் ஒங்களுக்க சந்தேகம் அடங்கல்ல என்ன வோய்?” என்று மாமாவின் முன்னால் நின்று கதறி அழுது கத்திவிட்டேன்.

அத்தை ஓடிவந்து, “எம் மாப்ளய கேள்வி கேக்கியால நாய்க்கிப் பொறந்தப் பயல? அநாதப் பயக்களுக்க வீம்பு மயிரு..வெளிய எறங்குல எனக்க வீட்ட விட்டு ராஸ்கல்..அவனுக்க அம்மைக்கி சப்போர்ட்டுக்குல்லா வாரான்…ஒங்கம்மக்கிப் புத்திதானல ஒனக்கும் இருக்கும்? எம் மவள ஒரசி ஒரசி கெட்டிக்கிடலாம்னு நெனைக்காத கேட்டியா…எறங்குல வெளில தேவிடியாமவன…” என்று என் சட்டையைப் பிடித்துத் தள்ளினாள்.

“கைய எடுட்டி…பொம்பளன்னு பாக்க மாட்டேன் பாத்துக்க…” என்று நான் கத்த, அம்மா மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தாள். அவளது கையில் தாத்தாவின் பைபிளும் ஜெப மாலையும் இருந்தன.

“மக்ளே, அம்மயக் கூட்டிட்டுப் போ மக்ளே…நமக்கு இனிமே இங்க இருக்காண்டாம்…” என்று என் தோளைப் பிடித்து நின்றார். அம்மாவைக் கைத்தாங்கலாகக் கூட்டிக்கொண்டு வெளியே இறங்கினேன்.

மெல்ல நடந்து செல்ல, அம்மாவின் அறுவை சிகிச்சை நாள் ஞாபகம் வந்தது. அம்மாவின் கர்ப்பப்பையை ஒரு மெல்லிய பிளாஸ்டிக் குடுவையில் போட்டு அந்த நர்ஸ் என்னிடம் கொடுத்து இன்னொரு ஆய்வகத்தில் குடுக்கச் சொன்னாள். ஒரு கணம் அதைக் கூர்ந்து பார்த்தேன். ஒரு பெரிய மீன் முட்டை போல இருந்தது. அதற்குள் துடிதுடித்து நீந்திச் செல்லும் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள். அப்படி நீந்திப் பிழைத்த ஒரு சிறு மீன்குட்டிதானே நானும். அம்மாவின் கர்ப்பப்பை வெதுவெதுப்பாக இருந்தது. அந்த வெம்மை எனக்குள் இறங்கி மெல்ல மெல்ல நீட்சியடைந்து சென்றது.

….

ரீட்டா நடந்ததை நினைத்து அழ ஆரம்பித்து விட்டாள். “எட்டி, நீ என்னத்துக்கு அழுக இப்ப? வா ஒரு ரவுண்டு அடி..” என்று நான் அவளைச் சீண்டினேன்.

“மக்களு….நீ எனக்கப் பொன்னுமோளுல்லா மக்களு..ஒங்கம்ம அப்பிடிச் செஞ்சா..அது தலைல எழுத்து…வுடு..நீ எம் மவந்தா வேணும்னு வந்தல்லா…நல்லாருப்ப மக்களு…அழாத…எட்டி அழாதன்னேன்…” என்று அம்மா ரீட்டாவின் கையைப் பிடித்து அழுத்தினாள். ரீட்டா எழுந்துபோய் முகத்தைக் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தாள்.

“என்ன சொல்லு மக்ளே….அப்பன் இருக்க வரைக்கிதா பொம்பளப் பிள்ளையளுக்குத் தெம்பு பாத்துக்க..இன்னா ஒங்க ஆச்சிக்க மேளத்தப் பாரு…பெரிய அம்மையாத்தான் இன்னிக்கும் என்ட்ட அதிகாரம் போடுகா…” என்று சொல்லி ஆச்சியின் அறையைக் கண்ணால் காட்டிச் சிரித்தாள் அம்மா.

“ஆமம்மா, பெரிய கேரள மகாராணில்லா? அப்பிடித்தா இருப்பா…அவளும் அவளுக்கக் கெமயும்..” என்றேன் நான். அம்மா முகத்தில் சிரிப்பைப் பார்த்ததில் எனக்கு ஒரு நிம்மதி. ஆனால், அவளது மகிழ்ச்சியெல்லாம் சில நொடிகள்தான் நீடிக்கும். சட்டென அவளது முகம் உக்கிரமாவதைப் பலமுறைப் பார்த்து திகைத்திருக்கிறேன். அம்மாவின் சிரிப்பை எப்படி நீடிக்கச் செய்வதென்பது எனக்குத் தெரியவில்லை. கூடிய சீக்கிரம் அவளையும் ரீட்டாவையும் என்னோடு அழைத்துச் சென்றுவிட வேண்டும், இந்த ஊர், மனிதர்கள் எல்லாரிடமும் இருந்து விலகித் தொலைதூரத்தில் அவளுக்கு ஒரு புதிய உலகை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

….

அடுத்த மாதம், நான் மீண்டும் வெளிநாடு கிளம்ப வேண்டிய சமயம். ஒரு சான்றிதழ் விசயமாக நான் படித்த கல்லூரிக்குச் சென்றேன். கல்லூரிக் கேண்டீனில் நுழைந்தபோது தற்செயலாக எனது உடற்கல்வி ஆசிரியரைப் பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்கவியலா ஒரு நபர். ஓடிச்சென்று அவரது கையைப் பிடித்தேன்.

“சார்…எப்பிடி இருக்கீங்க சார்?”

அவரது முகம் மிகப் பிரகாசம் ஆனது. “டேய்…வாடே வாடே..பாடி பில்டர்…எப்பிடி டே இருக்கா? வெளிநாட்டுல தான டே?”

“ஆமா சார்…ஃபிரான்ஸ்ல இருக்கேன் சார்..”

“சந்தோசம் டே..நீ நல்லா வருவன்னு எனக்கு நம்பிக்க உண்டும் பாத்துக்க…ஆமா, எத்தனப் புள்ளயோ?”

“சார்..இப்பதான் சார் மூணு மாசமாச்சி..நா ஒரு மாசம் லீவுக்கு வந்தேன்…இனி போய்ட்டு டெலிவரி டைம்ல வரணும் சார்..”

“சூப்பர்..சூப்பர்…அம்ம ஓங்கூடத்தான டே?” என்று கேட்டு என் கையைப் பிடித்தார்.

“ஆமா சார்…தனியா வந்துட்டோம்லா…” என்று தரையைப் பார்த்தேன்.

“அது செரி ஆவும்..விடு டே..ஒம் மாமால்லாம் ஒரு ஆளா? எனட்ட ஒரு நாள் செரியா வாங்குனான் கேட்டியா?”

“ஆமா சார்..அடிக்கடி அதச் சொல்லி அம்மா சிரிப்பாங்க சார்..”

“இன்னொரு மேட்டரு உண்டு கேட்டியா? ஒங்கம்மைக்கே தெரியுமோ என்னவோ?”

“என்ன சார்? சொல்லுங்க…”

“அது…..ம்ம்….ஒங்கம்மய நா பொண்ணு கேட்டுப் போனேன் தெரியுமா? அது ஒரு காலம் டே..” என்று மிக சாதாரணமாகச் சொன்னார். எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இவரைப் பார்த்துப் பழகியிருக்கிறேன். அம்மா கூட இப்படி ஏதும் நடந்ததாகக் காட்டிக்கொண்டதேயில்லை.

“ஷாக் ஆய்ட்டியோ? எனக்கு அவளத்தான் கெட்டணும்னு ரொம்ப ஆச…ஒங்க தாத்தாட்ட போய் பொண்ணு கேட்டம் பாத்துக்க..”

எனக்கு விசயம் புரிந்தது.

“ஒங்க குடும்பத்தப் பத்திதா ஒனக்குத் தெரியும்லா? சாதிகெட்டப்பயல, வெளியப் போலன்னாங்க..ஒங்க மாமன் வேற என்ட்ட கடுப்புல இருந்துருப்பான்..அது அப்பிடியே போச்சி..சட்டுன்னு புடிச்சி ஒங்கப்பனுக்கு கெட்டிக் குடுத்துட்டாவ…சீரழிஞ்சிப் போய்ட்டா…” என்று சொல்லி அமைதியானார் சார்.

எனக்கு ஏனோ அவரைக் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.

“செரிடே…செரி, நீ பாத்து போய்ட்டு வா…பொம்பளப் புள்ளயா பொறக்கட்டும் என்ன?” என்று சிரித்தார் சார்.

“செரி சார்…” என்று சொல்லி அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுக் கிளம்பினேன்.

….       

சார் வாழ்த்தியது போலவே நடந்தது. அறுவை சிகிச்சை அறையின் முன் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள் அம்மா. கதவைத் திறந்த நர்ஸ் என் மகளை அம்மாவின் கைகளில் கொடுத்தபோது அம்மா மீண்டும் இருபத்தி மூன்று வயது அம்மாவாகத் தெரிந்தாள்.

நாற்பத்தி ஒன்றாம் நாள். என் மகளைத் தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டிருந்தாள் ரீட்டா. அம்மா தன் அறையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. நேரம் ஆகிக்கொண்டிருந்தது. அவள் வந்துதான் குழந்தைக்குப் பெயரிட வேண்டும். என் மகள் பிறந்த நாள் முதல் அம்மா வேறொருத்தியாக மாறியிருந்தாள். பிள்ளையைத் தொட்டிலில் ஆட்டி தாலாட்டுப் பாடி உறங்க வைப்பது, குளிப்பாட்டுவது, சாம்பிராணி போடுவது, சூரிய வெளிச்சத்தில் மடியில் வைத்துக் கதை சொல்வது, மையிட்டு திருஷ்டிப் பொட்டு வைத்து ஜெபிப்பது, பிள்ளையின் பீத்துணிகளைத் துவைப்பது என எல்லாவற்றையும் அவள்தான் செய்தாள்.

கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள் அம்மா. மஞ்சள் பட்டுப் புடவையில் எத்தனையோ வருடங்கள் அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த தன் அத்தனை நகைகளையும் போட்டுக் கொண்டு வாய்விட்டுச் சிரித்தபடி வந்து நின்றாள். மறக்கமுடியா அந்த  இரவில் அவள் கொடுத்த அந்த முத்தம் என் கண்ணில் வந்து செல்ல உடல் புல்லரித்தது.

அம்மா ஆசையாக தொட்டிலின் அருகே போய் என் மகளை எடுத்து உச்சி முகர்ந்து அவள் காதருகே போய், “அக்னி ரொசாரியோ, அக்னி ரொசாரியோ, அக்னி ரொசாரியோ..” என்று சொல்லி முத்தமிட்டாள். ரொசாரியோ என் தாத்தாவின் பெயர்.

அம்மா தனது செயினைக் கழற்றி ஒரு சொட்டு தண்ணீர் விட்டு உரசி அதை அக்னியின் வாயில் விட்டாள். பேத்தியை அணைத்து எடுத்துக்கொண்டு என்னருகே வந்து நின்றாள். என் கையைப் பிடித்து, “மக்ளே, இது நானாக்கும்…பிள்ளய நெருப்பா வளக்கணும் கேட்டியா..” என்றாள்.

3 Replies to “அக்னி”

 1. அம்மாக்கள் கதை நிறைய படித்திருக்கிறோம். ஆனால் இது வித்தியாசமான து.
  இதில் அம்மாவை விட மகனின் பாத்திரம் முக்கியமானதாகப் படுகிறது. ரீட்டாவிற்குப் பிடிக்கவிலை என்றாலும் அவன் அம்மாவின் திருப்திக்காக எதையும் செய்கிறான். அம்மாவின் மனத்தில் எல்லாரிடமும் வாங்கிக் கட்டிகொண்ட வசவுகளும் அவமானங்களும் அவள் மனத்தில் அக்னியாய்க் கனன்றுகொண்டிருக்கின்றன. அது தன் வாரிசாக தன் இனத்தைப் பார்த்ததும் பீறிட்டு வெடிக்கிறது. அதனால்தான் அப்பெண் குழந்தையை நான் என்கிறாள்.

 2. மிகவும் அழுத்தமான கதைக்கரு.
  கதைக்களமோ, கருவோ படைப்பாளரின் சிறு தவறால் கூட தம் நேர்த்தியை இழந்து, போக்கு மாறிவிடும் அபாயம் கொண்டுருக்கும் படி உள்ளது. ஆனால், கதாசிரியர் மிக குறுகலான வளைவுகளில் கூட வேகமாகவும், நேர்த்தியாகவும் சென்றுவிடும் தேர்ந்த ஓட்டுநர் போல, கதையை மிக லாவகமாகவும், நேர்த்தியாகவும் கையாண்டுள்ளார்.

  இது போன்ற அழுத்தமான கதைக்கருவை கையாள ஒரு தனித்திறன் வேண்டும். கதாசிரியர் அதில் நல்ல தேர்ச்சி கொண்டுள்ளார்.

  வட்டார வழக்கில் செய்யப்பட்ட படைப்புகளுக்கு என்றுமே ஒரு தனி மதிப்பு உண்டு. அந்த வகையிலும் இக்கதை ஒரு நல்ல படைப்பு என்று கூறத்தகுந்ததே.

  வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை.

  இவை ஒருபுறமிருக்க,.

  கதைப்போக்கில் படைப்பாளர் சிறிது கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். சம்பவங்களின் தொடர்ச்சிகளை விவரிக்கும் முறையில், இன்னும் சிறிது தெளிவு தேவை படுகிறது.

  மெனக்கெட்டு, ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்துகொள்ள வேண்டியது போல சில இடங்கள் உள்ளன. சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

  மேலும், வட்டார வழக்கில் கதை அமைக்கும் பொழுது, கதாபாத்திரம் பேசுவது வட்டார வழக்கிலும், “கதை சொல்லி” தன் குறிப்புகளை சொல்வது வழக்கமான நடையிலும் அமைவது எப்போதும் ஒரு முரணாகவே படுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை.

  இறுதியாக, நல்ல படைப்பு என்று கூற தகுதியான ஒரு சிறுகதையை தந்ததற்க்கு கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்புடன்.

  அபிமன்யு.

 3. சுஷில்குமாரின் “அக்னி” ஒரு உள் எரிந்தவளின் அல்லது இன்னமும் எரிந்து கொண்டிருப்பவளின் உணர்ச்சிமிகு கதை.

  50 ஆண்டுகளுக்கு முன்பான கொடுமையான சமூக அமைப்பின் கேடுகெட்ட விஷயங்களை தோலுரித்துக்காட்டுகிறது.

  விதவையாக அல்லது வாழாவெட்டியாக பிறந்தகத்தில் நுழைகின்றவளின் வாழ்க்கை பெரும்பாடுகளை எத்தனையோபேர் அந்த காலகட்டத்தில் எழுதி தீர்த்திருக்கிறார்கள். சுஷில்குமாரின் எழுத்து இந்தப் புதிய தலைமுறையில் அதை வெளிப்படுத்தும் விதம் புத்தம் புதியது. முற்றிலும் மாறுபட்ட கதை போக்கில், வலியையும் வேதனையையும், பச்சை சாராயம் ஏற்படுத்தும் நெஞ்செரிச்சல் போல எரியவிட்டு சொல்லும் நடை. நின்று எரிக்கிறது.

  அம்மையின் உடலில் எரிந்தது என்னவென்று இலை மறை காய் மறையாக சொன்னாலும் இடித்தே சொல்கிறார் சுஷில்.

  புளி போட்டு பித்தளையை தேய்க்கலாம், எதைப் போட்டு தேய்ப்பது உடலின் வெம்மையை, அது உணர்ச்சி வேகத்தில் எரிந்து உள்ளத்தில் ஏற்படுத்தும் கரி தீற்றல்களை. நள்ளிரவில் விரித்துப் போட்ட தலைமுடியோடு கால்களை விரித்து கண்களை வெறித்து தகித்தெரிக்காமல் வேறென்ன செய்ய. கெட்டவனை கட்டி, கேடுகெட்டவர்களோடு பிறந்து, நொந்து நொந்து வாழ்பவளுக்கு, வந்து பிறந்ததாவது நல்லதாக அமைந்ததே அம்மட்டும் அவள் கொடுத்து வைத்தவள் தான்.

  ஜாதிவெறி பிடித்த அண்ணன்மார்களும் தம்பிமார்களும் இன்றைக்கும்கூட எத்தனையோ தமக்கைளின் வாழ்வை அழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆண் திமிரில் ஜாதிக் கொழுப்பில் இவர்கள் வதைப்பது உடன்பிறந்தவளின் உயிரை. அது போதாதென்று, பெண்ணுக்கு பெண்ணே எதிரியாய் அண்ணிமார்களின் வாய்ச்சொல் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. நல்லவேளை, காலம் மாறிவிட்டது. இன்றைய பெண்கள் சுய சம்பாத்தியம் மற்றும் படிப்பின் துணைகொண்டு தெளிந்த நல்ல பாதையை தங்களுக்கென்று வகுத்துக் கொள்கிறார்கள்.

  இந்தக் கதை எனக்கு எனது சித்தப்பா மகள் வாழ்க்கையை நினைவூட்டியது. திருமணம் முடிந்து ஆறு மாத கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது அவளுடைய கணவன் ஒரு விபத்தில் தவறிவிட்டான். வாழா வெட்டியாக வீட்டில் இருந்து கொண்டு ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தையை வளர்க்க வேண்டிய பெரும்பாடு வேறு. நல்ல வேலையாக அவள் மனம் திறந்து என்னோடு பேசினாள். அவளை அவள் படிக்கின்ற பொழுது விரும்பிய ஒரு உடன் படித்த தோழன் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாக என்னிடம் கூறினாள். அந்த தோழன் வேறு கொஞ்சம் கீழ் வகுப்பைச் சேர்ந்தவன். நான் அந்தப் பையனை என்னை திருவண்ணாமலை வந்து சந்திக்கும்படி சொன்னேன். நான் பார்த்து பேசிய வகையில் மிக நல்லவனாகவே தெரிந்தான். நான் இது குறித்து அவளின் தாயிடம் பேசினேன். அவளுடைய பெற்றோரும் மற்றைய எங்கள் அனைத்து உறவினர்களும் இந்த மறுமணத்திற்கு எதிர்ப்பு. போதாக்குறைக்கு என்னை வேறு திட்டித் தீர்த்தனர். நான் தொடர்புடைய இருவரிடமும் சொல்லிவிட்டேன் துணிந்து திருமணம் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு யாருடைய சம்மதமும் தேவையில்லை என்று. அவர்களே திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக மிக நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் சேர்ந்து ஒரு மகள் கூட இருக்கிறாள். நல்லவேளையாக அந்தப் பையனின் பெற்றோர் கொஞ்ச நாளில் அந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். நல்லது நடக்க வேண்டும், வாழ்க்கை மாற வேண்டும் என்றால், எங்கோ ஒரு புள்ளியில் துணிந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து, இப்பொழுது தான் எங்கள் ஊர் பக்கத்தில் இருந்து உறவினர்கள் “சுவாமி எது செய்தாலும், அதில் ஒரு நியாயம் இருக்கும், நல்லது நடக்கும் என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்று எனது நண்பர்கள் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே உண்மையில் நல்லது செய்தது நான் அல்ல அந்த பெரிய மனது படைத்த எனது சித்தப்பா மகளின் தற்போதய கணவன்.

  அக்னி என்று பெயர் கதைக்கு மிகவும் பொருத்தமாகவே உள்ளது. அவள் எரிக்கப்பட வேண்டியவள்தான். அவள் எறிந்து எரிப்பது பழமை எனும் மூடத்தனத்தை, ஜாதி எனும் அறியாமையை, அதன் பெயரால் செய்யப்படுகின்ற கொடுமைகளை.

  அந்தப் பேத்தி அக்னியின் வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்கும். ஐயமே இல்லை. விடிந்து கொண்டிருக்கும் சமூகத்தில் வந்து பிறந்திருப்பவள் ஆயிற்றே.

  சுஷிலின் கதை சொல்லும் போக்கு மெல்ல மெல்ல தனக்கே உரித்தான நல்ல நடையை ஏற்படுத்திக் கொள்கிறது. அங்கங்கே கொஞ்சம் துள்ளி குதித்தும் செல்கிறது. இவர் எழுத வேண்டியது நாவல்களை. நாவலுக்கு வேண்டிய கருவும் கதைக்களமும் விரைவில் இவருக்கு அமையுமாக.

  நல்வாழ்த்துக்கள் சுஷில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.