
அம்மா இறந்து மூன்றுநாட்கள் ஆகின்றன. என்றாலும் நித்யாவிற்கு நீண்டநாட்களாகிவிட்டதைப் போலிருந்தது. நேற்றே அவசரஅவசரமாக அனைத்து சடங்குகளையும் தீர்த்தாயிற்று. வாசல்படியில் நின்று தலையை நிமிர்த்தி பந்தலைப்பார்த்தாள். இறப்பிற்கு வந்த ஒருவர் உடனிருப்பதைப் போல அது அவள்மீது கவிழ்ந்திருந்தது. வாசலில் வெயில்காலத்தில் சிறியதாக ஒரு பந்தல் போட வேண்டும் என்று அம்மா சொல்லிக்கொண்டிருப்பாள்.
படையல் பொருட்களை சாமிஅறையில் வைத்துவிட்டு, உச்சிப்பொழுது வரட்டும் என்று அம்மாயி உள்திண்ணையில் சாய்ந்தாள். பந்தலின் தென்னங்கீற்று பின்னல் இடைவெளிகள் சூரியவெளிச்சத்தால் வாசலில் ஒரு விரிப்பை நெய்திருந்தன. நித்யா திண்ணையின் ஓரமாக ஔி நெய்தல்கள் தன்மீது விழ படுத்தாள்.
நித்யா நினைவு மறந்து தூக்கத்தில் விழும் நேரத்தில் பக்கத்தில் யாரோ வருவதைப் போல பதறி விழித்தாள். வழக்கம் போல் யாருமில்லை. கொஞ்ச நேரம் நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. முன்னால் கல்தொட்டி விளிம்பில் நின்ற சிட்டு நீரை அலகால் கொத்தி, தலையை நிமிர்த்தி வானம் பார்த்து தலையை ஆட்டியது. பாதையில் சைக்கிளின் கடகட ஓசை கேட்டது. நெஞ்சு மெதுவாக ஓய்ந்தது. எழுந்து அமர்ந்து தலைக்கு வைத்திருந்த துப்பட்டாவை எடுத்து துணிகாயவைக்கும் கம்பியில் விரித்தாள்.
அப்பா இறந்தநாட்களில் நித்யா சோறு தின்னப்பிடிக்காமல் வாசலில் அமர்ந்து தெருவை கண்ணளப்பாள். அடிக்கடி தூக்கத்தில் கத்தி விழித்துக் கொள்வாள். அப்பொழுதெல்லாம் அம்மாவின் கண்கள் படபடப்பாகவே இருக்கும். ஆற்றிலிருந்து வெளியே இழுத்துப்போட்ட மீன் போல. அந்தநாட்களில் அம்மாவை சற்றுநேரம் பார்ப்பவர்கள் நிம்மதியாய் உறங்கியிருக்க முடியாது.
இப்பொழுது புரிகிறது. தண்ணீர் செல்லும் நேரத்தில் வாய்க்காலின் மடைவாயில் கல் விழுந்ததைப்போன்றது அது. இந்த மூன்று நாட்களில் நான்கு புறங்களில் இருந்தும் யாராவது எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அக்கா குழந்தையைக் கைகளில் வைத்தபடி அம்மா உடலின் அருகில் அமர்ந்துவிட்டாள்.
“நித்தி…அந்த வெளக்கு. . படி எங்கடீ,”
“நித்யா…எண்ணெய் எங்கிட்டு இருக்கு. . ”
“மூணு பித்தாளை குடம் வேணும் நித்தி,”
“மரபெஞ்சு வூட்ல இருக்காடீ…போட்டுக்குளிப்பாட்ட வேணும்,” என்று சத்தம் வைக்கிறார்கள்.
சித்திரப்பட்டிமாமா, “இப்படி கொஞ்சம் வா பாப்பா. . ”என்று ஆட்களை விட்டு நகர்த்தி அழைக்கிறார்.
“ரதத்துக்கு பூ வாங்கனும். மூணுவெலையில இருக்கு. . எதை வாங்கலாம். . ”
அவள் கண்கள் அருள்மாமாவை தேடுகின்றன.
“உங்கக்கா புருஷனை தேடுறீயா. அவன்தான் உன்னிட்ட கேட்டுக்க சொன்னான். காரியம் முடியற வரைக்கும் நான் பாத்துக்கிடுறேன்,”
அம்மா சொத்தை பங்குபிரித்ததிலிருந்து அருள்மாமா இப்படித்தான் இருக்கிறார்.
“ஐம்பது பேருக்கு சாப்பாடு செய்யச்சொல்லி முத்து வீட்ல சொல்லியாச்சு. எழுபத்தஞ்சி பேருக்கு காணும். நாளைக்கு எல்லாத்துக்கும் கணக்கு பாத்துக்கலாம். சரியா… பின்னால அடுக்கியிருந்த ஏழுசாக்குல ஒருசாக்கு அரிசி எடுத்தாச்சு…தா. . வரேன்,” என்றவாறு சித்திரப்பட்டிமாமா கூட்டத்தில் நுழைந்தார்.
இருபது நாட்களுக்கு முன் அம்மா படுக்கையிலிருந்து சற்று எழுந்து உட்கார்ந்தாள். நித்யா கல்லூரி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் முகம் வற்றி காய்ந்து கிடந்தது. முடி அறவே கொட்டியிருந்தது. உடல் சுமையை நிலத்தின் மேலேயே ஒவ்வொன்றாக உதறுகிறாள். கல்லூரி ஆய்வகத்தில் தொங்கும் எலும்புக்கூடு ஏற்படுத்தும் திடுக்கிடலை உணர்ந்தவளாக நித்யா உடலை குலுக்கிக்கொண்டாள்.
அம்மாயி கஞ்சி எடுத்துவந்தாள். ஒரு மிடறு குடித்த பின் கைகளில் வைத்துகொண்டு அம்மா, “நித்தி…சைக்கிளை எடுத்துக்கிட்டு வயல் வரைக்கும் போயி மூக்கன வர சொல்லு,” என்றாள். மூக்கன் வந்து காத்திருந்தான். அம்மா சாயங்காலமாக கண்விழித்தாள்.
சம்பிரதாயமாக பேசத் தெரியாத மூக்கன் விழித்துக்கொண்டு நின்றான். ஆனால் அவன் கண்களில் அம்மாவின் நிலையைப் பார்த்த பதட்டம் இருந்தது. முக்கனிடம்,” அவ்வளவுதான்டா எனக்கு விதி. இந்தப்பிள்ளை கதி என்னாவுமோ. . ” என்றாள்.
“உசுரோட கெடக்கற வரைக்கு இந்த வூட்டுக்கு நானுருக்கேன். . ”
அம்மா தலைசாய்த்துப்படுத்தாள். பின் மெதுவாக தலையை உயர்த்தி, “பின்னால கெடக்கற நெல்லு மூட்டைகள மெசினுல போட்டுட்டு வா. . அரிசிய கொண்டாந்து அடுக்கிடு. நாள் கூலி வாங்கிக்க.” என்றாள்.
அவன் அமைதியாக தலைகுனிந்து நின்றான். அம்மாயி சுவரில் சாய்ந்து அமர்ந்து வாய்க்குள்ளாக விசனம் பேசினாள். தத்தளிப்பான நேரங்களில் இப்படித்தான். அவள் மட்டுமறிந்த யாருடனோ பேசிக்கொண்டிருப்பாள்.
“பொழைக்க விதைச்ச நெல்ல
சாவுக்குன்னு ஆக்கற விதி யாருக்கோ…
பட்டுத்துணியில முடிஞ்செடுத்து
பக்கத்திலயே வச்சிருந்த நெல்லுமணி
யாரு வயலுக்கோ…
அறுத்துப்போட்ட நெல்லுக்கு களமெங்கருக்கோ,
காலடிபடுமோன்னு நெஞ்சுக்குள்ள வேகுதய்யா. . ”
நித்யா முறைப்பதை பார்த்து அம்மாயி எழுந்து பின்பக்கமாக சென்றாள்.
அம்மாவின் உடலைப் பார்த்தபடியிருந்த நித்யாவை சரசுஅக்கா, “காரியம் கெடக்கு. மலைச்சு நிக்காத,” என்று உள்ளறைக்கு அழைக்கிறாள். நித்யாவிற்கு தன்னை இப்படியே விட்டால் எங்காவது சுருண்டு படுத்துக்கொள்ளலாம் என்றிருந்தது.
அப்பா இறந்து ஒருஆண்டில் அம்மா உடல் இளைக்கத் தொடங்கினாள். தொடர்ந்து மருந்துவம் பார்த்தும் அவள் உடல் உருகிக் கொண்டிருந்தது. உடம்பிற்கு முடியவில்லை என்றால் அன்றைக்கு படுத்து அடுத்த நாளே வயலிற்கு சென்றாள். இரவுகளில் அவள் ஆழ்ந்து உறங்குவது நடுநிசி கடந்த வேளைகளில் தான். வேலைகளை சீக்கரம் முடிக்க வேண்டும் என்ற அவசரம் அவளிடம் இருந்து கொண்டே இருந்தததால் உடலிற்கு மீறிய சுறுசுறுப்போடு இருந்தாள்.
வயலைப் பராமரிப்பதில் அத்தனை கவனமாக இருந்தாள். பக்கத்துவீட்டு அருள்மாமாவும் அக்காவும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்தது கூட அவளுக்கு வேலைமுடிந்தது என்ற கணக்கில்தான் இருந்தது.
அப்பாவிற்கு முப்பதாம் நாள், முதல்வருஷத் திதி, வருஷதிவசம், அமாவாசை என்று எதுவும் அனுசரிக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தாள். அப்பாவை பிடித்துத்தான் கல்யாணம் செய்து கொண்டாள். திருமணப்படத்தில் அந்த மலர்ச்சி முகத்தில் தெரியும்.
கோயில் உடுக்கையடிப்பில் சாமியாடும் பொம்மக்கா அப்பாயி எப்பொழுதும் அம்மாவை நோக்கி,“ என்ன பண்றேன்னு பாரு…புருஷனுக்கான காரியத்த செய்யாதவ என்னடி பொம்பள. . ”என்று கத்துவாள். அம்மா அசையாமல் நீ என்ன பெரிய இவளா. . சாமின்னா எம்பக்கமில்ல பேசனும். . போடீ பசப்பி என்ற தோரணையில் நிற்பாள். யார் யாரோ வந்து பேசியும் அம்மா அப்பாவுக்கான சடங்குகளைச் செய்வதில்லை என்று உறுதியோடு இருந்தாள்.
அக்காவிற்கு கல்யாணம் முடிந்த ஆறாம் மாதத்தில் அவர்கள் வீட்டில் முடுக்கிவிட்டு ஒருநாள் அக்கா, “ஏம்மா…அப்பா பேயா திரியட்டுன்னு வஞ்சம் வச்சிருக்கியா? எந்த ஆளு கட்டினவளுக்கு சரியா இருக்கான். . ” என்று பேசிப்பார்த்தாள். அம்மா வாய்திறந்து பேசவில்லை. அம்மா எழுந்து வீட்டைப் பெருக்கி வெளியில் கொட்டும் வரை பதிலிற்காக அமர்ந்திருந்த அக்கா பின் யார் அதைப்பற்றிக்கேட்டாலும், “என்வீட்ல உள்ள விஷயத்த கேளுங்க சொல்றேன்,” என்று வெட்டிவிடுவாள்.
நித்யாவிற்கு பத்துவயதிருக்கும். ஒருநாள் மதிய வெயிலில் நித்யாவை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு மேற்கு நோக்கி வேகமாக நடந்தாள். இவள் நழுவினாள். அம்மா நன்றாக தூக்கி இடையில் வைத்துக்கொண்டாள். நித்யாவிற்கு அழுகை வரும் போல இருந்தது.
ஆலமரத்துக்கு அடியில் தன்னந்தனியாக ஊன்றப்பட்டிருந்த கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்த ஊமைப்பிடாரியின் கால்களுக்கு அடியில் நித்யாவை கிடத்தி ஓவென்று கத்திக்கதறினாள். ஊமைபிடாரியிலிருந்து வழிந்திருந்த எண்ணெய் இவள் மீது பிசுபிசுவென்று ஒட்டியது. அம்மா அழுவதைப் பார்க்க பயமாக இருக்கவும் ஊமைப்பிடாரியை இறுகப்பற்றிக்கொண்டாள். ஒரு சொல்லும் இல்லாத அழுகை.
அப்பா வண்டியில் வந்து மூச்சிறைக்க இறங்கினார். அப்பா நல்ல கருப்பான நிறமுள்ளவர் என்றாலும் மேலும் அவர் முகம் இருள் படர்ந்தது போல இருந்தது. சட்டென்று ஊமைப்பிடாரியின் கால்களில் விழுந்தவர் குரலெடுத்து அழுதார். அன்றிலிருந்துதான் தன்பின்னால் காலடியோசைகளை அவள் கேட்கத் தொடங்கினாள். கனத்த காலடிகள். தட் தட் என்ற ஒலி. இரவின் அமைதியில் அந்த காலடி ஓசையைக் கேட்டு கத்தி எழுந்தாள்.
அம்மா செம்மலை தாத்தாவிடம் கூட்டிச் சென்று திருநீறு பிடித்துப்போட்டாள். முகமெங்கும் பரவியிருந்த திருநீறு கண்ணிரில் கரைந்து வழியும் அவளின் முகத்தை அவரின் புரையோடிய கண்களால் பார்த்தார். அவள் கைகளை பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டார்.
ஒருமாதம் முழுதும் காய்ச்சல் வருவதும் நிற்பதுமாக இருந்தது. அவளுடன் ஓசையும் உடனிருந்தது. ஒருநாள் செம்மலை தாத்தா இடுப்பிலிருந்த திருநீறை எடுத்து அவள் நெற்றிலிட்டு அம்மாவிடம், “இது மனசு சம்மந்தம். இது மேல்காயமில்ல. வெட்டுக்காயமாக்கும். . நாளெடுக்கும். இல்லன்னா நரம்படின்னா ஆயுசுக்கும்,” என்றார்.
அம்மா, “என்ன ஆச்சுன்னே தெரியல்லய்யா. . ” என்றாள். அவர் அவளுக்கும் திருநீறை பூசிவிட்டு, “எல்லா மனுசருக்கும் இருக்கற சஞ்சலந்தான். சின்னப்பபிள்ள மனசுக்கு கொஞ்சம் கூடுதல். ஆதரவுக்கு ஆளிருந்தா போதும். . பயப்படாத. . ” தலையில் கைவைத்துவிட்டு நகர்ந்தார்.
அம்மா வீட்டில் மருந்துகளுக்கென்று ஒரு மாடத்தை தனியாக ஒதுக்கினாள். அப்பாவும் அம்மாவும் மருந்து குடிப்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம் பக்கத்துவீட்டில் இறந்த அங்காயிகிழவி நித்யாவின் நினைவிற்கு வந்து உடல்நடுங்கும்.
அம்மா படுக்கையில் விழுந்த இந்த ஆறுமாதங்களில் நித்யாவிடம் பேசிக்கொண்டே இருந்தாள். சில நாட்களில் நித்யாவை பார்த்துக்கொண்டு தூங்கிப்போவாள். சில இரவுகளில் ‘உசுர குடிச்சுட்டு போயிட்டானே பாவி’ என்று அரற்றுவாள்.
உள்ளே செம்பு ஒன்று கீழே விழும் ஒலி நித்யாவை உசுப்பியது. பின்னால் செவலை, “ ம்மா. . ” என்று அழைத்தது. நித்யா குடத்தை தூக்கிக்கொண்டு தொழுவிற்கு சென்றாள் . தண்ணீர் ஊற்றியதும் செவலை முகத்தை பார்த்தது. அது அம்மாவைத் தேடுகிறது . நாளைக்கு வயலுக்கு ஓட்டிச்செல்ல வேண்டும். அதன் நெற்றியை தடவும் பொழுது அலைபேசி அழைத்தது. சக்தி அழைக்கிறாள்.
“என்ன நித்யா. . அம்மா செத்துப்போனதைக்கூட சொல்லல. . சத்யா தான் சொல்லுச்சு. . ”
“பதட்டத்துல யாருக்கும் பேச தோணல. . ”
“என்னாச்சு அம்மாக்கு. . ”
மனதிற்குள் அனைவரிடமும் ஒரு பதிலை சொல்லவேண்டும் என்று நினைத்தபடி, “ஹெப்பாடைட்டிஸ். . ” என்றாள்.
“சொல்லவேயில்ல…எங்க மாமாக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட காட்டியிருக்கலாம். . ”
அவள் பேசிவிட்டு வைத்தாள். தொண்டை வலித்தது. அடுத்ததாக ப்ரதீப் அழைத்தான்.
நேற்று காலையில் காரியம் முடிந்து மதியம் பந்தலின்அடியில் சொந்தபந்தங்கள் கூடி அமர்ந்தார்கள். நித்யாவை என்ன செய்வது என்று பேச்சு எழுந்தது.
அக்கம்மா கிழவி, “அக்கச்சியும். . மாமனும் எதிர்வூட்ல இருக்கப்ப நமக்கு என்ன?”என்றாள்.
பாளையத்துமாமா, “கணக்கா பேசிவிட்டுட்டா ஒரு சொல்லுக்கு எடமிருக்காதுல்ல. மருமகளுக்கு என்ன வழி பண்ணிவிட்டீங்கன்னு எவனாச்சும் கேட்டா சொல்லனுமே. படிப்பும் இன்னும் முடியல. . ”
தனசேகர் அப்பா, “நித்யா . . நீ எதாச்சும் நெனச்சிருந்தா சொல்லும்மா…” என்றார். கூட்டத்தில் ‘கசகச’ வென்று பேசத்தொடங்கினார்கள்.
மீண்டும் அவர், “பாப்பா பேச்சையும் கேக்கனும். . வரக்கூடாத கஷ்டம் வந்திருக்கு அதுக்கு. நமக்கும் பிள்ளைக இருக்கு. கல்யாணம் பண்ணலாமா?” என்று குரலை உயர்த்தினார்.
நித்யா, “படிச்சுட்டு பாத்துக்கலாப்பா. அம்மாயி எங்கூட இருக்கட்டும். மூக்கன் அண்ணாகிட்ட வயலப் பேசிவிடுங்க…” என்றாள்.
“அம்மாயிக்கு பிறவு. . ”
“அதுக்குள்ள பழகிரும் சித்தப்பா. . அதான் பக்கத்துல மாமா அக்கா இருக்காங்க. . ”
கால்நீட்டி அமர்ந்திருந்த அக்கம்மா கிழவி, “எழவு. . ஒரு ஏக்கருக்கு என்னத்த ஒருமணிக்கூறா பேச்சு.. முடிங்க. இந்த உள்காட்டுக்கு ஒருமணிக்கு ஒருவண்டி தான். அதுவும் வந்தாதான். நீங்கல்லாம் ஊரு போய் சேர வேணாமா?” என்றாள். இருப்புக்கொள்ளாமல் சுருங்கிய உடலை முன்னும் பின்னும் அசைத்துக்கொண்டிருந்தாள்.
அருள் முகத்தை விறைத்தபடி அமர்ந்திருந்தான். பந்தலின் ஓரத்தில் நின்ற மூக்கனை தனசேகர் அழைத்து பேசத்தொடங்கினார். பாளையத்து பெரியப்பா கோபமாக எழுந்தார்.
சிறிது நேரம் சென்று அருள் எழுந்து பந்தலுக்கு வெளியே சென்று கட்டப்பட்டிருந்த வாழைமரத்தின் காய்களை எண்ணத்தொடங்கினான். அக்கா குழந்தையை மடியில்கிடத்தியபடி அருளை பார்த்துக் கொண்டிருந்தாள். பெரியவன் நித்யாவை பின்புறமாக கட்டிப்பிடித்தபடி, “சித்தி வெளையாட வா. .” என்று ஆடிக்கொண்டிருந்தான். அவன் கைகளை பிடித்தபடி நித்யா ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“ஒருபொம்பளப்பிள்ளைய பேச விட்டு சரின்னு சொல்லிருவீங்க போலயே,”
“அவ அம்மா திட்டமா உயில் எழுதியிருக்கா,”
“என்னன்னாலும். . . நாளைக்கு ஒட்டுறவா ஆளு வேணுண்ணா யாரையாச்சும் அண்டிப்பிழைக்கனும். வயசுப்பிள்ளைய நம்பமுடியுமா?”
அம்மாமீது இருந்த கோபமும், தன் பேச்சுதான் நிற்க வேண்டும் என்ற ஆங்காரமுமாக பேச்சு வளர்ந்தது.
சித்திரப்பட்டி மாமா, “எல்லா பந்தக்காலுக்கும் பிணக்குன்னா எந்தக் காலப்பிடிக்கும் இந்த சின்னப்பிள்ள…அது நெலமைய நெனங்க. . ” என்றார். சரசு பெரிய போகினியில் அனைவருக்கும் மோர் கொண்டுவந்தாள். பேச்சு அடங்கி சாயுங்காலம் கடைசி பேருந்திற்கான நேரத்தில் கலைந்தார்கள்.
சித்திரப்பட்டிமாமா நித்யாவின் கைகளில் இருநூறு ரூபாயை திணித்துவிட்டு, “சாவு வூட்ல சொல்லிட்டு போவக்கூடாது. தைரியமா இருந்துக்க பாப்பா. வாரம் கழிச்சு வரமுடியுதான்று பாக்கறேன். . ” என்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார். அவர் முடக்கில் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அம்மாயி இரண்டு கதவுகளையும் திறந்து வைக்கும் சத்தம் கேட்டு நித்யா திண்ணையிலிருந்து எழுந்தாள்.
“சாமீ. . . வந்து விளக்கப்பொருத்து. அவன் வரமாட்டான். உங்கக்காவுக்கு ஒரு சத்தம் வச்சிட்டு வா,” என்று உள்ளே சென்றாள். நித்யாவிற்கு அலுப்பாக இருந்தது.
எதிர்வீட்டை நோக்கி, “அக்கா. . க்கா. . வரியா…சாமி கும்பிடலாம்,” என்று அழைத்துவிட்டு வீட்டினுள் சென்றாள். பெரியவன் ஓடிவரும் சத்தம் கேட்கிறது.
உள்ளே சென்று விளக்கேற்றி இலையைப்போட்டாள். நீர் விளாவினாள். சோற்றை விளக்கிற்கு ஊட்டினாள். கும்பிட்டு காகத்திற்கு சோறு எடுக்கையில் அம்மாயி, “அப்பனையும் நெனச்சிக்கனும். . கட்டினவ வெட்டி எறியலாம். பெத்ததுக்கு அந்த விதி இல்ல,” என்றாள்.
தொழுவிற்கு மேற்குப்பக்கம் கிடந்த அம்மிக்கல்லில் இலையை வைத்து, “கா. . கா. . ” என்று அழைத்துக்கொண்டே வானத்தை பார்த்தாள். உச்சிவெயில் தாங்காத கண்கள் நிறைந்து வழிந்தன. ஆள்அரவம் கேட்டு திரும்பினாள். பந்தலை பிரிக்கும் ஆட்கள் வந்திருந்தார்கள். கண்களை நன்றாக துடைத்துவிட்டு அவர்களை நோக்கி நடந்தாள். அம்மாவின் குரல் மனசுக்குள் கேட்டது.
***