காயம்

பணீஷ்வர்நாத் ரேணு / தமிழாக்கம்: ரமேஷ் குமார்

பணீஷ்வர்  பீகாரிலுள்ள  அரரியா மாவட்டத்தில் உள்ள ஃபாபிஸ்கஞ்ச்  அருகில் உள்ள ஔராஹி ஹிங்னா எனும் கிராமத்தில் 4 மார்ச் 192l அன்று பிறந்தார் . இப்போது அந்தக் கிராமம் பூர்னியா மாவட்டத்தில் உள்ளது . அவர் இந்தியாவிலும நேபாளிலும் பயின்றார். பின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1942 இல் நடந்த சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு,  பின்னர் 1950இல் காங்கிரஸ் நேபாள புரட்சிகர இயக்கத்தில் இணைந்தார். பாட்னா பல்கலைக்கழகம், மாணவர்கள் இன் கொண்டு மாணவர் மோதல்கள் குழு உள்ள செயலில் போன்ற பகுதியாக எடுத்து மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் போராட்ங்களில் பங்கேற்றார். பின் தன் இலக்கியப் பணிகளைத் தொடர்ந்தார். எழுத்தாளர் அக்ஞேய உடன் நல்ல நட்பு கொண்டார். 

அவரது எழுத்து வருணனை பாணியைக் கொண்டது. ஒவ்வொரு மனிதரின் உளவியல் சிந்தனை தன் கதைகள் மூலம் கூறி வாசர்களை தன் வசம் ஈர்த்தார். ரேணுவின் கதைகள் மற்றும் நாவல்கள் உள்ள அவரது பிராந்திய வாழ்க்கையின் ஒவ்வொரு இசைக்கு , ஒவ்வொரு வாசனை, ஒவ்வொரு ரிதம்,  ஒவ்வொரு குறிப்பு, ஒவ்வொரு அழகு மற்றும் ஒவ்வொரு அருவருப்பு உள்ள சொற்களால் வசீகரம் செய்தார். ரேணு ஒரு அற்புதமான கதை சொல்லியாகத் திகழ்ந்தார். கிராம் வாழ்க்கையை அச்சு அசலாக பிதிரிபலித்தது அவரது கதைகள். மைலா ஆஞ்சல் அவரது புகழ்பெற்ற படைப்பாகும். பத்மஸ்ரீ உட்பட ஏராளமான விருதகளைப் பெற்றுள்ளார். அவர் 11 ஏப்ரல் 1977 இல் தன்னுடைய ஐம்பதாறாவது வயதில் இயற்கை எய்தினார்.

~oOo~

காயம்

அறுவடை காலங்களில் கிராம மக்கள் சிர்சனை தேடுவதில்லை. அவன் வேலைக்குத் தகுதியானவன் இல்லை என்றல்ல, அவன் சிறந்த கலைஞன் என்பதால். இதனால் நாற்று நட, அறுவடை செய்ய என்ற வழக்கமான விவசாய வேலைகளுக்கு அவனை யாரும் எதிர்பார்ப்பதில்லை. கூப்பிட்டுத்தான் என்ன ஆகப்போகிறது. அவன் கதிரருவாள் எடுக்கவும் முண்டாசு கட்டிக்கொண்டு வயலுக்குக் கிளம்புவதற்குள் பொழுதாகிவிடும். சும்மா வேலை செய்யாமல் கூலி யாரும் தருவதாக இல்லை.

இப்போது அவனை திண்ணிப்பண்டாரம், சோம்பேறி, பொழப்பு கெட்டவன் என என்ன வேண்டுமானாலும் சொல்லாம். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்னால் அவன் அப்படியில்லை. முன்பெல்லாம் அவன் குடிசைக்கு முன்னால் பெரிய பெரிய பணக்காரர்கள் கூட அவனுக்காக காத்திருப்பார்கள். “ ஏ சிர்சன் பாயீ உன்னப் போல பெரிய கைவினைப்பொருட்கள் செய்யறவங்க இந்த உலகத்தில யாருமே இல்ல.  ஒரு நாள் வீட்டுப்பக்கம் வந்துட்டு போப்பா” என உச்சி குளிர பேசுவார்கள். 

நேற்று அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. ‘சிர்சன் கிட்டே சொல்லி, வெயில் தடுக்கும் மூங்கில் பாய் இரண்டு செய்யச் சொல்லி எடுத்துவா’ என எழுதிருக்கிறார்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் அம்மா சிர்சனை வீட்டுக்கு அழைக்க வேண்டும் எனச் சொல்லும்போதே “அவனுக்கு விருந்து வைக்க என்ன என்ன பலகாரம் சுடணும்,” எனக் கேட்டிருக்கிறேன். 

“சரி சரி போ. நான் பாத்துக்கறேன். என்ன வேலை சொன்னாலும் செய்வான். சாப்பிட அது வேணும் இது வேணும்னு எங்கிட்ட கேட்கமாட்டான்.”

ஒருதரம் பிராமண்டோலியில் இருக்கும் பஞ்சநாத் சௌத்திரியின் சிறிய பையனை சௌத்திரி எதிரேயே திட்டி விட்டுட்டான்,  “உங்க அண்ணி காய்கறிய அள்ளி அள்ளியா வைக்கறா. கிள்ளிக்கிள்ளி வைக்கறா. அந்த ரசம் ஒரே புளிப்பு. உங்க அண்ணி யாருகிட்ட இந்த சமையல கத்துக்கிட்டா” என அனைவர் முன்பும் கேட்டுவிட்டான். அதனால்தான் நான் அவனுக்காக என்ன சமையல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

சிர்சனைப் பார்த்ததுமே அம்மா மகிழ்ச்சியுடன் “வாப்பா.. சிர்சன் என்னவோ தெரியல. இன்னிக்கி காலேயில இருந்து உன் ஞாபகமாவே இருக்கு. உனக்கு நெய்யால செய்த அடை ரொம்பப் பிடிக்கும்ல. என் பெரிய பொண்ணோட மாமனார் கடுதாசி போட்டிருக்காரு. அவருக்கு இரண்டு ‘ஷீதல் பாட்டி’(வெயிலிருந்து காக்கும் மூங்கல் பாய்) செஞ்சு எடுத்துட்டு வரச்சொல்லியிருக்காரு,” எனச் சொல்லி முடித்தாள்.

சிர்சன் தன் எச்சிலில் மிதக்கும் நாக்கையும் ஆர்வத்தையும் கட்டுபடுத்திக்கொண்டு, “நெய் வாசனை மூக்கத் தொளைக்குது. அதுதாம்மா வந்தேன். இந்த முகூர்த்த நாள்ல எனக்கு எங்க ஓய்வு,” என்றான்.

சிர்சன் தேர்ந்த கலைஞன். மணிக்கணக்காக உட்கார்ந்து அவன் செய்யும் திறத்தை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு மூங்கில் குச்சிகளை வெகு நேர்த்தியாக பிரித்தெடுப்பான். பின் ஒவ்வொன்றையும் சாயத்தில் தோய்த்து காய வைப்பான். அவ்வளவுதான் அன்றைய பொழுது போய்விடும். அவன் மிக மிக ஈடுபாட்டுடன் தன் முழுகவனத்தையும் செலுத்தி வேலை பார்ப்பான். அவன் வேலை செய்யும் போது யாராவது குறுக்கிட்டால் அவ்வளவுதான்… பாம்பு போல சீறிவிழுவான். “வேற யார் கிட்டேயாவது கொடுத்து வேலைய பாத்துக்க. நம்மால முடியாது,” என எழுந்து விடுவான். அவன் சோம்பேறி அல்ல. கலையை நேசிப்பவன்.

நல்லா வேலையும் செய்வான். வயிறுமுட்ட சாப்பிடவும் செய்வான். பால்ல இனிப்பு கம்மியா இருந்தாக்கூட பொறுத்துக்குவான். ஆனால் யாராவது ஏதாவது வார்த்தைய விட்டால் அவன் பொறுக்கமாட்டான். 

சிர்சனை மக்கள் திண்ணிப்பண்டாரம் என்றுதான் நினைப்பார்கள். நல்ல சமைத்த விதவிதமான காய்கறி, கட்டித்தயிர், பாலாடை கொண்ட கெட்டியான காய்ச்சிய பால் எனத் தயார் செய்துவிட்டுத்தான் சிர்சனைக் கூப்பிட வேண்டும். அப்போது குதி ஒன்று போட்டுக்கொண்டு கிளம்பி வந்துவிடுவான். சாப்பாட்டில் கொஞ்சம் ருசி கம்மியாகப் போயிவிட்டதென்றாலும் அது  அவன் வேலையில் தெரிந்து விடும். பாதியிலேயே எழுந்துவிடுவான் “இன்னக்கி இவ்வளதான் முடியும். எனக்கு தலை ரொம்ப வலிக்குது. மீதிய இன்னொரு நாள் வந்து முடிச்சுத் தர்றேன்.” என்பான். அவன் இன்னொரு நாள் என்று சொன்னால் அது ‘இனி நடக்காது’ என்பதுதான் பொருள்.

நாணலால் செய்ப்பட்ட நிழல் தரும் பாய்கள், பளபளக்கும் மூங்கில் குச்சிகளால் செய்யப்பட்ட கூடைகள், பலவண்ணங்களிலான தொங்கும் ஊஞ்சல் கூடை, கயிறுகள் மூலம் செய்யப்பட்ட உரிகள், உட்காரும் மோடாக்கள், அழகான இலைகளில் செய்யப்பட்ட தொப்பிகள் என இப்படி பலவகையான ரகரகமான பொருட்களை கலைநுட்பத்தோடு செய்வதில் இந்த கிராமத்தில் சிர்சனை விட்டால் யாருமில்லை. 

ஆனால் இந்தக்காலத்தில் இப்படிப்பட்ட பொருட்களை யாரும் விரும்புவதில்லை என்பது வேறுவிஷயம். இந்த கைவினைப் பொருட்களெல்லாம் வீண் என்றுதான் கிராம மக்கள் நினைக்கிறார்கள். இந்த வேலைக்கெல்லாம் தானியமோ காசோ கொடுப்பதெல்லாம் வேண்டியதில்லை. இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் வேலை வாங்கிக்கொண்டு பழைய துணிமணி ஏதாவது கொடுத்து அனுப்பினாலே போதும் எனும் மனநிலை. 

எது சொன்னாலும் அவன் ஒன்றும் சொல்ல மாட்டான் என நினைக்க முடியாது. அவனோடு பேசும் போதும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்பது சிர்சனை கூப்பிடுவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு முறை மகாஜன் வீட்டில் போயிருந்த போது அவரது மகள் பஜ்சு அரண்டுவிட்டாள் “இரு இரு அம்மாகிட்டே சொல்லி உன்ன என்ன செய்யறேன் பார்” என்றாள்.

“பெரிய விஷயம் மகளே, பெரிய விஷயம். பெரியவங்கிட்டே பேசும்போதும் கவனமாத்தான் பேசனும். இத்தனை நெறைய வேலைய வாங்கிக்கிட்டு சும்மா போக முடியுமா. இந்த வேலைய உங்க அம்மாவால செய்ய முடியுமா…?” என சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டான்.

இப்போது என் கடைசி தங்கை மானு திருமணமாகி தன் கணவனுடன் மாமியார் வீட்டுக்கு முதன் முதலில் செல்ல இருக்கிறாள். மாமனார் முன்பே கடிதத்தில் அடிக்கோடிட்டு குறிப்பிட்டு இருந்தார். “மானுவோடு நீங்க என்ன இனிப்பு வகைகளை அனுப்புவீங்களோ தெரியாது, ஆனா மூணு ஜோடி அலங்கார நாணல் பாய்த்திரைகள் இரண்டு ஜோடி‘ஷீதல் பாட்டி’ கொண்டு வரலைன்னா…” 

அண்ணி சிரித்துக்கொண்டே  ‘அவ்வளவுதான் அப்பறம் கதை முடிஞ்சுது’ என்றாள். அதனால் ஒரு வாரத்திற்கு முன்பே அம்மா சிர்சனை அழைத்துவிட்டாள். “ இதப் பாரு நீ மட்டும் நல்லா செஞ்சு கொடுத்தீன்னா உனக்கு புது ஜரிகை வேட்டி எடுத்துத் தர்ரேன். நல்லா வேலைசெய் உன் வேலையை பார்த்து அத்தன பேரும் அசந்து போகணும் ஆமா,” என்றாள் அம்மா.

வெற்றிலை அளவே தடிமானமுள்ள மூங்கில் குச்சிகளைச் சீவி அதிக ஈடுபாட்டுடன் வேலைகைளத் தொடங்கினான் சிர்சன். அழகான வண்ண வண்ணமான நாணல்களை எடுத்து அழகாக பின்னிக்கொண்டிருந்தான். அவனது ஈடுபாடும் கைத்திறத்தையும் கண்டவர்கள் இம்முறை புதிய வடிவத்தில் இதைச் செய்து முடிக்கப்போகிறான் என வியந்தனர்.

நடு அண்ணிக்கு சந்தோசம் தாழ முடியவில்லை. பட்தாவிற்கு பின் நின்றுகொண்டு “ புது வேட்டி தர்றோம்னு சொன்னதும் அவன் வேலையப் பாருங்களேன். இந்த விசயத்தை அண்ணனிடம் சொல்ல வேண்டும்,” என்று கிசுகிசுத்தாள்.

வேலையில் முசுவாய் இருந்தாலும் இந்த பேச்சு அவன் காதில் பட்டது உடனே “அண்ணி, இன்னும் பட்டு வேட்டி கொடுக்கறேன் சொல்லுங்க. வேல இன்னும் அழகா இருக்கும். அப்படியெல்லம் ஒன்ணும் இல்ல. நம்ம மானு தீதி நம்ப சித்தப்பாவோட கடைசிப் பொண்ணு. நம்ம மாப்பள வேற ஆபிசர்ன்னு சொன்னாங்க. அதான்,” என்றான்.

அண்ணியின் முகம் வாடியது. அருகில் இருந்த சித்தி ஜாடையாகப் பேசினாள். 

“அட புது வேட்டிக்காக இல்ல. அவன் வேல செய்யறது லட்டுக்காக. நம்ம பொண்ண வழிஅனுப்பும் போது தினம் புதுப்புது இனிப்புப் பலகாரங்க கிடைக்கும் அவனுக்கு தெரியாதா என்ன …?“ என்றார்.

இரண்டாம் நாள் வேலையில் பாயின் வேலைபாடுகளில் வானவில் போல ஏழு வண்ணங்கள் மின்னின. சிர்சன் தன்னையும் மறந்து வேலை செய்யும் போது நாக்கு சற்று துருத்திக்கொள்ளும். வேலை முடியும் வரை அவன் கவனம் எதன் மீதும் செல்லாது. சாப்பிடவோ குடிக்கவோ கூட அவனுக்குத் தோனாது. பாயை இணைக்கும் சணல் கயிறுகளை இறுக்கி விட்டு அருகில் இருந்த முறத்தில் அவன் கவனம் சென்றது. வெல்லமும் அவலும் கலந்த ஒரு பதார்த்தம் அவன் அருகில் இருந்தது. அவன் நாக்கில் எச்சில் ஊறுவதை நான் கூர்ந்து கவனித்தேன். நான் அம்மாவிடம் சென்று கேட்டேன்,“ அம்மா… சிர்சனுக்கு வெறும் வெல்லஅவுல் கொடுத்தது யாரு…?

அம்மா சமையல் அறையில் இனிப்புப் பலகாரங்கள் செய்வதில் மும்மரமாய் இருந்தார். “நான் ஒத்தைஆளா எதைத்ததான் கவனிக்கிறது. ஏம்மா சிர்சனுக்கு பூந்திய ஏன் குடுக்கல?” என்று நடு அண்ணியை ஏவினார்.

“வேணாம் சித்தி. நான் பூந்தியெல்லாம் சாப்பிட மாட்டேன்” என்றான். என்றாலும் அவனுக்கு ஆவல் மிகுதியாக இருந்தது. ஆனாலும் வெல்ல அவுலை அவன் தொடக்கூட இல்லை. 

அம்மாவின் கோப வார்த்தைகள் கேட்ட நடு அண்ணி ஒரு பிடி பூந்தியைக் கொண்டுவந்து முறத்தில் எரிச்சலுடன் எறிந்துவிட்டுச் சென்றாள்.

“அண்ணி என்னமோ உங்க அம்மாவீட்ல இருந்து கொண்டுவந்த பூந்தி மாதிரி எனக்குத்தர இத்தனை சங்கடப்படறே…” என்றான் தண்ணீர் குடித்துக்கொண்டே.

நடு அண்ணி தன் அறைக்கு சென்று அழத்துவங்கினாள். சித்தி அம்மாவிடம் சென்று புகார் செய்தாள். “சின்ன சாதிப் பயலுக வார்த்தையும் சின்னதாத்தான் இருக்கு. கொஞ்சம் இடம் குடுத்தா தலையில ஏறி உட்கார்ங்களே…வேலைக்காரனுக்கு வாயடக்கம் வேணும். இதெல்லாம் எங்களால பொறுத்துக்க முடியாது…” என்றாள் கோபமாக.

நடு அண்ணி அம்மாவுக்கு மிகவும் பிடித்த மருமகள். அம்மா கோபத்துடன் வெளியே வந்தாள்.

“சிர்சன், உம் வேலை என்னமோ அதை மட்டும் பாரு. மருமககிட்டே உன் துடுக்குப் பேச்செல்லாம் வேணாம். உனக்கு எது வேணும்னாலும் எங்கிட்ட கேளு… அதவுட்டு”

சிர்சனுக்கு கோபம் வந்தது. ஆனால் ஏதும் பேசவில்லை. முடிச்சுக்களை இறுக்கி இறுக்கி போட்டுக்கொண்டிருந்தான். 

மானு, பான்பீடாவை அலங்கரித்து வைத்துக்கொண்டிருந்தாள். அதில் பெரியதாக ஒன்றை எடுத்து சிர்சனுக்குத் தந்து விட்டு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு “ சிர்சன் தாதா, இந்த வீட்டல நிறைய பேரு இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பேசுவாங்க. நீ அதையெல்லாம் மனசில் போட்டுக்காதே…” என்றாள் கெஞ்சலாக.

சித்திக்கு சிர்சன் மீது கோபம் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தன. கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்க்க இதை விட நல்ல சந்தர்ப்பம் வேறு ஏது?

“திமிரா உனக்கு. அப்படி சப்பு கொட்டி திங்கணும்னு தோணுமோ…? நாக்கில தீய வைக்க. வீட்லயும் இப்படித்தான் அதிக ஜர்தா போட்டு தெனம் பீடா திங்கிறயாக்கோம். திண்ணிப்பண்டாரம்… உருப்பட்ட மாதிரிதான்…” என பொரிந்து தள்ளினார்.

அவ்வளவுதான். அவன் கைகள் வேலையை நிறுத்திவிட்டன. ஒரு ஓரமாக உட்கார்ந்து, பீடாவை வாயில் குதப்பியபடி இருந்தான். பின் சட் என எழுந்து பின் பகுதிக்குச் சென்று பீடாவை ‘த்தூ’ என்று துப்பினான். தன்னுடைய கத்தி உளி உள்ளிட்ட அனைத்து பொருட்கைள சேகரித்து பையில் இட்டுக்கொண்டான். பாதியில் நிற்கும் வேலைகளை ஒரு முறை பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.

சித்தி அலறினாள்,“யப்பா… யப்பா.. என்ன திமிரு அவனுக்கு. என்னமோ ஓசில வேலை செஞ்சு தர்றவன் மாதிரி.  எட்டு ரூபாய்க்கு எவன் புத்தம் புது வேட்டி தருவான். காச விட்டெறிஞ்சா கிடைக்குது கழுத…என்னமோ உலகத்திலே கிடைக்காத பாயி மாதிரி.” 

மானு எதுவும் பேசவில்லை. அமைதியாக பாதியில் நின்றுபோயிருந்து பாயையும் வண்ண வண்ண குச்சிகளையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ போகட்டும் விடுமா…மானு… நீ ஒன்னும் கவலைப் படாதே மா… கடைவீதி போய் நல்லதா வாங்கி அனுப்புவோம்,” என்று சமாதானம் செய்தார் அம்மா.

மானுவிற்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. தன்  திருமணப் பரிசாக சிர்சன் செய்த வண்ணப் பாயை பரிசாகத் தந்திருந்தாள் அம்மா. அதை தன் புதுவீட்டு மக்கள்  பாட்னா, கல்கத்தா உறவினர்களுக்கு எத்தனை ஆச்சர்யமாக அதைத் திறந்து திறந்து காட்டி வியந்தனர். ஏமாற்றத்துடன் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள் மானு.

நான் சிர்சனை சமாதானம் செய்வற்காக அவன் குடிசைக்குச் சென்றேன். அவன் ஒரு பழைய பாயில் படுத்தபடி எதையோ தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்து “யப்பா… இப்ப என்னால் முடியாது, கெஞ்சிக்கேக்றேன். என்னை வேலைக்குக் கூப்பிடாதீங்க. புது சரிகை வேட்டிய வாங்கி நான் என்ன செய்யப்போறேன் ? அதை யாரு கட்டிப்பா…? தப்பு என்னுடையதுதான். யப்பா என் பொண்டாட்டி உயிரோட இருந்திருந்தா இப்படியெல்லாம் நான் அவமானப்படமாட்டேன்.  இதோ இந்தப் பாய் கூட அவ செஞ்சதுதான். இது மேல சத்தியம் பண்ணிச் சொல்லறேன் நான் இனி அந்த வேலைய செய்ய மாட்டேன். இந்த கிராமத்திலேயே உங்க வீட்டிலதான் எனக்குன்னு ஒரு மரியாதை இருந்துச்சு. இப்ப போ…” 

நான் அமைதியா வெளியே வந்தேன். எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது… அந்த கலைஞனின் மனசில  காயம் பட்டுவிட்டது. அது லேசில் ஆறாது.

பெரிய அண்ணி அரைகுறையா பாயை எடுத்துச் சுருட்டி வைத்தபடி, “இத நீ கொண்டு போகமுடியாதில்ல மானு…?”என கவலையுடன் கேட்டாள்.

மானு எதுவும் பேசவில்லை. பாவம் அவள் என்ன சொல்வாள். நான் ஆரம்பித்தேன், “நடு அண்ணி சித்தியோட கண் பட்டுச்சு …அதான்,” என்றேன்.

மானுவை மாமியார் வீட்டுக்கு அழைத்துச் செல்பவன் நான்தான்.

அன்று ஸ்டேஷனுக்கு சாமான்களை எல்லாம் கட்டிக்கொண்டிருக்கும் போது, மானு அந்த பாதிப்பாயை சுருட்டி தன்னுடன் எடுத்துக்கொண்டாள். நான் சிர்சனை நினைத்துக் கோபம் கொண்டேன். சித்தி திட்டியதைப்போலவே நானும் என் மனதிற்குள் சோம்பேறி… திண்ணிப்பண்டாரம் என வைதேன்.

ரயில் வண்டி வந்தது. சாமான்கள் ஒவ்வொன்றாக ஏற்றி வைத்தேன், பின் பெட்டியின் கதவைச் சாத்த முனைந்த போது, பிளாட்பார்மில் சிர்சன் ஓடி வருவது தெரிந்தது. 

“ஐயா…” ரயில் பெட்டியின் வாசல் அருகே  அவன் குரல் கேட்டது. 

வெளியில் தலையை நீட்டி ”என்ன ?” என்றேன், கடிந்தேன்.

சிர்சன் தன் முதுகில் துணியால் கட்டியிருந்த மூட்டையை கீழே இறக்கினான். “உங்களைப் பாக்கத்தான் ஓடி ஓடி வந்தேன். கொஞ்சம் கதவைத் திறங்க.. மானு சகோதரியை ஒருதரம் பாக்கணும்…” நான் கதவைத் திறந்தேன். “சிர்சன் தாதா…” என்றாள் மானு.

ஜன்னல் அருகில் வந்து “இந்தாங்க… இது என்னோட பரிசு… உங்க தாய் வீட்டுச் சீதனம்… இந்த நாணல் பாய்த் திரை, பாயி, இந்த இரண்ணு ஜோடி தா்பைப்புல் குட்டிப் பாய்…” என தளதளக்கும் குரலில் சொல்லிக் கொடுத்துச் சென்றான். வண்டி கிளம்பியது. மானு சிர்சன் சரிகை வேட்டி வாங்கிக்கொள்ளுமாறு காசு கொடுக்க எத்தனித்தாள். சிர்சன் நாக்கைக் கடித்துக்கொண்டு இருகைகளைக் கூப்பி வேண்டாம் என மறுத்தான்.

மானு கண் கலங்கினாள். நான் அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தேன்… மிக கலைநுட்பத்துடன் அழகான வண்ணங்களில் அப்பொருட்கள் மின்னின. நான் இப்போதுதான் முதன் முறையாக இவ்வளவு கலைநயம் மிக்கப் பொருட்களைப் பார்க்கிறேன்.

***

2 Replies to “காயம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.