க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]

1915 ஆம் வருடத்தில், ஹியோ டி ஜனெய்ரோ மாநகரில், ஓர் இளைஞனாக இருந்த க்ரேஸிலியானோ ப்ராஸியோ நாட்டின் மிகப் பாராட்டப்பட்ட நாவலாசிரியராக மாற இன்னும் நிறைய வருடங்கள் இருந்தன. ஆனால் அன்று ஹாமோஸ் ஒரு பத்திரிகையாளராக முன்னேற முயன்று கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்ததெல்லாம், அவர் அந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை என்பதே.

கூச்ச சுபாவமுள்ள அவருக்கு மாநகரத்தின் சிக்கலான வாழ்நிலைகள் பொருந்தி வரவில்லை. சொந்த ஊரான பாமெய்ஹோ டாஸ் இண்ட்யோஸ், ப்ராஸியோ நாட்டின் வறண்ட வடகிழக்குப் பகுதியில் மத்தியில் இருந்தது, அது ஒரு சிற்றூர், ஹையோ டி ஜனெய்ரோ மாநகருக்கு முற்றிலும் மாறானது. அவர், தன் ஊர், வீடு ஆகியனவற்றை விட்டு ஓர் மாநகரத்துக்கு வந்ததற்கு வருந்துபவராக இருந்தார். எனவே, அவர் மாநகரிலிருந்து புறமுதுகிட்டு ஓடி, சொந்த ஊருக்குப் போய், அவருடைய அப்பாவைப் போலவே தானும் ஒரு கடைக்காரராகி, வாடிக்கையாளர்கள் தன் புத்தக வாசிப்புக்குத் தடையாக இருப்பதால் அவர்களிடம் எரிந்து விழுபவராக இருப்பதாக நான் கற்பனை செய்து பார்த்தேன்.

ஆனால், 1928 இல் ஹாமோஸ் பாமேய்ஹோ டாஸ் இண்ட்யோஸ் நகரத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விதத்தில்தான், நம்பமுடியாத வகையில் ஹாமோஸ் நாட்டின் இலக்கிய வெளியில் முன்னிலைக்கு வந்தார். ஒரு முனிஸிபாலிடியின் தலைவராக, அலகோவாஸ் மாநிலத்துக்கு, நகர நிதித் திட்டம், மற்றும் இதர செயல் திட்டங்கள் பற்றிய வருடாந்தர அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டியது அவருடைய வேலை. அந்த அறிக்கைகளை அவர் வடிவத்தில் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். ‘பொதுப்பணிகள்’ மற்றும் ‘அரசியலிலும், நீதி மன்றத்திலும் செயல்படுபவர்கள்’ என்பன போன்ற உப தலைப்புகளைக் கொண்ட ஓர் உரைநடையில் அவர் சிறு நகர வாழ்க்கை, பகைமைகள், அதிகாரி அமைப்பின் தண்டச் செலவுகள் போன்றனவற்றைப் பற்றி நகைச்சுவைச் சித்திரங்களை உலர்ந்த நடையில் எழுதினார். அந்த அறிக்கைகள் – காலக்கிரமப்படி பார்த்தால் பொருந்தாத உவமை ஒன்று இங்கே – வைரலாகப் பரவின, பத்திரிகைகளால் நாடெங்கிலும் விநியோகிக்கப்பட்டு, பிரசுரகர்களிடமிருந்து இவர் வேறேதாவது எழுதி இருக்கிறாரா என்று உசாவும் கடிதங்கள் குவிந்தன. அவருடைய முதல் நாவல் ‘கேயடோஸ்’, சீக்கிரமே பிரசுரமாயிற்று, அவருடைய பிரகாசமான இலக்கியப் பயணம் துவங்கியது.

பின்னர் ஹாமோஸ் புகழ் பெற்ற மூன்று நாவல்களையும், தன் இளம்பிராய நினைவுகளையும், வார்கஸின் சர்வாதிகார ஆட்சிக்காலத்தின் போது அவர் எதிர்கொண்ட சிறைவாசம் பற்றியும், பல சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் சிறுவருக்கான புத்தகங்களையும் எழுதினார். 1941 ஆம் ஆண்டில், நாடு தழுவிய ஓர் இலக்கிய கருத்துக் கணிப்பில் இவர் ப்ராஸியோ நாட்டின் தலை சிறந்த பத்து நாவலாசிரியர்களில் ஒருவராகத் தேர்வானார். அதற்குப் பிந்தைய வருடங்களில் இவரது தாக்கம் அழியாமலும், கருத்தாழம் மிக்கதாகவும் நீடித்திருக்கிறது. நல்ல கல்வி பெற்ற பிராஸியர்களில் பெரும்பான்மையினர் இவரது புத்தகங்களில் ஒன்றையாவது படித்திருப்பார்கள். வீடாஸ் ஸேகஸ் (பலனற்ற வாழ்வுகள்) எனும் நூல் நூறு பதிப்புகளுக்கும் மேலாகப் பிரசுரம் கண்டிருக்கிறது.

ஆனால், சமீபத்தில் அவருடைய கதையில் வேறொரு விதமான வலுவான விவரணை  ஒன்று ஒளிந்திருப்பதை நான் அறிந்தேன். ரியோ மாநகரில் ஒரு வருடம் தட்டச்சுக் கோர்ப்பவராகவும், பிறகு பிழை திருத்துபவராகவும் பல செய்தித்தாள்களில் பணி புரிந்த பிறகு, வீட்டுக்கு எழுதும் கடிதங்களில் தன் கோழைத்தனத்தைப் பற்றிப் புலம்பிய அந்த இளைஞனுக்கு சுய நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் ஒரு செய்தி கிட்டியது: அவருடைய பல அபுனைவுகள் கூடிய விரைவில் கஸெடா த நோடீஸியாஸ் என்ற பத்திரிகையில் மறுபிரசுரமாகவிருக்கின்றன, அது அன்றிருந்த மிகப் பிரசித்தி பெற்ற செய்தித்தாள்களில் ஒன்று. எல்லாம் நம்பிக்கை அளிப்பதாகத் தெரிந்தன, ஆனால் விதி விரைவில் இடைமறித்தது. 1915 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில், ஹாமோஸின் அப்பா தந்தி அடித்துத் தகவல் தெரிவித்தார், ஹாமோஸின் மூன்று உடன்பிறப்புகளும், ஒரு மருமானும் ஒரே நாளில் அப்போது பாமேய்ரா தி இந்த்யோஸ் நகரைத் தாக்கிய பெருவாரி நோயால் இறந்தனர் என்பது அந்தச் செய்தி. அவருடைய அம்மாவும், சகோதரியும் கவலைக்கிடமான நிலையில் இருந்தனராம். “அதற்குப் பிறகு ரியோ மாநகரில் இருப்பதற்கு எந்த வழியிலும் ரியோ மாநகரில் அவரால் இருந்திருக்க முடியாது,” என்று அவருடைய சரிதத்தை எழுதிய டெனீஸ் டெ மொராய்ஸ், ஹாமோஸின் வாழ்க்கை பற்றிய வெல்யோ க்ராஸா என்ற நூலில் எழுதுகிறார். ஹாமோஸ் மாநகரில் தன் தொழில் வாழ்வை வளர்ப்பது பற்றிய நம்பிக்கைகளைக் கைவிட்டு விட்டு, தன் ஊருக்குத் திரும்ப ஒரு கப்பலில் ஏறிச் செல்கிறார், அங்கு உள்ளூரில் தன் மனதைக் கவர்ந்த ஒரு பெண்ணை மணக்கிறார், அங்கேயே தங்கி விடுகிறார். ரியோ நகருக்குத் திரும்ப மேலும் இருபத்தி மூன்று வருடங்கள் ஆகின்றன.

ஹாமோஸின் முனிஸிபாலிடி அறிக்கைகளை நான் மொழி பெயர்த்தேன், ஏனெனில் அவை இங்கிலிஷில் இதுவரை பிரசுரிக்கப்படவில்லை, அவற்றின் செம்மையைக் கேட்கும் சினமும், இடக்கான நகைச்சுவையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அவருடைய வாழ்வில் கொள்ளை நோயின் தாக்குதல் பற்றித் தெரிந்து கொண்ட போது, அந்த அறிக்கைகளில் துருத்தலாகத் தெரியும் ஒரு நகரத்தலைவருக்கான தீவிர வேகத்தைப் பற்றிய என் பார்வையை நான் மாற்றிக் கொண்டேன். “நான் பொதுச் சுத்தம் பற்றி மிகவும் ஆழமாக கவனிப்பு கொண்டிருக்கிறேன்,” என்று தன் 1929 ஆம் வருடத்து அறிக்கையில் அவர் அறிவித்திருந்தார். சமூகக் குளியலறைகளைக் கட்ட வைத்தார்; ஊர்ப் பொதுவில் குப்பை போடுவதற்கு எதிராகச் சட்டங்களை நிறைவேற்றினார். ”தெருக்கள் பெருக்கப்பட்டிருக்கின்றன. நகரத்தில் வாழ்ந்து கடந்து போன பல தலைமுறைகளால் குவிக்கப்பட்ட குப்பைகளை நான் அகற்றி இருக்கிறேன், செலவுக்கு நிதி இல்லாததால், நகரத்தால் அகற்ற முடியாத பிரும்மாண்டமான குப்பைக் குவியல்களை எரித்திருக்கிறேன்.” தன்னை எதிர்த்தவர்களைப் பற்றிப் பேசுகையில் அவர் கிண்டலில் இறங்குகிறார்: “பின்புறத்துத் தோட்டங்களில் அருமையாகக் கருதப்பட்டு சேமிக்கப்பட்டிருந்த தூசிகளை அகற்றியதற்காக, புலம்பல்களும், முனகல்களும், அச்சுறுத்தல்களும் கேட்கின்றன; நூற்றுக் கணக்கான தெருநாய்களை ஒழிக்க நான் ஆணை பிறப்பித்ததற்கு புலம்பல்களும், முனகல்களும், அச்சுறுத்தல்களும் கேட்கின்றன; நகரச் சதுக்கங்களில் கால்நடைகளை வளர்க்கக் கூடாது என்று சட்டம் போட்டதற்கு விவசாயிகளிடமிருந்து முனகல்களும், புகார்களும், அச்சுறுத்தல்களும், கிறீச்சிடல்களும், வீறிடல்களும், உதைகளும் எழுகின்றன.” (1929 ஆம் வருடத்து அறிக்கையை நான் மொழி பெயர்த்ததிலிருந்து சில பகுதிகளை என் குழந்தைகளிடம் நான் வாய்விட்டுப் படித்துக் காட்டியபோது, அதில் நாய்களை கொன்றொழித்த செய்தியும் இருந்ததை நான் மறந்திருந்தேன். அதுவரை அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர், ஆனால் அதைக் கேட்ட பிறகு அவரை வெறுப்பதாக முடிவு செய்தனர். நாய்கள் தெள்ளுப் பூச்சிகளைச் சுமப்பவை, அப்பூச்சிகள் மகாமாரி நோயைச் சுமக்கக் கூடியவை, மகாமாரி இந்த எழுத்தாளரின் குடும்பத்தைக் கொன்றொழித்தது என்று மட்டும் என்னால் விளக்க முடிந்திருந்தால்.. அல்லது நான் அந்தப் பகுதியைப் படிக்காமல் ஒதுக்கி இருக்க வேண்டும்.) பன்றிகளையும், ஆடுகளையும் நகரத் தெருக்களில் திரிய விட்டதற்காகத் தன் அப்பாவிற்கே ஹாமோஸ் அபராதம் விதித்தார்.  அவருடைய அப்பா குறைப்பட்டுக் கொண்ட போது, ஹாமோஸ் சொன்ன பதில்: “ மேயர்களுக்கு அப்பாக்கள் கிடையாது. நான் உங்களுடைய அபராதத்தைக் கட்டி விடுகிறேன், ஆனால் நீங்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களைக் கொட்டிலில் அடைக்கத்தான் வேண்டும்.”

நகரத் தலைவர் என்ற பொறுப்பில் அவர் செய்தவற்றுக்காக அவர் தொடர்ந்து பாராட்டப்பட்டாலும், ஹாமோஸ் இரண்டே வருடங்களில் அரசியல் விளையாட்டிலிருந்து அகன்று விட்டார். அவருடைய எழுத்து வாழ்க்கை மேல் நிலைக்கு வந்திருந்தது, ஆனால் அவருடைய வாழ்நாளில் விமர்சகர்களிடமிருந்து பெற்ற புகழ் அதிகமாக இருந்தாலும், ஈட்டிய வருவாய் அதற்கீடாக இல்லை.  இப்படிப் பெற்ற பாராட்டுதல்களை அவர் உவப்போடு ஏற்றார் என்றுதான் நானும் நினைக்கிறேன், ஆனால் எட்டுக் குழந்தைகளுக்குத் தந்தையான அவருக்குச் செலவுகள் நிறைய, அவற்றுக்கு வருவாய் தேவைப்பட்டது. 1950 இல், அவர் ரியோ மாநகரில் மறுபடி வாழத் துவங்கி இருந்தார், இப்போது இலக்கிய வட்டங்களில் அவருக்கு நிறையத் தொடர்புகள் இருந்தன, அதனால் ஆல்பெர் காம்யுவின் ‘த ப்ளேக்’ நாவலை ஃப்ரெஞ்சிலிருந்து போர்ச்சுகீஸிய மொழிக்கு மாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. இதற்கு முன்பு ஹாமோஸிற்கு காம்யுவின் எழுத்தில் இருந்த நாட்டத்தால் அவர் இந்த மொழிபெயர்ப்பு வேலையை எடுத்துக் கொண்டார் என்று நான் நினைத்திருந்தேன். அவருக்கு தொற்று நோய் பீடிப்பால் ஏற்பட்ட பெரும் நஷ்டங்களைப் பற்றி அறிந்த பின், இந்த நாவல் ஒரு கொள்ளை நோயைப் பற்றிச் சொல்கிறது என்பதை அவர் மதித்ததால் இதை எடுத்துக் கொண்டார் என்றும், ஒருக்கால் தான் மறுபடியும் சொந்த ஊர்ப் பகுதியை விட்டு விட்டு, தென்பகுதிக்கு (ரியோ மாநகருக்கு) வந்ததால் மறுபடி இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் தாயத்தாக இந்த மொழிபெயர்ப்பு இருக்கும் என்று நினைத்தாரோ எனவும் எனக்குத் தோன்றியது.

ஆனால் இரண்டு ஊகங்களுக்கும் போதுமான ஆதாரங்களை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை: பொது அபிப்பிராயப்படி, அன்று ப்ராஸியாவின் சிறப்பான நாவலாசிரியர்களாகக் கருதப்பட்டவர்களில் ஒருவரைக் கொண்டு ப்ராஸியாவின் புத்தக வாசகர்களுக்கு அன்னிய மொழி இலக்கியத்தைக் கொணர பிரசுரகர்கள் விரும்பினர், அதனால் ஹாமோஸ் த ப்ளேக் நாவலை மொழிபெயர்க்க அழைக்கப்பட்டார், ஆனால் அவருடைய பெயர் இரண்டாம் பதிப்பில்தான் வெளிப்பட்டது என்பனதான் தெரிந்த விவரங்கள். ஹாமோஸ் முதலில் விருப்பமில்லாமல் இருந்தார்- காம்யுவின் எழுத்து மீது அவருக்கு அத்தனை மதிப்பு இருக்கவில்லை, அது மிகவும் அலங்காரமாக இருப்பதாக ஹாமோஸ் கருதி இருந்தார்- ஆனால் அவருக்கு அப்போது பணத் தட்டுப்பாடு இருந்தது. அவர் தன்னளவில் இதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார், அந்த நாவலை மறுவார்ப்பு செய்து விட்டார், ஒவ்வொரு வாக்கியமாக தன்னுடைய செதுக்கப்பட்ட உரைநடைக்கு மாற்றினார்- இப்படிச் செய்தது, க்ளௌடியோ வேய்கா எனும் விமர்சகரின் கூற்றுப்படி, ஹாமோஸ் தன் நாவல் ஒன்றின் முதல் படிவம் போல காம்யுவின் நாவலை எடுத்துக் கையாண்டிருக்கிறார் என்றாகும்.

த ப்ளேக் நாவல் ஹாமோஸின் புத்தகங்களை வாசித்தவர்களுக்குப் பழகியதாக இருக்கும் ஒரு இடத்தை வருணிப்பதிலிருந்து துவங்குகிறது: பொது நடமாட்டத்திலிருந்து விலகிய சிற்றூர் ஒன்று, சலிப்பூட்டும் வாழ்க்கையில் உழன்றபடி, ஏகப்பட்ட வேலைப்பளுவில் சிக்கி வாழும் மக்கள், “எல்லாவற்றுக்கும் மேலாக வியாபாரத்திலேயே குறியாக இருக்கிறவர்கள்- அவர்களே சொல்கிற மாதிரி வியாபாரம் அவர்களை வேலையில் ஈடுபட்டவர்களாக வைக்கிறது.” காம்யுவின் கதை சொல்லி, அதைச் செய்ய விருப்பமில்லாத ஓர் பகுதி நேர எழுத்தாளர், இறுதி வரை யார் என்று அடையாளம் காட்டப்படாதவர். (ஹாமோஸும், தன் இரு நாவல்களைப் பகுதி நேர எழுத்தாளர்களை மையமாகக் கொண்டு எழுதி இருந்தார். த ப்ளேக் நாவலைப் போலவே அவையும் சுய வெளிப்பாடு, மற்றும் கதை சொல்லும் பாரம்பரியங்களில் உள்ள பிரச்சனைகளைக் கையாண்டிருந்தன.) [ப்ளேக் நாவலில்] கதை சொல்லி, அல்ஜீரியாவின் வடக்குக் கரையில் இருக்கும் ஔரான்  என்கிற அந்த ஊரில் வசிப்பவன். கொள்ளை நோயான மகாமாரி அங்கு பற்றிக் கொண்ட போது அதன் பேரழிவைப் பதிவு செய்பவனாக விடப்பட்டிருக்கிறான். அடிக்கடி அவன் தன்னிலையில் கூட்டுப் பெயர்ச்சொல்லுக்குள் இறங்கி விடுகிறான் – “எங்கள் ஊர்”, “எங்கள் குடிமக்கள்” என்று பேசுவதன் மூலம். ஆனால் தன்னைப் பற்றிப் பேசும்போது அன்னியரைச் சொல்வது போல வேற்றுமைச் சொல்லால் குறிக்கிறான். காம்யுவின் நடையிலும், வெளிப்பாட்டிலும்  ஹாமோஸ் செய்த பல மாறுதல்களில் இந்த எங்கள் மற்றும் நாங்கள் ஆகியன அகற்றப்படுவது ஒன்று.  இந்தப் பெயர்ச்சொல்களில் கிட்டும் சமூக உணர்வும் இவற்றோடு நீக்கப்பட்டு விடுகிறது. ஹாமோஸ் அதன் பிறகு மேலும் குறுக்குகிறார்: வாக்கியங்களை அவற்றின் சாரத்துக்குக் குறைக்கிறார், அதன் மூலம் சொல்லப்படுவதை இன்னமும் தூர விலகியதாக ஆக்கி, நாவலைச் சுருக்கி, இறுக்கமாக ஆக்கி விடுகிறார்.

இது அவர் தன் எழுத்து நடைக்குப் பயன்படுத்திய வழிமுறையை விட மாறியதில்லை, அவர் அதை சுகாதாரம் பற்றிய வர்ணனைகளில் விளக்குகிறார் என்பதில் நாம் வியக்க ஏதுமில்லை. 1948 இல் அவர் ஒரு பேட்டியில் சொன்னவை இவை:

அலகோவன் சலவைக்காரப் பெண்கள் தங்கள் வேலையைச் செய்வதை ஒத்ததுதான் இது. அவர்கள் முதல் துவைப்பில் துவங்குவார்கள், ஒரு குளத்தின் அல்லது ஆற்றின் கரையில் அழுக்குத் துணிகளை ஈரமாக்குவார்கள், துணியை நன்கு பிழிவார்கள், மறுபடி ஈரமாக்கி, மறுபடி பிழிவார்கள். பிறகு அவற்றின் மீது நீலச் சாயத்தை ஏற்றுவார்கள், சோப்பிடுவார்கள், பிழிவார்கள், ஒரு முறை, இருமுறை. அந்தத் துணியை ஒரு கல்லிலோ அல்லது பாறையிலோ அடிப்பார்கள், மறுபடி மறுபடி அதைப் பிழிவார்கள், பிழிந்து பிழிந்து அதிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட விழாத நிலைக்குக் கொணர்வார்கள். அதன் பிறகுதான் சுத்தமான துணிகளைக் கொடியில் உலரப் போடுவார்கள்.

 தேய், அடி, உலரக் கொடியில் போடு: இதுதான் மொழி பெயர்ப்புக்கும் அவருடைய அணுகலாக இருந்ததாகத் தெரிகிறது. அவருடைய படைப்புக்கு ஒரு மொழிபெயர்ப்பாளராக இருக்கும் என்னால், இதில் ஓர் நகைமுரண் இருப்பதைக் கவனிக்காமல் விடவில்லை, நான் ஹாமோஸின் படைப்பை மொழி பெயர்க்க விரும்பியதற்கு ஒரு காரணமே, அவருடைய கறாரான நடையை மொழிபெயர்ப்பாளர்கள் போதுமான அளவு மரியாதையோடு அணுகவில்லை என்று நான் கருதியதுதான். இங்கே பார்த்தால் அவர், நோபல் பரிசு வாங்கிய ஒரு ஃப்ரெஞ்சு எழுத்தாளரை, அதுவும் தன் நடைத் தேர்வுகளில் மிகக் கவனமாக இருந்தவரை, தீவிரமான மாறுதல்களுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் க்ரேஸிலியானோ ஹாமோஸின் மொழி பெயர்ப்பாளர்களில் யாருமே, என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன், தங்களுடைய நாட்டின் முன்னணி நாவலாசிரியர்களில் ஒருவராக இருக்கவில்லை. எனவே காம்யுவின் வாக்கியங்களை ஒரு வெறி பிடித்த சலவைக்காரப் பெண்ணைப் போல, இப்படிச் சுருக்கி, தன்னுடைய நெறிக்கப்பட்ட பார்வைக்குக் கொண்டு வருவதில் ஹாமோஸ் என்ன செய்திருக்கிறார் என்று நாம் கேள்வி கேட்க ஆரம்பித்தால், இது ஃபாக்னர் தன் எழுத்து வாழ்வில் இறுதிக் கட்டங்களில் காம்யுவை மொழி பெயர்க்கத் துவங்கியதைப் போல இருக்கிறது என்பதை நினைவு கொள்ளலாம். (ஹாமோஸ் அடிக்கடி ஃபாக்னரோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டிருக்கிறார், இவரும் ஃபாக்னரைப் போல தூரத்தில் ஒதுங்கி இருக்கிற ஒரு நிலப்பகுதியை வெறிச்சிட்ட நடையில் சித்திரித்திருந்தார் என்பது ஒப்பீடு) அப்படி ஒரு மொழி பெயர்ப்பில் இருக்கக் கூடிய மட்டுமீறிய தற்பெருமையால் நாம் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டோம், மாறாக அதன் விளைவு பற்றி நமக்குக் கொஞ்சம் அறியும் ஆர்வம் இருக்கும்.

த ப்ளேக் நாவலிலும் பல நாய்களும், பூனைகளும் சுடப்படுகின்றன. ஆனால் எலிகள் திரும்பி வரத் துவங்கும்போது, தங்களுடைய நடவடிக்கைகளில் தீவிரமான முனைப்போடு, ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்குப் பதுங்கி ஓடத் துவங்குகையில்தான் ஔரான் நகரத்தின் குடிமக்களுக்குத் தமக்குப் பழக்கமான இயல்பான வாழ்க்கை மறுபடி துவங்குகிறது என்று புலனாகிறது. தி ப்ளேக் நாவலின் இறுதியில், ஔரானின் குடிமக்கள், “துன்பப்பட்ட காலம் முடியப் போகிற அந்த மூச்சுத் திணறச் செய்யும் கணத்தில், இன்னமும் மறதிக்கான காலம் துவங்காத நிலையில், வீடுகளை விட்டுத் தாமாகவே வெளியில் வந்து அடைகிறார்கள்.  எங்கு பார்த்தாலும் ஆட்டம்…. பழைய வாசனைகள், வாட்டப்பட்ட மாமிசமும், சோம்பின் மதுவும் கலந்து நகரின் மென்மையான ஒளியில் மேலெழுந்தன. அவனைச் சுற்றி எங்கும், சிரித்த முகங்கள் வானோக்கி உயர்ந்தன.”

சூஸன் சாண்டாக்  “எய்ட்ஸும், அதன் உருவகங்களும்” என்ற தன் கட்டுரையில், பிளேக் போன்ற கொள்ளை நோய்களை படையெடுப்பு என்ற படிமமாக வருணித்துப் படிகப்படுத்தியபிறகு நாம் அவற்றை அப்படி நினைப்பது சாதாரணமான விஷயமாகி விட்டிருக்கிறது. “ப்ளேக்கின் தாக்கம் பற்றிய விவரிப்பில் ஒரு பொதுவான அம்சம்: அந்த வியாதி எப்போதும் வேறெங்கிருந்தோதான் வந்ததாகக் கருதப்படும்,” என்று அவர் எழுதினார். பதினைந்தாம் நூற்றாண்டில் மேக நோயைக் (ஸிபிலிஸ்) குறிக்கவிருந்த பெயர்களை எல்லாம் பட்டியலிட்டார்- இங்கிலிஷ்காரர்கள் அதை “ஃப்ரெஞ்சு அம்மை,” என்று சொல்கையில், ”பாரி நகரத்தார்களுக்கு (பாரிஸ்) அது “மார்பஸ் ஜெர்மானிகஸ்”, நேபிள்ஸ் நகரத்தில் அது ஃப்லாரெண்டைனியர்களின் நோய், ஜப்பானியர்களுக்கு அது சீன நோய்.” என்று எழுதினார். நாம் எல்லாரும் கொள்ளை நோய்கள் வெகு தொலைவிலிருந்து நமக்கு (அழையா) விருந்தாளியாக வருகின்றன,  அவை நம்முடைய வியாதிகள் இல்லை, ஒரு போதும் நம்முடைய பிழையால் வந்தவையும் இல்லை, என்று நினைக்க விரும்புகிறோம்.

காம்யுவின் தீவிரமான புத்தாக்கம் இங்கு என்னவென்றால், ப்ளேக் தானாகவே ஔரானின் மக்கள் நடுவிருந்து எழுவதாகக் காட்டியதுதான் – அந்தப் புத்தகம்,  அந்தக் கிருமி பல வருடங்கள் அடங்கி இருக்கக் கூடியது, பிறகு “தன் எலிகளை உசுப்பி எழுப்பி, சந்தோஷமாக இருக்கும் நகருக்குச் சாவைக் கொணரும்.” என்று முடிகிறது. ஆனால் இப்போது அந்தப் புத்தகம் நாஜிப் படையெடுப்புக்கு உருவகமாகவே வாசிக்கப்படுகிறது என்றாலும். அந்நியரின் படையெடுப்பு என்ற உருவகம் அப்படி ஒரு அபாரமான தாவல் இல்லை. ஆனால் ஹாமோஸைப் போல, காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு இன்னும் தானாகாத ஒரு நாட்டில், தேசிய இலக்கியத்தை வரையறுக்கவும், அதைப் பெருமை உள்ளதாகக் காட்டவும் முயல்கையில், இன்னமும் சொந்த எழுத்தின் மூலம் போதுமான வாழ்வாதாரத்தைத் திரட்ட முடியாமல் இருக்கையில், (சொந்த மரணத்துக்குப் பிறகு தன் எழுத்து பணம் குவிக்கும் என்று நம்புபவராக இருக்கிறீர் என்ற போதிலும்), உள்ளூர்ப் பிரசுரகர்கள் யூரோப்பிய எழுத்தை நாட்டில் பிரபலப்படுத்த கொள்ளை நோயைப் பற்றிய தொல்லையான ஒரு ஃப்ரெஞ்சு நாவலை மொழிபெயர்க்கச் சொல்கையில் ஒருவர் என்ன செய்ய நேரும்? ஒருக்கால் அவர் அந்த நாவலைத் தன்னுடைய சொந்த நாவல் போல நடத்துவதுதான் நேரும்.  

அதன் இறுதிக் கட்ட, இருண்ட எச்சரிக்கைகளை எல்லாம் தாண்டி, த ப்ளேக் மனிதருக்கு தேறுதலைக் காட்ட முயலும் நாவலாகவே இருக்கிறது. ஹாமோஸ் இப்படி மிக அரிதாகவே எழுதுகிறார். காம்யுவின் கதைசொல்லி, இந்தக் கதையைத் தான் எழுதியது, ஔரானின் குடிமக்கள் அனுபவித்த வன்முறைக்கும், அநீதிக்கும் சாட்சியமாக இருக்கத்தான் என்று சொல்கிறார். மேலும் “ஒரு கொள்ளை நோயின் நடுவில் இருக்கும் ஒரு மனிதன் என்ன கற்கிறான் என்றால், மனிதரிடம் வெறுப்பதற்கு இருப்பனவற்றை விட, பாராட்ட இருப்பனவே அதிகம் என்று சொல்லத்தான்” என்றும் சொல்கிறார். ஹாமோஸின் நாவல்கள் வடிவில் வட்டமாக இருக்கத் தலைப்படுகின்றன, நீட்சியாக அல்ல. அவை சூரியனைப் பார்க்க உயர்ந்த முகங்களோடும், மனிதனின் சாராம்சமாக உள்ள நல்ல குணத்திற்குப் புகழாரம் சூட்டுவதிலும் முடிவதில்லை. மாறாக அவருடைய புத்தகங்கள், கவனிக்கப்படாத விதங்களில் தம்முடைய விதிக்கு எதிராக மனிதர் அற்புதமாகப் போராடினாலும், அதை மாற்றுவதில் தோல்வியே அடைகிறார்கள், அதற்குக் காரணம் மற்றெதையும் விட அவர்களுடைய குருட்டுத்தனங்களே என்பதற்குச் சாட்சியாக அமைகின்றன. அவருடைய பாத்திரங்கள், அவர்களின் பெருவிழைவுகளுக்கு மாறாக, ஒரு போதும் மனித இயல்பையோ, தங்களுடைய இயல்புகளையோ, அல்லது இயற்கையையோ மீறுவதில் வெற்றி காண்பதில்லை; ’என்னதான் மாற்றங்கள் நேர்ந்தாலும், எல்லாம் அப்படியேதான் இன்னமும் இருக்கின்றன.’ [3]

காம்யுவின் கதைசொல்லி கடைசியில் தான் யாரென்று அடையாளம் காட்ட முன்வரும்போது, இதுவரை கதையை எழுதுகிறவர்கள் என்று நாம் பார்த்திருந்த இருவரில் ஒருவர் கூட இந்த நபர் அல்ல என்று புதிர் முரணாக நாம் அறிகிறோம். அந்த இருவரில் ஒருவர், தன் முதல் வாக்கியத்தையே உளைச்சலோடு திரும்பத் திரும்பத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறவர். அவர் மட்டும் அந்த வாக்கியத்தைத் தாண்டி விட்டால், அது நிச்சயம் அவர் வாழ்வின் சாதனைப் புத்தகமாக நிச்சயம் ஆகி விடும். அவர் இறுதியாக ஒரு சிறு அளவு சந்தோஷத்தை அடைகிறார்: “நான் எல்லாப் பண்புச் சொற்களையும் வெட்டி விட்டேன்,” என்கிறார் அவர்-  அந்த வார்த்தைகள் ஹாமோஸுக்கும் உவப்பானவையாக இருந்திருக்கும்.

(தமிழாக்கம்: மைத்ரேயன்)

~oOo~

இந்தக் கட்டுரை த பாரிஸ் ரிவ்யூ பத்திரிகையில்,மே 15, 2020 அன்றுவெளியானது. இதன் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்: https://www.theparisreview.org/blog/2020/05/15/graciliano-ramos-and-the-plague/

ஆசிரியர் பற்றி: பத்மா விஸ்வநாதன் இரு நாவல்களை எழுதி இருக்கிறார். ‘த டாஸ் ஆஃப் அ லெமன்’ மற்றும் ‘த எவெர் ஆஃப்டர் ஆஃப் அஷ்வின் ராவ்’ என்பன அவை. நாடகங்கள், பண்பாடு பற்றிய கட்டுரைகள், மதிப்புரைகள் போன்றனவற்றையும் எழுதி இருக்கிறார். க்ராண்டா, த பாஸ்டன் ரிவ்யூ ஆகிய பத்திரிகைகளில் கதைகள் பிரசுரமாகியுள்ளன.  க்ரேஸிலியானோ ஹாமோஸின் ‘சம் பெர்னார்டோ’ (São Bernardo) என்ற நாவல் இவருடைய மொழி பெயர்ப்பில் சமீபத்தில் இங்கிலிஷில், நியூயார்க் ரிவ்யூ புத்தகப் பிரசுரகர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.


[1] Graciliano Ramos என்ற பெயரில், போர்ச்சுகீசிய மொழி உச்சரிப்பில் Ramos என்ற சொல் ஹாமோஸ் என்ற உச்சரிப்பைக் கொண்டதாகிறது.

[2] Plague என்ற நோய்க்கு தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்ட சொற்களில் பெருவாரி, மகாமாரி, மாரகம் ஆகியனதான் ஓரளவு பொருத்தமானதாகத் தெரிகின்றன. இங்கு ப்ளேக் என்றே பயன்படுத்துகிறோம்.

[3] plus ça change, plus c’est la même chose – என்பது இங்கு கொடுக்கப்பட்ட ஃப்ரெஞ்சு சொலவடை. இங்கிலிஷில் நாம் இதை ‘The more that changes, the more it’s the same thing’ என்று படித்திருப்போம்.

2 Replies to “க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.