இழந்தது

        சம்பத் கம்பெனிக்கு வந்தபோது இயந்திரம் சூடாவதற்காக காத்திருந்தான் பிரபா. ” இந்த மாதம், சேட்டுக்கு பணம் கொடுத்திடலாம்ல, காலையிலேயே போன் பண்ணிட்டார். திங்கட்கிழமை கொடுக்கலைனா மெட்டீரியல் தரமாட்டாராம்” சம்பத் பிரபாவிடம் கேட்டான்.

   “கொடுத்திடலாம், தேவாகிட்ட சொல்லிட்டேன்.  இந்த மாசம் சீட்டு எங்களுக்கு வேணும்னு. சரின்னு சொல்லிருக்கான்”

  ” போன மாசமும் இப்படித்தான் சொன்னான். ஆனா கடைசி நேரத்துல நீயே ஒரு ஆளைவிட்டு சீட்டை ஏத்திவிட்டு ஏதோ பண்ணிட்டீங்க”

  ” தேவா கெஞ்சிக் கேக்கிறப்ப மறுக்க முடியலடா, அவனும் நம்ம நண்பன்தானே”

   பிரபா உள்ளே சென்று வெப்பத்தின் அளவை நோக்கிவிட்டு பெரிய அளவு அரிசி போலிருந்த பிளாஸ்டிக் மெட்டீரியலை வாய் போலிருந்த இடத்தில் சிறு டப்பா மூலம் அள்ளிக் கொட்டினான்.

   சிறிய அளவிலான பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் கம்பெனி இது. இயந்திரம் சூடான பிறகு மெட்டீரியலைக் கொட்டவேண்டும். அது உருகி  ஐந்திலிருந்து பத்து சென்டி மீட்டர் விட்டமாக தேவைக்கு தக்கபடி அமைக்கப்பட்ட அளவில்  காற்று நிரப்பப்பட்ட வளையமாக வருமாறு காற்று செலுத்தப்படும்.  ஐந்து மீட்டர் தொலைவிற்கு நீள் உருளையாக வந்து சற்று ஆறி , உருளியில் சுற்றுமாறு அமைக்கப்பட்டிருக்கும். அதனை மேசைகளில் அமைக்கப்பட்ட சூடான கம்பிகளில் அழுத்தி அழுத்தி துண்டுகளாக மாற்றுவார்கள். அந்தத் துண்டுகளை மடித்து இரண்டாக வெட்டினால் சிறு கவராக ஆகும். பீடா கடைகளுக்கும் ஊறுகாய் கம்பெனிகளுக்கும் அவற்றை அனுப்புவார்கள். துண்டுகளாக்கும் பணிக்கு நான்கு பெண்களை அமர்த்தியிருக்கிறார்கள்.

     இந்தக் கம்பெனியை இரண்டு ஆண்டுகளாக. பிரபா, சம்பத் இரண்டு பேர்   சேர்ந்து நடத்திவருகிறார்கள். சம்பத்  வீட்டில்  கையில் பணமில்லை கடன் வாங்கித் தருகிறோம், வட்டியுடன் கடனைக் கட்டிவிடுங்கள் எனக் கூறி பணம் கொடுத்தார்கள். பிரபா பணியாற்றும் பங்குதாரர். கடனுக்கு மூலப்பொருள் வாங்கி கவர்களாக்கி கடைகளுக்கும் கம்பெனிகளுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று பணியாற்றுபவர்களுக்கு ஊதியமளித்து வாடகை மின்சாரத்திற்கான தொகையையும் கடனுக்கான வட்டியும் கட்டியபின் எஞ்சும் பணத்தை மூலப் பொருள் அளிக்கும் சேட்டுக்கு கொடுப்பார்கள். எப்போதுமே பற்றாக்குறையாகவே இருக்கும்.   உழுகிறவனுக்கு  மட்டுமல்ல எந்தத் தொழில் செய்பவனுக்கும்  பணிமுடித்து கணக்குப் பார்க்கும்போது  இதுவே நிலைமை.  பாக்கி கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து இப்போது ஒரு லட்சத்திற்குமேல் ஆகிவிட்டது.

      கடன் தொகையின் அசலைக் கட்டுவதற்காக மாதம் ஐந்தாயிரம் செலுத்தும் வண்ணம் சீட்டு கட்டலாம் என யோசித்து, சீட்டு பிடிக்கும் இவர்களுடன் படித்த தேவாவிடம் கட்டிவந்தார்கள். கடனை பிறகு கட்டிக் கொள்ளலாம், முதலில் சேட்டுக்கு பாக்கியை கொடுத்துவிடலாம் என்று சீட்டை எடுக்க முடிவு செய்தார்கள்.

         ஆறு சென்டிமீட்டர் அகலமான கவருக்கு தேவையானபடி இயந்திரத்தை அமைத்துவிட்டு பிரபா  வெளியே வந்தான். பெண்களும் வந்துவிட்டார்கள். ஒருவர் ஐம்பதுவயதிற்குமேல் ஆன கல்யாணியம்மாள். இவர் தேவாவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். இருவர் முப்பதுகளில் இருப்பவர்கள். ஒரு பெண் மட்டும் இளையவள். பிரபா அவர்களிடம் உள்ளேயும் ஒரு கண் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியபடி சம்பத்தை நோக்கினான்.

    “போன மாச சீட்டுல என்ன நடந்ததுன்னு புரியிற மாதிரிச் சொல்லு” என்றான்.

    ” சீட்டு இருபது பேர் ஐந்தாயிரம்னு கட்றாங்க. அதுல ஒரு சீட்டு , சீட்டு புடிக்கிறவங்க கட்றமாதிரி. அவங்கதான் ரெண்டாவது சீட்ட தள்ளு இல்லாம எடுத்துக்குவாங்க. மாதா மாதம் சீட்டு வேணுங்கிறவங்க ஏலம் கேட்பாங்க, அந்தத் தொகையை கழிச்சிட்டு மீதத் தொகையை  ஏலம் எடுத்தவருக்கு கொடுப்பாங்க. ஏலம் கேட்ட தொகையை இருபதால வகுத்து அந்தத் தொகையை ஒவ்வொருவர் கட்டவேண்டியதுல கழிச்சிட்டு மிச்சத்ததை கட்டவேண்டும்”

     ” இதுதான் எனக்குத் தெரியுமே, நீ உனக்குத் தெரிந்தவரைக் கூட்டிவந்து ஏலம் கேட்க வைத்தது ஏன்?, அதைச் சொல்லு”

       ” ஒருத்தர் சீட்டு எடுத்தா, அவருக்கு தொகையை கொடுக்கனும்ல”

    ” ஆமா, அதுக்காகத்தானே சீட்டு கட்றது”

     ” கொடுக்க முடியாத மாதிரி நிலைமை”

  “ஏன், என்னாச்சு”

  ” இருபது பேருக்கு ஒரு ஆள் குறைந்ததால இன்னொரு சீட்டும் அவனே கட்டவேண்டியதாகிவிட்டதாம். ஆரம்பத்துல சீட்டு ஏலம் எடுத்தவனெல்லாம் அவசரமா தேவைப்படுதுன்னு அதிகமா தள்ளி எடுத்தானுங்க. இப்ப கட்றதுக்கு பால்மார்றானுங்க. அதுல ஒருத்தன் ஊரைவிட்டே ஓடிட்டானாம். இப்ப வேறொருத்தன் சீட்டு எடுத்தா பணம் எப்படி கொடுக்க முடியும். என்ன பண்றதுன்னு தேவா முழிச்சான்”

    ” இதை எப்படி சமாளிச்சிங்க”  

    ” எங்க  பக்கத்து வீட்ல இருக்கிற பையன வரச் சொல்லி ஏலங் கேட்கச் சொன்னோம்”

     ” அவன் யாருன்னு யாரும் கேட்கலையா”

   ” இருபது பேர் சீட்டு, எல்லோரையும் எல்லாருக்கும் தெரியாதுல்ல. சீட்டு எடுக்க நெனச்சு வந்தவர் கேட்டத விட இவனை அதிகமா கேட்க வைத்தோம். யாராலையும் ஒன்னும் சொல்ல முடியல. யாருக்கும்  பணம் கொடுக்கத் தேவையில்ல. இருபதாவது மாதம் முடியும்போது மொத்தமா கொடுக்கவேண்டும்”

  ” அது எப்படியோ போகட்டும். இந்த மாசம் நாம சீட்ட எடுத்தா  எப்படிக் கொடுப்பான்”

  “பணம் யாரிடமோ கேட்டிருக்கிறானாம். எந்தப்பிரச்சனையும் வராதுன்னு சொல்றான்”

   “என்ன பண்ணுவியோ, ஐந்து நாள்ல பணம் கொடுக்கலைனா மெசின ஓட்ட முடியாது, இவங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. மொத்தத்துல  கம்பெனிய நடத்த முடியாது, ஞாபகம் வைத்துக்கொள்”  என்றான்  பிரபாவை  கூர்மையாகப் பார்த்து.

  “அப்படியெல்லாம் ஆகிடாது. பார்த்துக்கலாம்” என்றவன் திரும்பி “ஏம்மா, வேலையப் பாருங்கம்மா. வாயப் பாத்துக்கிட்டு    இருக்காம” என இவனை நோக்கிக் கொண்டிருந்த கல்யாணியம்மாவை அதட்டினான்.

         சம்பத் கூறியதை மனதில் நினைத்தபடியே தேநீர்க் கடையை நோக்கிச் சென்றான். ஒன்றாகப் படித்திருந்தாலும் தேவா இவனுக்கே நெருக்கமானவன். வேலைக்கென அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வந்தபோது, அருகில் மண்ணூர்பேட்டையில் வசித்த தேவா நெருக்கமானான். அவன் வீட்டிற்கு தெரியாமல் காதல் மணம் புரிந்தபோது இவன் உறுதுணையாக இருந்தான். வீட்டில் சேர்க்காததால் தனியாக வசிப்பதற்கும் வருமானத்திற்கு திண்டாடியபோது இந்த சீட்டு யோசனையை கூறி  தன்னுடன் பணியாற்றியவர்களை அறிமுகப்படுத்தி உதவியதும்  இவன்தான்.

       தேநீர்க் கடையில் போனமாதம் சீட்டு எடுத்தாகவேண்டுமென கடைசிவரை கேட்டவர் அமர்ந்திருந்தார். பிரபாவும் ஒரு தேநீர் திடமாக என சொல்லிவிட்டு அவரருகில் அமர்ந்தான். அவர் சிறிதாகப் புன்னகைத்தார். இவரை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்றவுணர்வுடனேயே,

“பணத்துக்கு அவசரம்னு சொன்னீங்களே அப்பறம் எப்படி சமாளித்தீர்கள் ” எனக் கேட்டான்.

கடைப் பையன் நீட்டிய தேநீரைக் கையில் வாங்கியவர், வருத்தமான புன்னகையுடன்  ” சீட்டு ஏலம் முடிந்தவுடன் தேவாக்கிட்டதான் கேட்டேன், கண்டிப்பா வேணுமேன்னு. அவன்தான் அவனுக்கு தெரிந்த ஒருவருக்கிட்டேயிருந்து   பத்து வட்டிக்கு கடன் வாங்கித் தந்தான். அதை வைத்துதான் வண்டிய ஓட்டுறேன்” என்றார். பத்து வட்டியென்றால் மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய். இவனுக்கு பரிதாபமாக இருந்தது. இந்த மாதமும் அவருக்கு கிடைக்காதே என்ற கவலையும் உண்டானது.

      ஏலம் விடப்படும் இடத்திற்கு சீக்கிரமே சென்றான் பிரபா. நாற்காலியில் அமர்ந்து சுற்றிப் பார்த்தான். இந்த இடத்தைப் பிடிக்க இவன்தான் முன்பணம் கொடுத்தான் . அப்போது சுவர்களெல்லாம் வண்ணம் உரிந்து, உலக வரைபடத்தை  ஆங்காங்கே வரைந்ததுபோல தெரிந்தது. இரண்டு மாதத்தில் தரைக்கு டைல்ஸ் போட்டு  சுவர்களில் இயற்கை காட்சிகளாலான சுவர்த்தாள்களை ஒட்டி அழகாக்கினான். ஆரம்பத்தில் அடிக்கடி வந்தான். தேவாவும் எல்லா விபரங்களையும் சொல்வான். பிளாஸ்டிக் கம்பெனி ஆரம்பிக்கவிருப்பதை கூறியபோது அவன் முகம் சரியாக இல்லை. சளியினால் தலை வலிப்பதாகக் கூறினான். கம்பெனி தொடங்கிய பிறகு இங்கு வரமுடிவதில்லை. சீட்டுப் பணத்தை வந்து வாங்கிக் கொள்வான். போன மாதம்தான் அவன் பிரச்சனைகளைக் கூறி  ஏலம் கேட்க ஆள் வேண்டுமெனக் கேட்டான். உடன் இருப்பவர்களினால் அறிவு   எப்படி மாறுகிறது என்பது ஆச்சர்யமானது. இள வயதில் சிறுவர்கள் கபடம் இல்லாமல் திரியும்போது வேறு இடத்திலிருந்து வரும் ஒருவனின் புதுப் பழக்கத்தை இவர்கள் அத்தனைபேரும் உடனே கற்றுக் கொள்வார்கள். பள்ளி, கல்லூரியென மாறும்போது நண்பர்களாக அமைபவர்களின் பழக்கங்களை எல்லோரும் கைகொள்கிறார்கள்.  பணிக்கு வந்தபின் உடன் பணி புரிபவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து தான் கற்றதை இவனுக்கு சொல்லிக் கொடுத்து இவனும் கற்றுக் கொண்டானே என நினைக்கும் போது மகிழ்வாகயிருந்தது. ஏதோ சிறிய பிரச்சனை வந்துள்ளது. அதையும் அவனாகவே சமாளித்துக் கொள்வான் என நம்பிக்கை தோன்றியது தேவா உற்சாகமாக உள்ளே வந்ததைக் கண்டபோது.

    “வா, பிரபா வந்துவிட்டாயா” எனத் தோளில் தட்டினான்.

  “தேவா, சேட்டு பணம் கேட்டு அரிக்கிறான்டா, சீட்டை  எப்படியாவது எடுக்கவேண்டும் ” என்றான்.

” சரி, பார்ப்போம் ” என்று கூறியபடி உள் நுழைந்தவரை வரவேற்கச் சென்றான். ஒவ்வொருவராக வந்தார்கள். பத்துபேர் இருக்கும். வந்தவர்களுக்கெல்லாம் பக்கத்தில் இருந்த கடையிலிருந்து தேநீர் வந்தது. குடிக்க ஆரம்பித்தபோதே ஏலத்தை ஆரம்பித்தான்.

   “ஒரு லட்ச ரூபாய் சீட்டு பத்தாவது மாதம். குறைந்தபட்ச ஏலம் ஐந்தாயிரம். மேல கேட்கிறவர்கள் கேட்கலாம்”

   “ஆறாயிரம்” பிரபாவிற்கு முன்னாடியிருந்தவர் கையைத் தூக்கிச் சொன்னார்.

  “ஏழாயிரம்” பின்னாலிருந்து கேட்டது.

   ” பத்தாயிரம்”

  “பனிரெண்டாயிரம்” மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தார்கள். இருதாயிரத்தை நெருங்கியபோது கொஞ்சம் மெதுவாக யோசித்து தயக்கமாக குரல்கள் எழுந்தன.

இருபத்தைந்தாயிரம் ஒருவர் கேட்டபோது வேறு யாரும் கேட்கவில்லை. உண்மையிலேயே ஏலம் எடுத்தாகவேண்டுமென வருபவர்கள் இப்போதுதான் கேட்பார்கள். முதலிலிருந்து கேட்டால் சிலர் ஏற்றிவிட நினைப்பார்கள்.

   தேவா ” இருபத்தைந்தாயிரம் ஒரு தடவை, கேட்பவர்கள் கேட்கலாம்”  என்றான்.

   ” இருபத்தி ஆறாயிரம் ” என்றான் பிரபா.

 “இருபத்தி ஏழாயிரம் ” என சத்தமாக ஒரு குரல் பின்னால் எழுந்தது. அப்போது தேவா முகத்தில் துளி மிளிர்வு தோன்றி மறைந்ததை பிரபா கண்டான். திரும்பிப் பார்த்தான். அது கல்யாணியம்மாவின் கணவர்தான் என தெரிந்தது. இப்போதுதான் வந்தவராகத் தெரிந்தார். ஏலம் தொடங்கும்போது இல்லை. அந்தக் குரலில் தெரிந்த உறுதி பிரபாவிடம் ஒரு தயக்கத்தை உண்டாக்கினாலும்  

“இருபத்தெட்டாயிரம்’ எனக் கூறினான். இவன் முடிக்கும் முன்னதாகவே “இருபத்தொன்பதாயிரம்” என்று சத்தம் கேட்டது.   பிரபாவை  சிறு மணற்பருக்களுடன் பெரும் கடல் அலையென சோர்வு தாக்கியது. எதுவுமே சொல்லாமல் எழுந்து வெளியில் வந்தான்.

கம்பெனியில் சம்பத்தும் பணிபுரியும் கல்யாணியம்மாவும் இவனை எதிர் நோக்கியிருந்தார்கள். பிரபாவின் முகத்தைப் பார்த்தவுடனேயே நடந்திருப்பதை அறிந்தார்கள்.

   “என்கிட்டேயே இப்படி நடக்க எப்படி முடியுது” என்ற குரலில் தளர்வு தோன்றியிருந்தது.

“என் வீட்டுக்காரர் கேட்டிருக்கார். உங்க நண்பர்தானே பாவமில்லையா, அவரு கண்டுபிடிச்சிட மாட்டாரா. போன மாதம் அவர் மூலமா ஆள் தயார் பண்ணியிருந்தீங்களேன்னு. அதுக்கு அந்த அளவுக்கெல்லாம் யோசிக்க மாட்டான். தொழில்னு வந்த பிறகு நட்புக்கெல்லாம் அர்த்தம் ஏதுமில்லை. அப்படி சந்தேகம் வந்ததுன்னா இன்னும் பிரச்சனை சரியாகவில்லை. அடுத்தமாதம் சரியாகிடும்னு சொல்லிடறேன். நான் சொல்லறதை நம்புவான்னு சொன்னாராம்,” கல்யாணியம்மாள் சொன்னாள்.

“நீங்க இங்கே வேலை பார்க்கறது அவனுக்குத் தெரியாதா “

” தெரியாததாலதான் என் வீட்டுக்காரரை கூப்பிட்டுருக்கார்.”

  ” நான் நல்ல நட்போடதான இருக்கிறேன். அவன் ஏன் மாறினான்.”

   ” இந்த கம்பெனி வச்சபோது அவரை ஏன் கூட்டா சேர்த்துக் கொள்ளவில்லை.”

   “என்கிட்ட பணமில்லை. அவனிடமும் இல்லை. வேறென்ன செய்வது”

  “சம்பத் கடன் வாங்கிதானே கொடுத்தாரு. நீங்க அவருக்கிட்ட கேட்டிருந்தா வேற யாரிடமாவது கடன் வாங்கியாவது கொடுத்திருப்பார்னு அவர் மனைவிக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார்.”

    “அத என்கிட்ட கேட்டிருக்கலாமே?”

  “எல்லா முடிவும் எடுத்துட்டு, தகவல்தானே அவர்கிட்ட சொன்னீங்க.”

    வண்டி நிறுத்தும் ஒலி  கேட்டு திரும்பிப் பார்த்தார்கள். தேவா வந்து கொண்டிருந்தான்.சட்டென கல்யாணியம்மாள் எழுந்து உள்ளே சென்று மெசினுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.

     ” என்ன பிரபா வேகமா வந்துட்ட. குரல் கொடுத்தேன் கவனிக்காம வந்திட்ட. அதான் எல்லோரும் போனவுடன வர்றேன்.”

    “இப்ப எதுக்கு வந்த,” சம்பத் கேட்டான்.

   அவன் பக்கம் திரும்பாமல் பிரபாவை பார்த்து ” பிரச்சனை இன்னும் சரியாகவில்லை. இந்த மாசமும் உன்கிட்ட கேட்க வேண்டாமென்று என் வீட்டிற்கு பக்கத்திலிருந்தவரை வரச்சொன்னேன். உனக்கு அவசரமா தேவைப்படுதுன்னு சொன்னியேன்னு எனக்கு தெரிந்தவரிடம் கேட்டு ஒரு லட்ச ரூபாய் வாங்கி வந்திருக்கிறேன். பத்து வட்டி சொன்னாரு.  என் நண்பன்னு சொன்னவுடன் அஞ்சு வட்டிக்கு ஒத்துக் கொண்டான்,” என்றான்.

       பிரபா நிமிர்ந்து தேவாவைப் பார்த்தான். அவன் விழிகளைப் பார்த்தவுடனேயே திருடும்போது உரிமையாளரிடம் பிடிபட்டவனின் நடுக்கம் ஒருகணம் அவன் உடலில் உண்டாகி மறைந்தது.

  ” ஏன் அப்படிப் பார்க்கிறாய். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நீ கஷ்டப்படுவாயே என்பதற்காகத்தான் பணத்துடனேயே வந்திருக்கிறேன்.”

    ” பரவாயில்லை. கடன் வாங்குவதை சம்பத் மூலம் வாங்கிக் கொள்கிறேன். இந்த சீட்டை இனி தொடரப் போவதில்லை. உன் முகத்தை இனி பார்க்க விரும்பவில்லை. பொன் முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்ப்பவர்கள் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள். அக் கூட்டத்தில் நீயும் ஒருவனாகிவிட்டாயே. போ… போய் முடிந்தால் நல்லாயிரு,” எனக் கூறிவிட்டு மறுபக்கம் திரும்பிக் கொண்டான். தேவா எதுவுமே சொல்லாமல் திரும்பிச் செல்ல கல்யாணியம்மாவும் சம்பத்தும் குலுங்கியழும் பிரபாவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது பணத்தை இழந்ததற்கான அழுகையாகயில்லை ஏதோவொரு மரணத்திற்கானது போலிருந்தது.

       

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.