கவசக் கோன்மை

உலகெங்கிலும் அரசுகளும், அறிவியலாளர்களும், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்களும் பரிந்துரைக்க, மனிதர்கள் கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணிந்து நடமாடுகிறார்கள். அது மட்டுமே போதுமானதன்று. கடந்த இரு வாரங்களாகக் கவசம் அணிவது மக்களின் விருப்பம் சார்ந்து இருந்ததிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது மக்களின் நடத்தையில் மாறுதலைக் கொண்டு வந்துள்ளது என்பதை நான் பார்க்கிறேன். அது எதிர்பாராத வியப்பூட்டும் விளைவுகளைக் கொண்டு வரும் என்று அறிவியலாளர்கள் சொல்வதை நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். நீங்கள் கவசம் அணிந்து வெளியில் நடமாடுவது அவசியம் – ஆனால் அது மட்டுமே நீங்கள் வெல்ல முடியாதவர் எனப் பொருள்படாது.

காண்பார்த்தங் காட்சியாய்க், காண்பாராய்க், காண் பொருளாய், மாண் பார்த்திருக்கும், வகுத்துரைக்க வொண்ணாதாய்” – என்று பாரதி பாடியது நினவிற்கு வருகிறது. நிகழும் இந்த கோவிட்-19 தொற்று, நம் கவசங்களைக், காப்புகளைத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.

மூக்கு, வாய் இவற்றைக் கவசத்தால் காப்பது தேவையே. அது தொற்றுப் பரவலைத் தடுப்பதில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது என்பதில் இரு வேறு கருத்தில்லை. அவற்றைப் பொது இடங்களில் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், மனிதர்கள், சிறு  கூடுகைகளில், கடைகளில், சுகாதாரத் துறையின் முக்கியக் கட்டளையான ‘ஆறு அடி விலகல் அல்லது ஒரு மீட்டர் இடைவெளி’ என்பதை அநேகமாகக் கடைபிடிக்கவில்லை என்பதைப் பார்க்கிறேன். (இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இந்தியாவில், கேரளத்தில் ஒரு கிராமப் பஞ்சாயத்தில் மான்ய விலையில், தேவையானால் தவணை முறையில், குடைகள் வழங்கப்பட்டன. விரிந்த குடைகள் இயல்பாகவே ஒரு மீட்டர் இடைவெளியை ஏற்படுத்திவிடும்.)

பரிந்துரைக்கப்பட்ட பல பாதுகாப்பு விதிமுறைகளில், இந்த முகக்கவசம் சிறந்த பாதுகாப்பு என மனிதர்களை உணரச் செய்வது எது என்ற கேள்வி  எனக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது.

கார்னெல் பல்கலையில் ‘அறிவாற்றல்’ துறையின் உறுப்பினரும், ஜான்சன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மை மற்றும் நிறுவனங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுபவருமான  எட்வர்ட் ரூசோவிடம் இதைப் பற்றிக் கேட்டபோது ‘இது முக்கிய வினா, சிறந்த கருதுகோள்’ என்றார். இவரும், உளவியல் மற்றும் பொது நலத்துறை சார்ந்த இரு வல்லுனர்களும் ‘முகக் கவசம் அணிவது முக்கியமானது; அதே நேரம் அது நம் நடத்தையில் கொண்டுவரும் தாக்கத்தினைப் பற்றிய உணர்வு நமக்கு அவசியமானது,’ என்றார்கள்.

எதிர்பாரா விளைவுகளும், நம்பத்தகாத பாதுகாப்பு உணர்வுகளும்

ராபின்ஹூட் முதலீட்டுக் கம்பெனியில் மனித நடத்தை நுண்ணறிவுத் துறையில் ஆய்வு செய்பவர் ஜாய்ஸ் எர்லிங்கர். இவர் முன்னர் வாஷிங்டன் பல்கலையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கார்னெல்லில் தன்னுடைய ஆய்வறிக்கையில் அவர் அருமையாகச் சொல்வது எதிர்நோக்கா விளைவுகளைப் பற்றித்தான்.

முக்கியக் குறிக்கோள்களுடன் செய்யப்படும் சில வடிவமைப்புகள் எதிர்பாராத விளைவுகளைக் கொண்டு வருவதை அவர் சுட்டிக் காட்டுகிறார். ஒன்று நினைக்க ஒன்று வரும் வினோதம் வடிவமைப்புகளில் நிகழ்வதுண்டு. ‘நன்மையைவிடத் தீமை அதிகம் செய்யும் சில வடிவமைப்புகள் உள்ளன’ என்கிறார் அவர். பாதசாரிகளின் பயன்பாட்டிற்கான குறுக்கு நடைபாதைகள், மேல்கீழ் குதிக்கப் பயன்படுத்தும் ட்ராம்போலின் வலை மற்றும் அவற்றின் அரண்கள், நீர் நிலைகளில் நீந்த உதவும் மிதவைத் தொட்டிகள், பொது நலனிற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், எதிர்பாராத விளைவுகளைக் கொண்டுவருகின்றன.

குறுக்கு வழிக் கோடுகள் இல்லாத சாலையைவிட அது இருக்கும் சாலைகள் நடந்து செல்வோருக்குப் பாதுகாப்பானதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், குறுக்குக் கோடுகள் ஒன்றே போல அமைக்கப்படுவதில்லை என்பது ஒரு சிக்கல். வரிக்குதிரைக் கோடுகளும், வெளிப்படையாகத் தெரியும் கோடுகளும், கருத்துருவும் உள்ள சாலைகளில் வாகனத்தை இயக்குவோர் சற்று நிதானிக்கின்றனர் என்று ஆய்வுகள் சொல்கின்றன; இரண்டே கோடுகள் உள்ள இடத்தில் அவ்வளவாக வேகம் குறைவதில்லை. ஆனால், உண்மைக்கு மாறாக (நிரூபிக்கப்படவில்லை எனினும்) நடந்து செல்வோர், இந்தக் குறுக்குக் கோடுகள் இருப்பதால் பாதுகாப்பாக உணர்வது இயல்பானதல்லவா? அது அவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையைச் சற்றேனும் குறைப்பது அல்லவா?

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தும்  ‘ட்ராம்போலின்’ அவர்களுக்கு அதிகக் காயங்களை ஏற்படுத்துவதால் அதை எதிர்த்துப் பல பத்தாண்டுகளாக  அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவத்துறை போரிட்டு வருகிறது. 1997-ல் வலைகளும், அதிகப் பாதுகாப்பு அம்சங்களும் கொண்ட குதிவலைகளைத் தொழிற்சாலைகள் தயாரித்தன. குழந்தைகள் மற்றும் சிறார் நல மருத்துவத்துறை 2012-இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சொன்னது: “காயங்கள் ஏற்படுவதற்கும், பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதற்கும் இடையில் தலைகீழ் விகிதம் இருப்பதாகத் தெரியவில்லை; அத்தகைய உபகரணங்கள் இருப்பதே தவறான பாதுகாப்பு உணர்வைத் தந்துவிடும்.”

மிதவைகளையும், மற்றும் உடல் கவசங்களையும் அணிந்து நீரில் மிதந்து விளையாடும் சிறுவர்களின் பாதுகாப்பு பற்றிய அறிக்கைகளைப் பற்றி ஜாய்ஸ் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உயிர்ப் பாதுகாப்பு அமைப்பும், நாட்டு எல்லைகளில்லா மருத்துவர் அமைப்பும், பொது சுகாதார அமைப்பும் சொல்கின்றன: “நீந்துவதில் திறனற்ற சிறுவர்கள் இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. அவை, உண்மைக்கு மாறாக, பாதுகாப்பு உள்ளது என சிறுவர்களையும்,  அவர்களது பாதுகாவலர்களையும் நம்பச் செய்துவிடுகின்றன. ஏனெனில் மிதப்பவர் எதிர்பாராமல் மேலெழுவது, மிதவையின் அடியில் சிறுவன் சிக்குவது போன்றவை நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன.

இருசக்கர வாகன ஓட்டிகளின் தலைக்கவசமும் இதைப் போலவே எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும். கார் ஓட்டுபவர்கள், தலைக் கவசம் அணியாதவரைக் காட்டிலும், தலைக்கவசம் அணிந்த இரு சக்கர வாகன ஒட்டிகளை 3.3 இன்ச் இடைவெளியில் அணுகி ஓட்டுகிறார்கள் என்று 2007-ல் நடத்திய ஓர் ஆய்வு சொல்கிறது. நகைமுரணாக அந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இத்தகைய தலைக்கவசம் அணிந்திருப்பது தேவையென்றே ஏற்பட்டுவிடுகிறது.

முகக்கவசம் அணிவதால் வரும் பாதுகாப்பு உணர்வு, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நடந்து கொள்ளும் சிறு அலட்சியத்தை மனிதர்களுக்குக் கொண்டு வருகிறது என்பதே கவசம் அணிவதின் எதிர்பாராத விளைவு என்பதை ‘ரோஜர் ஜ்யோ’ ஏற்கிறார் – ‘ஆம், அது நிகழக்கூடும் சாத்தியங்களுள்ளது.’ அவர் உலக சுகாதார நிறுவனத்தின் கவசங்கள் பற்றிய ஆய்வில் முதன்மை ஆய்வாளர். இது கால்பந்தாட்ட வீரர்கள் அணியும் தலைகவசங்களுக்கும், அவர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி பாதிப்புக்களுக்கும் உள்ள தொடர்பினை ஒத்தது. அது பாதுகாப்பு இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். பாதுகாப்பு இருப்பதாலேயே பொறுப்பற்ற தன்மை கூடிவிடுகிறதென்று சில தரவுகள் சொல்கின்றன. கால்பந்தாட்டக் கவசங்கள், தேசிய கால்பந்தாட்டக் குழு விளையாட்டுக்களில்  மண்டையோட்டு விரிசல்களைக் குறைத்துத்தான் உள்ளன. ஆனால், இதுவே, காலப் போக்கில் கடுமையான, அதிவேகம் நிறைந்த விளையாட்டிற்கு இட்டுச் சென்றுவிட்டது; விளைவு என்னவென்றால் மூளைக் காயங்களிலிருந்தும், சேதத்திலிருந்தும் அவர்களை இந்தப் பாதுகாப்பு மீட்கவில்லை.

நம்ப விரும்புவதையே சான்றென நம்ப வைக்கும்  முன் முடிவுகள்

காலப் போக்கில் முகக்கவசம் அணிவது என்பது நாம் வெளியில் செல்லத் தேவையான ஏற்பாடுகளுடன் இருக்கிறோம் என நம்பச் செய்துவிடும். எர்லிங்கர் சொல்கிறார், “ஒவ்வொரு முறையும், ஒருவர் வீட்டிலிருந்து கிளம்பி, கடைக்குச் சென்று திரும்பாமல் இருமிச் செத்தால், எனக்கு கவசத்தின் மீது தைரியம் ஏற்படுகிறது, ஒருக்கால் அவர் கவனக் குறைவாக இருந்திருக்கலாம்.”

மெகென்ஸி ஆய்வுத் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் கண்டறிந்த இரண்டு நடத்தைப் பிழைகளை ரூசோ சுட்டுகிறார் : முதலாவது அதிகத் தன்னம்பிக்கை; இரண்டாவது உறுதிப்பாட்டின் சார்பு நிலை – அதாவது இயற்கையாகவே நாம் நாடும்  நம் அனுமானத்திற்கு ஏற்ற சான்றுகள்.

முகக்கவசம் அணிந்து கொள்வது மேற்கூறிய உறுதிச் சார்பு நிலையின் சிறந்த எடுத்துக்காட்டென்று ரூசோ சொல்கிறார். “தாம் நம்ப விரும்புவதை மனிதர்கள் நம்புகிறார்கள். இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப விழைகிறார்கள். தாம் இயல்பாய் வாழ, கடைகளுக்குச் செல்ல, பொது வெளியில் மனிதர்களோடு உரையாட, வாகனப் பழுதினை நீக்க, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த, முகக்கவசம் பாதுகாப்புத் தரும் என நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கும் ஆதாரமென அவர்கள் கொள்வது  ஒன்றுதான். (‘ஆமாம் எத்தனையோ மனிதர்கள் வெளியில் போய் வந்து கொண்டுதானிருக்கிறார்கள் – அத்தனை பேருமா நோய்வாய்ப்பட்டு விட்டார்கள்? என் முகக்கவசம் என்னைப் பாதுகாக்கும்.’)

கோவிட்-19 தொற்று பற்றியிருப்பதை அறியவே அதிக நாள்களாகின்றன – அதன் அடைகாக்கும் காலம் அப்படி. தொற்று உள்ள ஒருவரிடமிருந்து அது மற்றவரைப் பற்றிப் படர எடுக்கும் கால அளவை மனிதர்கள் ஒரு பொருட்டென நினைக்காமல் இருப்பதற்கு இந்த உறுதிப்பாட்டுச் சார்பு நிலை காரணமாகிறது.”

“எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோமோ அதைத்தான் நாம் தெரிந்து கொள்கிறோம்” என்பது இரண்டாவது முக்கிய உளவியல் செய்தி. உறுதிசார் குழப்ப நிலையின் மற்றொரு வடிவம் இது.

சூழல் சீர்கேடுகளைப் பற்றி எத்தகையதொரு அலட்சிய அறியாமை கொண்டிருந்தார்களோ, அதே மனோபாவம் கோவிட்-19 நோயைப் பற்றியும்  மக்களிடம் உள்ளது. “பெரும்பாலோர் சிலவற்றின் தாக்கத்தை, அவர்கள் அதைப் பார்க்கும் வரையோ, உணரும் வரையோ நம்ப விரும்புவதில்லை.” என்கிறார் ரூசோ. இதில் அரசியல் குரல் உண்டு. ஃபாக்ஸ் செய்தி கோவிட்-19-தின் ஆபத்துக்களை மறுத்து ‘லிபரல்’ கட்சியினரின் சதி என்றே சொல்லி வந்தது. ரூசோ இதையும் மனித இயல்பை ஒத்தது என்று சொல்கிறார். வெள்ளப் பெருக்கு நிகழும் ஆபத்து இருக்கிறது என்று அறிந்தும், அந்த நிலங்களில் வீடு கட்டி வாழும் மனிதர்களை அவர் சுட்டுகிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் அல்லது அப்படிப் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி அறியாதவர்கள் இது, புலனாகாத ஒன்று என்றும், தம்முடைய தினசரி நடவடிக்கைகளைப் பாதிக்காது என்றும் உணர்கிறார்கள். “அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வரையில் இதை நம்பமாட்டார்கள். இது சமுதாய அளவில், புவி வெப்பமயமாதல், தொற்று நோய் போன்றவற்றில் ஆபத்தானது; தனிப்பட்ட முறையில் வெள்ளம் மற்றும் தீ விபத்துக்கள்  போன்றவற்றில் மிகவும் ஆபத்தானது.”

தீர்வு இருக்கிறதா (ஓருக்கால் இல்லையோ?)

காலப்போக்கில் முகக்கவசம் அணிவதால் நாம் அடையும் அதிக  நம்பிக்கை, சமூக இடைவெளியை நாம் பின்பற்றாமல் செய்துவிடும் என அனுமானித்தால், இதற்குத் தீர்வு இருக்கிறதா?

“இதற்கு எளிதான விடையில்லை என நினைக்கிறேன். காரணத்தை அறியாமல் தீர்வினை அறிவது இயல்வதன்று. இருப்பதைவிட மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை; ஆனால், பல மனிதர்கள் பல்வேறு காரணங்களால் கவசம் அணிவதையும், தொற்றைப் பற்றியும் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் மாற விரும்புவதில்லை, சிலருக்கு அரசியல் தூண்டுதலின் பாற்பட்டுப் பொருளாதார நடவடிக்கை, சிலர் இயந்திரத் தன்மையுடன்… சிலர் கல்லூரியின் மேல் வகுப்பில் வசந்தக் கொண்டாட்ட 22-வயதில் எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாதென்று.”  இவர்கள் அனைவருக்கும் மாறுபடும் தலையீடு தேவையாகலாம் என ரூசோ சொல்கிறார்.

தன் சார்பு நிலையிலிருந்து விடுபட்டு, தன்னுடைய தீய பழக்கங்களை விட்டுவிடுமாறு ஒவ்வொரு நபரையும் அறிவுறுத்த முடியுமா? அது இயல்வதன்று. முகக்கவசம் அணிவது எப்படி கொரோனா நோய்ப் பரவலுக்கு எதிரான முதல் காலடியாக அமைந்துள்ளதோ, அப்படியேதான் இதிலும்  நாம் முயற்சி செய்ய வேண்டும்.

https://www.fastcompany.com/90501923/scientists-reveal-an-alarming-unintended-consequence-of-wearing-masks

கட்டுரையாளர் மார்க் வில்சன், ஃபாஸ்ட் கம்பெனியில் பணியாற்றும் ஒரு மூத்த எழுத்தாளர். கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகளாக வடிவமைப்பு, தொழில் நுட்பம், கலாசாரம் பற்றி எழுதி வருகிறார். அவரது படைப்புகள் கிஸ்மோடோ, கொடாகு, பாப் மெக், எஸ்கொயர், அமெரிகன் ஃபோடோ, லக்கி பீச் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. 

[மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: த இந்து ஆங்கில 14-05-2020 நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தி கீழே உள்ளது.

அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்கள், இந்திய ஆய்வகங்களுக்கு வழங்குவதாக இருந்த $3.6 மில்லியன் நிதி அந்த நிறுவனத்தின் செயல்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2, 2019 முதல் அது ‘கண்காணிப்புப் பட்டியலில்’ இருக்கிறது. மணிபாலில் உள்ள ஓர் அங்கீகாரமற்ற ஆய்வகத்திற்கு ‘நிபா வைரஸ்’ தொற்று குறித்த ஆய்விற்காக அது நிதி உதவி செய்துள்ளது. நிபா வைரஸ் ஆய்வு, சாத்தியமுள்ள உயிரியல் போர்க்கருவி.]
மொழிபெயர்ப்பாளர்: உத்ரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.