கடவு

காட்டுக்குள் நான், அப்பா, பெரியப்பா இன்னும் இரண்டு பேர் உதிர்ந்து கிடந்த பழுத்த தேக்கிலைகளில் கால் புதையப் புதைய மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். ஒற்றைப் பெருந்தடியாக உயர்ந்து நிற்கும் தேக்கு மரங்கள். கரும் பச்சைக் கூரையில் ஆங்காங்கே வெளிச்ச ஓட்டைகள். பழுத்த இலைகள் ஓயாது மேலே உதிர்ந்த வண்ணம் இருந்தன. உயரே பெரிய பெரிய வௌவால்கள் அங்குமிங்கும் பாய்ந்து அதகளம் பண்ணிக் கொண்டிருந்தன.

‘அங்க பாரு,..’ என்றார் பெரியப்பா. ரொம்ப பக்கத்தில் பத்தடி உயரத்தில் ஒரு பஞ்சவர்ணக் கிளி மரத்தை முட்டிக் கொண்டிருக்கிறது. ஆம், முட்டிக்கொண்டு. என்ன பெரியப்பா, புதுசா இருக்கு  என்றேன். ‘இந்தப் பக்கம் மட்டும்தான் பாக்கலாம், மரமுட்டி.’ தலையில் கொம்பு போல ஒரு முண்டு. அதை வைத்துத்தான் முட்டிக் கொண்டிருக்கிறது. காட்டில் வேறு சத்தமே இல்லை. டொக் டொக் டொக்….. சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது.. முழிப்புத்தட்டி கண்ணைத் திறந்தேன். டொக்..டொக்..டொக்.. இடைவெளி விட்டு மூன்று மூன்று டொக்குகள். சமையலறையில் தேங்காய் உடைக்கும் முயற்சியில் இருந்தாள் என் மனைவி. இது போலவே சிறு வயதில் ஒண்ணுக்கிருப்பது போல் கனவுகண்டு ஒண்ணுக்கிருந்து முழித்த காலைகள் ஞாபகத்திற்கு வந்தது. முழித்துக்கொண்டிருந்தால் நான் உடைத்துக் கொடுப்பதுண்டு. மூன்றே தட்டில் சரி சமமாக உடைப்பேன். மனது நிறைவாக உணரும் சின்னச் சின்ன தருணங்கள். இப்போதுகூடப் போய் உடைத்துக் கொடுக்கலாம். ‘ஆமாம், இவ்வளவு நேரம் நான் தட்டித்தட்டி உடைச்சு வெச்சிருந்தேன். இவரு வந்தோண்ண ஒரே போடா போட்டுட்டாரு’ என்கிற அவளுடைய வழக்கமான அங்கலாய்ப்பையும் கேட்கலாம். இந்த ‘நைட் ஷிப்ட்’  பார்க்க ஆரம்பித்ததில் இருந்து ஒரு மாதிரியான மந்தத்தனம் உடம்பில் ஏறிவிட்டுருக்கிறது. டொக் டொக் டொக்… நூறாவது டொக்கில் உடைத்து விடுவாள்.  நான் கண்ட கனவை நினைத்துப் பார்க்கிறேன். தேக்கு மரக்காடு பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் சிறுவயதில் அப்பா, பெரியப்பாவோடு காட்டு வழி நடையில் ‘அம்மாமச்சு’ என்று ஓரிடத்திற்குச் செல்லும்போது பார்த்தது. வௌவால் கூட்டத்தின் கரைச்சல் நான் பார்த்தது அழகர் மலை உச்சியில் பழமுதிர்ச் சோலை ராக்காயி அம்மன் சுனைக்கு அருகே. அந்த மரமுட்டியை இனிமேல்தான் பார்க்கவேண்டும். ஏ.ஆர்.ரகுமான் இளையராஜா குரலில் பாடுவது போலவெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். இந்த மாதிரி ஏதாவது கெக்கேபிக்கே என்று கனவு கண்டால் மட்டும்தான் எனக்குத் தூங்கியது போல ஓர் உணர்வு. சில நாள்கள் தூக்கம் கொஞ்சம்கூட வராமலும் போகும். பல நாள்கள் தூக்கமா, தூக்கம் போன்ற மயக்கமா என்ற மயக்கத்திலேயே படுத்துக் கிடந்து எழுந்திருப்பதும் உண்டு. ‘தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்?’ என்று பத்திரகிரியார் எதை நினைத்துச் சொன்னாரோ, என்னைப் பார்த்து சொன்னது போலவே தோன்றும். 

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் பரவலாக்கத்தின் ஒரு பகுதியாக பி.பி.ஓ நிறுவனங்களை ஆரம்பித்தபோது தாய் நிறுவனங்களுக்கு இணையான ஒரு வளர்ச்சியைப் பெறும் என்று நினைத்திருக்கவில்லை. ஐ டி கம்பெனியில் வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகளுக்குப் புகலிடமாக விளங்கியது பி.பி.ஓ. நானும் அப்படி வந்தவன்தான்.  வேலை செய்யும் நேரம் அமெரிக்காவில் வெள்ளைக்காரன் முழித்திருக்கும் நேரம். இரவில் வேலை செய்து காலையில் வருவது ஒரு கட்டத்தில் பழகிவிடும் என்றாலும் அன்றன்று முடிக்கவேண்டிய வேலைகள் முடியாத நேரத்தில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிவரும். இரவுப் பணி வேலை நீட்டிப்பு பகல் பணி வேலை நீட்டிப்பை விடவும் கடுமையானது. மிகக் குறைந்த நேரமே தூங்கிவிட்டு அடுத்த நாள் பணிக்கு ஓட வேண்டும். இதற்கு நடுவே சின்னச் சின்ன தொல்லைகளும் எளிதாக எரிச்சலைக் கிளரும். இந்தப் பத்து வருட கால உழைப்பில் ஒரு சிடுமூஞ்சித்தனம் முகத்தில் உறைந்து போனதுதான் மிச்சம்.  ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது உறைக்க லேசாக புன்னகை செய்து பார்த்தேன். அதற்கு சிடுமூஞ்சியே பரவாயில்லை என்று தோன்றியது.

இந்த வேலையில் ‘ஷிப்ட்’முறைதான். அதாவது ஒன்பதரை மணி நேர வேலை. பயண நேரமும் சேர்த்து ஒரு பதினோரு பன்னிரெண்டு மணி நேரம். ஐரோப்பிய வேலை நேரம் (யு கே ஷிப்ட்)  – இருப்பதிலேயே சற்று உலகத்தோடு ஒத்த வேலை நேரம். மதியம் 12.30 முதல் இரவு 10 மணிவரை. இரவுத் தூக்கம் உண்டு. காலையிலும் அரக்கப் பரக்க எழுந்து வர வேண்டாம். அமெரிக்க வேலை நேரம் (யு எஸ் ஷிப்ட்) – முழு இரவுத் தூக்கமும் போச்சு. மாலை 4 மணியிலிருந்து காலை 2 மணிவரை. வீட்டுக்கு வர 3 அல்லது 4 மணியாய் விடும்.  ஆஸ்திரேலிய வேலை நேரம்தான் ரொம்பக் கடுமையானது.  காலை 3 முதல் மதியம் 12 வரை. தொடர்ந்து நீண்ட நேரம் தூங்க முடியாது. இரவுப்பணி செய்பவர்கள் பொதுவாக குண்டாக இருப்பார்கள். ரொம்பப் பசிக்கும். நான் இப்போது இரவுப்பணி. அதாவது அமெரிக்க முதலாளிக்காக வேலை செய்கிறேன். நான் ஏற்கெனவே எல்லா ஷிப்ட்டுகளிலும் வேலை செய்து என் உயிரியல் கடிகாரத்தின் முட்களையெல்லாம் எப்போதோ பிய்த்து எறிந்து விட்டிருந்தேன். இந்த நடுவயதிலேயே உடல் ரீதியாகப் பல பின்னடைவுகளையும் பார்த்துவிட்டேன். 

‘வெல்கம் டு தி ரூட்மாடிக் டிரான்ஸ்போர்ட் ஹெல்ப் லைன். கால் பிரம் டிரைவர். திஸ் கால் மே பி மானிட்டர்ட் பர் குவாலிட்டி அண்ட் ட்ரைனிங் பர்பஸ்’ இந்த பதிவு செய்யப்பட்ட, அரைப் போதையில், சிரித்துக்கொண்டே பேசுகிற பேரிளம் பெண்ணின் குரலை ஒவ்வொருமுறை ‘கேப்’ ஓட்டுநர் அழைக்கும்போதும் கேட்டே தீரவேண்டும். இதை வேகமாகச் சொல்லிப் பாருங்கள். பத்தே பத்து நொடிகள்தான் ஆகும். கிழவி நிறுத்தி நிதானமாக ஒரு நிமிடம் பேசுவாள். அதன் பிறகுதான் ஓட்டுனரின் குரல் வரும்.பொறுமை போய்விடும். திரிசூலம் படத்தில் பல வருடம் கழித்துப் போனில் பேசும் மனைவியிடம் வார்த்தைகள் வராமல் சிவாஜி காட்டுகிற மெய்ப்பாடுகளை எல்லாம் காட்ட வேண்டியிருக்கும். வண்டி வருவதற்குத் தாமதமானால் போக்குவரத்துத் தகவல் மையத்தைத் தொடர்பு கொண்டாலும் இதே நிதானமான குரல்தான். வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தாலும் இதே குதூகலமான குரலைக் கேட்கலாம். ஓட்டுநர் மூன்று முறை அழைப்பார். நாம் வருகிறோமா என்று உறுதி செய்து கொள்ள, நமக்கு முந்தைய ஊழியர் ஏறிவிட்டபின் ஒருமுறை, வீட்டு வாசலில் வந்து நின்றபின் ஒருமுறை. இரண்டாவது அழைப்பு வரும்போது அநேகமாக குளித்துவிட்டு துண்டோடு ஜட்டியைத் தேடிக் கொண்டிருப்பேன். அழைப்பை எடுத்தால் ரத்தக் கொதிப்பு ஏறிவிடும் என்பதால் ஓர் உபாயம் கண்டுபிடித்தேன். சார்ஜில் போட்டிருக்கும் போனின் அழைப்பை எடுக்கும்போதே ஸ்பீக்கரை ஆன் செய்து விடுவேன். ஓட்டுநர் லைனில் வரும்போது தலையைத் துவட்டிக்கொண்டோ, எண்ணையைத் தேய்த்துக்கொண்டோ இருக்குமிடத்திலிருந்தே கத்தலாம். மூன்றாவது அழைப்புக்கு ‘கேப்’ வந்து வழக்கமாக நிற்கும் இடத்தில் தயாராக இருப்பேன்.

என் தந்தையும் ஓட்டுநர்தான். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். மதுரை – பெரியகுளம் ரூட்டில் ஓட்டிக் கொண்டிருந்தார். நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் காலை பதினோரு மணிக்கு வரும்போது அம்மா ‘சாப்பாட்டுக் கேரிய’ரை கொடுக்கப் போகும். பார்வதி, சோமு, இந்தியன் என்று தனியார் பேருந்துகள் ‘சிலு சிலு’ வென்று இசையொலிக்க கூட்டம் வழியப் பறந்து கொண்டிருக்கையில், ஒரு பழைய வண்டியைக் கொட கொடவென்று காத்தோட்டமாக இவரும் ஓட்டிக் கொண்டிருப்பார். செவ்வாய்க் கிழமை வாடிப்பட்டிச் சந்தை மற்றும் சனிக் கிழமை நிலக்கோட்டைச் சந்தையன்று மட்டும் கொஞ்சம் கூட்டம் இருக்கும்.  

ஒரு நாள் காலை சாப்பாடு கொண்டுவர வேண்டாம், மூன்று பேரும் பதினோரு மணிக்கு பஸ் ஸ்டாப்பிற்கு வந்து விடுங்கள், மதுரையில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சினிமாவுக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார். இது ஒன்பது கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வருவதோ, வால் நட்சத்திரம் வானில் தோன்றுவதோ போன்ற அபூர்வ நிகழ்வாகையால்  தலை, கால் புரியாத சந்தோஷத்தில் இவருடைய தகர டப்பாவிற்காகக் காத்திருந்தோம். ஜில்லென்று நீலக் கலரில் ஒரு புது வண்டி வந்து நின்றது. அப்பா கையை ஆட்டி எங்களை வந்து ஏறிக்கொள்ளச் சொல்லாவிட்டால், இது இவர் ஓட்டுகிற வண்டி என்றே தெரிந்திருக்காது. சிலுக்குவார்பட்டியில் ஜன்னல் வழியாக மடியில் வந்து விழுந்த மல்லிகைப் பூவை அம்மா தலையில் வைத்துக்கொண்டது. ‘காசு நான்தான் கொடுப்பேன்’ என்று முதலிலேயே அம்மாவிடம் வாங்கி வைத்திருந்த காசைப் பூ விற்ற பெண்ணிடம் கொடுத்தேன். அப்பா ‘கூலிங் கிளாசெ’ல்லாம் போட்டு செம கெத்தாக இருந்தார். எங்ககிட்ட கெத்த காட்டுறத்துக்கோ என்னவோ சும்மா பறந்தார் அப்பா, இந்தியன் பின்னாலேயே ஆன மட்டும்  பத்திட்டு வந்தான். கடைசி வரைக்கும் சைடு குடுக்கவே இல்லையே. தேனூர் கேட்டில் ‘குட்ஸ் ட்ரைனு’க்காகப் போட்டார்கள். வெள்ளிரிப் பிஞ்சை வாங்கி அப்பாவிடம் கொடுத்துவிட்டு வரச்சொன்னது அம்மா. வழி நெடுகத் தீனிதான். அன்றைக்கு முனியாண்டி விலாஸ் சாப்பாடு, ரஜினியின் ‘மன்னன்’, புதுத் துணிமணி என்று மதுரையைக் கலக்கினோம். என் வாழ்வின் மூன்று சந்தோஷமான தினங்களில் ஒன்று அது. 

இதை நான் வகுப்பில் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தேன். பயலுக நம்பவேயில்ல. மறுநாள்  ‘என்னடா, புதுவண்டி வந்தோன்ன சும்மா ப்ளயிட் மாதிரி பறக்கறார் ஒங்கப்பா’ என்று மதுரையிலிருந்து வரும் சுந்தர்ராஜன் சார் வகுப்பிலே சொன்னபோது சும்மா வானத்தில பறக்கிற மாதிரி இருந்தது. ஓய்வுக்குப் பிறகு தன்னுடைய தொடர்புகளை வைத்துக்கொண்டு இங்கு ஒரு பெரிய கார் கம்பெனி எம்.டி.யின் ஓட்டுநராக வேலை தேடிக்கொண்டு என்னோடும், தம்பியோடும் மாறி மாறி இருந்து வருகிறார்.      

கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும். ‘ஆப்’பில் வண்டி எங்கு இருக்கிறதென்று ‘ட்ராக்’ செய்ய முடியும். அதைப் பார்த்து ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தயாராகி அமர்ந்திருக்கவும். இந்த வசதி வருவதற்கு முன்னால் ஓட்டுநர் அழைத்துச் சொல்வார் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று. அரக்கப் பரக்கத் தயாராகி ‘ஷூ’ வையும் போட்டுக்கொண்டு அமர்ந்திருப்போம். இருபது நிமிடம் ஆனாலும் வண்டி வராது. நாம் அழைத்தால் பதில் தயாராக இருக்கும் ‘ இந்தா அஞ்சு நிமிஷம் சார்… சரியான ட்ராபிக் ஜாம்’ அவர் வருவதற்குள் சென்னையில் அடிக்கிற வெயிலுக்கு வேஷம் கலைந்த நாடக நடிகனைப் போல ஆகியிருப்போம்.    

ஜி பி எஸ்சில் வண்டி எங்கிருக்கிறது என்று பார்த்தேன். புழுதிவாக்கம் பக்கத்தில் பன்னிரண்டு நிமிட தூரத்தில் காட்டியது. பத்து நிமிடம் கழித்துப் பார்த்தேன். அதே இடம்தான் காட்டியது. டிரைவருக்கு செல்பேசியில் அழைத்தேன். முதல் ஊழியருக்காகக் காத்திருப்பதாகச் சொன்னான், சின்னப் பையன் குரல்தான். இன்னொரு பத்து நிமிடம் கழித்தும் அதே இடம்தான். பொதுவாக ஒரு ரூட்டில் பயணிப்பவர்கள் நான்கு பேர் என்றால் எப்போதும் அதே நாலு பேர்தான். யாராவது ஒருவர் விடுப்பில் சென்றாலோ, ‘ஷிப்ட்’ மாறினாலோதான் மாற்றம் இருக்கும். ஒரு சந்தேகத்தில் முதலில் ஏறும் விக்கியை அழைத்துக் கேட்டபோது தானும் ரொம்ப நேரமாக புழுதிவாக்கத்தில் பார்த்ததாகவும் இப்போதுதான் அழைத்து வழி சொல்லியிருப்பதாகவும் சொன்னான். நான் வேலை செய்வது ஒரு பி.பி.ஓ.வில் மேலாளராக. சென்னை ஓ.எம்.ஆரில் (ராஜீவ்காந்தி சாலை) இருக்கும் எண்ணிறந்த தகவல் தொழில் நுட்பப் பூங்காக்களுள் ஒன்றில் வேலை. இந்தப் பூங்காக்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்படுத்தும் முக்கியமான போக்குவரத்து சாதனம் ‘கேப்’ என்றழைக்கப்படும் கம்பெனிக் கார்தான். 

ஐ டி கம்பெனிகள் பொதுவாக நேரடியாக ஓட்டுனர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. ஒரு போக்குவரத்துப் பங்குதாரரை (டிரான்ஸ்போர்ட் பார்ட்னர்) நியமிப்பார்கள். இன்றைக்கு மூன்று ஷிப்ட்டுகளுக்கும் சேர்த்து ஒரு ஐநூறு வண்டிகள் தேவையாக இருந்தால் அவற்றை ஏற்பாடு செய்வது அவர்கள் பாடு. சம்பளம் கம்பெனியிலிருந்து இந்த இடைத்தரகருக்கு. அவர்கள் கமிஷன் போக ஓட்டுனர்களுக்குக் கொடுப்பார்கள். எப்போதும் ஒரு மாதச் சம்பளம் நிலுவையில் இருக்கும். வண்டி சொந்தமாக இருந்து கடுமையாக உழைத்தால் ஓரளவு சம்பாதிக்கலாம். அநேகமாகச் சொந்த வண்டியாகத்தான் இருக்கும். ஆனால், வங்கிக் கடனில் வாங்கியிருப்பார்கள். பாதிச் சம்பளம் மாதாந்திர கடனுக்கே போய் விடும். கடனைக் கட்டி முடியவே ஐந்து வருடம் ஆகிவிடும். ஐந்து வருடங்களுக்கு மேல் பழைய வண்டிகளை ஓட்ட கம்பெனி அனுமதிக்காது. இதற்குமேல் பெட்ரோல் செலவு வேறு. புலி வாலைப் பிடித்த கதைதான். பலரும் நிரந்தரக் கடனாளிகளாய் இருப்பார்கள். ஓட்டுனர்கள் பெரும்பாலும் உள்ளூர்காரர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது சென்னை, வேலூர், வட ஆற்காடு, தென்னாற்காடு. ஓரளவு மதுரை, திருநெல்வேலியும், ஆந்திராவும் உண்டு. என் அப்பாகூட நான் வேலை பார்க்கும் ஐ டி பார்க்கில் ஓட்டுநராக வேலைக்குச் சேர்த்துவிடச் சொன்னார்.  நான்தான் நிலைமையைக் கருத்தில் கொண்டு மறுத்துவிட்டேன். என்னைக் கூட்டிச் செல்ல அவர் ஓட்டுநராகக் காத்திருக்கும் அவல நிலையும் இதன் மூலம் தவிர்க்கப்பட்டது.  

ஓட்டுநர்களில் மூன்று வகைமையினர் உண்டு. பகலெல்லாம் ஓட்டுபவர்கள். இவர்களுக்கு பணமும் வேண்டும். இரவுத் தூக்கமும் வேண்டும். இரண்டாவது வகையினர் இரவில் மட்டும் ஓட்டுபவர்கள். ஆனால் சரியாகச் சொன்னால் இவர்கள் முதல் நாள் மாலையிலிருந்து மறுநாள் முன் மதியம் வரை ஓட்டுவார்கள். சரியாக தூங்குவதற்காக  ஆறு மணிநேரம் மட்டுமே வீட்டிலிருப்பார்கள். மூன்றாவது வகையினர் வண்டியை விட்டு சாப்பிடுவதற்காகவும் இயற்கை உபாதைகளுக்காகவும் மட்டும் இறங்குபவர்கள். இவர்கள் தூங்குவதும் வண்டியிலேயே, பெரும்பாலும் ஊழியர்களுக்காகக் காத்திருக்கும் நேரத்தில். இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையினர்தான் மிக அதிகமாகச் சம்பாதிப்பவர்கள். அதற்கான சுழியிருப்பவர்கள் மாதம் ஒரு லட்சத்துக்கும் மேலே கூட. கணிசமாக மருத்துவருக்கும் போகத்தான் செய்யும். அட.. போகட்டுமே.  

கடைசியில் பாட்டியின் அழைப்பு ‘கால் பிரம் டிரைவர்…’ ஒரு நிமிட தியானத்தை டிரைவரின்  குரல் கலைத்தது. ‘அண்ணே வந்துக்கிட்ருக்கேண்ணே… ஐஞ்சு நிமிசம்’ பொறுமையிழந்து ‘நல்லா வந்துக்கிட்ருக்க போ.. கொஞ்சம் சீக்கிரம் வா தம்பி, நெறைய வேலை கெடக்கு’ என்று வைத்தேன். நம்மூர்ப்பயதான். நான் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்த கலப்படத் தமிழில் மறந்து போயிருந்த மதுரைத் தமிழை, இப்படி வருகிற ஓட்டுநர்கள்தான் அவ்வப்போது ஞாபகப்படுத்துகிறார்கள். திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் என்னுடன் படித்த  நாராயணனை நினைத்துக்கொண்டேன். கல்லூரியை விட்டுச் செல்லும்போது திருநெல்வேலித் தமிழ் அவனிடமிருந்து முற்றிலும் ஒழிந்துபோய் மதுரைக்காரனாகவே மாறிவிட்டிருந்தான்.


என்னவோ சொல்லிக்கிட்டிருந்தேனே, ம்ம்.. பி.பி.ஓ வேலை. பல வகையா இருக்கு. சில வேலைகள் எளிமையாக இருக்கும், ‘டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்’ போல. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். வேகம் முக்கியம். இதில் புதிதாக வேலையில் சேர்ப்பவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். சில வேலைகளுக்கு அந்தத் துறையில் முன் அனுபவம் இருந்தால்தான் எடுப்பார்கள். சில வேலைகளுக்கு வேகமும் முக்கியம், பொற்கொல்லர் நகை செய்வது போன்ற துல்லியமும் முக்கியம், ‘பைனான்சியல் ரிப்போர்டிங்’ போல. பணிச்சுமை எல்லா வேலையிலும் ஒரே மாதிரி இருக்காது. இப்போது நான் இருக்கிற பிரிவில் மாதத்திற்கு பத்து நாள்கள் நிமிர முடியாமல் வேலை இருக்கும். அடுத்த பத்து நாள்கள் நிமிரத் தேவையில்லாத ஓய்வு. நான் ரஷ்யப் பேரிலக்கியங்களில் இருந்து வருடக்கணக்காக நிகழ்ந்து கொண்டே இருக்கும் உலகப் பெருங் காவியமான வெண்முரசு வரை இந்த ஒய்வு நேரங்களில்தான் படித்து வருகிறேன். உங்கள் ரத்த அழுத்தம் எகிறுவது தெரிகிறது. நிற்க. எனக்குப் போட்ட உடையைக் கழற்றாமல் இரண்டு இரவுகள் ஒரே ஒரு மணிநேரம் மட்டும் தூங்கிவிட்டு தொடர்ந்து ஐம்பது மணிநேரம் வேலை பார்த்த அனுபவமும் உண்டு. எல்லா நாள்களும் நிமிர முடியாத வேலை உள்ள பிரிவுகளும் உண்டு. அந்தக் கழுவில் ஒரு வருடம் அமர்ந்திருந்த அனுபவமும், அந்தப் பணிச்சுமை, மனச்சுமை காரணமாகவே ‘பைக்’ கிலிருந்து விழுந்து கையொடித்துக்கொண்ட அனுபவமும் எனக்குண்டு. அப்போதிலிருந்து ‘கேப்’ தான். அதாச்சு எட்டு வருசம்.

நான் வருவதற்குத் தாமதமாவதால் என்னென்ன செய்யவேண்டும் என்று என்னுடைய குழு உறுப்பினனுக்கு அழைத்து உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும்போது ஒரு வழியாக வண்டி வந்தது. முன்பெல்லாம் ஒரு ரூட்டில் ஒரு ஓட்டுநர் வந்தால் மாதக் கணக்கில் அவர்தான். ஓட்டுநர்கள் ஊழியர்களிடம் கடன் வாங்கவும், பெண் ஊழியர்களுடன் விவாக சம்பந்தம் உட்பட பல தொடர்புகள் ஏற்படவும் ஆரம்பித்ததைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு கைவிடப்பட்டது. பின்பு வாரம் ஒரு முறை ஓட்டுநர்கள் மாற்றப்பட்டனர். அப்படியும் மேற்கண்ட தொந்தரவுகள் தலை தூக்கவும், ஓட்டுனர்கள் தினந்தோறும் மாற்றப்பட்டனர்.  பெண்களுக்கருகில் அமர்ந்து தொடைக் கதுப்பின் இளஞ்சூட்டை பரவசமாய் அனுபவித்த காலம் போய்ப்  பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. ஆளும் குண்டா, பின்னால் உட்கார்ந்தால் மூன்று பேருக்கும் கஷ்டம். மனதுக்குள் திட்டிக் கொண்டிருப்பார்கள். எனவே டிரைவர் பக்கத்துக்கு இருக்கை எப்போதும் எனக்கே.  லேசாக எம்பி சீட்டின் நுனியில் வலது பிட்டத்தை வைத்து ஒரு உன்னு, ஒரு தள்ளு …. போலாம் ரைட்.   

என்னடா தம்பி..இப்பிடிப் பண்ணிப்ட்ட? என்று நான் ஆரம்பிக்கும்போதே ‘அண்ணே.. இப்பத்தாண்ணே ஒரு வாரமா வேலைக்கி வர்றேன். மன்னிச்சுக்குங்க… ‘ என்று வாயை அடைத்துவிட்டான். தலையை வகுப்பெடுத்துச் சீவி வீபூதியெல்லாம் பூசி பவ்யமாக இருந்தான். ‘கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக்கங்கண்ணே’ என்று சொல்லும் சிரிப்பு.

‘ஏன்டா….சரி ஓட்டு. எந்த ஊர்ரா தம்பி ?’

மதுரை பக்கம். பட்டிவீரம்பட்டிண்ணே…

இங்க பார்ரா…அப்பா என்ன செய்யிறாரு?

கவர்மெண்ட் பஸ்ல டிரைவர்ரா இருந்தாரு.  ரிடையர் ஆயிட்டாருண்ணே?

பேரு?

பால்பாண்டி…

‘பால்பாண்டி மாமா மகனாடா நீ…. சரி… சரி.. அப்பாகூடச் சொல்லிக்கிட்ருந்தாங்க குமரேசந்தான… கதிரோட எப்பவாச்சும் பேசுவேன்.               

ஒங்களுக்குத் தெரியுமாண்ணே?..

நல்லாகேட்ட போ… ஒங்கண்ணனும்  நானும் பாக்காத சினிமாவாடா வத்தலக்குண்டுல… நீ அப்ப ரொம்ப சின்னப் பையன். வருசம் ஆயிப்போச்சே?. .. அப்பா எப்பிடி இருக்காங்க? 

‘இந்தா… தாம்பரத்துல அண்ணன் கூடத்தான் இருக்காரு.. நானும் அங்கதான் இருக்கேன். அண்ணன் கவர்மெண்ட் பஸ்ல கண்டக்டரா இருக்காப்ல… நீங்க சுரேஷண்ணன்தான?… அண்ணன் கல்யாணத்துல பாத்தாப்புல இருக்கு… உங்க தம்பி எங்க இருக்காப்ல?’ ‘

‘ரமேஷா…இங்க அடுத்த ஐ.டி பார்க்குலதாண்டா வேலை செய்யிறான்.. கதிர் பேசுவான் எப்பவாச்சும். இங்க எப்பிட்றா சேந்த?…. ‘  

‘நம்ம ராசுக்கோனார் மகன் அழகேசன்தாண்ணே சேத்துவிட்டான். .. மாசச் சம்பளம்தான். பதினைஞ்சாயிரம். ஆறுமாசம் களிச்சுகூடப் போட்டுத்தறேன்ட்ருக்காப்டீ  ஓனரு’


இந்த அழகேசனோட அண்ணன் தனசேகர் பத்தாம் வகுப்பில் ‘பிட்’ அடிக்கவிடவில்லை என்ற காரணத்திற்காக தமிழ் அய்யாவை பேனாவால் வயிற்றில் ஒரே ஏத்தாக ஏத்தி விட்டான். இவனும்  பொண்ணுங்க விஷயத்துல எக்கச்சக்கமா மாட்டியிருந்தான் ஊருக்குள்ள. பெருநகரங்களில் ஓட்டுநர் வேலை என்பது முன்பெல்லாம் கிராமங்களில் குற்றப் பின்னணி உடையவர்கள் வந்து மறைந்து கொள்ள மிகுந்த உதவியாக இருந்தது. இப்போதெல்லாம் ஆதார், காவல்துறைச் சான்றிதழ் என்று ஏகக் கெடுபிடி. வருகிற ஓட்டுநர்கள்தான் சொல்வார்கள்.  

என் தம்பி என்னைவிட எட்டு வயது இளையவன். இவன் அவனை விட ரொம்பச் சின்னவன்தான். இவர்களுக்கு அய்யம்பாளையம் பக்கம் நிலம் இருந்தது. எங்கள் நிலத்தை ஒட்டிய ரெண்டு ஏக்கர் . மருதா நதிப் பாசனம். செழிப்பான பூமி. மகள் கல்யாணத்திற்கு நிலத்தை வைத்துக் கடன் வாங்கினார் பால்பாண்டி மாமா. மூத்த மகன் கல்யாணத்திற்குப் பெரிதாகச் செய்யவேண்டுமென்று நிலத்தை விற்றேவிட்டார்.

‘அத்தனை பேர் சொல்லியும் வித்தே போட்டாரேடா உங்கப்பா.. என்னா மாதிரி நெலம்…’

‘அது இருந்துச்சுன்னா நான் ஏண்ணே இங்க வரப்போறேன்?.. கிண்டிக்கிட்டு அங்கனக்குள்ளயே கெடந்திருப்பேன்.. விக்கறந்தண்டிக்கும் நான்தான விவசாயம் பாத்துக்கிட்டிருந்தேன். நெல்லு, தக்காளி எது போட்டாலும் சூப்பரா வரும்ண்ணே. உங்க காட்டை ஏண்ணே ரெண்டு வருசமா அப்பிடியே தரிசாப் போட்டுட்டீங்க? ‘

‘பாக்க ஆளில்லாமத்தாண்டா?’

‘மாமா ஒரு வார்த்தை  சொல்லியிருந்தா சேத்து பாத்திருக்கப்போறேன்..’

‘செஞ்சிருக்கலாம்… என்ன நெனைச்சாரோ?… அது சரி, யாருக்குடா வித்தீங்க?’

யார் தோட்டத்தில் என்ன போட்டிருக்கிறார்கள் , சமீபத்திய திருமணங்கள், சாவுகள், தற்கொலைகள் என்று பரஸ்பர கௌரவக் குறைவு வராத விஷயங்களாகப் பேசிக்கொண்டோம்..  ஊர் கொடைக்கானல் மலை அடிவாரம். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட நாடார்கள் பெருத்த ஊர். ஊர் பேருக்குச் சம்பந்தமில்லாத பெரிய பெரிய வீடுகள். சில வீடுகள் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே காணக் கிடைப்பவை. தாண்டிக்குடி, தடியன்குடிசை என்று மலையில் காப்பி எஸ்டேட்டுகள், சௌ சௌ, நூல்கோல், முட்டைக்கோஸ் விவசாயம் . ஊரில் பாதிப்பேர் அங்கு வேலைக்குச் செல்பவர்கள்தான். என் நண்பர்களின் தம்பி, தங்கைகள் எல்லாம் இவனோடு படித்திருந்தார்கள். அப்போதெல்லாம் ‘செல்போன்’ கிடையாதாகையால் எந்த தொடர்பும் இல்லை. இவன் இப்போதுதான் ஊரை விட்டு வந்திருக்கிறான் என்பதால் நிறையத் தெரிந்துகொண்டேன் ஓட்டுனர்களுக்கு பயணம் செய்யும் ஊழியர்களுடன் பேச்சுக் கொடுக்கக்கூடாது என்பது நிர்வாக உத்தரவு.  பொதுவாக ஓட்டுநர்கள் பேசிக்கொண்டே வருவதை விரும்புவார்கள். நான் இப்படித்தான் பேசிக்கொண்டே வருவேன்.   

அடுத்து யார்ரா ரூட்டுல? 


டோரான்னு போட்ருக்குண்ணே. மடிப்பாக்கம். குபேரன் நகர். எப்பிடி போறதுண்ணே?

‘மேப்பப் பாத்து போடா தம்பி, ரூட்டெல்லாம் சும்மா கைரேகை மாதிரி தெரியணும். எங்க ரைட்ல போற, மடிப்பாக்கம் நேரப் போகணும்.’

‘மேப்புல அப்பிடித்தாண்ணே காட்டுது..’

அவனுடைய போனைப் பார்த்தால் ‘ஸ்க்ரீன்’ உடைந்து பரிதாபமாக இருந்தது. கால் செய்து பார்த்தான். அந்தப் பெண் ஆங்கிலத்தில் பேசவும் என்னிடம் கொடுத்தான். அந்தப் பெண் ஆந்திராவிலிருந்து நேற்றுதான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறது. எனவே வீடு அடையாளம் சொல்லத் தெரியவில்லை. புதிதாகச் சரியான திட்டமிடாமல் கன்னா பின்னாவென்று கட்டப்பட்ட குடியிருப்புகள். தெருக்களும் வரிசையாக இல்லை. 

ராம்நகர்,  சதாசிவ நகர், குபேரன் நகர் இங்கெல்லாம் பெருமழைக் காலங்களில் ‘போட்’ டே விடுவார்கள்.  வீடுகளுக்கு நடுவே பெரிய கோரைப்புல் மண்டிய – இதே புல்லை ஓர் இருபது கிலோமீட்டர் சுற்றளவில் எங்கும் பார்க்கலாம் – நீர் தேங்கிய வெற்றிடங்கள். அங்கங்கே தண்ணீருக்குள் அளைந்துகொண்டு பழைய வாழிடத்தை மறக்காத விதவிதமான கொக்குகள். பச்சைக் கலரில் தண்ணியிலிருந்து தலையை நீட்டியபடி ஒரு பறவை ரொம்ப நேரமாக அசையாமல் இருந்தது, பக்கத்தில் போனவுடன்தான் தெரிந்தது ‘பீர்’ பாட்டிலின் மேல்பாதி. ஒரு காலத்தில் பள்ளிக்கரணையோடு சேர்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்.  லாண்டரிக் கடை, மளிகைக் கடை என்று பல இடங்களில் விசாரித்து  ரெண்டு தெரு தள்ளியிருந்த அந்தப் பெண்ணின் வீட்டை அடைய இருபது நிமிடமாவது சுற்றியிருப்போம் .

ஒரு வழியாக அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு கம்பெனி போய்ச் சேரும்போது மணி இரண்டு. ஒன்றரைமணி நேரம் ‘லேட்’. ஊழியர் புகார் செய்தால் ஓட்டுநர்மேல் நடவடிக்கை எடுப்பார்கள். நான் விக்கியிடமும்  அந்தப் பெண்ணிடமும்  ‘கம்ப்ளைன்ட்’ பண்ண வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். 

எங்கள் பிரிவில் ‘கேமரா’ போனுக்கு அனுமதியில்லை. வெளியில் ‘செக்யூரிட்டி’ யிடம் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். எனவே, அநேகமாக எல்லோரும் ரெண்டு போன் வைத்திருப்போம்.
‘குமாரு.. மொதல்ல அந்தப் போன தலையைச் சுத்தி தூக்கி எறி. இந்தா, என் மொபைல வெச்சுக்க.  அடுத்த ட்ரிப்பு தாம்பரம், சிந்தாரிப்பேட்டை இப்பிடி எங்க வேணுன்னாலும் போடுவாங்க. நான் தெரிஞ்சதுனால ஒனக்கு ‘ஹெல்ப்’ பண்ணேன். ஏறி ஒக்காந்து காதுல ‘இயர் போன’  மாட்டிக் கீழ குனிஞ்சானுகன்னா ஒலகமே தெரியாது. இந்தா’  என்று சிம்மை எடுத்துவிட்டு என்னுடைய ‘ஸ்மார்ட்’ போனைக்  கொடுத்தேன்.  நல்ல வேளையாக  நான் என்னுடைய தொடர்பு எண்களையெல்லாம் ‘சிம்’மில் தான் ஏற்றியிருந்தேன்.

‘இல்லண்ணே…’ என்று இழுத்தான்.

‘இரு. ஒங்கண்ணன்ட்டயே  பேசுறேன்.’ என்று கதிரை அழைத்தேன். நிலைமையை ஆதியோடந்தமாக விளக்கினேன். ‘இந்தா பேசு..’ என்று இவனிடம் கொடுத்தேன். அண்ணன் சொன்ன பிறகு போனை வாங்கிக் கொண்டான். ‘அழகேசன்ட்டல்லாம் அளவா வெச்சுக்க… ஊர்ல நெறைய ப்ராப்ளம்…. தெரியும்ல?  ரெண்டு மாசம் கழிச்சுத்தான் மொதச் சம்பளம் கைக்கு வரும். செலவுக்கு ஏதும் வேணும்னா டிரைவர் யார்ட்டயும் கேக்காத. என்கிட்ட கேளு. சரியா?’ என்று சொல்லிவிட்டு என் ‘பிளாக்’ கைப் பார்த்து நடக்க ஆரம்பித்தேன்.    

என்னதான் ஊர்காரப் பையனா இருந்தாலும் கையில இருந்த மொபைலை இப்பிடி படக்குனு தூக்கிக்குடுக்கறதுன்னா…என்று என்னை முல்லைக்குத் தேர் குடுத்த பாரி, மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன் வரிசையில் சேர்ப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் தானே? காரணமில்லாமலில்லை. 

~oOo~

ரெண்டு மாதங்களுக்கு முன்னால் என் தந்தையின் அறுபதாவது பிறந்த நாளை ஒட்டி வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தேன். அப்பாவின் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தேன்.  பால்பாண்டி மாமாவும் வந்திருந்தார். இதற்காகவே சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த நண்பனிடம் ‘ஷிவாஸ் ரீகல்’ ரெண்டு பாட்டில் வாங்கிவரச் சொல்லியிருந்தேன். அதுபோக இங்கு வாங்கியது தனி. அப்பாவோட நண்பர்களெல்லாம் ‘புல்’ ஜாலியில் இருந்தார்கள்.  எல்லோரையும் பார்த்ததில் ரொம்பவும் குதூகலமாக இருந்தார் அப்பா. அன்று இரவு எல்லோரும் சென்ற பிறகு மொட்டை மாடியில் தனியாக அமர்ந்திருந்தார். 


‘என்னப்பா, எல்லாம் திருப்தியா இருந்துச்சா?’ 

‘நல்லா ஏற்பாடு பண்ணிருந்தப்பா, எல்லாரும் சொன்னாங்க, ரொம்ப சந்தோசம்’

‘ ஏம்ப்பா, நீங்க ‘சரக்கு’ சாப்பிடவே இல்லை. இதுக்காகவே ஃபாரின்லேந்து வாங்கிட்டு வரச் சொன்னேன்.உங்க பிரெண்ட்ஸ்கூட சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம்ல.’

‘பாரினா.. ஒரே ஒரு தடவை அடிச்சிருக்கேன். ஒரு தடவை சாமுவேல் நாடார் டிரைவர் வேலைக்கு வரலைன்னு என்னை வரச்சொன்னாரு எஸ்டேட்டுக்கு. போயிட்டு வந்தோன்ன ரூவா குடுத்தாரு. நான் வாங்க மாட்டேன்ட்டேன். இந்தாடா இதையாவது எடுத்துக்க, இங்கல்லாம் கெடைக்காதுரான்னாரு, ‘ராயல் சல்யூட்’ ஸ்காட்ச் விஸ்கி, பாதி பாட்டில் இருக்கும். என்னாவோ அமிர்தம் கணக்கா வெச்சு வெச்சு சாப்பிட்டேன். ஒரு காலத்துல உங்கப்பன் பெரிய குடிகாரண்டா தம்பி.. சன்ன அசிங்கமாடா பட்ருக்கேன், இந்தப் பழக்கத்தினால… திரும்ப ஆரம்பிக்கச் சொல்ற இந்தக் கருமத்தை…’ என்றவர் சிரித்துக்கொண்டே,  ‘சரி… கடைசியா நான் தண்ணியடிச்சு எப்ப பாத்த?’ என்றார்.      

‘என்னப்பா கடைசி வரைக்கும் அம்மா பொலம்பிட்டே இருந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே.’

‘அவ என்னைக்கிப் பொலம்பாம இருந்தா?ம்ம் …’ என்று சிறிது நேரம் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர் ‘ நீ இங்கிட்டு வந்துட்ட.. உனக்குத் தெரியாது… இது ஒரு பன்னெண்டு வருஷத்துக்கு முன்னால நடந்தது, மல்லணம்பட்டி கருப்பண்ணசாமி கோயில் திருவிழா. கூட வேலை பாத்த ஆறுமுகம் பையனுக்கு மொட்டையடிச்சுக் காது குத்துறதுக்கு கூப்பிட்டிருந்தான். கெடாவெட்டெல்லாம்  முடிஞ்சு அன்னைக்கி ராத்திரி கறிச்சோறு, சரக்கு எல்லாம் ஊருக்கு வெளியே ஒரு தென்னந் தோப்பில ஏற்பாடு பண்ணிருந்தான். நான் சாயங்கால ட்ரிப்பு மதுரை ஓட்டிருக்கணும். ‘ரூட் க்ளார்க்’கு லெச்சுட்ட சொல்லி எனக்கு பதிலா வேற யாரையாவது மாத்திவிடச் சொல்லிட்டேன். ம்ம் . அவனுந்தான் வந்திருந்தான் கூட. ராத்திரியெல்லாம் பேக்குடி, பெருங்குடி. அந்த மாதிரி நான் குடிச்சதே கிடையாது. ‘ஏன்டா… இந்தக் குடி குடிக்கிற… இனிமே குடிக்கப் போறதில்லையா?’ ன்னான் லெச்சு. கடைசில அவன் சொன்னது போலவே ஆகிப்போச்சு. ‘யாரைடா மாத்திவிட்ட எனக்கு பதிலா?’ ன்னு  கேக்குறேன் அவன்கிட்ட ‘ பால்பாண்டி’ன்னான். அன்னைக்குதான் பால்பாண்டி ஓட்டிட்டுப்போன பஸ்ஸு வெங்கடாஸ்த்திரிக்கோட்டை கிட்ட ‘பிரேக் வயர்’ அறுந்து புளியமரத்துல மோதி ஆக்சிரண்டு ஆனது. அப்பல்லாம் செல்போனு கிடையாதா? மறுநா போன பெறகுதான் விசயம் தெரிஞ்சிச்சு. பால்பாண்டிக்கு ரெண்டு கால்லயும் சரியான அடி. கடைசியில ஒரு கால முட்டிக்கு கீழ எடுக்க வேண்டியதாயிப் போச்சு.  ‘யூனியன்’ல எனக்கு இருந்த செல்வாக்கை வெச்சுப் பேர் வெளிய வராம பண்ணிக்கிட்டேன். வேற யாருக்கும் தெரியாது. இப்பதான் ஒங்கிட்ட சொல்றேன். நான் கடைசியாக் குடிச்சது அன்னைக்குதான். அதுக்கப்புறம் குடிக்கிற காசைக் கொண்டு நகைச்சீட்டு சேந்தேன். கொஞ்சம் கொஞ்சமா சேத்து ஆறு பவுன் வாங்கினேன். பால்பாண்டி மக செல்வி கல்யாணத்துக்கு என்னால முடிஞ்சது. ம்ம்… ஆனா அந்த ஒரு சம்பவம் என் வாழ்க்கைய கந்தர்கோலமா ஆக்கிப்போட்டுச்சு. எனக்கும் ஒங்க அம்மாவுக்கும் இருந்த ஒறவு ஒண்ணுமில்லாமப் போச்சு.’  என்று சொல்லிவிட்டுத் தொண்டையைச் செருமி துப்புவதற்காக எழுந்து போனார்.

இதெல்லாம் நடந்தபோது நான் வேலை தேடும் முயற்சியில் சென்னைக்கு வந்துவிட்டிருந்தேன். எப்போதோ ஊருக்குப் போனபோது அம்மா ‘இங்க நாம அடுப்படில வெந்து சாக வேண்டியது, இவரு கண்ட சிறுக்கிக்கி நகை செஞ்சு போடவேண்டியது, நம்ம தலையெழுத்து’ என்று புலம்பிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்ததும்  என்னவென்று கேட்டபோது அம்மா எதையோ சொல்லி மழுப்பிவிட்டதும் ஞாபகத்துக்கு வந்தது.

‘ இதுதான் தலையெழுத்துன்றது, இவ ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கா. அங்க யாரோ சொல்லிருக்காங்க நான் பால்பாண்டி பொண்ணுக்கு நகை செய்யல, அவன் பொண்டாட்டிக்கித்தான் செஞ்சேன்னு, அதைப் புடிச்சுக்கிட்டா, பாவி முண்டை சாகுந்தண்டிக்கும் அதையேதான் சொல்லிக்கிட்டிருந்தா. நான் கொஞ்ச நாளைக்கிப் பைத்தியம் புடிச்ச மாதிரிதான் இருந்தேன். பால்பாண்டி பழையபடி வண்டி ஓட்ட முடியாதுன்னுட்டாங்க.  அட்மின்ல வேலை பாத்தான், அதே கேடர்ல. இப்ப ரிட்டைரும் ஆயிட்டான். பென்சன் வருது. அதுக்கப்பறமும் அம்மா குடிநீர்ல ஒரு வேலை வாங்கிக் குடுத்தேன். போய்கிட்டிருக்கான். அவன் பொண்ணு கல்யாணம் ஆயி நல்லா இருக்கு. பேரன், பேத்தி பாத்துட்டான். பெரிய பையன் கதிருக்கு யூனியன் மூலமா கண்டக்டர் வேலை வாங்கிக் குடுத்தேன். சின்னப் பையன் ஊர்ல பிளஸ் டூ முடிச்சிட்டு ஜே.சி பஸ்ல பண்ணைக்காடு மதுரை ரூட்டு ஓட்டுறானாம்.  சென்னைக்கு அடுத்த மாசம் வந்து ஐ டி கம்பெனிக்கு வண்டி ஓட்டப்போறானாம். இப்பதான் சொல்லிக்கிட்டிருந்தான் ம்ம்.. . . அப்பா திடீரென்று சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தார். ‘அந்த ஆக்சிரெண்டுக்குப் பெறகு நான் தண்ணியடிக்கிறதை விட்டேன். பால்பாண்டி ஆரம்பிச்சான். ”அதான் அன்னைக்கு அந்தக்குடி குடிச்சியாடா’ ன்னு இன்னைக்குக் கூடக் கேட்டான் ஆறுமுகம். வந்திருந்தான். பாத்தியா? செவப்புச் சட்டை, கண்ணாடி.’

‘இப்பதான் ஓலால ஏத்திவிட்டேன் அவரையும் பால்பாண்டி மாமாவையும். ‘புல்’ லா இருந்தாங்க.’ ‘ஏன்பா, அவர்ட்ட நடந்ததைச் சொல்லணும்னு உங்களுக்கு தோணவேயில்லையா?’

‘நடந்ததை… யார்ட்ட? இவன்கிட்டயா? கிறுக்குப்பய… கரட்டுவாதம் புடிச்சவன்… ஒரு தடவை ஆபீஸ் வாசல்ல டீக்கடைல எவனோடையோ தகராறு. இவன் யார் ‘ரெகமடேஷன்’ ல வந்தானோ அந்தக் கட்சி ஆளு, எதோ சொல்ல, இவன் கோவப்பட்டு  ராஜினாமா குடுத்துட்டான். இத்தனைக்கும் எனக்கும் அந்தாள் கிட்டயிருந்து ‘ரெகமடேஷன் லெட்டர்’ இவன்தான் வாங்கிக் குடுத்தான்.  வீட்ல எல்லாம் சின்னச் சின்னப் பிள்ளைங்க. அந்த லெட்டரை மேல போகவிடாம நிப்பாட்டினேன். சொன்னா என்னாயிருக்குன்ற, எங்கயாவது கடன் வாங்கியாவது அந்த ஆறு பவுனை வாங்கி  தூக்கி என் மூஞ்சில எறிஞ்சிருப்பான். அதைப் பத்திப் பேசிப் பேசியே குடும்பத்தை நாசம் பண்ணிருப்பான். இன்னைக்குப் பாரு, எவ்வளவு சந்தோசமாப் போனான் பாரு. நான் இதை யோசிச்சுப் பாக்காம இல்லை. நானும் இந்த மாதிரி மத்தவனுக்குப் பதிலா எவ்வளவோ ஓட்டியிருக்கேன். நான் ‘லெச்சு’ ட்ட யாரையாவது போடுன்னுதான் சொன்னேன். இவன் நேரம் அன்னைக்கு வந்து மாட்டினான். யோசிச்சுப் பாத்தா எனக்கு ஏகப்பட்ட இழப்பு. பொருள் போச்சு. நிம்மதி போச்சு. பொண்டாட்டியோட உறவு போயே போச்சு. ஒரு கட்டத்தில ரொம்ப அனுபவிச்சுட்டாப்புல தோணிப் போச்சு. கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தேன். என்னா போ.. இனிமே என்னத்தைச் சொல்ல… இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் முடிஞ்சு போயிரும்.. இருக்குற சந்தோசத்தைக் கெடுப்பானேன்.. சர்வீஸுல இருந்திருந்தா சின்னவனுக்கும் ‘கவர்மெண்ட்’ வேல வாங்கிருப்பேன்…. பாப்போம்’  என்று முடித்தார்.  

திடீரென்று ஞாபகம் வந்தவராக ‘சுரேசு.. அங்க சாமி அலமாரில ஒரு பெரிய கவர் இருக்கும். அதை கொஞ்சம் கொண்டாப்பா. இன்னைக்குத்தான் குடுக்கணுன்னு வெச்சிருந்தேன்’ என்றார். கொண்டுவந்து கொடுத்தேன். கவரைப் பிரித்துக் கத்தைக் காகிதங்களை என்னிடம் கொடுத்து ‘நாளைக்கி பொறுமையா படிச்சுப் பாரு’ என்றார். நான் யூகித்தபடிதான். உயில் தயார் செய்திருக்கிறார். ‘என்னப்பா அவசரம்?’ என்றேன். ‘அறுவது வயசுலதானப்பா குடுக்குறேன். ஒண்ணுமில்ல, கைல இருக்குற ஒரே சொத்து ஊருல கிடக்குற ரெண்டு ஏக்கர் நிலம்தான். உனக்கும் ரமேசுக்கும் சேத்துதான் எழுதியிருக்கேன். அவசியமானா பிரிச்சுக்கங்க… ஆனா என் ஆசை அங்க எதோ ஒண்ணு வெளைஞ்சுக்கிட்டே இருக்கணும்னுதான்.. சின்னவன் கல்யாணத்தை ஒட்டி விக்கலாம்னுதான் நெனைச்சேன். நிலத்தை வித்துப்புட்டு பால்பாண்டி பொலம்புறது ஞாபகம் வந்துச்சு.. ஆனமட்டும் சொல்லிப் பாத்தேன். கேக்கவேயில்லை அவன். இத்தனைக்கும் அவன் பையன் குமரேசன் அப்பிடிக்  கருத்தா வேலை பாத்தான் பாத்துக்க… வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் மார்க்கெட்டுக்குத் தக்காளியும், வெத்தலையும் நெதம் தவறாம அனுப்பிச்சிருவான். அவன் ஊர்ல இருந்துருந்தான்னா அவன் கிட்ட குடுத்தே பாத்திருக்கலாம். அவனும் இங்க வரேன்றான்…. ம்ம்… ரமேஸ்ட்ட பேசிறவா? இப்ப முழிச்சிருப்பானா?’ என்றார். தம்பி கம்பெனி வேலையாக ஜப்பான் போயிருந்தான்.

‘இல்லப்பா…தூங்கிருப்பான். காலைல பேசுங்க’ என்று படுக்கச் சென்றுவிட்டேன். ‘ஒருவன் மனது ஒன்பதடா…. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா?’ என்ற பாட்டு காதில் கேட்டது. இப்போது இது வேறு. எண்பத்தொன்று. அப்பாவுக்கு எழுவத்தொன்பதா?  இதை அப்பா சொல்லாமலே இருந்திருக்கக் கூடாதா? அப்படி இருக்க முடியாதோ? அப்பா,அம்மா,பால்பாண்டி மாமா, அவர் மனைவி முதலியோர் நடித்த, எல்லாவிதமான சாத்தியமான முடிவுகளுடன் கூடிய, எண்ணற்ற திரைப்படங்களை தூக்க மயக்கத்தில் நாளும் பார்ப்பதே வேலையாகிப் போனது.    

~oOo~
            

அவர் சொன்னது போலவே, குமரேசன் வந்து சேர்ந்த விவரத்தை அவரிடம் அன்று இரவு உணவு இடைவேளையின் போது செல்லில் அழைத்துக் கூறினேன். அவர் வேலை செய்கிற எம்.டி யின் மகள் தன்னுடைய காரை விற்றுவிட்டு வேறு புதுக்கார் வாங்கப் போவதாகவும், ரெண்டு வருடப் பழைய போர்ட் ஃபிகோ காரை ரெண்டு லட்சத்துக்கு கொடுப்பதற்குத் தயார் என்றும், அதை பால்பாண்டி மாமாவிடம் பேசி விட்டதாகவும், அநேகமாக இன்னும் பத்து நாள்களுக்குள் அவர் காசு ரெடி பண்ணி விடுவதாகச் சொன்னதாகவும் கூறினார். 

அதற்குப் பிறகு குமரேசனை நான் மறுமுறை பார்த்தபோது ஒரு மாதத்திற்கும் மேலாகியிருந்தது.. வண்டி முதலாளியாகி இருந்தான். கிட்டத்தட்ட புது வண்டியேதான். ‘வைகைப் புயல்’ என்று பெயர் வைத்திருந்தான் வாகனத்திற்கு. வெறும் பத்தாயிரம் கிலோமீட்டர்தான் ஓடியிருந்தது. ‘ஏண்ணே அதுக்குள்ள வண்டிய மாத்துறாங்க?’ என்றான். ‘ உனக்காகத்தாண்டா’ என்றேன். காரில் பிள்ளையார் சிலை. அவர் காலடியில் ‘பட் ரோஸ்’. ‘ஊர்லேந்து கொண்டாந்து பதியம் போட்டதுண்ணே, தினம் ரெண்டு பூ பூத்துருது’ என்றான். ஊர்ல தரை டிக்கெட்ல மண்ணைக் குவிச்சு ஒக்காந்து சினிமா பாத்த பய, பட்டணத்துக்கு வந்தோன்ன வாரா வாரம் ஒவ்வொரு ‘மல்டிப்ளெக்’ஸாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறான். போன வாரம் IMAX 3D யில் பாத்த ‘அவெஞ்சர்ஸ்’ படத்தைப் பற்றி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான். ‘ஏண்டா, சினிமா பாத்தே காசைக் காலி பண்ணிருவ போல. சரி, பொம்பளப் புள்ள ஓட்டுன வண்டி, பாத்து ஓட்டு’ என்றேன்.  வெக்கம் தாங்கலை பய புள்ளைக்கி. 

ஒரு நாள் திடீரென்று அலுவலகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கையைச் சுத்தம் செய்து கொள்ள கிருமி நாசினிக் குப்பிகள். நாலு பேர் உட்காருகிற சாப்பாட்டு மேசையில் ரெண்டு பேர் அதுவும் ஒரே பக்கத்தில். ஆங்காங்கே பேண்ட் சர்ட் போட்ட ‘ஹவுஸ் கீப்பிங்’ ஆயாக்கள் போகிற வழியெல்லாம் ஏற்கனவே சுத்தமாக இருந்த பளிங்குத் தரையையும், கண்ணாடிச் சுவற்றையும் நின்றும் அமர்ந்தும் துடைத்துக் கொண்டிருந்தனர் . பொதுவாக அமெரிக்கத் தலைமை அலுவலகத்திலிருந்து யாராவது வரும்பொழுது இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். ஆனால் இது கொஞ்சம் ஓவராக இருந்தது. ‘கொரோனா’ என்ற வார்த்தையை முதன்முதலாக கேள்விப்பட்டது அப்போதுதான். ‘டிசுனாமி அலைகளின் அட்டகாசம்’ என்ற தினத்தந்தி செய்தியைப் படித்துச் சுனாமியைப் பற்றி ‘கே கே’ என்று ஊரே பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. சீனாவிலிருந்து என்றார்கள். இத்தாலி, ஸ்பெயின் என்று ஐரோப்பா முழுதும் பரவி, உலகம் முழுதும் பரவி சில நாள்களிலேயே உலகச் சுகாதார நிறுவனத்தின் மூலம் ‘உலகப் பெருந்தொற்றாக’ அறிவிக்கப்பட்டது. உடனேயே அலுவலகத்தின் தொடர்ந்த இயக்கத்தை உறுதி செய்யும் திட்டங்கள் பரபரப்பாக செயல்கொள்ளத் தொடங்கின. அன்று அலுவலகம் முடிந்து வரும் போது ‘என்னங்க சார்…இஇஇனிமே வ்வ்வ்வீட்லேர்ந்தே வேலைப்பாக்க ஸ்ஸ்ஸ்ஸொல்லப்போறாங்களாமில்ல… உண்மையா சார்?’ என்றார் ஓட்டுநர். ‘சேச்சே சும்மா கொஞ்ச பேரைத்தான்’ என்றேன், அதற்கடுத்த ஒரு வாரத்தில் மொத்த அலுவலகமே காலியாகப் போவது தெரியாமல். மேலாளர் மற்றும் அதற்கு மேல்தான் அலுவலகம் மடிக்கணினி கொடுத்திருந்தது. அதற்குக் கீழுள்ள உழைக்கும் வர்க்கதிற்கெல்லாம் மேசைக் கணினிதான். யார் யாரிடம் சொந்த மடிக்கணினி இருக்கிறதோ அவர்களெல்லாம் அலுவலகத்திற்குக் கொண்டுவந்து ஐ டி துறையில் கொடுத்து வீட்டிலிருந்து வேலை செய்வதற்குத் தேவையான மென்பொருட்களை ‘லோட்’ செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப் பட்டனர். இல்லாதவர்களுக்கு மேசைக் கணினியையே பேக் செய்து வீட்டுக்கு அனுப்பும் வேலை மும்முரமாக நடந்தது. நான் இரண்டு நாள்கள் வீட்டிற்கே வரவில்லை. அலுவலகத்திற்கு அருகிலேயே ஒரு தங்குமிடம் ஏற்பாடாகியிருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் எல்லா அலுவலகங்களையும் மூட அரசு உத்தரவு வரும்போது வீட்டிலிருந்து வேலைசெய்ய ஆரம்பித்து விட்டிருந்தோம். 

கோவிட் 19, சமூக இடைவெளி, ‘பண்டமிக்’ , ‘ஹாண்ட் ஹைஜீன்’,  ‘ஹைட்ராக்ஸி க்ளோரோக்வின்’, ‘பங்கோலின்’, ‘வெட் மார்க்கெட்’ , செக்யூர் பார்டெர்லெஸ் ஒர்க்ஸ்டேஷன் (SBW)  என்று எத்தனையோ புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்தது கொரோனா. வாட்சப்பிலும், டீ வி யிலும் எத்தனை விதமான கருத்துப் பரிமாற்றங்கள், தகவல் ஆராய்ச்சிகள் – எல்லாம் கொரோனாதான். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பதற்கேற்ப, விதம் விதமான ‘மீம்ஸ்’ களை வாட்ஸப்பில் பரிமாறி நகுந்தே செத்தார்கள். இங்கிலாந்து கிழவரசர் (கிழ இளவரசர்) சார்லசுக்கும், பிரதம மந்திரிக்கும் கொரோனா. பெரும் பணக்காரர்களும் தப்பிக்கவில்லை. நாடு தழுவிய முழு ஊரடங்கின் காரணமாக  முற்றிலும் மாசு ஒழிந்து இமயமலை இதுவரை காணமுடியாத இடங்களில் இருந்தும் காணக்கூடியதாக இருந்தது. அதேபோல் கங்கை, யமுனை, காவிரி போன்ற ஜீவ நதிகளும் மாசொழிந்து கண்ணாடிப் பாளங்களாய்த் தெள்ளத் தெளிவாக ஓட ஆரம்பித்திருந்தன. மயில்களும், மான்களும், யானைகளும் காட்டிலிருந்து கிளம்பி மனித சஞ்சாரமற்ற நாட்டுப் பகுதிகளிலும் நடமாடும் காட்சிகள் வாட்சப்பில் வந்த வண்ணமிருந்தன. கொரோனா தவிர எந்த நோய்களுக்காகவும் மக்கள் மருத்துவமனை செல்லாமல் தவிர்த்ததால் மருத்துவமனைகள் வெறிச்சோடிக் கிடந்தன. அமெரிக்கா சீனாவை ‘எல்லாத்துக்கும் நீதான் காரணம்’ என்று குற்றஞ் சாட்டிக்கொண்டிருக்க இங்கு மருத்துவர்கள் மீது பூக்களையும், கற்களையும் எறிந்து கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதமாக யாரும் மது அருந்தவில்லை. சாலை விபத்தில் இறக்கவுமில்லை. இதுவரை இல்லாத வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டம் தடைசெய்யப்பட்டது. இப்படியாக வரலாற்றிலேயே முதன்முதலாக, இதுவரை கண்டிராத வகையில் என்று எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்தேறின. நெட்பிலிக்ஸ், அமேசான் போன்ற  OTT இன் மூலமாக தியேட்டர்களோ, zoom போன்ற கூடுகைச் செயலிகள் மூலமாக அலுவலகங்களோ வீட்டிலிருந்தே இயங்கிக் கொண்டிருந்தன. பள்ளிகளும் விதிவிலக்கல்ல. மொத்தத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் ‘விஸ்வரூப’ தரிசனத்தை அனைவருக்கும் அளித்தது இந்தக் ‘கொரோனா’ . 

இடையிடையே சிற்சில தடங்கல்கள் இருந்தாலும் வீட்டுவேலை (ஒர்கிங் பிரம் ஹோம்) சிறப்பாகவே நடைபெற்று வந்தது. ஆரம்பித்து நாற்பத்தைந்து நாட்கள் ஆகிவிட்டன. இந்தக் கடுமையான சூழ்நிலையிலும் சிறப்பாகத் தரம் குறையாத வகையில் பணியாற்றியதற்கு எங்கள் அமெரிக்க முதலாளிகளிடம் இருந்து தினந்தோறும் பாராட்டு மழை பொழிந்தவண்ணம் இருந்தது.  ஒருநாள் திடீரென்று கைபேசியில் அழைத்து  ‘அங்க ஒரே அடிதடியாப் போச்சாம்டா, பால்பாண்டி போன் பண்ணினான்’ என்றார் அப்பா . கொரோனாவால் எல்லாத் தொழிலும் முடங்கியதால் எல்லோரையும் போலவே குமரேசனுக்கும் வேலையில்லை. வீட்டில் அவன் அண்ணன் எதோ சொல்லப்போக இவனுக்குக் கோவம் வந்து கைகலப்பாக, அவன் அப்பா இவனை அடித்திருக்கிருக்கிறார். இவன் போய் அழகேசன் ரூமில் தங்கிக் கொண்டிருக்கிறான். ‘உன் பையன்ட சொல்லிப் பேசச் சொல்லுடா.. எப்பிடியாவது இங்க வரச் சொல்லுனு பொலம்புறான். பேசிப்பாக்குறியா…. நான் நல்லாத் திட்டிப்புட்டேன்… ஊர்லேர்ந்து அவனைக் கொண்டுவந்தது ஒன் தப்புடான்னு’ என்றார். அவன் ஓட்ட ஆரம்பித்தே ஆறு மாதம்தான் இருக்கும். அதற்குள் இப்படி? ‘சரி.. பேசிட்டு என்னான்னு சொல்லு.. இன்னைக்கிப் பேசிரு… நாளைக்கிக் காலைல கூப்புடு’ என்றார். 

குமரேசனை கைபேசியில் அழைத்தபோது எடுக்கவில்லை. எனவே அழகேசனை அழைத்தேன். ‘என்னண்ணே, ஒர்கிங் பிரேம் ஹோமா? நமக்கும் ஏதாவது பாருங்கண்ணே’ என்றான். ‘ஊர்ல ‘ஒர்கிங் பிரம் ஹோம்’ தானடா பண்ணிக்கிட்டிருந்த’ என்றேன். ‘அய்யயோ, ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?’ என்று கிகிக்கி என்று சிரித்தான். ‘குமார் அங்க இருக்கானா?’ என்றேன். ‘அவன் ஊருக்குப் போயிருக்காண்ணே. ஒங்களுக்கு அடுத்தாப்பல ஏறுவார்ல ஒருத்தரு, பேரு வாயில வரல, அவங்க அப்பா இறந்துபோய்ட்டாராம் வத்தலக்குண்டுல. வண்டி கெடைக்கலன்னு இவனக் கூப்பிட்டாரு, போயிருக்கான். ரெண்டு நாளாச்சுண்ணே…’ என்றான். சிறிது நேரத்தில் குமரேசனே கூப்பிட்டான். ‘ அண்ணே… ஊர்லதான் இருக்கேன். இனிமே இங்கதாண்ணே இருக்குற மாதிரி…’ என்று ஆரம்பித்து ஒரு பதினைந்து நிமிடம் பேசியிருப்பான். நடுநடுவே ‘டிராக்டர்’ சத்தம்.  ‘அப்பாவை மறக்காம கூப்பிட்டுப் பேசிருடா…’ என்று சொல்லி வைத்தேன்.               

அவனிடம் கைபேசியில் பேசிமுடித்த கையோடு அப்பாவை அழைத்தேன். ‘அவன் இப்ப எங்க இருக்கான் தெரியும்ல, பட்டிவீரம்பட்டில அவங்க காட்டை உழுதுக்கிட்டிருக்கான். எங்க கம்பெனி ஸ்டாபோட அப்பா வத்தலகுண்டுல இறந்து போய்ட்டாருனு சவாரி போனவன், ஊருக்குப் போயிருக்கான். இவங்க காட்டை வாங்குனவரு, அதான் பாத்திரக்கடை சண்முகம் ஏற்கனவே கூப்பிட்டுக்கிட்டே இருந்தாராம். போன வெள்ளாமை தண்ணி இருந்தும்கூட சரியா பாக்காம மோசமா போச்சாம். ஒங் காடு மாதிரிப் பாரு, மூணுல ஒரு பங்கு எடுத்துக்கண்ட்ருக்காரு, தோட்டத்துலயே தங்க இடம் இருக்கு.. இனிமே இங்கதாண்ணே இருக்குற மாதிரின்னான், நல்லதுரா, உங்கப்பாட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாம்லனேன். வீட்டுக்குப் பேசச் சொல்லியிருக்கேன்… ‘ என்றேன். 

‘காரை வேற வாங்கி வெச்சுருக்கானேடா.. அந்த ஊர்ல ஓட்டமிருக்காதே’ என்றார். ‘பேசாம நான் வாங்கிக்கிறலாமான்னு பாக்குறேன்ப்பா… ரொம்ப நாளா வாங்க நினைச்சு தள்ளிப் போட்டதுதான்.. வெலையும் கம்மி.. காரும் கண்டிஷன்ல இருக்கு… நீங்களும் ஓட்டிக்கிறலாம்… எங்க கம்பெனிலேயே ஆயிரம் லாப்டாப்புக்கு ஆர்டர் போட்டுருக்காங்க… இனிமே ரொட்டேஷன்ல பதினஞ்சுநா ஆபீசு பதினஞ்சுநா ‘ஒர்கிங் பிரம் ஹோம்’ னு வேற பேச்சு ஓடிக்கிட்டிருக்கு …. முன்ன மாதிரி வண்டி ஓட்டிப் பொழைக்கிறது கஷ்டம்பா… ..அவன் இதெல்லாம் யோசிச்சானானு கூடத் தெரியல… பாருங்க… ஊர்லேந்து கொண்டுவந்து பதியம் போட்ட பூச்செடி எங்க ஆபிசுலயே நட்டு வெச்சுருக்கான்… அவன் மனசு ஊர்லதான் கெடக்கு…அவன் போக்குல போகட்டும்…. .நான் என்ன நினைக்கிறேன்னா, இந்த ரெண்டு லட்ச ரூபா போக மிச்சதுக்கு ஒரு லோனப் போட்டு டிராக்டர் வாங்கிட்டான்னா, அவன் தேவைக்குப் போக வாடகைக்கும் விட்டுக்கிறலாம்… தெரிஞ்ச பேங்க் ஆபீஸர்லாம் இருக்காங்க… கேட்டுப் பாக்குறேன்… பேசாம நம்ம நெலத்தைக்கூட இவனே பாக்கட்டும்… சண்முகம் குடுக்குற பங்கையே குடுப்போம்… மேற்கொண்டு ஏதும் செய்யறதுன்னாலும் செய்வோம்.. என்னப்பா சொல்றீங்க?’ என்றேன். கொஞ்சநேர அமைதிக்குப் பிறகு,  ‘ரொம்ப நல்லதுப்பா… பால்பாண்டிட்ட பேசிர்றேன்’ என்றார்.                      



   

One Reply to “கடவு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.