ரகசியம்

நான் அவசரத்தில் இருந்தேன்.   நியூயார்க்கிலிருந்து வாங்கிய பீட்சாவை எடுத்துக்கொண்டேனா என்று ஒருமுறை சோதித்துப்பார்த்துக்கொண்டேன். வாசலை நோக்கி ஓடுகையில், மனதுக்குள்ளாக எடுக்க வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டேனா என்று ஒருமுறை சரி பார்த்துக்கொண்டேன். கதவை திறக்க எத்தனிக்கையில் தான் செல்போனுக்கான சார்ஜரையும், காமிராவையும் எடுக்காதது நினைவுக்கு வந்தது.  நியாபக மறதிக்காய் என்னையே ஒருமுறை வசை பாடிவிட்டு மீண்டும் என்னறைக்குள் நுழைந்து அவைகளையும் என் கைப்பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு மீண்டும் வாசலுக்கு ஓடினேன். 

‘இது ஒன்றும் புதிதல்ல. சிறுவயதிலிருந்தெ இந்த நியாபக மறதி இருக்கிறதுதானே. இதிலென்ன ஆச்சர்யம்?  நாமெல்லாம் மனிதர்கள் தானே. இயந்திரங்கள் இல்லையே’ என்று மனதுக்குள்ளாக சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

நான் கதவைத் திறந்தது எடின்பர்கின் பிரின்சஸ் தெருவில். எடின்பர்க் நகரெங்கும் ஆயிரம் பிரின்சஸ் தெருக்கள் இருக்கலாம். நான் சொல்வது வெவர்லி ரயில் நிலையத்தினருகில் உள்ள பிரின்சஸ் தெரு. இங்கே பனிக்காலமாக இருந்தது. இத்தனைக்கும் இது மே மாதம். எடின்பர்க்கில் பெரும்பாலும் குளிரே நிலவும். இரவு பன்னிரண்டு மணி வரை கூட இள மாலை போல் வெளிச்சமாக இருக்கும். 

நான் எடின்பர்க் வந்ததற்கு ஒரு  காரணம் இருந்தது. எடின்பர்கில் தான் என் தாயாரும் என் ரத்த உறவு தந்தையும் முதன் முதலில் சந்தித்து காதல் வயப்பட்டார்கள். அந்த காதலின் விளைவாகத்தான் நான் பிறந்தேன். என் தாயார் அப்போது எடின்பர்க்கிற்கு சுற்றுலா வந்திருந்திருக்கிறார். அப்போது என் தந்தையும் தொழில் நிமித்தம் எடின்பர்க் வந்திருக்கிறார். லிவிங்க்ஸ்டன் என்றொரு கிராமம் இங்கே பிரசித்தி. பிரித்தானியாவிலேயே ஆகப்பெரும் மால் இந்த கிராமத்தில் தான் அமைக்கப்பட்டிருந்தது. சூழல் சாதகமாகிவிட அவர்கள் சந்தித்தார்கள். ஆக எடின்பர்கிற்கு என் வரையில் உணர்வு ரீதியில் ஒரு பிடிப்பு இருந்தது. அந்த பிடிப்பே எனக்கும் எனக்கான வாழ்க்கைத்துணையை தேடித்தரும் என்ற நம்பிக்கையே எடின்பர்கை நோக்கி என்னை செலுத்தும் உந்து விசை என்றே  நான் தீவிரமாக நம்பினேன். 

அப்படியொன்றும் பேராசை என்று என்னிடம் ஏதும் இல்லை. ட்ரில்லியன் கணக்கிலான மக்கள் திரளில் எனக்கு வேண்டுவதோ ஒரேயொரு இணக்கமான  நல்ல காதலன் மட்டுமே. சமயத்தில் நான் யோசிப்பது : ஏன் நல்ல ஆண்களை காண நேர்வது காலம் செல்லச்செல்ல அருகிக்கொண்டே போகிறது என்றுதான்.  பெண்களின் தேடல் எல்லாக்காலத்திலும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. ஒரு பெண்ணுக்கான பொறுத்தமான ஆண் ஏன் எல்லாக்காலத்திலும் பெண்களால் கண்டுபிடிக்க கடினமானவனாகவே இருக்கிறான்? ஒரு வேளை, ஆண்கள் சரியாகத்தான் இருக்கிறார்களா?. பெண்கள் தான் குழம்பிப்போகிறார்களா?

என்  நட்பு வட்டத்தில் ஆண்கள் அத்தனை சரியில்லை. சரியில்லை என்றால், ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலின உறவுக்காரர்கள். எனக்கு யாருடனும் என் காதலனை பகிர்வது பிடிக்காது. என் காதலன் எனக்கே எனக்கென்று இருக்க வேண்டும். அதுதான் எனக்கும் பிடிக்கும். 

ஆனால் நான் கடந்து போக நேர்ந்த ஆண்கள் தங்களின் கடன்களை அடைப்பதற்காய் பெண் தேடுபவர்கள். தினசரி செலவுகளுக்காய் பெண் தேடுபவர்கள். அழகான ஆண்கள் அறிவாய் இருப்பதில்லை. அறிவான ஆண்களிடம் அதீத அறிவே பிரச்சனையாக இருக்கிறது. அழகான ஆண்கள் முட்டாள்தனமாக இருக்கிறார்கள். விளையாட்டில் இருப்பவர்கள் விளையாட்டிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். பணக்கார இளைஞர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். பணக்காரனாக இருந்து கடினமாக உழைக்கும் ஆண்கள் பெரும்பாலும் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எதிலுமே திருப்தி அடைவதில்லை. ஏழை ஆண்கள் சுயமாக முன்னேறி வருவதில் பெரிதாக நம்பிக்கையற்று இருக்கிறார்கள். பெருமபன்மை, சுலபமாக பணம் பண்ணுவது எப்படி என்று ரயில் நிலைய புத்தகங்களை நாடுபவர்களாக இருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்தபிறகு நான் உறவுகளைப் பொறுத்தமட்டில் ஒரு முட்டுச்சந்தில்  நிற்கிறேனோ என்ற எண்ணம் எனக்கே ஏற்படத்துவங்கியிருந்தது. இறுதியாக நான் எனது வட்டத்திலிருந்து வெளியே சென்று தேடும் முயற்சியில் இறங்கியிருந்தேன்.

‘அடக்கடவுளே! நான் ஆணாக பிறந்திருக்க வேண்டும்’ என்று எனக்குள் நானே ஆயிரத்து ஐம்பத்து மூன்றாவது தடவையாக சொல்லிக்கொண்டேன். 

‘பண்பட்ட, முதிர்ந்த , சுயமாக சிந்திக்கும் ஆண்களைப் பார்ப்பது ஏன் குதிரைக்கொம்பாக இருக்கிறது?’ 

நான் பிரின்சஸ் சாலையில் நடந்துகொண்டிருந்தேன். இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால், ஒரு மாக்ஸி உடை அணிந்து எனது வாழைத் தொடைகள் பளீரென்று தெரியும்படிக்கு நடந்திருப்பேன். எடின்பர்கில் அது சாத்தியமில்லை. ஸ்டாக்கின்ஸ் அணிய வேண்டியிருந்தது. இந்த குளிர் என்னை என் அடிப்படை ரசனையுடன் வெளிப்படுவதிலிருந்து வெகுவாக தடுத்தது. 

அந்த பிரின்சஸ் சாலையில் நான் கடந்து போன ஒவ்வொரு அழகான ஆணுடனும் ஒரு பெண் இருந்தாள். அது, எனக்கொரு ஆணை அந்த சாலையிலிருந்தே வலை வீசிப் பிடிக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவது கடினமாக்கியது. ஏதேனும் ஒரு மதுபான அருந்தகத்தில் நுழையலாம் என்று தோன்றியது. அது என் நோக்கத்தை எளிதாக்கலாம் என்று எண்ணினேன். இணையத்தில் ஐந்து  நட்சத்திரம் தரப்பட்ட ஒரு அருந்தகத்தைத் தேர்வு செய்து அதில் நுழைந்தேன். மணி அப்போது இரவு பதினொன்று.

உள்ளே இருளாக இருந்தது. அல்லது இருள் வலிந்து திணிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே, மஞ்சள் வர்ண காகித கூண்டுக்குள் விளக்குகள் சன்னமாக ஒளிர்ந்து வெளிச்சத்தின் வீர்யம் குறைத்துக்கொண்டிருந்தது. டிஸ்கோ இசை அந்த அரங்கமெங்கும் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே குழுமமாக நின்று ஒருவரை ஒருவர் உரசி நடனமாடிக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பினேன். ஆயினும் எனக்கென ஒரு துணை இல்லாமல் இருந்தது. எனக்கும் யாரையும் தெரியாது. இது போன்ற அரங்குகளுக்கு எவரும் தனியாக செல்வது இல்லை என்பது எனக்கு முன்பே தெரியும். 

ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையே மெல்ல நகர்ந்து, ஆங்கிருந்த நாற்காலி, மேஜைகளைத்தாண்டி, ஸ்னூக்கர் விளையாட்டு மேடைகளைத்தாண்டி ஓரமாக இருந்த ஒரு இருக்கையை தேர்வு செய்தேன். அணிந்திருந்த குளிர் தாங்கும் மேலாடையை கழற்றி நாற்காலியின் முதுகிற்கு அணிவித்தேன். பின் இருக்கையில் அமர்ந்தேன். ஆண்களின் ஓரவிழிப்பார்வைகள் எனக்கு தேவையான தைரியத்தை அளித்தது. நான் அப்போது ஒரு தில்லான் பாவாடை ஒன்றை அணிந்திருந்தேன். அதனூடே என் கொழுத்த தொடைகளும், பிருஷ்டங்களும் ஏற்ற இறக்கங்களுடன் தெரியும் என்பதை நான் அறிந்தே இருந்தேன். 

அந்த அருந்தகத்தில் அப்படி ஒன்றும் கூட்டமில்லாமல்  இல்லை. யாரேனும் ஒருவர் என்னை அண்ட நான் காத்திருந்தேன். ஒரு மேஜைப் பணியாளேனும் வருவான் என காத்திருந்தேன். ஆனால் யாரும் வரவில்லை. நான் எனக்கு தெரிந்த ஆண்கள் விரும்பும் மதுவகைகளின் பட்டியலை நினைவூட்டிக்கொண்டேன். உள்ளபடி சொல்ல வேண்டுமானால், நான் இதுகாறும் மது அருந்தியதில்லை. ஆனால் இன்று முயற்சிப்பதாக உத்தேசித்திருக்கிறேன். சிறிது  நேரம் கழித்து, நானே எழுந்து மது பரிமாறும் இடத்திற்கு  நகர்ந்தேன். 

அங்கே பரிமாறுபவன் ஒருவன் நின்றிருந்தான். தன்னிடமிருந்த கைத்துணியால் மேஜையை துடைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தான். நான் அவனை நெருங்கினேன். உயரமான இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தேன். 

நான் சற்று முன் நகர்ந்து, அவன் செவிகளில் விழுமாறு “ரஸ்டி நெயில்” என்றேன் சன்னமாக. குறைந்தது ஒரு இரு நூற்றம்பது பேராவது இருக்கக்கூடும் அந்த அரங்கத்தில், ஒலியின் விதிகளுக்கு புறம்பாக, நான் சொன்னது எதிரொளித்தது போலிருக்க திரும்பிப் பார்த்து அதிர்ந்தேன். என்னருகில் ஒருவன் நின்றிருந்தான். அவனும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தான். அவன் பார்வைக்கு அழகாக இருந்தது எனக்குள் ஒரு சிலிர்ப்பை தந்தது. அவன் முகத்தில் இருந்த ஆச்சர்யத்துக்கு பின்னால் நான் ஆண்களுக்கான மதுவை தேர்வு செய்தது தான் காரணமாக இருக்குமென்று ஊகிக்க எனக்கு வெகு நெரம் ஆகவில்லை. 

அவன் என்னைப் பார்த்து புன்னகைக்க, நான் அவனது புன்னகைகளை அவனுக்கே பரிசளித்தேன்.

“நான் மார்க்” என்று சொன்னவன் என்னிடம் நட்பாக தன் கையை நீட்டினான். 

“நான் ஸ்டெஃப்ஃபானி” என்றுவிட்டு அவன் கையை குலுக்கினேன். அவனது உள்ளங்கை சூடாக இருப்பதாகப் பட்டது. அது சராசரி உடல் சூடு இல்லை என்பது மட்டும் திண்ணம். அவனுக்கு டயாபடிக் நியூரோபதி இருக்குமோ என்று எனக்கு லேசாக சந்தேகம் வந்தது. நரம்பு மண்டலத்தில் பாதிப்பிருப்பின் அப்படி இருக்குமென்று எங்கோ படித்தது நினைவிருந்தது. அவனுக்கு உடலில் எங்கேனும் உணர்ச்சியின்மையும், கைகளில் சில பகுதிகளில் கூச்சமும் இருக்கிறதா என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை.

“ரஸ்டி நெயிலா?” என்றான் அவன். குரலில் ஒரு கிண்டல் தொனி. அதை நான் உள்ளூர் ரசித்தேன். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

“எனக்கு அது பிடிக்கும். தவிர, பெண்கள் அருந்தக்கூடாது என்று எதுவும் இல்லையே” என்றேன் ஒரு மெல்லிய புன்னகையுடன். என் கன்னங்களின் சுழிப்பு, நான் வெட்கப்படுவதாக அவனுக்கு உணர்த்தியிருக்கக்கூடும். 

“நான் உன்னை இங்கே அதிகம் பார்த்ததில்லையே” என்றான் அவன்.

“சிறிது நேரம் முன்னர் தான் இங்கே வந்தேன். இதற்கு முன் வந்ததில்லை.” என்றேன்.

“ஓ.. அப்படியானால், எங்கிருந்து வருகிறாய்?”

“நியூயார்க்”

“விமானத்தில் வந்தாயா?”

“இல்லை”

“பின்னே?”

அவனிடம் என் அறை பற்றி சொல்லத்தான் வேண்டுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். கொஞ்சம் யோசித்தேன்.  

“என் ஓய்வு நேரங்களை ஒரு பீருடன் தான் முடிப்பது வழக்கம்.” என்றான் அவனாக. 

நான் எடின்பர்க் எப்படி வந்தேன் என்பது குறித்து அவன் அழுத்திக் கேட்கவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் ஆசுவாசம் எஞ்சியது.

“அப்படியானால், உன் ஓய்வு நேரம் முடிந்ததா?”

“ஆம். ஒரு மணி நேரம் ஆகிறது நான் இங்கு வந்து”

எனக்கு அவனுடன் இன்னும் சற்று நேரம் செலவிடத் தோன்றியது. ஆகையால் அவனுடைய ஓய்வு நேரம் முடிந்ததாக  அறிந்தபோது நான் சற்று ஏமாற்றமாகவே உணர்ந்தேன்.

“நாம் சற்று  நேரம் வெளியே நடக்கலாமா? ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால் நீ என் அறைக்கு வரலாம்” என்றேன் நான்.

“ஆங்.. கண்டிப்பாக… செய்யலாமே” என்றான் அவன்.

நாங்கள் எங்களுக்கென வருவிக்க கேட்டுக்கொண்ட மது பானத்தை ரத்து செய்தோம். நான் நாற்காலியின் மீது போர்த்தியிருந்த குளிர் கால மேலாடையை எடுத்து அணிந்துகொண்டேன். பின் நாங்கள் அந்த மதுபான கூடத்தை விட்டு வெளியேறினோம். நாங்க வெளியேறி சாலையில் இறங்கி நடக்க, டிஸ்கோ இசை மெல்ல நசிவடைந்தது. நாங்கள் ட்ராம்களையும், டாக்ஸிகளையும் கடந்து  நடந்து போய்க்கொண்டிருந்தோம். 

எனக்குள் எதுவோ ‘இவன் தான்’ என்று சொன்னது. அவன் என் உயரம் இருந்தான்.  என் அம்மா ஒரு குஜராத்தி. அதனால் எனக்கும் ஒரு குஜராத்தியின் தோற்றம் இருந்தது. என் அப்பா நான் கருவாக உருவான கணமே என் அம்மாவைப் பிரிந்துவிட்டதாக நான் என் அம்மா மூலமாக தெரிந்துகொண்டிருந்தேன்.  என் அப்பா மூலமாக என் அம்மாவுக்கு நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம், அமெரிக்காவில் குடியுரிமை கிடைத்ததுதான். அமெரிக்காவிலேயே தங்கிவிடவும், வேலை ஒன்றை தேடிக்கொள்ளவும் அந்த குடியுரிமை உதவியது. அதுதான் என் வாழ்வாதாரமும் ஆனது. 

என் தாயார் வால்மார்ட், காஸ்ட்கோ மற்றும் சப்வே போன்ற உணவகங்களில் வேலை பார்த்து பணம் ஈட்டினார். சமயத்தில் ஊபர் டாக்ஸி ஓட்டியும். கார் ஓட்ட கற்றுத்தந்தும் பொருள் ஈட்டுவார். ஒரு பாதி இந்தியனாக என்னால் ஒரு சக இந்தியனை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதை வைத்து என்னால் மார்க் ஒரு அரை இந்தியன் என்று எளிதாக ஊகிக்க முடிந்தது. ஆனால் அது எனக்கு பிரதானமில்லை. இன்றைய தேதிக்கு ஒரு நல்ல காதலன் மட்டுமே என்னுடைய தேவையாக இருந்தது. 

எனக்கு மற்ற நாட்டு ஆண்களுடன் பழகுவதில் சில பிரச்சனைகள் இருந்தது. அவர்களுக்கு ஒரு இந்திய மனப்போக்கு சற்றே அன்னியமாக இருப்பதை நான் தெளிவாக உணர்ந்திருந்தேன்.  நான் கருவாக உதித்ததுமே என் அப்பா என் அம்மாவை பிரிந்துவிட்டபடியால், எனக்கு வாழ் நாளில் என்றுமே ஒரு ஆணின் அருகாமை கிடைத்ததில்லை. 

முதல் பார்வையில், மார்க் மிகவும் அழகாக, பாங்குடன் இருந்தான். அவனுக்கு கருமையான நீளமாக முடி இருந்தது. முக மயிர்களை மழுங்க மழித்திருந்தான். அவன் உதடுகளில் புகையிலையின் குறிகள் ஏதும் நான் பார்க்கவில்லை. அவன் உடல் மிகவும் ஒல்லியாக இருந்தது. ஒரு ஜீன்சும் , டிசர்டும் அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்த ஷூ பூமா வகையினதான இருந்தது 

நானும் அவனும் ராஸ் நீரூற்று வழியாக பிரின்சஸ் பூங்காவில் நடை பயின்றோம். அவன் அவனுடைய குடும்பம் குறித்து நிறைய பகிர்ந்து கொண்டான். அவனுடைய கணிணி மென்பொருள் வேலை குறித்தும், ஓவியங்கள் மீதான ஆர்வம் குறித்தும் எங்கள் பேச்சு தொடர்ந்தது. எடின்பர்க் வெவர்லி ரயில் நிலையத்திற்கும், செயின்ட் கூத்பர்ட் தேவாலயத்திற்கும் இடையில் நாங்கள் முன்னும் பின்னுமாக  நடையாய் நடந்தோம்.  நடை திகட்டுகையில், ரயில் பயணச்சீட்டு வாங்கி எடின்பர்கிலிருந்து க்ளாஸ்கோ போய் பின் மீண்டும் எடின்பர்க் வந்தோம்.

“ஆமாம். நீ எங்கு தங்கியிருக்கிறாய்?” என்றான் மார்க்.

“நான் என் அறையில் தங்கியிருக்கிறேன்” என்றேன் நான். 

“உன் அறை எங்கிருக்கிறது?”

“நான் எங்கே தங்குகிறேனோ அங்கே தான்”

“அட! சொல்லேன்”

“நான் உன்னை நிச்சயம் என்னிடத்திற்கு அழைத்துச் செல்வேன். பொறுமையாக இரு” 

என்றதுடன் மணி பார்த்தேன். 11:59 காலை என்று மணி காட்டியது.

என்னைப்போல் அவனும் மிகவும் இரைச்சல் நிறைந்த இடங்களை வெறுப்பவனாக இருந்தான். அவனும் மிகவும் காரமான இந்திய உணவுகளை விரும்பி உண்பவனாக இருந்தான். எப்போதும் எதையேனும் செய்து கொண்டிருப்பதில் ஆர்வமுடையவனாக இருந்தான். அவனுடம் பேசுகையில், அவன் எதையும் பெரிதாக  யோசிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. அவனிடம் நான் வீழ்ந்ததில் ஆச்சர்யமில்லை என்றே தோன்றியது. 

வெவர்லி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஒரு சந்துக்குள் நுழைந்தேன். அங்கே வெளிச்சம் இல்லை. ஒரு கதவை திறந்தேன். உள்ளே நுழைந்தேன். மார்க் என்னை பின் தொடர்ந்தான். அவன் உள்ளே வந்ததும் நான் கதவை மூடி தாழிட்டேன்.

“வெவர்லி ரயில் நிலையத்திற்கு பல முறை வந்திருக்கிறேன். இங்கே இப்படி ஒரு சந்து இருப்பதை எப்படி இத்தனை காலமும் நான் அறியாமல் இருந்தேன்?” அவன் தனக்குள்ளாக கேட்டுக்கொண்டான். 

“இது என் அம்மாவின் சொத்து.” என்றேன் நான்.

“வெவர்லி ரயில் நிலையத்தருகே இத்தனை பெரிய அறையா? உன் அம்மா என்ன கோடீஸ்வரியா?” என்றான் மார்க்.

நான் வெறுமனே சிரித்தேன். 

‘ஆண்களால் ஏன் எதையும் அதுவாகவே எடுத்துக்கொள்ள முடிவதில்லை’ என்று ஒரு கணம் தோன்றி மறைந்தது.

நான் என் பையிலிருந்து நியூயார்க் பீட்சாவை வெளியே எடுத்தேன்.

“உனக்கு பீட்ஸா வேண்டுமா?” என்றேன் என் கையிலிருந்த பீட்ஸாவை நீட்டியபடி.

“நீ இதை எப்போது வாங்கினாய்?” என்றான் அவன்.

“நியூயார்க்கிலிருந்த போது”

“ஓ.. அப்படியானால் இது எட்டு மணி நேரங்களுக்கு முந்தையவையா?” என்றான் மார்க் ஒரு வினோதமான முக பாவத்துடன்.

என் கையிலிருந்த பீட்ஸாக்கள் அத்தனை பழையனவை அல்ல என்று அவனுக்கு எப்படி சொல்வது என்று எனக்கு குழப்பமாக இருந்தது. ஆனால், என் அறை குறித்த ரகசியத்தை சொல்லாமல் அது சாத்தியமில்லை என்பதால் அதை சொல்லாமல் விட்டுவிடுவதே உசிதம் என்று எண்ணி,  

“உனக்கு வேறென்ன வேண்டும்? காபி?” என்றேன் நான் பேசுபொருளை மாற்ற வேண்டி. 

“இப்போது வேண்டாம்” என்றான் மார்க். 

“தினசரி செலவுக்கு என்ன செய்கிறாய்?” என்றான் மார்க் தொடர்ந்து. 

“பெரியதாக ஏதும் இல்லை. அம்மாவின் சொத்துக்களில் சிலவற்றை லீசுக்கு விட்டிருக்கிறேன். அதில் கொஞ்சம் வருமானம் வருகிறது”

“நீ அதிர்ஷ்டசாலி… ஒரு மாதத்திற்கு எத்தனை வரும்?”

அவன் என்னுடைய மாதாந்திர வருமானத்தை அளவிட எண்ணுவது எனக்கு பிடித்திருக்கவில்லை. 

“பெரிதாக ஏதும் இல்லை. உணவுக்கும், காப்பீடுக்கும் போதுமான பணம் தான்” என்றேன் நான்.

அவன் என் வீட்டின் மூலை முடுக்கையெல்லாம் கூட விடாமல் தன் கண்களால் மேய்ந்தான். அவன் அடுத்து என்ன கேட்கப்போகிறான் என்று என்னால் ஓரளவுக்கு ஊக்கிக்கக்கூட முடிந்தது. 

“நீ என் அறைக்கு வந்திருக்கலாம். ஆயினும் நீ என் சொந்த விஷயங்களில் தலையிடும் தூரத்திற்கு இன்னும் வரவில்லை. இப்போதைக்கு நாம் கொஞ்சம் நம்மீது கவனம் செலுத்தினால் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்” என்றேன் நான். 

அவன் லேசாக சிரித்தான்.

என்னை நெருங்கி வந்தான். எனக்கும் விருப்பம் இருந்தது. ஆதலால், நான் நகரவில்லை. ஒத்துழைக்கத் தயாரானேன்.

அவன் என்னை அண்டி வெகு நெருக்கமாக நின்றான. அவனது மூச்சுக்காற்றின் வெப்பத்தை என்னால் உணர முடிந்தது. அவனுக்கு எப்படியோ தெரியாது. எனக்கு அதுதான் முதல் முறை. நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. மெல்ல என் முகத்தை நிமிர்த்தினேன். கண்களை மூடினேன். என் இதழ்களில் லேசாக ஈரம் இருந்தது. 

அவன்  நின்ற இடத்திலேயே கார்பெட் தரையிலேயே என்னைக் கீழே வீழ்த்தி என் மீது மெல்லப் படர்ந்தான். நான் அனுமதித்தேன். அவன் கைகள் என் ஆடைகள் மீது தீவிரமாக இயங்கத்துவங்கின. ஏதோ ஒர் அவசரத்தில் இருப்பவன் போல் அவன் என் மீது இயங்கி என் ஆடைகளிடமிருந்து என்னை விடுவிக்க முற்பட்டான். அவன் என் ஆடைகளை கையாண்ட விதம், அவனுக்கு அது முதல் அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொள்ள உதவியது. 

முதலில் எல்லாமும் நன்றாகத்தான் இருந்தது. நேரம் செல்லச்செல்ல, அவனுடைய தீண்டல்களில் மென்மை குறைந்தது. வன்மை அதிகரித்தது. என் உடல் மீதான அவனுடைய முதல் வன் தீண்டலின் துவக்கமாக என் கன்னத்தில் அவன் பலமாக பளார் என்று அறைந்தான். ஆயிரம் குண்டூசிகள் ஒரு சேர குத்தியது போலிருந்தது. அவன் அறைந்த கன்னத்தில் மிகையாக அரித்தது. சற்று நேரம் கண் முன்னே பூச்சிகள் பறப்பது போலிருந்தது. 

“உனக்கு பிடித்திருக்கிறதா, தெவ்டியா” என்று கத்தினான் அவன்.

அவன் என்னை மொத்தமாக தவறாக புரிந்துகொண்டுவிட்டான் என்பதை நான் மிகவும் தாமதமாகப் புரிந்துகொண்டது வருத்தமடையச்செய்தது. 

எனக்கு அவனது அணுகுமுறை பிடித்திருக்கவில்லை. இப்போது நான் வெறும் மார்புக்கச்சையுடன் தானிருந்தேன். என் கழுத்தை இறுக்கமாகப் பிடித்து என்னை முட்டிபோட்டு நிற்க வைத்தான். பின், பின்னாலில் இருந்து என் முதுகில் கால் வைத்து அலட்சியமாக எத்தினான். நான் தரையில் விழுவதை தவிர்க்க என் கைகளால் தாங்கினேன். அதில் அவன் என்னில் வேறொரு மிருகத்தை பார்த்திருக்கக்கூடும். ஒருவேளை அதற்காகத்தான் என்னை அப்படி நடத்தினானோ என்னவோ? அவன் மேலும் வெறியாகி என் பின் புறத்தை முதலில் தடவி பின் அறைந்தான். அது எனக்கு மிகவும் வலித்தது. நான் அழத்துவங்கினேன். 

“இது பிடித்ததா, தெவ்டியா” அவன் மீண்டும் கத்தினான். 

என் மீதான அவனின் அணுகுமுறையில் நான் பயந்துபோய்விட்டிருந்தேன். அவனது நடத்தை, குணாதிசயம் குறித்தான என் மதிப்பிடல் மீது  நானே கரித்துக்கொட்டிக்கொண்டேன். அவன் பயன்படுத்திய வார்த்தைகளில், நான் மிகவும் மோசமாக மரியாதை கெட்டு நடத்தப்பட்டதாய் உணர்ந்தேன். ஆனால் என் அவதானத்தில் அவன் அத்தனை பலம் கொண்டவனாக இருக்கவில்லை. ஆதலால் என் முழு பலத்தை பயன்படுத்தி அவனது நெஞ்சின் அடிப்பகுதியில் காலால் ஒரு எத்து எத்தினேன். அவன் கழிப்பறையின் விளிம்பில் மோசமாக மோதி விழுந்தான். விழுந்தவன் எழுத்திருக்கவில்லை. 

நான் என் துணிகளை எடுத்து உடுத்திக்கொண்டேன். அந்த குறுகிய நேரத்தில் நான் அணிந்திருந்த எல்லா ஆடைகளையுமே, மார்புக்கச்சை  நீங்கலாக அவன் உருவியிருந்தது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது. அவன் இப்போதும் எழுந்திருக்கவில்லை. இதுவும் தந்திரமோ என்று எனக்கு தோன்றாமல் இல்லை. அப்படியிருப்பின் அவனை முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். முதலில் சமையலறை சென்று கூர்மையான கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டேன். அதை இறுக பிடித்தபடி மெல்ல அவனருகே சென்றேன். அவன் சட்டென என் மீது பாயின், அந்த கத்தியால் அவனை கிழித்துவிடுவது என்று உத்தேசித்திருந்தேன். அவன் மூச்சு விடவில்லை. அவன் அருகே சென்று, அவனது நாடி பிடித்துப் பார்த்தேன்.

“அய்யோ! கடவுளே” என்றுமட்டும் தான் என்னால் சொல்ல முடிந்தது.

அவன் இறந்துவிட்டிருந்தான். உயிர் போயிருந்தது. அவன் இனிமேல் எழுந்திருக்கவே போவதில்லை. 

அதை என்னால் துவக்கத்தில் நம்பவே முடியவில்லை. அவனை சாகடிக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அது முற்றிலும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டிருந்தது. என்னிடம் அவனை கொலை செய்யும் நோக்கம் எப்போதுமே இருக்கவில்லை. என்னை தற்காத்துக்கொள்ளவே அதை செய்ய வேண்டியதாகிவிட்டது. நான் மணி பார்த்தேன். 12:30 மதியம்.

ஆயாசத்துடன் எழுந்து நின்றேன். கத்தியை மேஜை மேல் வைத்தேன். ஒரு கோப்பையில் நீர் அள்ளி அருந்தினேன். ஆசுவாசம் கொண்டேன். 

என் அவதானிப்பில், மார்க்கிற்கு என்ன கிடைத்ததோ அதற்கு அவன் தகுதியாகவே இருந்தான். நான் அவனை தேர்வு செய்தேன். அவனின் சிறப்பான அம்சங்களுடன் நான் அவனை பார்த்தேன். அது அவனுக்கு எத்தனை சாதகமான விஷயம்? அதை அவன் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்க முடியும்? ஆனால் அவன் முட்டாள். அவன் அதை நினைக்கவில்லை. உணரவில்லை. என் தேர்வையும், அவ்வளவு ஏன் என்னைமே அவன் மரியாதை செய்யவில்லை. ஆனால் நடந்ததிலிருந்து கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருந்தது. 

இதற்கு மேல் இதில் யோசிக்க ஏதும் இல்லை என்று தோன்றியது. நான் இப்போது வேகமாக இயங்கவேண்டும். நான் என்னை ஜெயிலுக்கு செல்வதிலிருந்து காப்பாற்ற ஒரு வழி கண்டுபிடித்தேன். அது எனக்கே மிகவும் பிடித்திருந்தது.

நான் என் அறையில் இருந்தபடி இன்னொரு கதவை திறந்தேன். ஹாங்காங்கின் தாய்-மோ-ஷன் மலை உச்சியில் அந்தக் கதவு திறந்தது. நான் மார்க்கை …சாரி.. அவனது பூத உடலை அந்த மலை உச்சியில் விட்டுவிட்டு அதே கதவை திறந்து என் அறைக்கு வந்தேன்.  நான் இந்த வேலைக்காக ஹாங்காங்கை தேர்வு செய்ததற்கு பின்னால் காரணம் இருந்தது. ஹாங்காங் , பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் 1997 வரை இருந்த நகரம். இப்போதும் பிரித்தானியாவின் ஆளுமை ஹாங்காங்கின் மீது சன்னமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆக, பிரித்தானியாவில் காணாமல் போன ஒருவரை ஹாங்காங்கிலும் தேடுவார்கள்.

நான் இப்போது என்னை காப்பாற்றக்கூடிய சாட்சிகளை உருவாக்க வேண்டும். என் கைப்பையை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மேசிஸ் ஆடைகள் கடைக்குள் நுழைந்தேன். ஒரு மார்புக்கச்சையை எடுத்துக்கொண்டு வேண்டுமென்றே பணம் தராமல் கடையை விட்டு வெளியே வந்தேன். நான் நினைத்தது படி, கடையின் பாதுகாவல் அமைப்பு உடனே சமிஜை ஒலி எழுப்பியது. கடையின் நடத்துனர் என்னருகே வந்து என் உடைமைகளை சோதிக்க வேண்டுவதாய் அழைத்தார். எனக்கும் அதுதான் வேண்டியிருந்தது. நன்றாக, கடையின் காமிரா கண்களில் விழுமாறு நான் என்னை  நிறுத்திக்கொண்டு மார்புக்கச்சைக்கான பணத்தை செலுத்தினேன். பின் நேராக என் அறைக்கு வந்தேன். 

மடிக்கணி பயன்படுத்தி, எடின்பர்க் ஈவ்னிங் நியூஸ் மற்றும் ஹாங்காங் போஸ்ட் ஆகிய இரண்டு செய்தித்தாள்களின் இணைய சந்தாவை பெற்றேன். மார்க் என்பவர் காணாமல் போய்விட்டதாக எடின்பர்க் ஈவ்னிங் நியூஸ் செய்தித்தாளில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த பெட்டிச்செய்தியில் என்னைப் பற்றியும் எழுதியிருந்தார்கள்: தில்லான் பாவாடை அணிந்த பெண்ணுடன் மார்க் கடைசியாக காணப்பட்டார் என்ற குறிப்புடன். அருகாமையிலிருந்த கடைகளில் இருந்த காமிரா கண்களிலிருந்து என் படத்தை உருவி போட்டிருந்தார்கள். அந்த படம் அத்தனை தெளிவாக இல்லை. ஆனால் ஒரு தேர்ந்த வரைகலை வல்லுனரால் அந்த தெளிவின்றி இருக்கும் புகைப்படத்திலிருந்து என்னை சிராய்த்து எடுத்துவிட  முடியும். அதை நான் அறிந்தே இருந்தேன். ஆகையால் அதில் ஆச்சரியம் கொள்ளவோ, அதிர்ச்சியடையவோ ஏதும் இருக்கவில்லை. 

நான் ஹாங்காங் போஸ்ட் செய்தித்தாளை என் கணிணித்திரையில் வருவித்தேன்.

அதில் பிராந்திய பகுதியில் தாய்-மோ-ஷன் மலைப்பகுதியிலிருந்து ஒரு ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டதாக அறிவித்திருந்தார்கள்.

எனக்கு இரண்டு நாடுகளுக்கு மத்தியில் ஒரு நாட்டின் குடிமகன் இன்னொரு நாட்டில் இறக்க  நேர்ந்தால், இறந்தது இவன் தான், இப்படித்தான் இறந்தான்,  என்பதையெல்லாம் எப்படி உறுதிசெய்வார்கள் என்பது குறித்தெல்லாம் எந்த ஞானமும் இல்லை. 

ஆனால் இந்த பிரச்சனையை எப்படி கையாள வேண்டும் என்று என் மனதுக்குள் ஒரு சித்திரம் நான் வரைந்துவிட்டிருந்தேன். அதில் எல்லாமும் தெளிவாக இருந்தது. யாரேனும் என்னை அணுகி மார்க் குறித்து விசாரிக்கின், முதற்கண் நான்  நியூயார்க்கை விட்டு வெளியே செல்லவே இல்லை என்று சாதித்துவிடுவதாய் தீர்மானித்துக்கொண்டேன். சாதகமாக, என்னுடைய கடவுச்சீட்டும் பெயரும் எந்த விமான நிறுவனத்தின் விமான பயணச்சீட்டிலும்  இருக்கப் போவதில்லை. 

நான் எடின்பர்க் சென்ற போது என் கை கடிகாரத்தில் நேரத்தை பிரித்தானிய நேரத்திற்கு மாற்றியிருக்கவில்லை. மார்க் கடைசியாக எடின்பர்கில் உயிருடன் காணப்பட்டதாக காவல்துறையால் அடையாளப்பட்டிருப்பது 11.59 நியூயார்க் நேரத்தில். அது பிரித்தானிய நேரப்படி மாலை 5 மணி. ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அவனுடைய பூத உடல், ஹாங்காங்கின் தாய்-மோ-ஷன் மலை உச்சியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

எடின்பர்கிலிருந்து ஹாங்காங் செல்ல  நேரடி விமானங்கள் இருக்கிறதா தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் குறைந்தது பதினான்கு மணி நேரமாவது ஆகும் ஹாங்காங் போய்ச்சேர. அதே நேரம் மேசிஸ் ஆடைக்கடையில் மதியம் சுமார் ஒரு மணி அளவில் நான் ஒரு ஆடை ஒன்றை வாங்கியிருப்பதாக சாட்சி உருவாக்கியிருக்கிறேன். 

மார்க்கை கொலை செய்தது நான் தான் என்று நிரூபிக்க முயற்சிப்பவர்கள் முதலில் எந்த விமானத்திலும் ஏறாமல் நான் எப்படி பிரித்தானியா சென்றேன், அங்கிருந்து பதினான்கு மணி நேரம்  பயண தூரத்தில் இருக்கும் ஹாங்காங்கிற்கு எப்படி சென்றேன் என்பதையெல்லாம் விளக்க வேண்டி இருக்கும்.  அதை விளக்க முடியாது போகையில், மேசிஸ் கடையில்  நான் வாங்கிய ஆடையை வைத்து பார்க்கையில் நான் நியூயார்க்கை விட்டு வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு மட்டும் தான் வர வேண்டி இருக்கும். இது ஒன்றே போதும் நான் தப்பித்துவிட. 

இதற்கு நான் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என் ரகசிய அறை பற்றி யாருக்கும் எதுவும் சொல்லாமல் இருப்பதுதான் அது. என் அறைக்கு இருக்கும் ரகசியம் என்னவென்றால் அதற்கு பல கதவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் உலகின் ஒவ்வொரு இடத்துக்கு என்னை இட்டுச்செல்லக்கூடியவை. ஒன்றைத் திறந்தால் எடின்பர்க், இன்னொன்றை திறந்தால் ஹாங்காங், மற்றுமொன்றை திறப்பின் தில்லியின் ஆக்ரா, இன்னுமொன்றை திறப்பின் ஆஸ்திரேலியாவின் சிட்னி. 

இந்த அறை என் அம்மாவின் மூலமாக எனக்கு கிடைத்த குடும்பச்சொத்து. என் அம்மா நியூயார்க் வந்த புதிதில் பல வேலைகள் செய்திருக்கிறாள். அதில், வயதானவர்களைப் பார்த்துக்கொள்ளும் செவிலி வேலையும் ஒன்று. அப்படி ஒரு வீட்டில் செவிலி வேலை செய்தததில், என் அம்மாவின் பணி நேர்த்தியில் ஈர்க்கப்பட்ட ஒரு அமெரிக்கப் பாட்டி இந்த ரகசிய அறைகள் கொண்ட வீட்டை என் அம்மாவுக்கு பரிசளித்துவிட்டு இறந்துவிட்டிருந்தாள். இதெல்லாம் என் அம்மாவின் மூலமாக நான் தெரிந்து கொண்டது.

இந்த என் அறை குறித்த ரகசியம் தெரியவில்லை என்றால் யாராலும் மார்க்கின் மரணம் குறித்த வெவ்வேறு புள்ளிகளை சரியான வரிசையில் இணைக்க முடியாது. சரியான வரிசையில் இணைக்க முடியாது போனால், மார்க்கின் மரணத்திற்கு என்னை யாராலும் காரணம் காட்டவும் இயலாது.

திருமணங்கள் எல்லாமும் சுவர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறதா?  நாம் எல்லோரும் மிகவும் தற்செயலாகத்தான் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்கிறோமா?  நீங்கள் 1980ல் பிறந்தவராயிருந்து, உங்கள் உடல் செல்களின் மறுபிறப்பு விகிதம் 99 சதவிகிதமாக இருப்பின், உங்களின் இளமைக்காலம் மிக நீண்டதாகத்தான் இருக்கப் போகிறது. அப்படியானால், உடல் செல்களின் மறுபிறப்பு விகிதம் 70 சதவிகிதமாக இருப்பவர் எப்படி உங்களுடன் நீண்ட நாள் பயணிக்க முடியும்?  அவருடனான உங்கள் வாழ்க்கைப் பயணம் எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்? அவரை விடவும் உடல் செல்களின் மறுபிறப்பு விகிதம் 90 சதவிகிதமாக இருக்கும் ஒருவருடனான வாழ்க்கைப்பயணம் ஆரோக்கியமானதாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகத்தானே இருக்க வேண்டும்? இதற்கு என்ன பொருள்? எனக்கென்னவோ, இந்தப்பிரபஞ்சத்தில், இந்த பூமிக்கிரகத்தில் மனித உறவுகளை ஒரு பாரிய கணித சமன்பாடு இயக்கிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. 

எனக்கான ஆரோக்கியமான வாழ்க்கைப்பயணத்தை நான் தானே தேட வேண்டும்? மார்க் என்ன செய்திருக்க வேண்டும்?  என் போன்று அவனும் ஒரு தேடலில் இல்லாதிருப்பின் என்னைப் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அவனுடைய நடத்தை என்னை எரிச்சலூட்டியது. 

இப்படி யோசித்துப் பார்க்கலாம். 

அமெரிக்காவில் ஆண்-பெண் விகிதாச்சாரம், சுமார் நூறு பெண்களுக்கு நூற்றியெட்டு ஆண்கள். இதில் ஓரினச்சேர்க்கையாளர்கள், ஊனமுற்றவர்களும் இருபாலரிலும் அடக்கம்.  நூற்றியெட்டு விழுக்காடு என்றே வைத்துக்கொண்டாலும் எட்டு ஆண்களுக்கு பெண்கள் இல்லை என்றாகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்று வைத்துக்கொண்டால், எஞ்சிய எட்டு ஆண்கள் எந்தப் பெண்ணுக்கும் தகுதியற்றவராக இருப்பது தான் சமூக ஒழுங்குக்கு நல்லது. சமூக ஒழுங்கு என்பது பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கிற்கு இட்டுச்செல்வதாய் இருத்தல் நலம்.

அப்படிப் பார்க்கின் மார்க் இந்தச் சிறிய வயதில் இறந்தது, அவன் எந்த பெண்ணுக்கும் தகுதியற்றவனோ என்ற தோற்றத்தையே தருவதாய் இருந்தது. இல்லாவிட்டால், அவன் ஏன் இத்தனை விரைவாக இந்தப் பிரபஞ்ச வாழ்வை விட்டு விலக வேண்டும்? இப்படியெல்லாம் யோசிக்கின் இந்தப் பிரபஞ்சம் தன்னுடன் பயணிக்கத் தகுதியற்றவர்களைத் தகுந்த கருவிகள் மூலம் தன்னிலிருந்து வெளியேற்றிக்கொண்டு தான் இருக்கிறது என்றே தோன்றுகிறது. எல்லாவற்றையும் சீர்தூக்கி யோசிக்குங்கால்,  மார்க் விஷயத்தில் நான் வெறும் ஒரு கருவி மட்டும் தான் என்பது மட்டுமே எனது நம்பிக்கையாக இருக்கிறது.

 – ராம்பிரசாத்   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.