திருப்பம்

’’இந்த ரோட்ல தொடர்ந்து போனீங்கன்னா ஒரு கிலோ மீட்டர் தாண்டி ரெண்டா பிரியும்; நீங்க இடது பக்கம் போகணும். அங்கேயிருந்து ஒரு கிலோ மீட்டர். அங்க தான் நீங்க சொல்ற ஹோட்டல் இருக்கு’’ மைதானத்தில் ஃபோர் லைனில் நின்று கொண்டிருந்த சிவப்பு டி-ஷர்ட் அணிந்த பையன் அவன் நின்ற இடத்திலிருந்தே சத்தமாகச் சொன்னான். கண்ணாடி போட்டிருந்த பௌலர் ஃபீல்டிங் ஃபீல்டிங் என்று கத்தினான். பேட்ஸ்மேன் இடது கை ஆட்டக்காரன். அம்பயர் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

மாமரங்கள் அடர்ந்திருந்த அந்த மணலடர்ந்த பகுதியில் தார்ச்சாலை சிறியதாக நீண்டு கொண்டேயிருந்தது. எதிரே ஒரு வாகனம் வந்தால் மணலில்தான் இறக்க வேண்டும். பனை மட்டைகளால் ஆன வேலி உயரம் குறைவாக ஹோட்டலைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்தது. இவ்வாறான வேலிகள் தென் தமிழ்நாட்டில்தான் இருக்கும். இந்த பகுதியில் மூங்கில் முள் வேலிகளே காணப்படும். ஏதோ ஒன்று தொலைந்து விட்டது போன்றும் விடுபட்டு விட்டது போன்றும் எதையோ தேட வேண்டும் போன்றும் சபரிக்குத் தோன்றியது. சூழ்ந்திருந்த உப்புக்காற்றை ஆழமாகச் சுவாசித்தான். மூன்று முறை. ராணியுடன் ஃபோனில் பேசினால் என்ன என்று தோன்றியது. அலைபேசியை எடுத்து வரவில்லை. மீண்டும் ஓர் ஆழ்மூச்சு. தபால் என சிவப்பு எழுத்தில் ஒரு திறப்பின் கீழே எழுதப்பட்டிருந்த ஒரு லாரி செல்லும் அளவுக்கு அகலம் கொண்ட கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

கட்டிடத்துக்கு புதிதாக வண்ணம் பூசியிருக்கிறார்கள். ஃபிரெஞ்ச் ஜன்னல்கள் எங்கும் காணப்பட்டன. வாயில் படிக்கு அருகில் கட்டப்பட்டிருந்த கருப்பு நிற லேப்ரடார் ஒருமுறை துள்ளிக் குதித்ததில் சங்கிலி சலசலத்தது. தன் எஜமானருக்குத் தகவல் சொல்ல இருமுறை கூர்மையாகக் குரைத்து விட்டு சபரியை நோக்கியது. உள்ளேயிருந்து ‘’பிளாக்’’ என ஒரு குரல் அழைத்ததும் ஆசுவாசமடைந்து அமர்ந்து கொண்டது.

முற்றும் வெண்ணிறமாய் அடர்ந்த கேசம் கொண்ட பெரியவர் ‘’வெல்கம்’’ என்றார். அவரது உச்சரிப்பு அவர் அந்த ஹோட்டலின் உரிமையாளராக இருக்கக் கூடும் என்று எண்ண வைத்தது.

வரவேற்புக் கூடத்தில் பிரம்பாலான நாற்காலிகள் இருந்தன. சபரி அதில் அமர்ந்து கொண்டான். பெரியவர் அவனுக்கு நேர் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

‘’மேனேஜர் ஸ்டாஃப் எல்லாரும் லீவு. நாளைக்கு காலைல வந்திருவாங்க. எண்ட்ரி அப்ப போட்டுக்கலாம். நீங்க கிரவுண்ட் ஃபுளோர்ல இருக்கற ரூமை எடுத்துக்கங்க’’

சபரிக்கு சற்று நேரம் படுத்தால் தேவலாம் என்றிருந்தது.

‘’ஓ.கே’’

தூய்மையான பெரிய அறை. ஜன்னலைத் திறந்ததும் கடற்காற்று அறையை அள்ளியெடுத்தது. பெரிய கண்ணாடி ஜாரில் தண்ணீர். கண்ணாடி டம்ளர்கள். மூன்று டம்ளர் தண்ணீர் குடித்தான். மெத்தையில் படுத்து சில நிமிடங்கள் மின்விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்தான். காற்று அறைக்குள் நுழையும் சப்தம் வெவ்வேறு விதமாக கேட்டுக் கொண்டிருந்தது. வேட்டியும் டி-ஷர்ட்டும் அணிந்து கொண்டு வரவேற்பு கூடத்துக்கு வந்தான். பெரியவர் அங்கேயே அமர்ந்திருந்தார்.

‘’என்னுடைய ஃபிரண்ட் இந்த ஹோட்டல் பத்தி சொல்லியிருக்கான்’’

‘’இதை ஹோட்டல்னு சொல்ல முடியாது. எங்களோட பூர்வீகமான வீடு. இப்ப சில பேர்தான் இருக்கோம். கடலுக்குப் பக்கத்துல இருக்கறதால ரிஸார்ட் மாதிரி பண்ணலாம்னு என் மகனுக்கு யாரோ அட்வைஸ் தந்திருக்காங்க. அவன் எல்லாம் செட் பண்ணி என்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டான்.’’

பெரியவர் எதிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாதவர் போலிருந்தார்.

‘’இங்க டி.வி கிடையாது. மாடிக்குப் போனீங்கன்னா கடல் ரொம்ப அழகா இருக்கும். அங்கே நாற்காலி போட்டிருக்கோம். ஒக்காந்து கடலைப் பாத்துக்கிட்டே இருக்கலாம். சமையலறையில ஒரு குக் இருக்காங்க. ஏதாவது வேணும்னா அவங்க கிட்ட கேளுங்க. என்னோட பேத்தி வருவா. ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் படிக்கறா. கேள்வி மேலே கேள்வியா கேட்பா.’’

சபரி எவ்வளவு உள்வாங்கினான் என்பது பற்றி பெரியவர் கவனம் கொடுக்கவில்லை. வாசலை நோக்கி நடக்கத் துவங்கினார்.

சபரி அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான். மின்விசிறியை இயக்கி அதன் சுழற்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

’’தெய்வமே! தெய்வமே! தெய்வமே! என் குடும்பத்தைக் காப்பாத்து’’ அணைத்துக் கொண்டிருக்கும் ராணி அழுது கொண்டே சபரியின் காதில் சொல்கிறாள். ‘’கருப்பா இருக்கு. கொழ கொழன்னு இருக்கு. என் கையிலயும் அந்த கொழகொழப்பு ஒட்டிட்டு இருக்கு. என் ஒடம்பு முழுக்க விஷமாயிடும்னு பயமா இருக்கு. ராணி! நான் செத்திடுவேனா’’. ராணி கைகளாலும் கால்களாலும் பிணைத்து சபரியை மேலும் இறுக்குகிறாள்.

டாக்டர் சினேகமாகப் புன்னகைத்தார்.

‘’எங்க அஸோஸியேஷன்ல பல பேருக்கு நான் வைத்தியன் தானான்னு தீவிரமா சந்தேகம் இருக்கு. சமயத்துல எனக்கே அந்த சந்தேகம் வருது’’

சற்று முன் தீவிரமாக அழுதிருந்த ராணிக்கே சிரிப்பு வந்தது.

“சபரி! உங்க ஒய்ஃப் உங்களுக்காக மெழுகா உருகறாங்க. பொதுவா மனோதத்துவ விஷயங்கள்ல ஒய்ஃப் சப்போர்ட் பண்றது அபூர்வம். உங்க கனவை உங்க பயங்கள உங்க ஒய்ஃப் கிட்ட சொல்லுங்க. அப்ப இந்த விஷயத்தை ரெண்டு மனசு ஹேண்டில் செய்யும். அவங்க மனசு இயங்கற விதத்தோட ஒரு பகுதி உங்களுக்குள்ள வந்தாலே நீங்க வெளியில வந்திடலாம். ஒரு பெரிய கதவை சாவி போட்டு திறக்கறாப் போல.’’

டாக்டர் எந்த மருந்தும் தரவில்லை. எப்போதும் போல்.

பெண் பார்க்கச் சென்ற அன்று கொஞ்ச நேரம் தனியாகப் பேசச் சொன்னார்கள்.

‘’நான் ஒரு விஷயம் சொல்லணும்’’

ராணி சபரியின் கண்களைப் பார்த்தாள்.

‘’என்னோட கனவுல அடிக்கடி பாம்பு வரும்.’’

‘’அப்படியா. அதனால என்ன?’’

‘’அப்ப நான் ரொம்ப பயந்திடுவேன். சமயத்துல கத்துவேன்.’’

ராணியின் கண்களில் உருவான மெல்லிய நீர்த்திரையை இப்போதும் மறக்க முடியவில்லை.

‘’என் கூட இருக்கும் போது எந்த கனவும் வராது. சரியா?’’

’’சித்தி! சித்தி! எனக்கு உலகத்துலயே யாரை ரொம்ப பிடிக்கும் சொல்லு’’

‘’என் கன்னுகுட்டிக்கு யாரை ரொம்ப புடிக்கும். அதோட அம்மாவைத் தான்’’

‘’எனக்கு உன்னை தான் சித்தி ரொம்ப பிடிக்கும்.’’

‘’என் கண்ணே! என் செல்லமே’’

ரோகிணி சித்தி அணைத்துக் கொண்டால் சமயத்தில் மூச்சு திணறும். சபரி மூச்சுக்குத் திணறிக் கொண்டே அணைப்பிலிருந்து விடுபடாமல் இருப்பான்.

‘’சித்தி உன் பேர்ல ஒரு நட்சத்திரம் இருக்குனு அம்மா சொன்னாங்க’’

ரோகிணி சபரியின் கன்னங்களை தன் கைகளால் கிள்ளினாள்.

‘’சித்தி நீ வானத்துல நட்சத்திரமா இருப்பியா?’’

சித்தி சபரியை மடியில் அமர வைத்துக் கொண்டாள்.

‘’ராணி! எங்களுக்கு தகவல் வருது. நான் ஏழாங்கிளாஸ் ஆனுவல் எக்ஸாம் கடைசி பரீட்சையை எழுதிட்டு வர்ரேன். வீட்டு வாசல்ல ஒரு கார் நிக்குது. பக்கத்து வீட்டுக்காரங்கள்ளாம் எங்க வீட்டு உள்ள இருக்காங்க. அம்மா என்னைப் பார்த்ததும் என் பேரைச் சொல்லி அலர்ராங்க. ரோகிணி போய்ட்டா சபரி போய்ட்டா சபரி ன்னு அழறாங்க. நாங்க கார்ல போறோம். சித்தி. சித்தியோட கொழந்தைங்க. தம்பிக்கு ஆறு வயசு. தங்கைக்கு நாலு வயசு. அவங்க உடம்ப பாத்தப்ப ஏன் இப்படி கொழ கொழன்னு இருக்குன்னு எனக்கு புரியவே இல்லை.’’ 

அம்மா ராணியிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது சபரி வீட்டுக்கு வந்தான். வாசலில் காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்து ஷூவைக் கழட்டிக் கொண்டிருந்த போது ‘’அவ தலையெழுத்து அப்படி. அழுத்தக்காரி. ஒரு வார்த்தை சொல்லலியே. என் கிட்ட கூட சொன்னதில்லையே. அவளைக் கொளுத்துனவனால எப்படி குழந்தைகளுக்கும் தீ வைக்க முடிஞ்சுது. கடவுளே! உனக்கு கண் இல்லையா? நீ கல் தானா?’’ என அரற்றிக் கொண்டிருந்தாள்.

அன்று மாலை சபரி ராணியிடம் சொன்னான். ‘’அதைத் தற்கொலைன்னு சொன்னாங்க.’’ இரவு மொட்டை மாடியில் அமர்ந்திருந்த போது சபரி நட்சத்திரங்களைப் பார்த்து ரோகிணி சித்தி நட்சத்திரமாக இருப்பாளா என்று ராணியிடம் கேட்டான்.

ஒரு கரம் மென்மையாக மூன்று முறை கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ஒரு சிறு இடைவெளிக்குப் பின் அடுத்து. மீண்டும் ஒரு முறை.

கதவைத் திறந்த போது சந்தன நிறத்தில் கவுன் அணிந்திருந்த ஒரு சிறுமி நின்றிருந்தாள். முகத்தின் தசைகளே மழலை பேசின. சிவந்த கன்னத்தில் சின்னஞ்சிறிதாக ஒரு திருஷ்டிப் பொட்டு.

‘’என்னோட டென்னிஸ் பால் காணாமப் போச்சு. உங்க ரூம்ல இருக்கா.’’

ரூமில் தேடிப் பார்த்தாள்.

சபரி, ‘’நாம் ஹாலில் தேடுவோமா’’ என்றான்.

இருவரும் தேடினார்கள். ஹாலில் தான் இருந்தது.

‘’பால் காணோம்னாலே நான் ரூம்ல தான் இருக்கும்னு நினைச்சுக்கறன்’’

‘’நாம இருக்காதுன்னு நினைக்கற இடத்துல தான் எப்பவும் இருக்கும்’’

‘’நீங்க சின்ன வயசுல பாலை நிறைய வாட்டி தொலைச்சுட்டு தேடினீங்களா?’’

‘’தொலைப்பேன். என்னோட சித்தி எனக்குத் தேடித் தருவாங்க’’

‘’உங்க சித்தி நல்லவங்களா? அழகா இருப்பாங்களா?’’

‘’அழகா இருப்பாங்க. ஆனா உன் அளவு அழகு கிடையாது.’’

’’எங்க அம்மாதான் உலகத்துலயே அழகு’’

‘’நீதான் எல்லாரையும் விட அழகு’’

‘’அப்படியா?’’

அந்த சிறுமிக்கு ஒரே சந்தோஷம்.

‘’நான் உன்னை கிருஷ்ணான்னு கூப்பிடறன்’’

‘’ கிருஷ்ணா பாய். நான் கேர்ள். கேர்ள்-ஐ பாய் நேம் சொல்லி கூப்டுவாங்களா?’’

‘’கிருஷ்ணா காட்’’

‘’காட்-லயும் பாய் கேர்ள் உண்டு’’

‘’காட் எல்லாத்துக்கும் மேல’’

‘’சரி! நான் கேர்ள் கார்ட். உனக்காக பாய் நேமில இருக்கன். சரியா?’’

’’சரி’’

‘’உன் பேரு என்ன தெரியுமா? 16 ‘’

அது சபரியின் அறை எண்.

கிருஷ்ணா சபரியிடம், ’’நான் உனக்கு பேரே வைக்கலை. நம்பர் மட்டும் தான். என் ரூமுக்கு நம்பரே கிடையாது தெரியுமா?’’

பதினாறும் கிருஷ்ணாவும் வாசலுக்கு முன்னால் இருந்த மாந்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

பந்தைத் தூக்கிப் போட்டு பிடித்து துரத்தி ஓடி ஒரே கும்மாளமாக இருந்தது.

சபரி கேட்டான் : ‘’கொஞ்ச தூரம் போனா எல்லாரும் கிரிக்கெட் விளையாடறாங்க. நாம அங்க போவோமா.’’

கிருஷ்ணா சொன்னாள்: ‘’நான் வீட்லயும் தோட்டத்துலயும் தான் விளையாடுவன். வெளியில போக மாட்டேன். அப்பாவும் சித்தப்பாவும் தான் கிரிக்கெட் விளையாடப் போவாங்க. வேணா மாடிக்குப் போய் கடலைப் பார்ப்போமா’’

மேகமற்ற வானத்தின் கீழே கடல் மெல்ல எழுந்து விழுந்து கொண்டிருந்தது.

’’உன் சித்தி பேரு என்ன?’’

‘’ரோகிணி’’

‘’எனக்கு ரோகிணின்னு ஒரு ஃபிரண்ட் இருக்காங்க’’

மெல்ல இருளத் துவங்கியதும் கிருஷ்ணா கீழே சென்றாள். சபரி எழக்கூடிய அலைகளின் செங்குத்துப் பரப்பு நிலவொளியை பிரதிபலிப்பதைக் கண்டவாறு அமர்ந்திருந்தான். ரொம்ப நேரம் அமர்ந்திருந்து விட்டு கீழே சென்றான். டைனிங் டேபிளில் உணவு இருந்தது. மூடிய கதவின் கீழே இருந்த சிறிய இடைவெளியில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஃபேன் சத்தம் சன்னமாக வந்து கொண்டிருந்தது. சாப்பிட்டு விட்டு அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான். மின்விசிறி சுழற்சியைப் பார்த்துக் கொண்டே இருந்த போது மெல்ல தூக்கம் வந்தது. மின்விளக்கை அணைத்த போது அறையில் இருளும் அலையோசையும் சூழ்ந்தது.

‘’உனக்கு என்ன ஆகும்?’’

‘’நான் படுத்திருக்கற கட்டிலுக்குக் கீழே பாம்பு நெளியற மாதிரி இருக்கும் . அது எப்பவும் கருப்பா இருக்கும். சமயத்துல ரெண்டு இல்லன்னா மூணு. என் உடம்போடு சுத்திக்கற மாதிரி இருக்கும்.’’

‘’படம் எடுக்குமா? கடிக்குமா?’’

’’இல்லை; நெளியும்’’

‘’நீ ஏன் அதைப் பாத்து பயப்படுற?’’

சபரி அழுதான்.

‘’சரி சரி அழாத. அந்த பாம்பு எல்லாத்தயும் நான் எடுத்துக்கறன்’’

‘’வேண்டாம். எனக்காக நீ கஷ்டப்பட வேண்டாம். எனக்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம். நீ சின்ன குழந்தை’’

‘’நீ என்னோட ஃபிரண்ட்தான. அது என்னை ஒன்னும் செய்யாது. நான் அதை பத்து சிட்டுக்குருவியா மாத்தி என் ஃபிரண்ட்ஸுக்கு ஆளுக்கு ஒன்னா தந்துடறன்’’

சபரி அவள் முன் மண்டியிட்டு பெருங்குரலெடுத்து அழுதான்.

அவள் தன் பிஞ்சுக் கைகளால் அவன் நெற்றியைத் தொட்டாள்.

பொழுது விடிந்திருந்தது கண்களைத் திறக்கும் முன்னே தெரிந்தது. ஒற்றைக் காகத்தின் விளி அதன் உற்சாகத்தைக் காட்டியது. குருவிகள் கிரீச்சிட்டதை இரவே கேட்டதைப் போலத் தோன்றியது. அதன் அடர்த்தி அதிகமாகும் போது கிருஷ்ணா ஞாபகம் வந்து சபரி சட்டென எழுந்தான்.

நான்கு ஆட்கள் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். முக்கால் ஜல்லி ஏற்றி வந்த லோடு லாரி நின்று கொண்டிருந்தது. அன்றைய தினத்தின் பணிகளைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘’சார்! மெட்ராஸ்-ல இருந்து வரீங்களா? முதலாளி அனுப்பினாரா? மார்க்கிங் என்னைக்கு சார்?’’

‘’இல்லை நான் ஹோட்டல்ல தங்க வந்தேன்’’

‘’சார்! நீங்க சொல்ற இடத்துக்கு வலது பக்கம் திரும்பியிருக்கணும். நீங்க இடது பக்கம் திரும்பிட்டீங்க”

சபரி மது அருந்தி விட்டு இரவு இங்கே மயங்கியிருப்பானோ என்ற ஐயப்பட்டனர்.

சபரி திகைத்துப் பார்த்தான். ‘’இது என்ன இடம்?’’

‘’இது ஒரு பழைய காலத்து வீடு. ஒரு வருஷம் முன்ன ஒரு ஃபயர் ஆக்ஸிடெண்ட்ல இந்த வீட்டுல இருந்தவங்க இறந்திட்டாங்க. எங்க ஓனர் இந்த இடத்தை வாங்கி ஒரு ஹோட்டல் கட்டப் போறார். கம்ப்ளீட்டா டெமாளிஷ் பண்ணிட்டோம். மாந்தோட்டம் மட்டும் அப்படியே இருக்கு.’’

சபரி கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்றான்.

‘’எங்க டீம்-ல கண்ணாடி போட்ட பௌலர் யாரும் கிடையாது சார். நாங்க எல்லாரும் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் தான். நாங்க பண்றது பிராக்டிஸ்தான். அதனால அம்பயரும் கிடையாது.’’

ஒரு சின்ன பையன் வந்து என்னிடம் விபரம் சொன்ன இளைஞனிடம் சொன்னான்.

‘’அண்ணா! தோட்டத்து வீட்டு பிரபாகர் அண்ணா லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன். அவர் தம்பி கண்ணாடி போட்டிருப்பார். அவங்க ஃபிரண்ட் ஒருத்தர் கூட வருவாரே’’

‘’சார்! இவன் சின்ன பையன் தெரியாம சொல்றான் சார். அவங்க வீட்ல ஒரு வருஷம் முன்னாடி ஒரு ஃபயர் ஆக்ஸிடெண்ட். அதில அவங்க இறந்திட்டாங்க சார்”

சபரியின் கனவுகளில் இப்போது பாம்புகள் வருவதில்லை.

சபரி அன்றைய தினம் குறித்து ராணியிடமும் சொல்லவில்லை.

***

One Reply to “திருப்பம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.