இன்றைய உலகம் நடுக்கத்தோடு உச்சரிக்கும் நோயின் புனை பெயர் கோவிட் -19. முழுப்பெயர் கொரோனா வைரஸ் 2019. கொரோனாவுக்கு ஏன் அஞ்சவேண்டும்? ஏனெனில் அதன் போக்கில் விட்டுவிட்டால் உலக மருத்துவக் கட்டமைப்பு நொறுங்கிவிடும். எனவே தான் உலக சுகாதார நிறுவனம் (WHO ) முதற்கொண்டு எல்லோரும் பதறிப்போய் இருக்கிறார்கள். இதே உலக சுகாதார நிறுவனம் 2030-க்குள் ஹெபடைடிஸ் (hepatitis ) என்னும் கல்லீரல் நோயை உலக அளவில் ஒழித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறது. ஆனால் உலக நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இந்நோயை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வளரவிட்டு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டுகிறது அந்நிறுவனம். இதில் சுவாரசியம் இல்லாமல் போனதற்கு காரணம் ஹெபடைடிஸ் எளிதில் தடுத்து விடவும் குணப்படுத்தி விடவும் முடிகிற சாதாரண நோய் என்பதால் தான்.
ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் அழற்சி நோயாகும் . நம்முடைய கல்லீரலில் ஏதேனும் எரிச்சலோ அல்லது கல்லீரல் செல்களில் வீக்கமோ ஏற்பட்டிருக்கும் நிலையைத் தான்
ஹெபடைடிஸ் என அழைக்கிறோம். ஹெபடைடிஸ் ஏ ,பி ,சி ,டி மற்றும் ஈ என்றழைக்கப்படும் வைரஸ்களின் தொகுப்புகளால் தான் இந்த நோய் வருகிறது .
கல்லீரலில் ஏற்படும் எல்லா வைரஸ் தொற்று நோய்களுக்கும் பொதுவாக மஞ்சள் காமாலை நோய் என்று பெயர் சூட்டி விடுவதுண்டு. அது தவறு. மஞ்சள் காமாலை நோயல்ல. நோயின் அறிகுறி. கண் மஞ்சள் நிறமாகி விடுவது, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது என்பது போன்ற அறிகுறிகளாலேயே அந்தப் பெயர் நிலைத்து விட்டது.
கிருமிகள் ஹெபடைடிஸ் ஏ ,ஈ இரண்டும் ஒரே ரகம். நாம் அருந்தும் அசுத்தமான தண்ணீர், சாப்பிடும் உணவு இரண்டின் மூலம் நம் உடலுக்குள் இவை போகின்றன. கல்லீரலைத் தாக்கி வீக்கத்தை உண்டாக்கி கல்லீரல் செல்களைத் தற்காலிகமாக செயலிழக்க வைத்துவிடுகின்றன. கீழாநெல்லிக் கீரையில் சரியாகிவிடும் என்று நம்பி
சிலர் மோசம் போவதற்கு காரணம் நோய் பற்றிய சரியான புரிதல் இல்லாததாலேயே.
உணவு,குடிநீர் பாத்திரங்களைத் திறந்தே வைத்திருக்கும் பழக்கம் ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மேலும் நம் நாட்டு விவசாயிகள் கடும் வறட்சியின் போது எலிக்கறி உண்டு உயிர் வாழ்வதாக சொல்வதும் , அநேக குடியிருப்புகள் அடிப்படை சுகாதாரமின்றி எலி, பெருச்சாளித் தொந்தரவுள்ள இடங்களாகத் திகழ்வதும், HEV தொற்றுக்கு நாம் மென் இலக்குகளாகி இருப்பதையே சுட்டுகிறது.
எலிகளிடமிருந்து நமக்கு வரக்கூடிய நோய்களில் முக்கியமானவை:
1.எலிக்காய்ச்சல் (leptospirosis)- இந்த நோய் எலி வாய் வாய்த்த உணவை உட்கொள்வோர்க்கு வருகிறது.
2. ஹண்டா வைரஸ் காய்ச்சல் (Hantavirus pulmonary syndrome )- இந்த வைரஸ் எலிகளின் எச்சில், மூத்திரம் மற்றும் எச்சங்களின் வழியாக வெளியேறி மனிதருக்கு வைரஸ் காய்ச்சல் வரச் செய்கிறது. .
3. பிளேக் (plague ): இந்த கொள்ளை நோய், உண்ணிகள் எலிகளையும் மனிதரையும் கடிப்பதால் பரவுகிறது.
4.. ஹெபடைடிஸ் ஈ வைரஸ் (HEV ): வளரும் நாடுகளில் பரவும் ஹெபடைடிஸ் நோய்க்கு இந்த வைரஸே காரணம். குடிநீரில் மலம் கலந்து அசுத்தமாகிவிடும்போதும் அல்லது குடியிருப்புகளில் வெள்ளப் பெருக்கு காலங்களில் குடிநீர் மாசடைந்து போய்விடும் போதும் இந்நோயின் திடீர் நிகழ்வு ஏற்படும்.
குடிநீர்ச் சீர்கேடு இல்லாத வளர்ந்த நாடுகளிலும் இங்குமங்குமாக HEV தொற்றுக்கள் நேர்ந்து வருவது உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சரியாக வேகாத பன்றி இறைச்சி மற்றும் மான் இறைச்சிகளை உண்போருக்கு, மிருகத்தின் உடலில் இருந்து HEV வைரஸ் பரவுவதும் உறுதி செய்யப் பட்டுள்ளது. அநேக பாலூட்டிகளின் உடல்களில் HEV கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே இடம் மாற்றிக்கொள்ள வல்ல தொற்று அல்லது நோய்க்கு zoonatic தொற்று அல்லது நோய் என்றும் இது போன்ற இடப்பெயர்வு zoonasis என்றும் அழைக்கப் படுகிறது. எனவே வளர்ந்த நாடுகளில் இத்தகைய HEV தொற்று ஏற்படப் பல மடங்கு zoonatic உற்பத்தி ஸ்தானங்கள் இருக்கின்றன
தற்போது மனிதருக்கு HEV நோய்தரவல்ல மரபணு வகைகள் 4 இருப்பது தெரிய வந்துள்ளது. மரபணு வகை 1 மற்றும் 2, மனிதர்களிடமிருந்தே அடையாளம் காணப் பட்டுள்ளன. அவையே வளரும் நாடுகளில் காணப்படும் பெரும்பாலான திடீர் HEV எழுச்சிகளுக்குப் பொறுப்பேற்கின்றன. மரபணு வகை 3 மற்றும் 4, zoonatic கடத்தலில் சம்பந்தப் பட்டவையென நம்பப் படுகிறது அவை பன்றி, மான், கீரி, முயல், மாடு மற்றும் மனிதர் ஆகிய அனைத்திலிருந்தும் பிரித்தெடுக்கப் பட்டுள்ளன. அதிகப்படியான HEV திரிபுகள் கோழி மற்றும் எலிகளில் அடையாளப் படுத்தப் பட்டுள்ளன. அவை இதுவரை மனித உடலில் கண்டு பிடிக்கப் படவில்லை எனச் சொல்லப் படுகிறது. HEV யின் மரபியல் பல்வகைமை இப்போதுதான் புரிபட ஆரம்பித்துள்ளது. இனிமேல்தான் ஆய்வுகள் மூலம் அவற்றின் குணங்களையும் சோதனையில் கண்டறியும் முறைகளையும் கண்டு பிடிக்க வேண்டும்.
இணைக்கப் பட்டுள்ள கட்டுரை எலிகளின் உடலில் இருக்கும் திரிபு HEV (இதை இனி எலி HEV என்றே குறிப்பிடுவோம்) , எலி உபத்திரவமே இல்லாத பகுதியில் வசிக்கும்
நோயாளியின் உடலில் கண்டுபிடிக்கப் பட்டதை விவரிக்கிறது. கல்லீரல் மாற்று சிகிச்சை பெற்ற 56 வயது ஹாங்காங் நோயாளி அதன் பின்னரும் தெளிவான காரணம் ஏதுமில்லாமல் இயல்புக்கு மாறான கல்லீரல் செயல்பாடுகளால் அவதியுற்றார். அவருடைய உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு HEV -க்கு பதிலடி கொடுப்பது ஆய்வில் வெளிப்பட்டது. ஆனால் மனித வகை HEV அவருடைய இரத்தத்தில் காணப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் மாற்றுத் திட்ட நோய் நிர்ணயிப்பு சோதனைகளை மேற்கொண்டு நோயாளியின் இரத்தத்தில் எலி HEV இருக்கக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அதற்குப் பின்னரும் எலியின் அண்மை சிறிதும் இல்லாத, கிட்டத்தட்ட 11 நோயாளிகள் எலி HEV தொற்றுடன் சிகிச்சை பெற வந்தார்கள். ஈராண்டுத் தொடர் முயற்சிக்குப் பின்னரும் எவ்வாறு எலி HEV மனித உடலுக்குள் நுழைகிறது என்ற கேள்விக்கு சரியான விடை கிடைக்க வில்லை. எலி HEV -நோய்க்கு மனித வகையின் சிகிச்சை முறைகள் ஒத்துப்போகவில்லை. நோயின் தன்மை பற்றிய விவரங்களைப் பெறமுடியவில்லை. ஹாங்காங் போன்ற நிலைமை எல்லா வளர்ந்த நாடுகளிலும் இருக்கக் கூடும். அவற்றை அறிய முதலில் சோதனை முறைகளை விரிவு படுத்த வேண்டும் .
மனிதரைத் தொற்றும் இந்த வைரஸ்களின் முக்கிய களஞ்சியமாக இருக்கக்கூடிய சாத்தியங்கள் ஊர்வனவுக்கு (Rodents) உண்டு என்ற கற்பிதத்தை அனைவரும் ஆதரிக்கிறார்கள். HEV சூழலின் முக்கிய அம்சங்களை அலசி ஆராயும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டால் இவ்வகை மனித நோய்களை நன்கு கட்டுப்படுத்த முடியும். இந்தச் செய்தியின் தகவல்கள் பெறப்பட்ட இடம் கீழே:
https://www.cnn.com/2020/05/08/health/hong-kong-rat-hepatitis-intl-hnk-scn/index.html
~oOo~

ஹார்வர்ட் ஆய்வு : 2022 வரைக்கும் சமூக விலக்கா?
அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முதலாகக் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை அறிவித்து ஒருமாதம் ஒருநாள் கழிந்தபின் (14-2-2020)-ல் சயின்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் ஹார்வார்ட்-இன் T. H. chan பொது சுகாதாரக் கல்விக்கூட ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒப்புருவாக்க(modeling) ஆய்வு முடிவு, சமூக விலகல் வெகு விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு-அல்லது இந்த ஆண்டிலேயே எப்போதாவது தனிமைப்படுத்திக்கொள்ளவதிலிருந்து ஒரு கணிசமான தற்காலிக விடுதலை வேண்டுபவர்களுக்கு, மறைந்திருக்கும் பேரிடியாக வந்திருக்கிறது.
“தீர்வுகட்ட (critical) சிகிச்சை வசதிகளின் கணிசமான அதிகரிப்பு அல்லது சரியான வைத்தியம் அல்லது தடுப்பூசி மருந்து எதுவும் கிடைக்காத நிலையில் ,
விட்டு விட்டு நிகழும் சமூக விலகல்கள் 2022 வரை தேவைப்படும்” என ஆராய்ச்சியாளர்கள் எழுதியிருக்கின்றனர். முந்திய இரு பீட்டா கொரோனா வைரஸ் களின் பருவகாலத் தன்மை, நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் குறுக்கு (cross) எதிர்ப்புத் திறன் குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையில், ஹார்வார்ட் குழு இந்த நீண்ட காலக்கெடுவைத் தீர்மானித்தது. மேலும் ஆரம்ப தீவிர அனைத்துலகப் பெருங்கொள்ளை நோய் (COVID-19)-க்குப் பின்னர் திரும்பவும் அதன் குளிர்காலத் திடீர் எழுச்சிகள் பெரும்பாலும் வரலாமென ஆய்வு முன்னறிவிக்கிறது.
இந்த முன்வீச்சு (projection) ஆறுதலற்றதாகத் தெரிந்தபோதிலும் , இதில் மிகைப்படுத்தல் ஏதுமில்லை. பலரும் இப்படிச் சொல்கிறார்கள். அறிவியல் எழுத்தாளர்களும் கல்வித்துறை ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரஸ்ஸு டன் வாழ்வது புதிய பருவகால சகஜ நிலையாகிவிடப் போகிறது என்று எச்சரித்திருக்கிறார்கள். மார்ச் ஆரம்பத்தில் பிசினஸ் இன்சைடர் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ஜான் ஹாப்கின்ஸ் உடல்நலப் பாதுகாப்பு மையத்தின் தொற்றுநோய் வல்லுநர் கூறியதாவது: “இது மனித இனங்களுக்கான கொள்ளைநோய் ; தடுப்பூசி மருந்து இல்லாமல் தானாக விலகப் போவதில்லை”. இதே வார செவ்வாய்க்கிழமை அட்லாண்டிக் பத்திரிக்கையில் வந்த “மூடிக்கிடக்கும் நாட்டை மீண்டும் திறப்பது எப்படி?” என்ற தலைப்பில் நிபுணர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில், மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தின் ஒரு தொற்று நோய்-கொள்ளைநோயியலாரான மைக்கேல் ஆஸ்டெர்ஹோல்ம், எட் யாங்- கிடம் சொன்னது: “நாம் பேசியது அடுத்த சில வாரங்களைக் கெடுவாக வைத்தல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வில்லை. பேசியது இரண்டு ஆண்டுகளுக்கு அப்புறம் சாத்தியமாகப் போவதைப் பற்றிதான்.”
நீண்ட கால இழுவைக்கு எவ்வித சமூக விலக்கல் தேவைப்படும் என்று அறிய, நோய்ப் பரவல், நோயெதிர்ப்பின் நீட்சி, ஆகியவற்றின் மீதான பருவகாலத் தாக்கங்கள் பற்றி அதிக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஹார்வர்ட் ஆய்வு கூறியிருக்கிறது .
https://blogs.scientificamerican.com/beautiful-minds/what-humans-could-be/
https://nymag.com/intelligencer/2020/04/harvard-study-some-social-distancing-required-into-2022.html
(குறிப்புகள்: கோரா )
[அறிவியல் தகவல்கள், முடிவுகள் எப்படி மாறிய வண்ணம் இருக்கின்றன, தகவல்களும், நிரூபணங்களும் சேரச் சேர முன்னர் முடிந்தவை மாறுகின்றன, மாற வேண்டும் என்பதைச் சுட்ட இதைப் பிரசுரித்திருக்கிறோம். இன்றைய தேதி என்ன நிலை என்பதை நீங்கள் பத்திரிகைகளின் வழி அறிந்திருப்பீர்கள்.
பதிப்புக் குழு. ]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய கட்டுரை எழுதினால் உதவியாக இருக்கும்.