சென்டிமென்ட்

வாரணாசி நாகலட்சுமி

தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் ராதா. குழந்தைகளை எழுப்பி பாத்ரூமிற்குள் தள்ளினாள். போன் ஒலித்தது. அம்மா ஜானகியிடமிருந்து.

“குட் மார்னிங் அம்மா! என்ன விசேஷம்? காலங்கார்த்தாலயே போன் செய்ற?” கேட்டாள் ராதா.

“ஒண்ணுமில்ல ராதா! வந்து….. வீட்டுப் பெண்ணுக்கு இந்த மாதம் பச்சை நிறத்தில் புடவையும் வளையலும் வாங்கித் தந்தால் பிறந்த வீட்டாருக்கு நல்லதாம். இங்கே எல்லாரும் சொல்றாங்க. அதான்… உனக்கும் உன் அக்காவுக்கும் பச்சை நிறப் புடவையும் பச்சைக் கலரில் வளையலும் வாங்கி கொடுக்கலாம்னு…. உனக்குப் புடிச்ச ஏதாவது புடவை பச்சை நிறத்தில் வாங்கிக்க! விலை எத்தனை ஆனாலும் பரவாயில்ல. நான் தரேன். அடுத்த வாரம் சேஷு கல்யாணத்துக்காக ஹைதராபாத் வரோமில்ல!. அப்போ தரேன்,” என்றாள் ஜானகி.

ராதாவுக்குச் சிரிப்பு வந்தது.  “என்னம்மா நீ? ரெண்டு மாசம் முன்னாடிதான் என் பிறந்தநாளுக்காக புடவை வாங்கி தந்தாய். போதாதா? இப்படிப்பட்ட வதந்தியெல்லாம் எப்படிப் பிறக்குதுன்னு உனக்குத் தெரியுமா? யாராவது ஜவுளி மில் காரங்களுக்கு பச்சை நிறப் பறவைகள் வியாபாரமாகாமல் மீந்து போயிருக்கும். யாருடைய  வீட்டுப் பெண்ணுக்காவது பிறந்த வீட்டிலிருந்து புடவை வாங்கிக்கணும்னு தோணியிருக்கும். இல்லாட்டா வியாபாரம் டல்லா இருக்குதுன்னு வந்தனா பிரதர்ஸ் காரங்களோ ஸ்பந்தனா சிஸ்டர்ஸ் காரங்களோ இது மாதிரி நல்ல உபாயம் கண்டுபிடிச்சிருப்பாங்க,” என்றாள்.

“அப்படிச் சொல்லாதே ராதா!  இதில் உனக்கென்ன நஷ்டம்? பிறந்த வீட்டிற்கு நல்லது நடக்கும்னு சொல்றாங்க. எனக்காக கேட்கறேன். நீயாக வாங்கிக் கொள்ளாவிட்டால் எனக்குப் பிடித்ததாக பார்த்து நானே வாங்கிட்டு வரேன். பிடித்தால் ஆபீசுக்கு கட்டிக்கிட்டு போ. பிடிக்காட்டா வீட்ல கட்டிக்க!” தீர்மானமாகக் கூறினாள் ஜானகி.

“அம்மா! உன் மனசை கஷ்டப்படுத்தணும்னு சொல்லலை. பிறந்த வீட்டுக்கு நல்லது, அண்ணன் தம்பிக்கு நல்லது, கணவனுக்கு நல்லது….. இதுபோன்ற சென்டிமென்ட் கலந்து  வியாபாரம் செய்தால் மக்கள் நிச்சயம் வாங்குவாங்கன்னு நல்லா தெரிஞ்சிட்டிருக்காங்க. எத்தனை செலவானாலும் பரவாயில்லை, நல்லது நடக்கும்னு சொல்றாங்களே, ஒருவேளை அப்படி செய்யாட்டா ஏதாவது கெடுதல் நடந்துடுமோன்னு பயந்து கடன் வாங்கியாவது சொன்னபடி செய்திடுவாங்க. என்னைப் போன்றவர்களுக்கு, ஐயோ ஏதோ சுபம் நடக்கும்னு கேட்கிறார்கள். மாட்டேன்னு சொன்னா தப்பா நினைப்பாங்களோன்னு தோணும். உண்மைதானே அம்மா?” தாயை சமாதானப்படுத்துவது போல் கேட்டாள் ராதா.

“அப்பப்பா…! உன் லெக்சரை ஆரம்பிக்காதே! உங்க அக்கா எது சொன்னாலும் எதிர்த்து பேச மாட்டாள். நீதான் எப்பவும் வாக்குவாதம் செய்து எரிச்சலை கிளப்புவாய். நான் விரும்பி வாங்கித் தரேன். உனக்கு ஏன் வலிக்குது?” அம்மா படபடத்தாள்.

“சரி தாயே! ஏதோ கல்யாணம் செய்தாய். பிரசவம் பார்த்தாய். இப்போ அப்பா ரிடையராயிட்டாரு. உங்களுக்கு வரும் அந்த குறைந்த வருவாயை இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்காக செலவு செய்வது எதுக்காக? சொல்லு!” என்றாள் ராதா.

“சரி… சரி! இனி மேலும் பிரச்சனை பண்ணாதே! விஷயத்துக்கு வா! நீயே வாங்கி வைக்கிறியா? இங்கேயிருந்து நான் வாங்கிட்டு வரட்டுமா?” என்றாள் ஜானகி.

“உனக்கு எது சவுகரியமோ சொல்லுமா. அப்டியே செய்றேன்,” என்றாள் ராதா.

“உனக்கு பிடித்ததாக பார்த்து வாங்கிக்க ராதா! உன் செலக்ஷன் எப்பவுமே நல்லா இருக்கும்!” அன்போடு கூறினாள் ஜானகி.

பெருமூச்சோடு “சரி” என்றாள் ராதா. குழந்தைகளைப் பற்றி விசாரித்து விட்டு போனை வைத்தாள் ஜானகி.

கிடுகிடுவென்று வீட்டில் எல்லோரும் குளித்து கிளப்பி ஸ்கூலுக்கும் ஆபீசுகளுக்கும் பறந்தார்கள்.

செல்லும் வழியில் அம்மாவுடன் நடந்த உரையாடலை நினைத்துக் கொண்டாள் ராதா. அவரவர் வளர்ந்த குடும்ப பின்னணியைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஏதேதோ நம்பிக்கைகள் ஏற்படுகின்றன. அதைத் தவிர மற்றவர்களுக்காகவும் சில பழக்க வழக்கங்களை குருட்டுத்தனமாக கடைபிடிக்கிறோம். துணிமணியோ பொருளோ அன்போடு பரிமாறிக் கொள்வதால் ஒருவருக்கொருவர் நட்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஆனால் இது போல் கொடுத்துத்தான் ஆக வேண்டும், இல்லாவிட்டால் கேடு நடந்துவிடும் என்பது போன்ற காரணங்களால் குடும்பத்தில் பாரம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று நினைத்துக் கொண்டாள் ராதா.

சென்ற வாரத்தில் ஒரு நாள் ஆட்டோவில் சென்ற போது வீதியில் குறுக்காக கறுப்புப் பூனை  ஓடியது நினைவுக்கு வந்தது. அன்று அவளுக்கு டிபாப்ர்மென்ட்டல் டெஸ்ட் இருந்தது. இத்தனை தூரம் வாக்குவாதம் செய்யும் அவளுக்குக் கூட மனம் கொஞ்சம் கலவரமடைந்தது உண்மை. மீண்டும் தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள். சிறுவயதில் ஈரத்துணியால் சிலேட்டைத் துடைப்பது போல் மூளையில் இருந்த அந்த அபசகுன பயத்தைத் துடைத்தெறிந்தாள். அத்தகைய சந்தேகம் அவள் மனதில் படிந்து  போயிருந்ததால் அன்றைய தேர்வில் ஏதாவது தவறு செய்திருப்பாள். ஆனால் அவள் தன் கருத்தை மாற்றிக் கொண்டதால் பரீட்சையை நன்றாக எழுத முடிந்தது. அதன் மூலம். கருப்புப் பூனை பற்றிய பயத்தை வென்றாள். இன்னொரு முறை ஏதாவது எதிர்பாராமல் நடக்கக் கூடாதது நடந்து விட்டால் அதனை கருப்பு பூனையோடு முடிச்சுப் போட மாட்டேன் என்று தனக்குள் கூறிக்கொண்டு புன்னகைத்தாள் ராதா.

அலுவலகத்தில் மதிய உணவு வரை சாதாரணமாக நகர்ந்தது காலம். மதிய உணவு  நேரத்தில் தினம் போலவே சேர்ந்து சாப்பிடுவதற்கு நவீனா வந்தாள். பேசிக்கொண்டே சாப்பிடுகையில் திடீரென்று நெற்றியைத் தடவிக்கொண்டே, “அய்யய்யோ!” என்றாள்  நவீனா.

“என்னாச்சு நவீனா?” பதற்றத்தோடு கேட்டாள் ராதா.

“எத்தனை தடவை நினைத்துக் கொண்டாலும் கிளம்பும் சமயத்தில் மறந்துவிட்டேன். இப்போதெல்லாம் ஞாபக மறதி அதிகமாயிடுச்சு,” தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் நவீனா.

“என்னன்னு சொல்லுடீ! உன் சஸ்பென்ஸ் தாங்க முடியல!”

“அதில்லை ராதா! என் பையனுக்கு எம்செட் அப்ளிகேஷன் இன்னைக்கு போஸ்ட் செய்யணும். அவசரத்துல மறந்துபோய் வந்துட்டேன். என் மேல் எனக்கே கோபமா வருது. இப்போ என்ன செய்றது?” பதற்றமானாள் நவீனா.

“அப்படியா? லாஸ்ட் டேட் எப்போ?” கேட்டாள் ராதா.

“இன்னும் டைம் இருக்கு. ஆனால் அவன் நட்சத்திரத்திற்கு இன்றைக்கு போஸ்ட் செய்தால் நல்லதுன்னு எங்க மாமியார் சொன்னாங்க. அந்த கவரை டிவி மேலே வெச்சேன். மறந்து போய் வந்துட்டேன்,” பரபரப்பாக கூறினாள் நவீனா.

“நவீனா! உன் பெயரின் பொருள் என்ன? நீ யோசிப்பது என்ன?” சிரித்தாள் ராதா.

“அப்படி சொல்லாதே, ராதா! எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை அதிகம். திதி, வாரம், நட்சத்திரம் பார்த்து அப்ளிகேஷன் பூர்த்தி செய்வது கூட எங்க மாமியார் கொடுத்த முகூர்த்தத்திலேதான் ஆரம்பித்தோம். சரி… சரி! இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே! எல்லோரும் அவுங்க அபிப்பிராயத்தை கேட்காட்டாலும் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. என் நம்பிக்கை எனக்கு. நான் இப்போ வீட்டுக்குப் போய் அதை எடுத்து வந்து போஸ்ட் செய்திட்டு லஞ்ச் பிரேக் முடிவதற்குள் வந்திடறேன்,” என்ற நவீனா பாதி சாப்பாட்டுடன் பாக்சை மூடிவிட்டு எழுந்து சென்றாள்.

ராதா யோசித்தபடியே சாப்பிட்டு முடித்து வேலையில் ஆழ்ந்து போனாள். நவீனா அரைமணி தாமதமாக வந்தாள். செக்ஷன் ஹெட்டிடம் திட்டு வாங்கினாலும் நவீனாவின் முகத்தில் திருப்தி தென்பட்டது. அவ்வாறு பாதி சாப்பாட்டில் போய் போஸ்ட் செய்துவிட்டு வந்திருக்காவிட்டால் அந்தப் பரீட்சை முடிந்து ரிசல்ட் வரும் வரை நவீனாவுக்கு மனதில் நிம்மதி இருக்காது. இப்போது அவள் மகனுக்கு நல்ல ரேங்க்  வந்தால் மாமியார் வைத்த முகூர்த்தின் பலன்தான் என்று எண்ணி மகிழ்வாள். நல்ல ரேங்க் வராவிட்டால் அவனுடைய ஜாதகத்தில் அந்த யோகம் இல்லை என்று எண்ணிக் கொள்வாள் என்று நினைத்து புன்னகைத்தாள் ராதா.

மாலை வீட்டிற்குத் திரும்பும்போது வழியில் எப்போதும் வாங்கும் துணிக்கடையைப் பார்த்ததும் அம்மா சொன்னபடி புடவை வாங்கிவிட்டால் ஒரு வேலை ஆகும் என்று எண்ணி ஆட்டோவிலிருந்து இறங்கினாள்.

“பச்சை நிறத்தில்….” என்று ஆரம்பிக்கும்போதே, “வீட்டுப்பெண் புடவையா மேடம்? என்று உற்சாகமாகக் கேட்டு இருபது புடவைகளை எடுத்துப் போட்டார் கடைக்காரர். அவற்றிலிருந்து சாதாரண விலையில் ஒரு கைத்தறிப் புடவையைத் தேர்ந்தெடுத்து பில் பணம் செலுத்திவிட்டு வீட்டிற்கு வந்தாள். வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள் குழந்தைகள்.

“என்னடா இது? ஹோம் வொர்க் செய்த பிறகுதான் டிவி பார்க்கணும்னு சொல்லி இருக்கேன்ல்ல?” என்றாள் ராதா.

“அம்மா! ப்ளீஸ்! நாளைக்கு லீவு. அப்றமா செய்றோம்மா ப்ளீஸ்!” என்று இருவரும் ஒரே குரலில் கூறினார்கள்

“நாளைக்கு லீவா? எதற்கு?”

“ஸ்கூல் மூடும் போது யாரோ கிரேட் மேன் இறந்துட்டார்னு தெரிஞ்சுதாம். அதுக்காக!” டிவியிலிருந்து கண்ணை எடுக்காமல் தாய்க்கு பதிலளித்தனர் இருவரும்.

யாராவது தலைவர்களோ தலைசிறந்த மனிதர்களோ இறந்து விட்டால் பள்ளியையும் ஆபீஸையும் மூடிவிட்டு என்ன சாதிக்கப் போகின்றது அரசாங்கம்? என்று யோசித்தபடியே பிள்ளைகள் டிவியில் என்ன பார்க்கிறார்கள் என்று கவனித்தாள்.

பலவித சகுனங்களை பின்னணியாகக் கொண்ட இங்கிலீஷ் மூவி அது. திடுக்கிட்டாள் ராதா.

“டேய்…! அது பிள்ளைகள் பார்க்கக்கூடிய சினிமா இல்லை.  இங்கே கொண்டா ரிமோட்டை! டிஸ்கவரி சேனல் மாதிரி ஏதாவது பாருங்க! இல்லாட்டா டிவியை அணச்சுடுவேன்,” என்று அவள் கூறவே குழந்தைகள் அதற்கு இணங்காமல் ஒரே கூச்சல்! அவர்களிடம் விரிவாக எடுத்துக் கூறினாள் ராதா. அது போன்ற சினிமாக்களைப் பார்ப்பதால் அபசகுனம் பற்றிய மூடநம்பிக்கைகள் பிள்ளைகளின் மனதில் எவ்விதம் படிந்து போகும் என்பதை அன்போடு விளக்கினாள். அவர்களோடு சேர்ந்து சற்று நேரம் கார்ட்டூன் நெட்வொர்க் பார்த்துவிட்டு மெதுவாக வீட்டு வேலையில் ஆழ்ந்து போனாள் ராதா.

‘இந்தக் குழந்தைகள் இனிமேல் லீவ் தேவை என்று எண்ணும்போதெல்லாம் யாராவது கிரேட் மேன் இறந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த விடுமுறை நாளில் இவர்கள் செய்வதெல்லாம் இது போன்ற பயனற்ற சினிமாக்கள் பார்ப்பதும் பகலில் உறங்கி சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்வதும்தான். எந்த மனிதரின் இறப்பால் இந்த விடுமுறை கிடைத்ததோ  அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவருடைய ஆதர்சமான கொள்கைக்கு விரோதமான செயல்களையே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் செய்கிறார்கள். அதற்கு பதில் இரண்டு  நிமிடம் மௌனம் வகித்து அந்த மனிதரின் பெயரில் அவருக்கு தொடர்புடைய துறையில் ஸ்காலர்ஷிப்போ அவார்டோ அறிவிக்கலாமே!’ என்று நினைத்துக் கொண்டாள் ராதா.

பத்து நாட்கள் கடந்தன. பேரனின் திருமணத்திற்காக ஜானகியும் மதுமூர்த்தியும் ஹைதராபாத் வந்தார்கள். காலையில் கீரை வாங்கி வந்த ராதாவை பார்த்து வியந்த ஜானகி, “இன்றைக்கு திங்கட்கிழமை. மறந்துட்டியா?” என்று கேட்டாள்.

“ஆமா! அதுக்கென்ன?” கேட்டாள் ராதா.

“திங்கட்கிழமை முளைக்கீரை வாங்க கூடாதுன்னு சுந்தரி அத்தை சொல்லியிருக்காங்கடீ!”

“ஐயோ…! ஏனாம்?”

“ஏனோ!” கொஞ்சம் எரிச்சலுடன் கூறினாள் ஜானகி. “உனக்கு எல்லாத்துக்கும் காரணம் சொல்லணும். ஏன்? இன்னைக்கு ஒரு நாள் முளைக்கீரை வாங்காட்டா என்ன குறஞ்சு போயிடும்? எத்தனை தினுசு கீரைகள் கிடைக்குது? இதையேதான் வாங்கணுமா இன்னைக்கு?” ஜானகிக்கு கோபம் வந்தது.

“எதனால் என்று காரணம் நான் சொல்லவா? பிள்ளைகள் முளைக்கீரைத்தண்டு போல் வாடிப் போயிடுவாங்கன்னு… வாரத்தின் முதல் நாள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது தானே!” என்று பரிகாசமாகக் கூறினாள் ராதா. பதில் தெரியாத கேள்வியை கேட்டால் அம்மாவுக்கு கோபம் வந்துவிடும் என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.

“உனக்கெப்படித் தெரியும்?” ராதா விளையாட்டாகக் கூறுகிறாள் என்று தெரிந்தும் கேட்டாள்.

“அப்படி ஏதாவது சுருக்கென்று குத்தும் சென்டிமெண்டை இணைக்காவிட்டால் முட்டாள் ஜனங்கள் கேட்க மாட்டார்களே!” என்றாள் ராதா.

 “நீ எப்பவும் இப்படித்தான்” என்றாள் ஜானகி.

“அதில்லை அம்மா! நேற்று எனக்கு பச்சைப் புடவையை வைத்துக் கொடுக்கும் போது என்ன சொன்னாய்? ‘உத்திரத்தின் கீழே நின்று பொட்டு வைத்து வெற்றிலை பாக்கு கொடுக்கக்கூடாது’ன்னு சொன்னாய். மர உத்திரம் இருந்த அந்த நாட்களில் அவற்றின் மேல் பல்லிகள் ஓடிக்கொண்டிருக்கும். அவை மேலே விழுந்து விடும் என்பதாலோ அல்லது உத்திரமே பழையதாகிப்போய் உடைந்து மேலே விழுந்து விடும் என்பதாலோ அவ்வாறு கூறியிருப்பார்கள். இந்த கான்க்ரீட் பீம் கீழே நின்றால் அது போல் ஏதாவது நிகழுமா என்ன? நேற்று சாயந்திரம் தீபம் ஏற்றுவதற்காக விளக்கில் திரி போட்டு எண்ணெய் விடும்போது என்று சொன்னாய்? முதலில் திரியைப் போட்டு விட்டு அப்புறம் எண்ணெய் விடக் கூடாது. முதலில் எண்ணெய் ஊற்றி விட்டுதான் திரி போடணும் என்று ஏதோ கூறினாய். இப்படி தினம் ஒரு புது நம்பிக்கையை உனக்கு யார் சொல்லித்தறாங்க? இப்படிப்பட்ட அனாவசியமான நம்பிக்கைகளை வளர்த்து கொண்டு அவற்றை பின்பற்றி உன் சக்தியை எல்லாம் இவற்றிற்கே செலவழிக்கிறாயே, அம்மா!  காலையில் எத்தனை நேரம் சுலோகம் படிக்கிறாய்! பதினோரு மணி தாண்டி உடல் பலவீனமாகும் வரை உன் ஸ்தோத்திரப் பாராயணம் முடிவதில்லை. உன் உடல் ஆரோக்கியத்திற்காகவும் சுகர், பிபி குறைவதற்கும் ஒரு கால் மணி நேரம் பிராணாயாமம், ஒரு அரை மணி நேரம் வாக்கிங் செய்யக்கூடாதா? அவற்றுக்கு மட்டும்  உன்னிடம் நேரம் இருக்காது. அந்த பூஜைகளில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டு ‘தேகமே தேவாலயம்’ என்று புரிந்துகொண்டால் எத்தனை நன்றாக இருக்கும்? உன் உடலை ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டால் ஆலயத்தை பரிசுத்தம் செய்வதற்குச் சமம். ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கும் அவரவரே பொறுப்பு. உனக்கு ஏதாவது உடம்புக்கு வந்தால் உனக்கும் கஷ்டம். அண்ணிக்கும் கூட கஷ்டம் இல்லையா அம்மா?” என்றாள் ராதா.

அன்போடும் கண்டிப்போடும் பேசிய மகளை பார்த்து, “காலங்காத்தாலயே பெரிய லெக்சர். சரியாப் போச்சு போ! நான் என்ன சாப்பிட்டுச் சாப்பிட்டு உட்கார்ந்து ஆரோக்கியத்தை கெடுத்துக்குறேனா? இத்தனை பேரை பெத்து வளர்த்தேன். இன்றைக்கும் பேரன் பேத்திகளை நான்தான் பார்த்துக்கிறேன். ‘ஏதோ பாவம்….. அம்மாவின் நம்பிக்கைகளை கௌரவிப்போம்’ அப்படீன்னு விடக்கூடாதா?” ஜானகியின் முகத்தில் வருத்தம் தெளிவாகத்தெரிந்தது.

“ஐயையோ! கோச்சுக்காதேம்மா! நீ சொல்றதும் நிஜந்தான். உனக்கு உடம்பில் தெம்பு இருக்கும் போதே உன்னால் முடியக்கூடிய சிம்பிள் எக்சர்சைஸ், வாக்கிங், மூச்சுப் பயிற்சி எல்லாம் செய்ய ஆரம்பிச்சுடணும். முழங்கால் வலி வந்த பிறகு வாக்கிங் போக முடியாது. நீ எங்களுக்கும் எங்க பிள்ளைகளுக்கும் சேவை செய்துட்டே இருந்தா எங்களுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனால் உனக்கு பிறர் சேவை செய்ய வேண்டிய நிலைமை வந்தால் எங்களில் யார் உனக்கு சேவை செய்வோமோ தெரியாது…!”  குரல் உடைந்து ஒரு கணம் நிறுத்தினாள் ராதா.

மகளின் மனம் புரிந்து ஜானகிக்குக் கண்ணீர் வந்தது. “பைத்தியக்காரி! நீ எப்பவும் இப்படித்தான். ரொம்ப அதிகமாக யோசிப்பது உன் வழக்கம்” ஜானகி எளிதாக கூறி விட்டு சிரிக்க விரும்பினாலும் அவள் குரலும் தழுதழுத்தது.

“போதும்! இதோடு விடு! உள்ளே போய் வேலையைப் பார்க்கலாம். வா!” என்று பேச்சை மாற்றினாள் தாய்.

“இரு…! இரு…! ஒரு நிமிஷம். இந்த ஒரே ஒரு பேச்சை மட்டும் கேள். முன்பு ஒருவர் வீட்டில் பெரிய ஹோமம் நடந்தது. அவர் ஒரு மூலையில் ஒரு பூனையை கூடையில் போட்டு கவிழ்த்து மூடி வைத்திருந்தார். அது ஹோமம் நடக்கும் போது மியாவ் மியாவ்  என்று ஒரே கத்தல். எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தாலும் ஒரு முதியவர் மட்டும் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டார். அவருடைய பேரப் பையன் அவரிடம், “தாத்தா! ஏன் சிரிக்கிறாய்? அந்தப் பூனையை ஏன் கூடையில் கவிழ்த்துப் போட்டிருக்காங்க?” என்று கேட்டானாம். அப்போது அந்த தாத்தா என்ன சொன்னார் தெரியுமா?” கண்களை விரித்து தாயைப் பார்த்து குறும்பாக கேட்டாள் ராதா.

“தெரியாது! நீயே சொல்லிடு. சீக்கிரம் சொல்லு! சமையல் வேலையே இன்னும் முடியல” என்றாள் ஜானகி.

“எங்க தாத்தா காலத்தில் அடிக்கடி ஹோமம் பூஜை எல்லாம் செய்வாங்க. அப்போ எங்க வீட்டில் ஒரு பூனை இருந்தது. அது நைவேத்திய பதார்த்தத்தில் வாய் வைத்து விடுமோ என்று பயந்து யாகம் முடியும் வரை அதைக் கூடையைப் போட்டு கவிழ்த்து  வைப்பாங்க. அதன் பின் எங்க தாத்தாவும் போயிட்டாரு. பூனையும் போயிட்டது. ஆனால் அதன்பின் நம்ப வீட்டில் யார் ஹோமம் செய்தாலும், செய்ய வேண்டிய வேலைகள் என்ற லிஸ்டில் முதலில் இருப்பது ஒரு பூனையை எங்கிருந்தாவது பிடித்துக்கொண்டு கூடையைப் போட்டு கவிழ்த்து வைக்க வேண்டும் என்பதுதான். ஊர் பூரா சுற்றி ஒரு பூனையை எப்படியாவது பிடித்து வந்து கூடையில் கவிழ்த்து வைத்த பின்தான் ஹோமத்தைத் தொடங்குவாங்க. அப்படிப் பூனையைப் பிடித்து வந்து கவிழ்த்து வைக்காவிட்டால் யாகம் பலனளிக்காது என்று எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இதுதான் இந்தப் பூனையின் கதை. இதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்,” என்றாராம் அந்தத் தாத்தா. கதை எப்படி இருக்கு?” என்று கேட்டாள் ராதா.

“ரொம்ப நல்லா இருக்கு! இந்த விஷயத்தை அவர் இத்தனை நாளா தன் பிள்ளைகளுக்கு ஏன் தெரிவிக்கவில்லை?” என்று கேட்டாள் ஜானகி கிண்டலாக.

“என்னைப் போன்ற யங் லேடி சொன்னால் நீ கேட்கிறாயா? இல்லை அல்லவா? அதே போல் மூலையில் முடங்கிய முதியவர் பேச்சை அவர்களும் கேட்டிருக்க மாட்டார்கள்,” என்று பதிலளித்தாள் ராதா.

“பெரியவர்கள் சொன்னால் சிறியவர்கள் கேட்க மாட்டார்கள்தான். ஆனால் உன்னைப் போன்ற யங் லேடி  சொன்னால் என்னை போன்ற முதியவள் கேட்டுத்தானே ஆக வேண்டும்?” என்று கூறிக் கொண்டே உள்ளே நடந்தாள் ஜானகி.

கூடவே உடன் நடந்த ராதா, “அம்மா இதைக் கேளேன்! எங்க ஆபீசில் ஒரு பூஜாரி இருக்காரும்மா. அவர் முக்காலமும் அறிந்தவர். அவர் என்ன சொன்னார் தெரியுமா? தினமும் தவறாமல் யார் கால் மணி நேரம் பிராணாயாமம் செய்கிறார்களோ அவர்களின் பிள்ளைகள் தீர்காயுளோடு இருப்பாங்களாம். சூரியன் உதயமாகும் போது யார் அரைமணி நேரத்துக்கு குறையாமல் வாக்கிங் போகிறார்களோ அவர்களின் பேரன் பேத்திகளுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் வந்து சேருமாம்…!” கண்களை விரித்து கைகளைக் கும்பிட்டு உண்மை போல் கூறினாள் ராதா.

சமையலறையில் அப்போதுதான் பணிப்பெண் தேய்த்து வைத்த பாத்திரங்களில் இருந்து ஒரு கரண்டியை எடுத்து ராதாவை அடிக்க வருவது போல் கையை உயர்த்தினாள் ஜானகி. ராதா சிரித்துக் கொண்டே சமையலறையிலிருந்து வெளியே ஓடிவந்தாள்.

“அப்பாடா! அம்மாவை அடிப்பதற்கு ஒரு அம்மம்மா இருக்காங்க!” என்று கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் பிள்ளைகள்.

***

One Reply to “சென்டிமென்ட்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.