இந்த இதழ்- ஒரு முன்னோட்டம்

தமிழில் புத்தக வெளியீடுகளில் நாவல்களே அதிகக் கவனம் பெறுகின்றன. அதுவும் சமீப காலங்களில் நாவலாசிரியர்கள், தலையணை தலையணையாக நாவல்கள் எழுதிக் களிக்கிறார்கள். எடை கூடக்கூட அவற்றுக்குப் பரிசு கிட்டும் வாய்ப்பும் கூடும் என்று எண்ணுகிறார்களா என்று தெரியவில்லை.

சிறுகதைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஏராளமானவர்களால் எழுதப்படுவதாக வலைத் தளங்களைப் பார்த்தால் தெரிகிறது. பொதுவில் அவற்றுக்கு ஏன் அங்கீகாரமே இல்லாமல் இருக்கிறது என்பது புரியவில்லை. பெரும் பரிசுகள் என்று கருதப்படுபவை எதுவும், கடைசியாக எப்போது இவற்றுக்குக் கிட்டின என்று தகவல் உங்களிடம் இருந்தால் அனுப்புங்கள், முடிந்தால் பிரசுரிக்கிறோம்.

சொல்வனம் மொழிபெயர்ப்புகளுக்கு வரவேற்புக் கொடுக்கும் பத்திரிகை. நிறைய இங்கிலிஷிலிருந்துதான் இங்கு வந்திருக்கின்றன என்றாலும், இந்திய மொழிகளிலிருந்தே நேராகத் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் விஷயங்களுக்கே பிரதான இடம் கொடுக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அப்படி மொழி பெயர்ப்பவர்களோடு எங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதது ஒரு குறை.

இங்கு இந்திய மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன என்று மட்டும் இப்போதைக்குத் தெரிவிக்கிறோம். அப்படி மொழிபெயர்ப்பவர்களோடு தொடர்பு கொண்டு அவர்களின் ஆக்கங்களைக் கேட்டு வாங்கிப் பிரசுரிக்க வரும் நாள்களில் முயலப் போகிறோம்.

~oOo~

இந்த இதழில் மூன்று கதைகள் இந்திய மொழிகளிகலிருந்து தமிழாக்கமானவை. இரண்டு ஹிந்தி மொழியிலிருந்தும், ஒன்று தெலுங்கிலிருந்தும் வந்திருக்கின்றன.

ஹிந்திக் கதைகள் இரண்டும் பணீஷ்வர்நாத் ரேணு என்பாரின் கதைகள். இரண்டில் ஒன்று, முன்பு நேஷனல் புக் ட்ரஸ்ட் பிரசுரத்தில் வெளியான சிறுகதைத் தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கதை. அது 1993 இல் பிரசுரமான புத்தகம். டாக்டர் எச் பாலசுப்பிரமணியம் என்பவர் சுலபமான மொழியில் அனைத்துக் கதைகளையும் கொடுத்திருந்த புத்தகம்.

இரண்டாம் கதை இந்த வருடம் இன்னொரு கல்லூரிப் பேராசிரியர் மொழி பெயர்த்த கதை. ரமேஷ் குமாரின் மொழி பெயர்ப்பு.

இரண்டிற்கும் இடையில் தமிழில் எத்தனை மாறுதல்கள் இருந்தன என்பது மொழிபெயர்ப்பில் தெரிகிறதா என்று பார்க்க இவற்றைப் பிரசுரித்தோம்.

மூலக் கதையாசிரியர், ரேணு, 1977 இலேயே இறந்தவர்.  அவர்  பிறந்தது1921 இல், என்பதால் காலனிய ஆட்சியை மட்டுமன்று, வடக்குப் பிரதேசங்களைப் பாதியாகக் கிழித்துப்போட்ட பிரிவினை சம்பந்தமான பெரும் கிளர்ச்சிகள், வன்முறைகள், பஞ்சம் போன்றனவற்றை எல்லாம் சந்தித்த தலைமுறையைச் சார்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தின் உச்ச கட்டங்களூடே வாழ்ந்தவர். முதல் உலகப் போரை அறிந்திராத வயதில் வளர்ந்து இருந்தாலும், அதில் இறந்த ஏராளமான இந்தியப் படை வீரர்கள் கிராமத்து மனிதர்கள்தான் என்பதாலும்,  அவர்களில் பிழைத்துத் திரும்பியவர்கள் வட மாநிலங்களில் எங்கும் இருந்திருப்பார்கள் என்பதாலும், பெரும் போர்களுக்குப் பிறகு கிராமங்கள் எப்படி மாறுகின்றன என்பதை நேரடி அனுபவமாகப் பார்த்திருப்பார்.  

அவர் அப்படி Cataclysmic எனப்படும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தவர். பிறகும் போர்கள் இவர் வாழ்நாளிலேயே பல முறைகள் வந்தன.  சீன, பாகிஸ்தான் போர், கிழக்கு வங்கப் போர் ஆகியனவற்றையும் கடந்தவர்.  56ஆம் வயதில் இறந்ததால், இறக்கும்போது, இன்னமும் நடுவயதினராகவே இருந்திருக்கிறார்.  

கிராமங்களைப் பற்றிய பல கதைகளை எழுதினார் என்றாலும், நகரங்கள் பற்றியும் எழுதி இருக்கிறார். கருத்தியல் சாயம் பூசிய கண்ணாடி அணிந்து உலகைப் பாராமல் பல பக்கங்களிலிருந்து வாழ்வைப் பார்த்துக் கதைகளைப் புனைந்தவர். சாதாரண மக்களைப் பற்றியே நிறைய எழுதி இருக்கிறார். நாடோடிகள் இவரது அபிமானப் பாத்திரங்கள். இசை, அதுவும் கிராமத்து இசையும், இந்தியப் பாரம்பரிய இசையும், நாட்டியங்களும், திருவிழாக்களும் இவரது கதையில் அடிக்கடி வருவன, கதைவெளியை நிரப்புவன.

தர்ம சங்கடம் என்கிற கதை எழுதப்பட்டது 1950களில் என்பது நினைவிருக்க வேண்டும். அப்போதுதான் அது ஏதோ பழைய நடை, பழைய பாணிக் கதையாக இருக்கிறது என்று தோன்றாமல், இன்று மறைந்தே போய்விட்ட ஒரு வாழ்வு, பண்பாடு ஆகியனவற்றை அது சித்திரிக்கிறது என்பதைக் கவனிக்க விருப்பம் எழும்.

இவரை இந்தியாவின் ஆத்மாவோடு ஹிந்திக் கதைகளை மறுபடி இணைத்த எழுத்தாளர் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள் என்று கதைத் தொகுப்புப் புத்தக முன்னுரையில் எழுதி இருக்கிறது, அதை நாமும் சரி என்று கருதுவோம் என்று தோன்றுகிறது.

இன்னொரு மொழிபெயர்ப்புக் கதை நாம் ஏற்கெனவே ஒரு முறை பிரசுரித்திருக்கிற தெலுங்குக் கதாசிரியர் வாரணாசி நாகலட்சுமி அவர்களின் கதை. ராஜி ரகுநாதன் இதைச் சுலபமான மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

~oOo~

தமிழிலும் நவீன இலக்கியத்தில், 40-50களின் வாசம் 70கள் வரை தமிழிலக்கியத்தில் இருந்தது. பிறகுதான் பாலை படிப்படியாக வளர்ந்து, வாழையை ஒழித்தது. இன்று, பொதுவாகப் பார்த்தால் கருத்தியல் சாயத்தில் தோய்க்கப்பட்ட வகை இலக்கியம் வழியே வெறுப்பும், அனைத்தையும் அழிக்கும் நோக்கமுமே பெருமளவில் விதைக்கப்பட்டு, விளைவாகி வரும் சீமைக் கருவேலம் புதர்கள் காடாகப் போற்றி வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ஆர்ப்பரிப்பாக எங்கும் காணும் கருத்தியல் பிரச்சாரப்படி பார்த்தால், இயற்கை வேளாண்மைதான் எல்லாருக்கும் இன்று பிடித்தமான வாழ்வு முறை.

இப்படி, நகைமுரணே மொத்த வாழ்வுமாக ஆகிப் போனது.

~oOo~

இந்த இதழில் ப்ராஸியோ நாட்டு எழுத்தாளர், க்ரேஸிலியானோ ஹாமோஸைப் பற்றிய ஒரு கட்டுரையும் இருக்கிறது. (ப்ராஸியோ என்பது Brazil என்று இங்கிலிஷில் நாம் அறிந்த நாடு.) இவரும் 60 வயதிலேயே இறந்த ஒரு போர்ச்சுகீஸிய மொழி எழுத்தாளர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர், 20ஆம் நூற்றாண்டின் நடுவில் இறந்திருக்கிறார். இவருக்கும் ரேணுவுக்கும் இடையே பல ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உண்டு. இவரை நவீன இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படுகிற ஃப்ரெஞ்சு இலக்கிய ஆளுமையான ஆல்பேர் காம்யுவோடு ஒப்பிட்டுப் பார்த்த கட்டுரை இங்கு பிரசுரமாகிற கட்டுரை. அப்படி ஒரு முழுமையான ஒப்பீடு இக்கட்டுரையில் இல்லை என்றாலும், நிறைய வியப்பு தருகிற தகவல்கள் நிறைந்த கட்டுரை. இதை எழுதியவர் ஓர் இந்திய வம்சாவளி நாவலாசிரியர் என்பது மகிழ்வு தரும் விஷயம். பத்மா விஸ்வநாதன் சுருக்கமான, செறிவானதொரு கட்டுரையைக் கொடுத்திருந்தார். அதை மொழிபெயர்த்து வெளியிடுகிறோம். இந்தக் கட்டுரையின் மையத்தில் நாம் எல்லாரும் உலகெங்கும் சில மாதங்களாக அல்லல்படும் ஒரு விஷயத்தை முந்தைய தலைமுறையினர் எப்படிப் பார்த்தனர் என்பதும் பேசப்படுகிறது.

இறுதியாக மறுபடி கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்:

ஜூன் நான்காம் வாரம் வெளி வர இருக்கும், 225 ஆம் இதழ் ரொபெர்டோ பொலான்யோ என்ற ஸ்பானிய மொழி எழுத்தாளர் பற்றிய சிறப்பிதழ். இதற்கு வாசகர்கள், மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து கட்டுரைகள், மொழி பெயர்ப்புக் கதைகள் போன்றன வரவேற்கப்படுகின்றன.

பதிப்புக் குழு

One Reply to “இந்த இதழ்- ஒரு முன்னோட்டம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.