மகரந்தம்

பின்னோக்கிப் பதியும் பாதங்கள்

நாம் அனைவரும் அறிந்த நேரம் என்பது முன்னோக்கிச் செல்வது. ஆனால், ‘அனிதா’ பின்னோக்கும் காலத்தைப் பற்றி ஒரு அதிசயத் தகவலை வெளியிட்டுள்ளார். அது குறிக்கும் விந்தை என்பது நமக்கு இணையாக ஒர் உலகம் இருக்கக்கூடும் என்பதே.

யார் அந்த ‘அனிதா?’ அது நாசாவின் Antarctic Impulsive Transient Antenna (ANITA)  என்ற ஓர் ஆய்வு. அனிதா ஒரு வானொலி அறியும் கருவி. அதை அவர்கள் மிகப் பெரிய அடுக்கு மண்டலப் பலூனுடன் இணைத்துக் குளிர்ந்த பனிப் பரப்பான அண்டார்டிகாமீது பறக்கவிட்டார்கள். அங்கே வேறேதும் வானொலி அலைகளோ, வேறு விதமான ஒலிகளோ இருக்காது. எனவே அது மிகச் சரியான ஒரு இடம். அங்கே அண்டக்கதிர்களைக்  கண்டறியும் பரிசோதனையில், 2006 மற்றும் 2014-லில், பனியிலிருந்து அதிக சக்தி வாய்ந்த அண்டக்கதிர்களின் தலைகீழ் அருவியைக் கண்டறிந்தார்கள். முதலில் அதைப் பின்னணி ஓசை என்றே நினைத்தாலும், 2016-லில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அது தலைகீழ் அண்டக் கதிர்ப் பொழிவு எனச் சொன்னது. இது ஓர் இணை உலகம் இருக்கலாம் என்ற ஐயத்தினை ஏற்படுத்தியது. இந்தக் ‘கதிர்த் தலைகீழ் அருவி’ பனிப் பாளங்களின் பிரதிபலிப்பு என்றில்லாமல், பனியிலிருந்தே வெளிப்படுவதை ஒத்து இருந்தது. பெரு வெடிப்பின்போதே தோன்றிய உடன் நிகழ்வாக  நம்மைப் போலவே இந்த இணை உலகம் தோன்றியிருக்கக்கூடும் என்கிறார்கள்.

13.8 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) ஆண்டுகளுக்கு முன் பிறந்த நம் அகிலத்துடனேயே இந்த இணை உலகும் உருவாகி இருக்கலாம் என்று ஹவாய்த் தீவிலுள்ள, முனோவா (Munoa) பல்கலையின் பேராசிரியரும், ‘அனிதா’ பரிசோதனையாளருமான பீட்டர் கோரம் (Peter Gorham) தெரிவித்துள்ளார். நம் பூமியில் நாம் அறிந்த இயற்பியல் விதிகள் அங்கே நேரெதிராக உள்ளன. முன்னோக்கிச் செல்லும் காலம் நம் பூமியில்; ஆனால், அங்கோ பின்னோக்கிச் செல்கிறது.

இதை எதைக் கொண்டு நிர்ணயித்துள்ளார்கள் எனப் பார்ப்போம். விண்வெளியிலிருந்து அதிக சக்தி உள்ள துகள்கள் நிரந்தரமாக பூமியை நோக்கி வருகின்றன. சக்தி குறைந்த துணை அணுத் துகள்களான, நிறையற்ற ந்யூட்ரினோக்கள் நம் பூமியைச் சுலபமாக அடைந்து விடுகின்றன. ஆனால், அப்படி வரமுடியாமல், நிறை சக்திப் பொருட்களை நம் புவியின் திடப் பொருட்கள் தடுத்து விடுவதாக அந்த அறிவிப்புச் சொல்கிறது. இதன் பொருள் என்னவென்றால், வெளியிலிருந்து அதிக சக்தி உள்ளத் துகள்கள் பூமியை அடையலாம், ஆனால், பூமியிலிருந்து விண் நோக்கிச் செல்லாது என்பதே.

‘அனிதா’ அறிந்ததோ, ‘தவ்’( தோ என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்னும் கனமான ந்யூட்ரினோக்கள் பூமியிலிருந்து வெளிப்பட்டு மேலே சென்றதை.

‘டெய்லி ஸ்டார்’ என்னும் இதழ் சொல்கிறது “இந்தத் துகள்கள் காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கின்றன. இவை இணை உலகு இருப்பதைச் சுட்டுகின்றன.”

பீட்டர் கோரம் சொல்கிறார், “இந்த தவ் ந்யூட்ரினோக்கள் பூமியைக் கடந்து செல்லும் முன்பும், அதன் பின்னும் அவை வேறு வகையான துகள்களாகின்றன என்ற காரணத்தைச் சொல்லலாம்.”

பலர் நம்பிக்கை கொள்ளாத, இம்மாதிரியான ‘நடக்க இயலா நிகழ்வுகள்’ பலவற்றைத் தானும், தன்னுடைய குழு மற்றும் பல்வேறு ஆய்வாளர்களும் சந்தித்துள்ளதாக பீட்டர் கோரம், ‘ந்யூ சைன்டிஸ்ட்’ பேட்டியில் சொல்கிறார். இத்தகைய கருதுகோள்களை எல்லோராலும் எளிதில் ஏற்க முடிவதில்லை.

அத்தகைய இணை உலகிற்கும், நமக்கும் இடையே மாறும் இயற்பியல் விதிகளால், ஒருக்கால் அங்கே வசிப்பவர் எவரும் இருந்தால், நம்மை அவர்கள் பிற்போக்கானவர்கள் எனக் கருதக்கூடும்.

‘Twilight’ படத்தில் இடம்பெற்ற காட்சியைப்போல, அறிவியல் அறிபுனைக் கதைகளைப் போல, இந்த இணை உலகம் நம் ஆர்வத்தை அதிகரிக்கலாம் அல்லது நம்மைச் சோர்வுறச் செய்யலாம். 

பனியிலிருந்து எழும்பும் முன்பாக, மேல் நோக்கிச் செல்லும் துகள்கள், பூமியில் சுரங்கம் அமைத்து, பின் பனியின் தலைகீழ்ப் பொழிவென வரலாமென்றாலும், அண்டக்கதிர்கள் பெருமளவில் அதைச் செய்வதில்லை. அதி பிரகாசமான ‘சூப்பர் நோவா’ ஒன்றின் அண்டக்கதிர்கள் பூமியை அறைந்து செல்லும் சாத்தியக்கூறினையும் சொல்லலாம்.

இந்தக் கட்டுரை கீழ்க்காணும் செய்திகளின் தொகுப்பு.

https://nypost.com/2020/05/19/nasa-finds-evidence-of-parallel-universe-where-time-runs-backward-report/

https://www.timesnownews.com/technology-science/article/nasa-scientists-reportedly-discover-evidence-of-parallel-universe-where-time-moves-backwards/594533?utm_source=googlenewstand&utm_medium=referral&utm_campaign=latest-news

https://zeenews.india.com/science/fountain-of-high-energy-particles-detected-in-antarctica-may-be-proof-of-a-parallel-universe-study-2284898.html

~oOo~

பழுப்புக் குள்ளர்கள்

இந்தப் பிரபஞ்சம் தன்னுள் கொண்டிருக்கும் விந்தைகள் கோடானு கோடி.

அதை அறிந்து கொள்ளும் முயற்சியில் தொல் நெடுங்காலமாக மனிதர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆல்ஃபா சென்டோரி, பெர்னார்ட் ஆகிய இரு விண்மீன்கள் சூரியனின் அருகிலே இருக்கின்றன. லேமான் (Luhman) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பழுப்புக் குள்ளர்களைத் ‘தோற்ற நட்சத்திரங்கள்’ எனவும் சொல்வதுண்டு. ஏனெனில் அவைகளின் நிறை, கிரகங்களைவிட அதிகம், விண்மீன்களைவிடக் குறைவு. நிறை குறைந்துள்ளதால் ஹைட்ரஜன் இணைவை இருத்த முடியாமல், அவைகளால் சக்தி உண்டாக்க முடிவதில்லை. இந்த ‘லேமான்’ குள்ளர்கள் கிட்டத்தட்ட 6.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளனர். இது ஒரு ஜோடியாகும். லேமான் 16 A, மற்றும் 16 B எனப் பெயரிடப்பட்டுள்ள இவை ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. இவை இரண்டின் எடையும் சமம்தான், வெப்பநிலை ஒன்றுதான், ஒரே நேரத்தில் பிறந்தவை என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளன, ஆனால் மாறுபட்ட வானிலைகள் நிலவுகின்றன.

இந்த இரட்டையர்கள் பழுப்பு நிறம் கொண்டவர்கள். இவை 88 விண்மீன் கூட்டங்களில் ஒன்றான வேல்லா நட்சத்திரத் தொகுதியில் (Vela Constellation)  உள்ளன. வேல்லா பாய்மரங்களின் வடிவத்தில் காணப்படும். இரவு வானத்தின் 1.21 சதவீதப் பரப்பை இவைகள் எடுத்துக் கொள்கின்றன. வேல்லாவில் இடம்பெற்றுள்ள லேமான் தற்போது செய்திகளிலும் இடம்பெற்றுள்ளது. லேமான் 16 A-யின் மேற்பரப்பில் மேகக் கட்டுகளை வான் இயற்பியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குரு மற்றும் சனி கிரகங்களில் காணப்படும் மேகங்களைப் போலிருக்கின்றன இவை. 

இந்தியாவைச் சேர்ந்த விண் இயற்பியலாளரான சுஜன் சென்குப்தா கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன கருத்தைப் பின்பற்றி இதைக் கண்டறிந்திருக்கிறார்கள். சுஜன், விண் இயற்பியலாளராக இந்திய வான் இயற்பியல் அமைப்பில், பங்களூருவில் பணிபுரிகிறார். அவர் சொன்ன அறிவியல் கருத்து என்னவென்றால், பழுப்பு நிறத்து சிறு விண்மீன்கள் உமிழும் ஒளி, துருவப் படும். (Polaraised.) இந்தப் பொருட்களின் சுற்றுப்புறத்தை அறிய, துருவ முனைப்பு உத்தியைப் (Polarimetric Technic) பயன்படுத்தினால் விண்வெளிப் பொருட்களின் தன்மையைக் கண்டறியும் சாத்தியங்கள் அதிகரிக்கும்.

அது என்ன  துருவ முனைப்பு உத்தி அல்லது செயல்முறை? துருவப் படுவதை அறிவதே அது.  ஒளி அலைகள் ஆடும்  திசையை அறிவது. ஒளி, துகள்களின் மேல் சிதறிச் செல்கையில், துருவத்தின் ஒரு குறிப்பிட்ட கோணத்தைத் தெரிவு செய்கிறது. ஒளி அவ்வாறு தெரிவு செய்த துருவப் படுத்துதலை அளவிட வானியலாளர்கள் மேகங்களின் உதவியை நாடுகிறார்கள். இப்போதோ லேமான் 16 A யின் உண்மையான மேகக் கட்டமைப்புகளை அறிய முடிந்துவிட்டது. 16 B யில் நிலைத்த மேகங்கள் காணப்படவில்லை. அதில் ஒழுங்கற்ற பிசிறான மேகம்தான் தென்படுகிறது. அதனால், அதன் பிரகாசம் மாறுபடுகிறது. 

பழுப்பு நிறக் குள்ளரின் மேகக் கட்டமைப்பினைப் புரிந்து கொண்டால் அதன் மேற்புறத்தைப் பற்றி, அழுத்தம், கால நிலை போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

அதிக நிறை கொண்ட பழுப்பு நட்சத்திரங்கள் தூத்தேரியம் (Deuterium) அல்லது லிதியம் இணைப்பினால் மங்கலாக ஒளிகின்றன. இந்த மங்கல் ஒளிதான் அதிர்ஷ்டவசமாக மேகக் கூட்டத்தைக் கண்டறிய உதவியது.

சிலியில் உள்ள யூரோப்பிய தென்வான் ஆய்வகம் மிகப் பெரிய தொலை நோக்கியின் உதவியுடன் லேமான் 16 A யின் மேற்புறத்தில் மேகக் கட்டுகளைப் பார்த்தது; ஆனால், 16 B யில் இது தென்படவில்லை. 16A யின் துருவப் படுத்தலுக்கு ஒத்திசைவற்ற, கட்டுக்களை ஒத்த மேகங்கள் தேவை என்று சொல்கிறார் பேராசிரியர் சுஜன் சென்குப்தா.

நாம் அணியும் சூரியக் கண்ணாடி  ஒளியின் அலைத்துகள் தன்மையினால்  ஊடுறுத்து  துருவப் படுத்துதலைக் கொண்டு உருவாகிறது. வெளிப்படைத் தன்மையுள்ள நெகிழியில் அழுத்தம் தாங்கும் சோதனையை மேற்கொள்ள துருவ வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. முப்பரிமாணப் படங்கள் இந்த உத்தியால் வருகின்றன.

“வானம் அழகியது;வான் வெளி இனிது;
வான் வெளியை மருவிய நின்னொளி இனிது” – என்றார் பாரதி.

வானகம் கொண்டுள்ள அற்புதங்கள் கணக்கிலடங்காதவை. அதை அறியும் முனைப்பும் அத்தகையதே!

“இன்பம் வேண்டில் வானைக் காண்பீர்
வானொளி தன்னை மண்ணிற் காண்பீர்”- பாரதி.

(வானியற்பியல் இதழில் இம்மாதம் வெளியான கட்டுரையின் சுருக்கம்.)
குறிப்புகள்: பானுமதி ந.

~oOo~

ஆடைகளின் மொழி

மொழி என்ற ஏணியால் ஒருபோதும்  நிதர்சனங்களின் உயரங்களை எட்ட முடியாது – என்கிறார் மார்ட்டி ரூபின் என்ற அமெரிக்க எழுத்தாளர்.  இங்கே நான் குறிப்பு எழுதும் கட்டுரையின் ஆசிரியர் அதற்கு ஒருபடி மேலேபோய் மொழியின் போதாமை நிறுவப்படும்  போது, ஆடைகள் பேசக்கூடும் என்கிறார்.  ஆனால்,  ஒரு கவிதை போலவோ அல்லது ஒரு கணிதச் சமன்பாடு போலவோ  ஆடைகளும்  ஸ்பஷ்டமாகப்  பேசக்கூடிய  சிந்தனை வடிவங்கள் என்பதைத் தத்துவ ஞானிகள் எப்போதுமே  மறுத்து வந்திருக்கிறார்கள்.  நூல்களில் மற்றும்  கவிதைகளில்  நாம்  கண்டுபிடிப்பவை , கட்டிடம் மற்றும் ஓவியங்கள் நம் மனக்கண் நிறுத்துபவை, தத்துவ முன்மொழிவுகள் மற்றும் கணித அனுமானங்கள் தரும் விளக்கங்கள் ஆகியன மட்டுமே நம் மூளையில் எண்ணங்களாகப் பதிந்துள்ளன என்று எவ்வித ஈடுபாடுமின்றி பாவித்துக் கொள்கிறோம். ஏனெனில் அவை வகுப்பறைகளில் மொழி, இலக்கம்  மற்றும் விளக்கப் படங்கள் மூலம் கற்பிக்கப்பட்டவை.  ஆனால் அவற்றைப் போல் ஆடைகளையும் சிந்தனை வடிவங்களாக ஏற்பது மிகவும் தந்திரமானது.

சிலர் ஆடைகளை விரும்புகின்றனர்.  ஆடைகளைச் சேகரிப்பதும், பராமரிப்பதும் அவற்றைப் பற்றி ஆர்ப்பரிப்பதும் அவர்களுக்குப் பிடித்தமானவை. அவர்கள் அழகாக  உடையணிந்து தம்மைச் சரியாக அறிமுகப்படுத்திக்கொள்ள மிகவும்  பிரயாசைப்படுவார்கள். ஆழ்ந்த யோசனையுடன் வெகுவாகப் பரிசீலித்து  தமக்கான உடைகளை வாங்குவார்கள். ஒரு சிலருக்கு  ஆடைகளைத் தயாரிப்பதும் உடுத்துவதும்  தம் ரசனையையும் நுண்நோக்கையும்  அடையாளம் காட்டும் ஒரு கலை வடிவம். ஆடைகள்  அவர்களின்  மேட்டிமையைப்  பறைசாற்றுபவை. அவர்களுக்கு ஷோக்குப் பேர்வழிகள் என்ற பட்டம் சுலபமாகக் கிடைத்துவிடும் .

நம் சுயம் மற்றும் ஆன்மா சங்கதிகள் எவ்வளவுதான்  மேன்மையான கருத்தியல்களாக வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும், நம்  உட்புற வாழ்வு பெரும்பாலும் ஆடையணிந்தே   இருக்கிறது.  அதனாலேயே  அறிதல் முறைமை (mode of understanding)களில் ஒன்றாக ஆடை உரிமை கொண்டாடி கவனத்தை ஈர்க்கிறது. நாம் வகைவகையாய் உடுத்திக்கொள்வது சுய விருப்பத்தின் தூண்டுதலால் அன்று என்று எப்படிப் பாசாங்கு செய்ய முடியும்? அல்லது ஆர்வத்துடனும் ஆழ்ந்த உணர்வுடனும் உடுத்தி மகிழ்வதை நாம் மறுக்கத்தான் முடியுமா? நாம் அணியும் ஆடைகள் நம் ரகசியங்களைச் சுமக்கின்றன. மேலும் ஒவ்வொரு முறையும்  நம் அறியக் கூடியதை அல்லது உத்தேசித்திருப்பதைவிட அதிக ரகசியங்களை வெளிப்படுத்தி நம்மை வஞ்சிக்கின்றன. எனவே, அவற்றின் மூலமாக நம் அந்தஸ்து, தன்னம்பிக்கை மற்றும் உடைமைகளுக்கு  விளம்பரம் தேடவேண்டுமானால் அதை ஏமாற்று வேலையைப்போல் செய்கிறோம்.

பழைய இஷ்டமான ஆடைகள் காதலரைப்போல் விசுவாசமாக இருக்கக்கூடியவை. ஆனால் புதியன பகட்டாக இருந்து ஏமாற்றுகின்றன; மிக அவசியத் தருணங்களில் நம்பிக்கை மோசம் செய்கின்றன. ஆடைகளில் நம்பிக்கை வைக்கும் ஆபத்தான வகைகளில் கொஞ்சம் வெகுளித்தனம் இருக்கிறது. ஷேக்ஸ்பியர் நாடக பாத்திரமான கிங் லியர் ஏழை டாம்-மிடம் சொல்கிறார், “கிழிந்த ஆடைகள் வழியே கெட்ட நடத்தைகள் கண்ணெதிரே தோன்றும். ஆனால் பிரத்யேக அங்கிகளும், மென்மயிர் மேலாடைகளும் எல்லாவற்றையும் மறைத்துவிடும்,” என்கிறார்.  இதை நம்பி யாராவது  முரட்டுத்தனமாகத்  தாக்கினாலோ அல்லது  மனவேதனையுறச் செய்தாலோ, உங்களைப்  பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக ஆடைகள் ஒருபோதும் வாக்குறுதி கொடுக்காது.   

காலம் காலமாக உண்மை என்ற கருத்துரு,  வெளிச்சம், வெளிப்படுத்துதல், திறந்து காட்டுதல் ஆகிய கருத்துகளுடன் வரிசைப் படுத்தப்பட்டு வருகிறது.  உண்மையின் நிர்வாணத்தைப் போற்றியும்,  திரை மறைவு மற்றும் பொய்த் தோற்றங்களால் உண்மை  மறைக்கப்படும்போது விசனப்பட்டும் வருகிறோம் .  தற்காலத்திய தத்துவமும் தன்னை அறியும்  உண்மை நிலையை அடையத்  துறவு மேற்கொள்ள வேண்டும் என்கிறது.  துறவறம் என்றால் உறவு, உடை,  சொத்து, சுகம், தற்பெருமை, டாம்பிகம் அனைத்தையும் துறப்பது.  பகட்டான ஆடை அணிவதில் கவனம் சென்றால்,  நிர்வாண உள்நோக்கு உண்மை அறிய அதுவே தடையாகிவிடும்.

“நவ நாகரிக நடை உடை பாவனைகள்  அனைத்தும் முட்டாள்தனமானவை; அவற்றைக் கைவிடுங்கள்” என்கிறார்  இம்மானுவேல் காண்ட்.  ஒரு பொருளின் உண்மை நிலையும் (Reality), தோற்றமும் (Appearance ), வெவ்வேறானவை என்கிறார்.  தோற்றம் நம் புலன்கள் மூலமாக ஒன்று சேர்ப்பது;  உண்மை நிலை எப்போதுமே முழுதாக  அறிந்துகொள்ள முடியாதது என்பது அவர் கருத்து. தத்துவத்தில் தோற்றம் என்பது உறுதியாக புலனுணர்வு சார்ந்த அறிவு ஆய்வியல்  பிரச்னை. அதற்கும்  புறத்தோற்றம் அல்லது உடை போன்றவற்றிற்கும்  எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது காண்ட்-ன் கருத்து.  எனினும்  ஆடை போர்த்திய உடலின்  உருவும் தோற்றமும்  கொள்ளும்  நிச்சய நிலையைப்  புறக்கணிப்பது உலகில் மனித இன வாழ்வு மற்றும் காட்சி இன்பங்களுக்கு இன்றியமையாத ஒன்றை மறுப்பதாகிவிடும் என்கிறார் கட்டுரை ஆசிரியர்.

ஆடைகள் பற்றிய தத்துவவாதிகளின் கருத்தை முற்றிலும் மறுப்பவர் கார்ல் மார்க்ஸ். அவர் 1850-ஆம் ஆண்டு  கோடையில் ஒருநாள் மேலங்கி (overcoat ) அணியாமல் பிரிட்டன் நூலகத்துக்குச் சென்றபோது, ஏற்ற உடை அணிந்து வராத காரணத்துக்காக  அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தானாகக் கதவைத் திறக்கவும் அனுமதி தருவிக்கவும்  தன் சர்வ சாதாரணமான கோட்டில் என்ன மந்திர சக்தி இருந்துவிட முடியும்? – என்று வியந்தார்.  மேலங்கிகளுக்கே  சொந்தமான  ஒரு சரசமாடும் ஆளுமை இருப்பது அவருக்குத் தெரிய வந்தது.  அவ்வகை ஆடைகள் கன்னிமையுடன்,  கைப்படாமல், உருவாக்கியவனின் கைத்தடங்கள் அனைத்தும் முற்றிலும் துடைக்கப்பட்ட நிலையில் சந்தைக்குள் நுழைகின்றன.  உயிரில்லாப் பொருட்களுக்கு மதிப்பளித்து வழிபடும் காட்டுமிராண்டித்தனம்  இன்றும் தொடர்வது முற்றிலும் உண்மை.  ஏனெனில்  ஷுக்கள், உடுப்புகள், ஜாக்கெட்கள் மற்றும் உடைப் பேழைகளுக்கு பலமும், ஆவியும், ஆன்மாவும் இயற்கையாய் அமைந்துள்ளதென பாவித்து அவற்றின் புகழ் பாடி வருகிறோம் .  தற்காலத்திய முதலியம், ஆடைகள் உட்பட்டப் பல பொருட்களின் அமானுஷ்ய வாழ்வில் முறையற்ற வணிகம்  செய்து லாபத்தைப் பெருக்கிக் கொள்கிறது என்கிறார் மார்க்ஸ் .

ஆடைகள்  வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன என்ற கருத்து மட்டுமே  இக்கட்டுரையின் முன்மொழிவன்று. அத்துடன்  வாழ்க்கை முழுதும் ஆடைகளுக்குள் நிகழ்கிறது என்பதையும்,  ஆடைகளைத் தயாரிப்பது, பராமரிப்பது, பிறருக்குக் கடத்துவது மற்றும் அணிந்து கொள்வது இவை அனைத்தும் நம் தனிப் பண்புரு (self hood) உணர்வில் அமிழ்ந்துள்ளன என்பதையும்,  அவை நம்மாலும் நம்மைச் சுற்றி இருப்போராலும் மிக நேர்த்தியான அந்தரங்கமான வகைகளில் பதிவு செய்யப்படுகின்றன என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். செய்திக்கான சுட்டி கீழே:

https://aeon.co/essays/why-does-philosophy-hold-clothes-in-such-low-regard

குறிப்பு: கோரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.